படித்ததும் புரிந்ததும்..(9) பாகிஸ்தான் நெருக்கடியும் : இந்தியாவின் செருப்புக்கடியும்;

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

விஜயன்



நவம்பர் 3 – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி முஷரப் நெருக்கடி நிலை அறிவிப்பு. பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிப் பறிப்பு, வீட்டுகாவல் எதிர்கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவல் மீடியா, வக்கீல்கள் கைது. பாகிஸ்தான் அரசியலைமைப்புச் சட்டம் ரத்து என்று அதிரடியாக ஒரு பிரகடனம் செய்து, பாகிஸ்தானில் “நெருக்கடி” நிலை சட்டப்படி பிரகடனம் செய்யப்பட்டதா அல்லது நெருக்கடி நிலை என்ற பெயரால் ராணுவ ஆட்சியா போன்ற விளக்கங்களுக்கு, சில குறிப்புகள் – ஆகஸ்ட் 14ம் நாள் 1947ல் பாகிஸ்தான் சுதந்திரமடைந்து 1956ல் ஜனநாயக குடியரசுக்கான அரசியலமைப்பு சட்டம் இயற்றி பின்னர் 1969ல் யாக்கியா கானால் அது ரத்து செய்யப்பட்டு 1969லிருந்து ராணுவ ஆட்சி தொடர்ந்து சிறிய இடைவெளியில் புட்டோ பிரதமராக ஆண்டு, மீண்டும் ஜீயா ராணுவ ஆட்சி தொடர்ந்து, பின்னர் சிறிது காலம் பெனசீர் புட்டோ, நவாப் ஷெரிப் ஆட்சி தொடர்ந்து மீண்டும் முஷரப் ராணுவ ஆட்சி வந்து பின்னர் 1973ம் ஆண்டு அரசியல் சட்டப்படி ஏதோ ஒரு மாதிரியான ஆட்சி, சட்டத்தின் ஆட்சி அல்ல, ராணுவ தளபதியின் இச்சைக்கேற்ப நடந்து உச்சக்கட்டமாய் ராணுவ தளபதியாய் இருந்தபோதே இரண்டாவது பதவியான அதிபர் பதவியை வகிக்க சட்டமியற்றி, அது கோர்ட்டில் விசாரணைக்கு வந்து, அதன் தீர்ப்பு வருமுன் தேர்தல் நடத்தி தீர்ப்பு தனக்கு சாதகமாய் இருக்காது என்று தெரிந்து நவம்பர் 3ல் நெருக்கடிப் பிரகடனம் செய்யப்பட்டது.
“யானோ அரசன் யானே கள்வன்” என்ற சிலப்பதிகார கூற்று போல நெருக்கடியை ஏற்படுத்தியவரே, நெருக்கடி நிலை பிரகடனம் செய்வது கேலிக்கூத்து. பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தனக்கு சாதகமாய் தீர்ப்பளிக்க மறுத்ததால் தலைமை நீதிபதி சவுத்ரியைப் பதவி நீக்கம் செய்து அந்த பதவி நீக்கம் செல்லாது என 13 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் 10 பேர் மெஜாரிட்டி, தீர்ப்பில் அறிவித்தபின், பாகிஸ்தான் மீண்டும் ஜனநாயக ஆட்சிக்காக பழைய தலைவர்கள் மேல் உள்ள கிரிமினல் நடவடிக்கையை ரத்து செய்து சட்டம் பிறப்பித்து, மீண்டும் அவர்களின் தேர்தல் ஆதரவில் அதிபர் மற்றும் ராணுவ தளபதி இரண்டைய சர்வதிகாரமாய் பெற திட்டமிட்டு திட்டம் பலிக்காத போது நெருக்கடி நிலை, பிரகடனம்!

பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி முதலில் நெருக்கடி நிலை “அதிபர்” பிரெஸிடென்ட் மூலம்தான் அறிவிக்க முடியும். முஷ்ரப் தற்போது பாகிஸ்தானின் அதிபர் அல்ல அவர் தேர்தல் நீதிமன்ற நிலுவையில் உள்ளது. ஆடுத்து நெருக்கடி நிலையின் போது மந்திரிசபை, சட்டசபை கவர்னர் ஆகியோரின் அதிகாரத்தை நிறுத்தி வைக்கலாம் மற்றும் சில அடிப்படை உரிமைகளுக்காக கோர்ட்டுக்கு செல்வதை தடை செய்யலாம். ஓட்டு மொத்தமாக அரசியல் சட்டத்தையே நிறுத்திவைக்க முடியாது. அரசியல் சட்டத்தை நிறுத்தி வைத்து நெருக்கடி நிலைப் பிரகடனம் சாத்தியமே அல்ல. அது ராணுவ ஆட்சிதான். நெருக்கடி நிலை உள்ள போது நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் ரத்து செய்ய அதிகாரமே பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. இது முழுக்க முழுக்க “சர்வாதிகார சட்டத்திற்கு உட்படாத ஒரு கொடிய ஆட்சி” ஆங்கில பழமொழி போல “அதிகாரம் ஊழல் செய்யும் முழுமையான அதிகாரம் முழுமையான ஊழல் செய்யும் என்பது போல முஷாரப் சர்வாதிகாரமாய் செயல்பட்டுள்ளார். “அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும் என்ற சிலப்பதிகார சிந்தனை போய் “உள்@ர் அரசியல் யதேச்சதிகாரப் போக்கிற்கு அமெரிக்க வல்லரசின்” கூற்று என்ன? மனித உரிமை மீறளுக்காக சர்வதேச கூட்டமைப்பின் ராணுவ தலையீடு ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் சாத்தியமென்றால், ஏன் பாகிஸ்தானில் முடியாது. “சர்வதேச கூட்டமைப்பு” செக்ய+ரிட்டி கவுன்சில் பாகிஸ்தான் மக்களுக்காக ஏன் தலையிடக்கூடாது மீண்டும் அங்கே சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தக் கூடாது போன்ற கேள்விகளுக்கு “லிண்டா ரைஸ்“ தான் பதில் சொல்ல வேண்டும்.

நல்லவேளை இதெல்லாம் பாகிஸ்தானில்தான், இந்தியாவில் இதுபோல் இல்லை என்று இறுமாப்பு கொள்வோருக்கு, பிரதமர் மன்மோகன் சிங்கின் நவம்பர் 5ம் தேதி கூட்டாச்சி தத்துவத்தின் உரை ஒரு “செருப்புக்கடி”. இந்தியாவில் பல கட்சி மத்திய ஆட்சி நிர்வாகம் எதையும் நடக்கவிடாமல் குறிப்பாக தேசிய நதிநீர் பிரச்சனை மற்றும் அதுபோன்ற தேசிய பிரச்சினைகளில் பிராந்திய கட்சியின் குறுகிய பார்வை தேசிய நலனை பாதிக்கிறது என்பது, மத்திய அரசின் கால் செருப்பில் ஏற்பட்ட செருப்புக்கடி. இந்திய அரசியல் சீரமைப்பில் தேசிய கட்சிகளுக்கு அங்கிகாரம் தனியாக இருப்பதால் “நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேசிய அங்கிகாரம் பெற்ற தேசிய கட்சி மட்டும் தான் போட்டியிட முடியும் என்ற மக்கள் பிரதி நிதித்துவச் சட்டத்திருத்தம் வந்தால் இந்த 23 கட்சி கூட்டணி தேசிய நிர்வாகத்தை விட்டு நீங்கி இரண்டு அல்லது 3 கட்சியாகக் குறைந்தால் (அமெரிக்காவில் ரிப்பப்ளிக் மற்றும் டெமாக்ரடிக் போல, இங்கிலாந்தில் லேபர் கன்ஸர்வேட்டிவ் போல) மத்திய அரசின் பிராந்திய செருப்புக்கடி நீங்கும். இந்தியாவின் தேசிய நிர்வாகத்தில் பிராந்திய குறுக்கீடு எந்த முன்னேற்றத்தையம் தராது. இந்த சீர்திருத்தம் சாத்தியமா என்று கேட்டால் இதற்கான சட்ட வடிவத்தை தர நான் ரெடி, நீங்க ரெடியா? அதெல்லாம் சரி திண்ணையில் கட்டுரை எழுதி என்ன பிரயோஜனம்? முடிவெடுக்கிற இடத்திலிருந்து கருத்து சொல்லாம? என்று சிலர் முனுமுனுப்பது என் காதில் கேட்கிறது. அவர்களுக்கு “சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்” என்ற பாடல் வரிதான் பதில்!.


kmvijayan@gmail.com

Series Navigation

விஜயன்

விஜயன்