பின்னை மார்க்சியத்தின் துவக்கங்கள்

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

ஹெச்.ஜி.ரசூல்



வார்த்தைகள், தத்துவங்கள், இலக்கியங்கள் நம்முன் கொட்டிக் குவிக்கப்படுகின்றன. தொடர்பியலைத் தாண்டிய கலாச்சாரப் பரிவர்த்தனை, ஊடக வெளியின் மையமாய் மாறுகிறது. வாழ்வின் பிரதிகளை வாசித்து கண்டறிவதில் ஒற்றைத் தன்மை மீறப்பட்டுள்ளது. இது பன்மையின் சாத்தியங்களை உருவாக்கியுள்ளது.

ஒற்றைப்படுத்தப்பட்ட வடிவத்தை மீறி மார்க்சியத்தின் பன்மைத் தன்மையை புரிந்து கொள்வதில் எந்த சிரமமும் இருப்பதாக தெரியவில்லை. மண் சார்ந்த அடையாள அரசியலை உட்செரித்துக் கொண்டு மேற்கத்திய மார்க்சியம், கீழை மார்க்சீயம். கறுப்பு மார்க்சீயம். அரபு மார்க்சீயம் பின்னைக் காலனிய மார்க்சியமென தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. சனாதனிகளின் கைகளிலிருந்து மார்க்சியத்தை விடுதலையும் செய்கிறது. இது மரபு வழி மார்க்சியத்தை உயிர்ப்புத் தன்மைமிக்க மார்க்சியமாக உருமாற்றியுள்ளது. சோவியத்யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசத்திற்கு ஏற்பட்டபின்னடைவுக்குப் பிறகு உருவாகி வளர்ந்த கோட்பாடாக பின்னை மார்க்சியம் திகழ்கிறது.

ஐரோப்பிய முதலாளித்துவத்தின் உழைப்புச் சுரண்டலையும், உபரி மதிப்பு கோட்பாட்டையும் மூலதன மறு உற்பத்தியையும் புரிந்து கொள்ளும் முறையியல் முன்வைக்கப்பட்டது. வரலாறு, சமயம், தத்துவம் குறித்தான பார்வையை அகம், புறம் பற்றிய இயங்கியலோடு வெளிப்படுத்தியது. இராணுவம், காவல்துறை, சிறைச்சாலைகள், சட்டங்கள், நீதிமன்றங்கள் என அரசு எந்திரம் சார்ந்த ஒடுக்குமுறைகளைப் பற்றிய மார்க்சிய அணுகுமுறை முக்கியமாக தொழிற்பட்டது. பொருளாதார அரசியலும், அரசியல் பொருளாதாரமும் அடித்தளம் மேற்கோப்பென்ற பிரிவினையை தகர்த்துக் கொண்டு ஒன்றோடொன்று உரையாடலை நிகழ்த்தி பண்பாடு அறிவு தளங்களில் வினை புரிந்தன. சடங்கு, மொழி, அறிவு, பாலினம், உடல், நிறம், குடும்பம், கல்வி, இலக்கியம், செய்தி உருவாக்கம் என பண்பாட்டு நடத்தைகளின் மீதான கவன ஈர்ப்பையும், நுண் அளவிலாக கட்டமைக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தையும் மீள்வாசிப்பு செய்தன.

ஜெர்மனியின் பிராங்கபட் பள்ளியைச் சேர்ந்த ஹெபர்மார்ஸ் ஹோகைமர், அடோர்னா, மார்க்யூஸ், வால்டர் பெஞ்சமின், பின்னை மார்க்ஸீயர்களாக அறியப்பட்ட லூயி அல்தூசர், அந்தோனியா கிராம்ஷி, மிஷேல் பூக்கோ எனப்பலரும் இத்தளங்களில் விவாதங்களை தொடர்ந்தனர். சோவியத் மாதிரி சோசலிச கட்டுமான சிதறலுக்குப் பிறகு இவ்விவாதங்கள் மிகவும் கவனத்திற்கொள்ளப்பட்டன. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தனது இழப்பின் மூலமாக தொழிலாளி, விவசாயி, விளிம்பு நிலை மக்கள், பெண்கள் என்பதான மறு அணி சோக்கை அடிப்படைகளை உருவாக்கின. காலனிய ஒடுக்குமுறையிலிருந்து எதிர்த்து போராடுகின்ற ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்தும் புதிய வெளிச்சங்கள் புறப்பட்டன. எட்வர்ட் சையத், ஹோமிபாபா, இஹாப்ஹசன், காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பீவாக், சினுவா ஆச்சிபி என இந்த சிந்தனை அறிவுத்துறையில் படர்ந்தது.

மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த அசிசியா டிஜிபர் அப்துல் கபீர் காத்தபி மற்றும் சல்மான் ருஷ்டி உள்ளிட்ட அனைவர்களும் மேற்கத்திய உறவுகள் – இஸ்லாம் குறித்து ஆழ்ந்த பார்வைகளைக் கொண்டவர்கள் மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய மதிப்பீடுகளின் மோதல் போக்கை கதையாடல் உத்திகளாய் வெளிப்படுத்துகின்றனர். ஊடிழைப் பிரதி கோட்பாடு குறித்தும், ஒற்றைப்படுத்தப்பட்ட எழுத்துமுறையை மறுபரிசீலனை செய்வதும் தத்தமது குழுவினரோடு வாழும் கலாச்சார அரசியல் சமூக எல்லைகளில் நின்று பேசுகின்றனர். படைப்புகளில் வெளிப்படும் கிழக்கு மேற்கு இடையீடுகளும் உறவுகளும், பெண்ணியத்திற்கும் இஸ்லாத்திற்குமிடையில் உறவும் முரணும் என்ற நிலைகளில் இக்கருத்தாக்கங்கள் உரையாடல் செய்யப்படுகின்றன.

மார்க்சியம் நவீனத்துவ கோட்பாடுகளுடனான உரையாடலை தொடர்ந்து நிகழ்த்தி வந்துள்ளது. ஒட்டுமொத்த புரட்சி, ஒற்றை மாதிரி தொழிலாளி வர்க்கம் உள்ளிட்ட பெருங்கதையாடல்களில் தகர்வு ஏற்பட்டது. மாவோயிச கோட்பாட்டின் தாக்கம், வியத்நாமிய புரட்சிகர அனுபவங்கள் என புதிய அடிப்படைகள் தென்பட்டன. பிராயிடு, யூங், லகான் வழியாக உளவியல் மாதிரிகளோடும், ஜீன்பால்சர்த்தர் வழி அந்நியமாதல் சார்ந்த இருத்தலிய சிந்தனைகளோடும், மொழியின் உள்கட்டமைப்பு குறித்த அறிதலை முன்வைத்த அமைப்பியலோடும், தற்போது பின்னை நவீனத்துவத்தோடும் இடையறாத உரையாடலை செய்து வருகிறது.

வெகுஜன கலாச்சாரத்தில் அறிவியல் குறிகளின் செயல்பாடு நவீனச் சமூகத்தின் புராணவியலை மறுவாசிப்பு செய்தல், மொழியியல், குறியியல், கதையாடலில் சமூக உண்மைகளை கண்டறிதல் என்பதாக இதன் எல்லைகள் விரிவடைகின்றன. இதாலிய கம்யூனிச இயக்கப்போராளி அந்தோனியா கிராம்ஷி கருத்தியல் அதிகாரம், பொதுப் புத்தியின் பயங்கரம், உளவியல் மாதிரியான சமூக ஒப்புதல், வெகுசன மனோபாவங்களின் உறைந்திருக்கும் சர்வாதிகாரம் முதலிய கருத்தாக்கங்களை முன்வைத்தார். அரசு எந்திர ஒடுக்குமுறைக்கு ஒத்த மற்றொரு மாதிரியான கருத்துருவ ஒடுக்குமுறை, ஆதிக்கப் பண்பாட்டின் கூறுகள் சமூக உளவியலாக மாற்றப்பட்டிருத்தல், நுண்அரசியல் அதிகாரம் என புதிய வகையினங்கள் மீது கவன ஈர்ப்பும் கொள்ளப்பட்டது.

அமெரிக்க மார்க்சியர் பிரடெரிக் ஜேம்சன் பின்நவீனத்துவத்தை பின் முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கமாக மதிப்பிடுகிறார். பிரான்ஸ¤க்கு புலம் பெயர்ந்த அல்ஜீரியர்களுக்காக போராடிய ழாக்தெரிதாவின் பின்நவீனத்துவ முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று கட்டுடைத்தல் கோட்பாடு. குறிகளாலும், சமூக கலாச்சார உறவுகளாலும் கட்டமைக்கப்பட்ட மொழி, இலக்கண, இலக்கியப் பேச்சு பிரதிகளிலும், வாழ்வின் நடத்தைகளிலும் உட்புதைந்து கிடக்கிற ஆதிக்கம்சார் கூறுகளை இதன்வழி அம்பலப்படுத்த முடிகிறது.

மொழியியல் கட்டமைப்பு, மனம்-மொழி சார்ந்த உறவு, அதிகாரத்தின் செயல்பாடும் சித்தாந்தமும், ஊடக அரசியல், விஞ்ஞானப் பண்பாடு, வெள்ளை ஆணாதிக்க விஞ்ஞானம், பயங்கரவாதத்தின் பெயர் சொல்லி இஸ்லாமியர்களுக்குஎதிராக அமெரிக்கா நடத்தும் ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கான எதிர்நிலை, பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் அணுகுமுறை குறித்த விமர்சனமென அமெரிக்க மார்க்சியர் நோம்சாம்ஸ்கியின் ஆய்வுப் பரப்பு, விரிவாக்கம் கொள்கிறது.

எர்னஸ்டோ லக்லோ, சந்தால் மொபே மார்க்சியத்தின் வர்க்கம் – மூலதனம் குறித்த கருத்தாக்கங்களோடு கிராம்சியின் வழியில் சமகால சமூகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மேலாண்மை குறித்தும் பேசினர்.

இது தீவிரமான, ஜனநாயகத்தையும் அதற்கான போராட்டத்தையும் முன்னெடுத்து செல்வதான நிலையை உருவாக்கியது. மரபு ரீதியான பொதுவெளி அல்லது மார்க்சியத்தின் வர்க்கம் என்ற ஒற்றை அடையாளம் என்பதற்கு மாற்றாக பன்மைத்தன்மை மிக்க வெளிகளை, சமூக அடித்தளங்கள் குறித்த கவனத்தை முன்னுக்கு கொண்டு வந்தது.
லக்லோ மற்றும் மொபே இக்கருத்தாக்கத்தை பரிதவிப்பவர்களின் பன்மைத்தன்மை என்பதாக குறிப்பிடுகின்றனர். ஜனநாயகத்தின் புதுமாதிரியாகவும், வேறுபாடுகளை அங்கீகரிப்பதாகவும் இது உள்ளது.

பின்னை மார்க்ஸீயம், மரபு மார்க்ஸியத்தின் கோட்பாட்டு ரீதியான கண்ணோட்டத்தை விரிவுபடுத்தியும் மறுபுதினப்படுத்தவும் செய்கிறது. தத்துவ, பொருளாதார, பெண்ணிய, கலாச்சார அணுகுமுறைகள் குறித்து கவனம் செலுத்துகிறது. தொழிலாளி வர்க்கத் தலைமையிலான வர்க்கப் போராட்டத்திற்கு மட்டும் முக்கியத்துவமளிக்கும் நிலைக்கு மாற்றமாக மனித குலத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்கான கவனத்தை ஈர்க்கிறது. நவீன மேற்கத்திய சூழலில் பாலின, இனமைய, வர்க்க அடையாளங்களைச் மறுகட்டுமானம் செய்கிறது.
இந்திய நிலையில் சாதீய, பாலின, வர்க்க, இந்துத்துவ பிளவுச் சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பின்னை மார்க்ஸியத்தை அர்த்தப்படுத்த முடியும். இவ்வகையில் அரபுச் சூழலுக்கும் இது பொருந்தி வருகிறது. அரபு மார்க்சியக் கோட்பாட்டின் துவக்கமும் வளர்ச்சியும், அதன் பன்முகப்பட்ட தோற்றங்களும் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்