என் மகள் N. மாலதி (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 2

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

லலிதா



ஒரு டூர் போக ஏற்பாடு செய்திருந்தார் மாலாவின் கணவர். த்வாரகா, மற்றும் சில இடங்கள். ரிஸர்வேஷன் எல்லாமே செய்து விட்டார். டில்லிக்கு இருவரும் போய் வந்தார்கள். அங்குள்ள உறவினர்களைப்பார்க்கச் சென்றிருந்தனர். மாலாவுக்கு பெங்களூருக்கு மாற்றல் ஆகி விட்டது என்பதை இன்டெர்நெட் மூலம் அறிந்ததும், யாத்திரயை ரத்து செய்துவிட்டு பெங்களூர் திரும்பினாள் மாலா. பாஸ் வீணாகமல் தான் மாத்திரம் சென்று வந்தார் அவள் புருஷன். மாற்றல் வந்து வேலையை ஏற்றவுடன் குவாட்டர்ஸ் பார்த்து, வீடு மாற்ற ஏற்பாடுகளை கவனித்தாள், மாலா. குவாட்டர்ஸ¤க்கு காத்திருப்பு அதிகம் இருந்ததால், குடித்தனத்திற்கு வாடகை வீடு தேட அட்வான்ஸ் அதிகம் கொடுக்க வேண்டும் வாடகையும் அதிகம், சிறிய வீடு போதவும் போதாது.

எனவே லோன் எடுத்து ஒரு •ப்ளாட் வாங்கி விடலாம் என்று யோசித்துத் தேடினாள். அவசரத்திற்கு வெகு சிரமப்பட்டு திரட்டி அட்வான்ஸ் கொடுத்து பாங்க லோன் எடுத்துக் கட்டுவதாக ஒரு •பிளாட்டை ஏற்பாடு செய்தாள். சதாராவிலிருந்து சாமான்களுடன் நாங்களும் வந்து பெங்களூர் சேர்ந்தோம். அந்த •பிளாட் இரண்டு ரூம் ஹால் இருந்தாலும் சிறியதாக இருந்தது. சாமான்கள் பிரிக்காமால் அப்படியே வைத்தும் போதவில்லை. அதிலேயே ஒரு பெரிய •பிளாட்டை வாடக்கு எடுத்துவிட யோசித்தோம். சாந்தினி வந்தால் இடம் போதாது என்பதால்தான்.

அமெரிக்கா போக மாலாவுக்கும் அவள் கணவருக்கும் விசா கிடைக்கவில்லை. எப்படியும் மகள் சாந்தினிதான் வருகிறாளே என்று சமாதானமாகி விட்டது. இரண்டு மாதங்கள் போவதாக தீர்மானித்த அந்த இரண்டு மாதங்கள் மிக முக்கியமான மாதங்கள் ஆகிவிட்டன. திருநெல்வேலியில் ஒரு வீட்டு மனை வாங்கி இருந்தது. அதையும் விற்பனை செய்தாயிற்று. பெங்களூரிலேயே ஒரு மனை இருந்தது. அதையும் விற்றாகி விட்டது. உடனே வேறு ஒரு சொத்தில் பணத்தை முதலீடு செய்வதுதான் முக்கியம்.

இப்போது ஒரு பெரிய •பிளாட்தான் அவசியம். எனவே அதைத் தேடிய போது, வெஸ்டோ ரோட்டில் இந்த வீடு கிடைத்தது. சற்றும் யோசிக்கவில்லை. உடனே அட்வான்ஸ் கொடுத்துவிட்டு எப்படி எப்படியோ புரட்டி பெரிய வீடு தான் முக்கியம் என்று வாங்கி விட்டாள். சாந்தினி வரும் போது எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்று லோனில் ஒரு கார், (மாருதி 500) வாங்கி டிரைவரும் வைத்துக் கொண்டாள்.

தீபாவளிக்கு புதிய வாஷிங் மெஷின் வாங்கி, மைக்ரோவேவ் ‘அவன்’ வாங்கி, 4 பர்னர் கொண்ட கேஸ் அடுப்பு, சாந்தினி வந்தவுடன் புது வருப் பிறப்பில் புது •பிரிட்ஜ், சாந்தினி ரூமுக்கு ஏ.சி வீடு வாங்கிய உடனேயே எல்லா அறைகளும் மரவேலைகள், எல்லா ரூம்களிலும் பீரோ, அலமாரி, நிலைக்கண்ணாடி எல்லாம் செய்து முடித்தாள். அவள் கணவர் ரூமில் அலமாரி போதவில்லை என்று, மறுபடி சுவார் பூராவும் அலமாரி செய்துவிட்டாள்.

சாந்தினிக்கு குழந்தை வேண்டும் என்று அதையும் தத்து எடுத்துக் கொண்டு நிறைவேற்றியதில் திருப்தி ஏற்பட்டது. குழதையை அப்படிக் கொஞ்சி, அதற்கு என்ன செய்யவேண்டும், என்ன என்ன வாங்க வேண்டும் என்று 100 வருடத்திற்கு கனவுகள் கண்டு அவளுக்கு சென்னையில் பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடுகள் கோடித்து கோடித்து சாமான்கள் வாங்கினாள்.

சதாராவிலிருக்கும் போது கிட்னி தொந்தரவு வந்து மருந்துகள் சாப்பிட்டு உப்பில்லாமல் சாப்பிட்டு வந்தாள் மாலா. என்றாலும் சாதாரணமாகத்தான் வளைய வந்தாள். திடீரென்று மஞ்சள் காமாலை என்று அதற்கு மருந்து சாப்பிட வேண்டி வந்தது. மந்திரித்ததும் சற்றுக் குறைந்தது. குழந்தை பிறந்த நாள் சமயம் நன்றாகவே இருந்தாள். சென்னை போய் வந்த மறுநாளே உடல் நலம் சரியில்லை என்றாள்.

ஸ்பெஷலிஸ்டு டெஸ்ட்கள் செய்து மல்லைய்யா ஆஸ்பத்திரியில் இரண்டு நாட்கள் சேர்த்து சற்று பரவாயில்லை என்று வீட்டுக்கு அனுப்பி விட்டனர். ஒரு வாரத்திற்குள், ஆஸ்பத்திரிக்குத் திரும்பவும் போக வேண்டி வந்தது. மிகவும் பலஹீனமடைந்து சோர்ந்து விட்டாள். ஆலாலும் தைரியமாகவே பேசினாள். சாப்பாடு நன்றாக இல்லை என்று சமையலுக்கு ஆள் வைக்க வேண்டுமென்றாள். அதற்கும் ஏற்பாடு செய்தாள்.

குலதெய்வங்களுக்கு பிரார்த்தனைகள் செய்ய வேண்டுமென்று கணவரை கோவில்களுக்குப் போய்வரச் சொன்னாள். இரண்டாம நாளே திரும்பவும் உடல் நலம் சரியில்லாமல் போய் பக்கத்திலிருக்கும் ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி சாந்தினியிடம் சொன்னதால் ப்ரிஸ்டின் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு, அப்பாவை உடனே திரும்பும்படி சாந்தினி போன் செய்துவிட்டு அத்தைகளையும் வந்துவிடுங்கள் என்று சொல்லி விட்டாள்.

கணவனின் அண்ணா, மன்னி பெங்களூரிலேயே இருந்ததால் அவர்களும் வந்தார்கள். யார் வந்தால் என்ன? நன்றாகவே இருந்தவள் இரவு மூச்சுவிடக் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி, காலையில் ஐ.சியூ வில் சேர்த்தார்கள், பிறகு திரும்பி வரவே இல்லையே?

முதல் செவ்வாய் ஆஸ்பத்தியில் சேர்த்த நேரம் அதே அடுத்த செவ்வாயில் அவள் உடல்தான் வீடு வந்தது. அவரவர்கள் துக்கம் அவரவர்களுக்கு மிகப் பெரியது. ஞாயிறன்று என்னைக் கூப்பிட்டனுப்பி நாளை வந்துவிடுவேன் என்றாள்.

முதல் ஞாயிறு அன்று என்னிடம் “ஒன்றா இரண்டா? எடுத்துச் சொல்ல” என்ற பாட்டு கண்ணதாசன் பாட்டு கேட்டிருக்கிறாயா என்றாள். பிறகு அதன் வார்த்தைகள் தெரியவில்லை. சாந்தினியை நெட்டில் தேடி எடுத்துகொண்டுவரச் சொல்லி படித்தாள்.

சந்தினியின் முகம் வாடாமல் பார்ப்பவள். அவள் முகத்தில் சிரிப்பே இல்லாமல் போக்கடித்து விட்டாள். உன்னைக் கரையேற்றாமல் நான் போக மாட்டேன் என்று சொல்லிவிட்டு என்னை நட்டாற்றில் விட்டுவிட்டு போய்விட்டாள். குழந்தையைப் (பேத்தியை) பார்க்க வேண்டும் என்று ஆஸ்பத்திரியில் கேட்டிருக்கிறாள். ஆனால் நோய் தொற்று ஏற்படலாம் என்று மகளே மருத்துவராக இருப்பதினால் அங்கு இருக்கும் டாக்டர்கள் கொண்டு வரக் கூடாது சொல்லி விட்டதாலும் சாந்தினி குழந்தையை எடுத்துப் போகவில்லை. எனவே பிறகு குழந்தையை அவள் பார்க்கவே இல்லை. சாந்தினி இந்தியா வந்து கூடவே இருந்து ஒரு மருத்துவராக ஆலோசனை சொல்லி ஆறுதல் அளித்தது ஒரு நல்ல விஷயம். அவளுக்கும் திருப்தி. மாலா வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கி கடன்களைக்கட்டி மாத பென்ஷன் மூன்றுமாதங்கள் கூட வாங்கவில்லை.

ஆசைஅசையாய் வாங்கிய வீட்டில் ஆரோக்கியமாய் வளைய வரவில்லை. குழந்தையுடன் பேசி விளையாடி அது ஊருக்கும் போகும் வரை கூட இருந்து வழி அனுப்பவில்லை. எல்லா விஷயத்துக்கும் அவசரம். சாவுக்கும் அவசரமே ஆயிற்று. அவள் நல்ல கதிக்குத்தான் போனாள். மற்றவர்கள்தான் உருகி உருகி தவிக்கிறோம்.

என் மாலாவின் பல வித உருவங்களை நினைத்து நினைத்து மருகுகிறேன். சின்ன வயதில், ஐந்து வயதிருக்கும். சிவப்பு பைஜாமாவும், மாம்பழக் கலர் குர்தாவும் போட்டு, இரட்டைப் பின்னல் போட்டு போட்டோ எடுத்தோம். மிக அழகாயிருப்பாள். அது ப்ளாக் அண்ட் வொயிட் போட்டோதான். எந்த உடை போட்டாலும் பொம்மை போலிருப்பாள். அவள் பெரியவளானபோது மயில் கழுத்துக் கலரில் பாவாடை சொக்காய், நைலான் தாவணி மிகமிக அழகாயிருக்கும். போட்டோ இல்லாவிட்டாலும் என்கண் முன்னே இன்னமும் அந்த உடையில் நிற்கிறாள்.

முன்பு கிருஷ்ணராஜபுரத்தில் கஷ்டப்பட்டு வீடு கட்டி அவளால் வாழ முடியாமல் போய்விட்டது. வாடகை வீட்டிற்கு போனோம். இப்போது இவ்வளவு வசதியாக வீடு வாங்கி வாழ ஆசைப்பட்ட அவள் போயேபோய் விட்டாளே. எந்தப் பக்கம் திரும்பினாலும், அவள் நிற்பதும், நடப்பதும் முணுமுணு வென்று பாடுவதும்தான் நினைவில் நிற்கிறது. டி.வியில் சிறப்புத் தேன்கிண்ணம் பார்ப்பாள். பழைய பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

கடைசியாக அன்னக்கிளி என்ற படம் ரசித்துப் பார்த்தாள். சில சின்னத்திரை சீரியல்கள் பார்ப்பாள். பார்க்கவிட்டுப்போனால், தோழியிடம் கதை கேட்பாள். ஹிந்திப்பாடல் ‘ரங்கோலி’ முன்பு விடாமல் கேட்பாள். முகேஷ் பாடல்கள் காஸ்ட்டுக்கள் கேட்பாள்.

லீவு நாட்களில் கூட திட்டமிட்டே வேலை செய்வாள். சோம்பேறியாய் உட்கார்திருப்பது பிடிக்கவே பிடிக்காது. சமையல் செய்தாலும் அளந்து, மீந்து விடாமல் இருக்கும்படி செய்வாள். விணாக்குவதும் பிடிக்காது.

பளிச்சென்று உடைகள் உடுக்க வேண்டும். கலக்கலப்பாக நடமாட வேண்டும். இது போதுமே என்று நான் சொன்னால், உன்னை நாங்கள்தானே பார்க்கப்போகிறோம், நல்லபடியாய் உடுத்து என்பாள். சந்தோஷமாயிருக்க வேண்டும் நீ என்பாள். ஆபீஸ் நண்பர்கள். உறவினர்கள், அக்கம்பக்கம், எழுத்தாளர்கள் என்று எல்லோரிடமும் கலகலப்பாக பழகுவாள். நலன் விசாரிப்பாள்.

அதனால், அவள் இழப்பு எல்லோரையுமே உலுக்கிவிட்டது. இந்த வயதில் போய் விட்டாளே என்று சிலருக்கு பயம் கூட வந்துவிட்டது. நமக்கும் வயதாகிறதே என்ற கவலையும் வந்துவிட்டது. தலையை வலித்தால் கூட செக்கப் என்று சென்று விடுகிறார்கள். எனக்கு தலை கூட வலிப்பதில்லை. போக வழியும் தெரியவில்லை.

மாலா எத்தனையோ முறை பணம் புரட்டக் கஷ்டப்பட்டிருக்கிறாள். ஆனால், சொல்லவே மாட்டாள். அவளின் அப்பா படுத்த போது, உடனே கைவளையல் களை வைத்து கடன் வாங்கி ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டினாள். ரயிலில் களவு போன போது சதாரா திரும்ப பூனாவிலிருந்து டிக்கட் எடுக்க பணமில்லை. போன் செய்ய காசில்லை. ரயிலில் டி.டி.ஆர் தானே உதவி செய்து அனுப்பினாராம். மறுநாள் அவருக்கு எம்.ஓ செய்தாள்.

பெங்களூர் வந்து கெஸ்ட் ஹவுஸில் தங்கி பிறகு வீடு அட்வான்ஸ் கட்ட சரியானபடி ரிகார்டுகள் கிடைக்காமல், மறுபடி சதாரா வந்து சரி செய்து, நினைத்த தேதியில் சாவி வாங்கி, அங்கேயே தங்கி, சாப்பாடு படுக்கை வசதியின்றி, பச்சைத் தண்ணீரில் குளித்து, கொசுக்கடியில் தூங்காமல் இம்சைகள் பட்டுப் பிறகு, குடித்தனம் வந்த பிறகுதான் அவைகள் எல்லாம் சரியாயிற்று.

ஒரு நாள் சிவாஜி நகரில் விழுந்து விட்டதாக சொன்னாள். அதை உடனே சொல்ல மாட்டாள். எப்போதோ சொல்வாள். ரிடையர்மெண்ட் எடுத்த பிறகு கூட மைசூர் போய் வந்தாள். ஒரு மனை பார்க்க வேண்டும் என்று. அப்போதும் வழியில் விழுந்து விட்டதாகச் சொன்னாள். மனதிற்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது.

கண்ணே, மணியே என்று கொஞ்ச முடியவில்லை, என்றாலும் என் குழந்தை எப்படிப்பட்டவள்? என்ன தவம் செய்து பெற்றேனோ? அநியாயமாக தொலைத்து விட்டேனே? இனி எப்போது பார்க்க முடியும்? அப்படிப்பட்ட பெண்ணை என்ன பாவம் செய்து என் கண் எதிரிலேயே வாரிக் கொடுத்தேன்? எந்த தெய்வமும் இரக்கம் காட்டவில்லயே? என் கண்ணே பறி போனதே. இனியும் வாழ வேண்டியிருக்கிறது. அந்த நாளில் வனவாசம் போவார்கள் என்பார்கள். என்னால் வீட்டை விட்டுக்கூட வெளியே போக முடியவில்லை. வேளைக்கு தூங்க வேண்டி உள்ளது. வேளைக்கு சாப்பிடவேண்டி உள்ளது. வேளை தவறாமல் பாத்ரூம் போவது ஒரு அவஸ்தை. என்ன செய்வேன்?

அவளை அவசரமாகக் கூப்பிட்டுக் கொண்ட தெய்வம் என்னை ஏன் இப்படி விட்டு வைத்து இருக்கிறது? யாருக்கு என்ன லாபம்? எத்தனையோ வேலைகள் அவள் முடிக்க வேண்டிருக்க போயே போய் விட்டாள்.

இன்னமும் நம்ப முடியவில்லை. போனில் பேசுவாள் என்றும் வெளியூருக்குப் போயிருப்பதாகவும், கடிதம் எழுதுவாள் என்றும் மனம் ஏமாற்றுகிறது. ‘லலிதா’ என்று கூப்பிடுவது போல குரல் கேட்கிறது. எழுது, எழுதாவிட்டால் எழுத வராது என்பாள். இப்படி அவளைப்பற்றிப் புலம்பி எழுத வைத்துவிட்டாள்.

சுற்றிக் கொண்டே இரு, படுத்துவிட்டால் எழுந்திருக்க முடியாது என்று என்னைச் சொல்வாள். அவள் எழாமலேயே போய்விட்டாள்.

என்னிடம் அக்கறை காட்டும் ஒரே ஜீவன் அவள்தான். அது அவள் இருக்கும் போது உரைக்கவில்லை. இப்போதுதான் நிஜமாக நிர்கதி ஆகிவிட்டேன். அவள் அப்பா போன போது எனக்கு நிழலாக அவள் அரண் போல் நின்றாள்.

இப்போது என்னை இருக்கிறாயா? என்று போன் செய்து கேட்கக்கூட இப்போது யாருக்கும் நேரமில்லை. நாம் எதிர்பார்ப்பதும் தவறுதான். காலத்தில் அவரவர்வேலை செய்து கொள்ள நேரம் போதாத காலம் இது. மற்ற ஜீவன்களைப் பற்றி நினைக்க எப்படி முடியும்? எப்படியோ எனக்கு ஒரு முடிவைக் கொடு கடவுளே என்று மனம் வேண்டுவதுதான் பைத்தியக்காரத்தனம். எத்தனை பாடுபட பிறவி எடுத்தேனோ? முடிய வேண்டாமா? ஒரு நாள்வரும் நானும் போவேன்.


Series Navigation

லலிதா

லலிதா