அறுபாதி கல்யாணம் அவர்களுடன் ஒரு நேர்காணல்

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

துகாராம்


டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் விவசாய சங்க தலைவர் திரு. அறுபாதி கல்யாணம் அவர்களை எடிசனில் சந்தித்தேன்.

அருமை நண்பர் விஜய் ஆனந்த் அவர்களும் கூட வந்திருந்தார்கள். அப்போது எடுத்த நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திண்ணை: விஜய், அறுபாதி கல்யாணம் பற்றி அறிமுகம் செய்யுங்கள்.

விஜய்: அறுபாதி. ப. கல்யாணம் அவர்கள் விவசாயக்குடும்பத்திலிருந்து வந்தவர். உதயமூர்த்தி அவர்களது மக்கள் நலம் விரும்பும் அமைப்பால் கவரப்பட்டு சமூக சேவைக்கு வந்தவர். தஞ்சை நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் விவசாயம் சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்களை திரு கல்யாணம் அவர்களைத் தவிர வேறு யாரிடமும் இல்லை என்று கூறிவிடலாம். ஒரு வீடு நிறைய ஆவணங்களையும் புள்ளி விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளார். அவற்றை கணினி ஆவணப்படுத்துவதற்காக நாங்கள் சிறு உதவியும் அளித்துள்ளோம்.

திண்ணை: கல்யாணம், உங்களது விவசாய கூட்டமைப்பு பற்றி சொல்லுங்கள்.

கல்யாணம்: கட்சி சார்பற்ற ஒரு கூட்டமைப்பை தஞ்சை நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்காக் உருவாக்கியிருக்கிறோம். இது பலகாலமாக செயல்பட்டு வருகிறது. இது இறுக்கமான அமைப்பு அல்ல. இதில் பல விவசாய சங்கங்கள் உறுப்பினராக இருக்கின்றன. கடந்த தேர்தலில், நம் விவசாய சங்க கூட்டமைப்பு சில கோரிக்கைகளை முன் வைத்தது. அது பரிந்துரையாக, விவசாயிகளின் நலன்களுக்காக எல்லா கட்சி வேட்பாளர்களிடமும் தேர்தல் கோரிக்கைகளை சமர்ப்பித்தது. அவை முழுக்க முழுக்க விவசாயிகளுக்காகவும் விவசாயத்துக்காகவும் மட்டுமே அன்றி, எந்த ஒரு கட்சி நிலைப்பாடுக்கும் அல்ல. அவற்றை இங்கே பேசுவது பொருத்தமானதாக இருக்கும்.

விவசாயிகள் அனைவரும் கட்சி, ஜாதி, மதம், மொழி எல்லைகளை கடந்து செய்யும் உழவுத் தொழில் உணர்வை முன் வைத்து ஓன்று திரண்டெழுந்தால்தான் விவசாயிகளின் வாழ்வில் உண்மையான விடியல் ஏற்படும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, விவசாயிகளை முழுமையாக ஒன்றிணைக்கும் பணியில் அர்ப்பணித்துக்கொண்டு செயலாற்றி வருவதால் தேர்தவில் எந்த கட்சிக்கும், ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை மேற்கொள்ளாமல் தேர்தல் கோரிக்கைகளை மட்டும் முன்வைக்கிறது.

எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் கண்துடைப்பாக ஒரு சில நன்மைகள் மட்டும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதும். பின்னர் அடுக்கடுக்காக விவசாயிகள். பரிதாப நிலைக்கு தள்ளப்படுவதுமே இதுவரை மத்திய, மாநில அரசுகளால் விவசாயிகள் அனுபவித்து வரும் வேதனைநிகழ்வுகள் ஆகும். இந்த அவலங்கள் மாற விவசாயிகள் கட்சி, ஜாதி, மதம், மொழி, இவைகளை கடந்து, தாங்கள் செய்யும் ‘உழவுத்தொழில்’ என்ற உணர்வுடன் விழிப்புணர்வு பெற்றால்தான், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும் கட்டாய நிலை அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியாளர்கஞக்கும் ஏற்படும்.

திண்ணை: உங்களது தேர்தல் கோரிக்கைகளில் வேளாண் அமைச்சகத்தை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தீர்களே, காரணம் என்ன?

கல்யாணம்: இந்தியாவில் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே. மத்திய, மாநில அரசுகள் வேளாண் உற்பத்தியை முன் வைத்தே வேளாண் கொள்கைகளும் திட்டங்களும், வகுத்து, செயலாற்றி வருகின்றனவே தவிர, உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன்களை மையப்படுத்தி வேளாண் கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்படாமல் விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது தான் உண்மை அவல நிலைமையாகும்.

மேற்கண்ட அவல நிலையை மாற்றி, உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன்களையும், முக்கியப்படுத்தி, உற்பத்தி மற்றும் விவசாயிகளின் நலன்கள் இரண்டையும் சம அளவில் மையப்படுத்த உடனடியாக மத்திய மாநில அரன் வேளாண்மைத்துறையை, ‘வேளாண்மை மற்றும் விவசாயிசுள் நலத்துறை’யாக (Ministry of Agriculture and Farmers welfare) உருமாற்றம் செய்தால் தான் நாட்டின் விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிவில் இருந்து பாதுகாக்க முடியும். இதனை தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் முன் விவசாயிகள் கூட்டமைப்பு எடுத்து வைத்து, தேசிய விவசாயிகள் ஆணையமும் இதனை பரிந்துரையாக மத்திய அரசுக்கு தெரிவிதுள்ளது. மேற்கண்ட கோரிக்கையை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பிரதானமாக 2006 சட்டமன்ற தேர்தல் களத்தில் மாநிலத்தில் ஓட்டு மொத்த விவசாயிகலின் நலனுக்காக முக்கிய கோரிக்கையாக முன்வைக்கிறது.

திண்ணை: விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையை எடுத்துக்கொள்வோம். அதாவது, காவிரி நீர் பிரச்னை பற்றி விவசாயிகள் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

கல்யாணம்: காவிரி நீர் என்பது டெல்டா விவசாயிகளின் பிறப்புரிமை மற்றும் வாழ்வுரிமை ஆகும். இதனை முழுமையாக மீட்பது ஒன்றுதான் டெல்டா விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும். கடந்த 38 ஆண்டுகளாக நீடிக்கும் காவிரி பிரச்னையால் டெல்டா விவசாயிகள் சொந்த மண்ணிலேயே அகதிகள் போல் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காவிரி பிரச்சனை துவங்கிய இதே சமகாலத்தில் பிரச்னை துவங்கிய இதர கிருஷ்ணா, நர்மதா, கோதாவரி ஆகிய ஆறுகளுக்கு நடுவர் மன்றங்கள் 1969இல் அமைக்கப்பட்டு முறையே 1976, 1979, 1980ம் ஆண்டுகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டு, பிரச்சனைகள் பெருமளவு தீர்க்கப்பட்டது, ஆனால் காவிரி பிரச்சுனையில் 1966ல் பேச்சு வார்த்தை துவங்கி நடுவர் மன்றம் அமைக்காமல் 1990 வரை இழுத்தடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் அநீதியான கால தாமதம் ஏற்பட்டதுதான், காவிரி நீரில் கர்நாடக மாதிலம்கா ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டதற்கு மூக்கிய காரணமாகும். தற்போது காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, 16 ஆண்டுகள் ஆகியும் இறுதி தீர்ப்பை காலம் கடத்தும் நிலை
ஏற்பட்டுள்ளது. இந்த அநீதியை போக்கி உடனடியாக இறுதித் தீர்ப்பு கிடைக்கச் செய்யவேண்டும். மேட்டூரில் 1934 முதல் 1970 வரை 36 ஆண்டுகளில் கிடைத்த சராசரி நீர் ஆண்டுக்கு 378 டி.எம்.சி நீர் மேட்டூரில் கிடைக்க உறுதி செய்யப்படவேண்டும். நடுவர் மன்றம் 1991ல் இடைக்கால தீர்ப்பில் அளித்த மிக மிக குறைவான 205 டி,எம்.ஸி கூட திர்ப்பின்படி பெற்றுத் தர பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்த்தினால் முடியவில்¨லை.

எனவே, பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தை ‘அரசியல்வாதிகளற்ற சுய அதிகாரமுள்ள, முழுமையான தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்ட ஆணையமாக மாற்றி அமைக்க வேண்டும். இதற்காக தமிழகத்தின் ஒட்டு மொத்த சக்தியையும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒருமுகப்படுத்த வேண்டும்.

திண்ணை: விவசாயக்கடன்கள் ரத்து செய்ய கோரியிருக்கிறீர்களே

கல்யாணம்:

விவசாயிகளின் கூட்டுறவு கடன்கள், சிறு, குறு, பெரு விவசாயிகள் என பாகுபடுத்தாமல் அனைத்து விவசாயிகளின் கடன்களும் அரசால் ஈடு செய்யப்பட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் மிகக்குறைந்த அளவிலேயே கடன் வழங்கியதால், விவசாயிகளில் பெரும்பலோர் நாட்டுடமை மற்றும் வணிக வங்கிகளில் கடன் பட்டு திரும்ப செலுத்த இயலாத நிலையில் உள்ளனர். இந்த கடன் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்

தமிழகத்தின் ஊரக வளர்ச்சி வங்கிகள் (நிலவள வங்கிகள்) 30% க்கும் அதிகமாக வட்டி வசூவித்து கந்து வட்டி வங்கிகளாக செயல்பட்டு வருவதால், விவசாயிகள் டிராக்டர்கள், பவர் டில்லர்கள், பம்பு செட்டுகள் என கடன் பட்டவர்கள், கந்து வட்டி கொடுமைக்குள்ளாகி தவிக்கிறார்கள். இந்த வங்கிகளில் விவசாய உபகரணங்களுக்கு கடன்பட்ட விவசாயிகள் அசல் அஎவு தொகையை திரும்பச் செலுத்தி இருந்தால் முழுக்கடனும் தீர்ந்தாக அரசு அறிவித்து நிலவள வங்கிகள் வசம் உள்எ விவசாயிகளின் நில பத்திரங்களை விவசாயிகளிடம திருமப தரவேண்டும். நிலவள வங்கிகள் கூடுதல் வட்டி (Additional interest) வசூலிக்கும் அநீதியான விதிகள் அறவே நீக்கப்படவேண்டும்.

கடந்த 1993ம் ஆண்டில் இருந்து தொடர் இயற்கை இடர்பாடுகள் காரணமாக ரூ12,000 கோடிக்கும் மேல் மகசூல் இழந்து, வாழ்வா சாவா? என ஜீவமரணப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் காவிரி டெல்டா விவசாயிசுளின் வாழ்வை மீட்சி செய்ய ‘காவிரி டெல்டா சிறப்பு கடன் நிவாரண திட்டம்’ கொண்டு வந்து, கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், நாட்டுடமை வங்கிகள், மற்றும் நிலவள வங்கிகளில் பெற்றுள்ள விவசாயம் தொடர்பான கடன்கள் அனைத்திற்கும் முழுமையான நிவாரணம் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவேண்டும்.

தமிழகத்தின் கலைக்கப்பட்ட, செயலிழந்துள்ள, தொடக்க கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும், புனரமைக்கவேண்டும். கூட்டுறவு வங்கிகளை புனரமைத்திட மத்திய அரசு நியமித்த திரு வைத்தியநாதன் குழு பரிந்துரைகளை அமலாக்கவேண்டும்.

தேசிய மற்றும் வணிகவங்கிகளில் விவசாய கடன் வரம்பு மொத்த வங்கி கடன் வழங்குவதில் 18% என்று உள்ளதை 36% ஆக உயர்த்த மத்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும்.

திண்ணை: விவசாயிகளுக்கு வட்டிக்கு கடன் கொடுக்க வட்டி விகிதத்தை சற்று குறைத்து கொடுத்தால் பலன் இருக்குமா?

கல்யாணம்:
விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு 3% வட்டியில் விவசாய கடன்கள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம். தேசிய விவசாயிகள் ஆணையத்திடமும் கோரிக்கைகளை வைத்து வாதாடியது. தேசிய விவசாயிகள் ஆணையம் 4% வட்டியில் விவசாய கடன்கள் வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைத்து, மத்திய அரசு சமீபத்தில் 7% வட்டியில் 3 லட்சம் வரை விவசாய பயிர்கடன்கள் வழங்க முடிவெடுத்துள்ளது இது போதுமானதல்ல. விவசாய பயிர்க்கடன்கள் 3% வட்டியிலும், விவசாய டிராக்டர்கள், பவர் டில்லர்கள், பண்ணைக் கருவிகள், 4% வட்டியிலும், அனைத்து வங்கிகளிலும் கிடைக்க மத்திய மாநில அரசுகள் ‘வட்டி ஊக்கத்தொகை’ வழங்கி ஈடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தற்போது பயிர் சாகுபடி செய்யப்படும் மொத்த சாகுபடி பரப்பளவிற்கும் (சுமார் 53 லட்சம் எக்டேர்) உரிய நேரத்தில், போதுமான அளவில் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் கிடைப்பது உறுதிசெய்யப்படவேண்டும், விவசாயிகள் கந்து வட்டி கடனில் சிக்காமல் காப்பாற்ற வேண்டும்.

திண்ணை: புதிய நீர்பாசன திட்டங்களை கொண்டு வருவதன் மூலம் தண்ணீர் செலவை கட்டுப்படுத்த இயலுமா?

காவிரி டெல்டா பாசனம் முழுவதும். நுண்ணிய திட்டமிடல், மற்றும் நுண்ணிய பாசனம் என்ற அடிப்படையில் (microlevel planning and irrigation) நவீனப்படுத்தப்படவேண்டும்.

டெல்டாவின் அனைத்து ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்களை, இயந்திரங்களை கொண்டு தூர்வாரஆண்டுக்கு ரூ100 கோடி ஓதுக்கீடு செய்து, விவசாய குழுக்கள் அல்லது பாசன சங்கங்கள் மூலம், ஊழல் முறைகேடின்றி. அரசியல் தலையீடின்றி தூர்வார வேண்டும்.

நீர் சேமிப்பை ஏற்படுத்த தெளிப்பு, சொட்டு நீர் பாசன, கருவிகள் 75% மானியத்தில் வழங்க வேண்டும்.

காவிரி டெல்டாலில் மழை நீர் சேமிப்பு, நிலத்தடி நீர் வளத்தை பெருக்க விவசாயிகளின், இழந்து விட்ட பொருளாதாரத்தை மீட்சி செய்ய நிலம் + குளம் + களம் + வனம் = வளம் என்ற திட்டத்தை அரசு திட்டமாக அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு 10 ஏக்கர் விவசாய நிலத்துக்கும் 1ஏக்கர் குளம், இக்குளம் வெட்டும் மண்ணைக் கொண்டு 2 1/2 ஏக்கர் நிலத்தை 3 அடி உயரத்திற்கு மேடாக்கி களம் மற்றும் பல்வகை மரங்கள் வளர்த்தல் மூலம் நெல் விவசாயம் மட்டும் செய்து ‘ நஷ்டப்பட்டு வரும் விவசாயிகளுக்கு மறு வாழ்வளிக்கும் திட்டத்தை செயலாக்க வேண்டும். 5 ஏக்கர், 2 1/2 ஏக்கர் என சிறு நில உடமைகள் வரை திட்டத்தை விரிவாக்க வேண்டும். இதில் ஆண்டிற்கு 10,000 ஏக்கர் குளம் எ என்ற அடிப்படையில், 10 ஆண்டுகளில் 1லட்சம் ஏக்கர் நீர் சேமிப்புக் குளம், 2 1/2 லட்சம் ஏக்கரில் மரப்பயிர்கள் (வனம்) என்று கொண்டு வருவதன் மூலம், ஓட்டு மொத்த டெல்டாவையும் வளப்படுத்த முடியும். திட்டத்தை செயலாக்க வேண்டும்.

நிலத்துக்குள் நீரை செலுத்தும் வகையில் விஞ்ஞான பூர்வ திட்டங்கள் அமலாக்குதல் வேண்டும். டெல்டாவின் நீரைத் தேக்கி கடலில் இருந்து 10-கி.மி தூரம் வரை ஆற்றில் நீர் இல்லாத காலங்களிலும் நீரை பயன்படுத்தும் திட்டம் அமலாக்க வேண்டும். (புதுவை மாநிலம் காரைக்காலில் மேற்படி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.)

திண்ணை: விவசாய விளை பொருட்கள் விலை நிர்ணயம் பற்றி விவசாய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

கல்யாணம்:
விவசாய விளை பொருட்கள் அனைத்திற்கும், உற்பத்தி செலவிற்கு சிறுதுகூட தொடர்பில்லாத கட்டுப்பாடியாகாத மிகக் குறைந்த விலைகள் நிர்ணயிக்கப்படுவதும்,இபப்டி மிக குறைவாக நிர்ணயிக்கப்படும் குறைந்த பட்ச விலைகளுக்குக் கூட அரசு கொள்முதல் பாதுகாப்பு அளிக்காத நிலைகளினால்தான் விவசாயிகள் நஷ்டப்பட்டு நிலங்களை விட்டு வெளியேறி வருகிறார்கள். தமிழ்நாட்டில் 1970ல் மொத்த சாகுபடி பரப்பு 74.50 லட்சம் ஹெக்டேர்கள் 2002-2003இல் 52 லட்சம் ஹெக்டேர்கள் என குறைந்துள்ளதற்கு விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியாக கூடிய விலை கிடைக்காமல் நஷ்டப்பட்டதுதான் காரணமாகும்.

தமிழ்நாட்டின் முக்கிய பயிராக 1970ல் 25 லட்சம் ஹெக்டேர்களில் சாகுபடி செய்யப்பட்ட நெல், தற்போது 20 லட்சும் ஹெக்டேர்களாக குறைந்ததற்கு நெல் உற்பத்தி செலவுக்கு உரிய கட்டுபடியில்லாத விலையே காரணம் ஆகும். 1981இல் மத்திய அரசு நெல் விலை, மோட்டா ரகம் குவிண்டால் ரூ,115 சன்னரகம் குவிண்டால் ரூ 118 ஆகும்.
அப்போது தமிழக அரசு விவசாய தொழிலாளர்களுக்கு நிர்ணயித்த நாள் ஊதியம் ஆண் தொழிலாளர் ரூ7, பெண் தொழிவாளர்களுக்கு ரூ5 ஆகும். தற்போது மத்திய அரக நெல் விலை மோட்டா ரகம் குவிண்டால் ரூ.570, சன்னரகம் ரூ600 ஆகும், தற்போது தமிழ்நாடு அரசு விவசாயத் தொழிவாளற்களுக்கு நிர்ணயித்துள்ள ஊதியம் ஆண் தொழிலாளர்களுக்கு ரூ 80, பெண் தொழிலாளர் ரூ70 ஆகும். விதை உரம், பூச்சி, மருந்து இதர இடு பொருட்களையும் ஒப்பிட்டால் தற்போது நெல் விலை குவிண்டால் ரூ1400 வழங்க வேண்டும். ஆனால் மாட்டுத் தீவனத்தின் விலை கூட குவிண்டால் ரூ 750 விற்கும் போது நெல் விலை குவிண்டால் ரூ. 570 என்பது என்ன நியாயம்?

விவசாய விளைபொருட்களின் விலையை உயர்த்தினால் பொது வினியோக உணவு பொருட்களுக்கு அதிக உணவு மானியத்தொகை ஒதுக்க வேண்டும் என்பதால் தான் விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவுக்குரிய கட்டுப்படியாகக் கூடிய விலையை அளிக்காமல் அரசுகள்அநீதி இழைக்கின்றன என்பதே அப்பட்டமான உண்மையாகும்.

மாநில அரசு மத்திய அரசு விலை நிர்ணயம் செய்கிறது எனக்கு தொடர்பில்லை என தப்பிக்க கூடாது. ‘வேளாண்மை’ மாநிலங்களின் பட்டியலில் (state list) வருவதால், விவசாய தொழிலாளர்களுக்சூ கூலி நிற்ணயம் செய்ய உரிமை பெற்ற அரசு மாநிலத்தில் விளை பொருட்களுக்கும், கூலி உயர்வுக்கு ஏற்றால் போல் விலை தர வேண்டும். இதை மாநில அரசு ஆதரவு விலை அல்லது ஊக்கத் தொகையாக வழங்கவேண்டும். குவிண்டால் ரூ. 1400 என நெல் விலையை ரொக்கமாக வழங்க முடியாவிட்டால் இதனை பயிர் சாகுபடி பரப்பளவு அடிப்படையில் கணக்கிட்டு நெல் சாகுபடி செய்யும் 20 லட்சம் ஹெக்டேர்களுக்கும் “உற்பத்தி செலவு ஈடு மானியமாக” வழங்கவேண்டும்.

இதைப் போல் கரும்பிற்கு தற்போதைய உற்பத்தி செலவுகளுக்கேற்ப 9% சர்க்கரை கட்டுமாணத்திற்கு ரூ2000/- பருத்திக்கு குவிண்டால் ரூ4000 எனவும் மற்ற அனைத்து விவசாய விளை பொருளுக்கும் 1981 நிலவரங்களை ஒப்பிட்டு விலை வழங்க வேண்டும். பொதுவாக விவசாய உற்பத்தி செலவுக்கு மேல் குறைந்த பட்சம் கூடுதலாக 50% விலை நிர்ணயித்தால்தான் விவசாயம் நஷ்டப்படாத தொழிலாக மாறும். தொழில் துறைகளில் உற்பத்தி செலவுகளுக்கு மேல் 100 சதவீதம் மேல் விலை நிர்ணயிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

மத்திய விவசாய விளை பொருள் கமிஷனில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் விவசாய பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும்.

(பேட்டி தொடரும் )


thukaram_g@yahoo.com

Series Navigation

துகாராம்

துகாராம்