உச்ச நீதிமன்றமும், இட ஒதுக்கீடும்

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


உச்ச நீதி மன்றம் எழுப்பியுள்ள சில கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய நிர்ப்பந்ததில் மத்திய அரசு இருக்கிறது (1). .கிரீமி லேயர் எனப்படும் பிற்பட்டோரில் முற்பட்டோர் குறித்து அரசு ஒரு முடிவிற்கு வந்தாக வேண்டும்.பல மாநிலங்கள் இதை நடைமுறைப்படுத்திவிட்டன, மேலும் மத்திய அரசுப் பணிகளுக்கும் இது பொருந்தும்.உச்ச நீதி மன்றம் மண்டல் கமிஷன் வழக்கில் இதை ஒரு நிபந்தனையாக நிர்யணத்திருந்தது. எனவே இப்போது க்ரீமி லேயர் என்பதை அரசு ஏற்கமாட்டோம் என்று கூறினால் அதை நீதிமன்றம் ஏற்குமா என்பது சந்தேகமே.

மேலும் சட்டம் நிறைவேறாவிட்டாலும் அரசு ஒரு ஆணை மூலம் இட ஒதுக்கீட்டினை கொண்டுவர முடியும். சட்டம் நிறைவேற தாமதமானால் அல்லது சிக்கல் எழுந்தால் அரசு ஒரு ஆணை மூலம் முதலில் இட ஒதுக்கீட்டினை நிறைவேற்றி விட்டு பின்னர் சட்டம் இயற்றலாம் அல்லது சட்டம் இயற்றாமலும் விட்டு விடலாம். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அப்போதிருந்த அரசு ஒரு ஆணையின் மூலம் நிறைவேற்றியது, சட்டம் கொண்டுவரவில்லை. பொதுவாக அரசு சட்டம் இயற்றித்தான் இதை செய்ய வேண்டும் என்பதில்லை. இப்போது சட்ட முன்வரைவு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நிலைகுழுவின் பரீசலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படலாம். குழு மாற்றங்கள் தேவையில்லை என்றும் கூறலாம்.அக்குழுவின் அறிக்கையையும் உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரசு கொண்டு வரவுள்ள இட ஒதுக்கீட்டினைப் பொறுத்தவரை சட்டத்தினை பாராளுமன்றம் ஏற்றாலும், அதுவும் உச்சநீதி மன்ற ஆய்விற்குட்பட்டதே. இப்போது இட ஒதுக்கீட்டினைப் பொருத்தவரை மூன்று மிக முக்கியமான சட்டக் கேள்விகள் உள்ளன.

1, 93வது அரசியல் சட்டத்திருத்தம் செல்லதக்கதா, தனியார் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டினை அரசு கொண்டு வரமுடியுமா, இது உச்ச நீதிமன்றம் இனாம்தார் வழக்கில் தந்த தீர்ப்பிற்கு முரணானதா இல்லையா
2, இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களுக்கு விதிவிலக்கு தந்தது செல்லுமா, செல்லாதா
3, அரசு கொண்டுவரவுள்ள (மத்திய அரசின் நிர்வாகத்தில்,நிதி உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில்) பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லுமா, செல்லாதா

93வது சட்டத்திருத்தம் செல்லும் என்றாலும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களுக்கு விதிவிலக்கு தந்தது செல்லாது என்று நீதிமன்றம் கூறலாம். ஆனால் உச்சநீதி மன்ற பெஞ்சின் தீர்ப்பினை நிராகரிக்கும் இத்திருத்தத்தினை இன்னொரு பெஞ்ச செல்லும் என்று கூறுமா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் இத்திருத்தம் தனியார் கல்வி நிறுவனங்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதால் இதை எதிர்த்து வலுவான வாதங்கள் முன்வைக்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு உதவி பெறாவிட்டாலும் அவை இட ஒதுக்கீட்டிற்கு கட்டுப்பட வேண்டும் என்பதை ஏற்றால் நாளை இதே தர்க்கத்தினை அரசு தனியார் துறைக்கும் விரிவுபடுத்தலாம். அரசிற்கு அவ்வாறு தலையிட உரிமை உண்டா, இது அடிப்படை உரிமைகளை பாதிக்காதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த சட்டதிருத்தம் சரியானதல்ல என்பது என் கருத்து.

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை, பிற்பட்ட ஜாதிகளின் பட்டியலில் புதிதாக ஜாதிகளைச் சேர்க்கமாட்டோம், மண்டல் கமிஷன் வழக்கில் பின்பற்றபட்ட பட்டியலைத் தான் பயன்படுத்துவோம் என்றும் அரசு கூறியுள்ளது. மத்திய அரசு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை என்று தெரிவித்த பின் மாநில அரசுகள் அத்தகைய ஒன்றை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

மண்டல் கமிஷன் பரிந்துரையில் முக்கியமான பரிந்துரை அமுல் செய்யப்பட்ட பின் பல ஜாதிகள் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.பல மாநிலங்களில் பிற்பட்ட ஜாதிகள் பட்டியல் இன்னும் விரிவாக்கப்பட்டது. இந்தப் பட்டியல் மத்திய அரசின் பட்டியலை விட விரிவானது. ஆனால் மத்திய அரசு தான் பின்பற்றும் பட்டியலைத்தான் இட ஒதுக்கீட்டிற்காக பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளது. இது மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆனால் மத்திய பட்டியலில் இடம் பெறாத ஜாதியைச் சேர்ந்தவர்கள் இந்த இட ஒதுக்கீட்டால் பயன் பெற முடியாது என்ற நிலையை உருவாக்குகிறது.இதை எதிர்த்து யாரேனும் வழக்குத் தொடரவும் வாய்ப்பிருக்கிறது. மாநில அரசு பட்டியல் ஒன்று, மத்திய அரசு பட்டியல் ஒன்று என்று இரண்டு இருந்தால் பிற்பட்டோர் என்பதன் வரையரை என்ன, எந்த அடிப்படையில் இவை தயாரிக்கப்படுகின்றன. இது போல் பல கேள்விகள் இருக்கின்றன.

மேற்கூறியவை தவிர உச்சநீதிமன்றத்தின் முன் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. இவற்றில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு விட்டன.தீர்ப்புதான் வெளியாக வேண்டும். தமிழ் நாட்டினைப் பொறுத்தவரை சில வழக்குகள் நிலுவையில் (உ-ம் அண்மையில் தமிழக சட்டசபை நிறை வேற்றிய இட ஒதுக்கீட்டு சட்டம், 69% இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் சட்டம், இச்சட்டம் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது) உள்ளன. இதில் 69% இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் சட்டம், 9 வது அட்டவணையில் அதை சேர்த்தது குறித்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவிருக்கின்றன.

2006-2008ல் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு குறித்து மிக முக்கியமான தீர்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

(திண்ணையில் நான் இட ஒதுக்கீடு குறித்து எழுதியுள்ள கட்டுரைகளையும், குறிப்புகளையும் இத்துடன் சேர்த்துப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்).
(1) “You [Government] go on say that you will implement the quota policy. Have you collected the data before making such announcements?”
Referring to the counter-affidavit, the Bench said: “You announce the policy without full data. You play the game and frame the rules later. You are saying that the quota for SC/ST and OBC are interchangeable. On what basis you are saying this? Further, you have not said anything about the `creamy layer’.”
http://www.hindu.com/2006/10/17/stories/2006101705061200.htm

Series Navigation