தமது தரப்பு வாதம் செய்ய காரை சிபி இன்றில்லை

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

மலர் மன்னன்



நவம்பர் 15 2007 இதழ் திண்ணையில் அன்பிற்குரிய ஸ்ரீ தேவ மைந்தன் எழுதிய கடித வடிவக் கட்டுரை படித்தேன். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எதிர் வாதம் செய்ய வேண்டிய காரை சிபி இன்று இல்லை. என்னிடம் ஆனந்த ரங்கம் பிள்ளையின் தினப்படி சேதிக் குறிப்பு தொகுதிகள் முழுவதும் இருந்த போதிலும் உடனுக்குடன் அவற்றை எடுத்துப் புரட்டும் நிலையில் இன்று அவை இல்லை. மேலும் நான் நடத்தியதாகவே இருந்த போதிலும், கால் இதழ் எதுவும் தற்சமயம் என்னிடம் இல்லை. தேவமைந்தன் மிகவும் சிறப்பான முறையில் விவரித்த புதுச் சேரி தமிழர் வாழ்வில் ப்ரெஞ்சுக் கலாசாரத் தாக்கம் என்ற நான் கொடுத்த தலைப்பில் எனது வேண்டுகோளுக்கு இணங்க காரை சிபி எழுதிய ஆய்வுக் கட்டுரை கால் இதழில் வெளிவந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே ஆகியிருக்கக்கூடும்.

கட்டுரையை எழுதிய காரை சிபி, இருவருமாக அதனை ஒருசேர வாசித்து விவாதித்து வெளியிடுவது குறித்து முடிவு செய்ய என்னைப் புதுச்சேரிக்கு அழைத்திருந்தார். அதற்கு இணங்கப் புதுச்சேரிக்குச் சென்ற சமயம், சம்பந்தப்பட்ட மாதா ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்று, அங்கு ஈசுவரன் கோயில் சிதைவுகள் ஆலயப் படிக்கட்டுகளாகப் பயன் படுத்தப்பட்டிருப்பதையும், அவற்றி லுள்ள ஹிந்து தெய்வ உருவங்கள் ஆலயத்திற்குச் செல்வோரும் திரும்பி வருவோரும் மிதிபடுமாறு உள்ளமையையும் காண்பித்தார். நான் ஆங்கிலத்தில் தேவமைந்தனுக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தில் வானோராக்கினி என்றல்லாது, தூய மரியன்னை ஆலயம் என்று பொதுவாகக் குறிப்பிட்டிருந்தேன் என்பதற்காக அதனைத் தவறான தகவல் எனக்கொள்ளத் தேவையில்லை. ஆரோக்கிய மாதா, வேளாங்கண்ணி மாதா, வானோராக்கினி என்றெல்லாம் பல பெயர்களில் கிறிஸ்தவர்களால்போற்றப்படுவது மரியன்னையைக் குறிக்குமென்பதாலேயே பொதுப்படையாக அவ்வாறு அவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதேபோல, தர்மராஜா கோவிலை ஈஸ்வரன் தர்ம ராஜா கோவில் என்று ஆனந்த ரங்கம் பிள்ளை குறிப்பிடுவதைப் படித்திருப்பதால் பொதுவாக தர்ம ராஜா கோவில் என அவருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தேன். முகமதியருக்கு உள்ள தீவிர மதாபிமானம் நம்மவருக்கு இல்லாமல் போனதே என்று பிள்ளையவர்கள் தமது தினப்படி சேதிக் குறிப்பில் வருந்தி எழுதியிருந்ததைப் படித்தது நினைவில் உள்ளது. அதை வைத்தே பிரஞ்சுக்காரரின் மசூதி இடிப்பு முடிவு கைவிடப்பட்டது என்ற செய்தியையும் தமது ஆய்வுக் கட்டுரையில் காரை சிபி பதிந்திருப்பதை நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம் என தேவமைந்தனுக்கு எழுதிய கடிதத்தில் அபிப்பிராயம் தெரிவித்திருந்தேன்.

தேவமைந்தன் தெரிவித்துள்ள தகவலுக்கு மறுப்பு ஏதேனும் இருக்குமானால் அதனைத் தெரிவிக்கத் தகுதியுள்ளவர் காரை சிபிதான். மிகவும் உறுதியான சான்றுகள் இல்லாமல் அவர் இப்படியொரு பிரச்சினை வரக்கூடிய தகவலை வெளியிட்டிருக்கக்கூடுமா என்று யோசிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஒன்றை மட்டும் என்னால் உறுதிபடச் சொல்ல முடியும்.

எந்த மதத்தின் மீதும் எனக்கு துவேஷமோ பிற மதத்தவர் என்பதற்காக ஒருவர் மீது அக்கறையின்மையோ இல்லை. ஜயசீலி என்ற கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பெண்மணி எழுதிய பெண்ணிய நோக்கில் விவிலியம் என்ற துணிவு மிக்க ஆய்வுக் கட்டுரையைப் படித்துப் பாராட்டி, சில திருத்தங்கள் செய்து, அவசியம் வெளியிடப்பட வேண்டிய நூல் என்று கண்ணனிடம் சொல்லி அதனை அவரிடம் கொடுத்து, சென்ற ஆண்டு அதனைச் சிறு நூலாகக் காலச் சுவடு வெளியிடக் கண்டு மகிழ்ந்தேன். என்னை அப்பா என்று அன்பொழுக அழைக்கும் ஏராளமான கிறிஸ்தவ மகள்களில் ஜயசீலியும் ஒருத்தி என்பது மட்டுமல்ல, அண்மைக்காலம் வரை அவள் ஒரு கன்னியா ஸ்த்ரீயாகவும் இருந்தவள் ஆவாள். ஆகவே கிறிஸ்தவர்கள் ஹிந்துக்களின் ஆலயத்தை இடித்து அங்கு தங்கள் மாதா கோவிலைக் கட்டிக்கொண்டார்கள் என்று துவேஷத்தைத் தூண்டும் உள்நோக்கத்துடன்தான் நான் இந்த இடிப்புச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டுவதாக என்மீது சுமத்தப் படவிருக்கும் குற்றச் சாட்டைத் திண்ணையின் அறிவர்ந்த வாசகர்கள் புறந்தள்ளுவார்கள் என நம்புகிறேன்.

மேலும் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. காரை சிபி தமது ஆய்வுக் கட்டுரையில் பதிவு செய்திருந்த கிறிஸ்தவர்களின் ஹிந்துக் கோவில் இடிப்பு, அவ்வாறே முகமதியரின் வழிபாட்டுத் தலமான மசூதியை இடிக்கும் முயற்சி என இவ்விரு ஒப்பீட்டுச் செய்திகளையும் நீங்கள் எழுதிய விமர்சனக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கலாமே என்று ஒரு யோசனையாகவே தேவமைந்தனுக்கு எழுதிய தனிப்பட்ட மின்னஞ்சலில் தெரிவித்திருந்தேன். எனது அந்தக் கடிதம் பலருக்குமான பகிரங்க மடல் அல்ல. ஆகவே அது வாசகர்களுக்கான என் தரப்புத் தகவல் தெரிவிப்பு அல்ல. ஆனால் தேவ மைந்தனின் தற்போதைய கடித வடிவக் கட்டுரையைப் படித்துவிட்டு, இதென்ன சமாசாரம், இது பற்றியும் எழுது, எழுது என்று திண்ணை வாசகர்களிடமிருந்து இனி வரவிருக்கும் மின்னஞ்சல்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அவர்களைத் திருப்தி செய்யப் பிள்ளையின் தினப்படி சேதிக்குறிப்புகளையெல்லாம் நான் கிளறியாக வேண்டும். புதுச்சேரிக்கும் போய் அங்குள்ள வேறு பல பழைய ஆவணங்களைப் புரட்டிக் குறிப்புகள் எடுத்து வரவேண்டும். எனக்கு உள்ள பல்வேறு பொறுப்புகளுக்கிடையே இதெல்லாம் சாத்தியமாகுமா என்று மலைப்பாக இருக்கிறது. மேலும், வயதானது உடல் நிலையின் வாயிலாகத் தன்னை எனக்கு உணர்த்துவது அதிகரித்துவிட்டிருக்கிறதே!


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்