நிலமகளின் குருதி! (இறுதிப் பகுதி)

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

நரேந்திரன்


முதலில் இராக்கிய வரலாற்றினைச் சிறிது பின்னோக்கிப் பார்க்கலாம்.

இராக்கிய எண்ணெய் வளத்தின் தலைவிதியை நிர்ணயித்தவர்களில் Calouste Gulbenkian என்பவர் மிக முக்கியமான ஒரு நபர். 1920-களில், வளைகுடாப் பகுதியில் சவூதி அரேபியா என்ற நாடு உருவான ஆரம்ப நாட்களில், இன்றைய இராக்கின் பெரும்பகுதி சவூதி அரேபியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1925-ஆம் வருடம், அப்போதைய சவூதி அரசரைச் சந்தித்ததின் மூலம், இராக்கில் கண்டறியப்பட்ட அத்தனை எண்ணெய் வயல்களிலும் எண்ணெய் எடுக்கும் உரிமையை தனது “இராக்கிய பெட்ரோலியம்’ கம்பெனிக்கு வாங்கிய குல்பென்கியான், அதில் 95% சதவீதத்தை மேற்கத்திய எண்ணைய் நிறுவனங்களான, Anglo-Persian, Royal Duch Shell, ·ப்ரான்சின் C.F.P மற்றும் அமெரிக்க ஸ்டாண்டர்ட் ஆயில் டிரஸ்ட் (இன்றைய Exxon Mobile மற்றும் அதன் சகோதர) போன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கும் விற்றார்.

அதனைத் தொடர்ந்து, பெல்ஜியம் நாட்டின் ஒரு ஹோட்டலில் கூடிய மேற்படி எண்ணெய் கம்பெனிகளின் பிரதிநிதிகள், இராக்கிய எண்ணெய்க்குப் புதிய உபயோகம் கண்டுபிடித்தார்கள். அதாவது, முடிந்தவரை இராக்கிய எண்ணையைத் தொடாமல் இருப்பது மற்றும் இராக்கிய எண்ணெய் வயல்களைக் கட்டுப்படுத்தி அதனை மார்கெட்டிலிருந்து தனிமைப்படுத்துவது. மேலும் அக்கட்டுப்பாட்டினை உபயோகித்து உலக மார்க்கெட்டில் எண்ணெய் விலையை ஒரே சீராக வைப்பது போன்ற முடிவுகளை எடுத்தார்கள். அதன்படி, இராக்கிய எண்ணெய் வயல்களின் விவரங்கள் அடங்கிய வரைபடத்தின் மீது, அங்கு கூடியிருந்த எண்ணெய்க் கம்பெனிகளின் பிரதிநிதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளின் மீது சிவப்பு வட்டமிட்டுக் கையெப்பம் இட்டனர். அத்துடன் தாங்கள் ஒருபோதும் தனியாக, மற்றவர்களின் ஒப்புதலின்றி அந்த எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதில்லை என உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். இப்படியாக இராக்கிய எண்ணெயின் ஏகபோக உரிமை மேற்கத்திய நாடுகளின் கைகளுக்குச் சென்றடைந்தது.

அந்தத் திட்டம் 1960 வரை மிக நேர்த்தியாக செயல்படுத்தப்பட்டு வர, இராக்கிய எண்ணெய் வயல்களைக் குத்தகைக்கு எடுத்த மேற்கத்திய நிறுவனங்கள் வெளிப்பார்வைக்கு அந்த எண்ணெய் வயல்களைத் தோண்டுவது போல நாடகமாடினார்கள். எண்ணெய் கிடைக்கும் இடத்தை விட்டு இல்லாத இடங்களில் தோண்டுவது, எடுக்கும் எண்ணெயை மிக நிதானமாக சந்தைக்கு அனுப்புவது போன்ற காட்சிகள் மீண்டும் மீண்டும் நடத்தப்பட்டன. கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பிய இராக்கியர்கள், 1960களின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் ஷெல் நிறுவனங்களுக்கு அளித்த ஒப்பந்தங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றி தாங்களே எண்ணெய் எடுக்க ஆரம்பித்தார்கள்.

பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் ஒப்பந்தத்தை தூக்கி எறிந்ததைப் பொறுக்காத இங்கிலாந்து அரசாங்கம், பாக்தாதின் குரல்வளையை நெருக்கத் துடித்தது. படையெடுப்பிற்குத் தயாரான பிரிட்டிஷ் அரசாங்கம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் F. கென்னடியின் தலையீட்டினால் பின் வாங்க நேரிட்டது. ஏற்கனவே Cuban Missile Crisis போன்ற பிரச்சினைகளினால் தடுமாறிக் கொண்டிருந்த அமெரிக்கா மற்றுமொரு இடத்தில் பிரச்சினையை ஆரம்பிக்க விரும்பவில்லை. எனவே, JKF அளித்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி இராக்கிய அரசாங்கம் தனது வயல்களில் இருந்து எண்ணெய் எடுத்து வெளிச்சந்தையில் விற்க ஆரம்பித்தது.

ஆனால் அவர்களுக்குத் துன்பம் வேறொரு வழியில் தொடர்ந்தது. சவூதி அரேபியா போன்ற அவர்களின் சகோதர அரேபிய நாடுகளே அவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடத் துவங்கின. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட OPEC எனப்படும் Oil Producing and Exporting Countries என்ற கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கிய சவூதி அரேபியா, இராக்கிய எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கியது. உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் வளமுடைய நாடாக இருந்தாலும், சவூதி அரேபியாவி விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குத் தலை வணங்கியே ஆக வேண்டிய நிலைமையில் இருந்தது இராக். அந்நாட்டினை விடவும் குறைந்த அளவு எண்ணெய் வளமுடைய இரானுக்கு இணையாகவே அதன் உற்பத்திக் கோட்டா இன்றுவரை இருந்து வருகிறது.

*

சவூதி அரேபிய அரச குடும்பம் குறித்துக் குறைத்து மதிப்பிடும் கண்ணோட்டம் அமெரிக்க அரசின் முக்கிய அதிகாரிகளிடம் இன்றைக்கும் உண்டு. முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒட்டகங்களை விரட்டிக் கொண்டிருந்த சவூதிகள் இன்று அப்படியே இருப்பார்கள் என்று நினைப்பது தவறு என்பதை உணர மறுப்பவர்கள் பலர் அமெரிக்க அரசாங்கத்தில் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படத்தக்க செய்தியல்ல. இன்றைக்கு சவூதி அரேபிய அரச குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினர் ஹார்வேர்டிலும், ஆக்ஸ்·போர்டிலும் மற்றும் உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள். உலக நடப்புகளை விரல் நுனியில் வைத்திருப்பவர்கள். இனிவரும் காலங்களில் அமெரிக்கா சொல்வதற்கெல்லாம், முந்தைய தலைமுறையினரைப் போல, தலையை ஆட்டுவார்கள் என்று சொல்வதற்கில்லை.

இராக்கிய யுத்தத்தின் முழுப்பயனையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் யாரென்றால் அது சவூதி அரேபியர்கள் மட்டுமே. இராக்கிய யுத்தம் துவங்கிய ஒரே வருடத்தில் சவூதி அரேபியாவின் வருட வருமானம் $30 பில்லியனில் இருந்து $120 பில்லியனாக உயர்ந்தது. அதாவது, மூன்று மடங்கு. கடந்த நான்கைந்து வருடங்களில் பெற்ற வருமானத்தைக் கொண்டு சவூதி அரேபியா, OPEC-இல் தன்னை எதிர்க்கும் எந்தவொரு நாட்டையும் அதனால் அடிபணியச் செய்ய முடியும். அதற்காக அமெரிக்கர்களுக்குத்தான் அவர்கள் நன்றி சொல்ல வேண்டும். சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வேறு விதமாக.

இராக்கில் சகஜ நிலைமை திரும்பாமலிருக்க தன்னால் ஆன ‘பணி’களைச் செய்வதில் சவூதி அரேபியா தயங்கியதில்லை. இராக்கில் பிடிபடும் தீவிரவாதிகளில் பலர் சவூதி அரேபியாவினால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் அல்லது அதானால் உதவி செய்யப்படுபவர்கள். தங்கள் மத்தியில் ஷியா பிரிவினர் பலம் பெறுவதை சவூதி அரேபியா ஒருபோதும் விரும்பாது என்பது மட்டுமல்ல, இராக்கில் சகஜ நிலைமை திரும்பி பெட்ரோலிய உற்பத்தி துவங்கப்படுவதால் ஏற்படக் கூடிய எண்ணெய் விலை வீழ்ச்சியும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்க முடியாது.

அமெரிக்கா இந்த விஷயத்தில் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருக்கின்றது. சவூதி அரேபியா ஒருபுறம் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு அளிப்பது போலக் காட்டிக் கொண்டாலும், இன்னொரு புறத்தில் அவர்களுக்குத் தொல்லைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அமெரிக்கா இராக்கை ஆக்கிரமிப்பதற்கு முன், சவூதி அரேபியா நாளொன்றுக்கு 12 மில்லியன் பேரல் எண்ணெயை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. அமெரிக்கர்கள் வசமாக சிக்கிக் கொண்டார்கள் என்று தெரிந்ததும், அதனைச் சத்தமில்லாமல் 11 மில்லியன் பேரல்களாகக் குறைத்துக் கொண்டது சவூதி அரேபியா. விளைவு, கச்சா எண்ணெய் ஒரு பேரல் $30 டாலரில் இருந்து $60 டாலருக்கு எகிறியது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு எண்ணெய் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. இராக்கிய யுத்தம் ஒருபுறம் இருக்கட்டும். அது மட்டுமே இந்த விலை உயர்விற்குக் காரணமில்லை. அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் சேமிப்பில் இருக்கிறது. அதனை உபயோகத்தில் விட்டாலே ஒரு காலன் (சுமார் ஐந்து லிட்டர்) பெட்ரோலின் விலை இராண்டு டாலருக்கும் குறைவாக கிடைக்கத் துவங்கும். ஆனால் அதனைச் செய்ய அமெரிக்க எண்ணெய் கம்பெனிகள் தயாராக இல்லை. கடந்த இரண்டு வருடங்களில் எரிந்து போன, காத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட, பெரும் அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை சரி செய்யாமல் தேவையற்ற முறையில் மெத்தனம் காட்டுவதும், புதிதாக ரீ·பைனரிகள் எதனையும் துவக்காமல் இருப்பதுவும் எண்ணெய் விலை உயர்விற்கு மற்றுமொரு காரணிகள்.

இதனைவிட மிக முக்கியமான காரணம் ஒன்றும் உண்டு. கடற்கரையோர பெரு நகரங்களான ஹ¤ஸ்டன், நியூ ஆர்லியன்ஸ் மற்றும் கலி·போர்னிய நகரங்களில் அமெரிக்காவின் ஏழு பெரிய எண்ணெய் கம்பெனிகளுக்கும் மிகப்பெரும் சேமிப்புக் கிடங்குகள் உண்டு. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நேரத்தில் வாங்கிச் சேமிக்கப்பட்ட அந்த எண்ணெயின் மதிப்பு இன்றைக்கு பல மடங்கு அதிகரித்திருக்கின்றது. உதாரணமாக, அமெரிக்காவின் பெரும் எண்ணெய் கம்பெனிகளில் ஒன்றான Exxon Mobile-இடம் இன்றைக்கு இருக்கும் சேமிப்பின் மதிப்பு சுமார் $660 பில்லியன் டாலர்கள் (விலை உயர்விற்குப் பிறகு). மற்ற எண்ணெய் கம்பெனிகளிடமுள்ள சேமிப்பின் மதிப்பும் பலமடங்கு உயர்ந்திருக்கின்றது என்பதை விளக்கத் தேவையில்லை. எதிர்பாராமல் தங்கள் மேல் சொரியும் பணமழையை இழக்க அமெரிக்க எண்ணெய் கம்பெனிகள் தயாராக இல்லை. சென்ற இரண்டு வருடங்களில் மேற்படி எண்ணெய் கம்பெனிகள் ஈட்டிய இலாபம் நம்மைத் தலை சுற்ற வைக்கும். எனவே, அமெரிக்காவில் உடனடி விலை குறைப்பு என்பது எட்டாக் கனவே.

அலாஸ்காவில் எடுக்கப்படும் எண்ணெயில் பெரும்பகுதி ஜப்பானுக்கு விற்கப்படுகிறது என்று உலவும் செய்திகளும் உண்மையாக இருக்கக்கூடும்.

*

இராக்கிய ஆக்கிரமிப்பில் அமெரிக்கா இரண்டு பெரும் தவறுகளைச் (statergic mistakes) செய்தது எனலாம். முதலாவது, இராக்கிய ராணுவத்தைக் கலைத்தது. இரண்டாவது, அரசாங்கம் நடத்துவதில் எந்த வித முன் அனுபவமும் இல்லாத பால் பிரம்மரை (Paul Bremer) ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியது. ஆயுதப்பயிற்சி பெற்ற, அடுத்த வேளைச் சோற்றிற்கு அல்லல்படும் இளைஞன் என்ன செய்வான் என்பதற்கு விளக்கம் எதுவும் தேவையில்லை. பால் பிரம்மர் இராக்கிய ராணுவத்தைக் கலைக்க உத்தரவிடுவதற்கு முன், இராக்கிய ராணுவத்தில் ஏறக்குறைய ஐந்து இலட்சம் பயிற்சி பெற்ற ராணுவத்தினர் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் தீவிரவாதத்திற்க்கு துணை போகக்கூடும்.

இராக்கிய யுத்தம் முடிந்தவுடன் பொறுப்பேற்றுக் கொள்வதாக இருந்த ஜெனரல் ஜோ கார்ட்னர் (Joe Gartner), குர்து மற்றும் ஷியா பிரிவு மக்களிடையே பிரபலமாக இருந்தவர். அவர் தொடர்ந்து பொறுப்பேற்று இருந்தால் இராக்கின் போக்கு மாறி இருக்கலாம். உண்மையான ஜனநாயகம் அங்கு மலர்ந்திருக்க அது ஒரு வாய்ப்பாக இருந்திருக்கவும் கூடும். துரதிருஷ்டம் இராக்கியர்களை இன்னும் துரத்திக் கொண்டிருக்கிறது. என்பது மட்டும் நிச்சயம். இனி வரும் காலங்கள் அவர்களுக்கு வளமாக மாறலாம். அல்லது இராக் பல துண்டுகளாகச் சிதறிப்போகவும் கூடும்.

நம்மால் செய்ய இயல்வது ஒன்றுமில்லை. பெட்ரோலிய எண்ணெய்க்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப்படும் நாளை எண்ணிக் காத்திருப்பதைத் தவிர.

*

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்