கவிஞர் ரசூலின் கட்டுரையும் சர்ச்சையும்

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

மன்சூர் ஹல்லாஜ்



கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் இசுலாத்தைப் பின்பற்றுகிற முற்போக்கு சிந்தனையுள்ள மனிதநேயக் கவிஞர். உயிர்மை பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரை மிகுந்தசர்ச்சையை அவர் சார்ந்துள்ள சமயத்தார் மத்தியிலும் ஆழ்ந்த வாசிப்பை பிற சமயத்தார் மத்தியிலும் உருவாக்கி உள்ளது.

சமயத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்தக் கூடாது என்பதுதான் தொன்று தொட்டு வரும் வழக்கமாக உள்ளது. சமயம் கூறுவதை அப்படியே ஒப்புக் கொள்கிற நம்பிக்கைதான் இருக்க வேண்டும் என்பர் சமயவாதிகள்.

ஆய்வு செய்வதற்குப் பெளதீக விஞ்ஞானத்தையோ ரசாயன விஞ்ஞானத்தையோ கவிஞர் ரசூல் தேர்வு செய்திருந்தால் இத்தனை பெரிய சர்ச்சை வந்திருக்காது.

கவிஞர் ரசூல் இஸ்லாமியராகப் பிறந்து தொடர்ந்து இஸ்லாமியராக இருந்து வருவதால் இஸ்லாமிய வேதமான திருக்குரான் மீது நம்பிக்கை மட்டுமே வைக்க அவர் கடமைப் பட்டவர் ஆகிறார்.

கவிஞர் ரசூல் நம்பிக்கை மட்டுமே வைத்து நடைமுறையில் கடைபிடிக்க வேண்டிய திருக்குரானை,எதார்த்தமான நோக்கத்தில் மறுவாசிப்புச் செய்து குடிகலாச்சாரம் பற்றி திருக்குரான் என்ன சொல்கிறது என்று ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்.

இஸ்லாம் சமயத்தை துளியளவும் அவர் இழிவுபடுத்தவில்லை. இழிவுபடுத்திவிட்டார் என்று சாட்டப்பட்டுள்ள குற்றத்திற்கு அவரல்ல, அவருடைய ஆய்வு மனப்பான்மைதான் காரணமாகி உள்ளது.மதம் அவருடைய ஆய்வை மறுக்கிறது.

மதம் மறுப்பதாக சொல்வது கூட சரியில்லை. மதவாதிகள் மறுக்கிறார்கள் என்பதுதான் சரி. இன்னும் அவர் இஸ்லாத்தில் இருப்பதைத்தான் பெருமையாகக் கருதுகிறார் என்பதற்கு அடையாளமாக ஊர்விலக்கம் செய்ததை எதிர்த்து அவர் மேல்முறையீடும் செய்திருக்கிறார்.

குடியைப் பற்றி திருக்குரான் கூறியிருக்கிற வசனங்களுக்குள் வசித்துக் கொண்டிருக்கிற கனத்த மெளனங்களை ரசூல் சப்திக்க செய்திருக்கிறார். அந்த சப்த சொரூபம் இஸ்லாத்தை இழிவுபடுத்துவதாக கூறப்படுமானால் அதை மறுத்து வேறு ஓசை நயங்களை மற்றவர்கள் தரலாம்.

இறைவசனங்களுக்கு இருவேறு வியாக்கியானங்கள் செய்வதை தவிர்க்க, அதற்கான மெய்ப் பொருளைக் காணும் முயற்சி ஊக்குவிக்கப்படுவது தானே மெச்சத்தக்கது.

இஸ்லாத்தின் இறைவசனங்களின் ஈடு இணையற்ற மகிமையை நன்கு அறிந்துள்ள மார்க்க அறிஞர்கள் தான் இதுபற்றி விரிவாக விவாதிக்க வேண்டும்.

இதோ இங்கே ஒரு மார்க்க அறிஞர் ஜியாவுதீன் சர்தார் 13 – 2 – 2006 தேதியில் த ஹிந்து பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் கடைசிப்பகுதி(தமிழ் மொழிபெயர்ப்பில்)

இஸ்லாம் இக்காலத்திற்கு பொருந்தும் அர்த்தத்தையும் அதன் அவசியத்தையும் இசுலாம் சமூகம் கண்டாக வேண்டும். எனது அபிப்பிராயம் இதற்கான தீவிர ஆலோசனை இஸ்லாமுக்குள் நீண்டகாலமாக இல்லை என்பதுதான்.
சென்ற ஒரு நூற்றாண்டிற்கும் அதிகமாகவே முஸ்லிம் அறிஞர்களும்,சிந்தனையாளர்களும்,இஸ்லாம் சமயத்தை சீர்திருத்த யோசனை தெரிவித்து வந்திருக்கிறார்கள். ஆகவே இஸ்லாம் சமயத்திற்கு இன்றைய நவீன காலத்திற்குப் பொருந்தக் கூடிய அர்த்தத்தை கண்டுபிடிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

இவரைப் போல்தான் இன்னொரு தளத்தில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்களின் இஸ்லாத்தில் குடி கலாச்சாரம் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரையை மே மாத உயிர்மை இதழ் வெளியிட்டுள்ளது.


mansurumma@yahoo.co.in

Series Navigation

மன்சூர்ஹல்லாஜ்

மன்சூர்ஹல்லாஜ்