திண்ணைப் பேச்சு – பிப்ரவரி 7, 2008

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

கோபால் ராஜாராம்


1970-ல் ஒரு தமிழ் எழுத்தாளர் எழுதிய கதையைப் பற்றிய கதை இது. அந்தக் கதையில் ஓர் இளைஞன். புதிதாகக் கற்ற மார்க்சியத்தின் ஒளியில், இயங்கியல் , வரலாற்றுப் பார்வையில் எப்படியெல்லாம் காந்தி தவறு செய்தார் என்று ஒரு பெரிய பட்டியல் இடுவார் அந்த இளைஞர். அந்த விமரிசனம் ஆழமாக , ஒவ்வொரு செயலும் எப்படி உழைக்கும் பாட்டாளி மக்களுக்கு செய்யப்பட்ட துரோகம் , காந்தி எப்படி உள்நாட்டு முதலாளித்துவத்தின் கைக்கூலியாய்ச் செயல்பட்டார் என்று ஆறிக்கொண்டுவரும் தேநீர்க் கோப்பையை சாட்சியமாய் வைத்து தொடரும் விமர்சனக் கணைகளுக்கு மௌன சாட்சியாய்க் கதை சொல்லி இருப்பார். கதை முடியும்போது ஆறிய தேநீர் முன்னால் , காந்தியின் வாழ்வை இன்னொரு முறை படித்திருந்தால், இன்னமும் பல விமர்சனங்களை அடுக்கியிருக்கலாமே என்று கதைசொல்லியின் கூற்றோடு முடியும். காந்தி தன் ஒவ்வொரு நகர்வையும் ஆவணம் செய்தவர். தமிழின் சிறந்த கதாசிரியர் அசோகமித்திரனின் அந்தக் கதை “காந்தி”. அந்த இளைஞர் அந்தக் கதையின் மையத்தைத் தவறவிட்டுவிட்டு , தான் தான் அந்தக் கதையின் மையப்புள்ளி என்று மற்றவர்களிடம் பெருமை பேசியது வேறு கதை. அவர் யாரென்று நான் சொல்ல விரும்பவில்லை.

அரவிந்தன் நீலகண்டன் காந்தி மீது விமர்னங்கள் வைத்தது எனக்கு வியப்பளிக்கவில்லை. இவ்வளவு தானா காந்தியின் மீதான விமர்சனங்கள் , காந்தியை இவ்வளவு சுலபத்தில் விட்டுவிட்டாரே என்று மகிழ்ச்சி தான் ஏற்பட்டது. காந்தி மீதான விமர்சனங்கள் புதிதல்ல. வாழ்ந்திருக்கும் போதும், அவர் மீது அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் ஒரு கோணத்திலிருந்தும், கம்யூனிஸ்டுகள் ஒரு கோணத்திலிருந்தும், காங்கிரசுக்குள்ளேயே இருந்தவர்கள் ஒரு கோணத்திலிருந்தும் அவர் மீது விமர்சனங்கள் வைத்தவண்ணம் தான் இருந்தார்கள். காந்தியின் வழி எப்போதுமே தனி வழி. ரவீந்திர நாத் டாகுர் “ஏக்லா சலோரே” என்று எழ்திய பிரசித்தி பெற்ற பாடல் காந்தியை முன்னிறுத்தி எழுதப்பட்டது தான். சொல்லப் போனால் இப்படி எழும் விமர்சனங்களே கூட காந்தியின் ஆளுமைக்கு அவர் வலியுறுத்திவந்த ஜனநாயகப் போக்கிற்கு வலுச்சேர்ப்பவை தான். அரவிந்தன் தந்த விமர்சனங்களில் இரண்டு மற்றும் ஆறு இலக்கமிட்ட விமர்சனங்கள் எனக்கும் உண்டு. கிலா·பத் இயக்கம் என்ற பிற்போக்கு இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலம், முஸ்லீம்களின் நல்லெண்ணத்தைப் பெறமுடியும் என்ற அவர் எண்ணம், அதன் மூலம் மதச்சார்பற்ற கருத்துகள் கொண்ட முஸ்லீம்களைக் கைவிடுவதில் முடிந்து பெரும் வன்முறைக்கு வித்திட்டது. பிரிவினை தவிர்க்க முடியாது என்று உணர்ந்து முழுதும் அவர் தன்னை அதன் திட்டமிடலில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தால், பல வன்முறைகளைத் தவிர்த்திருக்க முடியும். வருத்தம் தருபவை இந்தச் சறுக்கல்கள்.

காந்தி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதும் உண்மையல்ல. ஒரு சோனியாகாந்தியை விமர்சித்தால் வரும் கோபம் கூட , காங்கிரஸ்காரர்களுக்கே காந்தியை விமர்சித்தால் வருவதில்லை. ஒரு ஆதரவு கோஷ்டி எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத ஆளாக காந்தி ஆகிவிட்டார். ஆனால் காந்தியின் நினைவு ஏதோ ஒரு விதத்தில் மக்கள் மனதில் ஆழப் பதிந்து தான் இருக்கிறது. அந்த உணர்வுதான் இந்தியாவை இந்தியாவாக வைத்திருக்கிறது. ஆனால் அந்த உணர்வினை மரத்துப் போகச் செய்யவும், மக்களை தம்முடைய நியாய உணர்வுகளிலிருந்து விலக்கி குறுங்குழுக்களின் விசுவாசத்திற்கெனக் கட்டமைக்கும் முயற்சி பல குழுக்களால் செய்யப் பட்டுவருகின்றன. அதில் பல குழுக்கள் வெற்றியும் பெறுவதாய்த் தெரிகிறது. இது தான் இந்தியாவின் தோல்வியில் முடியுமே தவிர, வெளிசக்திகள் இந்தியாவைத் தோல்வியுறச் செய்ய முடியாது.

எந்த விருப்பு வெறுப்புமின்றி கோட்சே பக்க நியாயத்தை பதிவு செய்ததாய்ச் சொல்லி, காந்திபடுகொலையை நியாயப் படுத்துவதிலிருந்து தன்னை தூரப்படுத்திக் கொள்ளும் மலர்மன்னனின் முயற்சி பற்றி. காந்தியைப் பற்றி எழுதப் பட்ட ஆயிரக் கணக்கான புத்தகங்களிலிருந்து தேர்வுசெய்து தான் மலர் மன்னன் கோட்சேயின் “தன்னலமின்மை”யையும், நெஞ்சுருக தன் பக்க நியாயத்தை கோர்ட்டில் தெரிவித்த கோட்சேயின் வாக்குமூலத்தையும் பதிவு செய்கிறார். இனவாதிகள் கூட தம்முடைய நியாயத்தை மிக உருக்கமாய் வெளிப்படுத்திவிட முடியும். தன்னலமற்ற படுகொலை என்பது மட்டுமே படுகொலை எல்லோருடைய நலனுக்கானது என்பதன் நிரூபணம் அல்ல.

**********

எல்லா மதத்தினரும் தம்முடைய மதம் ஆதியிலிருந்தே உருவானது என்று தான் சொல்கிறார்கள். அந்த ஆதி என்பது என்ன என்பதே ஒரு பிரசினைக்குரிய விஷயம். முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என்பது போலத்தான் இது. இதையெல்லாம் சிரித்து ஒதுக்கிவிட்டுப் போக வேண்டியது தான். புரொடண்டிசத்தை யாரும் மார்ட்டின் லூதரிசம் என்று சொல்வதில்லை அல்லவா? ஒரு குழு எந்தப் பெயரால் தாம் அழைக்கப் படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அந்தப் பெயரில் அழைப்பது தான் முறை.

***********

தேவமைந்தனின் பல கட்டுரைகளை நான் மிக ரசித்துப் படித்திருக்கிறேன். ஆனால் “மாஒ காந்தி” பற்றிய கட்டுரையை சிறிது ஆய்வு செய்து எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

எஸ் என் நாகராஜனுக்கு எப்போதுமே, சீனா மற்றும் மாஒ சற்று உணர்ச்சி வசப் படவைக்கிற வஸ்துக்கள். தம்முடைய கலாசாரத்தில் உள்ள நாயகர்களைச் சரியாக பயிலாமல், பயின்றாலும் அவர்களைப் புறமொதுக்கி மற்ற நாடுகளின் கலாசார நாயகர்களை வியந்து பாராட்டுவதன் உளவியல் நிலை ஆய்வுக்கு உரியது. (தேவமைந்தன் அப்படிப் பட்டவரல்ல. அவருடைய திண்ணைக் கட்டுரைகள் எல்லாமே நம்முடைய தமிழின் பெரும் சொத்துக்களான தன்னலம் கருதாமல் தமிழுக்கும், நாட்டுக்கும் உழைத்தவர்களை ஆவணப் படுத்துபவை.) கொல்லைப் புறத்தில் மூலிகைகள் விளையுமா என்ற சந்தேகம் தான். ஆனால் எல்லா நாடுகளும் தம்முடைய நாயகர்களை தம்முடைய கலாசாரத்திலிருந்தே பிரித்தறிந்து கொள்கிறது. காலனியாதிக்க நாடுகள் தம்முடைய நாயகர்களை ஆக்கிரமித்த நாட்டில் நிலைநிறுத்த இரண்டு வழிகளைக் கையாள்கிறது.

ஒன்று : ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளின் நாயகர்களுக்கு இணையாகவும், ஒப்பு சொல்லுமாறும் தம்முடைய நாயகர்களை நிறுத்துகிறது. ஆக்கிரமிப்புச் செய்யப் பட்ட நாடுகளின் பரந்த கலாசார இலக்கியப் பரப்பில் உள்ள ஆகச் சிறந்த கருதுகோள்களையும், குறிகளையும், தம்முடைய கருதுகோள்களுக்கு இணையாய்ப் பயன்படுத்தி ஆக்கிரமித்த நாடுகளின் கலைப் பொக்கிஷங்களையும், குறியீடுகளையும் முனை மழுங்கச் செய்கிறது. காலப் போக்கில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட நாடுகளின் நாயகர்களையும், குறியீடுகளையும், கலாசார பிம்பங்களையும் தம்முடைய பிம்பங்களுடன் பிரதி செய்து , கலாசார அழிவிற்குக் காரணம் ஆகிறது. விவிலியம் வேதப் புத்தகம் ஆனதும், கால்டுவெல் ஐயர் ஆனதும், பெஸ்கி வீரமாமுனிவர் ஆனதும் இந்த விதமாய்த்தான்.

இரண்டு : ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளின் நாயகர்களையும், கலாசாரபிம்பங்களும் எந்த சாரமும் இல்லாதவை என்று பிரசாரம் செய்வது. மெகாலே சொல்லிக் கொடுத்த வழி இது.

மாஒவின் சிவப்புப் புத்தகம் கோடிக்கணக்கில் வினியோகித்ததும், அமெரிக்க, சோவியத் மலிவு விலைப் புத்தகங்கள் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கிடைத்ததும், அதைப் படித்தவர்கள் மட்டுமே அறிவாளிகள் என்று ஒரு பிம்பம் உருவாக்கப் பட்டது இந்த வழியில் தான்.

மாஒவையும், காந்தியையும் ஒப்பிடுவது மிக மிகத் தவறானது. மாஒ எங்கே உள்ளூர்த் தொழில் நுட்பத்தை வலியுறுத்தினார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் போர்க் கோட்பாடு, சீன மக்களை உற்சாகப் படுத்தி போரிட வைப்பதற்காகச் சொல்லப் பட்ட ஒன்றே தவிர, அவர் தொழில் மயமாக்கலையும், நவீன தொழில் நுட்பத்தையும் வெகுவாக ஆதரித்தவர். எஸ் என் நாகராஜன் மாஒ-வின் தொழில் நுட்பப் பார்வை பற்றிச் சொன்னது நம்பத்தகுந்ததல்ல. எனக்குத் தெரியவரும் எல்லா விவரங்களும், சீனத்து மக்களை மற்ற நாடுகளை வெறுக்கவும் அதன் மூலமாக சீனப் பெருமிதத்தை வளர்த்து சர்வாதிகாரத்துக்கு இணக்கமாய் மக்களை உருவாக்கத் தான் மாஒ சிந்தனைகள் பயன்பட்டன. அவருடைய “முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்” திட்டம் தொழிற்சாலைகளையும், கனிமவளச் சுரங்கங்களையும் பெரிதும் விரிவு செய்தது. ஆனால் சுதந்திர வர்த்தக நிலை இல்லாததால், வளர்ச்சி விமர்சனமில்லாத முறையில் பெரும் அழிவையும் தேடித் தந்தது. போரை முன்னிறுத்திய மாஒவின் ஒரே ஒரு மேற்கோளை முன்வைத்து மாஒ உள்ளூர் தொழில் நுட்பத்திற்கு ஆதரவாய் இருந்தார் என்று காந்தியுடன் ஒப்பிடுவது மிக மிகத் தவறு. காந்தியை நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், ஆபிரகாம் லிங்கன் போன்றோருடன் ஒப்பிடலாம். அதிகாரத்திற்கு ஆசைப் படாத காந்தியை, தான் உயிருடன் இருந்தவரையில் கட்சித்தலைமையை விடாத மாஒவுடன் ஒப்பிடலாகாது.
***********

ஒரு நாவலாசிரியராக சல்மான் ரஷ்டியின் மீது பெரும் மதிப்பு எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. அவருடைய “சைத்தானின் கவிதைகள்” நாவல் ஒரு விமர்சனமாகவும் இல்லாத, வரலாறாகவும் இல்லாத, அலைப்புறுகிற ஒரு மோசமான நாவல். அவருடைய நாவல்களில் என்னால் ஈடுபடமுடிந்ததில்லை. ஆனால் அவருடைய கருத்துகளும் , விமர்சனக் கட்டுரைகளும் முக்கியமானவை. (Imaginary Homelands) கற்பனைத் தாய்நாடுகள் தொகுப்பில் சில ஆழமான விமர்சனக் கட்டுரைகள் உண்டு. அவர் எனக்குப் பிடித்த நாவலும் எழுதியிருக்கிறார் தான். ஆனால் அது குழந்தைகளுக்கான நாவல். ” ஹாருணும் கதைக் கடலும்” (Haroun and the sea of stories) குழந்தைகளுக்கான நாவல் அது. ஆனால் “அதிசய உலகில் ஆலிஸ்” போன்றே குழந்தைக் கதையைத் தாண்டிய குறியீடாய், கற்பனைக்கும் கதைசொல்லலுக்கும், அதன் மூலமாய் உருவாகும் மந்திர உலகிற்கும் தடை போடும் கொடுங்கோன்மையை குழந்தைக் கதை வடிவில் சொல்லிச் செல்கிறது. இந்த நாவலை சற்றே இந்திய தொனியுடன் சல்மான் ரஷ்டி வாசிக்கக் கேட்டது ஒரு தனி அனுபவம்.


gorajaram@yahoo.com

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்