நிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்



7)இரண்டு தீர்ப்புகள் – ஒரு வழக்கு- ஒரு கேள்வி

எம்.எப்.ஹீசைன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டாக்டர் வேணுகோபாலை AIIMS இயக்குனர் பதவியிலிருந்து நீக்க வழி செய்த சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டும் வரவேற்கப்பட வேண்டியவை. முன்னது கருத்துரிமைக்கு ஆதரவானது. பின்னது அநீதி இழைக்கப்பட்ட வேணுகோபாலுக்கு ஆதரவானது. இது அரசின் அதிகாரம் வரம்பற்றது என்ற கருத்திற்கு எதிரானது. வேணுகோபாலை நீக்குவதற்கு வழி செய்த சட்டத்தினை இடதுசாரிக் கட்சிகளும் ஆதரித்தன. எது எப்படியோ இறுதியில் நீதி வென்றிருக்கிறது. ஹுசைனைப் பொருத்தவரை இந்த தீர்ப்பு முக்கியமானது, பல இடங்களில் வழக்குகளை தொடுத்து தொல்லைக் கொடுப்பதற்கு இது ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இத்தீர்ப்பின் மூலம் குறிப்பிட்ட சட்டப் பிரிவினை முறைகேடாக பயன்படுத்தப்படுவது குறைய வாய்ப்பிருக்கிறது. அவர் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன, குஷ்பு மீதான வழக்கில் இத்தீர்ப்பு குஷ்புவிற்கு உதவியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

ராமர் சேது வழக்கில் பராசரன், சி.எஸ்.வைத்தியனாதன்,சோலி சொராப்ஜி, சுப்ரமண்யன் சுவாமியின் வாதங்களை தி இந்து மூலம் அறிந்து கொண்டேன். மத நம்பிக்கை குறித்த, அரசியல் சட்டத்தின் 25வது விதியை அவர்கள் வாதிடுவது போல் இப்படி புரிந்து கொள்ள முடியுமா என்பதில் எனக்கு ஐயங்கள் உள்ளன. மத உரிமை, வழிபாட்டு உரிமை என்பவை முழு முற்றான, நிபந்தனைகளற்ற அடிப்படை உரிமைகளல்ல. நீதிமன்றம் அவற்றைக் கேள்விக்குட்படுத்தக் கூடாது என்பது வேறு, அவற்றை அப்படியே ஏற்று அதன் அடிப்படையில்தான் ஒரு பிரச்சினையை அணுக வேண்டும் என்பது வேறு. நர்மதை திட்டத்தில் பல வழிப்பாட்டுத் தலங்கள் மூழ்கின. இருப்பினும் அங்கு முக்கிய பிரச்சினையாக எழுந்தவை, பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வு, நட்ட ஈடு, நிலத்திற்கு பதிலாக நிலம், அவர்களின் வாழ்வுரிமை. இந்த ராமர் சேது வழக்கில் சுற்றுச்சூழல் தாக்கம், திட்டம் அதில் செலவளிக்கப்படும் தொகைக்கு தக்க பயனைத் தருமா என்பவை முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஆசி பெர்னாண்டஸ் சார்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு சுற்றுச்சூழல் பாதிப்பினை முதன்மையாக முன்வைத்து வாதிடுவார் என்று நினைக்கிறேன். இந்த வழக்கில் இந்துக்களின் நம்பிக்கைக்கு மதிப்புத் தர வேண்டும் என்பதே என் கருத்து. போலி மதச்சார்பின்மைவாதிகள் இத்திட்டத்தினை தீவிரமாக ஆதரிக்கக் காரணமே இது இந்துக்கள் நம்பிக்கையுடன் தொடர்புடையது என்பதுதான் என்று கருதுகிறேன். கம்யுனிஸ்ட் கட்சிகளைப் பொருத்தவரை இதை பாஜக, இந்த்துவ அமைப்புகள் ராமர் சேதுவிற்கு பாதிப்பில்லா வகையில் நிறைவேற்றக் கோருவதால், அவர்களுக்கு எதிரான நிலைப்பாடாக இதை தீவிரமாக ஆதரிப்பது, ராமர் சேது பாதிப்புற்றாலும் பரவாயில்லை என்று வாதிடுவது என்ற நிலைப்பாட்டினை எடுத்திருக்கிறார்கள். இதில் வெளிப்படுவது இந்து வெறுப்பே, அதை மூடிமறைக்க இந்த்துவ எதிர்ப்பு, மதசார்ப்பின்மை போன்ற காரணங்கள்.
இதில் நான் அவர்களை எதிர்க்கிறேன். சுப்பிரமண்யன் சுவாமி எடுக்கும் நிலைப்பாடுகள் அனைத்தையும் நான் ஆதரிக்கவில்லை. அவர் நர்மதை திட்டத்தினை தீவிரமாக ஆதரித்தவர். இந்த வழக்கினைப் பொருத்தவரை நான் அவரது முயற்சியைப் பாராட்டுகிறேன். போலி மதச்சார்ப்பின்மைவாதிகளும், இந்து-இந்திய விரோதிகளும் எப்படியாவது இந்த திட்டத்தினைக் கொண்டு ராமர் சேதுவின் ஒரு பகுதியையேனும் சிதைத்துவிட துடிக்கையில் அதைக் காக்கும் முயற்சிகளை எடுப்பவர்கள் மிக முக்கியமான பணியைச் செய்கிறார்கள். மத நம்பிக்கைகள் எப்படி
இருப்பினும், அது மனித முயற்சியால் உருவானதோ இல்லை இயற்கையாக அமைந்த ஒன்றோ – அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புராதன சின்னம். அதை அப்படி அறிவித்து பாதுகாக்க வேண்டும். இதற்கு உதவும் என்பதால் நான் அவர்களை, (அதாவது திட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோரை, ஆசி பெர்ண்டாசையும் சேர்த்தே இங்கு குறிப்பிடுகிறேன்) ஆதரிக்கிறேன். அதற்காக அவர்களின் அனைத்து நிலைப்பாடுகளையும் நான் ஏற்கிறேன் என்று அர்த்தமில்லை. அறிவு ஜீவிகள் என்று சொல்லப்படுபவர்கள் பலர் இந்தப் பிரச்சினையில் எடுத்த நிலைப்பாடுகளில் வெளிப்பட்டது அவர்களது இந்து எதிர்ப்பு மனோபாவமே. இதில் ரோமிலாத் தாப்பரின் கட்டுரையை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எனக்கு மிகுந்த எரிச்சலைத் தந்த கட்டுரை அது. மேற்கில் இருப்பது வரலாறு, கிழக்கில் இருப்பது புராணம் என்ற கண்ணோட்டத்தின் இன்னொரு வடிவம்தான் அதன் மையக்கருத்து. தமிழ்நாட்டில் கேட்கவே வேண்டாம். எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்றவர்களுக்கு தங்களது இந்து,பார்பன விரோதத்தினை வெளிக்காட்ட இது இன்னொரு வாய்ப்பாக அமைந்தது. இந்த திட்டத்தால் பாதிப்புறுவது இந்து அல்லாதோரின் வழிபாட்டிற்குரியதாக/மரியாதைக்குரியதாக இருந்திருந்தால் அவர்கள் கருத்து வேறுவிதமாக இருந்திருக்கும். அப்போது அதை சிதைப்பது மதச்சார்ப்பின்மைக்கு விரோதமான ஒன்றாக, சிறுபான்மையினர்க்கு எதிரான ஒன்றாக எதிர்க்கப்பட்டிருக்கும். நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் வாதங்களையும் கருத்தில் கொண்டு வேறொரு தருணத்தில் விரிவாக எழுதுவோம். திண்ணையில் அரசியல் சட்டமும், மத நம்பிக்கை/உரிமை குறித்து நான் எழுதியிருப்பவற்றை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

8) ”75 விழுக்காடு உள்ளூர் மக்களுக்கே!”

விடுதலையில் வெளியாகியுள்ள குறிப்பு இது: http://www.viduthalai.com/20080507/thalai.html
தமிழ்நாட்டில் தொடங்கப்படும் புதிய தொழிற்சாலைகளில் 75 விழுக்காடு உள்ளூர் – தமிழ்நாட்டு மக்களுக்கே தரவேண்டும் என்ற அரசின் நிபந்தனை தொழில் அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியமான ஒன்றாகும்! நமது இளைஞர்கள், இனி வேலை தேடி பல ஊர்களுக்கு அலைய வேண்டிய அவசியமின்றி, தமிழ்நாட்டுக் குள்ளேயே வேலை வாய்ப்பைப் பெற்று நிம்மதியான வாழ்வு வாழ வழிவகை செய்யும். இதுவும் மிகவும் பாராட்டத்தகுந்த ஒன்றாகும்.
வீட்டு மனைகள், புதிய கட்டடங்கள், கட்டுமானங்களில் இந்த 75 சதவீத விதி, தமிழ்நாட்டவர்தான் செய்யவேண்டும் என்றும் வற்புறுத் தினால், மற்றவர் தம் சுரண்டல் ஆதிக்கத்தினை தடுத்திட வாய்ப்பு ஏற்படுமே! “

தமிழக அரசு இப்படி 75% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறதா இல்லை இது பரிந்துரையா. நிபந்தனை என்றால் அது ஆணை வடிவில் விதிக்கப்பட்டிருக்கிறதா அல்லது அரசு உதவி/மான்யத்தினைப் பெற நிபந்தனையாக முன்வைக்கப்பட்டுள்ளதா. விபரம் தெரிந்தவர்கள் மேலதிக தகவல்கள் தரலாம். ”வீட்டு மனைகள், புதிய கட்டடங்கள், கட்டுமானங்களில் இந்த 75 சதவீத விதி, தமிழ்நாட்டவர்தான் செய்யவேண்டும்” என்பதை வீரமணி விரும்பினாலும் அரசு கட்டாயமாக்க முடியாது. அவ்வாறு கட்டாயமாக்குவது அரசியல் சட்டத்திற்கு முரணானது. இந்த 75% இட ஒதுக்கீட்டினைக்
கூட அரசு வேண்டுகோளாக வைக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வது அரசியல் சட்டம் தரும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இப்படி வேலைகள், வீட்டு மனைகள் போன்றவற்றில் இட ஒதுக்கீட்டினை கொண்டு வருவதை நான் ஆதரிக்கவில்லை என்பதை சொல்லவும் வேண்டுமா.

9) இயற்கை வேளாண்மை – நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்
இந்த மாத தீராநதியில் நம்மாழ்வாருடன் ஒரு விரிவான பேட்டி வெளியாகியிருக்கிறது. அதில் தரப்பட்டுள்ள இரண்டு தகவல்கள் சரியல்ல என்பது என் கருத்து. பேட்டி காண்பவர் எழுதியிருக்கிறார் “நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வென்று வந்தவர்.” . வேப்பிலை மீது யாரும் காப்புரிமை பெறவில்லை, பெறவும் முடியாது. இந்த காப்புரிமை குறித்த வழக்கு ஐரோப்பிய காப்புரிமை அமைப்பின் மேல்முறையீட்டு அமைப்பின்(Technical Board of Appeals of EPO) முன் நடந்த வழக்கு, அது சர்வதேச நீதிமன்றம் அல்ல.மேலும் அந்த வழக்கில் நம்மாழ்வார் என்ன வாதாடினார் என்று எனக்குத் தெரியாது. நானறிந்த வரையில் அதில் வாதிட்டவர்களில் முக்கியமானவர் பிரிட்ஸ் டோல்டர், ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர். இதில் நம்மாழ்வார் எந்த அடிப்படையில் வாதிட்டார் என்பதை நானறியேன். இந்தியாவிலிருந்து ஒரு விவசாயி இதில் பங்கேற்றார், தன் அனுபவத்தைச் கூறினார். வேம்பிலிருந்து பெறப்பட்டவற்றை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துவது குறித்த ஒரு கட்டுரை, ஆஸ்தேரலியாவிலிருந்து வெளியான ஒரு ஜர்னலில் வெளியானது சான்றாக காட்டப்பட்டது. இக்கட்டுரை முக்கியமான ஆதாரமாகக் கொள்ளப்பட்டு காப்புரிமை நிராகரிக்கப்பட்டது. (இது ஒரு சுருக்கமான விளக்கம், முழு விபரங்களை இங்கு தரவில்லை). IFOAM (International Federation of Organic Agricultural Movements) என்ற அமைப்பும் இந்த வழக்கில் ஒரு மனுதாரார்.அதன் சார்பில் அல்லது வந்தனா சிவாவுடன் சேர்ந்து நம்மாழ்வார் பங்கு பெற்றிருக்ககூடும். வேம்பு, மஞ்சள், காப்புரிமை குறித்த மிகவும் தவறான புரிதல் நிலவுகிறது. ஏதோ வேம்பு, மஞ்சள் ஆகியவை மீது காப்புரிமைகள் வழங்கப்பட்டுவிட்டன என்கிற ரீதியில் எழுதுகிறார்கள். உண்மை இதிலிருந்து வேறானது. புரிந்துக கொள்ளக் கடினமானது அல்ல. இருப்பினும் இந்த தவறான புரிதல் தொடர்கிறது. நம்மாழ்வாரின் கருத்துக்களை அறிந்தவர்களுக்கு பேட்டியில் புதிதாக ஒன்றுமில்லை. 1990களின் துவக்கத்தில் நம்மாழ்வாரின் நூல்களை வெளியிட்டு கோவை ஞானி அவர் கருத்துக்களை சிறு பத்திரிகை, இடதுசாரி வட்டாரங்களுக்கு அறிமுகம் செய்தார். இன்று நம்மாழ்வாரில் பெயர் விகடன், குமுதம் வாசகர்களுக்கு பரிச்சயமான ஒன்றுதான். அது போலவே இன்று இயற்கை சார் வேளாண்மை குறித்து ஒரு பரவலான விழிப்புணர்வும் இருக்கிறது. இவையெல்லாம் வரவேற்கத்தக்க மாற்றங்கள். இந்த வார தெகல்காவில் வந்துள்ள கட்டுரையையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

காலச்சுவட்டில் சங்கீத ஸ்ரீராம் ஒரு தொடர் கட்டுரை எழுதிவருகிறார். சுற்றுச்சூழல்- வேளாண்மை குறித்த தொடர் அது. தொடர் முடிந்த பின் அதைப் பற்றிய என் கருத்துக்களை எழுதலாமென்றிருக்கிறேன். திண்ணையில் முன்பு ஒரு தொடர் எழுதியிருக்கிறேன். Political Ecology, Environmental History இரண்டையும் தொட்டுச் செல்லும் தொடர் அது. 1990களின் துவக்கத்தில் Finacial Expressல் ரசாயண உரங்களுக்கான மானியத்தை குறைக்க வேண்டும், இயற்கை சார் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எழுதினேன். க்யுபாவில் இயற்கை சார் வேளாண்மைக்கு அரசு ஊக்கம் கொடுத்து பரப்பிய போது அதையும் தமிழில் எழுதியிருக்கிறேன். இது போல் இயற்கை சார் வேளாண்மை, உயிரியல் தொழில் நுட்பமும் வேளாண்மையும் குறித்து ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருக்கிறேன். இதில் என் கருத்துக்களில் காலப்போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நான் வேளாண்மையில் உயிரியல் தொழில் நுட்பத்தின் பங்கினை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. அதற்காக அதை கண்மூடித்தனமாக ஆதரிக்கவுமில்லை. தொழில் நுட்ப நிர்ண்யவாதத்திலிருந்து நான் நகர்ந்து விட்டேன். தொழில் நுட்பம்-சமூகம் குறித்து ஒருவித constructivist புரிதலே எனக்கு சரியாகப் படுகிறது. எதிர்காலத்தில் இதிலும் மாற்றம் வரலாம். அந்த மாற்றம் இன்னும் நுட்பமான புரிதலை நோக்கியதாக இருக்கும். பாரம்பரிய தொழில்னுட்பம், இயற்கை வேளாண்மை குறித்து எனக்கு மிகவும் நேர்மறையான கருத்துக்கள் இருந்தாலும், அவற்றின் அடிப்படையில் அதீத நிலைப்பாடுகளை எடுக்க முடியவில்லை. பசுமைப் புரட்சி குறித்து எனக்கும் விமர்சனங்கள் இருந்தாலும், அது குறிப்பிட்ட காலத்தில் முன் வைக்கப்பட்ட தொழில்னுட்ப தீர்வு என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு அடுத்த கட்டத்திற்கு நகர்வதுதான் சரியாக இருக்கும் என்பது என் கருத்து. மேலும் அதை ஒரு சதியாக குறுக்குவது சரியல்ல என்றே கருதுகிறேன். இவற்றையெல்லாம் இப்படி எழுதுவதை விட விரிவாக எழுத வேண்டும்தான். எப்போது முடிகிறதோ அப்போது அதைப் பார்க்கலாம்.

இறுதியாக, அஞ்சற்க, ஒவ்வொரு வாரமும் நிகழ்காலக் குறிப்புகள் என்ற தலைப்பில் பத்தி போல் எழுதுவதாக
இல்லை, ஆகவே அடுத்த வாரத் திண்ணையை அச்சமின்றி பார்க்கலாம் 🙂


ravisrinivas@rediffmail.com

Series Navigation

ரவி ஸ்ரீநிவாஸ்

ரவி ஸ்ரீநிவாஸ்