நினைவுகளின் தடத்தில் (22)

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

வெங்கட் சாமிநாதன்



இதற்கு அடுத்து என் நினைவிலிருப்பது, நிலக்கோட்டையில் அப்போது புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டில் மாமாவுடன் என் பெட்டி படுக்கைகளுடன் கொடைரோட் போகும் பஸ்ஸ¤க்காகக் காத்திருக்கும் காட்சி தான். மதுரையில் படிப்பு முடிந்து விட்டது. அங்கு இருந்தது பரிட்சை முடியும் வரைதான். பின்னர் நிலக்கோட்டை வந்தாயிற்று. இனி படிப்பைத் தொடர்வதற்கு ஒன்று வத்தலக்குண்டு போக வேண்டும். ஆனால் அதைப் பற்றியே யாரும் சிந்திக்காததற்குக் காரணம், அப்பாவிடமிருந்து மாமாவுக்குக் கடிதம் வந்திருக்க வேண்டும். நான் உடையாளூருக்குப் போய் அப்பா அம்மாவுடன் இருந்து கொண்டு கும்பகோணம் போய் படிப்பைத் தொடர்வதென்று தீர்மானித்திருக்க வேண்டும். என் அடுத்த தம்பி, கிருஷ்ணன், எனக்கு நான்கு வயது இளையவன், அப்போது உடையாளுரில் படிக்கக் கிடைத்த ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தான். அவன் இங்கு நிலக்கோட்டையில் என் இடத்தை எடுத்துக் கொள்வான் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது என்பது பின்னர் உடையாளூர் சென்ற பிறகு தான் தெரிந்தது.

இன்னும் விடியவில்லை. அதற்கு வெகு நேரம் இருந்தது. இன்னும் இருட்டாகத் தான் இருந்தது. ஐந்து மணி ஆகவில்லை. பஸ்ஸ¤க்காகக் காத்திருக்கும் போது பாட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டு பாட்டி இருட்டில் தனியாக நடக்கக் கூடிய தூரம் இல்லை. இரண்டு பர்லாங்கு தூரம் இருக்கும். பாட்டி வீட்டைப் பூட்டிக்கொண்டு இருட்டில் எதற்காக இவ்வளவு தூரம் நடந்து வருகிறாள் என்பது திகைப்பாக இருந்தது. ஓடிப் போய் பாட்டியிடம் சென்று, “நீ என்னத்துக்கும்மா இருட்டில் இங்கே வந்தே?” என்று நான் கோபமாகக் கேட்டுக் கொண்டிருந்த போதே, பாட்டி ” இந்தா இதை நீ மறந்து வச்சிட்டு வந்துட்டயே.. அப்பறம் இதில்லாம திண்டாடுவியேன்னு எடுத்துண்டு வந்தேன்,” என்று கையை நீட்டினாள். அவள் கையிலிருந்தது ஒரு சீப்பு. தலைவாரும் சீப்பு. காலணா பொறாத சமாச்சாரம் என்று சொல்வது வழக்கம். உண்மையிலேயே அது காலணா கூடப் பெறாத பொருள் தான். “அங்கே வாங்கிக்கமாட்டேனாம்மா” என்று பெரிய மனுஷத்தனமாகச் சொன்னாலும், உடையாளூரில் ஒரு சீப்பு விற்கும் கடை கிடையாது தான் அந்நாட்களில். அரிசி, புளி விற்கும் கடை உண்டு. கண்டியன் கடை என்பார்கள். அது கடைக்காரனின் பெயர் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மை என்னவென்று தெரியாது. கேட்கவில்லை. சந்தேகத்துக்குக் காரணம் உடையாளூரில் கண்டியன் வாய்க்கால் என்று ஒரு வாய்க்காலைச் சொல்வார்கள். இந்த சந்தேகங்கள் எல்லாம் இப்போது தான் இதை எழுதும்போது தான் தோன்றுகின்றன. அந்த கணியான் கடையில் தாம்புக் கயிறு கிடைக்கும். தகர வாளி கிடைக்கும். ஆனால் சீப்பு, கண்ணாடி, வகையறாவுக்கு கும்பகோணம் தான் போகவேண்டும் அதை நினைத்துத் தான் பாட்டி ஒரு சீப்பை எடுத்துக்கொண்டு, வீட்டைப் பூட்டி, இருட்டில் பஸ் ஸ்டாண்டுக்கு அவ்வளவு தூரம் நடந்து வந்தாள் என்று சொல்ல முடியாது. உடையாளூரை பாட்டி அறிவாளே தவிர, உடையாளூரில், அல்லது வேறு எங்கும் பாட்டி வீட்டை விட்டு எங்கும் சென்று அறியாதவள். கோவில் குளம் என்று கூடப் போகாதவள். அந்நாளைய பிராம்மண விதவை. ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்தவள். என்னை குழந்தையாக, இரண்டு வயதிலிருந்து வளர்த்தவள். என்றும் பிரிந்தவள் இல்லை. இப்போது மேலே கும்பகோணத்தில் படிக்கப் போகிறான். எவ்வளவு நாளைக்குத் தான் அவனை அம்மா அப்பாவிடமிருந்து பிரித்து வைத்துக் கொள்ள முடியும். இனி அவன் பிரிந்து போகவேண்டியவன் தான். நிரந்தரமாக. இனி அவன் தன்னோடு இருக்கப் போவதில்லை என்றெல்லாம் அவள் மனம் தவித்திருக்கும். ஒரு சீப்பு அவனோடது, மறந்து விட்டான். எப்படியாவது அவனிடம் சேர்த்து விடவேண்டும். இருட்டாக இருந்தால் என்ன? கொஞச தூரம் தானே. போய்க்கொடுத்து விடவேண்டும் என்று இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள். ஆனால் மாமாவும் நானும் அவளைக் கோவித்துக் கொண்டோம். பாசம் எப்படியெல்லாம் அசட்டுத் தனமாகக் கூட வெளிப்படுகிறது! அசட்டுத் தனமாக இருந்தாலும் பாசம் பாசம் தான். அது களங்கப்படாது. குறைபடாது ஆனால் இப்போதும் அது பற்றியெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மனம் மிகவும் நெகிழ்ந்து போகிறது.

பிரிந்த பின்பும் இன்னும் நான் பின் வருடங்களில் விடுமுறையில் நிலக்கோட்டைக்கு வந்த போதும், பாட்டியின் பாசம் சில சமயங்களில் வெளிப்பட்டது திகைப்பூட்டும். ‘இப்படியுமா?” என்று இன்னமும் எனக்கு திகைப்பாகத் தான் இருக்கிறது. அவையெல்லாம் பின்னால் அவற்றின் சந்தர்ப்பத்தில். தான் பெறுவதற்கு ஒன்றும் இல்லை என வாழ்க்கையின் மிஞ்சிய நாட்களை கழித்துக் கொண்டிருப்பவர்கள் தான் அன்பு கொண்டவர்களின் வாழ்க்கையில் கொள்ளும் அக்கறை மிகவும் புனிதமானது தான். அரை நூற்றாண்டுக்கும் மேல காலம் கழிந்துவிட்டது. இருப்பினும், மற்றது எது நினைவிருக்கிறதோ இல்லையோ, பாட்டியுடனான நினைவுகள் அழிவதே இல்லை.

அப்பா, மாமா சகிதம் கும்பகோணம் டபீர் தெருவில் ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அந்த வீட்டுக்காரருக்கு பாணாதுரை ஹைஸ்கூல் ஹெட் மாஸ்டரைத் தெரியும் போலிருக்கிறது. அவா தான் எங்களை ஹெட்மாஸ்டரிடம் அழைத்துச் சென்றார். எனக்கு பள்ளியில் இடம் கிடைத்து விட்டது. அன்று மாலை ஏழு எட்டு மணிக்கு உடையாளூர் வீட்டுத் தாழ்வாரத்தை ஒட்டிய கூடத்தில் ஹரிகேன் விளக்கைச் சுற்றி மாமா, அம்மா, அப்பா எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். என் தம்பி அப்போது உடையாளூரில் படிக்கக் கிடைக்கும் ஐந்தாவது வகுப்பு படித்து முடித்திருந்தான். அதற்கு மேல் படிக்க அவனும் கும்பகோணம் தான் என்னுடன் போகவேண்டும். “ரொம்ப சின்னவன். அவனால் தினம் அவ்வளவு தூரம் நடக்க முடியாது. என்னோடு அவனை அழைத்துப் போகிறேன். என்னோட ஸ்கூல்லேயே படிக்கட்டும்” என்று மாமா சொன்னார். ஆக நிலக்கோட்டையில், மாமாவின் சம்ரக்ஷணையில் என்னிடத்தை அவன் எடுத்துக் கொண்டான். அவன் படிப்பு அங்கு முடிந்ததும், அவன் இடத்தை இன்னொரு தம்பி நிரப்பினான் என்பது எனக்கு பல வருஷங்கள் பின்பு தான் தெரியவந்தது. ஆக, நாங்கள் அண்ணன் தம்பிகள் அனைவரும் படிக்க மாமாவே தான் காரணமாக இருந்திருக்கிறார். மாமா என் தம்பி கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு நிலக்கோட்டைக்கு கிளம்பினார்.

கும்பகோணம் பாணாதுரை ஹை ஸ்கூலில் ஒரு கூரை வேய்ந்த கூடம் ஒன்றில் 40-50 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பறையில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து ஒரு நோட்டில் எழுதிக்கொண்டிருந்த காட்சிதான் பாணாதுரைப் பள்ளி நாட்களின் ஆரம்ப மாக என் நினைவுக்கு வருகிறது. வகுப்பில் ஆங்கிலப் பாடம் நடந்து கொண்டிருந்தது. எல்லோரையும் ஓவ்வொருவராக ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்க, மாணவர்கள் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள், ஆங்கிலத்தில். எனக்கு ஒன்றும் புரிவதாக இல்லை. ஆங்கிலத்தில் தான் பாடங்கள் நடக்குமோ, என்ன செய்வது? பயமாக இருந்தது. இருந்தாலும் வந்தாயிற்று. சமாளித்துத் தான் ஆகவேண்டும். கேள்விகளையும் அதற்கு சரியான தப்பில்லாத பதில் என்று ஆசிரியர் எதைச் சொல்கிறாரோ அந்த பதிலையும் நான் என் நோட் புத்தகத்தில் எழுதிக் கொண்டு வந்தேன். வீட்டில் போய் மனப்பாடம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில். வகுப்பில் என்னைத் தவிர வேறு யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் ஒருத்தன் தான் அவற்றை நல்ல பிள்ளையாக எழுதிக் கொள்பவனாக இருந்தேன். அதற்காகவெல்லாம் வெட்கப்பட்டுப் பிரயோஜனம் இல்லை. இங்கே இத்தனை புத்திசாலிகளிடையே கடைத்தேறவேண்டுமே. கொஞ்ச நேரத்தில் ஆசிரியர் வகுப்பிலேயே கர்ம சிரத்தையாக எல்லாவற்றையும் எழுதிக்கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, “க்ளாஸிலே இவ்வளவு பேர் இருக்கீங்களே, யாருக்காவது இதை எழுதிக் கொள்ளவேண்டும் என்று தோன்றியதா, அதோ கோடி பெஞ்சிலே இருக்கிற பையனைத் தவிர” என்று என்னை நோக்கி கரத்தை நீட்டிக் கொண்டே சொன்னார். எல்லோர் பார்வையும் என் மேல் பதிந்தது. உடனே எல்லோரும் அவசர அவசரமாக நோட் புக்கை எடுத்து டெஸ்க் மேல் வைத்துக் கொண்டனர். “நீ என்ன புதுசா வந்திருக்கியா? எங்கேயிருந்து வரெ? என்று கேட்டார். “சேதுபதி ஹைஸ்கூல் மெஜுரா” என்று பதில் சொன்னேன். இப்படி பதில் அளித்ததில் ஆங்கிலத்தில் பேசிவிட்டதாக ஒரு நினைப்பு எனக்கு. “உட்கார்” என்று சொல்லிவிட்டு, “அந்தப் பையனுக்கு நானா சொன்னே?. உங்களுக்கே சிரத்தையும் அக்கறையும் இல்லையென்றால் வாத்தியார் என்ன செய்யமுடியும்?” என்றதும், எனக்கு ஏற்பட்ட சந்தோஷம் பிடிபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். என் குறையை நிவர்த்திக்கொள்ளச் செய்த காரியமே எனக்குப் பெருமை சேர்த்த காரியமாகி விட்டது. அன்று அந்த வகுப்பிலேயே நான் ஒரு ஹீரோ ஆகிவிட்டேன். இப்படியாகும் என்று யார் நினைத்துப் பார்த்திருக்க முடியும்? அன்றே நான் வகுப்பிலே எல்லோருக்கும் தெரிந்தவனாகி விட்டேன். இப்படி இன்னும் பல விஷயங்களில் நான் எதிர்பார்த்திராத வகையில் எனக்கு சாதகங்கள் நேர்ந்துள்ளன.

அன்று உடையாளூரிலிருந்து கும்பகோணத்துக்கு எப்படிப் போனோம் என்று ஞாபகம் இல்லை. மாமா, அப்பா, அப்புறம் நான், மூன்று பேர். சாதாரணமாக வலங்கிமான் வரை வண்டி வைத்துக்கொண்டு போய், வலங்கிமானிலிருந்து பஸ் ஏற வேண்டும், கும்பகோணம் போக. அது தான் நிறையப் பேர், பெண்டு குழந்தைகளுடன் போவதென்றால் சாத்தியமான ஒரே வழி. சாதாரணமாக ஆண்கள் பெரியவர்களோ சிறியவர்களோ கும்பகோணத்துக்கு குறுக்கி வழியிலே வயல் வரப்புகளினூடே, மூன்று ஆறுகள் தாண்டி நடந்து போனால், ஐந்தரை மைல் தூரத்தில் கும்பகோணம் இருக்கிறது. அப்பா மாமாவை வயல் வழியாக நடத்தி அழைத்துச் சென்றிருக்க மாட்டார். ஆனால், பாணாதுரை ஹைஸ்கூலில் நான் சேர்க்கப்பட்ட பிறகு, வயல், வரப்புகள் வழியே தான் நடந்து தான் பள்ளிக்கூடம் போய்வந்தேன். காலையில் ஏழரை மணிக்குள் கிளம்பினால் பள்ளிக்கூடத்திற்கு 9.00 அல்லது 9.15க்குள் போய்ச் சேர்ந்து விடலாம். பின் சாயந்திரம் பள்ளி விட்டு உடையாளூர் வந்து சேர்வதற்கு மணி ஏழு ஆகிவிடும். அப்பா முதல் நாள் உடையாளுருக்கு அருகில் அரை மைல் தூரத்தில் ஓடும் ஆற்றின் கரை வரை வருவார். என்னைப் போல் இன்னும் நாலைந்து பையன்கள் கும்பகோணம் போய் படித்து வந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து போவது வழக்கமாயிற்று. அவர்கள் வேறு பள்ளிகளில் படித்ததால், மாலை திரும்பும் போது நான் தனியாகத் தான் வருவேன். வழி தெரிகிறதோ, ஆற்றைத் தாண்டி வரணுமே, பத்திரமா திரும்பி வரணுமே என்ற கவலைகள் அம்மாவுக்கு கொஞ்ச நாள் இருந்தது. சிறு வயதில் இவ்வளவு தூரம் பள்ளிக்கூடம் போவதற்கு நடப்பது என்பது எனக்கு அப்படி ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. அதுவும் ஒரு விளையாட்டைப் போல மனம் எடுத்துக்கொண்டு விட்டது. ஆற்றில் தண்ணீர் இடுப்புக்கு மேல் போய்விட்டால் தான் கஷ்டம். புத்தகஙளும் டி·ப்ன் பாக்ஸ¤ம் வைத்துக் கொள்ள ஒரு கான்வாஸ் பை வைத்திருப்போம். அதில் தண்ணீர் புகாது. அதிலேயே சட்டை, வேஷ்டி எல்லாம் சுருட்டித் திணித்து பையைத் தலையில் வைத்துக்கொண்டு வெற்றுக் கோவண தாரியாக ஓடும் ஆற்றில் இறங்கிக் கடப்போம். அக்கரைக்குப் போனதும் வேஷ்டியைக் கட்டிக்கொண்டு சட்டையைப் போட்டுக் கொள்வோம். இப்படி குடமுருட்டி, முடிகொண்டான் என்று இரண்டு ஆறுகளைக் கடக்கவேண்டும் தினம் போகும்போதும் வரும்போதும். கடைசியில் கும்பகோணத்தின் தெற்கு எல்லையில் ஓடும் அரசலாறு எங்கள் வழியில் குறுக்கிடும் மூன்றாவது ஆறு. அதன் கரையில் தோணி கிடைக்கும்.

அதிலும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். நாங்கள் ஆற்றின் கரையை அடையும் போது தோணி கரையில் இருக்கவேண்டும். தோணி கிளம்பும் சமயத்தில் கையை ஆட்டி நிற்கச் சொல்லி ஓடி வருபவர்களும் உண்டு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தோணி கிளம்பிவிட்டால் போச்சு. தோணி எதிர்க்கரையை அடைந்து, கும்பகோணம் போகிறவர்கள் இறங்கி பின்னால் இக்கரைக்கு வருபவர்களுக்காக தோணி காத்திருக்கும். தோணியில் ஆட்கள் நிறைந்த பிறகு தான் தோணி இக்கரைக்கு வரும். இங்கு வந்த பிறகு, மறுபடியும் கும்பகோணம் போகிறவர்கள் வந்து தோணி நிறைய காத்திருப்பான். அதற்கும் காத்திருக்கவேண்டும். ஆக, தோணியைத் தவறவிட்டால், அரை மணி, முக்கால் மணி தாமதமாவது சகஜம். இப்படி ஆரம்பத்தில் ஒரு நாள் நான் மிகவும் தாமதமாக ஸ்கூலுக்குப் போனபோது சீனிவாச ஐயங்கார் ஹெட்மாஸ்டர் தான் வகுப்பில் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் எங்களுக்கு ஆங்கிலப் பாடம் எடுப்பவர். என்னைப் பார்த்ததும் வகுப்பிற்குள் அனுமதிக்கவில்லை. நான் வெளியே நின்றுகொண்டே பாடத்தைக் கவனித்துக்கொண்டிருந்தேன். ஆங்கிலமாயிற்றே. ஐந்தாறு நிமிடம் போலக் கழிந்திருக்கும். அவர் என்னைப் பார்த்து “ஏன் லேட்டா வரே?” என்று கேட்டார். “சார், தோணிக்காகக் காத்திருந்து லேட்டாயிடுத்து சார்”. “தோணியா, எங்கேயிருந்து வரே நீ? என்று கேட்டார். “உடையாளூர் சார்.” “உடையாளூரா? ரொம்ப தூரமாச்சே. அஞ்சு மைலுக்கு மேலே இருக்குமே?” “ஆமாம் சார். நான் வர்ர போது தோணி கிடைக்கலேன்னா லேட்டாயிடும் சார்.” என்றேன். “சரி வா உன் இடத்திலே போய் உட்கார்.” என்றார். அவருக்கே இந்தப் பையனை க்ளாசுக்கு வெளியே நிக்க வச்சுட்டோமே என்று வருத்தமாக இருந்தது போலத் தோணிற்று. நான் உட்கார்ந்ததும், அவரே க்ளாசிலிருக்கும் மற்ற பையன்களுக்கு சொல்ல ஆரம்பித்தார். தோணி கிடைக்காவிட்டால், நம் அவஸ்தையைப் பற்றிக் கவலையே இல்லாது, அவன் தோணி ஓட்டும் நிதானம், இரண்டு கரைகளிலும் அவன் தோணி நிரம்ப ஆட்களுக்காகக் காத்திருக்கும் நிதானம், நம் எரிச்சல் எல்லாம், ‘இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஒடோடி க்ளாசுக்கு வந்தால் இங்கே வாத்தியார், ‘வெளியே நில்’லுன்னு அதட்றாரே!,’ ன்னு வேடிக்கையாக அவரே வகுப்பில் எல்லா மாணவர்களும் சிரிக்கச் சிரிக்கக் கதை நடத்திப் பின் தான் ஆங்கிலப் பாடத்திற்குத் திரும்பினார். இந்தக் கதை பரவி மற்ற வாத்தியார்களிடமும் எனக்கு இந்தத் தோணி சலுகை கிடைத்தது.

நான் படிப்பில் அப்படியொன்றும் கெட்டிக்காரனில்லை. பாடப் புத்தகங்களோ, வகுப்பு பாடங்களோ என்னைக் கவர்ந்ததில்லை. நான் ஆவலுடன் மிகுந்த சுவாரஸ்யத்துடன் வகுப்பில் கேட்டது சரித்திர பாடம் ஒன்று தான். சுந்தரம் பிள்ளை என்னும் ஆசிரியர்தான் எங்களுக்கு சரித்திர வகுப்பு எடுத்தவர். கலைந்த பாதி நரைத்த சிகை, கோரைப் புற்களென அவர் தலையில் வாரலுக்கு அடங்காது நிமிர்ந்து பரட்டையாக நிற்கும். அவரும் நல்ல உயரமான ஆகிருதி. தூய வெள்ளைக் கதராடை தான் அணிந்திருப்பார். முன் வரிசைப் பற்கள் சற்று நீண்டு வெளியே துருத்தி நிற்கும். ஆனால் பார்க்க அப்படி ஒன்றும் கோரமாக இராதுதான். இருப்பினும் அவர்தான் எங்கள் மரியாதையைப் பெற்றவர். பாடம் நடத்தும்போது மிகுந்த லயிப்போடும் உணர்ச்சிப் பெருக்கோடும் நடத்துவார். அவர் வகுப்புகளைத் தவிர வேறு யாருடைய வகுப்பிலும் எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை.

வெங்கட் சாமிநாதன்/14.6.08


Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்