Last Kilo byte – 8 முடிந்துபோன கடைசிப்பக்கம் – இளையதலைமுறையின் அஞ்சலி

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

கே ஆர் மணி


எழுதத்தேவையா என்ன ? நான் எழுதி என்னவாகிவிடப்போகிறது. ஆனாலும் விசயம் ‘கரமா’யிருக்கும்போது கொஞ்சம் ஊதிவிடுவது நினைவுக்கிளறல். உயரப் பறக்கிற பருந்துகளைப்பார்த்து காக்கையும் பறக்கநினைத்த கதையா..?

ச்சீ.. அப்படியேன் நினைக்கணும். நான் ஜனார்தனின் தோல்வியடையா சீகல். ஓ.கே. நீங்க நம்பாட்டி.. இது கடையனிலும் கடையனின் பதிவாயிருந்துவிட்டு போகட்டுமே. இழவுவீட்டுக்குப்போகறதுக்கு என்ன தகுதிவேண்டிக்கிடக்கு. அவர் தெரிஞ்சவர்ங்கிறதைவிட.
அப்படி யோசிச்சா.. எல்லா வாசகனுக்கு அந்த தகுதியிருக்கு. அப்படி நினைச்சிக்கலாமே..

ஒரு சாதாரண செய்தியாத்தான் அதிருந்தது. அப்பறம் மத்தவளோட அதுபத்தி பேசறப்ப அதனோட கணம் குறைஞ்சுபோகமா கூடிப்போனது ஏன்னுதான் தெரியலை. அவ்வளவு பெரிய ஹால்ல எல்லாபெரும்தலைகள். வண்டில மனுஸ்யபுத்திரன்..எல்லாம் பெரும் பெருந்தலைங்க.. கனமில்லாத ஒரு இழவு வீடுமாதிரி.. அடிக்கடி சிரிப்பும், சின்ன வருத்தமுமா. அவருக்கும்
அதுதான் பிடிச்சிருக்கும். எங்காயாவது ஓரமா உக்காந்திருந்தா.. ‘ பரவாயில்லேயே.. நன்னாயிருந்ததே’ என்று சொல்லிவிட்டு போயிருப்பார்.

எழுத்தாளார், எழுத்து எல்லாம் நாமவெச்சிக்கிற மொபைல் போன்மாதிரிதான் போல. நம்மோட வாழ்க்கை ஸ்டைலுக்கு ஏத்தமாதிரி. ரேபான் கூலிங்கிளாஸ், ரேமெண்ட் கோட்டு, நோக்கியா கலர் மொபல், ஸ்கார்ப்பியோ கார், ஐபோட், பிளாக்பெர்ரி – இப்படியெல்லாம் நம்மோட வாழ்க்கை தரத்தை, தளத்தை பிரகடனப்படுத்த உதவும் பிராண்டுகள். எல்லா பிராண்டுகளும் எப்போதும்
எல்லோரையும் கை நீட்டி தொடமுயல்வதில்லை. சிலபிராண்டுகளுக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடப்பதுண்டு. இவரின் எழுத்து சிறு,பெறு, வணிக, சிற்றிதழ், பெரிதழ், பெருசு, சிறுசு, – என எல்லா இதழ்கள், தரப்புகளிலும், பத்திகள், நாடகம், சிறுகதை,கவிதை, நாவல், சினிமா என எல்லா தளங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தார். நம்மோட வாழ்க்கை ஸ்டைல் மாறும்போது அஸோசியோட் பண்ற பிராடக்ட்டும் மாறிகிட்டேயிருக்கும்போல. சின்னவயசுல ராஜேஜ்குமார் அப்புறம் சுஜாதா, அப்புறம் பாலகுமாரன். ஏனோ பாலகுமாரன் போனதக்கபுறம் சுஜாதா எழுதுறது குப்பைனு ஒரு எண்ணம். சுஜாதா படிக்கிறவங்க ஒரு லைட் ரீடர்னு ஒரு மப்பு. எல்லாத்தையும் ஒரு எழுத்தாளர் எப்போதும் எழுதிக்கொண்டேயிருக்கமுடியும். வண்ணாத்தி ஜோக் எழுதின கைதான் நம்மாழ்வார் பாசுரம் எழுதியது. அது அவரின் பலம் மற்றும் பலவீனம்கூட. ஒரு சந்தோசமான ஹாபி. தனக்கு பிடித்ததை, பத்திரிக்கைக்கு தேவையானதை, தற்போது சூடானதை பரிமாறும் ஒரு இண்டலக்டின் வேகம்.

வேகமான நடை, மொழிக்கு புதுமை, தமிழ் அறிவியலுக்கு நல்ல பங்களிப்பு, கணிப்பொறியியலுக்கு மிகப்பெரிய கொடை. இங்கதான் ஞாபகம் வருது. என்னோட பழைய கம்பெனியில லினக்ஸ் சம்பந்தமாக இங்க ஞாபகம் வருது. எனக்கு இரண்டு அஜெண்டாயிருந்தது. ஒன்ணு கம்பெனி விசயமா, இன்ணெண்ணு என்னோட புக்கு விசயமா. ரெட்ஹாட்டின் தமிழ் எழுத்துரு சம்பந்தமாகவும், கணணி வார்த்தையை தமிழ்படுத்துதல் பொருட்டும் பேச்சு நடந்ததாக நினைவு. அம்பலம் அலுவலகத்தில் கணிப்பொறி குழுவுடன் பேச்சுவார்த்தை. அது முடிந்து தான் தமிழ் மொழிபடுத்திய கணிப்பொறி வார்த்தைகளை கொண்ட புத்தகத்தை ஒரு குழந்தை தடவியதுபோல தடவி எடுத்துக்காட்டினார். அபாரமான உழைப்பு. நான் எனது ‘எங்கே போனது என் அல்வாத்துண்டு’ புத்தகத்தை காட்டினேன். ஓரிரு வினாடிகளில் புத்தகத்தின் அடித்தளத்தை பிடித்துவிட்டார், இது Change Management பத்திதானே.. தலைப்பு வேறமாதிரி வெச்சிக்கலாமே..இதைவிட பெஸ்டாயிருக்க முடியாது சார் என்று வாதாடும் திராணியில்லை. அவர் எழுத்தை வாசித்து வளர்ந்த தலைமுறை நான். ‘ சார் உங்களை படித்து வளர்ந்து இந்தத்துறையிலிருக்கிறோம், கட்டை விரல் கேட்கவேண்டாம், ராயல்டியாய் என்று சொல்ல நினைத்து சொல்லாமல் தொண்டைக்குள்ளே முழுங்கி, ஏதோ பேசி ஜல்லியடித்துவிட்டு வந்தது நினைவில் வந்தது. இனி எழுத்தாளர்களின் எழுத்தை மட்டுமே படிக்கவேண்டும், பார்க்கெல்லாம் போகக்கூடாது என்று பிரசவ அறையின் பெண்ணின் சபதம்போல செய்துகொண்டேன்.

நிறைய பேருக்கு ஏதோ கிரிக்கெட் ஸ்கோர் சொல்வது போல் சொன்னேன். இந்த இறப்புச்செய்தியை ஒரு முதிர்தோழியிடம் சொன்னதுபோது சொன்னார். ‘அப்படியா, ஹ¥ம். நான் கடைசி தடவை போனப்போ அப்புறம் இண்டர்வியூ வெச்சிக்கலாம், உங்காத்துமாமா இரண்டாவது தடவை பைபாஸ் பண்ணினதுக்கபுறம் தான் போனாரா.. இரண்டாவதுல ஏதாவது ப்ராப்ளாமா.. ‘ என்று அந்த மாமியின் கணவரிழப்பு கதையை ஒரு சிறுகதைக்கான சுவாரசியத்தோடு கேட்டு, மாமியை மூட் அவுட்டாக்கியதில் அவரின் மரணபயத்தின் விளிம்புகள் தெரிகின்றன. மூலம் வந்தவர்கள் மூலம் பற்றியும் புது சர்க்கரை வியாதிக்காரர்கள் தங்களின் சீனியர்களோடு பேசுகிற உலாவல்களாகவும் கண்ணுக்கு தெரிந்தாலும் அவரது புதியன தெரிதல் அவா, மாமியை மனமுடையச் செய்ததை அவர் கண்டுகொள்ளாதது பற்றி மாமிக்கு இன்னும் வருத்தம். ‘இப்படியெல்லாம் பேசி என் வயித்தெரிச்சலை கொட்டிக்கணுமா.. ‘ ஆனாலும் மாமிக்கு இவர்மீது தனிப்பிரியமுண்டு. அவர் எழுத்தின் இளமைக்கு என்றைக்குமே விசிறிதான்.

ஓரு கதாசிரியர் இதைவிட புகழை, அங்கீகாரத்தை தனக்கான இடத்தை எதிர்பார்க்கமுடியாது. ஒரு Classic Carrer Graph.

அதனால் விமர்சனர்களும் கொஞ்சம் திணறித்தான் போனார்கள். புழுதி பறந்துகொண்டுதானிருந்தது. அவர் ஒரு காலத்திலும்
சிறந்த சிறுகதை ஆசிரியரில்லை, நாவல் உலகத்தை தடம் புரட்டிய நல்ல நாவல்கள் எதையும் எழுதிவிடவில்லை- எல்லாமே தொடர்கதையாக செயற்கை திருப்பங்களுடன் எழுதப்பட்டவை நீட்டிக்கப்பட்ட சிறுகதைகள் , தானே ஆகாமல் வலிந்து கட்டுப்பாடோடு ஆக்கப்படும் நிகழ்வுகள் ஆங்கிலத்தின் சுறுசுறுப்பான நடை கூடிய மலிவான காமம் கலந்த தமிழாக்கம்தான், மண்ணின் மணமற்ற எழுத்து, மேட்டுக்குடி பார்ப்பன எழுத்து, எந்த நிலைப்பாடுமில்லாத எழுத்து, மேற்கத்திய இலக்கியத்தில் அப்போது பரப்பாயிருந்த வளமையான வேகமான துள்ளல் எழுத்து, எது தேவையோ அதுவாக, அந்த வடிவத்தில் பத்திரிக்கைத்தேவைப்படும்படி, மானிட ஈரப்பசையில்லாத திடுக்கிடும் நோக்கம் மட்டுமே கொண்ட சிறுகதைகள், அதிகமாக பேசப்படுகிற Hot Topic எதுவாகவிருந்தாலும் அதைப்பற்றி நாய் நக்குதல் போல தொட்டு டேஸ்ட் செய்துவிட்டு அடுத்த இலைக்கு போகிற அவா, ஆழ்ந்த நோக்கமற்ற நுனிப்புல் மேய்ந்த Starter Guide அறிமுகம் மாதிரியான அறிவியல் கட்டுரைகள், பெயரும் படிப்புமிருந்ததாலே பெயர் பெற்ற அறிவியல் புனைக்கதைகள், படிப்பதையெல்லாம் எழுதிவிட துடிக்கும் விடலை எழுத்து, அளவுக்கு மீறி அவருக்காக போடப்பட்ட ராஜாபாட்டை (சாவி,ஆவி,குங்குமம், குமுதம்..எல்லாமே அவர் இங்க் தெளித்தால் கூடபோடத்தயாரிருந்தன) அவருக்கு கிடைத்த புகழும், அங்கீகாரமும் அதிகமென்றாலும் அதற்கு முற்றிலும் தகுதியற்றவர் என்று ஓதுக்கிவிடமுடியாதென்கிறார் விமர்சக நண்பர்.

யாரையும் குழு அடிப்படையில் கடுமையாய் விமர்சிக்காதது, தலித்திய எழுத்துக்களை- புதிய கவிஞர்களை ஓடிப்போய் வரவேற்றது, நல்ல இலக்கியத்தை கடத்தி வெகுஜன ஊடகங்களில் இடம்பெறச் செய்தது, எளிதில் எவராலும் தூக்கிப்போட முடியாத Contemporaneous நடை, யூனிக்கோடு முயற்சிகள், மின்னம்பலம், நாடகங்களில் கொஞ்சம் யதார்த்தம் கொண்டுவருதல், படித்ததை, அந்த காலத்தை பற்றிய பிரமாதமான பதிவுகளான கடைசிப்பக்கங்கள் போன்றவை இலக்கியமில்லாவிட்டாலும் நடை, வடிவத்தில் சிறந்த முன்னோடிகளாய் அமைந்தது, சப்பை படத்திற்கு கூட நல்ல வசனங்களை கொணர முயற்சித்தது என சில நல்லவிசயங்களும் அவரது அபிமானிகளால் ஆராதிக்கப்படுகிறது. விமர்சகர்களின் மெளனத்தாலும், மறுமொழியின்மையாலும் நல்ல விசயமாக தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்றுக்கொள்கிறது.

அவரை ரெங்கராஜ ஆழ்வாராக்குவதில் அதீத பற்றுடைய எனது நண்பன் சுஜாதாவை தாண்டி வளர்வதேயில்லை என்பது யாருடைய குற்றம் என்பதில் என் மண்டைக்குடைச்சல். என்னதான் சுவையாயிருந்தாலும், சுஜாதாவை விட்டு அடுத்தகட்ட இலக்கியத்திற்குள் போகாமலிருந்ததற்கு ஒரு எழுத்தாளன் முழு காரணமாகிவிடமுடியாது. ஒரு நல்ல எழுத்து வாசகனுக்கு படிக்கட்டாகமட்டுமே அமையவேண்டும். நிறையபேர் அதை வாசஸ்தலாமாக்கிக்கொண்டார்கள் என்பது உண்மையும் கூட. பீசாவில் சாம்பார் ஊற்றிக்கொடுக்கப்படும்போது இத்தாலியன் பீட்சாவின் ஓரிஜனல் சுவைக்கு தேடலிருப்பதேயில்லை.

தூர்தர்சனில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி. ஒரு பையன், “சார், அம்மா உங்க கதையெல்லாம் படிப்பாங்க.. அப்படி எனக்கும் தமிழ் சொல்லிக் கொடுத்தாங்க..நானும் கொஞ்ச கொஞ்சமாய் படிக்க ட்ரை பண்றேன் சார்.. ” இவருக்கு முகம் மலர்ந்தது. ” படிங்கோ, வெரிகுட். தமிழ் பாத்தேன்னா.. ரொம்ப ஈசி.. ஜோக்ஸ், மதன் கார்ட்டூன்னு ஆரம்பிங்கோ.. ” கண்டிப்பாய் அந்த பையன் தமிழ் படித்திருப்பான். அடுத்த தலைமுறை தமிழ் படித்தலில் ஆரவாரமில்லாத மெளனக்காதல்.

Download completed. சுறுசுறுப்பான சோகத்தோடு..


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி