ராக்போர்ட் சிட்டி ஆகஸ்ட் 14

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

அப்துல் கையூம்


ஓடிக் களைச்சுப் போயி, “புஸ்”ஸுன்னு பெருமூச்சு விட்டு, நுரை தள்ளியபடி வந்து நின்னுச்சு நான் வந்த ரயிலு. திருச்சி ஜங்ஷனுலே காலடி எடுத்து வச்சதுமே விவரிக்க முடியாத ஒரு குஷி. திருச்சின்னு சொன்னாலே எனக்கோர் ஈர்ப்பு. ஒரு பந்தபாசம். என் தாய் பிறந்த ஊர். அதனாலோ என்னவோ. வெளிநாட்டுலே திருச்சிக்காரங்களை கண்டா ஓடிப் போயி கட்டிப் புடிச்சுக்கலாமேன்னு தோணும். ஏன்னு கேட்டா சொல்லத் தெரியாது.

“சரியான கந்தக பூமி. அதப்போயி புடிச்சிருக்குன்னு சொல்லுறியே?. கிறுக்குப் பயடா நீ ?” திருச்சியோட மகிமை தெரியாதவங்கதான் இப்படி நாக்கிலே நரம்பிலாம பேசுவாங்க.

இந்த முறை இந்தியா வந்ததுக்கு ஒரு இனிமையான அனுபவம். அலுமினி அஸோசியேஷனிலேந்து வந்த அழைப்பிதழை ஒருதரம் பாசத்தோட பார்த்துக்கிட்டேன். நாளைக்குத்தான் அந்த நிகழ்ச்சி. ஓல்ட் பாய்ஸ் எல்லாரும் ஒண்ணு கூடி அவங்களோட மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொள்ள போறாங்க.

இன்னிக்கி ஒரு நாள் ஊர் பூரா ரவுண்ட் அடிச்சு பழைய பசுமையான நினைவுகளை மறுபடியும் ரீசார்ஜ் செய்ய முடிவு பண்ணினேன்.

காவிரி தியேட்டர் மேம்பாலத்து மேலே போவும்போது ஆட்டோக்காரரு பெருமையா சொன்னாரு “அதோ பாத்தீங்களா சார்! அந்த மொட்டை மாடியிலேதான் காக்காவுக்கு சாதம் வக்கிற மாதிரி மலைக்கோட்டை படத்துக்கு ஷூட்டிங் எடுத்தாங்க. காக்கா லேசுலே வர மாட்டேன்னுடுச்சு. (அதுக்கு எவ்ளோ வேலையோ?) இந்த ரோடு பூரா ப்ளாக் பண்ணிட்டாங்க”. சொல்லும்போதே அவரு முகத்துலே ஒரு பரவசம். படம் ரிலீசான அன்னிக்கி ஸ்கிரீன்லே பூவை வாரி இறைச்சிருப்பாருன்னு தோணுது.

திருச்சிகாரங்களுக்கு பிரதான பொழுது போக்குன்னு சொன்னா, அது தியேட்டருலே போயி படம் பாக்குறதுதாங்க. இதே பாணியை மத்த ஊருக்காரங்களும் கடைப்பிடிச்சாங்கன்னா திருட்டு வி.சி.டி. அறவே ஒழிஞ்சுடும்.

சென்னைவாசிகளாவது போரடிச்சா பீச்சுக்குப் போயி சுண்டல் வாங்கிச் சாப்பிடுவாங்க. பாவம் இவுங்க எந்த சமுத்திரத்துக்கு போவாங்க? சொல்லுங்க.

அவுங்க ‘தலை’யோட படம் ரிலிஸாகுற அன்னிக்கி கட்-அவுட்டுக்கு போடுற மாலையை கிளிட்டன் பேண்டு வாத்தியத்தோட ஊர்வலமா ஊரையே ஒரு ரவுண்டு வந்து பெருசா அலம்பல் பண்ணிடுவாங்க. அவ்ளோ பெரிய மாலையை எல்லாத்துக்கும் காட்டலேன்னா ஊர்க்காரங்க கோவிச்சிக்கிடலாம் இல்லியா? குஷ்புவுக்கே கோவில் கட்டுனவங்கன்னு சொன்னா சும்மாவா?

சினிமாவுலே மெட்ராஸை காட்டணும்னா எல்.ஐ.ஸி.யை க்ளோசப்புலே காட்டுவாங்க. திருச்சின்னு சொன்னா மலைக்கோட்டையை Zoom போடுவாங்க. ரசிகர்களும் சூசகமா “ஓஹோ! இது திருச்சியிலே நடக்குற கதை”- ன்னு பக்குவமா புரிஞ்சிக்கிடுவாங்க. (கோவையை காட்டனும்னாதான் பாவம் டைரக்டரு திண்டாடிப் போயிடுவாரு)

ஆட்டோவிலே உக்காந்தபடி திருச்சியோட மாற்றத்தை கவனிச்சிக்கிட்டே வந்தேன். சீனப் பெருஞ்சுவர் மாதிரி வருஷக்கணக்கா கட்டுன சில மேம்பாலங்களோட வேலை முடிஞ்சிருக்கு. (அப்பாடா! இப்பவாவது முடிச்சாங்களே)

ஒரு காலத்துலே “ஜோஸப் காபி”-ங்குற தகர போர்டை முதுகிலே மாட்டிக்கிட்டு அந்த வெள்ளி நிற டவுன் பஸ் ஜங்ஷனுக்கும் மெயின்கார்ட் கேட்டுக்கும் இடையே ஓடிக்கிட்டு இருக்கும். இப்பவும் அதே வெள்ளி நிறம்தான். ஆனா முதுகுலே டின்னு வேற பேருல கட்டியிருந்தாங்க. அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் சர்வீசு. வேற ஊருலே இதுமாதிரி பார்க்கவே முடியாது.

புதுசு புதுசா துணிக்கடை, நகைக்கடை, சூப்பர் மார்க்கெட்டுங்க கண்ட மேனிக்கு முளைச்சிருந்துச்சு.

தேவர் ஹால் – இங்கேதான் உருது முஷாயிரா (கவியரங்கம்) முதல் சிலோன் லைலாவோட ரிக்கார்ட் டான்ஸ்வரை எல்லாமே நடக்கும். அது இப்ப ஷாப்பிங் காம்ப்ளெக்ஸா மாறியிருந்துச்சு.

ஒரு வெளிநாட்டுக்காரருக்கிட்டே “உங்க ஊரு டிராபிக், இந்த ஊரு டிராபிக். – இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?”ன்னு கேட்டாங்களாம்.

“எங்க ஊருலே வண்டி பெட்ரோல்லே ஓடுது. உங்க ஊருலே வண்டி ஹாரன்லே ஓடுது”ன்னு பதில் சொன்னாராம். அது வாஸ்தவம்தான். ஆட்டோக்காரரு ‘பாம் பாம்’ன்னு ஹாரன் அடிச்ச மேனிக்கு ஓட்டிக்கிட்டே போனாரு.

தெப்பக்குளம் போஸ்ட் ஆபிஸ்கிட்டே இறக்கி விட்டுட்டு 40 ரூவா வாங்கிக்கிட்டாரு. எனக்கு ரொம்பா நாளா ஒரு ஆசை. மத்த ஊருங்க மாதிரி இந்த ஊருலேயும் மீட்டரை பாத்து காசு கொடுக்கணும்னு. அது இந்த ஜென்மத்துலே நிறைவேறும்னு தோணலே.

போரடிச்சா பேசாம மெயின் கார்டு கேட் பக்கம் ஒரு ரவுண்டு போயிட்டு வந்தீங்கன்னா போதும். ஜாலியா டைம் பாஸ் ஆயிடும். உள்ளே பூந்ததுமே “சார் சவுதி ரியாலு இருக்கா?, டாலரு இருக்கான்னு?” கேட்டு பர்மா பஜாருகாரங்க இம்சை அரசனா மாறிடுவாங்க.

மெயின் கார்டு கேட்லே (மருத்துவர் ஐயாவின் கவனத்துக்கு : எதுக்கெதுக்கோ தமிழ்ப் பெயரு வைக்கிறாங்களே, இதுக்கு வைக்க மாட்டாங்களா?) அந்த பிளாட்பாரத்துலேதான் பார்வையில்லாத ஒருத்தரு புல்லாங்குழலை வச்சுக்கிட்டு “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே”ன்னு வாசிச்சிக்கிட்டு இருப்பாரு. டிசம்பரு மாசம் சென்னை மியூஸிக் அகாடமியிலே 500 ரூவா டிக்கட் வாங்கி புளூட் ரமணி வாசிக்கிறதை இங்கே ஓசியிலே கேட்டுட்டு போயிடலாம்.

“ஏன்யா ஞான சூன்யம்! அந்த ஆளு வாசிக்கிறதும் இந்த ஆளு வாசிக்கிறதும் ஒண்ணாய்யா?” இதப் படிச்சிட்டு நம்ம பிரண்டு வி.என்.எஸ். இப்படித்தான் திட்டப்போறாரு.

“அந்த ப்ளுட்டுலேயும் காத்துதான் வருது. இந்த ப்ளுட்டுலேயும் காத்துதான் வருது. கண்ணு தெரியாத ஒருத்தரு இவ்ளோ தத்ரூபமா வாசிக்கிறாருன்னா அத பாராட்ட வேணாமா? அட போங்க சார்”-ன்னு சொல்லி அவரை ஈஸியா சமாளிச்சுடுவேன்.

சிந்தாமணியிலே சுடச்சுட வெஜிடபிள் சமுசாவை சாப்பிட்டுட்டு, கரும்பு ஜூஸையும் குடிச்சிட்டு, வெளியே வந்ததுமே பொடிப்பசங்க அந்துருண்டை பாக்கட்டையும், கைக்குட்டையையும் வச்சிக்கிட்டு “வாங்கிங்குங்க சார்” ன்னு பின்னாடியே துரத்திக்கிட்டு வந்தானுங்க. பாரதிராஜா படத்துலே வர்ற மாதிரி கைக்குட்டையை கொடுத்து காதல் பண்ணலாம்னு பாத்தா அந்த வயசும் நமக்கு தாண்டிடுச்சு.

கொஞ்சம் இந்தாண்ட வந்ததுமே பழைய ஞாபகம் வந்துடுச்சு. தெப்பக்குளம் ஓரமா ஒரு ஐயர் கத்திரிக்கா பஜ்ஜி சுடுவாரு. அத வாங்குறதுக்கு கஸ்டமருங்க போட்டி போட்டுக்கிட்டு நிப்பாங்க. இப்ப அந்த இடத்துல வரிசையா பழ வண்டி நின்னுக்கிட்டு இருந்துச்சு.

“ஓஹோ ! அந்த ஐயாரா? இப்ப அவரு ஆண்டாள் தெருவுலே கடை போட்டிருக்கிறாரு. நேரா போயி விசாரிங்க.”

ஒவ்வொரு ஆளா விசாரிச்சிக்கிட்டு போயி கடைசியா கண்டுபிடிச்சுட்டேன். வாவ்! அதே ருசி!. டேஸ்ட் கொஞ்சங் கூட மாறவேயில்லே.

மறுபடியும் மலைக்கோட்டை ரோடுலே நடந்து வந்தப்ப அக்கம் பக்கத்து ஊருலேந்து ஜனங்க கூட்டம் கூட்டமா, ஏதோ பிக்னிக் வந்த மாதிரி சாரதாஸ் வாசல்லே நின்னுக்கிட்டு இருந்தாங்க. எவர்சில்வரு தூக்குலே புளியோதரை அல்லது எலுமிச்சப்பழ சாதம்னு நெனக்கிறேன். விசேஷத்துக்கு துணிமணி எடுக்க வந்திருக்காங்க. எல்லாம் சரி. அதுக்காக இப்படியா ஊரையே திரட்டிக்கிட்டு வர்றது? இந்த மாதிரி ஷாப்பிங் போற கலாச்சாரத்தை இங்கீலீஸ்காரன் பார்த்தா வாழ்க்கையையே வெறுத்துடுவானுங்க.

சிங்காரத்தோப்புன்னு ஒரு இடம். மாந்தோப்பு, புளியந்தோப்பு, சவுக்குத்தோப்பு மாதிரி பச்சைப் பசேல்னு ஒரு புல்வெளி, அடர்த்தியான மரங்கள், சலசலன்னு ஒரு ஓடை, குயில் கூவுற சத்தம், குளு குளுன்னு காத்து – இப்படி நீங்க ஏடா கூடமா கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது. (கீரை வடைன்னு சொன்னா கீரை இருக்குது. ஆமை வடைன்னு சொன்னா அதுல ஆமையா இருக்கு? அது மாதிரி தான் இதுவும்)

‘சூப்பர்’ங்குற வார்த்தையை அதிகமா யூஸ் பண்ணுறது என்னவோ திருச்சிகாரங்கதான். “சூப்பர் பிகர்” “சூப்பர் படம்” “சூப்பர் அயிட்டம்” இப்படி எல்லாத்துக்கும் சூப்பர் போடுவாங்க. அங்கே உள்ள ஒரு பஜாருக்கு பேரு சூப்பர் பஜாரு. அப்படி என்ன சூப்பர் சாதனம் அங்கே கிடைக்குதுன்னு கேக்குறீங்களா? வேற என்ன? ஜட்டி, பனியன், நைட்டி, இதுங்கதான். அதை தவிர மின்விசிறி, விளக்கு இதுங்க கிடைக்கும். அம்புடுதேன்.

ஒரு காலத்துலே காந்தி மார்க்கட் பக்கம் வெல்லச் சர்க்கரையை மலை மாதிரி குவிச்சு வச்சு தொழிலாளிங்க அதுலே மண்வெட்டியாலே கொத்தி அதுலேயே மூக்கையும் சிந்துவாங்க. அப்ப விட்டதுதான். அதுக்கப்புறம் வெல்லக்கட்டியை நான் டேஸ்ட் பார்க்கவேயில்லீங்க.

சவுக் பகுதியிலே பழைய புஸ்தகக் கடைங்க நெறயா இருக்கும். வாடகைக்கு எடுத்து படிக்கலாம். சொற்பக் காசுதான். கண்ணதாசனோட மனவாசம். வனவாசம் போன்ற சுயபுராணம், மு.வ.வோட கரித்துண்டு நாவல்., கல்கியோட சிவகாமியின் செல்வன் இந்த கதையெல்லாம் இப்படி படிச்சு தெரிஞ்சிக்கிட்டதுதான்.

நவாப் பள்ளிக்கு எதிரே சாயங்கால நேரத்துலே ஜாதி மத வித்தியாசம் பாக்காம பொம்பளைங்க சின்னக் குழந்தைகளை இடுப்பிலே வச்சிக்கிட்டு நிப்பாங்க. தொழுதுட்டு வர்றவங்க வேத வரிகளை ஓதி ஊதுவாங்க. மத நல்லிணக்கத்துக்கு ஒரு சின்ன சாம்பிள்தான் இது.

லேடீஸ் சமாச்சாரம் விக்கிற கடைங்க கூட அப்படியேதான் இருக்கு. ஒரே ஒரு வித்தியாசம்தானுங்க. அன்னிக்கி கருப்பு நெறத்துலே நீளமான சவுரி முடி வித்துக்கிட்டு இருத்துச்சு. இப்ப சுருள் சுருளா, கலர் கலரா சவுரிமுடி. (இதுலேந்து என்ன புரியுதுன்னா அந்த காலத்துலேந்து இந்த காலம் வரை நெறய லேடீஸ்கிட்ட ஒரு-G, நாலு-T இல்லேன்னு புரியுது)

டவுன்ஹாலுக்கு பக்கத்துலே இருக்குற மரத்துலே குருவிங்க கும்பலா உக்காந்து அரட்டையடிக்கும். இந்தாண்ட பூட்டுச்சாவி ரிப்பேரு பண்ணுறவரு உக்காந்து எதையோ நோண்டிக்கிட்டிருப்பாரு. அந்தாண்ட ஒருத்தரு திருப்பாச்சி அறுவாளை தீட்டிக்கிட்டு இருப்பாரு. அவரு இளநீ விக்கிறவரு.

முப்பது வருஷத்துக்கு முன்னாடி இந்த இடம் எப்படி இருந்துச்சோ அப்படித்தான் இப்பவும் இருக்குது. இன்னுமொரு 30 வருஷம் கழிச்சு வந்து பாத்தாலும் அப்படியேதான் இருக்கப் போவுதுங்குறது என்னோட கணிப்பு.

2

ஆகஸ்ட் 15

டோல்கேட்டை ஆட்டோ நெருங்குனதுமே மனசுக்குள்ளே ஒரு சந்தோஷம். ஒரு இளமைத் துள்ளல்.

‘ஜாலி ஜமால்’ என்று மாணவர்கள் பெருமை பட்டுக் கொள்ளும் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி – ஒரு பரவசமிக்க சரணாலயம். ஜாலியா வாழ்க்கையே அனுபவிச்சுக்கிட்டே கல்வி ஞானத்தையும் வளர்த்துக்கலாம்.

மீட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்துச்சு. ஹோட்டல் ராதாஸ்லே ஒரு கப் காபி ஆர்டர் பண்ணிட்டு பழைய ஞாபகங்களை ஒவ்வொண்ணா அசை போட்டேன்.

ஆங்கில புரொபஸர் உஸ்மானி எப்பவும் கோட் சூட் போட்டுத்தான் காலேஜுக்கு வருவாரு. “நான் ஏன் தெனக்கும் கோட் போட்டுக்கிட்டு வர்றேன்னு சொல்லுங்க பார்ப்போம்” அப்பிடின்னு கிளாஸ்லே ஒரு புதிரு போடுவாரு.

“கெளரவத்துக்காக”, “புரொபஸருன்னு தெரியறதுக்காக”, “For Good Looking”, இப்படி பசங்க ஆளாளுக்கு ஒரு கருத்துச் சொல்லுவானுங்க.

“நோ ! நோ ! யூ ஆர் ராங்”ன்னு சொல்லிட்டு கோட்டை நீக்கி காட்டுவாரு. சட்டையிலே சின்னதா ஒரு ஓட்டை இருக்கும். “ இதோ பாத்தீங்களா ஓட்டை ! இதை மறைக்கத்தான் நான் இந்த கோட் போட்டிருக்கேன்னு குட்டை போட்டு உடைப்பாரு. ஒளிவு மறைவு இல்லாத அவரோட வெகுளித்தனமான பேச்சு எனக்கு ரொம்பவும் புடிக்கும்.

தியேட்டருக்கே இதுவரை போகாம இருந்த யூசுப்சாரை, டியூஷன் பசங்க நாங்க வற்புறுத்தி ராக்ஸி தியேட்டருக்கு “புதிய வார்ப்புகள்” படம் பார்க்க கூட்டிக்கிட்டு போனப்போ “அடேங்கப்பா என்னப்பா இது? தியேட்டருலே எல்லாமே இம்மாம் பெருசா தெரியுது?”ன்னு சோடா புட்டி கண்ணாடியை தூக்கி விட்டு கமென்ட் அடிச்சது இன்னும் பசுமையா நினைவிலே இருக்கு.

நாங்க படிக்கும்போது ‘காலேஜ் டே’ அன்னிக்கி சீஃப் கெஸ்டா ஒரு கலெக்டரு வந்தாரு. அவரு ஒரு காலத்துலே ஜமால்லே படிச்சவராம். ஹாஸ்டல்லே போடுற குஸ்காவை பத்தி புகழோ புகழ்ன்னு புகழ்ந்து தள்ளுனாரு. ‘குஸ்கா’ன்னு சொன்ன தாளிச்ச நெய்ச்சோறு – கொஞ்சம் மஞ்சளா இருக்கும் அவ்ளோதான். அப்படி அதுலே என்னதான் சுகத்தை கண்டாரோ தெரியலே. இதப்போயி இந்த மனுஷன் அரைமணி நேரமா பாராட்டி பேசுறாரேன்னு நெனச்சேன்.

அந்த காலத்துலே நாங்க அடிச்ச லூட்டி ஒண்ணா ரெண்டா? பொன்மலைப் பட்டியிலே ரெண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துட்டு வந்து சைக்கிள்ளே லைட் இல்லாம போலீஸ்கிட்டே மாட்டிக்கிட்டது ஞாபகம் வந்துச்சு.

காலேஜ் பசங்க இன்சூரன்ஸ் பாலிஸி வச்சில்லேன்னாலும் அவங்களுக்குள்ளே சில பாலிஸி வச்சிருந்தாங்க. போட்டோ புடிக்கனும்னா மாடர்ன் ஸ்டுடியோ. துணி தைக்கிறதுக்கு டாம் டைலர். தம்-சாய் குடிக்கனும்னா கிராண்ட் ஹோட்டல், நான்வெஜ்ஜுக்கு ராஜா ஹோட்டல், இப்படி அவுங்களுக்குள்ளே தனித்தனி பாலிஸி.

சங்கிலியாண்டபுரம் போயி மணி கடையிலேதான் முடியை வெட்டிக்கிட்டாதான் அவனுங்களுக்கு ஆத்ம திருப்தி. நானும் ஒரு தடவை எதிர்காத்துலே கஷ்டப்பட்டு சைக்கிளை மிதிச்சிக்கிட்டு போனேன்.

லோக்கல் ஆசாமி ஒருத்தரு வாசல்லே பந்தல் போட்ட ஒரு வீட்டை காண்பிச்சு என்னோட பொது அறிவை மேம்படுத்தினாரு.

“அதோ பாத்தீங்களா! அதுதான் எம்.ஆர். ராதாவோட வீடு”.

கொஞ்ச தூரத்துலேதான் மணியோட சலூன். ‘ஸ்டெப் கட்’ ஆச்சே, படியிலே உக்காந்துக்கிட்டு வெட்டுவாரோன்னு பாத்தா அவரும் எல்லாரையும் மாதிரி சேர்லே உக்கார வச்சுத்தான் வெட்டுனாரு.

பெல்பாட்டம் அணியாதவனை செவ்வாய் கிரகத்து ஜந்துவை பாக்குற மாதிரி பசங்க கேவலமா பார்ப்பானுங்க. யாரு ரொம்ப பெரிய பெல்பாட்டம் வைக்கிறானோ அவன் முற்போக்குவாதின்னு அர்த்தம். அல்தாஃப் 40 இஞ்ச் வைத்து தைப்பான். ஒரு சின்னப் பையனை பேண்டுக்குள்ளார வச்சு தாராளமா கிட்நாப் பண்ணலாம்.

டின்னர் பெரும்பாலும் “Hotel-de-Broadway” யிலேதான். டோல்கேட்லே இருக்குற கையேந்தி பவனுக்கு நாங்க வச்ச செல்லப் பேரு அது. புரோட்டாவை சப்ளையரு அவரோட அழுக்கு கையாலே பிய்ச்சுப் போடுவாரு. பிய்ச்சுப் போடலேன்னா அதுக்கொரு சண்டை. “

“நீ அந்த ஆளுக்கு பிய்ச்சுப் போட்டியே? எனக்கு ஏன் போட மாட்டேங்குறே?”

அட வாழைப்பழ சோம்பேறிங்களா? சொந்த கையாலே புரோட்டவை பிய்க்கிறதுக்கு கூட அலுப்பு படுறானுங்களேன்னு நொந்துப் போயிடுவேன்.

பாலக்கரை பிரபாத் டாக்கீஸுக்கு முன்னாடிதான் அந்த ஜிகர்தண்டா தள்ளு வண்டி நிக்கும். ஸ்பெஷல்னு சொன்னா போதும். அந்த பாய் நைஸா குனிஞ்சு எவர்சில்வர் பாத்திரத்துலேந்து பாலாடை பாதர்த்தத்தை எடுத்து சூப்பரா கலந்து கொடுப்பாரு. உண்மையிலேயே ஈரல்குலையை குளிர்விக்கிற மாதிரி சூப்பரா இருக்கும்.

தீபாவளி வந்துடுச்சுன்னா என் பிரண்டு குணசேகரன் வாங்கோழி பிரியாணி சாப்பிடுறதுக்கு பாலக்கரை ஆறுமுகம் ஹோட்டலுக்கு ஓடிப் போயிடுவான். மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு வந்து “சூப்பரா இருந்துச்சு மச்சி” ன்னு முகத்துக்கு நேரே சூடா ஒரு கொடுமையான ஏப்பத்தை விடுவான். “ஏண்டா.. நீ சாப்பிட்டுட்டு வந்தது வாங்கோழியா? இல்லே நெருப்புக் கோழியா?” ன்னு தமாஸ் பண்ணுவேன்.

வடமாநிலத்து மாணவன் ஒருத்தன் எங்கக் கூட படிச்சிக்கிட்டு இருந்தான். அவன் பேரு அஞ்சும். வேகமாக நடந்து போய்க்கிட்டிருந்த அஞ்சுமை நிறுத்தி “ Are you fasting?”-ன்னு ஆரிப் கேட்டிருக்கான். அது ரம்ஜான் மாசமும் கிடையாது. “No, no, I am not fasting” அப்பிடின்னு சொல்லிட்டு விருட்டுனு அவன் போயிட்டான்.

“எங்கேடா வேகமா போயிக்கிட்டு இருக்கிறேன்னு கேக்குறதுக்கு என்கிட்ட I am not fasting-ன்னு பொய் சொல்றான் பாத்தியா?. இவனெல்லாம் ஒரு பிரண்டா?”

பின்னால நடந்து வந்த என்கிட்ட ஆரிப் குறை கூறினான்.

“போகட்டும் விட்டுத் தொலைடா. அவன் இங்கிலீஷ்லே கொஞ்சம் வீக். அதுக்காக நீ ஏன் பெருசா பீல் பண்ணுரே” ன்னு ஆறுதல் சொன்னதும்தான் ஆரிப் சமாதானமடைஞ்சான்.

ஆரிப்புடைய ஆங்கிலப் புலமையை பத்தி அவசியமா இங்கே குறிப்பிடணும். ஜங்ஷன் பக்கத்துலே “Hotel Ashby” ன்னு ஒரு ஹோட்டல். அதை இந்த பிரகஸ்பதி “ஹோட்டல் அஸ்ஹாபி”ன்னு இங்கிலீஷ்லே எழுத்துக் கூட்டி படிப்பாரு. ‘அஸ்ஹாபி’ன்னா நபித்தோழர்கள்ன்னு அர்த்தம். நமக்குத் தெரிஞ்சு எந்த நபித்தோழரும் இந்த ஊருலே ஹோட்டல் ஆரம்பிக்கலியேன்னு மண்டையை போட்டு உடைச்சுக்குவேன்.

ஒருதடவை ஹிந்து பத்திரிக்கையை கையிலே வச்சிக்கிட்டு “சொமெடிமஸ்” ன்னு சத்தம் போட்டு வாசிச்சான் ஆரிப். இப்படி ஒரு வார்த்தையை வாழ்க்கையிலே நாம கேள்விப்பட்டதே இல்லையேன்னு எட்டிப் பார்த்தா அது “Sometimes” –ங்குற வார்த்தை. “சாப்பாடுப் போடப்படும்”ன்னு எழுதியிருந்ததை ஒருத்தன் “சாப்பா-டுப்போ-டப்ப-டும்” ன்னு வாசிச்சானாம். அது மாதிரி ஆயிடுச்சு.

குளத்தூரார் பிரியாணி, கற்கண்டு பால், சிங்காரத்தோப்புலே மாடி மேல இருக்கிற குஜராத்தி மெஸ், ராயல் ஓட்டல் பாயா – இத எதை மறக்குறது சொல்லுங்க?

“எக்ஸ்க்யூஸ் மீ சார்”

ஒரு கப் காபி குடிச்சிட்டு இவ்ளோ நேரம் இந்த மனுஷன் டேபிளை ஆக்கிரமிச்சுக்கிட்டு உக்காந்து இருக்குறானேன்னு சப்ளையரு நெனச்சானோ என்னவோ. பில்லை வச்சிட்டு டக்குன்னு டம்ளராலே சிக்னல் காண்பிச்சான். புரிஞ்சிக்கிட்டு இடத்தை காலி செய்தேன்.

மீட்டிங் ஆரம்பிக்கிற நேரம். சாஹுல் ஹமீது சார் அடையாளம் கண்டுபிடிச்சுட்டு ‘வாங்க வாங்க’ன்னு வரவேற்றாரு. நிறைய புரபொஸர்ஸ் ரிடையர்ட் ஆகி போயிட்டாங்க. நம்மள கூப்பிட்டு மரியாதை நிமித்தமா மேடையிலே உக்கார வச்சு “இவரு வெளி நாட்டுலே இருக்காரு. புஸ்தகங்கள்ளாம் எழுதியிருக்காருன்னு” அறிமுகப் படுத்துனாங்க. விலாவிலே இறக்கை முளைச்ச மாதிரி ஒரு பீலிங்.

நம்மள விட சீனியர் ஓல்ட் பாய்ஸ் – பல்கலைக்கழக துணை வேந்தரு, ஓய்வு பெற்ற நீதிபதி, அரசியல்வாதி, பிசினஸ்மேன் எல்லாரும் மேடையிலே உக்காந்து இருந்தாங்க.
தங்களோட பழைய அனுபங்களை பகிர்ந்துக்கிட்டாங்க. மனசை நெகிழ வச்சது. அவுங்க முகத்துலே ஒரு களை. சின்னப் பசங்களா மாறியிருந்தாங்க.

நான் பேசும்போது புரொபஸர் நஞ்சுண்ட மூர்த்தியிலேந்து, யூசுப் சார், DJ வரை எல்லாத்தையும் நினைவுபடுத்தி பேசினேன்.

அலுமினி அஸோசியஷன் முடிஞ்சவுடனே சாஹுல் ஹமீது சார் சொன்னாரு.

“உங்களுக்கு ஒரு குட் நியூஸ். நீங்க குஸ்கா சாப்பிட்டுத்தான் போவணும்”.

“மவனே நீ சரியா மாட்டிக்கிட்டே!” மனசாட்சி இடையில் புகுந்து பகை மூட்டி விட்டது. அதை பொருட்படுத்தாமல் குஸ்காவை சாப்பிட ஆரம்பிச்சேன்.

ருசியென்றல் ருசி. அப்படியொரு ருசி. இதப் போயி நல்லாயில்லேன்னு சொன்னோமே? அன்னிக்கி ஓல்ட் பாய்ஸ்லே ஒருத்தரா வந்த அந்த கலெக்டர் பாராட்டி பேசுனது உண்மைதான்னு தோணுச்சு. அந்தந்த சூழ்நிலையிலேதான் அந்தந்த இனிமை நமக்கு உண்மையிலேயே புலப்படுது.

பக்கத்து மேசையிலே 50+ & 60+ ஓல்ட் பாய்ஸ் குஸ்கா, கோழி, மட்டன், சுவீட் எல்லாத்தையும் ஒரு வெட்டு வெட்டிகிட்டு இருந்தாங்க. அவங்கள்ள முக்கால்வாசி பேருக்கு ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சுகர் எல்லாமே இருக்கும்னு நெனக்கிறேன்.

இந்த நேரத்துலே அதப் பத்தி எதையும் அவுங்க கவலைப் படுற மாதிரி தெரியலே. நடையிலே ஒரு இளமை மிடுக்கு, முகத்துலே ஆனந்தம், பேச்சிலே நையாண்டி, குறும்பு – இதையெல்லாம் அவங்கக்கிட்ட பார்க்க முடிஞ்சுது.

3

இரண்டு நாட்கள் விசிட்டை முடிச்சிட்டு திருச்சியை விட்டு பிரிந்தேன். பல்லவன் எக்ஸ்பிரஸ் திருச்சி ஜங்ஷனுலேந்து சென்னையை நோக்கி புறப்பட்டுச்சு. கோட்டை ரயில்வே ஸ்டேஷனை தாண்டியதுமே மலைக்கோட்டை தெரியுதான்னு ஜன்னல்லேந்து எட்டிப் பார்த்தேன். வச்ச பார்வை தீராம அதையே பாத்துக்கிட்டு இருந்தேன்.

கூட்ட நெரிசல்லே குஞ்சம் வச்ச துருக்கி தொப்பியை அணிஞ்சிக்கிட்டு போனா எப்படி ஒருத்தரு தனியா தெரிவாரோ அந்த மாதிரி தூரத்துலேந்தும் மலைக்கோட்டை தெளிவா காட்சி தந்துச்சு.


vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்