மும்பை தமிழர் அரசியலும் தாதாக்களும்

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

புதியமாதவி, மும்பை


( தோழமை எழுத்தாளர் வாஸந்தி எழுதியிருக்கும் கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 3 : மஹாநகரத்தில் வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள் கட்டுரை,அதன் தொடர்ச்சியாக மூத்த எழுத்தாளர் மலர்மன்னன் எழுதியிருந்த கட்டுரை, நண்பர் கே.ஆர்.மணி எழுதியிருந்த நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு கடிதம், இந்த வரிசையில் தொடர்ச்சியாக இக்கட்டுரையும்)

பெரியவர் வரதராசமுதலியார் என்று 1970, 1980 களில் மும்பை மண்ணில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மனிதரை
காய்த்தல் உவத்தலின்று ஓரளவு எனக்குத் தெரிந்த செய்திகளுடன் சொல்ல வருகிறேன். மும்பையில் அன்று என் தந்தையைத் தெரிந்தவர்களும் இக்கட்டுரையை வாசிக்க கூடும் , வாசிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன். ஒவ்வொருவரும் அவரவர் நலனுக்காக வரதராசமுதலியாரைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அடித்தட்டு மனிதர்கள் முதல் அமைச்சர்கள் வரை எல்லோரும் இதில் உண்டு.

மும்பைக்கு ஓடிவந்தார்:
———————–

வரதராசமுதலியாரின் குடும்பம் சென்னையில் வாழ்ந்தப் போது அவர் தந்தையார் தென்னிந்திய இரயில்வேயில் கூலியாக வேலைப்பார்த்தார், வீட்டில் மனைவி, பிள்ளைகளுடன் சேர்ந்து ஆறு நபருக்கு மேல். பசியும் பட்டினியும் பழகிப்போன வாழ்க்கை.
அப்போதுதான் வரதராசா மும்பைக்கு டிக்கெட் எடுக்காமல் டிரெயினில் ஏறி வந்து கோலிவாடா ரயில்வே ப்ளாட்பாரத்தில்
தங்குகிறார். அவரைப் போலவே பலர் (பால்ய வயதுக்கும் டீனேஜுக்கு இடைப்பட்ட விடலைப்பருவத்தினர்) ப்ளாட்பாரத்திலேயே வாழ்க்கை நடத்தினார்கள். அவர்களில் பலர் ச்சூ பாலிஸ் போடும் தொழிலை மும்பை புறநகர்ப்பகுதியிலிருக்கும் எல்லா ஸ்டேஷன் ப்ளாட்பாரத்திலும் தொழிலாகக் கொண்டிருந்தார்கள். முதலில் வரதராசாவும் அந்தத் தொழிலையே செய்தார். அதன்பின் ச்சூ பாலிஸ் செய்யப் பயன்படும் மரப்பலகை, பெட்டிகளைச் செய்து அதை வாடகைக்கு விட்டு அந்த வாடகையாக தினக்கூலியில் ஒரு தொகையை வசூலிக்க ஆரம்பித்தார். சூ பாலிஸ் செய்து வந்த வருமானத்தை விட இதில் ஒரு நாளைக்கு ரூபாய் 50 முதல் 100 வரைக் கிடைத்தது. அந்தக் காலத்தில் இந்தத் தொகை மிகவும் கணிசமான தொகை. இப்படி வசூலிப்பதில் தனக்குப் பின்னால் ஐந்தாறு பேர் இருந்தால் தான் எளிது என்பதையும் அவர் அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொண்டார். எப்போதும் நான்கைந்து பேர்களுடன் அலைந்து கொண்டிருந்த வரதராசா இப்போது தான் மும்பை ரயில்வே அதிகாரிகளின் கண்களின் தென்படுகிறார். மும்பை ரயில்வேயில் வரும் பார்சல்கள் பல யாராலும் குறிப்பிட்ட காலம்வரை உரிமைக்கோரப்படாமலிருக்கும். (unclaimed parcels) இவற்றை வெளியில் எடுத்துச் சென்று விற்று பணமாக்க வரதராசாவைப் போல ஒரு கூட்டம் ரயில்வே அதிகாரிகளுக்குத் தேவைப்பட்டது.
திருட்டுப்பால் குடித்துப் பழகிவிட்ட பூனைகள் கூட்ஸ் வண்டிகளை தேவையில்லாத இடத்தில் நிறுத்தி பார்சல்களைக் கொள்ளையடிக்கும் திருட்டுவழியை வரதராசாவுக்கு திறந்துவிட்டார்கள். அதுவரை அப்படியான எந்த எண்ணங்களுமோ திட்டங்களுமோ தன்னிடமில்லை என்று வரதராச முதலியார் சொல்லுகிறார். (1)

இதில் எதிர்பார்த்ததை விட அதிகமான பணப்புழக்கம் ஏற்பட்டது. அதிகாரிகளுக்கும் சரி, வரதராசாவின் நண்பர்களும் சரி இந்தத் தொழிலில் குஷியானார்கள். இப்படித்தான் ஒரு ச்சூ பாலிச் செய்து கொண்டிருந்த பையன் கடத்தல் தொழிலுக்கு வந்தான். ஒரு கடத்தல், அதில் மாட்டிக்கொண்டால் காவல்துறையை எப்படி சாமாளிப்பது என்பதை எல்லாம் காலம் அவருக்கு கற்றுக்கொடுத்தது.
இந்தக் காவல்துறைதான் கூட்ஸ் வண்டியில் திருடுவது எல்லாம் பெரிய விசயமல்ல, அலைகடலில் கரையோரம் கடத்திக்கொண்டுவந்தால் கிடைக்கும் வருமானம் நித்தமும் பொன்முட்டையிடும் வாத்து என்ற வித்தையை அறிமுகம் செய்தது., அடிதடி ஆட்களுடன் ஒருவன் களத்தில் நிற்கிறான்.. அவனுக்குத் தீனிப்போடுவதன் மூலம் தங்கள் வருமானத்தை எப்படி எல்லாம் பெருக்கிக்கொள்ள முடியும் என்று நன்கறிந்த காவல்துறை அதிகாரிகள் வரதராசாவுக்கும் அவர் நண்பர்களுக்கும் வழிகாட்டினார்கள். பிறகென்ன .. வரதராசா … பெரியவர் வரதராசமுதலியாராக வளர்ந்தார். அவருடன் சேர்ந்து அரசு அதிகாரிகளும் பில்டர்களும் வளர்ந்தார்கள். மும்பையும் மும்பையின் நில உரிமையும் பல்வேறு கோஷ்டிகளை உருவாக்கியது. அந்தக் கோஷ்டிகளுக்குள் அடிதடி தகராறு வரும்போது அதைத் தீர்த்து வைக்கும் பில்டர்களின் நீதிமன்றமாக வரதராசமுதலியாரை அணுகினார்கள்.
இப்படி பேசி தீர்த்து வைப்பதில் பலகோடிகள் அவருக்கு இரண்டு கோஷ்டிகளும் கொடுத்தார்கள். இந்தத் தொழிலும் அவரைத் தேடி வந்தது என்றுதான் சொல்லவேண்டும். இப்படியான ஒரு கூட்டம் வளரும் போது சாராயம் காய்ச்சுதல், விற்பனை என்பதெல்லாமே உபதொழில்களாக அவர்களைச் சார்ந்து வளரும் என்பதை நாமறிவோம். அவருடைய அகவாழ்க்கையில் இந்த உபதொழிலும் அதுசார்ந்த தொடர்புகளும் ஆரம்ப காலத்தில் பெருமளவு இருந்தது என்று தெரியவருகிறது.

கடத்தல் மன்னன்
—————–
இக்காலக்கட்டத்தில் தான் மும்பையிலிருந்த பல்வேறு காட்டன்மில்கள் ( லாக் அவுட்)மூடப்பட்டுக் கொண்டு வந்தன.
தொழிலாளர்களுக்கு எவ்விதமான உதவித்தொகையோ ஓய்வுதியமோ கிடையாது. அவர்களில் பலர் தொழிற்கல்வியோ பயிற்சியோ இல்லாதவர்கள் (unskilled labours). பெரும்பாலும்
இவர்கள் தமிழர்களாகவும் மராட்டியர்களாகவும் இருந்தார்கள்.
வயித்துக்கு சாப்பாடும், எதைப்பற்றியும் கவலைபடாமல் கும்மாளமடிக்க மதுவும் , தன்னைத் தாதா ..” நான் வரதாபாயி ஆளாக்கும்” என்று சொல்லிக்கொள்வதில் கிடைக்கும் மதிப்பு, காவல்துறைக்குப் பயப்பட வேண்டிய அவசியமில்லாமை.. இவர்களைக் கூட்டம் கூட்டமாக தாதாக்களின் கூடாரங்களை நோக்கிப் போகவைத்தது. மராட்டியர்கள் அப்போது வளர்ந்து கொண்டுவந்த சிவசேனையில் சேர்ந்தார்கள். சிவசேனை ஓர் அரசியல் அவதாரமெடுத்தது பிற்காலத்தில்தான். ஆரம்பத்தில் அவர்களும் கடத்தல் தொழிலில்தான் இருந்தார்கள். அதனால் சிவசேனை தன்னுடைய அதிகாரத்தைக் கடத்தல் தொழிலில் நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் இருக்கும் அவஸ்தை பால்தாக்கரேக்கு இருந்தது அய்யா மலர்மன்னன் எழுதியிருப்பது போல பால்தாக்கரே

>கள்ளக் கடத்தல் பற்றியும் அதில் தாராவித் தமிழர்களின் பங்கு கூடுதலாக இருப்பது குறித்துமே அப்போது அவர் அதிகம் வலியுறுத்தினார். வெளி மா னிலத்தவரைத் தாம் பகிஷ்கரிக்கவில்லை, அவர்களின் மேலாதிக்கத்தை மட்டுமே எதிர்ப்பதாகச் சொன்னவர், தமது கட்சியினர் ஒருவேளை இதில் சிறிது கூடுதலான உற்சாகத்தை வெளிப்படுத்தியிருக்கக்கூடும் என்றார்.” >
என்று சொல்லியிருப்பது சரிதான். ஆனால் தமிழர்களின் மேலாதிக்கம் என்று பால்தாக்கரே சொன்னது கடத்தல் தொழிலில் அவர்களின் மேலாதிக்கம் மட்டும் தான் , அன்றைய தமிழர்களின் வட்டார அரசியல் பால்தாக்கரேயை அன்றும் சரி, இன்றும் சரி
அச்சுறுத்தவே இல்லை. அச்சுறுத்தவும் முடியாது. (முடிந்தால் இதுகுறித்து தனிக்கட்டுரை எழுதுகிறேன்). இரண்டு பக்கமும் ஆள்பலம். நீண்ட கடற்கரை..கடத்தல் தொழில் துறைமுகத்தொழில் போல நடந்தது. ஆனால் இதில் ஏறுமுகமாக வரதராசமுதலியாரே திகழ்ந்தார். அவருடன் மஸ்தானும் இருந்ததால் பால்தாக்கரேயால் அசைத்துப் பார்க்க முடியவில்லை.

தாராவியில் தமிழ்நாட்டைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மட்டுமே வாழ்ந்தார்கள். இவர்களுடன் சேர்ந்து முஸ்லீம்களும் வாழ்ந்தார்கள். அந்த இடம் மும்பை மண்ணின் மைந்தர்களான கோலியர்களுக்குரியது எனினும் அவர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்தார்கள். இந்த மூன்று சமூகத்திற்குமிடையே எவ்விதமான பிரச்சனைகளுமில்லை. மஸ்தானும் வரதாபாயும் கடைசிவரை நண்பர்களாகவே வாழ்ந்தார்கள். இந்தக்கூட்டணி அப்போது பால்தாக்கரேயை மிகவும் சினமடைய வைத்திருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது.

ஒருமுறை ரிசர்வ் வங்கி அதிகாரி நாணயத்தைப் பத்திரமாக எடுத்துச்செல்லும் பொறுப்பில் காவல்துறையின் உதவியை நாடவில்லை. வரதராசமுதலியாரின் உதவியை வேண்டினார் என்றும் இது எங்கள் பயணத்திட்டம் என்று சொல்லி “நீங்க தான் கவனிச்கனும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். (1)அவரும் வரதாபாயைக் கவனித்துக் கொண்டிருப்பார் என்பதும்
நாம் இதில் எழுதாமலேயே வாசித்துக் கொள்ள வேண்டிய செய்தி.!

நேர்மையும் நியாயங்களும்
————————-

தாதாக்களிடம் அவர்களுக்கு என்று சில நியாயங்கள் இருந்தன. அதிலும் வரதராசமுதலியார் மிகவும் நம்பிக்கைக்குரியவராகவே
இருந்தார். அதிகாரிகள் அவரை நம்பினார்கள். எந்த தனிப்பட்ட நபரையும் அவர் கொள்ளை அடிக்கவில்லை. பசி, பட்டினி என்று யார் வந்தாலும் கொடுத்தார். பிக்பாக்கெட் தொழிலை அவர் செய்யவே இல்லை. ஆனால் பிக்பாக்கெட் அடிக்கிறவர்கள்
தங்களை வரதாபாயின் கேங்கில் இருப்பதாக தங்கள் பாதுகாப்புக்காக சொல்லிக்கொண்டார்கள். இது வரதபாயுக்கும் தெரியும். ஆனால் அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை, பிக்பாக்கெட்டில் பறிகொடுத்தவர்களில் சிலர் நேரடியாக வரதாபாயிடம் போனார்கள். அப்படிப்போனவர்கள் அனைவருக்கும் “எந்த வண்டியில் .. எப்போ” எவ்வளவு பறிபோனது/” என்று கேட்பார். உடனடியாக அவருக்கு அவர் இழந்தது திருப்பிக் கொடுக்கப்படும். வரதாபாயின் பெயரைச் சொல்லி பிக்பாக்கெட் அடிப்பவர்கள் அவர் சொன்னால் அதை மறுவார்த்தைச் சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார்கள். ஆனால் பொதுமக்கள் வரதாபாய் பிக்பாக்கெட் தொழிலையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவே நம்பினார்கள். (1) (2).

சில நியாயங்களுக்குக் கட்டுப்பட்டு தான் அவரின் மிரட்டல்கள், அடிதடிகள் இருந்தது. இன்று சகார் ஏர்போர்ட் அமைந்திருக்கும்
இடத்தில் அன்று ஒரு முஸ்லீம் -மஜித் பந்தரில் பெட்ரோல்பம்ப் வைத்திருந்தவர்- கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்தார். அப்போது அவருடைய நிலத்தில் இளையபெருமாள் என்ற தமிழர் சிறுதொழில்/ கடை நடத்தி வந்தார். நில உரிமையாளர் இளையபெருமாளுக்கு பல வருடங்கள் அந்த நிலத்திருந்தவர் என்ற அடிப்படையில் கொஞ்சம் நிலத்தை ஒதுக்கிவிட்டு கட்டிடம் கட்ட ஆரம்பித்தார், இளையபெருமாளுக்கு பேராசை. தனக்கு ஒதுக்கியிருக்கும் இடம் குறைவு, ஏமாற்றிவிட்டார் என்று வரதாபாயிடம் முறையிட்டார். சரி.. மும்பையில் நிலத்தகராறு என்பது பணம் அள்ளும் சுரங்கமாயிற்றெ. வரதாபாயின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அந்த நிலம் சம்பந்தப்பட்ட பேப்பர்களை அரசு அதிகாரிகள் வரதாபாயின் ஆபீஸ்க்கு எடுத்துக்கொண்டு வருகிறார்கள். வரதாபாயின் வக்கீல், ஆட்கள் அரசு ஃபைலைப் புரட்டிப்பார்க்கிறார்கள். நிலத்தை ஆக்கிரமித்து அவர் உரிமையாக்கிக்கொள்ள வில்லை, அவர் வாங்கி பாட்டா போட்டிருந்த நிலம் என்பது தெரியவருகிறது. உடன் இளையபெருமாளிடம் “உனக்கு அவன் ,அவன் இடத்திலே கொஞ்சத்தை ஒதுக்கிக் கொடுத்திருப்பதற்கே பெரிய மனசு வேணும்பா.. ‘ என்று சொல்லி அனுப்பி வைத்துவிடுகிறார். அவர் நினைத்திருந்தால் அந்த நிலத்தை அபகரித்திருக்க முடியும், உதவி கேட்பவன் தமிழன் என்ற காரணத்தாலேயே மட்டும் அவர் சில நியாயங்களுக்குப் புறம்பாக நடந்ததில்லை. கொலை, கொள்ளை, அடிதடி என்று வாழ்ந்தவர்களிடம் இப்படியும் சில முகங்கள் இருக்கத்தான் செய்தது.

பெண்களை அவர்கள் விருப்பமின்றி பாலியல் பலாத்காரம் செய்வதை இன்றைய நிழலுலக தாதாக்கள் போல அவர்
அனுமதித்ததில்லை.

1985 ஜனவரி பொங்கல்விழா கொண்டாட்டத்தில் நடந்த இன்னொரு நிகழ்வும் நினைவுக்கு வருகிறது. அப்போது அம்பர்நாத்தில் காலையில் நடக்கும் பொங்கல்விழாவில் கலந்து கொண்டு 11மணிக்கெல்லாம் பாண்டூப் திருவள்ளுவர் மன்றம் நடத்தும் விழாவில் கலந்து கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருவள்ளுவர் மன்றத்தினர் நடத்தும் பிரைட் பள்ளியின் மாணவர்கள் பெரியவர் வரதராசமுதலியாருக்காக தைமாதக் காலைவெயிலில் காத்திருக்கிறார்கள். அவர் வர காலதாமதமாகிவிடுகிறது . 12.30க்கு வருகிறார். திருவள்ளுவர் மன்ற அமைப்பாளரும் பள்ளி நிர்வாகியுமான அய்யா தேவதாசன் அவர்களுக்குத் தர்மச்சங்கடம். பெரியவர் வந்தவுடன் “அய்யா .. உங்களால் வரமுடியாதுனா சொல்லியிருக்க வேண்டியதுதானே.. என் பிள்ளைகளை இந்த வெயிலில் காயவச்சிருக்க வேண்டாமே” என்று கோபத்தை மறைத்துக்கொண்டு சொல்ல.. அருகில் வந்த வரதராசமுதலியார்.. ‘ ம்ம் தப்புதான்.. எத்தனைப் பிள்ளைகள் காத்திருந்திச்சோ அத்தனை அடி அடிச்சுக்கோ” என்று சொல்லி குனிந்து தன் முதுகைக் காட்டினாராம்.
இப்படியும் இருந்திருக்கிறார்!!

கல்வி நிறுவனங்கள் வைத்திருக்கும் தமிழர்களிடம் அவருக்குபெருமதிப்பு இருந்தது. கொஞ்சம் பொறாமை கூட இருந்தது.
இப்படி எல்லாம் தன்னால் செயல்பட முடியாமல் போய்விட்டது, இதெல்லாம் படிச்சவனுக்குத் தானே தெரியும்..”
என்று பேச்சுவாக்கில் அவர் சொல்லியும் இருக்கிறார். (1)

தன் ஆள்பலம், பணம், செல்வாக்கு இவை அனைத்தும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதிலும் தன்னைச் சுற்றி அம்மாதிரியான அறிவுரை சொல்பவர்கள் இல்லை என்பதையும் அவர் ஒரு காலக்கட்டத்தில் உணர்ந்தார். (2)

கற்றவர்கள், நேர்மையான வழியில் தன் பெயரை சமூகத்தில் நிலைநிறுத்திக் கொண்டவர்களை அவர் பெரிதும் மதித்தார்.
பல அழைப்பிதழ்களில் அவர் பெயருடன் என் தந்தையாரின் பெயரும் (பி.எஸ்.வள்ளிநாயகம்)அச்சிடப்படும்போது அவர் பெயர் முதலில் கொட்டை எழுத்துகளிலும் என் தந்தையார் பெயர் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலதிகாரியாக இருந்த
அமர்நாத்தின் பெயர் அதற்கடுத்தும் இடம் பெற்றிருப்பதைப் பலமுறை சுட்டிக்காட்டி விழா ஏற்பாடு செய்தவர்களைக் கடிந்து கொண்டதும் உண்டு.(2)

பலப்பரீட்சை
————-

தாதாக்களுக்குள் நடக்கும் பலப்பரீட்சைகள் பாலிவுட் படங்களின் காட்சிகளைத் தோற்கடித்துவிடும்.

இப்படித்தான் தமிழர்ப் பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்தப் பின் சமுதாயத்தில் வரதாபாயாக இருந்தவர் பெரியவர் வரதராசமுதலியாராக அறியப்படும் காலக்கட்டத்தில் அவர் தன் தாதா வேலைகளைக் குறைத்துக் கொள்கிறார்.
கடற்கரையில் மற்றவர்களும் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மீன்களை அள்ளிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடும் ஒரு மனநிலை. ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சியிலும் இப்படி ஒரு மாற்றமிருக்கும். அவை சமூகத்தால் மதிக்கப்படும். ஆனால் தாதாக்களின் வாழ்க்கையில் இந்த மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சிவசேனை வரதாபாய் பலகீனப்பட்டு விட்டார் என்று நினைத்தது,. அதைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பியது.

ஒவ்வொரு ஆண்டும் மாதுங்காவில் கணபதி விழாவை பத்துநாட்களும் மிகவும் விமர்சையாக வரதராசமுதலியார் கொண்டாடுவார். (இன்றைய செண்ட்ரல் மாதுங்கா ஸ்டேஷன் அருகில்) பல இலட்சங்களுக்கு அலங்காரப்பந்தல், பத்து நாட்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாட்டின் திரைப்பட இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் என்று கலக்குவார்கள். வரதராசமுதலியார் அழைத்து முடியாது என்று சொன்னவர்கள் கிடையாது என்பார்கள். மாதுங்காவிலிருக்கும் எல்லா கடைகளில் இருந்தும் கணிசமான ஒரு தொகை வசூலிக்கப்படும், கூட்டம் அலைமோதும், அவர் கோஷ்டியிலிருக்கும் இளைஞர்கள் மாதுங்காவின் சாலைப் போக்குவரத்திலிருந்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவது வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். நான், என் சகோதரிகள், தோழியர் என்று அவர் போட்டிருக்கும் பந்தல் அலங்காரத்தைப் பார்க்கவே போயிருக்கிறோம். அவ்வளவு கூட்டத்திலும் பெண்களை யாரும் கேலிக்கிண்டல் செய்யமாட்டார்கள்.

அப்போது ஒருமுறை அவர் போட்டிருந்த பந்தல் அன்றைய நிகழ்ச்சி முடிந்தப்பின் பின்னிரவில் தீ வைக்கப்பட்டது. பந்தல் முழுவதும் தீக்கிரையானது. விடிந்ததும் அதிகாலையில் பெரியவர் வரதராசமுதலியார் நேராக பாந்திராவிலிருக்கும்
பால்தாக்கரே இல்லத்திற்குப் போனார். அவருடம் இருந்தவர்கள் விசிட்டர் அனந்த், மும்பையில் வாழும் மூத்த எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசன் ஆகியோர். இவர்கள் இருவரும் வராந்தாவில் காத்திருந்தார்கள். அவர் மட்டும் தனியாக பால்தாக்கரைச் சந்தித்தார். அன்று மாலைக்குள் பால்தாக்கரே ஆட்கள் எரிந்து போன பந்தலை அது எப்படி எழுப்பப்பட்டிருந்ததோ அப்படியே கட்டி முடித்துக் கொடுத்தார்கள். அன்றைய நிகழ்ச்சி வழக்கம்போல தொடர்ந்து நடந்தது. (3)

பால்தாக்கரே தான் நடத்திய பலப்பரீட்சையில் முதலியாரை அசைக்கமுடியாது என்பதை உணர்ந்து கொண்டார். பலமான இந்த அடி வாங்கிய சிவசேனை புலிகள், சிங்கத்தின் பல்லைப் பிடுங்கி அடிக்கும் நாளை எதிர்பார்த்திருந்தார்கள்.

தமிழர்ப்பேரவை
—————-

மும்பையில் தமிழர்ப்பேரவையை வரதராசமுதலியார் தான் தோற்றுவித்தார் என்று பலர் தவறுதலாக நினைக்கிறார்கள்.
முதலியாரின் வலதுகரமாக செயல்பட்ட பரமசிவம் பல தமிழ் அமைப்புகளுக்கு லட்சம் லட்சமாக அள்ளிக்கொடுக்கும் முதலியாரை வைத்துக்கொண்டே நாமே ஏன் ஒரு தமிழர் அமைப்பை ஆரம்பிக்க கூடாது என்று எண்ணியதன் விளைவுதான் தமிழர்ப்பேரவை தோற்றம். பெரிதாக தமிழ் குறித்தோ தமிழறிஞர்கள் குறித்தை முதலியாருக்கு கருத்துகள் எதுவும் கிடையாது. தமிழர்ப்பேரவை நடத்திய விழாவில் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களை அழைக்கவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தப் போது ‘ யாரு.. சினிமா பாட்டுக்கெல்லாம் இசை அமைக்கிற விசுவநாதனா?” என்று அறியாமல் கேட்டிருக்கிறார். தமிழர்ப்பேரவை ஆரம்பித்த காலத்தில் ஈழத்தில் 1983ல் தமிழர்களுக்கு எதிராக பல வன்முறைகள் நடந்ததும் தமிழர்கள் அகதிகளாக தமிழக மண்ணில் வந்ததும் நடந்தக்காலக்கட்டம். போட்டிப்போட்டுக்கொண்டு தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படையாக பெருமையுடன் முன்வைத்தக் காலக்கட்டம். அப்போதுதான் 1984ல் மும்பையில் வரலாறு காணாத ஒரு பேரணியை ஈழத்தமிழர்களின் மண்ணுரிமைக்காக தமிழர்ப்பேரவை நடத்த முன்வந்தது. சற்றொப்ப 5 இலட்சம் தமிழர்கள் மும்பை ப்ளோராபவுண்டனில்
ஊர்வலமாக வந்து இலங்கை தூதரகத்தில் தங்கள் மனுவைக் கொடுத்தார்கள். அந்த ஊர்வலம் , அதில் கலந்து கொண்ட பல்வேறு துறையில் முன்னணி வகிக்கும் தமிழர்கள் இதெல்லாம் முதல்முறையாக மும்பை காவல்துறைக்கு பீதியை
ஏற்படுத்தியது.

“இது வரதாபாய் நடத்தும் ஊர்வலம் அல்ல. இதில் கலந்து கொண்டவர்கள் வரதாபாயின் அடிதடி ஆட்கள் மட்டுமல்ல.
இது மாராட்டியர்களின் மண்ணில் தமிழர்கள் நடத்தும் பேரணி”என்ற அச்சம் விசவரூபமெடுத்தது. பத்திரிகைகள் இந்தச் செய்தியை அவரவர் போக்கில் அவரவர் ஊகத்தில் எழுத ஆரம்பித்துவிட்டனர். மும்பையில் காவல்துறை கமிஷனராக இருந்த வொய்.சி. பவார்
-முதலியார் இருவருக்கும் நடந்த ஒரு பிரச்சனையில் முதலியார் பவார் தன்னிடம் பேசியதை எல்லாம் டேப்பில் பதிவு செய்துவிட்டார் என்றும் அதை எதிர்பார்க்காத பவார் முதலியாரையும் அவருடைய தமிழர்ப்பேரவை குறித்தும் வேறுமாதிரியான கருத்துகளை முன்வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. இக்கருத்தை முதலியார் யாரிடமும் சொல்லவில்லை என்பதால் இந்தச் செய்தியிலிருக்கும் நம்பகத்தன்மை கேள்விக்குரியதுதான்.

ஈழப்புலிகளுக்கு ஆதரவு
———————–
தமிழர்ப்பேரவை ஈழத்தமிழர்களுக்காக நிதி சேகரித்து அனுப்பியது. நிதி சேகரிக்க சண்முகநந்தா அரங்கில் ‘விடுதலைப்புலிகள்’ என்ற நாடகம் நடத்தப்பட்டது. பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் உதவியுடன் அங்கிருந்து வந்த நாடகக்குழுவினர் நடத்திய நாடகநிகழ்ச்சி இது.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய தலைநகரில் ஒரு பேரணி நடத்த முடிவு செய்தார்கள். சென்னையிலிருந்து மதுரை ஆதினம்,
வலம்புரிஜாண் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். சென்னையிலிருந்து பலர் வந்து கலந்து கொள்ள டிக்கெட் செலவுக்கு மட்டும் தமிழர்ப்பேரவை கணக்கிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் அனுப்பபட்டது. நடுவண் அமைச்சராக இருந்த மரகதம் சந்திரசேகர் உதவியுடன் அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தியைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வலம்புரிஜாண் தலைமையில் சந்தித்தார்கள். எனினும் பிரதமரைச் சந்திக்க முதலியார் செல்லவில்லை. ஹோட்டல் அறையில் தங்கிக்கொண்டார். வலம்புரிஜாணுக்கும்
மதுரை ஆதினத்திற்கும் ஒத்துவராது. எனவே வலம்புரிஜாண் மதுரை ஆதினத்தை விட்டு விட்டு பிரதமரைச் சந்திக்க மற்றவர்களை அழைத்துப் போய்விட்டார்.

தவறான வழிகாட்டுதல்கள்
————————–
தமிழர்ப்பேரவை ஆரம்பித்தப் பின் கடத்தல் தொழிலில் வெளிப்படையாக ஈடுபடுவது குறைந்தது. அவருடன் இருந்தவர்கள்
‘நீங்கள் இனி யாருக்குப் பயப்படனும் அய்யா, உங்களைப் பத்திதான் அய்யா மூப்பனார் விசாரித்தார்..ஏன் பிரதமர் ராஜிவ்காந்தி கூட உங்களைப் பற்றி விசாரித்தாராம்’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இப்படி சொன்னவர்களில் முக்கியமானவர் ஜெபராஜ். முதலியாரும் போகப்போக இந்த மாயைகளை நம்ப ஆரம்பித்தார். போலீசுக்கு அப்தா கொடுப்பதை நிறுத்தினார்,. கள்ளக்கடத்தல் செய்வதில்லை, உங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை ‘ என்றார். நான் மேற்குறிப்பிட்ட பவாருடன் நிழல் யுத்தத்தை ஆரம்பித்தார்.
இந்தச் சந்தர்ப்பங்களுக்காக காத்திருந்த சிவசேனையும் மராட்டிய மண்ணில் தமிழனின் அரசியல் வளர்ச்சியாக இதைப் பார்த்து பயந்து மறைமுகமாக இதற்கு தூபம் போட்டிருக்க வேண்டும். மராட்டிய மாநில அரசும் முதலியாரை தமிழனின் ஓர் அரசியல்
அதிகார வளர்ச்சியாக கண்டது. புலம்பெயர்ந்த மண்ணில் தமிழன் தாதாவாக இருந்து அந்த மண்ணின் அரசு அதிகாரத்தையே அசைத்துப் பார்க்க முடியும். ஆனால் அவன் தமிழன் என்ற அடையாளத்தை இழக்காமல் அரசியல் மேடையில் ஒரு கொடிக்கம்பத்தைக் கூட அசைக்க முடியாது.

முதலியார் பெயரிலிருந்த குற்றச்சாட்டுகள்.. தூசித்தட்டி எடுக்கப்பட்டன. அவர் அந்தக் குற்றங்களைச் செய்யவில்லை என்று அவர் மீது எந்தப் புனிதங்களையும் போர்த்த முடியாதுதான். இதை அவரும் அறிந்திருந்தார். போலீஸ், கேஸ், வழக்கு என்று
அல்லாட வைத்தது காவல்துறை.

ஒரு தலைமறைவு வாழ்க்கைக்கு அவர் தள்ளப்பட்டார். முதுமையுடன் சேர்ந்து சர்க்கரை வியாதி, இரத்தக்கொதிப்பு என்ற வியாதிகளும் அவரை எழுந்து நிற்கமுடியாமல் செய்துவிட்டது.

இறுதியாக அவரிடம் இருந்தப் பணபலத்தை அவர் தன் குடும்பத்திற்கு சேர்த்து வைத்த மாதிரி தெரியவில்லை. கடத்தல், கள்ளத்தனம் செய்து ஒரு கனவுக்கோட்டையை நிலைநிறுத்தும் வியாபார (புத்திசாலித்தனம்) புத்தி அவரிடமில்லை.
அவருடைய செல்வாக்கை மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர அவருக்கு எப்போதும் ஒரு குற்ற உணர்வு
இருந்தது. அவரை ஓட ஓட விரட்டிய காவல்துறை அதிகாரி பவார் பணி ஓய்வுக்குப் பின் வடமும்பை தொகுதியில் நாடளுமன்ற வேட்பாளராக காங்கிரசு தன்னை நிறுத்தும், நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தார். (பார்க்க இந்து பத்திரிகை,
மார்ச் 15, 2004).
அவரைச் சுற்றி புத்திசாலிகள் இருந்திருந்தால் முதலியாரின் சரித்திரம் தலைமறைவு என்று முடிவுரை எழுதும்படி முடிந்திருக்காது. அவரால் ஒரு தொழில் சாம்ராஜ்யத்தையே கட்டி எழுப்பியிருக்க முடியும். தமிழர்ப் பேரவையே ஒரு தமிழனுக்கு தலைமறைவு வாழ்க்கையை கொடுத்துவிட்டதோ என்று கூட பல நேரங்களில் நான் நினைப்பதுண்டு. ….

தொடரும்……..(அடுத்த வாரம் மும்பை தமிழர்களின் அரசியல் பற்றி)

(1), திருவள்ளுவர் மன்றம், பாண்டூப் அய்யா தேவதாசன் சொன்னது

(2) என் தந்தை பி.எஸ்.வள்ளிநாயகம் மூலம் நானறிந்தது

(3) மும்பையின் மூத்த எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசனின்
நாட்குறிப்புகள் – கட்டுரையிலிருந்து.

பி.குறிப்பு:
இதுகுறித்து நான் எழுத வேண்டும் என்ற என் சமூகக்கடமையை நினைவுகூர்ந்த எழுத்தாளர் மலர்மன்னன் அவர்களின் கடித்தத்திற்கும் அதைச் சரியான நேரத்தில் என் பார்வைக்கு கொண்டுவந்த நண்பர் கே.ஆர். மணிக்கு என் நன்றிகள்


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை