பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டியத்தின் தோல்வியா?

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

தமிழ்மணி


1929இல் அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சியடைந்தது. அது கிரேட் டிப்ப்ரஷன் என்று அழைக்கப்படுகிறது. 1921இல் பங்கு சந்தை எண் டோ ஜோன்ஸ் 40ஆக இருந்து 1929இல் 600ஆக உயர்ந்திருந்தது. பங்கு சந்தை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லோரும் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தார்கள். சொந்த வீட்டை விற்றும், அடமானம் வைத்தும் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தார்கள். அது வீழ்ச்சியடைந்ததும் எல்லா கம்யூனிஸ்டுகளும் இது முதலீட்டிய பொருளாதாரத்தின் வீழ்ச்சி என்று கூறினார்கள்.

கீழ்க்கண்ட கட்டுரையில் 1987இல் அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியை பற்றி மார்க்ஸிஸ்டுகள் எழுதிய கட்டுரையிலும் இதே வார்த்தைகள் எதிரொலித்திருப்பதை காணலாம். இதில் எங்கல்ஸ் “தீர்க்கதரிசியாக” பங்குச்சந்தையின் துணை வியாபாரமே காலனியாதிக்கம் என்று திருவாய் மலர்ந்ததும் இங்கே மேற்கோள் காட்டப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

http://www.workersworld.net/pdf/Marcy_on_Wall_Street_crash_w_intro.pdf

பங்குச் சந்தை விழும்போதெல்லாம், கம்யூனிஸ்டுகள் தங்கள் பிரச்சாரத்தை முடுக்கி விடுவதும், எல்லோருடைய சொத்துக்களையும் நாங்கள் நடத்தபோகிற அரசாங்கத்திடம் கொடுங்கள். நாங்கள் நன்றாக இருப்போம். நீங்கள் அடிமைகளாக இருக்கலாம் என்று சொல்லுவதும் தொடர்ந்து நட்ந்து வந்திருக்கிறது.

எல்லா தொழிலுக்குள்ளும் வரும் ஏமாற்றுபேர்வழிகளை கண்டுபிடிக்க போலீஸும் அரசாங்கமும் இருப்பது போல பங்கு சந்தை ஏமாற்று பேர்வழிகளை கண்டுபிடிக்கவும், தண்டிக்கவும் அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. எஸ்.ஈ.ஸி என்ற அமைப்பு அப்போது உருவாக்கப்பட்டதுதான்.

1930களுக்கு பிறகு அமெரிக்காவில் நிதி நிறுவனங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டன. எஸ்.ஈ.ஸி என்ற பங்கு சந்தை மேற்பார்வை அமைப்பு உருவாக்கப்பட்டது.

தற்போது இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ந்ததும், ஒரு சில இடங்களில் இடதுசாரிகள் தங்களது வழக்கமான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். ஏழைகளின் சேமிப்பு பணம் பல்லாயிரம் கோடி பங்கு சந்தை வீழ்ச்சியில் காணாமல் போய்விட்டது என்றும் எழுதுகின்றனர்.

பல்லாயிரம் கோடி இழப்பு என்று பத்திரிக்கைகளும் எழுதுகின்றன. அது உண்மைதான். ஆனால், அது ஓரளவுக்கு பொய்யும் கூட.

அன்றைக்கு உச்ச நிலையில் இருக்கும் பங்கை எல்லோரும் வாங்கி அன்றைக்கே விற்றிருந்தால் மட்டுமே அத்தனை பல்லாயிரம் கோடி இழப்பு என்பது உண்மை.

ஆனால், யாருமே அப்படி வாங்கி விற்பதில்லை. பெரும்பாலானவர்கள் ஒரு வருடத்துக்கு முன்னரோ, அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னரோ வாங்கி பங்கு தற்போது விலை இறங்கியிருப்பதை பார்க்கிறார்கள்.

அந்த பங்கு 10 ரூபாயில் வாங்கி இன்று 1000 ரூபாயில் இருக்கும் (உதாரணம் இன்போஸிஸ் பங்குகள்) அது இன்று 900 ரூபாயாக இறங்கும். இந்த 100 ரூபாய் இழப்பு ஒரு பங்கில். ஒரு கோடி பங்குகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். எவ்வளவு இழப்பு? 100 கோடி ரூபாய்.
இதுவே எல்லா பங்குகளிலும் நடக்கிறது. இதே போல 100 பங்குகளில் இறங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். எவ்வளவு மொத்தம் இழப்பு? 10000 கோடி ரூபாய்.

பார்க்க பெரிய எண். உண்மையில் 10 ரூபாய்க்கு வாங்கிய பங்கு 1000 ரூபாய்க்கு போய் பின்னர் 900 ரூபாய்க்கு வந்ததுதான் இந்த எண்.

இந்த பங்கை வாங்கியவருக்கு என்ன இழப்பு? ஒன்றுமே இல்லை! அவர் 10 ரூபாய்க்கு வாங்கிய பங்கை 900 ரூபாய்க்கு கொண்டு வந்திருக்கிறார். இது லாபமா அல்லது நஷ்டமா?

எல்லா தொழில்களிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதுதான் பொருளாதாரத்தை முன்னேற்றுகிறது.

உதாரணமாக கம்ப்யூட்டரை எடுத்துக்கொள்வோம். ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர் கம்பெனிகள் வந்தன. ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர் மென்பொருள் கம்பெனிகள் வந்தன. அதில் பல்லாயிரக்கணக்கான கம்பெனிகள் மூடப்பட்டன. பல நின்றன. முந்தைய கம்பெனிகளில் வேலை செய்தவர்கள் வேலை இழந்தனர். அவர்கள் பல்வேறு புதிய வேலைகளில் ஈடுபட்டனர். புதிய கம்பெனிகளை உருவாக்கினர். அதில் பல கம்பெனிகள் நின்றன. பல கம்பெனிகள் மூடப்பட்டன. இது ஒரு தொடரும் முறை.

இதனால்தான், கோடிக்கணக்கான டாலர் செலவில் கட்டப்பட்ட முதலாவது கம்ப்யூட்டரை விட பல கோடி மடங்கு வலிமையான ஒரு கம்ப்யூட்டரை இன்று 200 டாலருக்கு வாங்க முடிகிறது.

இதுவே மனித சமூகம் முதன்முதலில் சக்கரம் செய்ததிலிருந்து, நெருப்பு உருவாக்கியதிலிருந்து தன்னுடைய தேவைக்கு அதிகமான பொருளை மற்றொரு பொருளுக்கு வியாபாரம் செய்ததிலிருந்து நடந்து வந்திருக்கிறது. இதுவே மனித சமூகத்தை முன்னேற்றியிருக்கிறது.

இந்த பொருளாதார சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் இல்லாத எந்த சர்வாதிகார சமூகமும் தேங்கிய குட்டையாகி நசிந்து மடிந்திருக்கிறது.


பங்கு சந்தை என்பதை பற்றி ரவி பாத்ரா என்ற பொருளாதார் நிபுணர் ஒரு நல்ல புத்தகம் எழுதியிருக்கிறார். பங்கு சந்தை என்பது எப்போதுமே மேலே போய்க்கொண்டே இருக்காது. அதுவும் ஒரு சந்தை. அது பங்குகளின் சந்தை. பங்குகளை மக்கள் வாங்குவது விற்பதும் நடப்பதால், அதுவும் ஓரளவுக்கு காய்கறி வியாபாரம் போலத்தான். கத்தரிக்காய் வாங்குவது என்பது கூட ஒரு கலைதானே. ஒரு சிலருக்கு எந்த கத்திரிக்காய் எப்படி இருக்கும் என்பது தொட்டுப்பார்த்தாலே தெரியும். அப்பாவியாக யாரேனும் வந்தால், முத்தின கத்திரிக்காயை வாங்கி ஏமாறுவார். அல்லது யாரேனும் நல்ல உதவியாளை (இங்கே புரோக்கரை) வைத்துக்கொண்டு ஆலோசனை பெற்று வாங்கலாம்.

கத்திரிக்காயை போல, இங்கும் வெள்ளம் உண்டு. ஒரு சீசனில் கத்திரிக்காய் கிடைக்காது. விலை அதிகமாக இருக்கும். விலை அதிகமாக போகும் என்று விவசாயிகள் கத்திரிக்காய் விதைத்தனர் என்றால், அடுத்த மாதம் கத்திரிக்காய் சீப்பாய் சீரழியும். கத்திரிக்காய் சந்தை படுத்துவிடும். ஏராளமான ஏமாற்று வியாபாரிகள் வந்தால், கத்திரிக்காய் சந்தை படுக்கும்.
தவறான அல்லது போலி பொருட்களை விற்கும் வியாபாரிகளை பிடிக்க போலீசும், சட்டமும் இருக்கவேண்டும் என்பது போலவே பங்கு சந்தையில் இந்த கட்டுப்பாடுகள் சட்டங்கள் போலீஸ் ஆகியவை அனைத்தும் வேண்டும். அவை உருப்படியாக வேலையும் செய்யவேண்டும்.

கத்திரிக்காயை வாங்க யாருமில்லை, விலை குறைகிறது என்று கருதி யாரேனும் கத்திரிக்காயே கூடாது என்று சொல்வார்களா? அதுபோலத்தான் பங்கு சந்தையும். பங்கு சந்தையில் வீழ்ச்சி என்பது கரெக்ஷன். அளவுக்கு மீறி தகுதிக்கு மீறி பங்குகளின் விலை ஏறினால், அது சரி செய்து கொள்ளும் கட்டமே இப்படிப்பட்ட வீழ்ச்சிகள். அவை சரியாகவும், கட்டுப்பாடுடனும் நடக்கவேண்டும்.

மற்றொரு குற்றச்சாட்டு, அந்நிய முதலீடு என்பது இந்தியாவில் வெறும் ஸ்பெகுலேஷன் என்ற பங்குச்சந்தை சூதாட்டத்துக்கு மட்டுமே வருகிறது என்பது.

அது உண்மையல்ல. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன. அவர்களது முதலீடு வெறும் பணமாக மட்டும் வராமல், தொழில்நுட்பமாகவும், மேனேஜ்மண்ட் திறமையாகவும், கல்வியாகவும், பயிற்சியாகவும் இந்தியாவுக்குள் வந்திருக்கிறது.

கோக் பெப்ஸி மட்டுமல்ல, கம்ப்யூட்ட சிப் தயாரிக்கும் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் பல வருடங்களுக்கு முன்னரே பெங்களூர் வந்துவிட்டது. இண்டல், ஏஎம்டி ஆகியவை, போர்டு போன்ற கார் கம்பெனிகள், விவசாய உற்பத்தி பொருட்களை வெகுகாலம் சேமித்து வைக்கும் கேன்னிங் தொழில்நுட்பம் போன்றவை எல்லாம் வந்திருக்கின்றன. இந்தியா உலகத்தின் உற்பத்தி ஸ்தானம் என்ற நிலையை வெகு விரைவில் அடையும். சீனாவை விட இந்தியாவில் இருக்கும் சட்டரீதியான பாதுகாப்பு (சீனாவில் கமிஷன், லஞ்சம்மட்டுமே. சட்டரீதியான பாதுகாப்பு இல்லை) நீண்டகால முதலீட்டுக்கு நல்லது என்று பல அறிக்கைகள் கூறியுள்ளன.

இந்த முதலீடுகளின் தேவை ஏன் வந்தது?

இந்தியாவில் சோசலிஸ்டுகளின் ஆட்சியில் எல்லா தொழில்முனைப்பும் நிறுத்தப்பட்டது. தனியே தொழில் துவங்க வேண்டுமென்றாலோ, சைக்கிள் உற்பத்தி செய்யவேண்டுமென்றாலும் டெல்லிக்கு படையெடுத்து சோசலிஸ்டு அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்கவேண்டும்.

அரசாங்கமே நடத்தும் தொழில்களுக்கு போட்டி கிடையாது. போட்டி போட தனியார் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அறிவியல் துறை அரசாங்கமயமாக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டது.

இதெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால், இந்தியாவில் உண்மையான் முதலீட்டிய பொருளாதாரம் இருந்திருந்தால், நமது முதலீட்டை மற்ற நாடுகள் எதிர்பார்த்திருக்கும்.. இல்லையா?


முதலாளித்துவம் என்ற வார்த்தையை விட முதலீட்டியம் என்ற வார்த்தை சரியானது என்று கருதுகிறேன். அடுத்தது, முதலீட்டியம் என்ற வார்த்தையை விட சுதந்திர வியாபாரம் (Free trade) என்ற வார்த்தை இன்னமும் சரியானது என்றே கருதுகிறேன்.

2005இல் பங்குச்சந்தை வீழ்ச்சியை பற்றி கே ஜெ ரமேஷ் எழுதிய கட்டுரை


http://www.thinnai.com/?module=displaystory&story_id=20510213&format=html

Series Navigation

தமிழ்மணி

தமிழ்மணி