தத்துவத்தின் ஊசலாட்டம்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

ராஜன் குறை



குழந்தைகளிடம் விசையால் இயக்கும் பொம்மைகளை கொடுத்து அவற்றை எப்படி இயக்குவது என்று சொல்லிக்கொடுத்தால் சிறிது நேரம் வேண்டுமானால் அதன்படி விளையாடும். பிறகு அதனை பிரிக்கும், தூக்கி எறியும், உடைக்கும். குழந்தைகளை பொருத்தவரை பொம்மைகளை குறிப்பிட்ட படி இயக்குவதும், பிரித்துப்போடுவதும் இரண்டுமே விளையாட்டுதான். சில சமயம் அவ்வாறு சிதைவுற்ற பொம்மைகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று அழும்போதுதான் எவ்வளவு பொறுமைசாலிகளான உற்றோர்களுக்கும் அலுப்பாக இருக்கும். பொம்மையை அது இயங்கும் விதத்தில் இயக்காமல் பிரித்துப்போட்டால் அதுதான் நடக்கும் என அவர்கள் போதிக்க நேரும். மானுடமே ஒரு குழந்தையைப்போல இருப்பினை பிய்த்துப்போட்டால் யார் போதிப்பது என்பதுதான் இன்றைய கேள்வி.

ஒரு நாடகமாக உருவாக்கிப்பார்க்கலாம். மேடையின் ஒரு சிறிய பகுதியில் ஒளி வட்டம் இருக்கிறது. அதனுள் இரண்டு உருவங்கள் இருக்கின்றன. இரண்டினுள் ஒன்று இருட்டினுள் செல்ல விழைகிறது. அதன் பெயர் அ. இன்னொன்று தேவையில்லை என்று சொல்கிறது. அதன் பெயர் ஆ. இருட்டினுள் சென்ற உருவம் ஒரு நாற்காலியை கொண்டு வருகிறது. அது இரண்டிற்கும் வசதியாக இருப்பதால் அ மீண்டும், மீண்டும் இருட்டினுள் செல்கிறது. இந்நிலையில் அது கொண்டுவரும் பொருள்களால் ஒளிப்பகுதி நெருக்கடி மிக்கதாகிறது. இருட்டினுள்ளிருந்து பொருட்களை எடுக்கும்போது ஏதேதோ ஒலிகள் கேட்கின்றன. பல வர்ண புகைகள் இருட்டிலிருந்து வந்து ஒளிப்பகுதியை நிறைக்கின்றன. உருவங்களுக்கு மூச்சுத்திணருகிறது. அ மீண்டும் இருட்டினுள் சென்று புகைகளை நிறுத்துவேன் என்கிறது. ஆ இதுவரை போனதால் விளைந்த பிரச்சினைகள் போதும் என்கிறது. இரண்டிற்கும் காரசாரமான விவாதம் நடக்கையில் இருட்பகுதியிலிருந்து வரும் ஓசைகள் மிகப் பலமாக ஒலிக்கின்றன. ஓசைகளின் இரைச்சலில் வார்த்தைகள் மூழ்க திரை விழுகிறது.

இன்று என்னதான் பிரச்சினை? புவி சூடேற்றம். காரணம்? காற்றில் கலந்த கரியமில வாயுக்கள். அவை நவீன அறிவியல் தொழில் நுட்பம் கொண்டுவந்த மாற்றங்களால் விளைந்தவை. அவை குறித்தும், சூடேற்றம் குறித்தும் எப்படி அறிகிறோம்? அறிவியலாளர்களால். அவர்கள் அனைவரும் அது குறித்து ஒத்த கருத்து கொண்டிருக்கவில்லை என்பதை, தமிழர்களின் வெகுஜன அறிவியல் ஆசானான சுஜாதாவும் சுட்டிக்காட்டுகிறார். முதலீட்டியத்தின் கைப்பாவையான சில அறிவியல் நிறுவனங்கள் ‘பூமியாவது, சூடாவது, அஹாஹா!’ என்று வில்லன் நடிகர்கள் போல சிரிக்கின்றன. ஒரு சில அறிவியல் குழுமங்கள் இன்னும் முப்பது ஆண்டுகளில் மனித (மற்றும் பல உயிர்களின்) இருப்பிற்கான ஆதாரங்கள் சிதையப்போவதாக கூறுகின்றன. அவற்றின் வலை விலாசத்தை நான் தருவதும், அதற்கு மாற்றான கருத்துள்ள வலை விலாசங்களை இன்னெருவர் தருவதுமான ‘விவாதங்களில்’ எனக்கு சுவாரசியமில்லை. என்னைப் பொருத்தவரை என்னுடைய வாழ்நாளின் கால எல்லைக்குள் ஒட்டுமொத்த மானுட அழிவே நிகழாலாம் என அறிவியல், அதாவது தோற்ற உறுதி அடிப்படையில், சிலரால் கூற முடியும் என்பதே என்னை தத்துவத்தின் ஊற்றுக்கண்களை நோக்கி செலுத்துகிறது.
சூடேற்றம் பற்றிய செய்திகள் தமிழில் பரவலாக பதிவு பெற்றுள்ளன என நம்புகிறேன். நீதிபதிகளால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அல் கோர், ‘அசெளகரியமான உண்மை’ என்ற திரைப்படத்தின் மூலம் இரண்டாண்டுகளுக்கு முன் அமெரிக்கர்களை சூடேற்றம் குறித்து சிந்திக்கவைத்து நோபல் பரிசும் வாங்கிவிட்டார்.
தட்பத்திற்கும் வெப்பத்திற்குமான உறவு சீர்குலைகிறது என்பதே புவி சூடேற்றத்தின் அடிப்படை. ஒவ்வொரு ஆண்டும் உருகி மீண்டும் திடப்படும் பனிப்பிரதேசங்களின் பரப்பளவு குறையத்தொடங்கிவிட்டது. அதிகம் உருகி, குறைவாக திடப்படுகிறது. இதனால் சூடு அதிகமாக, அதிகமாகும் சூட்டினால் இன்னமும் குறைவாக அடுத்த ஆண்டு திடப்படுகிறது. இந்த இணையுறவு பாதிப்பு பெருக்குத்தொகையாக வடிவம் கொள்வதால் மிகக்குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய மாறுதல்கள் நிகழலாம் என கூறப்படுகிறது. இதெல்லாம் மிகையான கணிப்பு, எப்படியும் நூறு வருடமாவது தாங்கும், அதற்குள் செவ்வாய்கிரகத்தில் காலனி அமைக்கலாம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

என்றோ படித்த ஒரு கதை நினைவு வருகிறது. பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் கூற்றாக ஞாபகம். ஒரு தந்தையும் மகனும் நதியில் குளிக்கையில், முதலை சிறுவனின் காலை கவ்வுகிறது. தந்தையிடம் கூறுகிறது: ‘நான் ஒரு கேள்வி கேட்பேன். சரியான பதில் சொன்னால் சிறுவனை விட்டு விடுவேன். தவறாகச் சொன்னால் கடித்துவிடுவேன்’ தந்தை சரி என்கிறார். முதலை கேட்கிறது: ‘நான் சிறுவனை கடிப்பேனா, மாட்டேனா?’. என்ன பதில் கூற வேண்டும் என சிந்தித்துப் பாருங்கள். தந்தை கடிப்பாய் என்கிறார். முதலை விட்டு விடுகிறது. ஏனென்றால் கடித்தால் அவர் கூறியது சரியென்றாகி, முதலை தன் வாக்குத் தவறிவிடும். புவியின் சூடேற்றமும் நம் காலைக் கடிக்கும் முதலைதான். ஆனால் கடிப்பாய் என்று சொன்னால் கூட விட்டுவிடுமா என்றுதான் தெரியவில்லை. ஏனென்றால் அது கேட்கும் கேள்வியை தாமதாகத்தான் செவிமடுத்துள்ளோம். முதலீட்டியம் உருவாக்கியுள்ள ஊடகங்களின் கூச்சலில் எதுதான் காதில் விழுகிறது.

*****

முதலீட்டியம் பற்றிய சிந்தனைக்கு இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். [நண்பர் சின்னக்கருப்பன் முதலீட்டியத்தின் தோற்ற உறுதி வரலாறு குறித்து விரிவாக எழுதவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அவரது பார்வை நானறிந்த முதலீட்டியத்தின் வரலாறு குறித்த ஆய்வுகளிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை முதலீட்டியம் சிந்து வெளி நாகரீகத்திலேயே தோன்றியது என்று நிரூபிக்கப்பட்டாலும் அதைக் குறித்த என் பரிசீலனை மாற்றமடையப் போவதில்லை. கடந்த ஐநூறு ஆண்டுகளாக ஐரோப்பாவில் அது செயல்பட்ட விதத்தின் முக்கியத்துவமும் என் சிந்தனையில் குறையப் போவதில்லை] இன்று முதலீட்டியத்தின் செயல்பாடு என்ன, அதைத் தத்துவம் எப்படி எதிர்கொள்ள முடியும் என்பதே கேள்வி.

ஒரு நல்ல உதாரணம் பறத்தல். மானுடம் கற்பனை என்ற ஒன்றை சாத்தியமாக்கிய நாளிலிருந்தே பறப்பது குறித்து சிந்தித்திருக்கிறது எனக் கூறலாம். டாவின்சியின் படைப்பூக்கமிக்க வடிவமைப்பும், ஆட்டோ லீலியந்தாலின் தியாகமும், ரைட் சகோதரர்களின் விடா முயற்சியும் விமானம் உருவானதின் நவீன வரலாற்றில் மனித மாண்பை வெளிப்படுத்தும் தருணங்கள். ஆனால் இத்துடன் ‘கடவுள் கொடுத்த கால்கள் இருக்க சக்கரங்கள் எதற்கு?’ என்ற காந்தியின் சிந்தனையை எப்படி இணைத்துப் பார்ப்பது என்பதுதான் இன்றைய கேள்வி. அதை தமிழில் உரத்துக் கேட்க தேவை இருக்கிறது. (காந்தியின் இந்து சுயராஜ்ஜியம் நூலில் இச்சிந்தனையை காணலாம்.)

பறத்தல் என்பதை அறிவியல் சாத்தியமாக்கியது. ஆனால் எல்லா மனிதர்களும், எல்லா பயணங்களுக்கும் அதைப் பயன்படுத்த வேண்டும் என அது கூறவில்லை. முதலீட்டியம் கூறுகிறது. சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் செல்லுமாறு அது தமிழர்களைக் கோருகிறது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகரிப்பது பொருளாதார வளர்ச்சியென்று அறியப்படுகிறது. இப்போது நாம் ஒரு தர்க்கரீதியான அணுகு முறையைக் கையாளவேண்டும்.

விமானங்கள் பறக்க பெட்ரோல் வேண்டும்.
பெட்ரோல் என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் பூமியில் சேகரமானது.
நூறு ஆண்டுகளுக்குள் சேகரமானதின் கணிசமான பகுதியை தீர்த்துவிட்டோம்.
மீதமுள்ள பெட்ரோல் இன்னும் அறுபது ஆண்டுகளுக்கு வருமா, ஐம்பது ஆண்டுகளுக்கு வருமா என்று தெரியவில்லை.
எத்தனை ஆண்டுகள் அந்த சேகரிப்பு இருந்தாலும் அது தீரத்தீர அதை நம்பியுள்ள சமூகங்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்.
இந்த நிலையில் தொடர்ந்து பெட்ரோலை நம்பியுள்ள வாகனங்களை உற்பத்தி செய்வதும், சென்னை-மதுரை போன்ற புதிய தடங்களில் விமான போக்குவரத்தை அதிகரிப்பதும் எப்படி வளர்ச்சி?

இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடிய எந்த அரசியல் சக்தியும், சித்தாந்தமும் இன்று இல்லை என்றே தோன்றுகிறது. முதலீட்டியம் ஒரு அறிவற்ற கபந்த பூதம். அதனால் தத்துவத்தின் மொழியை அறிந்துகொள்ளவே முடியாது. ஆனால் மக்களிடம் இந்த கேள்வியை கேட்ட மனிதர் ஒருவர் இருந்தார். அவர் 1948 ஜனவரி 30 அன்று கொல்லப் பட்டதிலிருந்தே நவீன இந்திய வரலாறு தொடங்குகிறது. நவீன இந்திய தேசத்தின் தந்தை நாதுராம் விநாயக் கோட்சே. அந்த தேசத்தின் நவீனத்திலிருந்து தப்ப விழையும் பண்பாட்டு எச்சங்களின் அடையாளந்தான் கொல்லப்பட்டவர்.

*****

இன்றைக்கு மானுடம் சந்திக்கும் நெருக்கடி பொதுமைப்பட்டுப் போய்விட்டது. எங்கோ ஒரு சமூகம் தன்னுடைய நுகர்வுக்காக எரிக்கும் எரிபொருள் வளிமண்டலத்தில் மாற்றம் ஏற்படுத்தி, பருவமழை பொய்த்து தமிழக விவசாயிகள் பாதிப்படைகிறார்கள். வால் ஸ்டிரீட்டில் நிச்சயமாகும் விலைகள், துருக்கியிலும் ஆந்திராவிலும் விவசாயிகளை தூக்கில் தொங்க விடுகிறது. எந்தவொரு தத்துவ மரபானாலும் இன்றைய நெருக்கடியை எதிர்கொள்ள அது என்ன செய்யப்போகிறது என்பதிலேயே அதன் இருப்பு பொருள் கொள்கிறது. எனவே அடையாளங்களைப் பற்றிய அச்சமின்றி புதிய மொழித்தடங்களையும், இயந்திரங்களையும் உருவாக்குவதே உலகப் பொதுமையை இன்று அங்கீகரிக்கும் தத்துவம் செய்யக் கூடியது.

தோற்ற உறுதிகளைனைத்தும் தன்னகத்தே திறப்புகளைக் கொண்டன. ஆனால் குறிகளும், மொழியும் தோற்ற உறுதிகளை கடக்கும் உள்ளுறை நோக்கியே நகர்த்தும் தன்மை கொண்டவை. தனி இருப்பிற்கும், தனி நபர் என்ற கடக்கும் உள்ளுறைக்கும் உள்ள வேறுபாடு தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் சின்னக்கருப்பன் அதைக் கவனிக்காதது இதனால்தான் என்று தோன்றுகிறது. இவ்வாறான மொழியின் இயங்குதன்மை காரணமாகவே தத்துவத்தின் மொழி இயந்திரங்கள் நுட்பமானவையாக இருக்கின்றன. கடக்கும் உள்ளுறையாக்கும் எல்லா எழுத்துகளும், தத்துவம் உட்பட, சுலபமானவை. திறப்புகளை சுட்டும் எல்லா எழுத்துக்களும் சிக்கலானவை. இலக்கியம் உட்பட.

முதலீட்டியம் உருவாக்கியுள்ள வர்த்தக, ஊடக சந்தை சுலபத்தை பிரபலமாக்கி எல்லோரிடத்தும் கொண்டு செலுத்துகிறது. சாமுவேல் ஹண்டிங்டன் விற்குமளவு தலால் அசாத் விற்க மாட்டார். அப்படியே அவர் பெயர் அறிய நேர்ந்தாலும் அவரை பின் நவீனத்துவம், பின் காலனீயம் என்று ஏதோ ஒரு பெயரில் அழைத்துவிட்டால் முடிந்தது பிரச்சினை. கூண்டிலிருந்த தப்பிய மிருகத்தை மீண்டும் கூண்டில் அடைத்துவிட்டு சர்க்கஸ் முதலாளி கொள்ளும் ஆசுவாசத்திற்கு ஒப்பானது இது. ஆனால் தத்துவத்தின் மொழித்தடங்கள் கூண்டில் அடைபடுவதில்லை. அதன் குறுக்கும் நெடுக்குமான சஞ்சாரங்கள் எந்த அடையாளத்திலும் நிற்பதுமில்லை.

அதேசமயம், உரையாடல்களைப் பொறுத்தவரை தத்துவம் கையறு நிலையில்தான் இருக்கிறது. ஊடகக் கூச்சலிலிருந்து தப்பி, அது உரையாடலை யாசித்து அண்டும் இடங்களில் அது அடையாளங்களை பொறுமையாக தாங்கிக்கொள்கிறது. கலாசாலைக் கூலிகளாக அதன் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்ட நிலையிலும் அது தன் மாண்பை நிலை நிறுத்தப் போராடுகிறது. அமெரிக்க அரசின் ரேகை பதியும் திட்டத்திற்கெதிரான இத்தாலிய தத்துவ அறிஞர் அகம்பெனின் அறிக்கை போல. ஆனால் முதலீட்டிய ஊடகங்களால் சந்தை இரைச்சலாக, பேரங்களாக மாற்றப்பட்டுவிட்ட உலகின் பொதுமன்றங்களில் நடக்கும் ‘உரையாடல்களில்’ இனியும் தனக்கொரு பங்கு இருக்க முடியுமா என்பது குறித்த ஊசலாட்டத்தை அதனால் கைவிடமுடியாது.


rajankurai@gmail.com

Series Navigation

ராஜன் குறை

ராஜன் குறை