ஹைதராபாத் முஸ்லிமீன் கட்சியின் அராஜகப் பாரம்பரியம்

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

மலர்மன்னன்


ஹைதராபாதில் மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸல்மீன் என்கிற முகமதியரின் அரசியல் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் தம் ஆதரவாளர்களுடன் பத்திரிகையாளர் சங்கத்தினுள் அத்துமீறி நுழைந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீடு கூட்டத்திற்கு வந்திருந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் தங்களுடைய பலத்தைப் பரீட்சை செய்துபார்த்ததாக வெளியான செய்தி எனக்கு எவ்வித அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. வெறும் பூச் சாடியைத்தானா அந்த வெட்கங்கெட்ட பெண் மீது எறிந்தீர்கள்? அட கையாலாகாதவர்களே! கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்துச் செல்லாமல் எதற்காக அங்கு போனீர்கள்? வெறும் விளம்பரம் தேடிக்கொள்வதற்குத்தானா? என்று ஹைதராபாதிலிருந்து வெளிவரும் சில உருது பத்திரிகைகள் பகிரங்கமாக வன்முறையைப் பிரசாரம் செய்ததையோ, முஸ்லிமீன் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவினர் நாங்கள் நஸ்ரீனைக் கொலை செய்து பழிவாங்க ஆயுதங்களுடன் காத்திருந்தோம். அதற்குள் முஸ்லிமீன்கள் சிறு கலவரம் செய்து காரியத்தைக் கெடுத்துவிட்டார்கள்; நஸ்ரீனும் பிறரும் எச்சரிக்கையடைந்து விட்டதால் எங்கள் திட்டம் நிறைவேறவில்லை என்று வருத்தம் தெரிவித்ததோ கூட எனக்கு வியப்பளிக்கவில்லை. ஏனெனில் முஸ்லிமீன் கட்சியின் பாரம்பரியம் இன்னதென்று எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு சுயேற்சையான குறு நிலமாக நைஜாம் சமஸ்தானம் விளங்கிய கால கட்டத்தில் அந்தக் கட்சியினர் செய்த அட்டகாசங்களை நன்கு அறிவேன். செகந்திராபாதில் வசித்த அசோக மித்திரன் என்னை விட இன்னும் நன்றாகவே இதனை அறிந்திருக்கக் கூடும். ஆனால் அவரெல்லாம் ஏனோ இதுபற்றியெல்லாம் வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ இல்லை. தமது பதினெட்டாவது அட்சக் கோடு நாவலில் அவர் ரஜாக்கர் என்கிற குண்டர் படை ஹைதராபாதிலும் தெலுங்கானாவிலும் செய்த அட்டூழியங்களை மிக விரிவாகவே எழுதியிருக்க முடியும். அதை அவர் செய்யவில்லை. ஆகையால் அவ்வப்போது தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் வழியாகவும் மிரட்டல்களைப் பெறுவது வழக்கமாகிவிட்டிருக்கிற நான்தான் இதைப் பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொல்லவேண்டியதாகிறது.

1947 ஆகஸ்ட் 15 க்கு முன் நாங்கள் வசித்தது நாங்கள் என்பது என் அப்பா அம்மா சகோதரிகளுடன் நானும் உள்ளிட்ட ஒரேயொரு தமிழ்க் குடும்பம்இன்றைக்குத் தனது விரிவான காகித ஆலையின் காரணமாகவே அகில பாரதமும் அறிந்து வைத்திருக்கிற ஸிர்பூர் காகஸ் நகர் என்கிற சிற்×ரில். அன்று அது மிகவும் சிறிய ஊராகக் கொத்த பேட்ட என்கிற தெலுங்குப் பெயருடன் விளங்கியது. நைஜாம் சமஸ்தானத்திற்குட்பட்ட அந்த ஊர் மூங்கில் காடுகள் சூழ வறுமைப்பட்டுக் கிடந்தது. நைஜாம் மன்னரின் பல்கிப் பெருகிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு (அதிகாரப் பூர்வமாக மூன்று மனைவிகள், 42 ஆசை நாயகிகள், 200 பிள்ளைகள் மற்றும் கணக்கில் வராத பேரப் பிள்ளைகள்) அந்த மூங்கில் காட்டை அழித்துக் காகிதம் செய்ய ஆர்வம் பிறந்ததால் கொத்த பேட்ட காகஸ் நகர் எனப் பெயர் மாற்றம் பெற்றது. இருந்தாலும் பேச்சு வழக்கில் அது கொத்தப் பேட்ட என்றே தொடர்ந்து வழங்கி வந்தது.

தெலுங்கு அறிந்தவர்களுக்குத் தெரியும், கொத்த என்றால் புதிய. பேட்ட என்பது பேட்டைதான். அதாவது புதிய பேட்டை. பழைய பேட்டை மூங்கில் காட்டினுள் எங்கோ ஒளிந்து கிடந்திருக்கக் கூடும்.

கொத்த பேட்டையில் காகித ஆலை நிறுவும் தொடக்கப் பணிகள் ஆரம்பிக்கவும், பல முகமதியக் குடும்பங்கள் அங்கு குடியேறலாயின. கொத்த பேட்ட அவர்கள் வாயில் நுழைவது சிரமம். ஆனால் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், கொஞ்சங்கூட உறுத்தல் இல்லாமல் குத்தா பேட் என்றே உச்சரிப்பார்கள்! குத்தா பேட் என்றால் நாயின் வயிறு என்பது ஹிந்துஸ்தானி அறிந்தவர்களுக்குத் தெரியும். முகமதியர் குடும்பத்துப் பெண்மணிகள் மிகவும் சலிப்புடன் யே குத்தா பேட்மே குச்பி நஹி மில்தி (இந்த நாயின் வயிற்றில் எதுவுமே கிடைப்பதில்லை) என்று புகார் சொல்வதைக் கேட்கிற போது மிகவும் சிரமத்துடன் சிரிப்பை அடக்கிக் கொள்ள வேண்டிவரும்.

ஆக, கொத்த பேட்ட என்று தெலுங்கில் பெருமிதத்தோடும் குத்தா பேட் என ஹிந்துஸ்தானியில் இளப்பமாகவும் வழங்கி வந்த நாயின் வயிற்றில் மாட்டுத் தொழுவம் போன்ற ஒரு விசாலமான குடிசையில்தான் நான் பிறக்கவே செய்தேன். ஏனெனில் நான் பிறந்த சமயத்தில் மக்கள் வசிப்பதற்கான கல் கட்டிடம் ஏதும் அங்கு கட்டப்பட்டிருக்கவில்லை.

நைஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஊரில், முகமதியர் செல்வாக்கு பெருகத் தொடங்கிய பகுதியில் பிறந்து வளர்ந்ததால் அந்த சமஸ்தானதிற்கே உரியதாகத் தோன்றிய இயக்கத்தின் மூல வேர் எது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். தொண்டர் என்னும் கவுரவமான பொருள் தரும் ரஜாக்கர் என்று அறியப்பட்ட வெறும் அடியாள்கள் கூட்டத்தின் சந்ததிதான் இன்று இப்படி ஓர் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்று ஆளும் கட்சியான காங்கிரசின் கூட்டாளியாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஹைதராபாத் தெருக்களிலும், ஆந்திரப் பிரதேசத்தில் முகமதியர் எண்ணிக்கை கூடுதலாக உள்ள ஊர்களிலும் கையில் ஆயுதங்களுடன் அலைந்து கொண்டிருக்கிறது.

மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸ்லிமீன் இன்று ஹைதராபாதில் மிகவும் செல்வாக்கும் செல்வச் செழிப்பும் மிக்க ஓவைசி என்கிற குடும்பத்தின் சொத்தாகப் பராமரிக்கப் பட்டு வருகிறது. அண்ணன் அஸாவுதீன் ஓவைசி ஹைதராபாத் மக்களைவைத் தொகுதியின் பிரதிநிதி. தம்பி அக்பருதீன் ஓவைசி ஆந்திரப் பிரதேச சட்ட மன்ற முஸ்லிமீன் கட்சித் தலைவர். இவர் ஹைதராபாத் மாநகரின் சார்மினார் சட்ட மன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். சகோதரர்கள் முக்கியத்துவம் பெறுவதற்கு முன் அவர்களின் தகப்பனார் சலாவுதீன் ஒவைசிதான் மக்களவை, சட்ட மன்றம் என்று மாறி மாறிப் போய் வந்து கொண்டிருந்தார். உடல் தளர்ந்ததுவிடவும் பதவிகளை மகன்களிடம் ஒப்படைத்து ஓய்வெடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்.

இன்றைக்கு ஹைதராபாதிலும் சுற்றுப் புற ஊர்களிலுமாக 4500 குண்டர் குழுக்கள் ஓவைசி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஆந்திர மாநில காவல் துறையின் உளவுப் பிரிவு கணக்கெடுத்து வைத்திருக்கிறது. காவல் துறைக்கு சட்டம் ஒழுங்கைச் சரியாக நிர்வாகம் செய்வதற்கான சுதந்திரம் தரப்பட்டிருந்தால் ஒரே நாளில் இந்தக் குண்டர் குழுக்களை ஒடுக்கிவிட முடியும். ஆனால் வாக்கு வங்கி அரசியல் காவல் துறையின் கைகளைக் கட்டிப்போட்டுள்ளது. இப்பொழுதுள்ள சாலமன் ராஜசேகர ரெட்டியின் தலைமையிலான காங்கிரஸ் அரசு முஸ்லிமீனுடன் கூட்டே வைத்திருக்கிறது. தெலுங்கு தேசமே ஆட்சிக்கு வந்தாலும் அதுவும் எங்கே வாக்குகளை இழந்துவிடுவோமோ என்கிற அச்சத்தில் முஸ்லிமீன் குண்டர் படையைக் கண்டுகொள்ளாது.

ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக உள்ள தெலுங்கானா, இன்று கர்னாடக மா நிலத்தின் பகுதியாக உள்ள பிஜப்பூர், குல்பர்கா, பீடார் மாவட்டங்கள், இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் ரங்கா ரெட்டி மாவட்டம் என்று வழங்கப்படுகிற முன்னாள் மும்பை மாநிலப் பகுதி ஆகியவை சேர்ந்த நிலப் பரப்புதான் நைஜாம் சமஸ்தானமாக முன்பு விளங்கி வந்தது. நான் பிறந்து வளர்ந்த கொத்த பேட்ட என்கிற காகஸ் நகர், தெலுங்கானாவைச் சேர்ந்தது.

ஹைதராபாத் சமஸ்தானத்தில் பெருமளவில் வசிக்கும் முகமதிய மக்களின் வறுமை, கல்லாமை ஆகியவற்றைக் களைவதும், சமூகத்தில் அவர்களின் கவுரவத்தைக் காப்பதும் தனது கொள்கை என அறிவித்து 1927 ல் தொடங்கப் பட்ட மஜ்லிஸ் ஏ இதாஹாதுல் முஸ்லிமீன் உண்மையில் நிஜாமின் அதிகார பலத்தைக் கட்டிக் காக்கும் ஆயுதந் தாங்கிய படையாகத்தான் இயங்கி வந்தது. மஜ்லிஸ் என்பது கூட்டமைப்பு என்பதைக் குறிக்கும். முகமதியரின் சகல பிரிவுகளையும் ஒருங்கிணைத்து நைஜாம் மன்னரின் விசுவாசிகளாக அனைத்துத் தரப்பினரையும் பிணைத்து வைத்திருப்பதுதான் அதன் கடமையாக இருந்தது.

இதேஹாத் பைனுல் முஸ்லிமீன் என்று தொடக்கத்தில் பெயர் சூட்டப் பட்ட இக்கட்சி பிறகு மும்லிகத் ஏ மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸ்லிமீஎன் எனப் பெயர் மாற்றம் பெற்றது. மாற்றமெல்லாம் பெயரில் மட்டுந்தான்; சுபாவம் அப்படியேதான் இருந்து வந்தது. இன்றும் அதே மனப் போக்குடன்தான் நீடிக்கிறது.

ஹிந்துஸ்தானத்தில் சுதந்திரக் காற்று வீசுவதற்கான பருவ நிலையும், அதோடு கூடவே பாகிஸ்தான் என்கிற பெயரில் முகமதியருக்கான தனி தேசம் ஒன்று உருவாகும் சாத்தியக் கூறும் நிலவியபோது நைஜாம் மன்னரின் மகுடமும், அரியணையுமே ஹைதராபாத் முகமதியரின் கலாசார அடையாளம்; அதனை இழக்கச் சம்மதியோம் என அறைகூவித் திரிந்தது, முஸ்லிமீன். ஹைதராபாத் சமஸ்தானம் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் சுயாட்சி அதிகாரத்துடன் நைஜாம் மன்னரால் ஆளப்பட்டு வரவேண்டும்; அது சாத்தியமில்லையேல் பாரதத்துடனோ பாகிஸ்தானுடனோ இணையாமல் ஒரு சுதந்திர நாடாக விளங்கி

வரவேண்டும் என முஸ்லிமீன் வலியுறுத்தி வந்தது.

ஹைதராபாத் நகரம் உள்ளிட்ட தெலுங்கானாதான் நைஜாம் சமஸ்தானத்தின் மையப்பகுதியாக இருந்தது. அங்கு நைஜாமின் பிரதிநிதிகளாக அதிகாரம் செலுத்திய நிலப் பிரபுக்களின் பிடியிலிருந்து ஏழை விவசாயத் தொழிலாளர்களை மீட்கும் போராட்டத்தைப் பொதுவுடமைக் கட்சி ஒருபுறம் தொடங்கியபோது, மறுபுறம் காங்கிரஸ் கட்சி ஹைதராபாத் சமஸ்தானம் பாரதத்துடன் இணையவேண்டும் என்ற இயக்கத்தை முன்னின்று நடத்தியது. ஆந்திர மகா சபை என்ற அமைப்பு, ஹைதராபாத் சமஸ்தானத்தின் தெலுங்கானாவும் மும்பை மா நிலத்திலும் சென்னை மா நிலத்திலும் சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளும் இணைக்கப்

பட்டு, விசால ஆந்திர மாநிலம் தோற்றுவிக்கப்பட வேண்டும் எனப் பிரசாரம் செய்தது. இவை அனைத்திலும் ஹிந்துக்களே அங்கம் வகித்தனர். குறிப்பாகப் பொதுவுடமைக் கட்சியில் ஹிந்துக்கள்தான் இருந்தனர். ஏழை முகமதியருக்காகவும் சேர்த்தே அவர்கள் கிளர்ச்சி செய்தனர். ஆனால் ஏழை எளிய முகமதியரும் மத ஒற்றுமைக்குக் கட்டுப்பட்டு முஸ்லிமீன் ஆதரவாளர்களாகவே இருந்தனர்.

நைஜாம் சமஸ்தானத்தின் தனித் தன்மையை இழக்கச் செய்யும் பிரசாரங்களை முறியடிக்கவும், நைஜாமின் ஆதரவளர்களான நிலச் சுவான்தாரகளுக்குத் தொல்லை தரும் பொதுவுடமைக் கட்சியினரை ஒடுக்கவும் முஸ்லிமீன் கையாண்ட வன்முறை காலப் போக்கில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலாகப் பரிணாமமடைந்தது. வழக்கம் போல ஹிந்துக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் சேதாரம், மானபங்கம் என முஸ்லிமீன் தனது அட்டகாசத்தைத் தொடர்ந்தது. நைஜாம் சமஸ்தானம் முழுவதும் ஹிந்துக்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத நிலை உருவாகியது.

ஹைதராபாதின் துணை நகரம் போலிருந்து வந்த செகந்திராபாத் பிரிட்டிஷ் படைகளின் முகாமாகச் செயல்பட்டு வந்ததால் அந்தப் பாதுகாப்பு வளையத்தினுள் ஹிந்துக்கள் பத்திரமாக வசிக்க முடிந்தது. ரஜாக்கர் என அறியப்பட்ட முஸ்லிமீன்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட முப்பதாயிரத்திற்கும் அதிகமான ஹிந்துக்கள் ஹைதராபாதிலிருந்தும் அதன் சுற்றுப் புறங்களிலிருந்தும் தப்பி செகந்திராபாதில் தஞ்சம் புகுந்தனர். அன்று ஹைதராபாதில் அட்டகாசம் செய்து திரிந்த ரஜாக்கர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் என்று ஒரு புள்ளி விவரம் உள்ளது. சமஸ்தானத்தின் காவல் துறை அந்த ரஜாக்கர்களுக்கு எடுபிடியாக ஊழியம் செய்தது.

1946, 47 ஆண்டுகளில் ரஜாகர்களின் அட்டகாசம் உச்ச கட்டத்தை அடைந்தது. கொலை கொள்ளை, தீ வைப்பு, பாலியல் கொடுமைகள் அதிகரித்தன (அச்சமயம் காகஸ் நகரில் வெகு சொற்ப எண்ணிக்கையில் இருந்த ஹிந்துக் குடும்பங்களுக்கு அக்கம் பக்கம் இருந்த முகமதியர் மறைமுகமாக மிரட்டல் விடுக்கத் தொடங்கினார்கள், ஊரைவிட்டுப் போய் விடுமாறு! உயிருக்கோ உடமைகளுக்கோ எவ்வித உத்தரவாதமும் இல்லாத நிலையைப் புரிந்துகொண்டு வெளியேறிய எங்கள் குடும்பம், புதுச்சேரிக்கு வந்து அரவிந்த ஆசிரமத்தில் சேர்ந்தது. என் தந்தையார் ஸ்ரீ அரவிந்தரின் தொடக்க காலச் சீடர்களுள் ஒருவராக இருந்தமையால் எவ்விதச் சிக்கலும் இன்றி அரவிந்த ஆசிரமத்தில் எங்களுக்கு இடம் கிடைத்தது. 1947 ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் நாங்கள் பிரஞ்ச் இந்தியாவில் வசிக்கலானோம். அதாவது ஆகஸ்ட் 15 க்குப் பிறகும் எங்களது அடிமை அந்தஸ்து தொடர்ந்தது! ).

1947 ஆகஸ்ட் 15 க்குப் பிறகு ஹைதராபாத் சமஸ்தானத்தில் ரஜாக்கர்களின் வன்முறை எல்லை மீறியது. பாதிக்கப்படும் ஹிந்துக்களுக்கு ஆறுதலளிக்க ஆரிய சமாஜம் மும்முரமாக முனைந்தது. அதன் விளைவாக ஆரிய சமாஜத்தினரும் ரஜாக்கக்ர் தாக்குதலுக்கு இலக்காயினர். ஆந்திர மகாசபையும், காங்கிரசும் தலைமறைவாகி விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கின.

ரஜாக்கர் என்றே அறியப்பட்ட முஸ்லிமீன் கட்சிக்கு காசிம் ரிஸ்வி என்பவர் தலைமை ஏற்று, விடுதலை இயக்கத்தை ஒடுக்கும் சாக்கில் மிகவும் முரட்டுத்தனமான தாக்குதலை ஹிந்துக்கள் மீது தொடர்ந்தார்.

1947 ஆகஸ்ட் 15 க்குப் பிறகு ஹைதராபாத் சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைத்துவிடுமாறு பாரத அரசாங்கம் நைஜாம் மன்னருக்கு அறிவுரை கூறியது. ஆனால் அவர் சுதந்திர நாடு என்கிற கனவு கலைந்ததும் பாகிஸ்தானுடன் இணையும் முயற்சியை மேற்கொண்டார். இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு விண்ணப்பம் செய்தார். ரகசியமாக வெளிநாடுகளிலிருந்து நவீன ஆயுதங்களை வரவழைத்தார். அதிகாரம் முழுவதையும் ரஜாக்கர் கையில் ஒப்படைத்துவிட்டுப் பெயரளவில் ஆட்சிக்கு அதிபதியாக இருப்பதோடு திருப்தியடைந்தார். சமஸ்தானப் பிரதம மந்திரி மீர் லியாகத் அலிகானும் ரஜாக்கர் தலைவர் காசிம் ரிஜ்வியும் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை முடிந்தவரை துஷ்பிரயோகம் செய்யலானார்கள். பாரதத்துடன் இணைப்பு கோரிய ஆந்திர காங்கிரசும்,

ஆ ந்திர மகா சபையும் கம்யூனிஸ்ட் கட்சியும் தடை செய்யப்பட்டன. தெலுங்கானாவில் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் கட்சி, சமஸ்தான இணைப்பிற்காகவும் ஆந்திர மகாசபையுடன் இணைந்து போராடியது. கம்யூனிஸ்ட் கட்சியில் விரல்விட்டு எண்ணத் தக்க முகமதியரும் இருந்தனர். ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ராமானந்த தீர்த்தர் சமஸ்தான இணைப்புக் கிளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றார்.

ஹைதராபாத் சமஸ்தானத்தின் மக்கள் தொகையில் 93 சதம் ஹிந்துக்களேயாவர். பாரதத்துடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை இணைக்க வேண்டும் என்கிற போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களும் ஹிந்துக்கள்தாம். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த காரணத்தால் இணைப்புக்கு ஆதரவு தெரிவித்த முகமதியர் வெகு சிலரே. அன்றைய

கால கட்டத்தில் ஹைதராபாத் சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பானது ஹிந்துக்கள் மீதான எதிர்ப்பாகவே இருந்தது. அந்த எதிர்ப்பு கொலை, கொள்ளை, மான பங்கம் என்பதாகவும் இருந்தது.

1947 நவம்பரில் நைஜாம் பாரத அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஓராண்டு காலத்திற்கு இரு தரப்பிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அப்போதைய நிலையே தொடரச் செய்வதென்றும், அதன்பிறகு முடிவு எடுக்க முனைவதென்றும் நைஜாமுக்குச் சாதகமாகவே அந்த ஒப்பந்தம் அமைந்தது. நைஜாமை விட்டுப் பிடிக்கலாம் என்பது பாரத அரசின் எண்ணம். ஆனால் அந்த இடைக்காலத்தை ரஜாக்கர் தலைவர் ரிஸ்வியும், பிரதமர் லியாகத்தும் தங்கள் வலிமையைப் பெருக்கிக்கொள்வதற்கும், கிளர்ச்சியை அடக்கும் சாக்கில் ஹிந்துக்களை வதைப்பதற்கும் பயன்படுத்தலானார்கள். நிலைமை எல்லை மீறிப் போகவே, 1948 செப்டம்பர் மாதம் 13 ந் தேதி பாரத ராணுவம் மேஜர் ஜெனரல் ஜே என் சவுதரி தலைமையில் ஐந்து திக்குகளின் வழியாக ஹைதராபாதினுள் புகுந்தது. அய்ந்தே நாட்களில் ஆயிரக் கணக்கான ரஜாக்கர்களைக் கொன்று குவித்து நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. அரசுக்கு திட சங்கற்பமும், பொறுப்பை உரியவர்களிடம் ஒப்படைத்து

விட்டு நிலைமையைக் கண்காணிப்பதோடு ஒதுங்கிக்கொள்ளும் போக்கும் இருந்தால் பயங்கர வாதச் செயல்களை வெகு எளிதாகவும் விரைவாகவும் ஒடுக்கிவிட முடியும் என்பதற்கு ஹைதராபாத் மீதான நடவடிக்கை ஓர் எடுத்துக்காட்டு. அன்று துணைப் பிரதமராகவும் உள்துறைக்குப் பொறுப்பாளராகவும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலும்,

கவர்னர் ஜெனரல் ராஜாஜியும் அதனை உள்நாட்டுப் போலீஸ் நடவடிக்கை என்று வர்ணித்து, ஹைதராபாத் சமஸ்தானத்தின் மீது பாரதம் போர் தொடுத்துவிட்டதாக எழுந்த கூப்பாட்டை அடக்கினார்கள்.

வல்லபாய் பட்டேல் ராஜாஜியுடன் ஆலோசனை கலந்து அந்த நடவடிக்கையை நேரடியாக எடுத்திராவிட்டால் ஹைதராபாத் இன்னொரு காஷ்மீராகியிருக்கும். போலீஸ் நடவடிக்கையையொட்டி, ஹைதராபாதின் அமைதியைக் குலைத்து வந்த லியாகத்தும் காசிம் ரிஸ்வியும் கைது செய்யப்பட்டதோடு, புணே சிறைச்சாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். முஸ்லிமீன் கட்சிக்கும் அதன் ரஜாக்கர் படைக்கும் தடை விதிக்கப்பட்டது. ரஜாக்கர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்தனர். மேஜர் ஜெனரல் சவுதரி செப்டம்பர் மாதம் 18ந்தேதி நைஜாம் மன்னரிடம் சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைப்பதாகக் கையொப்பம் பெற்றார். நிலைமை சரியாகும் வரை ஆளுநர் பொறுப்பை வகிக்குமாறு சவுதரிக்கு பாரத அரசு கட்டளை யிட்டது. அந்த வாய்ப்பை சவுதரி சரியாகப் பயன்படுத்தி முஸ்லிமீனை தலை தூக்கா வண்ணம் பார்த்துக் கொண்டார். அந்தப் பொறுப்பிலிருந்து அவர் விலகிக்கொண்டதும் நிர்வாகத்தில் தளர்வு ஏற்பட்டு, படிப்படியாக முஸ்லிமீன் வெளியே தலையை நீட்டலாயிற்று.

காசிம் ரிஸ்வி சிறையிலிருந்தவாறு முஸ்லிமீனுக்குத் தலைமை தாங்கத் தகுதி வாய்ந்த நபரைத் தேடலானார். எவருமே கட்சிக்குத் தலைமை ஏற்று அதற்குப் புத்தியிரூட்டத் துணியாதபோது, செல்வந்தரும், பிரசித்திபெற்ற வழக்குரைஞருமான அப்துல் வாஹித் ஓவைசி தலைமைப் பொறுப்பேற்க முன்வந்தார். அப்போது முதல் முஸ்லிமீன் ஒவைசியின் குடும்பச் சொத்தாகியது. வாஹித்துக்குப் பின் அவர் மகன் சலாவுதீன் ஓவைசி, அவருக்குப்பின் அவரது மகன்கள் என ஓவைசி குடும்பத்தின் பிடியில் முஸ்லிமீன் கட்சி தொடர்கிறது. இந்த ஒரு குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு பிரிவு விலகிச் சென்று தனிக் கட்சி தொடங்கியுள்ள போதிலும் ஹைதராபாத் முகமதியரிடையே ஓவைசி குடும்பத்தார் மீதான விசுவாசம் குன்றவில்லை. முகமதிய சமுதாயத்தினருக்கான கல்வி நிலையங்கள் பலவற்றை முஸ்லிமீன் சார்பில் ஓவைசி குடும்பதார் நிறுவியிருப்பது அவர்களின் செல்வாக்கு நீடிக்க உதவுகிறது (1958 ல் காசிம் ரிஸ்வி பாகிஸ்தானுக்குக் குடிபெயர்வதாகத் தெரிவித்து அந்த நிபந்தனையின் பேரில் விடுதலையாகி பாகிஸ்தானுக்குப் போய்ச் சேர்ந்தார். லியாகத் அலியும் அதற்கு முன்னதாகவே சிறையிலிருந்து தப்பி பாகிஸ்தானுக்கு ஓடிப் போனார். இதனால் ஹைதராபாத் முகமதியர் மீதான முழு அதிகாரத்தையும் வெகு எளிதாக ஓவைசி குடும்பத்தார் பெற முடிந்தது).

ஆரம்ப காலங்களில் முஸ்லிமீன் ஹைதராபாத் நகரின் சார்மினார் சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. முகமதியரிடையே கட்டுப்பாடான ஆதரவு பெருகி, தற்போது அதற்கு ஆந்திர சட்ட மன்றத்தில் ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர்.

இன்று ஒவைசி சகோதரர் இருவரிடமும் முஸ்லிமீன் கட்சி அடமானம் வைக்கப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது. மேடைப் பேச்சில் வல்லவர்களான இருவரும், நாம் ஆண்ட பரம்பரை என்பதை மறந்துவிடாதீர்கள் என்று பேசியே முகமதிய மக்களை உசுப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு சிறு சம்பவமாக இருந்தாலும் அதைப் பெருங் கலவரமாக முற்றச் செய்வதில் இருவரும் வல்லவர்கள். சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தபோது, முகமதியரைத் திரட்டி கல்லெறி, தீவைப்பு என ஊரையே அவர்கள் கலகலத்துப் போகச் செய்தனர். காவல் துறை செய்வதறியாது கைகளைப் பிசைந்துகொண்டு நின்றது. காரணம், முஸ்லிமீன் இன்று காங்கிரசின் கூட்டாளி! ஹைதராபாத் சமஸ்தானம் பாரதத்துடன் இணையக்கூடாது என அட்டூழியங்கள் செய்த முஸ்லிமீன் கட்சியைத்தான் காங்கிரஸ் தனது கூட்டாளியாகச் சீராட்டிக்கொண்டிருக்கிறது!

ஒவைசி குடும்பமே சட்டம் பயின்ற குடும்பம்தான். வாஹித்துக்குப் பிறகு முஸ்லிமீன் கட்சிக்குத் தலைமை ஏற்ற சலாவுதீன் ஓவைசி, பாரத அரசியல் சாசனத்திற்கு முரண் இல்லாதவாறு கட்சியின் சட்ட திட்டங்களை வகுத்தார். கட்சியின் மீதான கட்டுப்பாடுகள் யாவும் நீங்குமாறு செய்து அதனை ஒரு அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறச் செய்தார்.

சட்டம் பயின்றவராக இருந்தபோதிலும் சலாவுதீன் ஓவைசியின் பேச்சும் செயலும் சட்டத்திற்கு முரணாகவே இருந்து வந்துள்ளன. பாஸ்கர ராவ் செய்த சதியின் விளைவாக என் டி ராம ராவ் முதலமைச்சர் பதவியை இழந்து சட்டமன்றத்தில் மிகவும் மனம் நொந்து உட்கார்ந்திருந்தபோது சலாவுதீன் ஓவைசி அவர் எதிரில் நின்று கொண்டு மிகவும் அநாகரிகமாகத் திட்டித் தீர்த்ததை இன்றும் ஆந்திரத்தின் மூத்த அரசியல்வாதிகள் பலர் நினைவு கூர்ந்து வருந்துவதுண்டு. ராம ராவ் பதிலுக்கு ஒரு வார்த்தைகூடப் பேசாமல் ஓவைசி பொழிந்த வசைமாரியில் முழுக்க முழுக்க நனைந்த பிறகும் எதுவுமே நடைபெறாததுபோலப் பொறுமையாக இருந்தாராம்!

பாரத தேசத்திற்கு எதிராகச் செயல்பட்டு வந்த கட்சி முஸ்லிமீன் கட்சி. ஆனால் முன்பொருமுறை காங்கிரஸ் அரசு அதன் தலைவரான சலாவுதீனை தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் உறுப்பினராக நியமித்தது! தயவு தாட்சண்யமின்றிக் கடுமையாக நடத்தப்பட வேண்டிய ஒரு கட்சிக்கு இவ்வாறெல்லாம் அதன் தகுதிக்கு மீறிய

அங்கீகாரத்தை அளிப்பதால்தான் இன்று அது அரசாங்கத்தையே மிரட்டும் அளவுக்குத் துணிவு பெற்று வெளிப்படையாகவே வெட்டுவோம், குத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துக்கொண்டு திரிய முடிகிறது.


Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்