குருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

புதுவை சரவணன்


ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர் கோல்வல்கர் பற்றி மலர்மன்னன் திண்ணையில் எழுதியதை படித்தேன். கோல்வல்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை உலகெங்கும் கொண்டாட ஆர்.எஸ்.எஸ்ஸூம் அதன் துணை அமைப்புகளும்( விசுவ இந்து பரிஷத், பாரதீய ஜனதாக் கட்சி, இந்து முன்னணி, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், பாரதீய மஸ்தூர் சங்கம், வித்யாபாரதி, சேவாபாரதி,… போன்ற அமைப்புகள்) ஏற்பாடு செய்து வரும் வேளையில் கோல்வல்கர் பற்றி சில தகவல்களை திண்ணை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கோல்வல்கர் 1906ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் பிறந்தார். பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கியதால் நான்காம் வகுப்பு படிக்கும்போதே அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. எம்.எஸ்ஸி விலங்கியல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற கோல்வல்கர் 1930ல் காசி இந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.இங்குதான் அவருக்கு பையாஜி தானி என்ற மாணவர் மூலம் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு கிடைத்தது. பையாஜி தானி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் காசி இந்து பல்கலைகழகத்திற்கு படிப்பதற்காகவும், ஆர்.எஸ்.எஸ்ஸை வளர்ப்பதற்காகவும் அனுப்பப்பட்டவர். பையாஜி தானி போன்ற பல மாணவர்களை தேர்ந்தெடுத்து பல மாநிலங்களுக்கு அனுப்பியிருந்தார் டாக்டர் ெ ?ட்கேவார்..( அப்படி தமிழ்நாட்டிற்கு ஹெட்கேவாரால் அனுப்பப்பட்டவர் தாதாராவ் பரமார்த் என்ற மாணவர். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு பிள்ளையார் சுழி போட்டவர் இவர்தான்.)

பையாஜி தானி கோல்வல்கரை டாக்டர் ெ ?ட்கேவாருக்கு அறிமுகப்படுத்தினார். கோல்வல்கரின் அறிவும், வசீகரமும் ஹெட்கேவாரை வெகுவாக கவர்ந்தது. 1934ல் கோல்வல்கர் சட்டப்படிப்பை முடித்தார். இந்த சமயத்தில் நாகபுரியில் இருந்த ராமகிருஷணமடத்தின் துறவி பாஸ்கரேஷானந்தா மூலம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடிச் சீடர் சுவாமி அகண்டானந்தரின் தொடர்பு அவருக்கு கிடைத்தது. சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்த கோல்வல்கரை சுவாமி அகண்டானந்தருடனான சந்திப்பு துறவியாக்கியது. 1936ம் ஆண்டு ஜனவரி 13ம்தேதி மகர சங்கராந்தியன்று சுவாமி அகண்டானந்தரிடம் தீட்சை பெற்று சந்நியாசியானார் கோல்வல்கர்.

கோல்வல்கர் பல லட்சக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களாலும், கோடிக்கணக்காண அவரது ஆதரவாளர்களாலும் குருஜி என்றே அழைக்கப்படுகிறார். குருஜி என்பது ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு வந்த பிறகு அல்லது ஆர்.எஸ்.எஸ்ஸின் அகிலபாரத தலைவரான பிறகு அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் அல்ல. காசி இந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தபோது மாணவர்கள் அவரை குருஜி குருஜி என்று அன்போடு அழைக்க பிற்பாடு அதுவே அவரது அடையாளமாக நிலைத்துவிட்டது.

கோல்வல்கர் சந்நியாச தீட்சை பெற்றதும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் அவரை பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது. கோல்வல்கர் தேசத்திற்கு பெரிய பணியாற்ற பிறந்தவர் என்று சுவாமி அகண்டானந்தர் கூறுகிறார். தேசப்பணி என்று சுவாமி அகண்டானந்தர் கூறியது ஆர்.எஸ்.எஸ்ஸில் பணியாற்றுவதைத்தான். ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்து பணியாற்றுவதும் தேசப்பணி புரிவதும் ஒன்றுதான் என சுவாமி அகண்டானந்தர் உணர்ந்திருந்தார். குருவின் ஆசைப்படி கோல்வல்கர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் பணிக்கு திரும்பினார். ஆர்.எஸ்.எஸ்ஸில் ஷாகா கார்யவாஹ(கிளைச் செயலாளர்) , நாகபுரி சங்க சிக்ஷம் வர்க(நாகபுரி பயிற்சி முகாம்) பொருப்பாளர் போன்ற பொருப்புகளை வகித்த கோல்வல்கரை 1938ல் ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்கார்யவாஹ( அகிலபாரத பொதுச்செயலாளர்) ஆக நியமித்தார் டாக்டர் ஹெட்கேவார். 1940ல் டாக்டர் ஹெட்கேவார் அமரரானார். மறைவுக்கு முன் அவர் எழுதிய கடித்ததில் தனக்கு பிறகு கோல்வல்கர் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத தலைவராக இருப்பார் என்று கூறியிருந்தார். சுவாமி அகண்டானந்தரின் விருப்பப்படி துறவறத்தை துறந்த கோல்வல்கர் ஹெட்கேவாரின் ஆசைப்படி ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 33 தான். ஆர்.எஸ்.எஸ்ஸில் கோல்வல்கரைவிட வயதிலும், அனுபவத்திலும் பெரியவர்கள் பலர் இருந்த போதிலும் டாக்டர் ஹெட்கேவார் கோல்வல்கரை தலைவராக அறிவித்தார். ஆர்.எஸ்.எஸ்ஸை பலம் பொருந்திய அமைப்பாக வளர்த்து தேசத்தில் மாற்றத்தை தோற்றுவிக்க கோல்வல்கர்தான் பொருத்தமானவர் என்று டாக்டர் ஹெட்கேவார் நம்பினார்.

கோல்வல்கர் டாக்டர் ஹெட்கேவாரின் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. பாரதபாகிஸ்தான் பிரிவினை, மகாத்மா காந்தி படுகொலை போன்ற நெருப்பாற்றை அவர் நீந்த வேண்டியிருந்தது. மகாத்மா காந்தி படுகொலைபழி ஆர்.எஸ்.எஸ் மீது அபாண்டமாக சுமத்தப்பட்டு ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. கோல்வல்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது துணைப்பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் ஆர்.எஸ்.எஸ்ஸை அரசியல் அமைப்பாக மாற்றிவிட்டால் ஆர்.எஸ்.எஸ்ஸை யாராலும் தடை செய்ய முடியாது என்று கூறியும் அவர் ஆர்.எஸ்.எஸ்ஸை அரசியல் அமைப்பாக மாற்ற கோல்வல்கர் ஒப்புக்கொள்ளவில்லை. அரசியலுக்கு வெளியே விளம்பர வெளிச்சமின்றியே அவர் பொதுவாழ்க்கையை நடத்தினார். அதனால்தான் அவரது பெயர் பிரபலமாகாமல் போய்விட்டது.

ஆர்.எஸ்.எஸ் க்கும், கோல்வல்கருக்கும் மக்களிடையே செல்வாக்கு பெருகி வருவதைக் கண்ட நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவர்கர்லால் நேரு தனக்கு போட்டியாக கோல்வல்கர் வந்துவிடுவாரோ என்று பயந்தார். காவிக்கொடி பறப்பதற்கு இந்த நாட்டில் ஒரு அங்குல நிலம் கூட கொடுக்க மாட்டேன் என்றெல்லாம் பேசினார். ஆர்.எஸ்.எஸ்ஸை அழிப்பதற்கு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். அதனால்தான் நேரு மகாத்மா காந்தி படுகொலை வழக்கை ஆர்.எஸ்.எஸ் மீது திருப்பினார். இப்படி ஆர்.எஸ்.எஸ்ஸை கடுமையாக எதிர்த்த நேரு 1963ல் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ளுமாறு ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு அழைப்பு விடுத்தார். 1962ல் நடந்த சீன போரின்போது பாரத ராணுவத்திற்கு உதவியாக ஆர்.எஸ்.எஸ் ஆற்றிய பணிகள் நேருவின் கண்களை திறந்தது. நேருவின் அழைப்பை ஏற்று மூவாயிரத்திற்கும் அதிகமான சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

நேருவுக்கு பிறகு பிரதமராக பொறுப்பேற்ற லால்பகதூர் சாஸ்திரி, பாரதபாகிஸ்தான் போரின்போது நடந்த போர் ஆலோசணை கூட்டத்திற்கு கோல்வல்கரை அழைத்திருந்தார். சாஸ்திரியின் அன்பான அழைப்பை ஏற்று அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கோல்வல்கர் போரில் பாரதம் வெற்றிபெற பல அரிய ஆலோசணைகளை வழங்கினார்.

1956ல் கோல்வல்கரின் 50வது பிறந்த நாள் விழா நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. மதுரையில் நடந்த கோல்வல்கரின் 50 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைமை தாங்கினார். அப்போது பேசிய முத்துராமலிங்க தேவர் கோல்வல்கரை தன்னலம் கருதாத மாபெரும் தலைவர் என்று வர்ணித்தார்.

சுதந்திரமான சிந்தனையுடன் பலரும் வியக்கும் விஞ்ஞானியாக திகழ்ந்த ஜி.டி.நாயுடு கோல்வல்கருக்கு மிகவும் நெருங்கிய நண்பராக விளங்கினார், கோல்வல்கரை கோவைக்கு அழைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் ஜி.டி. நாயுடு. எனக்கு கடவுளிடத்திலும், மற்ற விஷயங்களிலும் நம்பிக்கை இல்லை ஆனால் கோல்வல்கரை நம்புகிறேன். அவரது நாமம் இந்த பாரத நாட்டை காக்கும் என்று நம்புகிறேன் என்று கோல்வல்கரை பற்றி ஜி.டி. நாயுடு கூறியிருக்கிறார். இப்படி பலர் கோல்வல்கரை பெருமைகளை உணர்ந்து அவரை போற்றியுள்ளனர். அவற்றை எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது.

1973ல் கோல்வல்கர் மறைந்த போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத அவருக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செழுத்தப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் திருமதி இந்திரா காந்தி ஸ்ரீகோல்வல்கர் தேசிய வாழ்வில் தனது தனித்தன்மை வாய்ந்த ஆற்றலினாலும், ஈடுபாட்டின் தீவிரத்தினாலும் மதிப்புக்குரிய நிலையை எய்தினார் என்று புகழ்ந்துரைத்தார்.

1969ம் ஆண்டு டிசம்பர் 14, 14 தேதிகளில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெற்ற விசுவ இந்து பரிஷத் மாநாடு பற்றியும் அம்த மாநாட்டில் கோல்வல்கரை பேட்டி கண்டது பற்றியும் மலர்மன்னன் எழுதியிருக்கிறார். அந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான முக்கியமான துறவியர்கள் கலந்து கொண்டனர். அதிகமான எண்ணிக்கையில் இந்து துறவியர்கள் கலந்து கொண்ட இது போன்ற மாநாடு அதற்கு முன் நடந்ததில்லை. இந்த மாநாட்டில்தான் இந்து சமுதாயத்தில் தீண்டாமை என்பதே கிடையாது. இந்துக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற சரித்திர முக்கியத்தும் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படி தீர்மானம் நிறைவேற முழுமுற்காரணமாக இருந்தவர் கோல்வல்கர். இதற்காக ஒவ்வொரு துறவியரையும் தனித்தனியாக சந்தித்து பேசி அவர்களை சம்மதிக்க வைத்தார் கோல்வல்கர். இந்த தீர்மானம் நிறைவேறிய அந்த தருணம்தான் கோல்வல்கர் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் என்று அவரோடு நெருங்கி பழகிய ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான யாதவராவ் ஜோஷி கூறுகிறார். இப்படி கோல்வல்கரை பற்றி நிறைய கூறிக்கொண்டே போகலாம்.

—-

musaravanan@gmail.com

Series Navigation

புதுவை சரவணன்

புதுவை சரவணன்