கண்ணகி தமிழரின் தாய்

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

செல்வன்


குப்புசாமி தன் செத்து போன தாத்தா பாட்டி படத்தை வைத்து கும்பிட்டுக் கொண்டிருந்தான்.அங்கே ஓடி வந்தார் ஒரு பெண்ணுரிமை வாதி.”உன் தாத்தாவை கும்பிடாதே.அவன் ரெண்டு கல்யாணம் பண்ணிய ஆணாதிக்கவாதி.உன் பாட்டி அதுக்கு ஒத்துப்போன முட்டாள்.உன் முன்னோர் அனைவரும் ஜாதிவெறி பிடிச்ச,பெண்ணுரிமையை மிதிச்ச இனம்” என்றார்.

குப்புசாமி தலையை சொறிந்தான்.”இதெல்லாம் சரிங்க.அதுக்காக அவங்க என் தாத்தா பாட்டி என்பதை மறுக்கவா முடியும்?அவங்க ஜாதிவெறிக்கா நான் போட்டோ வெச்சு கும்புடறேன்?தாத்தா பாட்டி என்பதால் தான் கும்பிடறேன்” என்று சொல்லிவிட்டு போட்டோவை கும்பிட்டான்.

குப்புசாமி சொன்ன பதிலை தான் நான் சகோதரி ஜோதிர்லதா கிரிஜாவுக்கு அளிக்க விரும்புகிறேன்.

கண்ணகி அறிவாளியா என கேட்கிறார்.அறிவாளிக்கு தான் சிலை வைக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா?மெரினா பீச்சில் சிலையாய் நிற்கும் தலைவர்களுக்கு ஐ.கியூ பரிட்சை வைத்தால் எத்தனை பேர் தேறுவார்கள்?நாட்டின் ஜனாதிபதி ஆகவே ஒண்ணங்கிளாஸ் கூட படித்திருக்க வேண்டியதில்லை எனும்போது சிலை வைக்க என்ன அறிவாளி தகுதி வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை.

கண்ணகி முட்டாள் என்கிறார்.சொந்த துயரத்துக்காக ஊரையே எரித்தவள் முட்டாளாம்.நம் தலைவர்களை இழுப்பதை விட்டு விட்டு இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமென்றால் நான் சொல்லவிரும்புவது ஒன்றுதான்.சிலப்பதிகாரத்தை படியுங்கள்.அவள் யாரை எரித்தாள் என தெரியவரும்.

பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க என்று, காய்த்திய
பொன் தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே
நல் தேரான் கூடல் நகர்.

“தீத்திறத்தார் பக்கமே சேர்க” என தீயோரை மட்டுமே எரித்தாள்.அது எப்படி தீ தீயோரை மட்டும் அடையாளம் கண்டுகொள்ளுமா என கேட்டால்,அது எப்படி முலையை பிடுங்கி வீசினால் அது ஊரையே எரிக்குமா என திருப்பி கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.பிடுங்கி எறிந்த முலை கிரனைடு போல் வெடித்து ஊரையே அழிக்கும் என்பதை நம்பினால் அதில் உருவான தீ தீயோரை சரியாக அடையாளம் கண்டு அழிக்கும் என்பதும் உண்மைதான்.

பழங்கால மனிதர்களை நம் தற்கால அலவுகோள்கலை கொண்டு மதிப்பிடுவது என்னை பொறுத்தவரை தப்பு.அமெரிக்காவில் ரஷ்மோர் மலையில் 4 ஜனாதிபதிகளின் சிலையை வைத்து ஷோ காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.”பார் எங்கள் நாட்டின் வரலாற்றை” என்கிறார்கள்.தற்கால அளவுகோல் படிபார்த்தால் அதில் உள்ள ஜார்ஜ் வாஷிங்க்டன் அடிமை பண்ணை வைத்திருந்தவர்.கறுப்பர்களை அடிமையாக வைத்திருந்தவர்.”ஏன் இப்படிப்பட்ட ரேஸிஸ்டை சிலை வைத்து கொண்டாடுகிறீர்கள்?” என கேட்க முடியுமா?

கறுப்பர்களும் வந்து ஜார்ஜ் வாஷிங்டனை பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டு தான் போகிறார்கள்.தெற்கத்திய மாகாணங்களை வாளால் அடக்கிய ஆப்ரகாம் லிங்கனை சர்வாதிகாரி என்றா தெற்கத்திய அமெரிக்க மாகாணங்கள் சொல்லுகின்றன?செவ்விந்தியர்களை இன அழிப்பு செய்ய காரணமான கொலம்பசுக்கு “கொலம்பஸ் டே” என பாராட்டு விழா எடுத்து கொண்டாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

மெரினாவில் நிற்கும் ஒவ்வொரு தலைவர் மீதும் ஏதாவது குற்றச்சாட்டு இருக்கும்.ஆசிய ஜோதி நேரு ஒரு பிளேபாய் என்பார்கள்.காந்தி தன் மனைவியை மற்றவர்களின் மலத்தொட்டியை சுத்தம் செய்ய நிர்பந்தித்த ஆணாதிக்கவாதி எனலாம்.இந்திராகாந்தி எமெர்ஜென்ஸி கொண்டுவந்த சர்வாதிகாரி,கட்டாய கருக்கலைப்பு செய்ய உத்தரவிட்டவர் என்றெல்லாம் கழித்துகட்டிக்கொண்டு போனால் மெரினாவில் கடைசியில் எந்த சிலையும் இருக்காது.

நமக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ வரலாறு கொலை,கொள்ளை,வன்புணர்ச்சி,ஆணாதிக்கம்,அடிமை வியாபாரம் ஆகியவற்றால் நிரம்பித்தான் இருக்கும்.அவற்றை நம் காலத்திய அளவுகோல்களால் அளந்தால் நாளை நம் சந்ததியினர் அதை விட உயர்ந்த அளவுகோல்களை வைத்து நம்மை அளப்பர்.”புகையை கக்கும் வாகனங்களால் உலகை மாசுபடுத்திய 21 நூற்றாண்டினர் முட்டாள்கள்,கொலைகாரர்கள்.அவர்களுக்கு சிலை எதுக்கு?” என யாராவது பின்னாளில் கட்டுரை எழுதினாலும் எழுதுவார்கள்.

அதை விட காமடியான விஷயம் என்னவென்றால் ஜோதிர்லதா கிரிஜாவால் புரட்சிச் சிந்தனையாளர், சமுதாயக் கண்ணோட்டமுள்ளவர், பெண்களின் பால் பெரும் பரிவு காட்டி, ஒரு பெண்ணைக்காட்டிலும் அதிக ஆத்திரத்தோடு ஆணாதிக்கத்தைச் சாடியவரின் வழித்தோன்றல் என்றழைக்கப்படும் “எல்லாம் அறிந்த கலைஞரே” ரெண்டு தாரத்தோடு வாழ்பவர்தான்.கோவலனை ரெண்டு பொண்டாட்டிக்காரன்,ஆணாதிக்கவாதி என கண்டபடி திட்டிவிட்டு கலைஞரை இப்படி போற்றினால் சிரிப்புதான் வருகிறது.

கண்ணகி மதுரையை எரித்தது ஒரு உவமை,கற்பனை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.நீதி தவறிய நாட்டாமை அந்த வினாடியே உயிர் துறப்பது போல் காட்சி அமைப்பு வந்தால் கைதட்டி சிலாகிக்கிறோம்.பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்தால் முட்டாள் என்கிறோம்.”தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என பொங்கி எழுந்தானே பாரதி அவனை “நீ உலகை அழிக்க சொன்ன முட்டாள்?” என்றா சொல்லுகிறோம்?அதில் உள்ள கோபத்தையும் தார்மிக நியாயத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?அதே போல் தான் இளங்கோவும் நீதி தவறிய அரசை கொளுத்திடுவோம் என அப்போதே எழுதினார்.

கண்ணகி தமிழனின் கலாச்சார அடையாளம்.பழந்தமிழரின் தாய்.”வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற ஐயன் மொழிக்கேற்ப வாழ்வாங்கு வாழ்ந்த எம் தாய்க்கு சிலை வைக்க உத்தரவிட்ட கலைஞர் தமிழர் நெஞ்சில் நீங்காது வாழ்வார்.

“நீதி கேட்டு நெருப்பென நின்ற எம் தாயே
அன்னை கண்ணகியே.வணங்குகிறோம் உம்மை.
தமிழர் நெஞ்சில் நீக்கமற நீயே நிற்கிறாய் அம்மா.
காத்தருள் எங்களை.தமிழர் தம் தாயே”

www.holyox.blogspot.com
http://groups.google.com/group/muththamiz?hl=en

Series Navigation

செல்வன்

செல்வன்