அதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

கோ.புண்ணியவான், மலேசியா


மலேசியாவின் நான்காவது பிரதமராக அரியணையமர்ந்த மஹாதிர் முகம்மது 20ம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியின் உயரிய பீடத்தில் இருந்து 2003 ஆண்டு பதவியிலிருந்து “விருப்ப” ஓய்வு பெற வேண்டியிருந்தது. மலேசியப் பிரதமர்களில் அதிக காலம் பதவியில் இருந்தவர் இவர்தான். பிரிட்டிசாரின் காலனித்துவ ஆட்சியிலிருந்து மலாயாவுக்கு விடுதலைபெறும் முயற்சியில் ஈடுட்ட முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானுடன் கருத்து மோதல் காரணமாக பலம் வாய்ந்த மலாய் இனக்கட்சியான அம்னோவிலிருந்து (UMNO-United Malayan National Organisation) நீக்கப்பட்டவர், பின்னர் பீனிக்ஸ் பறவையாய் சாம்பலைத்தட்டிவிட்டு உயிர்த்தெழுந்து மீண்டுவந்து, மிகச்சாதூர்யமான ஆளுமையாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டு மலேசியாவின் பிரதமராக 20 ஆண்டுகாலம் நீடித்த பெருமை இவருக்கு உண்டு. பதவிலிருந்தபோதும் அவரின் குரல் வலிமையான பலமுடையதாக இருந்ததால் மலேசியா தொழில்நுட்பத்துறையில் துரித முன்னேற்றம் கண்டது.

ஓய்வு பெற்ற பிறகும் அவரின் அதிகாரக்குரலின் வலிமை நீர்த்துப்போகாமல் இருப்பது மலேசிய அரசியல் இதுவரை சந்திக்காத ஒன்று. மஹாதிருக்குப்பிறகு பிரதமராக இருந்து, குறுகிய காலத்தில் நாற்காலியைக் காலி செய்த அப்துல்லா படாவி இன்றைக்கு இருக்கிற இடம் தெரியவில்லை. என் பதவி ஓய்வுக்குப்பிறகு நான் என்னை ஆலோசனை கேட்டால் ஒழிய, அரசியல் விவகாரங்களில் தலையிடமாட்டேன் என்று உறுதியளிததவர் இதுநாள்வரை கொடுத்த வாக்கைக்காப்பாற்றி `வர, மஹாதிர் அதற்கு முரணான கொள்கையுள்ளவர் என்பதை பல விசயங்களில் தலையிட்டு தன் மேதைமையை நிரூபித்து வருகிறார்.
1998 ஆண்டு அப்போதைய துணைப்பிரதமராக இருந்த அன்வர் இப்ராஹிமுக்கு மஹாதிருக்கும் கொள்கையளவில் உண்டான முரண்பாடு உட்பூசலாக பரிணமித்ததால் அன்வரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கினார் மஹாதிர். மக்களிடையே மஹாதீரைவிட அதிகச் செல்வாக்குடன் நாட்டின் உயரிய பதவியில் இருந்த அன்வாரை நீக்கியதற்கான காரணம்தான் பலரை வியப்பில் ஆழ்த்தி நம்பகத்தன்மையற்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டிருந்தது. அன்வர்மீது அவர் கொண்டுவந்த ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டு அவரை 13 ஆண்டுகாலம் சிறைக்குள் தள்ளியது. அதிகாரத்துவத்தின் உச்சபட்ச நீட்சி இது என வர்ணிக்கப்பட்டாலும், அப்போதைக்கு அவரை எந்த எதிர்ச்சக்தியாலும் அசைக்கமுடியவில்லை.
அன்வாரை சிறைக்கு அனுப்பிய ஓரிரு ஆண்டுகளில் மஹாதிருக்கு ஏழரை நாட்டுச்சனியன் வந்தமர்ந்துகொண்டது. கட்சியிலும் ஆட்சியிலும் பாரிய அளவில் நம்பிக்கை நட்சத்திரமாக முத்திரை பதித்த அன்வார் ஆதரவாளர்களின் நெருக்கடியால் மஹாதிர் 2003ஆம் ஆண்டு UMNO பேரவையில் பேராளர்கள் அதிர்ச்சியுறும் வகையில் தான் “ஓய்வுபெறுவதாக” கண்ணீரோடும் சுயகௌரவத்தைக் காப்பாற்றும் பொருட்டும் விடைபெற்றார்.
தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமர்ந்திருந்த நாற்காலியை விட்டுக்கொடுத்த பின்னரும், தான் முன்வைக்கும் வலிமையான கருத்துக்களின் பின்விளைவுகள் அசாதாரணமாகவும், சில சமயம் ஆட்சியிலிருந்தவர்களை ஆட்டிப்படைக்கவும் செய்து வருகின்றது.
தனக்குப்பிறகு பிரதமராக வந்த அப்துல்லா படாவி, 2004 ஆம் ஆண்டு தேர்தலில் வரலாறு காணாத வெற்றிபெற்றாலும். அதனை அடுத்த வந்த 2008 ஆண்டு தேர்தலில் வரலாறு காணாத வெற்றியில் தோல்வியும் தழுவினார். மலேசியா விடுதலை அடைந்த காலந்தொட்டு , பலம்வாய்ந்த மூவினக்கட்சியின் கூட்டமைப்பாக (மலாய், சீன, இந்திய) இருக்கும் தேசிய முன்னணி ஆளுங்கட்சி மிகச்சௌகர்யமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தொடர்ந்து வெற்றி கண்டு வந்தது. ஆனால் பாடாவி ஆட்சிக்கு வந்து ஒரே தவனையில் அந்தப் பெரும்பான்மையை இழந்து, வெற்றியைத்தக்க வைத்துக்கொள்ளாமல் மக்களின் ஆதரவை எதிர்க்கட்சிக்குத் தாரை வார்த்தது. படாவியின் ஆட்சியின் கீழ் அடைந்த சரிவு ஆளுங்கட்சியின் ஆளுமையை கேள்விக்குட்படுத்தியது. (உள்ளபடியே மஹாதிர் ஆட்சியின் நீட்சிதான் இந்தச்சரிவுக்கும்
ஒரு காரணம்.)

பாடவியின் ஆளுந்திறனை வேலிக்கு வெளியில் இருந்து கூர்ந்து கவனித்துவந்த மஹாதிர், படாவி முன்மொழியும் பொருளாதாரச் சமூக மூன்னேற்றத்திட்டங்களின்மேல் நம்பிக்கையற்று கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கத்துவங்கினார். மக்களை ஈர்க்கும் செய்திப்பசிக்குப் அலையும் ஊடகங்களுக்கு மஹாதிரின் கருத்தாக்கங்கள் பெருந்தீனியாக அமைந்தன. படாவி எதிர் நீச்சல் போடமுடியாமலும், மீள்வதற்குப் பற்றிக்கொள்ள மிதவையைக் கணாதும் தத்தளிக்க ஆரம்பித்ததார். 2008 ஆம் ஆண்டுத்தேர்தலின் தோல்வியை அப்துல்லா படாவிதான் ஏற்கவேண்டும். எனவே அவர் உடனடியாகப்பதவியை விட்டு விலகவேண்டுமென பகிரங்கமாகக் குரல்கொடுத்த வண்ணமிருந்தார். புதிய பிரதமராக இன்றைக்குத் துணைப்பிரதமராக இருக்கும் நஜிப் ராசாக் வரவேண்டுமென்றும் வெளிப்படையாகக் கருத்துக்கூறினார். இது ஒரு அத்துமீறலான அபிப்பிராயமாக் இருந்தாலும், அவரின் குரல் UMNOவின் பிரதிபிம்பமாக உருவெடுக்க ஆரம்பித்தது. பின்னர் நெருக்கடியைத்தாங்க முடியாத படாவி தான் பதவியிலிருந்த் மார்ச் மாதம் விலகுவதாக அறிவித்தத்துமின்றி, நஜிபே தன் வாரிசு எனவும் ‘வழிமொழிந்தார்.’ நாற்கலியோ, நாட்டளுமன்ற பதவியோ இல்லாமல் சாமான்ய குடிமகனாக இருந்த மஹாதீரின் செல்வாகுக்கும் சொல்வாக்கும் செய்த அசகாய சாதனை இது. படாவியிமேல் உண்டான மஹாதிர் கொண்ட தார்மீகக் கோபத்துக்குப்பின்னால், சுயநல ஆத்திரமும் மாஹாதீருக்கு இருக்கத்தான் செய்தது. மலாய்க்கார அரசியலில் சக்திவாய்ந்த UMNO இளைஞர் பதவிக்குப் போட்டியிட படாவியின் மருமகனான கைரியும், மஹாதிரின் மகனான முக்ரிசும் களத்தில் குதிக்கத் தயாராக இருந்தனர். படாவியின் ஆட்சியின் போது அடையாளம் காணப்பட்ட பின்னடைவுகளை மக்கள் முன்னிலையில் போட்டுடைப்பதன் மூலம் கைரி பலவீனமடையக்கூடும் என மஹாதிர் எண்ணமாக இருந்ததைச் சொல்லித்தெரியவேண்டிய அவசியமற்றது. படாவிக்கு முக்கிய ஆலோசனைகளைக் கைரிதான் சொல்லிவருகிறாரென ஊடகங்களுக்குக்கூறி படாவியைச் சிறுமைப்படுத்தவும் மஹாதிர் தவறியதில்லை. மாஹாதிரின் சொல்லம்புகளின் ரணத்தைத் தாளமுடியாமல் இறுதியில் நாற்காலியைக் காலிசெய்துவிட்டு உம்ராவுக்குக் கிளம்பிப்போய்விட்டார் படாவி. ( இங்கேயும் குடும்ப அரசியல் குடுமியைப்பிடித்து ஆட்டித்தான் வருகிறது பாருங்கள்)
ஆளுங்கட்சியில் இன்னொரு பலம்வாய்ந்த ஒன்றாக இந்தியர் சார்ந்த அரசியல் கட்சியாக மலேசிய இந்தியன் காங்கிரஸ் (ம.இ.க) விளங்கி வருகிறது. இதன் நீண்டகாலத்தலைவராக டத்தோ சிரி சாமிவேலு பதவியைக்கெட்டியாக பிடித்தவண்ணமிருக்கிறார். 2008 தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி கண்டதற்கு ம. இ.கவும் ஒரு காரணமெனச் சொல்லப்படுகிறது. குறிப்பாக நெடுங்காலமாக ம.இ.கவின் தலைவராக இருக்கும் சாமிவேலு கட்சி நிலைகுலைந்ததற்கும் அவரின் கட்சியை வழி நடத்திச்செல்லும் முறை அதிகாரத்தோரணையுடையது எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. மக்களின் குறையைக் கரிசனதோடு அணுகாமல், காத்திரத்தோடு முன்னெடுப்பதால் தோல்விக்கான முகாந்திரக்காரணமென மஹாதிர் சொல்லிவந்தார். மஹாதிர் ஆட்சியிலிருந்த போது கட்டுப்பட்டு வந்த சாமிவேலு, அவரின் பதவி துறப்புக்குப்பிறகு தன்னைப்பற்றி அவர் வெளியிட்டு வந்த கருத்துக்களுக்கு பதலடி கொடுக்கத்தவறவில்லை. பல தருணங்களில் சாமிவேலுவின் விசுவாசிகள் தன் தானைத்தலைவரைப்பற்றி விமர்சிப்பதைத்தாங்க முடியாது, மாஹாதிருக்கு எதிர்வினைகளாற்றத் துவங்கினர். கடந்த ம.இ.க பேரளர் மாநாட்டில், ஒரு பேராளர் தன் தலைவன் மீதான விசுவாசத்தை நிரூபிக்க, தன் கருத்தை முன்வைக்கும்போது சாமிவேலுவை பதவி விலகச்சொல்லும் மாஹாதிரின் நிழல் படத்துக்குச் செருப்பு மாலை போடவேண்டுமென்று வன்மையான குரலின் சொல்லியிருக்கிறார். (இராக்கிய நிருபர் புஷ்ஷை செருப்பால் தாக்க முயன்றது போன்றோ, இந்தியாவின் தற்காப்பு அமைச்சர் மீது வீசியது போன்ற வீச்சுகளில் இறங்காமல் நல்லகாலமாக வாய்வீச்சோடு நின்றுபோனது )
இந்தச்செய்தியை வெகு ஜன ஊடகங்கள் அவர்களின் பிரச்சினைகளுக்கான கிரியா ஊக்கிகளாக வடிவமைத்துக்கொடுத்தன. UMNO வைச்சேர்ந்த அரசியல்வாதிகள் இதனை ஊதிப்பெருக்கினர்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, மஹாதிர் இதற்கு எதிர்வினையாற்றியதுதான் அனுபவமிக்க ஒரு நாட்டுத்தலைவரிம் மேதைமையை நிரூபித்தது. நிருபர் ஒருவர் தொடுத்த வினாவுக்கு “என் படத்துக்கு செருப்பு மாலை போடவேண்டுமென்று சொன்னவர்மேல் எனக்குக்கோபமில்லை, அவரின் வார்த்தைக்குப்பின்னால் இருக்கும் சாமிவேலு மீதுதான் நான் கோபமுறுகிறேன்,” என்றார். “ம. இ.க இந்த அளவுக்குச் சீர் கெட்டுப்போனதற்கு சாமிவேலுதான் காரணம், எனவே அவர் பதவி விலகுவது நாட்டுக்கும் நல்லது, அது சார்ந்த ஆளுங்கட்சிக்கும் நல்லது, 2008 தேர்தல் பின்னடைவுக்குச் சாமிவேலுவும் பொறுப்பேற்கவேண்டு” மெனவும் ஒரு போடு போட்டார். அவர் கொடுக்கும் நெருக்கடி தாங்க முடியாமல், பிரச்சினையை ஆறப்போடும் பொருட்டு “நான் இரண்டு மாதம் விடுமுறையில் போகிறேன்” என்று அறிக்கை விட்டார் சாமிவேலு.
“இரண்டு மாதமென்ன இருபது வருடம் விடுமுறையில் போகட்டும்,” என்று நக்கலடித்தார் மஹாதிர். இப்போது சாமிவேலு தான் 2011 ஆண்டு பேராளர் மாநாட்டுக்குப்பிறகு பதவி ஓய்வு பெறுவேன் என்று வருத்தத்தோடு உறுதியளித்திருக்கிறார். இந்தப்பெருமை யாரைச்சேரும்?

2008 தேர்தலுக்குப்பிறகு ஆளுங்கட்சியான தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பானமையை இழந்ததற்கு இன்னோரு காரணம் மக்களிடையே உண்டான அரசியல் விழிப்புணர்ச்சி. மாஹாதிர் காலத்தில் துணைப்பிரதமராக இருந்து, மஹாதிரின் மிகப்பெரிய வைரியான அன்வர் தலைமையிலான எதிர்க்கட்சி கட்சி கூட்டணி அமைத்தது ஒரு முக்கியக்காரணம். இங்கே இந்தியர் சார்ந்த புகழ்பெற்ற 2007ஆம் ஆண்டு மக்கள் சக்தி போராட்டத்தையும் ஒரு காரணமாகச்சொல்லலாம்.

அன்வர் மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர் மட்டுமல்ல தேர்ந்த சமயத்தலைவரெனவும் மதிக்கப்படுபவர். என்னதான் பல ஆண்டுகள் சிறையில் இருந்தாலும் அவரின் பழைய செல்வாக்கு மக்களிடையே நீர்த்துப்போகாமல் இருந்துவந்தது. அதனடிப்படையில் அவர் தலைமையிலான எதிர்க்கட்சி பல மாநிலங்களை வென்றது. மூன்றில் ஒரு பெரும்பான்மையின் தினவோடு நாடாளுமன்றத்தில் அமர்ந்தது. அதனால் அன்வரின்மேல் மஹாதீருக்கு இருந்துவந்த காழ்ப்பு சற்றும் குறைந்தபாடில்லை. அவ்வப்போது அவரைக் கிண்டலடித்தபடி இருக்கிறார் 80 வயதைத்தாண்டிய மஹாதிர்.

சிலாங்கூர் மாநிலம் அன்வர் தலைவராக இருக்கும் கூட்டணியின் தயவில் ஆட்சியைப்பிடித்தது. இன்றைக்கு அதன் முதல் அமைச்சராக இருக்கும் டான் சிரி காலிட், அன்வரை ஒரே ஒரு மலேசிய ரிங்கிட் சம்பளத்துக்கு மாநில பொருளாதார ஆலோசகராக நியமித்தார். மஹாதிர் சும்மா இருப்பாரா?
“ஆமாம், அன்வர் ஒரு ரிங்கிட் மட்டுமே சம்பளம் வாங்கத்தகுதியானவர்தான். அவர் நாட்டின் நிதி அமைச்சராக இருந்தபோது நாட்டின் நிதிநிலைமை எந்த அளவுக்கு ‘முன்னேற்றமடைந்தது’ என்பதைத் உணர்ந்துதான் அவருக்கு இந்தச்சம்பளம் கொடுக்கப்படுகிறது,” என வஞ்சப்புகழ்ச்சி செய்தார்.

UMNO வின் மகளிர் பிரிவு தலைவியாகவும், வெளிநாட்டு வணிகத்துறை அமைச்சராகவுக் இருந்தவர் ரபிடா அஸிஸ். விலையுயர்ந்த கார்கள் வாங்கி விற்கும் அளிப்பாணையைத் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டை அவர்மீது சுமத்தினார் மஹாதிர். மஹாதிர் பதிவி ஓய்வுபெற்றுவிட்டபடியால் அம்மையாருக்குக் கோபம் பொங்கிவிட்டது. மாஹாதிருக்கு ‘ஞாஞோக்’ கண்டுவிட்டது அதனால் தான் உளறி வருகிறார் என்று கூறிவிட்டார். மலாய் மொழியில் ஞாஞோக் என்றால் தள்ளாமையால் உண்டாகும் மறதி, உளறல் என்று பொருள் கொள்ளலாம். தான் பார்த்து அரசியலில் வளர்ந்த பிள்ளைகள் தன்னையே பதம் பார்ப்பதை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நபரல்ல அவர்.
“ நான் உளறுகிறேனா, நீ உளறுகிறாயா?” என தான் கூறிய குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களைப்புட்டு புட்டு வைக்க, அம்மையார் வெள வெளத்துப்போய்விட்டார். அதன் பிறகு நடந்த UMNO மகளிர் தேர்தலில் தோல்விகண்டு, அரசியலை விட்டு விலகியது மகாதீரோடு சரி சமமாக சமருக்கு நின்றதில் உண்டான பிரதிபலனாக அமைந்தது.
பதவியிலிருந்து ஓய்வுபெற்றாலும் அரசியல், சமூகவியல் மைய நீரோட்டத்திலிருந்து தன்னை இன்னும் ஐக்கியப்படுத்திக்கொண்டு இயங்கி வருகிறார். தன் ஆலோசனையையும், விமர்சனத்தையும் விரும்புகிறார்களோ இல்லையோ அதனை காய்தல் உவத்தலின்றிக் கூறி வருகிறார். இவர் வாயில் விழுந்தவர்கள் விழுங்கப்பட்டு வருகிறார்கள் என்பதை நாடு உணர்ந்தே இருக்கிறது. எனவே மகாதிரூக்கு எதிரான வாய்ச்சவடால் இப்போதெல்லாம் அருதியாகிவிட்டது.

ko.punniavan@gmail.com

Series Navigation

கோ.புண்ணியவான்

கோ.புண்ணியவான்