முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

மலர் மன்னன்


ஊடகங்களின் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் விஷமப் பிரசாரம் மட்டுமின்றி விஷப் பிரசாரமே செய்யும் நபர் ஒருவர் நம்மிடையே நடமாடி வருகிறார். எதைப்பற்றியும் தயங்காமல் துணிவுடன் கேட்கும் பாவனையில் மிகவும் அநாகரிகமாகக் கேள்விகள் கேட்டுப் பெருமைப் பட்டுக் கொள்ளும் இவரது பெயர் கரண் தாப்பர்.

முன்னமேயே ஒரு தொலைக் காட்சியினருக்காக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியிடம் நேர் காணல் நடத்த வந்த கரண் தாப்பர், தாம் ஏதோ அரசுத் தரப்பு வழக்குரைஞர் அல்லது நீதிபதி போலவும், நரேந்திர மோடி குற்றவாளிக் கூண்டில் நிற்பவர் போலவும் பாவித்துக்கொண்டு விசாரணை செய்வதுபோல் கேள்விகள் கேட்கத் தொடங்கியதால் அதனைக் கண்டித்து நரேந்திர மோடி பாதியிலேயே தாம் அளித்த நேர் காணலை ரத்துச் செய்ய வேண்டியதாயிற்று.

ஊடக நெறிமுறைகள் அறியாதோர்

கரண் தாப்பர், பிரபு சாவ்லா போன்ற நபர்கள் முறைப்படி ஊடக நிருபர்களாக உருவானவர்கள் அல்ல. அவ்வாறு இருப்பின் ஊடகத் துறைக்குரிய ஒழுக்க விதிகள், நடைமுறைகள் ஆகியவை பற்றிஅவர்களுக்குத் தெரிந்திருக்கும். எந்தவொரு விஷயம் குறித்தும் ஒருவரிடம் விசாரித்து விவரங்களைப் பொது நலன் கருதி மக்களுக்குத் தெரிவிக்கும் கடமையும் உரிமையும் ஊடகத்தாருக்கு உண்டு. ஆனால் அதற்கும் வரைமுறைகள் உள்ளன. நேரடியாகக் குற்றஞ் சுமத்தும் விதமகவோ தீர்ப்பளிக்கும் அதிகாரத்துடனோ கேள்விகள் கேட்கலாகாது. தக்க ஆதாரங்கள் இன்றி எது பற்றியும் விசாரிக்கலாகாது. குழாயடியில் மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்பதுபோல் எல்லாம் ஆதாரங்களைக் காட்டவும் கூடாது. பரிகசிக்கும் விதமாகவோ, அநாகரிகமாகவோ, தனிநபர் தாக்குதலாகவோ, உள் நோக்கத்துடனோ, சொந்த விரோதம் காரணமான துவேஷத்துடனோ கேள்விகள் கேட்கலாகாது. ஆனால் இந்த அடிப்படை விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறாகத் தாம் ஏதோ சகல அதிகாரங்களும் பெற்றுள்ள தனிப் பிறவி என்பதுபோலத்தான் கரண் தாப்பர் கேள்விகள் கேட்பார். பிறகு தம் சகாக்கள் மத்தியில் அது குறித்துத் தாம் ஏதோ பெரிய சாதனை புரிந்துவிட்டதுபோலப் பெருமையடித்துக் கொள்வார்.

தில்லியில் ஒருமுறை பொது நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்ட போது, இந்த கரண் தாப்பர் கையில் ஸ்காட்ச் விஸ்கியுடன் அறையில் அட்டகாசமாகத் தம்மைத் தாமே அறிமுகம் செய்துகோண்டும் ஏற்கனவே அறிமுகம் உள்ளவர்களின் முதுகில் தட்டிக் கொண்டும் உரத்த குரலில் சிரித்தவாறு அறையில் சுற்றிச் சுற்றி வந்தவர், என்னிடமும் வந்தார். நான் தமிழ் நாட்டுக்காரன், பத்திரிகையாளனாக இருந்து தற்போது ஊடக ஆலோசகனாக இருப்பவன் என அறிந்ததும், உங்கள் ஜயலலிதாவிடம் நீங்கள் எல்லோரும் மிரள்கிறீர்களே, நான் அவரை எப்படி மிரள வைத்தேன் தெரியுமா என்று பெருமைப் பட்டுக்கொண்டார்.

தொலைக் காட்சியில் அதை நானும் பார்த்தேன். ஜயலலிதாவிடம் உள்ள முறைகேடுகள், குறைபாடுகள் நான் அறியாததல்ல; ஆனால் எதைப் பற்றிக் கேட்பதானாலும் ஒரு குறைந்த பட்ச நாகரிகம் வேண்டும். அந்த அம்மா அன்று உங்களைச் செருப்பால் அடித்திருந்தாலும் அது எனக்குத் தவறாகப் பட்டிருக்காது என்று சொன்னேன். கரண் தாப்பர் விழிகளை உருட்டி உருட்டி என்னைப் பார்த்துவிட்டு அவசரமாக விலகிச் சென்றார்.

குஜராத் வெற்றி கண்டு தடுமாற்றம்

இந்த கரண் தாப்பர் தாமும் தம்மையொத்த ஊடகக்காரகளும் ஆசைப்பட்டதற்கு முற்றிலும் மாறாக குஜராத் மக்கள் மீண்டும் நரேந்திர மோடியே எமது முதலவர் என ஏகோபித்துத் தீர்ப்பளித்துவிட்டதால் புத்தி தடுமாறிப் போய்விட்டிருக்கிறார். சென்ற முறை நூற்று இருபத்தேழு தொகுதிகளில் தமது கட்சியை வெற்றிபெறச் செய்த நரேந்திர மோடி இந்தத் தடவை உள்கட்சி அதிருப்தியாளர்களின் ஒத்துழையாமையால் பத்தே பத்து இடங்கள் மட்டுமே குறைவாகப் பெற்று, தமது ஆட்சிக்கு மக்களின் அங்கீகாரம் இருக்கும் உண்மையினை நிரூபணம் செய்திருப்பதை தாப்பரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
உள்கட்சி அதிருப்தியாளர்கள் குறுக்குச் சால் ஓட்டாமல் இருந்திருந்தால் மொத்தமுள்ள நூற்று எண்பத்து இரண்டு இடங்களில் நூற்று ஐம்பது இடங்களில்கூட பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கக்கூடும் என்கிற உண்மையை உணந்துகொண்ட எரிச்சலில் கரண் தாப்பர் வழக்கத்தைவிடக் கூடுதலாகவே நிதானம் தவறியிருக்கிறார்.

குஜராத்தைத் தொடர்ந்து உடனுக்குடன் ஹிமாசலப் பிரதேசத்திலும் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றுவிட்டது அவருக்கு அச்சமளித்துவிட்டிருக்கிறது. எங்கே ஹிந்துஸ்தானம் முழுவதுமே மோடியின் செல்வாக்கு வேரூன்றி, பாரதிய ஜனதா மக்களின் பேராதரவுடன் மத்தியிலும் மாநிலங்களிலும் மிகப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு
வந்துவிடுமோ என்கிற கவலையில் காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் அறிவுரை சொல்லத் தொடங்கியிருக்கிறார்.

அரசியல் பார்வையாளன் என்கிற முறையில் ஒருவர் தாம் ஆதரிக்கும் தரப்பினருக்கு ஆலோசனை கூறுவதில் தவறில்லை. ஆனால் வன்முறையைத் தூண்டுகிற விதமாக அது அமையும்போது அதற்கு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டியதாகிறது.

இன்றைய அரசியல் கட்சிகளில் பா. ஜ. க. நீங்கலாக வேறு எந்தக் கட்சியிலும் சோனியா காந்தியைத் தவிர வேறு எவருக்கும் மக்களைச் சந்தித்து அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முகராசி இல்லை என்பதை ஒப்புக் கொள்வதுபோல, மதச் சார்பற்ற சக்திகள் அனைத்தும் சோனியாவின் ஒருகுடைக் கீழ் ஒன்று திரள வேண்டும் என்று அறைகூவியழைத்திருக்கிறார், கரண் தாப்பர்.

திடீரென அகற்றப்பட வேண்டுமாம்
2007 டிசம்பர் 29 ஆம் நாள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் தாம் வழக்கமாக எழுதும் பத்தியில் தமது அறைகூவலை வெளிப்படுத்தியிருக்கிற தாப்பர், அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால், சரி, அது அவரது ஆதங்கம் என்று விட்டு விட்டிருக்கலாம். ஆனால் அவர் அதையும் மீறித் தமது துராசையை பகிரங்கமாக வெளியிட்டிருப்பதுதான் கடுமையான கண்டனத்திற்குரியதாகிறது.

ஹிந்துத்துவம் மோடித்துவமாக விசுவரூபம் எடுத்திருப்பதாக மிரளும் கரண் தாப்பர், மதச் சார்பற்ற சக்திகள் வெற்றி பெற வேண்டுமானால் மோடி திடீரென அகற்றப்படுவது அவசியமென்று ஆலோசனை கூறியிருக்கிறார். ஆங்கிலத்தில் அவர் அதற்குப் பயன்படுத்தியிருக்கும் சொற்கள், ஸடன் ரிமூவல். (Sudden Removal)

ஒரு நபர் திடீரென அகற்றப்பட வேண்டும் என்று ஒருவர் கருத்துத் தெரிவித்தால் அதற்கு என்ன அர்த்தம்?

மோடியை அகற்ற முகமதிய பயங்கரவாதிகளுக்கு கரண் தாப்பர் அழைப்பு விடுக்கிறார் என்பதைத் தவிர அதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? ஒரு ஊடக அரசியல் விமர்சகர் இப்படி வெளிப்படையாக வன்முறை வெறியுடன் பயங்கர வாதிகளுக்கு ஆலோசனை சொல்வதை எப்படி அனுமதிக்க முடியும்?

இதேபோல வினோத் மேத்தா என்கிற இன்னொரு பத்திரிகையாளர் அவுட்லுக் என்கிற பத்திரிகையின் ஜனவரி 14 2008 இதழில் நரேந்திர மோடி இல்லாத ஆண்டாக 2008 அமைவதாக என்று வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிதிருக்கிறார்.

மோடி இல்லாத ஆண்டு அமைய வேண்டுமாம்

பண்பாடு சிறிதுமின்றி ஒரு மாநில முதலமைச்சரை மரணத்தை விற்பனை செய்கிறவர் (மவுத்கா ஸேளதாகர்) என்று வசைபாடிய சோனியாவின் ஆதரவாளர்களிடம் இவ்வாறான எதிர்வினைகளைத்தான் எதிர்பார்க்க முடியும் என்றாலும் இப்படிப்பட்ட வெளிப்படையான வன்முறை ஆதரவுக் கருத்துகளுக்கு உடனுக்குடன் சட்டப்படிக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

நரேந்திர மோடி ஏற்கனவே முகமதிய பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்டிருப்பது அனைவருமே அறிந்த விஷயம். அதனைத் துரிதப் படுத்த வேண்டும் என தூபமிடும் கரண் தாப்பர், வினோத் மேத்தா ஆகியோர் மீது வன்முறையைத் தூண்டும் குற்றத்திற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்