பேராசையெனும் பெருநோய் : அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கல் குறித்தான சில எண்ணங்கள்

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

நரேந்திரன்


அமெரிக்கா மிகவும் சிக்கலான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. நூறு வருடங்களுக்கும் மேலாக இயங்கிவந்த பல பெரும் வங்கிகளும், முதலீட்டு நிறுவனங்களும் தங்களின் தவறான நிர்வாகம் மற்றும் முதலீடுகளின் காரணமாக திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றன. பொருளாதார இழப்பு 1 டிரில்லியன் டாலர்கள் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்றைய உலகமயமாக்கல் அமெரிக்காவை மட்டும் பாதிக்கப் போவதில்லை. அமெரிக்கப் பொருளாதாரத்துடன் ஐரோப்பிய, சீன, இந்தியப் பொருளாதாரங்களும் பின்னிப் பினைந்திருக்கின்றன. இந்தப் புதிய பொருளாதார அமைப்பில் ஒரு நாட்டிற்கு ஏற்படும் இழப்பு அடுத்தடுத்து பல நாடுகளையும் பாதித்து வருவது தவிர்க்க இயலாத ஒன்று. இந்தியாவில் இப்போதைக்கு அதிக பாதிப்பு இல்லாதது போலத் தோன்றினாலும், இனிவரும் ஆண்டுகளில் பாதிப்பு இருக்கலாம்.

அமெரிக்காவில் மட்டும் ஏறக்குறைய 1.2 மில்லியன் அமெரிக்கர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். பங்குச் சந்தை வரலாறு காணாத அளவிற்குச் சரிந்து போயிருக்கிறது. இராக்கிய யுத்தமும், எண்ணெய் விலையுயர்வும், கட்டுப்பாடற்ற அரசாங்கச் செலவினங்களும் அமெரிக்காவை பெரும் சிக்கலில் ஆழ்த்தியிருக்கின்றது. Citi Bank, Lehman Brothers, Merryl Lynch போன்ற பெருவங்கிகளுக்கும், முதலீட்டு நிறுவனங்களுக்கும் மட்டுமல்லாது GM, Ford, Chrysler போன்ற மோட்டார் தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஜார்ஜ் W. புஷ் தன்னுடைய பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டுமாதங்களே இருக்கும் நிலைமையில் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது போலத் தோன்றுகிறது. புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா பதவி ஏற்கும் வரை (ஜனவரி 20, 2009) எதுவும் செய்ய இயலாத நிலையில், அமெரிக்காவின் சிக்கல் தேக்க நிலையை அடைந்திருகின்றது. எதிர்வரும் 2009-ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு மிகப்பெரும் சோதனைக் காலமாக இருக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல மில்லியன் அமெரிக்கர்கள் வேலையிழக்கும் ஆபத்தும், அதன் பின் விளைவுகளும் எண்ணிப்பார்க்கவே அச்சமூட்டுவதாக இருக்கின்றது.

வலுவான அமெரிக்கப் பொருளாதாரம் திடீரென இந்த நிலைக்குத் தள்ளப்படக் காரணம் என்ன என்பது குறித்து நான் படித்த, தெரிந்த, உணர்ந்த செய்திகளை என்னால் இயன்றவரை விளக்க முயற்சித்திருக்கின்றேன். பிழையிருப்பின் தயவுசெய்து “வார்த்தை”க்கு எழுதும்படி வேண்டுகிறேன். சரியான தகவல்கள் வாசகர்களைச் சென்றடைய வேண்டுமென்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இருக்கப் போவதில்லை.

**

காலம் காலமாக அமெரிக்கப் பங்குச் சந்தையின் வெளிப்படையான மற்றும் உறுதியான செயல்பாடுகள் உலக நாடுகளை ஈர்க்கும் ஒரு அம்சமாக இருந்து வந்திருக்கின்றது. உலக நாடுகள் பலவும் அமெரிக்க பங்குச் சந்தையிலும், தொழிற்சாலைகளிலும் தங்களின் முதலீடுகளை வைத்திருக்க அமெரிக்க நிதி நிர்வாகத்தின் நம்பகத்தன்மை மிக முக்கியமான ஒரு அம்சம். இன்று அந்த நம்பகத்தன்மை தகர்ந்திருக்கின்றது. இழந்த நம்பகத்தன்மையை அத்தனை எளிதாக மீட்பது இன்றைய நிலையில் சாத்தியமில்லை. இனி வரும் அமெரிக்க நிர்வாகங்கள் எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் அதன் நம்பகத்தன்மை மீட்கப்படுவதும், படாமல் போவதும் அமையக்கூடும்.

அமெரிக்காவின் திடீர் சரிவிற்கு மூன்று முக்கியக் காரணங்களைக் கூறலாம். முதலாவது Sub-Prime Mortgage எனப்படும் தகுதியில்லாதவர்களுக்கான வீட்டுக் கடன்கள். இரண்டாவது, Credit Swap எனப்படும் கடன் உத்தரவாதப் பிரச்சினை. மூன்றாவது Derivatives Market எனப்படும் முதலீட்டுத் திட்டத்தின் வீழ்ச்சி. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க நிதிநிறுவனங்களின் பேராசை. அந்தப் பேராசையே மிகப்பெரும் நிறுவனங்களை மண்ணைக் கவ்வ வைத்திருக்கின்றது.

முதலில் சப்-பிரைம் மார்ட்கேஜ் சிக்கலைக் குறித்துப் பார்க்கலாம். ஒரே வரியில் சொல்வதானால், தகுதியற்றவர்களுக்கு வீட்டுக் கடன் வழங்கியதனால் உருவானதொரு பிரச்சினை எனலாம். இந்தியா போன்ற நாடுகளில் மாதம் ரூ.10,0000 சம்பாதிக்கும் ஒருவர் ரூ. 500,000-க்கு ஒரு வீடு வாங்க ஆசைப்படுவது சரியான ஒன்று. தன்னுடைய வாங்கும் சக்தி இன்னதென்று உணர்ந்தவர் எனலாம் அவரை. அதே ரூ. 10,000 சம்பாதிக்கும் மனிதர் ரூ. 1 கோடிக்கு வீடு வாங்க நினைத்தால்? அதுபோன்ற ஒரு ஆபத்தான ஏன் பைத்தியக்காரத்தனமான எண்ணம் வேறில்லை. முதலில் எந்த வங்கியும் அவருக்கு ரூ. 1 கோடி கடன் தர முன்வராது. ஒரு உதாரணத்திற்கு இந்திய அரசாஙகம் அந்த வங்கியை வற்புறுத்தி தகுதியற்றவர்களுக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள கடன்களைக் கொடுக்கும்படி நிர்பந்தித்தால்?… முடிவு என்னவாகும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அதுதான் அமெரிக்க Fannie Mae, Freddic Mac நிறுவனங்களுக்கும் நடந்தது.

Fannie Mae அல்லது Federal National Mortgage Association 1938-ஆம் வருடம் அமெரிக்க அரசாங்கதினால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. தகுதியுள்ளவர்களுக்கு வீட்டுக் கடன்களை அளிப்பது அதன் நோக்கம். அதற்குப் போட்டியாக Freddie Mac என்ற நிறுவனம் 1970-இல் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டும் அரசாங்க நிறுவனங்கள் எனினும், போட்டியின் மூலம் வீட்டுக் கடன் வழங்குவதைத் துரிதப்படுத்துவதும் அதன் நோக்கம். 2001-ஆம் ஆண்டு வரை சரியான முறையில் இயங்கி வந்த இந்நிறுவனங்கள் பின்னர் பேராசையுடன் சந்தேகத்திற்கிடமான கடன்களையும் வாங்கிக் குவிக்க ஆரம்பித்தன. அவ்வாறு வாங்கிய கடன்களை மீண்டும் பங்குச் சந்தையில் விற்பதன் மூலமும் வருவாய் பெருக ஆரம்பித்தது. ஆனால் அடிப்படையில் அந்நிறுவனங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதினை உணர்ந்து கொள்ளவில்லை. அதற்கான விலையை இறுதியில் அவை கொடுக்க வேண்டியதாயிற்று.

இதனை இப்படி விளக்கலாம். நீங்கள் ஒரு பில்டர் என்று வைத்துக் கொள்வோம். ஒரு ஐம்பது இலட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டினைக் கட்டி, அதனைத் தெருவில் போகும் யாரோ ஒரு சுப்பனுக்கு விற்றுவிடுகிறீர்கள். மாதாமாதம் இத்தனை பணம் கட்ட வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன். வீட்டினை வாங்கியவர் அந்தக் கடனைச் செலுத்த வசதியுள்ளவரா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்லை. உடனடியாக் நீங்கள் அந்தக் கடனை Fannie Mae அல்லது Freddie Mac-இற்கு நல்ல லாபத்துடன் விற்றுவிடலாம். அந்நிறுவனங்கள் எந்தக் கேள்வியும் உங்களைக் கேட்காமல் அக்கடனை வாங்கிக் கொள்ளும். அதன் பின் வீட்டுக் கடனைக் கட்டுவதும், கட்டமலிருப்பதுவும் உங்கள் பிரச்சினையில்லை. அது சுப்பனுக்கும், Fannie Maeக்கும் உள்ளான பிரச்சினை. நீங்கள் அடுத்த இளிச்சவாயரைத் தேடிப் போகலாம். எப்படி ஏற்பாடு?

2001-ஆம் ஆண்டிற்கும் 2004-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இதுபோன்ற ஆபத்தான வீட்டுக் கடன்கள் $160 பில்லியனிலிருந்து $540 பில்லியனாக உயர்ந்தது. அமெரிக்காவெங்கும் இம்மாதிரியான கடன் வழங்கும் நிறுவனங்களின் விளம்பரப்பலகைகளும், தபால்களும் மூழ்கடித்தன. யாருக்கு வேண்டுமானாலும் கடனளிப்போம் என்ற உத்தரவாதத்துடன். இந்தக் கடன்களை வாங்கிக் கொள்ள Fannie இருக்க்வே இருக்கிறது. பிறகென்ன கவலை? இதற்கு முன்னர் வீட்டுக் கடனளிக்கத் தயங்கிய சிறு வங்கிகளும், முதலீட்டாளர்களும் Fannieயின் உத்தராவதத்தால் உற்சாகமடைந்து கடன்களை வாரி வழங்கினர் மிகக் குறுகிய காலத்தில் Fannie உலகின் மிக வலிமையான வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமாக உயர்ந்தது. கவலையடைந்த பொருளாதார நிபுணர்களும், போட்டியாளர்கள் Fannie-ஐக் கட்டுப்படுத்தும்படி அமெரிக்க காங்கிரசை வேண்டும் போதெல்லாம், செனட்டர்கள் கடிதங்களால் சூழப்பட்டார்கள். கோபமுற்ற தொகுதி மக்கள், செனட்டர்களுக்கு தொலைபேசி அழைப்புகளையும், வசைகளையும் அனுப்பி வைக்க, அமெரிக்க அரசாங்கம் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தயங்கியது.

இறுதியில் என்ன நடக்க வேண்டுமோ அதுவே நடந்தது. Fannie Mae மற்றும் Freddie Mac திவாலாகும் நிலைமை ஏற்பட்டது. அமெரிக்கப் பொருளாதாரச் சரிவின் முதல் அடி விழுந்தது.

அடுத்த காரணம், வங்கிகளுக்கிடையேயான கண்மூடித்தனமான கிரடிட் ஸ்வாப் (Credit Swap) என்கிற சங்கதி. இதனை இப்படி விளக்கலாம். அமெரிக்காவைச் சேர்ந்த பாங்க் ஆ·ப் அமெரிக்கா, இந்தியாவிலும் தனது கால்களைப் பதிக்க நினைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனை இரண்டு வகையாகச் செயல்முறைப்படுத்தலாம். ஒன்று, பாங்க் ஆ·ப் அமெரிக்கா தனது கிளைகளை இந்தியாவில் திறப்பதின் மூலம். இரண்டு, ஏதாவது இந்திய வங்கியுடன் கூட்டுச் சேர்ந்து அதன் மூலமாக தனது வர்த்தகத்தை ஆரம்பித்தல். இவையிரண்டும் மிக நேரடியான செயல்முறைகள். அதிக ரிஸ்க் இல்லாத ஒன்று. இதுதவிர இன்னொரு ஆபத்தான குறுக்குவழியும் இருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட இந்திய வங்கியினால், இந்தியாவில் வழங்கப்படும் கடன்களுக்கான உத்தரவாதத்தை, ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலித்துக் கொண்டு வழங்குவது. ஏறக்குறைய இன்ஸ்யூரன்ஸ் போன்றதொரு ஏற்பாடு. இதனைத்தான் கிரடிட் ஸ்வாப் என்பார்கள்.

இதிலுள்ள ஆபத்து உங்களுக்குப் புரிந்திருக்கும். இந்திய வங்கியானது சரியான நபருக்கு, வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தும் வலிமையுள்ள ஒருவருக்கு அல்லது நிறுவனத்திற்கு வழங்கியிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒருவேளை அக் குறிப்பிட்ட நபர் கடனைத் திரும்பச் செலுத்தாவிட்டால் நஷ்டம் இந்திய வங்கிக்கல்ல. இதில் சம்பந்தமில்லாத அமெரிக்க வங்கிக்கு! 2001-இல் $1 டிரில்லியன் டாலர்கள் அளவிற்கு இருந்த இந்த ஏற்பாடு, 2007-ஆம் வருட மத்தியில் $45 டிரில்லியன் அளவிற்கு உயர்ந்தது. இன்றைக்குப் பெரும்பாலான அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் இந்தச் சுழலில் சிக்கி இருக்கின்றன. இதிலிருந்து மீண்டுவருவது பகீரதப்பிரயத்தனமாக இருக்கும்.

கிரடிட் ஸ்வாப்பின் கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. கடன் உத்திரவாதம் அளித்திருக்கும் அமெரிக்க வங்கியானது, மொத்த உத்திரவாதப் பணத்தின் மீதாக CDOs எனப்படும் Collateralized Debt Obligations-ஐ – ஏறக்குறைய பங்கு போன்றது – பங்குச் சந்தையில் விற்கும். சந்தையின் பெரு நிறுவனங்கள் அம்மாதிரியான பல CDOக்களை ஒன்று சேர்த்து CDO level II என விற்றார்கள். இன்னும் சில நிறுவனங்கள் ஒரு படி மேலே போய், CDO level IIIக்களை விற்றார்கள் (CDOs of CDOs). இத்தனைக்கும் அடிப்படை மிக ரிஸ்கியான, எங்கோ ஒரு ஆசிய நாட்டில் வாங்கப்பட்ட கடன்கள் என்பதினை பல நிறுவனங்கள் சட்டை செய்யவில்லை. பேராசையுடன் ஒன்றின் மேல் ஒன்றாக CDOக்களை அப்பாவிகள் தலையில் கட்டிக் கொண்டிருந்தார்கள். Citi Bank போன்ற மாபெரும் நிறுவனங்களின் சரிவும் இதன் பின்னனியிலேயே ஏற்பட்டது என்பதினை நினைவு கூறவேண்டும்.

அடுத்த பெரும் சரிவு Derivatives எனப்படும் பங்கு வர்த்தகத்தில் நிகழ்ந்தது. பங்குச் சந்தையிலிருந்து கடன் பெற நினக்கும் ஒரு நிறுவனம், தனக்குச் சொந்தமான கட்டிடங்கள், தன்னிடமுள்ள பங்குகள், அரசாங்க பாண்டுகள் இவற்றை ஈடாக வைத்துக் கடன் பெறும். ஏறக்குறைய அடகு போன்றதொரு ஏற்பாடு. உதாரணமாக, $1 பில்லியன் டாலர் கடனைப் பெற்ற நிறுவனமான A, சிறிது வட்டியுடன் அதே $1 பில்லியனை நிறுவனம் Bக்கும், B-யானது நிறுவனம் C மீண்டும் அதே $1 பில்லியனை வழங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். இம்மூன்று நிறுவனங்களும் அமெரிக்காவின் மிகப்பிரபலமான, பலமுள்ளதாக அறியப்பட்ட நிறுவனங்கள். மூன்று நிறுவங்களின் கடன்களும், அந்நிறுவனங்களின் Derevatives-களின் அடிப்படையிலேயே கொடுத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு நிறுவனமும் மற்றொன்றிற்குக் கடன் வழங்குவதற்கு முன், $1 பில்லியன் டாலருக்கு இன்ஷ்யூரன்ஸ் செய்து கொள்ளும். வலிமையான நிறுவனங்களாகையால் எந்த இன்ஷ்யூரன்ஸ் நிறுவனமும் பாலிசி வழங்கத் தயங்காது. நல்ல ப்ரீமியம் கிடைப்பதால் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் போட்டியிட்டுக் கொண்டு பாலிசிகளை வழங்கும். ஆக $1 பில்லியனானது, $3 பில்லியனுக்கு இன்ஷ்யூர் செய்யப்பட்டுள்ளது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நிறுவனம் C, Bக்கும், B, A-க்கும், A, பங்குச்சந்தைக்கும் கடனைத் திருப்பி அளித்துவிட்டால் எல்லம் சுபம். அவ்வாறு இல்லத பட்சத்தில் மேற்படி இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் அப்பணத்தைக் கட்ட வேண்டியிருக்கும். அமெரிக்காவின் மிகப்பெரும் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனமான AIGக்கு அதுதான் நிகழ்ந்தது. AIG, திவாலாகிப்போன Lehman Brothersக்குக் கொடுக்க வேண்டிய தொகை ஏறக்குறைய $400 பில்லியன் டாலர்கள்!

இதுபோல இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கல் அத்தனை ஆழமானது. விரிவானது. இது ஒரு சிறு அறிமுகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

**

அமெரிக்க பொருளாதாரச் சிக்கல் திடீரென்று ஏற்பட்ட ஒன்றல்ல. தேவையான கட்டுப்பாடுகளைக் கண்மூடித்தனமாக நீக்கியதால் வந்த வினையே இது. அது குறித்து சிறிது பார்க்கலாம்.

இதற்கு முன்னர் இரண்டாம் உலகப்போருக்கு முன் 1929-ஆம் வருடத்தில் நிகழ்ந்த Great Depression என்ற அமெரிக்காவின் மிக மோசமான பொருளாதாரச் சிக்கலிலிருந்து அமெரிக்கா வெற்றிகரமாக மீண்டிருக்கிறது. சரியான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் அது சாத்தியமாகி இருக்கிறது. அதன் பின்னர் 1973 முதல் 1982 வரையிலான கால கட்டத்திலும் அமெரிக்கப் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவினைச் சந்தித்திருக்கிறது. இப்போது நிகழ்ந்ததைப் போலவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்காவை விட்டுத் தப்பியோடினார்கள். ஜப்பானிய நிறுவனங்கள் தலையெடுத்து அமெரிக்காவின் தொழில்களுக்கும், தொழிற்சாலைகளுக்கு அச்சுறுத்தலை ஆரம்பித்தன. நிறுவனங்கள் மூடப்படுவதும், வேலை வாய்ப்பின்மையும் அமெரிக்காவில் தொடர்கதைகளாயின. எதிர்பாராத வகையில் OPEC எனப்படும் பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் கச்சா எண்ணெய் விலையை பத்து மடங்காக உயர்த்த, அமெரிக்கப் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிச் சரிய ஆரம்பித்தது. Aramco போன்ற பெரும் எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்கர்களின் கைகளை விட்டுப் சென்றதும் அப்போதுதான் நிகழ்ந்த ஒன்றே.

அமெரிக்கக் கல்லூரிகளில் பெரும் கலவரங்கள் நடக்க, நாடு முழுவதும் குற்றங்களின் எண்ணிக்கை பெருகியது. நியூயார்க் போன்ற பெருநகரங்கள் செலவிடப் பணமின்றி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. நிக்ஸன் அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். அவரின் உப-ஜனாதிபதி ஊழல் குற்றச் சாட்டின் பேரில் ராஜினாமா செய்ய நேர்ந்தது. வியட்நாமியப் போரின் தோல்விக்குப் பிறகு, சைகானின் அமெரிக்கத் தூதரகத்தின் கூரையிலிருந்து ஹெலிகாப்டகள் அமெரிக்கர்களை மீட்ப்பதை உலகம் காண நேர்ந்தது. ஆப்கானிஸ்தானுக்குள் அன்றைய சோவியத் யூனியனின் படைகள் நுழைய, அமெரிக்க ஆதரவு மன்னர் ஷா இரானை விட்டு விரட்டப்பட்டார். அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர் தனது பதவிக்காலத்தின் இறுதி மாதங்களில், இரானியர்களால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 52 அமெரிக்கர்களை விடுவிக்கப் பேரம் நடத்திக் கொண்டிருந்தார். சிதறிக் கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தைச் சரி செய்ய எந்த முயற்சியும் செய்யாமல் அல்லது செய்ய இயலாமல்.

1980-இல் அமெரிக்கத் தொழிற்சாலை உற்பத்தி ஏறக்குறைய நின்றே போனது. ரேடியோ, டெலிவிஷன் போன்ற எலக்ட்ரானிக் சாதன உற்பத்தியை ஜப்பானும், கனரக இயந்திரம் மற்றும் இயந்திர பாகங்களைத் தயாரிப்பதை ஜெர்மனியும் கைப்பற்றிக் கொண்டன. அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் இருந்த இரும்புச் சுரங்கங்களும், பிற ஆலைகளும், ஆடைகள் தயாரிக்கும் தயாரிக்கும் தொழிலும் மிக மோசமாக பாதிக்கப்பட, அசைக்க முடியாத நிறுவனம் என்று கருதப்பட்ட IBM கூட ஜப்பானின் Amdhal, Fujitsu போன்ற போட்டி நிறுவனங்களினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான காலகட்டமாக இருந்தது. மேலும், 1979-80-இல் பண வீக்கம் 14 சதவீதம் அதிகரித்துடன், பெட்ரோலின் விலையும் பல மடங்கு உயர, சாமானிய அமெரிக்கர்கள் திண்டாட்டத்திற்கு உள்ளாயினர். முடிவெடுக்கும் திறனற்றவராக இருந்த ஜிம்மி கார்ட்டர், பெட்ரோலின் உபயோகித்திற்கான கட்டுப்பாடுகளை விதித்ததுவும் விலையுயர்விற்கு அடிகோலியது (1981-இல் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரொனால்ட் ரேகன் செய்த முதல் காரியம் பெட்ரோலிய கட்டுப்பாடுகளை நீக்கியதுதான்). அமெரிக்க GDP (Gross Domestic Product) -1.9 சதவீதத்திற்கு வீழ்ந்தது (இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட மிகப் பெரிய வீழ்ச்சி அதுவே).

ஜனநாயக் கட்சியைச் சார்ந்த ஜிம்மி கார்ட்டருக்குப் பின், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரொனால்ட் ரேகன் பதவியேற்றார். திறந்த பொருளாதாரச் சந்தைப் பொருளாதாரம் (Free Market Economy) ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அவரது பதவிக் காலத்தில் ரேகன் எடுத்த பல நடவடிக்கைகளே இன்றுவரை அமெரிக்காவை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்றால் மிகையில்லை. ரேகனின் வரியைக் குறைப்பது, குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுடன் பங்குச் சந்தையை சுதந்திரமாக இயங்கவிடுவது (Lower Taxes, Free Markets and Minimal Regulations) போன்ற பாலிசிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிகப்பெரும் மாறுதல்களைக் கொணர, அமெரிக்கப் பொருளாதாராம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உச்சத்திற்குச் சென்றது. சோம்பிக் கிடந்த அமெரிக்க நிறுவனங்களிலிடையே போட்டி மனப்பான்மை பெருகி உற்பத்தியும் பெருக ஆரம்பிக்க, அதனடிப்படையில் அமெரிக்கப் பங்குச் சந்தையும் உயர ஆரம்பித்தது. எதிர்பாராத விதமாக 1987-ஆம் வருடம் பங்குச் சந்தை பெரும் சரிவுகளைக் கண்டாலும், அமெரிக்கா அதனை விரைவாகச் சரிசெய்து கொண்டது.

ரொனால்ட் ரேகனுக்குப் பின் வந்த ஜார்ஜ் புஷ் சீனியரின் பதவிக்காலத்தில் அமெரிக்கப் பொருளாதார முன்னேற்றம் மீண்டும் இறங்கு முகமானது. அவருக்குப் பின் வந்த பில் கிளிண்டன் காலத்தில் அதிர்ஷ்டவசமாக கணிணித்துறை முன்னேற்றமைடைய, டாட்.காம்களின் பெருக்கத்தால் அமெரிக்கப் பங்குச் சந்தை வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது என்பது வரலாறு. செலவினங்களில் கட்டுப்பாடுகளை விதித்துச் சீர்படுத்திய பில் கிளிண்டன் பதவி விலகுகையில் அமெரிக்கக் கடனில் பெரும்பகுதி அடைக்கப்பட்டு, ஏறக்குறைய $300 பில்லியன் டாலர்கள் உபரியாக வைத்துச் சென்றார். ஜார்ஜ் புஷ் ஜூனியரின் கட்டுப்பாடுகளற்ற செலவினங்களும், இராக்கிய யுத்தமும், இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்காவை கடனாளியாக்கியிருக்கிறது என்பது நாமனைவரும் அறிந்த ஒன்றே. அது ஒருபுறம் இருக்க, இன்றைய பங்குச் சந்தை சிக்கலானது குடியரசுக் கட்சியனிரின் அடிப்படைக் கொள்கையான கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்தின் அடைப்படையில் விளைந்தது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

1910-லிருந்து 1970 வரையிலான காலகட்டத்தில் உலகின் முதல் பத்து பெரும் தொழிற்சாலைகள் அமெரிக்காவிலேயே இருந்தன. பின் சிறிது சிறிதாக நிலமை மாறத் துவங்கியது. அமெரிக்கப் பங்குச் சந்தையின் உயர்வும், தாழ்வும் இது போன்ற நிறுவனங்களின் இலாப, நஷ்டங்களின் அடிப்படையிலேயே அமைந்தது. ஆனால் 1980-ற்குப் பிறகு அமெரிக்கப் பங்குச் சந்தையின் போக்கு கணிதவியல் வல்லுனர்களாலும், புதிதாக கல்லூரியிலிருந்து படித்து வெளிவந்த, நிஜ உலக அனுபவம் அதிகமில்லாத MBAக்களாலும் தீர்மானிக்கப்பட்டது. எளிதில் புரிந்து கொள்ளவியலாத கடினமான கணித ·பார்முலாக்களைக் கொண்டு தயாரான ம்யூச்சுவல் ·பண்டுகளும், டெரிவேட்டிவ்களும் (Derivatives) இன்ன பிற பங்குகளும் அமெரிக்கப் பங்குச் சந்தையில் பெருமளவில் உலா வர ஆரம்பித்தன. அவற்றில் முதலீடு செய்த பெரும் வங்கிகளும், முதலீட்டு நிறுவனங்களும் லாபங்களை அள்ளின. ஏறக்குறைய பண மழை கொட்டியது.

இங்கு ஒன்றை நாம் நினைவு கூற வேண்டும். பங்குச் சந்தை உணர்ச்சிகளின் அடிப்படையில் அமைந்தது. ஒருவிதமான ஆட்டுமந்தை மனோபாவத்துடனே உலகின் அனைத்து பங்குச் சந்தைகளும் இயங்குகின்றன. கணிப்பொறி இயந்திரங்களோ அல்லது கணித ·பார்முலாக்களோ அதன் சுழற்சியை இன்றுவரை கணிக்க இயன்றதில்லை. அனைத்தும் அறிந்தவர்களாக அறியப்படுபவர்களே அதிகபட்ச தவறுகளையும் செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள். Large-Term Capital Management (LTCM) என்ற நிறுவனம் அதற்கு ஒரு உதாரணம். LTCM நிறுவனத்தில் முக்கிய பங்களிப்பாற்றிய Myron Scholes மற்றும் Robert Merton என்ற இருவரும் பொருளாதார நிபுணர்கள் மட்டுமல்லாமல் பொருளாதாரத்திற்கான நோபெல் பரிசும் பெற்றவர்கள். இவ்விருவரும் சாலமன்-ஸ்மித்-பார்னி நிறுவனத்தைச் சேர்ந்த John Meriwether என்பவருடன் சேர்ந்து, அமெரிக்கப் பங்குச் சந்தையின் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பித்த நிறுவனமே LTCM என்பது. இதில் பணத்தைக் கொட்ட பெரும் வங்கிகளும், பங்குவர்த்தக நிறுவனங்களும், தனியார் முதலீட்டாளர்களும் வரிசையில் நின்றார்கள்.

LTCM-இன் முக்கிய நோக்கம், மொத்தமாக ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்கிவைத்து விற்காமல், தொடர்ச்சியான, நூற்றுக்கணக்கான சிறிய ட்ரோடிங்குகளைச் செய்வது. பெறுவது சிறிய லாபமாக இருந்தாலும், நூற்றுக் கணக்கில் ட்ரேடிங் செய்வதால் இறுதியில் அதிக லாபம் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு. சுருங்கச் சொன்னால், “கோழி போல இரையெடுத்து யானை போல மலம் கழிக்கும்” சமாச்சாரம். மேற்கண்ட நோபெல் பரிசு வல்லுனர்களின் மேற்பர்வையில் அதற்கான கணிப்பொறி புரோகிராம்கள் எழுதப்பட்டு, LTCM தன் பயணத்தை வெற்றிகரமாகத் துவங்கியது. குறைந்த காலத்தில் அசுர வளர்ச்சியடைந்த அந்நிறுவனத்தின் உச்ச நிலயில் மொத்த முதலீடு $100 பில்லியன் டாலர்களாக இருந்ந்து. எனினும் அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் வெறும் நான்கே ஆண்டுகளில் அதன் முதலீடு $2 பில்லியனாகச் சுருங்கிக் கடைசியில் திவாலானது LTCM. நோபெல் பரிசு பெற்ற அறிவும் கூட அதன் சரிவைத் தடுக்க இயலவில்லை. பங்குச் சந்தையின் போக்கு குறித்தான ஒரு உதாரணம் இது.

**

பல பத்தாண்டுகளாக உலகப் பொருளாதார இயந்திரம் அமெரிக்க நுகர்வாளர்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவது நாமனைவரும் அறிந்த ஒன்று. உலகின் உற்பத்திப் பொருள்களில் பெரும்பகுதி அமெரிக்காவை நோக்கியே சென்று கொண்டிருந்திருக்கிறன. அது சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளாக இருந்தாலும் சரி, சவூதி அரேபியா, வெனிசுவேலா, இரான் போன்ற எண்ணை வள நாடுகளாக இருந்தாலும் சரி அல்லது வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் தயாரிக்கைப்பட்ட பொருள்களாகவும் சரி. அமெரிக்கா உலக வர்த்தகத்தின் மையப்புள்ளியாகவே இன்றுவரை இருந்திருக்கிறது. அதேசமயம், இனி வரும் காலங்களின் அமெரிக்காவின் செல்வாக்கு தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு அனைத்தையும் புரட்டிப் போட்டிருக்கின்றது.

உள்நாட்டில் உற்பத்திச் செலவு பலமடங்கு அதிகரித்த காரணத்தால், அமெரிக்கா தனது தொழிற்சாலைகளில் பலவற்றையும் வளரும் நாடுகளுக்கு நகர்த்த வேண்டியிருந்தது. இன்றைக்கு சாதாரண ப்ளாஸ்டிக் பொம்கைகளிலிருந்து விலையுயர்ந்த கார்கள் வரை அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படுவதைப் பார்க்கின்றோம். இனி அதுபோல நடப்பதற்கான சாத்தியங்கள் குறையலாம்.

தற்போதைய பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீண்டுவர அமெரிக்காவிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாகவும் ஆகலாம். இதிலிருந்து அமெரிக்கா மீண்டெழும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதற்கான தொழில் நுட்ப அறிவும், இயற்கை வளங்களும், சிறப்பான உள்நாட்டுக் கட்டுமானமும், மனித வளமும் அமெரிக்காவிடம் இருக்கின்றது. தங்கள் நாடு குறித்த பெருமித உணர்வுடன், உழைக்கத் தயங்காத அமெரிக்கர்களும் அதனைச் செய்து முடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


நன்றி : “வார்த்தை” மாத இதழ், ஜானுவரி 2009

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்