மலேசியாவில் கலாச்சார வரவும் செலவும்

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

ரெ.கார்த்திகேசு


()

மலேசியா என்னும் என் தாய்நாடு ஒரு பல்லின நாடு என்பதை உலகம் அறிந்துள்ளது. ஆனால் இது மலேசியாவுக்கு மட்டுமே ஆன ஒரு தனிப் பண்பல்ல. உலகின் பல நாடுகள் இப்போது பல்லினங்களைக் கொண்ட நாடுகளாக இருக்கின்றன என்பது நாடுகள் உலகமயமாகி வரும் இவ்வேளையில் தெளிவாகிக் கொண்டே வருகிறது.

இதன் தலையாய எடுத்துக்காட்டு அமெரிக்கா. பெரிதும் வட ஐரோப்பாவிலிருந்து குடிபெயர்ந்த வெள்ளை மக்களைக் கொண்டு உருவானது அந்த நாடு. பின்னர் தென் ஐரோப்பிய மக்கள் அங்கு சென்றார்கள். பிற்காலத்தில் தென்னமரிக்க மக்கள் அங்கு சென்று சேர்ந்தனர். நவீன காலத்தில் ஆசியர்களின் பிரவேசம் நாம் அறிந்ததே. வியட்நாம் போரில் அமெரிக்கர்களுக்கு ஒத்துழைத்த வியட்நாமியர்கள் அங்கு அடைக்கலம் தேடிப் புகுந்தார்கள். தொழில் முன்னேற்றம் தேடி அங்கு போன இந்தியர்கள் தொகை அதிகம். புதிது புதிதாக வேற்று மொழி, வேற்று கலாச்சார மக்கள் இன்றும் அமெரிக்காவுக்குப் படையெடுக்கிறார்கள்.

கொஞ்ச காலம் அமெரிக்கா தன்னை உருக்கும் கலம் என்றுச் சொல்லிக் கொண்டது. ஆனால் ஒரே கலத்தில் கிடந்தாலும் தனித்தனி உருண்டைகளாகவே சமுகங்கள் இருக்கின்றன என்பதுதான் இப்போதைய நிலை.

இங்கிலாந்தும் இவ்வாறே தான் ஆண்ட நாடுகளின் மக்களுக்கு இடம் தந்திருக்கிறது. லண்டனின் தெருக்களில் நடந்தால் வெள்ளை முகங்கள் இடையிடையே காணலாம். ஆங்கில மொழி அவ்வப்போது காதில் கேட்கும்.

ரஷ்ய ஐக்கிய நாடு உடைந்து சிதறியபோது அங்கும் பல்லின மக்கள் இருக்கிறார்கள் என்பதும் அவர்கள் அடக்கி வைக்கப்பட்ட தங்கள் மொழிக்கும் இனத்துக்கும் இடம் கேட்கிறார்கள் என்பதும் வெளியாயிற்று. மார்ஷல் டிட்டோவால் அடக்கியாளப்பட்ட செக்கோஸ்லாவியா உடைந்த போது செக்கும் ஸ்லாவாக்கும் வெவ்வேறு இனங்கள் என்பதை அறிந்து கொண்டோம். தெற்கு/கிழக்கு ஐரோப்பா உடைந்தபோது அவர்களின் இன, கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை வெளிப்பட்டது.

இனி உலகில் எந்த நாட்டை ஒரே இன நாடு என்று கூற முடியும்? மிகவும் மூடப்பட்ட சமூகமான அரபுச் சமூகமும் தங்கள் ஆசியத் தொழிலாளர்களிடையே சிறுபான்மைச் சமூகமாகத்தான் வாழ வேண்டியுள்ளது. அண்மையில் கம்போடியா சென்றிருந்த போது அவர்கள் நாட்டில் ஏராளமான வியட்நாமியர்கள் குடிபுகுந்திருப்பதைக் குறையாகச் சொன்னார்கள். டோன்லே சாப் ஏரியில் வாழ்ந்து வியாபாரம் செய்யும் இந்த வியட்நாமியர்கள் கிராமம் கிராமமாக மிதந்து கொண்டே வாழ்கிறார்கள்.

ஜப்பானைக் கூறலாமா? கூறக் கூடும். ஆனால் அதுவும் நீண்ட நாட்கள் நிலைக்கப்போவதில்லை.

இந்தியாவில் டெல்லிக்குப் போனால் தென்னிந்தியர்களின் பெருக்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். பம்பாய்க்குப் போனால் பிற மாநிலத்தவர்கள் தங்களைச் சிறுபான்மை ஆக்குவதாகக் கூறுகிறார்கள். சென்னையில் தமிழை விட தெலுங்கே அதிகம் வியாபார உலகில் புழங்குகிறது.

தமிழர்கள் தாங்கள் குடியேறி வாழும் இடங்களில் எல்லாம் தங்கள் கலாச்சாரம் தொலைந்து போகாமல் இருக்க என்ன செய்யலாம் எனக் கவலைப் படுகிறார்கள். எங்கள் மலேசியாவிலும் அப்படித்தான்.

ஆனால் இப்படி இனங்கள் பக்கம் பக்கம் வாழும்போது இனக்கலப்பும் கலாச்சாரக் கலப்பும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியுமா? தவிர்க்க வேண்டுமா? தவிர்த்தல் கட்டாயமா? என்னும் பல கேள்விகளும் உடன் எழுகின்றன.

அந்நிய இனத்தவர் தமிழ்க் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டு தமிழராக வாழுவதை நாம் மிகவும் போற்றிப் பேசுகிறோம். ஆனால் தமிழர்கள் இப்படி அந்நியக் கலாச்சாரத்துக்குப் போவதை குறைத்தே பார்க்கிறோம்.

மதம் மாறுவதிலும் இப்படித்தான். ஏராளமான ஐரோப்பியர்கள் இப்போது இந்து மதத்தைத் தழுவியிருக்கிறார்கள். இந்து மதத்தைப் பரப்புகிறார்கள். ஹவாயியின் கவ்வைத் தீவில் இந்து ஆசிரமமும் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் நிறுவனரான சிவாய சுப்ரமண்ய சுவாமிகளும் இப்போதைய தலைவர் போதிநாத வெய்லன் சுவாமிகளும் வெள்ளைக்காரர்கள்.

இவற்றைப் பாராட்டும் நாம் இந்துக்கள் மதம் மாறினால், பிற மதங்களின் பிரச்சாரகர்களாக மாறினால் அவற்றைப் பற்றிப் பேசுவதில்லை. மலேசியாவில் கிறித்துவ பிஷப்புக்களாக பல தமிழர்கள் இருக்கிறார்கள். இஸ்லாமியப் பிரச்சாரகர்களாகவும் பலர் இருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் கண்டு, கலாச்சாரக் கலப்பு, பல்லினக் கலாச்சார வாழ்க்கை என்பதெல்லாம் இப்போது பார்த்து வியக்கக் கூடியவை அல்ல என்று அறிந்து கொண்டாலும், எங்கள் மலேசியாவில் நிகழும் கலாச்சாரக் கலப்புச் செய்திகள் என்னை சற்று நேரம் மெய்மறக்கச் செய்யாமல் இருப்பதில்லை. அண்மைய செய்திகள் சிலவற்றை உலகத் தமிழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம்.

ஜனவரியில் எங்கள் நாட்டில் தைப்பூசம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். முக்கிய முருகன் தலங்கள் உள்ள குவாலா லும்பூர், பினாங்கு, ஈப்போ ஆகிய ஊர்கள் இந்திய/இந்து மயமாகக் காட்சியளிக்கும். பினாங்குத் தண்ணீர்மலை ஆலயம் உள்ள பிரதேசம் ஒரு மத்திய வர்க்கத்தினர் குடியிருக்கும் பிரதேசமும் கூட. ஏராளமான சீனர்களும், மலாய்க்காரர்களும் இங்கு வாழுகிறார்கள். தைப்பூசத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் இங்கு எல்லாச் சாலைகளும் மூடப்படுமாதலால் இவர்கள் தங்கள் கார்களை வீட்டை விட்டு எடுக்க முடியாது. மூன்று நாள் உணவை முன்னரே தயார்படுத்தி வைத்துக் கொண்டு வீட்டோடு கிடந்து தைப்பூச வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். இன்று வரை இது பற்றி ஒருவரும் குறை சொன்னதில்லை. மலாய்க்காரர்கள் நம் கோயில்கள் பக்கம் அண்டுவதில்லை என்றாலும் ஏராளமான சீனர்கள் நேர்த்திக் கடன் செலுத்தவும் காவடி ஏந்தவும், தேங்காய் உடைக்கவும் கூடுகிறார்கள்.

ஆனால் இங்கு நான் சொல்ல வந்த செய்தி வேறு. இந்த முறை நடந்த தைப்பபூசத்தில் தேரில் வரும் முருகனைக் கொண்டாட வழக்கமான பஜனை கோஷ்டிகள், நாதஸ்வரம், தாரை, தப்பட்டை, மயிலாட்டம், கோலாட்டம் ஆகியவற்றோடு மலாய்க்காரர்களின் கொம்பாங் குழுவும், சீனர்களின் சிங்க நடனக் குழுவும், பஞ்சாபியர்களின் பங்கரா குழுவும் சேர்ந்து கொண்டன.

இன்னொன்றும் இங்கே சொல்ல வேண்டும். மலேசியாவில் முற்றிலும் தமிழர்களாலேயே நடத்தப்படும் சிங்க நடனக் குழு ஒன்றும் இருக்கிறது.

இதைச் சொன்ன மூச்சோடு ஜனவரி பற்றியும் சொல்லவேண்டும். ஜனவரி மாதம் பற்றியல்ல. ஜனவரி லோ என்னும் சீனப் பெண் பற்றி.

ஜனவரி லோவின் தந்தை சீனர். தாய் இந்தியக் கலப்பு உள்ளவர். ஆனால் ஜனவரி இந்திய நடனக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விடாப்பிடியாக அவரை அதில் செலுத்தியவர் தாயல்ல; அவருடைய சீனத் தந்தை. 2003இல் பரதநாட்டியம் கற்றுக் கொண்ட ஜனவரி அதன் பின் ஒடிசி கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

இவருடைய ஒடிசி குரு ராம்லி இப்ராஹிம் என்னும் மலாய்க்காரர். இவரைப் பற்றி இந்த வலைத்தளத்தில் காணலாம் http://narthaki.com/info/intervw/intrvw15.html. அடையார் லட்சுமணனிடம் பரதமும் பின்னர் குரு தேபா பிரசாத் தாசிடம் ஒடிசியும் கற்றவர். ராம்லி இப்ராஹிமின் முதல் பரதநாட்டிய சகா சந்திரபானு என்று பெயர் மாற்றி கொண்ட மலாய்க்காரர்தான். இவர்கள் இருவருமே பரதநாட்டிய/ஒடிசி உடையில் மேடையில் ஏறிவிட்டால் நடராஜர் திருமேனியை அஷ்டாங்கமாக விழுந்து வணங்குவார்கள். தங்கள் குருவின் கால் தொட்டும் வணங்குவார்கள். இவர்கள் வழியில் இப்போது மேவின் கூ என்னும் சீன இளைஞரும் இறங்கியிருக்கிறார். இவர்கள் மூவருமே தமிழ் நாட்டில் பரதநாட்டிய வட்டத்தில் மிகவும் அறிமுகமானவர்கள்.

மீண்டும் ஜனவரிக்கு வருவோம். இப்போது ராம்லி இப்ராஹிமிடம் ஒடிசி கற்றுக் கொண்ட ஜனவரி லோ விரைவில் ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார். “ஒரு சீனத் தந்தை தனது மகளை ஒரு மலாய்க்கார குருவிடம் இந்திய நடனம் கற்றுகொள்ள அனுப்புவது மலேசியாவில் மட்டுமே நடக்கும்” என்ற பெட்டிச் செய்தியுடன் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கலாச்சார எல்லைகளை உடைக்கும் இன்னொரு செய்தி:

லோ யொக் வா என்பவர் தையல் வேலை செய்து பிழைக்கும் சீன மாது. இவருடைய மகன் 19 வயது சான் (Chan) யூ செங். ஆனால் இவர் தத்தெடுத்த பிள்ளை. 1989இல் ஆறு பிள்ளைகளைப் பெற்ற ஏழைத் தமிழ்த் தாயான லெச்சுமி வறுமை காரணமாக தனது ஆறாவது பிள்ளையை இந்தச் சீனத் தம்பதியினரிடம் கொடுத்து விட்டுப் போய்விட்டார். போன பின் தொடர்பு முற்றும் அறுந்து போனது.

பிள்ளை சீனப் பெயருடன் செல்லமாக வளர்ந்தார். சீனம் பேசி, சீனம் படித்து, சீனக் கலாச்சாரத்தில் திளைத்து வளர்ந்தார். ஆனால் 12 வயதில் அடையாளக் கார்டு எடுக்கப் பதிவிலாகா போனபோது இந்தப் பையனை சான் யூ செங்கின் பிள்ளை என நம்ப பதிவிலாகா மறுத்துவிட்டது. மஞ்சள் நிறச் சீனத் தாய்க்கு இப்படி ஒரு கருப்புப் பிள்ளை இருப்பதை பதிவிலாகாவால் ஜீரணிக்க முடியவில்லை. தத்தெடுத்த பத்திரங்கள் இல்லாமல் போனதும் காரணமாக இருக்கலாம். வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாமல் பெற்ற சூட்டில் குழந்தையைக் கொடுத்து விட்டு ஓடும் தமிழ்த் தாயும், வறுமையில் இருந்தாலும் கருணையின் காரணமாக பிள்ளையை ஏற்றுக் கொண்ட சீனத் தாய்க்கும் அப்போது பிள்ளையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் எனத் தோன்றியிருக்குமே தவிர பத்திரங்களை எழுத வேண்டும் என்று கூடத் தோன்றியிருக்காது.

இறுதியில் பல இடங்களில் தேடி அவரின் இயற்கைத் தாயான லட்சுமியைக் கண்டுபிடித்தார்கள். சந்தித்தார்கள். ஆனால் பிள்ளைக்குத் தமிழ்ப் பேசத் தெரியாது. தாய்க்குச் சீனம் பேசத் தெரியாது. தன் இயற்கைத் தாயுடன் சான் யூ செங் மலேசியர்களுக்குப் பொது மொழியான பஹாசா மலேசியாவில் மட்டுமே பேச
முடிந்தது.

இப்படித் தனது பிறப்பின் மர்மத்தை இவர் அவிழ்த்துவிட்டாலும் இவருக்கு அடையாளக் கார்டு கிடைத்ததா என்பது பற்றியத் தகவல்கள் ஏதும் இன்னும் தெரியவில்லை.

எங்கள் நாட்டில் இந்திய முஸ்லிம்கள் அதிகம் இருக்கிறார்கள். முஸ்லிம் நாடான மலேசியாவின் மீது இவர்களுக்கு இயற்கையாகவே ஒரு பாசம் உண்டு. ஆனால் மலாய்க்காரர்களுக்கு அந்தப் பாசம் இருக்கிறதா என்று சொல்ல முடியாது. இவர்களை “மாமாக்” என்று அழைக்கிறார்கள். இந்திய முஸ்லிம்களுக்குத் தனியாக மசூதிகள் உண்டு. (ஆனால் எந்த முஸ்லிமும் எந்த மசூதியிலும் சென்று வழிபடத் தடையில்லை.)

இந்திய முஸ்லிம்களில் ஒரு சாரார் முன்னாட்களில் மலாய்ப் பெண்களை மணந்து மலாய் கலாச்சாரப்படி வாழ்ந்து தங்களை பூமிபுத்திரர்களாக மாற்றிக் கொண்டார்கள். தங்கள் தமிழ்த் தொடர்புகளை பெரும்பாலும் அறுத்துக் கொண்டார்கள்.

தொடர்ந்து இந்தியாவுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தமிழ்க் கலாச்சாரத்தில் வாழ்ந்து வரும் பலருக்கு இந்த பூமிபுத்திரர் தகுதி வழங்கப்படவில்லை. இப்போது இவர்கள் மலாய்ப் பெண்களை மணந்து மலாய் கலாச்சாரப் படி வாழ்ந்தாலும் கூட அந்தத் தகுதி கிடைப்பதில்லை. இந்தியர்கள் என்றே கருதப் படுகிறார்கள்.

பூமிபுத்திரர் தகுதி பெற்ற இந்திய முஸ்லிம்கள் மலாய்க்காரர்களுக்கான ஆளும் கட்சியான அம்னோ கட்சியில் (United Malays National Organisation) உறுப்பினராகச் சேர்ந்து கொள்ளலாம். இப்படிச் சேர்ந்து பெரும் பொறுப்புக்கள் வகித்தவர்கள் பலருண்டு. அரசாங்கத்தில் இன்றும் அமைச்சர்களாவும் அதிகாரிகளாகவும் இவர்கள் இருக்கிறார்கள். ஆகவே கலப்பு இவர்களுக்குச் சிறப்பையே கொண்டுவந்திருக்கிறது.

இப்படி பூமிபுத்திரர் தகுதி பெறாத முஸ்லிம்கள் தங்களுக்கெனெ பல சங்கங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று கெபிமா. அண்மையில் இந்த கெபிமாகாரர்கள் தாங்கள் இந்தியர்களாகக் கருதப்படக் கூடாதென்றும் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் பேசத் தெரியாதென்றும் குடும்ப மொழியும் கலாச்சாரமும் மலாயாக மாறி விட்டதால் தாங்கள் மலாய்க்காரர்கள் என்றே கருதப்பட வேண்டுமென்றும் அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதற்குத் தமிழ்ப் பற்றுள்ள இந்திய முஸ்லிம் சமுகத்தாரிடமிருந்து இவர்கள் மேல் கடும் கண்டனக் கணைகள் விடுக்கப் பட்டுள்ளன. ஆனாலும் கலாச்சார ரீதியாக இந்திய முஸ்லிம் சமுகம் மலாய்ச் சமுகமாக மாறும் வேகம் கூடித்தான் வருகிறது.

மலேசியாவில் தமிழ்/இந்திய கலாச்சார வரவு செலவுக் கணக்கு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் லாப நஷ்டம் என்று ஒன்றுமில்லை. சமூகம் தனக்கு வசதியானது/மேலானது என்று கருதும் திக்கில் செல்வதை யாரும் தடுத்துவிட முடியாது.

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும்போது இணையத்தில் பின் கண்ட துண்டுத் தகவலைப் பார்த்தேன். மூலம் எங்கிருக்கிறது என்று தெரியாவிட்டாலும் அது சொல்லும் விஷயம் சுவாரஸ்யமாக இருக்கிறது:

“…conflict is the primary engine of creativity and innovation. People
don’t learn by staring into a mirror; people learn by encountering
difference.”

— Ronald Heifetz

(“…முரண்பாடு என்பதுதான் கற்பனையையும் புதிய செயலாக்கங்களையும் உற்பத்தி செய்யும் இயந்திரம். ஒரு கண்ணாடியில் நம் முகத்தைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள ஒன்றும் இல்லை. வேறுபாடுகளைச் சந்திக்கும்போதுதான் மக்கள் கற்க ஆரம்பிக்கிறார்கள்.)

புலம் பெயர்தல் பற்றியும் அதனால் எற்படும் குழப்பங்கள் பற்றியும் விரிவாகப் பேசும் கவிதை ஒன்றினை கானடா நண்பர் புகாரி எழுதியிருக்கிறார்.

அங்குள்ள கலாச்சாரக் குழப்பங்களை இப்படிச் சொல்கிறார்:

“பிள்ளைகளை நம்
பண்பாட்டுக்குள்
கட்டிவைப்பதென்பது
நயாகராவை
முந்தானையில் ஏந்துவதைப்
போன்றதுதான்.

தமிழனின்
அடுத்த சந்ததியை
அழித்தெடுக்க
மிகுந்த கவர்ச்சிகாட்டி
நிற்கிறது
மேற்குலகக் கலாச்சாரம்”

தொடர்ந்து அவரது சமாதானம் இது:

தாய், மண், பண்பு என்ற
அடையாளங்களோடு
போகுமிடத்தில் கிளை
பரப்புவதும்
இலை விரிப்பதும்
கலாச்சாரக் கலப்பு
கொள்வதும்
சிறந்த பண்புகளை
ஏற்றுக்கொள்வதும்
இயல்பானது உயர்வானது.

ஏற்றுக் கொள்வது சிறந்த பண்புகள் மட்டுமே என புகாரி வரையறுத்தாலும் எந்தக் கலாச்சாரத்திலும் குறையுடைய பண்புகள் என்று ஏதும் இல்லை என்பதையும் உணர வேண்டும். எல்லாம் நமது பார்வையைப் பொறுத்ததுதான்.

கலப்பின் மேல் வெறுப்பில்லாமல் இருந்தால் போதும்.

—முடிவு—

பரத நாட்டியம் ஆடும் ராம்லி இப்ராஹிம்:
http://narthaki.com/info/intervw/intrvw15.html.

ஜனவரி லோவின் படம்:
http://www.nst.com.my/Current_News/NST/Sunday/National/20080210075701/Article

சீனப்பிள்ளையின் தமிழ்த் தாய்:
http://thestar.com.my/news/story.asp?file=/2008/1/23/nation/20089333&sec=nation

சிங்க நடனம்:
http://thestar.com.my/education/story.asp?file=/2008/2/24/education/20393742

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு