பழிவாங்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள்

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

செல்வன்


யுடா மாநிலம் 1995ல் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு முழு திருமண உரிமை அளித்தது.உடனடியாக அமெரிக்காவின் 37 மாநிலங்கள் அவசர அவசரமாக ஓரினத் திருமணங்களுக்கு அனுமதி மறுத்து டோமா( Defense of marriage act) என்ற சட்டத்தை இயற்றின.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டும்தான் திருமணம் நடக்க வேண்டும் என்ற இந்த பிற்போக்கு சட்டம் இன்னும் பல மாநிலங்களில் அமுலில் இருக்கிறது.

மேற்கத்திய நாடுகள் பலவும் இதுபோல் பிற்போக்குத்தனமான சட்டங்களை ஒழித்துக் கட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரின உறவுகளுக்கு சட்ட பூர்வ அனுமதி பிரான்ஸ்ரான்ஸ்,ஸ்கான்டினேவியா,பிரிட்டன்,நியுஸிலாந்து,செக்,நெதெர்லாந்து,ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் வழங்கப்படுகிறது.விரைவில் இந்த நாடுகளில் ஓரினத் தம்பதிகளுக்கு முழு திருமண உரிமையும் வழங்கப்படக்கூடும்.

ஐரோப்பிய யூனியன் 2000 சார்ட்டரின்படி ஓரினசேர்க்கையும்,ஓரினத் திருமணமும் ஒரு மனிதனின் அடிப்படை சுதந்திரமாக அங்கீகரிக்கபட்டிருக்கிறது.தனிமனிதனின் படுக்கையறையில் மூக்கை நுழைக்க இனி ஐரோப்பாவில் எந்த அரசுக்கும் உரிமை இல்லை.

இப்படி ஐரோப்பா முன்னேற்றப் பாதையில் செல்ல அமெரிக்கா இன்னும் 19ம் நூற்றாண்டின் சட்டங்களையே வைத்துக் கொண்டு இருக்கிறது.இல்லினாய் உட்பட 15 மாநிலங்களில் ஓரினச் சேர்க்கையே தண்டிக்கபடக் கூடிய குற்றமாக இருக்கிறது.ஐரோப்பாவில் 19ம் நூறாண்டிலியே ஓரினச்சேர்க்கையை குற்றப்பட்டியலிலிருந்து எடுத்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலராடோ 1992ல் 53% மெஜாரிடியோடு தனது ஓரின குடிமக்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டத்தை ரத்து செய்தது.1999ல் மய்னும் அதே போல் ஒரு பிற்போக்கு சட்டத்தை இயற்றியது.கலிபோர்னியா போன்ற லிபெரல்கள் ஆளும் மாநிலம் கூட 2000ல் இம்மாதிரி சட்டம் போட்டது என்றால் மனித உரிமை அங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால் முதலில் ஓரினச்சேர்க்கையாளர்கள் விரல் நீட்டுவது ரிபப்ளிக்கன் கட்சியைத் தான்.அபார்ஷனுக்கு அனுமதி மறுப்பு,ஓரினத் திருமணத்துக்கு தடை விதிப்பு,குளோனிங் செய்யத் தடை விதிப்பு,பரிணாமவாதத்தை பள்ளிகளில் பயிற்றுவிக்க தடை விதிப்பது போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளை ஆதரிப்பதில் இவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம்.

அமெரிக்காவில் இப்படி என்றால் இந்தியாவில் நிலமை மிக கேவலமாக உள்ளது.19ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் சட்டங்களை வைத்துக் கொண்டு டில்லி போலிசார் சமீபத்தில் 4 ஓரினச் சேர்க்கையாளர்களை கைது செய்தனர்.சில நாடுகளில் இவர்களுக்கு திருமண அனுமதியே வழங்கப்படுகிறது.சில நாடுகளில் திருமன உறவுக்கு அனுமதி இல்லையென்றாலும் ஓரினச்சேர்க்கை குற்றமல்ல.இந்தியாவில் ஓரினச்சேர்க்கையே தண்டிக்கபடக் கூடிய குற்றமாக இன்னும் இருக்கிறது.

அமெரிக்க மனநல மருத்துவர் சங்கம் ஓரினச்சேர்க்கை மனநோயல்ல,வியாதியல்ல,மனிதனின் இயற்கையான பழக்கம் என்று எப்போதோ சொல்லிவிட்டது.அமெரிக்க அரசாங்கத்தின் காதுகளிலேயே அது இன்னும் ஏறவில்லை.இந்திய அரசாங்கத்தின் காதுகளில் ஏறுவது எப்போது ?

—-

doctorsampath@gmail.com

Series Navigation

செல்வன்

செல்வன்