வந்து போகும் சுதந்திர தினங்களும் குடியரசு விழாக்களும்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

வெங்கட் சாமிநாதன்


சுதந்திர தினம் எப்போதும் போல் இந்த வருடமும் வரும். போகும். கொண்டாட இன்னுமொரு தினம் குடியரசு தினம். சுதந்திர தினத்தன்று பள்ளி விடுமுறை. ஆகவே கும்பகோணத்திலோ, பாணாதுறைப் பள்ளியிலோ எப்படி கொண்டாடினார்கள் என்பது தெரியாது. நான் கிராமத்தில் இருந்தேன். ஆனால் அதற்கு ஒரு நாள் முன் சுந்தரம் பிள்ளை என்ற ஆசிரியர், கதர் ஆடை தான் அணிந்திருப்பார், வெகு உணர்ச்சி வசப்பட்டு வரவிருக்கும் சுதந்திர தினத்தைப் பற்றிப் பேசினார். எனக்கு எங்கள் பள்ளியிலேயே அவர் ஒரு பெரிய மகான். சாதாரண வாத்தியார் இல்லை. சரித்திரப் பாடம் தான் எடுப்பார். அவர் பேசுவதையே வகுப்பில் கேட்டுக்கொண்டு இருப்பேன். சரித்திரப் புத்தகத்தை பரிஷைக்கு முதல் நாளன்று தொட்டதைத் தவிர, பிரித்துப் பார்த்ததாக நினைவில் இல்லை. ஆனால் பள்ளிக்கூட நூலகத்திலிருந்து எடுத்துப் படித்த புத்தகங்கள் பாடத்தை மீறியவை. வ.ரா.வின் ‘முஸ்த·பா கெமால் பாஷா, தமிழ் நாட்டுப் பெரியார்கள், சுபாஷ் சந்திர போஸின், ‘இளைஞனின் கனவு’ (மூல நூலின் பெயர் தெரியாது), நேருவின் ‘அரசியல் நிர்ணய சபை’ சொற்பொழிவுத் தொகுப்பு, பின் மேலக் காவேரிக்கு அடுத்த கொட்டையூரில் இருந்த நண்பனிடமிருந்து அவன் வீடு சென்று வாங்கி வந்த ஹிடலரின் ‘எனது போராட்டம்’ கோலாலம்பூரில் பிரசுரமானது, இப்படி. ஆனாலும், புத்தகத்தைப் படிக்காமலேயே சரித்திரத்தில் நல்ல மார்க் எடுத்திருந்தேன். நடுக்கிணற்றில் விழாமல் தடுப்புச் சுவற்றில் கால் வைத்துப் பிழைத்தது ஆங்கிலத்தில் தான். போகட்டும். அதுவல்ல விஷயம். சுந்தரம் பிள்ளை எனக்கு மகானாகத் தோற்றம் அளித்த காரணம் பிழைப்புக்கான வாத்தியார் என்பதை மீறி மிக உயர்ந்த மனிதர் என்ற நினைப்பு எனக்கு. மற்றவர்கள் எல்லாம் நல்ல மனிதர்கள் அவ்வளவே. தமிழ் வாத்தியாரைத் தவிர.

இப்படித்தான் மாணவர்களான எங்கள் பிரக்ஞையும் மதிப்புகளும் இருந்தன. கதர் உடுத்தியவர்கள், காந்தி குல்லா வைத்தவர்கள் எல்லாம், தெரிந்தவர் தெரியாதவர், தெருவில் நடப்பவர் எல்லாம் எங்கள் கண்களுக்கு சாதாரண மனிதர்கள் இல்லை. தேவ புருஷர்கள். எங்களை ரக்ஷ¢க்க வந்தவர்கள். தூர நின்று அவர்களைப் பார்த்து பிரமித்து நிற்கலாம்.

எனக்கு வயது அப்போது பதினான்கு. மதுரையில் படித்துக் கொண்டிருந்தேன். சேதுபதி ஹைஸ்கூலில். பாரதி அங்கு கொஞ்ச காலம் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாராமே. அந்த பள்ளியில். சொன்னார்கள். பள்ளியின் பின் பக்கம் நாட்டு ஓடு வேய்ந்த ஒரு கூடாரத்தில் தான் என் வகுப்பு. வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது பாரதி அந்த இடத்தில் கற்பனை செய்து கொள்வேன். இப்படித்தானா அவரும் பாடம் நடத்தியிருப்பார் என்று யோசித்துக் கொண்டு. என்.எம்.ஆர். சுப்பராமன் மதுரையின் காங்கிரஸ் தலைவர். அவர் எங்கள் பள்ளிக்கு வந்து பேசினார். 1942-ம் வருடம் சேதுபதி ஹைஸ்கூல் முன் மாணவர் ஆர்ப்பாட்டம் நடந்ததாகச் சொன்னார்கள்.

ஒரு நாள் வைகைக்கு அந்தக் கரையில் தல்லாகுளம் தமுக்கம் மைதானத்தில் கூட்டம் நடக்கும், அருணா ஆஸ·ப் அலி வந்து பேசப்போகிறார் என்று சொன்னார்கள். அன்று முத்துராமலிங்கத் தேவரும் அந்தக் கூட்டத்தில் பேசுவார் என்று செய்தி. அருணா ஆச·ப் அலி எனக்கு ஒரு ஜான்ஸி ராணீயாகத் தோற்றம் அளித்தவர், அன்னாட்களில் என்பதையும் சேர்த்துச் சொல்லவேண்டும். காங்கிரஸில் இருந்தவரில்லை. ஜெயபிரகாஷ் நாராயணனின் சோஷலிஸ்ட் பார்டியைச் சேர்ந்தவர். அவரும் ஜெயபிரகாஷ் நாராயணனும் ஹஸாரிபாக் ஜெயிலிலிருந்து சுவர் ஏறித் தப்பி ஓடியவர்கள். நாடு முழுதும் போலிஸ் தேடிக்கொண்டிருந்தனர். அவர்கள் பிடிபடவில்லை. கடைசியில் மகாத்மா காந்தி சரணடையச் சொன்னதன் பேரில் அவர்கள் தாமாகவே போலீஸிடம் சரணடைந்ததாகப் படித்திருந்தேன். கட்சியை மீறிய செல்வாக்கு காந்திக்கு இருந்தது. தல்லாகுளம் தமுக்கம் மைதானத்தில் பெருந்திரளாக மக்கள் கூடியிருந்தனர். அவர்களில் எத்தனை பேருக்கு அருணா ஆஸ·ப் அலியைத் தெரியும் என்பது சந்தேகமே. ஒரு வேளை முத்துராமலிங்கத் தேவரும் வருவதாக இருந்ததே, அவருக்காகக் கூடிய கூட்டமாக இருக்கலாம். தேவர் இல்லை மேடையில். ‘வந்துருவாருங்க, பாருங்க எப்படியாச்சும் வந்துருவார்” என்ற பேச்சுத் தான் கூட்டத்தில் கேட்டது. அருணா ஆஸ·ப் அலி பேசியது ஹிந்தியில். யாரோ தமிழில் மொழிபெயர்த்தார்கள். அவர் என்ன பேசினார், மொழிபெயர்த்தவர் என்ன சொன்னார் என்பதை யார் கேட்டார்கள். எனக்கு நினைவில் இல்லை. தேவரும் வரவில்லை. லேசாக ஆரம்பித்த தூறல் வலுப்பது போல் பட்டது. கூட்டல் கலையத் தொடங்கியது. அப்போது தான் அருணா ஆஸப் அலி கலையும் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார். “நாட்டின் சுதந்திரத்திற்காக் போலீஸிடம் தடியடி பெற்றோம். சிறைச் சாலை சென்றோம். எங்களில் எத்தனை குடும்பங்கள் தவிக்கின்றன. ஆனால் நீங்கள் இந்தத் தூறலைக் கண்டு ஓடுவீர்களா? பின் எப்படி சுதந்திரம் கிடைக்கும்?” என்று சொல்ல, அதை மொழிபெயர்த்தவர் தமிழில் சொல்ல, கலைந்து கொண்டிருந்த கூட்டம் நின்றது. அந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு சினிமா நடிகர், நடிகைகள் யாரும் வரவில்லை. தலைவர்களின் அடுக்கு மொழிச் சொற்பொழிவையும் அவர்கள் கேட்கவில்லை. ஏதோ மொழியில் பேசியதை தமிழில் யாரோ மொழிபெயர்க்கக் கேட்டிருந்தவர்கள் அவர்கள். அவர்களை உசுப்பிவிட சுதந்திரம் பற்றிய பேச்சு போதுமானதாக இருந்தது.

அதற்கு சில வருடங்கள் முன் மதுரைக்குப் போகும் மகாத்மா காந்தியை கொடை ரோடு ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி காந்தியைப் பார்க்கலாம் என்று நிலக்கோட்டை மட்டுமல்ல, சுற்று வட்டார பட்டி தொட்டிகள எல்லாம் காலியாயின. அன்று தலைவர்கள் மக்களுக்குக் கொடுத்தது ஏதும் இல்லை. ஏதோ சொல்ல முடியாத ஒரு பரவச உணர்வைத் தவிர.

இந்த நாட்களில் அறுபது வருடங்கள் கழித்து, உலகத் தமிழினத்திற்கே தலைவராக இருந்தாலும், கூட்டம் கோடிக்கணக்கில் செலவழித்துத் தான் கூட்ட முடிகிறது. ஒவ்வொரு மாவட்டம் மாவட்டமாக ஆயிரக்கணக்கில் பேருந்துகள் நெல்லைக்குத் திருப்பிவிடவேண்டியிருக்கிறது, அரசு பலத்தைக் கொண்டு பயமுறுத்தி, லைஸன்ஸ் போய்விடும் என்று பயமுறுத்தி. அன்றைய கூட்டங்களில் உண்டியல் குலுக்கிக் கொண்டிருந்த காலம் போய், இன்று ஒவ்வொரு கடையாகச் சென்று பலவந்தமாக ஆயிரக் கணக்கில் கட்டாய வசூல் நடக்கிறது. ஒவ்வொரு வட்டமும் 25 லக்ஷம், முப்பது லக்ஷம் என்று வசூல் நிர்ணயிக்கப்படுகிறது. தலைவர்களின் புகழ் பாடி ராக்ஷஸ் பேனர்கள் ஊர் முழுதும் வைக்கப்படவேண்டியிருக்கிறது. எத்தனை கோடிக்கணக்கில் வசூல் செய்திருந்தாலும், அரசு மின்சாரத்தைத் திருடித்தான் ஊர் முழுக்க மாநாட்டுப் பந்தல் முழுக்க வண்ணமயமாக்க முடிகிறது. இலவச பஸ் வசதி, விருந்துச் சாப்பாடு, எல்லாம் கொடுத்தால் தான் மாநாட்டுப் பந்தலை நிரப்பமுடிகிறது. அதுவும் ஒவ்வொரு வட்டத்திற்கும் எவ்வளவு பத்தாயிரக்க்கணக்கில் ஆட்களை அழைத்து வரவேண்டும், எவ்வளவு வசூல் செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துத் தான் முடிசூட்டு விழாவை வெற்றிகரமாகக் கொண்டாடியதாக பெருமை பேசிக்கொள்ள முடிகிறது. இவ்வளவும் செய்து நிர்பந்தித்து வரவழைத்த கூட்டத்தைக் காட்டி தங்கள் கட்சியின் பலத்தைக் காட்டவேண்டியிருக்கிறது.

எழுபதுகளில் எம்.ஜி.ஆர். தேர்தலுக்கு நின்ற சமயம். நான் விடுமுறையில் கும்பகோணத்தில் இருந்தேன். என் கடைசித் தம்பி அப்போது எம்.ஜி.ஆர். பக்தன். எம்.ஜி.ஆர். ஊர் ஊராகத் தேர்தல் பிரசாரம் செய்துகொண்டிருந்தவர் வழியில் கும்பகோணத்திற்கும் வருவார், மாலை ஆறு மணி அளவில் என்று அவனுக்கு யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவன் வீட்டை விட்டு நாலு மணிக்கே சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டான். இரண்டு மணிநேரமாவது முன்னால் போனால்தானே இடம் பிடிக்கலாம். எம்.ஜி.ஆர். ஒன்றும் குறித்த நேரத்திற்கு வரப்போவதில்லை. ஒரு மணி இரண்டு மணி நேரம் தாமதமாகலாம். பின் கூட்டம் கலைந்து அவன் வர ஒன்பது மணியாகலாம் என்று நினைத்துக் காத்திருந்தோம். அன்று இரவு பூராவும் அவன் திரும்பவில்லை. மறு நாள் காலை ஏழு மணிக்குத் தான் அவன் வீடு திரும்பினான். வீட்டில் அம்மா அப்பாவிடம் வசையெல்லாம் கேட்டு முடிந்த பிறகு, அவனை விசாரித்ததில், எம்.ஜி. ஆருக்காக இரவு முழுதும் அந்தக் கூட்டம் காத்திருந்ததாம். இதோ வந்துட்டார், இதோ வந்துட்டார் என்று. கடைசியில் அவர் வந்தது காலை ஆறு மணிக்குத்தானாம். ஆக, எம்.ஜி.ஆர். தரிசனம் முடிந்த பிறகு தான் கூட்டம் கலைந்தது. அவனும் திரும்பியிருக்கிறான். ஆக, நடிகன் என்றும், மலயாளி என்றும், கட்சி இல்லையெனில் எம்.ஜி.ஆர். ஒன்றுமே இல்லை, அவருக்கு என்ன அரசியல் தெரியும்? என்று தூற்றப்பட்ட எம்.ஜி.ஆருக்காகத்தான் ஒரு கூட்டம் அவர் தேர்தல் பிரசாரத்தில் போகும் வழியில் பார்க்கத்தான், மாலை நான்கு மணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணி வரை காத்திருந்திருக்கிறது. இன்று தமிழினத்தலைவர் பேச்சைக் கேட்க ஆள் சேர்க்க வேண்டியிருக்கிறது. பயணச் செலவு, பிரியாணிச் செலவு, எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. 40 வருட கட்சி என்ற ராக்ஷஸ யந்திரத்தை முடக்கிவிடப்பட வேண்டியிருக்கிறது. இப்படிக் கூட்டம் சேர்த்துத்தான் தன் தமிழினத் தலைமைப் பெருமையை நிரூபிக்கவேண்டியிருக்கிறது. சிறையில் இருந்தவாறே, பெரிய பெரிய பணக்கார, செல்வாக்கு மிகுந்த தலைகளையெல்லாம் தோற்கடித்து, பி. ராமமூர்த்தி தேர்தலில் ஜெய்க்க முடிந்திருக்கிறது. ஒரு தேர்தல் கூட்டத்தில் அவர் பேசியவரில்லை. தொழிலாளர்கள் அவரை ஜெயிக்க வைத்தனர். அவர்களுக்கு ஒரு இட்லி கூட அவர் வாங்கிக் கொடுக்கவில்லை.

தேர்தலில் வெற்றி பெற, இலவச கலர் டிவி தாரேன், இலவச வீட்டு மனை தாரேன், இலவசமா 2 ஏக்கர் நிலம் தாரேன், இலவச காஸ் அடுப்பு தாரேன். வேட்டி தாரேன், சேலை தாரேன் என்று சட்டத்தை மீறி ஆக்கிரமிச்சிருக்கியா, அதுவும் உனக்குச் சொந்தம்னு பட்டா தாரேன். என்று என்னென்ன தாரேன், தாரேன் என்று கெஞ்ச வேண்டியிருக்கிறது தேர்தலில் ஓட்டுப் பெற. ‘கூவம் மணக்க வைப்போம்’ என்று சூளுரைத்து வருடங்கள் 40 ஆகின்றன. சத்ய சாயி பாபாவிடம் துது அனுப்ப வேண்டியிருக்கிறது, கூவம் சாக்கடையைச் சுத்தம் செய்ய பணம் கேட்டு. ஒரு அரசு தன் நித்தம் வசைபாடும் (பண்டாரங்கள், பரதேசிகள்) ஒருவரிடம் தான் தஞ்சம் அடைய வேண்டியிருக்கிறது. மோதிரம் கொடுதார், விபூதி கொடுத்தார், எங்க வூட்டுக்கு வந்தார் என்று பகுத்தறிவை மறந்து பெருமை பேசவேண்டியிருக்கிறது. கூவத்தின் ஆக்கீரமிப்பை அகற்றினால் தான் எதுவும் செய்யமுடியும் என்று சாயி பாபா சொல்ல இன்னமும் கூவம் சாக்கடையாகத்தான் இருக்கிறது. ஆக்கிரமிப்பை அகற்றுவது எப்படி? ஓட்டு என்னாவது? ஆக்கிரமிப்பு சட்டம் மீறிய செயல் என்று நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பத்து வருஷம் ஆயிருந்தால் அது உனக்குத் தான், இந்த பட்டா, இனி ஐந்து வருஷம் ஆக்கிரமிப்பு இருந்தாலே போதும், பட்டா கொடுப்போம், என்று ஒரு ஆக்கிரமிப்பை நியாயப் படுத்துவதுமட்டுமல்லாமல், இது எதிர்கால ஆக்கிரமிப்புக்கும் வழி செய்து கொடுப்பதாக இருக்கிறது. இதை அரசு என்று எப்படிச் சொல்ல முடியும்?

ஈ.வே.ராவோ அண்ணாவோ காமராஜோ இந்தமாதிரி கூட்டம் சேர்த்ததில்லை. அவர்களைக் கேட்க மக்கள் குழுமினர். அவர்களுக்கு மக்களுக்குச் சொல்ல ஏதோ இருந்தது. மக்களைத் தம் வழிப்படுத்த அவர்கள் முயன்றனர். மக்களுக்கு இலவசங்களை அள்ளிக்கொடுத்து வோட்டு சேகரிக்கவில்லை. இது எப்போ ஆரம்பித்தது என்று தெரியவில்லை. எமெர்ஜென்ஸியின் போது நான் தில்லியில் இருந்தேன். அப்போது இந்திரா காந்திக்கு மக்கள் தன்னைத் தான் ஆதரிக்கிறார்கள் என்று காட்ட வேண்டியிருந்தது. தினம் தினம் அவர் வீட்டின் முன் ஒரு கூட்டம் குழுமும். ஏழு மணிக்கு இந்திரா காந்தி வெளியே வருவார். வந்து அவர்களுக்கு ஒரு பிரசங்கம் நிகழ்த்துவார். ” நான் சொல்கிறேன். ஏழ்மையை ஒழிக்கவேண்டும் என்று. இவர்கள் ( ஸ்தாபன காங்கிரஸ் காரர்கள்) சொல்கிறார்கள்; இந்திராவை ஒழி” என்று. உடனே கூட்டம் கோஷம் எழுப்பும். “இந்திரா காந்தி, நீ போராடு. நாங்கள் உனக்குத் துணை இருக்கிறோம்” மறு நாள் பத்திரிகைகளில், ரேடியோவில் இது தலைப்புச் செய்தியாகும். இந்த ஒத்திகை செய்த நாடகம் வெகு நாட்கள் தொடர்ந்து நடந்தது. இந்தக் கூட்டத்தை பன்ஸிலால், ஹரியான முதல் மந்திரியாக இருந்தவர், தினம் நாலைந்து லாரிகளில் ஆள் சேர்த்து அனுப்பி வைப்பார். அவர்களுக்கு அரசு உடமையில் இருந்த மாடர்ன் பேக்கரியிலிருந்து ரொட்டியும் டீயும் கொடுத்து விடுவார்கள். அன்று அங்கு இரண்டு மூன்று லாரிகள், ரொட்டி டீயோடு கதை முடிந்தது. இந்தியா முழுதுமே இந்திராவின் பின்னால் தான் இருக்கிறது என்று ஸ்தாபித்தாயிற்று. இன்று அதே நாடகம் அதிகச் செலவோடு, 6000 பேருந்துகள், கோடிக்கணக்கில் செலவு, இலவசங்கள் என்ணற்றவை என்று செலவழிக்கவேண்டியிருக்கிறது, தன் கட்சியின் தன் தலைமையின் செல்வாக்கை நிரூபிக்க.

மதிப்புகள் மாறிவிட்டன. மாறி விட்டன என்று சொல்வதை விட தலைகீழாகிவிட்டன என்று தான். சொல்ல வேண்டும். இன்று எந்த கூட்டமானாலும், விழாவானாலும், இடை விடாது, மணிக்கணக்கில் முதல்வரின் புகழ் பாடாத கூட்டமோ விழாவோ கிடையாது. சில வருடங்களுக்கு முன் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது புகழ்பாடிய அதே சினிமாக் கூட்டம், அதே புகழ் மாலையை, இன்றைய முதல்வருக்கும் பாடுகின்றன. இரண்டையும் இரண்டு தொலைக்காட்சியில் பார்க்கும் சௌபாக்கியம் தமிழர்களுக்கேதான் கிடைக்கும். அன்று ‘வெறும் காக்கா கூட்டம்’ என்று கேலி செய்த (அது உண்மைதான், காக்கா கூட்டம் தான்), இன்று அதே கூட்டம் அதே புகழ் மாலையை ரசித்து முகம் பூரிக்கக் மணிக்கணக்கில் கேட்கிறார் என்றால் என்ன சொல்வது. மிகுந்த சாதுர்யபுத்தி கொண்டவருக்கு இதுவும் காக்காக் கூட்டம் என்று ஏன் இப்போது தெரியவில்லை. இது தன் பதவிக்குப் பாடும் பாட்டு, தனக்கல்ல என்று ஏன் தெரியவில்லை? இதை எப்படி ரசிக்க முடிகிறது. இதையே நான் வேறு ஒரு இடத்தில் வைத்துப் பார்த்துக் கொள்கிறேன். அவர் இருக்கும் மேடையில் யாரும் காமராஜை இப்படிப் புகழ்ந்து பேச ஆரம்பித்தால், பேசிய முதல் சில வரிகளுக்குள்ளேயே, பேசும் முதல் ஆளையே, “போதும்ணேன், இதெல்லாம் வேண்டாம்ணேன். உடனே இறங்குயா கீழே” என்று மேடையிலேயே அந்த புகழ் பாடியை விரட்டியடித்திருப்பார். ஏன். மூப்பனார் மேடையில் கூட நான் இதைப் பார்த்திருக்கிறேன்.

அது ஒரு கலாச்சாரம். அது ஒரு வாழ்க்கை மதிப்பு. அது ஒரு வாழ்க்கை வாழும் ஒழுங்கு. காலங்கள் மாறிவிட்டன. நான் சொல்லும் காலம் பலருக்கு பார்த்த கேட்ட நினைவுகள் கூட இராது. எம்.டி. ராமநாதனிடம் மந்திர ஸ்தாயி, விளம்ப கால சங்கீதம் ஒரு காலகட்ட மதிப்பைக் கலாச்சாரத்தைச் சேர்ந்தது. “ரெண்டக்கா, ரெண்டக்கா, … அண்டங்காக்க கொண்டைக்காரி, அச்சு வெல்ல தொண்டைக்காரி, ரெண்டக்க, ரெண்டக்க” என்பதையும் பாட்டு அதுவும் சங்கீதம் தான், நடனம் தான், இது தமிழனுக்கே உரிய 2000 வருட பாரம்பரியம் என்று சொல்லி ரசிக்கும் காலகட்டமும், அது சார்ந்த மதிப்புகளும் கலாச்சாரமும் வேறு. எதுவும் சொல்லிப் பயனில்லை.

அன்று கான் அப்துல் க·பார் கானைப் பார்க்க வேண்டும் என்று ராம் லீலா மைதானத்திற்கும், முஜீபுர் ரஹ்மானைப் பார்க்க வேண்டும் என்று தில்லிக் குளிரில் அதிகாலையில் பாலம் விமான நிலையத்திற்கும் ஓடிய காலம் இருந்தது. இப்போது எந்த அரசியல் வாதிக்கும் அரசியலுக்கும் குறைந்த பட்ச மரியாதை கூடத் தரத் தோன்றுவதில்லை.

சுதந்திர தினங்களும், குடியரசு தினங்களும் வந்து போகின்றன தான்.


வெங்கட் சாமிநாதன்/21.1.08

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்