கொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்!

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை



சம்பவம் ஒன்று

காலம் – நவம்பர், 2009.

இடம் – இலங்கை, தலைநகர் கொழும்பு, பம்பலப்பிட்டிய.

கடற்கரையோரமாக அமைந்திருக்கும் புகையிரத நிலையம். அதனருகே அமர்ந்திருந்த பாலவர்ணன் சிவகுமார் எனும் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன், இரயிலுக்கு சிறு கற்களால் எறிகிறார். காவல்துறை வாகனத்திலிருந்து இதனைக் கண்ட நான்கு காவல்துறையினர்கள் உடனே வெளியே குதிக்கின்றனர். அந்த இளைஞனை விரட்டியடித்து, கடலுக்குள் தள்ளி, தொடர்ந்தும் விரட்டிச் சென்று, அந்த இளைஞன் கை கூப்பி மன்றாடிக் கேட்டும் அடித்து, நீருக்குள் மூழ்கச் செய்கின்றனர். மூழ்கியவர், சடலமாக மிதக்கிறார்.

சம்பவம் இரண்டு

காலம் – ஜனவரி, 2010

இடம் – இந்தியா, தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், ஆம்பூர்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரி மீது வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன. ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டிச் சாய்த்துத் தப்பியோடுகிறது. வீதியில் விழுந்து, இரத்தச் சகதியில் துடிதுடிக்கும் அவரை வேடிக்கை பார்க்கின்றனர் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரும், சுற்றுச்சூழல் அமைச்சரும் மற்றும் சக காவல்துறையும் சில பொதுமக்களும். தன்னைக் காப்பாற்றச் சொல்லிக் கையேந்துபவர் உயிர்ப் போராட்டத்தில் துடிக்கப் பார்த்திருக்கின்றனர் எல்லோரும். இருபது நிமிடங்கள் கழித்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக வெளியிலிறக்கப்படுகிறார்.

இந்த இரண்டு சம்பவங்களும் வெவ்வேறு தேசங்களில் நிகழ்ந்தவை எனினும், இரண்டுக்கும் பொதுவானதாக பல விடயங்கள் இருக்கின்றன. இரண்டு மரணங்களையும் நேரில் கண்டவர்கள், அவர்களைக் காப்பாற்றத் துணியவே இல்லை. ஒரு திரைக்காட்சியை வேடிக்கை பார்ப்பதைப் போல, வெறுமனே பார்த்திருக்கின்றனரே ஒழிய எவரும் அவர்களைக் காப்பாற்றவென முன்வரவில்லை. முதல் சம்பவத்தில் பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையே மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரைப் பகிரங்கமாகக் கொலை செய்கிறது. அடுத்ததில் மரணப் போராட்டத்தில் ஒருவர் தவிக்க சுகாதாரத்துறை அமைச்சரும், சுற்றுச்சூழல் அமைச்சரும் ஆம்புலன்ஸ்க்கு அறிவித்ததோடு தன் கடமை சரி என்பதுபோல பார்த்திருக்கின்றனர். காவல்துறையில் உயர் பதவி வகிக்கும் ஒருவருக்கே இந்த நிலைமை என்றால், யாருமறியாத சாதாரண பொதுமகனின் கதி?

தேர்தல் சமயம், ஒவ்வொரு பொதுமகனிடமும் வாக்குக் கேட்கச் செல்கையில் மட்டும் நான்காக மடியும் அமைச்சர்கள், வென்ற பிறகு அதே பொதுமகனின் துயரமான வேளையில் குனியக் கூட மாட்டேனென்பது, காயப்பட்டவருக்கு தண்ணீரை எட்ட நின்று ஊற்றியதைக் காணும்போது தெளிவாகிறது. ஏதேனும் செய்யப் போய், காவல்துறை விசாரணைகளில் சிக்கிக் கொள்ளவேண்டி வருமோ என்ற அச்சம் பொதுமக்களை, உதவத் தடுப்பது இயற்கைதான். ஆனால்,அமைச்சர்களுக்குமா அந்த அச்சம் தோன்றும்? அதுவும் சாட்சிகளாக அவ்வளவு பேர் பார்த்திருக்க?

இக் கால கட்டத்தில், கைத்தொலைபேசி கேமராக்கள் வைத்திருப்பவர்கள் அனேகம்பேர் இருக்கிறார்கள். பெருநகரங்களில் தெருவில் செல்லும் நூறு பேரில் எண்பது அல்லது அதற்கும் அதிகமான நபர்களிடம் இக் கேமராக்கள் இருக்கின்றன. ஏதேனுமொரு அசம்பாவிதமான நிகழ்வுகளின் போது உடனடியாகக் காட்சிப்படுத்தவும், செய்தியாக்கவும் அவற்றால் முடிகிறது.

இதே ஆண்டு, இதே ஜனவரியில், இந்தியா, அஸாம் மாநிலத்தில் ஒரு கடையில் ஆடைகள் விற்றுக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த இராணுவத்தினரை அவள், செங்கற்களால் விரட்டி விரட்டி அடிக்கிறாள். அடி வாங்கிய அவர்கள் தங்கள் வண்டியைச் சுற்றிச் சுற்றி ஓடுகிறார்கள். வழமை போலவே பொதுமக்கள் வேடிக்கை பார்க்க,இதை ஒரு கைத் தொலைபேசி கேமரா பதிவு செய்கிறது. தொலைக்காட்சி செய்திச் சேவைக்குக் கொடுக்கப்படுகிறது. உலகம் முழுக்க அச் செயல் காட்சிப்படுத்தப்படுகிறது. தவறு செய்த அந்த இராணுவத்தினருக்கான தண்டனையும், அப் பெண்ணுக்கான பாதுகாப்பும் இதனால் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. இதைப் போலத்தான் சென்னை, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களின் மோதலின் போதும், அதன் காட்சிப் பதிவுகள் பெரும் சாட்சிகளாக அமைந்தன.

கேமராக்களால் கோரமான இக் காட்சிகள் பதிவு பண்ணப்பட்டிருப்பதால், பார்ப்பவர்கள் அனைவருக்கும் அதன் வலியை உணரமுடிகிறது. பதிவு பண்ணப்படாதவை இன்னும் எத்தனையிருக்கும்? மனிதநேயம் என்பது உலகிலின்று அற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. சாலை விபத்துக்களில், இன்னும் பல மரணப்போராட்டங்களில் துடித்துக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றத் துணியாமல் வேடிக்கை பார்க்கும் எத்தனையோ செய்திகளை, கதைகளைக் கேட்டு பரிதாபத்தோடு அத் தருணத்தைக் கடந்துபோகிறவர்களாக நாம் இருக்கிறோம்.

காவல்துறை விசாரணைகள், வழக்குகள், அலைச்சல்கள் பற்றி அக் கணத்தில் எதுவும் சுயநலமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளின் போது முன்னின்று உதவக் கூடியவர்களாக இருக்கிறார்கள். படித்தவர்களை விடவும், பாமரர்களை உதவுவதில் முன்னிற்பவர்களாகவும், இளகிய மனமுடையவர்களாகவும் காண முடிகிறது.

பொதுவாக எனது சமூகத்தில் நாய்களை யாரும் கையால் தொட மாட்டார்கள். எனது தெருவிலிருந்த ஒரு மூதாட்டியை எனக்குத் தெரியும். ஒரு விடிகாலையில் தெருவோரமாக விபத்தில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்த நாய்க்குட்டியை அவர் தூக்கிவந்து மருந்திட்டார். போய்ப் பார்த்துக் கேட்டேன்.

‘நாயைக் கையால புடிச்சிருக்கீங்களே ஆச்சி?’

‘கையைக் கழுவிக்கலாம். வாழ வேண்டிய உசுரு..அதோட உசுரு போனாத் திரும்பக் கொடுக்க முடியுமா புள்ள?’

– எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை
mrishanshareef@gmail.com

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்