தமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா ?

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

சின்னக்கருப்பன்


திமுக அணி, அதிமுக அணி என்ற இரண்டைத்தாண்டி எந்த ஒரு அணியும் தமிழ்நாட்டில் சாத்தியமில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இந்த கருத்தை பலமுறை இடைத்தேர்தல்களில் பல கட்சிகள் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளன.

எந்த இடைத்தேர்தலாக இருந்தாலும் அதில் அதிமுகவும் திமுகவுமே மோதுகின்றன. பெரும்பாலும் எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அதுவே வெல்கிறது. எந்தக் கட்சி எதிர்கட்சியாக இருக்கிறதோ அது பெரும் முயற்சியில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொள்கிறது. ஆனால், சில மாதங்களுக்குப் பின்னர் நடக்கும் தேர்தலில் தோசை திருப்பிப் போடப்பட்டுவிடுகிறது.

இதன் காரணம் என்னவென்று நான் யோசித்துப்பார்த்திருக்கிறேன். ஆளும் கட்சி இருக்கும்போது எதிர்கட்சிக்கு ஓட்டுப் போட குறிப்பிடத்தக்க சதவீதத்தில் உள்ள தமிழர்கள் தயங்குகிறார்கள். இவர்களே ஆடும் காற்றாடிகள். இவர்களே அடுத்து எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்று நிர்ணயிப்பவர்கள்.

பலமுறை இப்படிப்பட்ட இடைத்தேர்தல்களில் தனியே நிற்க முயற்சிக்கும் காங்கிரசும் இன்ன இதர பிற கட்சிகளும் மிக மோசமாக மண்ணைக் கவ்வுகின்றன. அதனால், சட்டசபைக்கான முழுத்தேர்தல் காலத்தில் ஓரளவுக்கு தன்னம்பிக்கை இல்லாமலேயே திமுக அதிமுக கட்சிகளை சீட்டுகளுக்கு இறைஞ்சுகின்றன.

தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று வேட்பாளர்களும் கட்சிகளும் நினைப்பது இயல்பானது. ஆனால், வெற்றி பெறக்கூடிய கட்சி என்று மக்கள் நினைப்பது அதை விட முக்கியமானது. ஒரு கட்சிக்கு ஆதரவு நிறைய இருக்கலாம். ஆனால், அந்த கட்சி எவ்வாறு தனனை புரொஜக்ட் செய்துகொள்கிறது என்பதை வைத்தே அதற்கு விழும் வாக்குக்கள் அமையும். உதாரணமாக இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளை எடுத்துக்கொள்ளலாம். பரவலாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு இருக்கிறது அதுவும் பலதரப்பட்ட மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால், அந்த ஆதரவு வாக்குக்களாக மாறாது. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே தங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் கூட்டணியில் இணைந்து குறைவான சீட்டுகளுக்கு ஒப்புக்கொள்வது. இரண்டாவது காரணம், வாக்காளர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைக்கும் அல்லது ஆட்சியில் பங்கு பெறும் என்ற நம்பிக்கை இல்லாதது.

மேற்கண்ட காரணங்களால், ஒரு சில கட்சிகளுக்கு பரந்த ஆதரவு இருந்தாலும், அவை வாக்குக்களாக மாற்றம் பெறுவதில்லை. ஒரு சில கட்சிகள் ஆதரவு இல்லாமல் இருந்தாலும் கூட்டணி மூலம் வாக்குக்கள் பெற்று சட்டமன்றத்தில் நுழைவதும் நடக்கிறது.

இதனால் கூட்டணி காரணமாக பல கட்சிகள் பெறும் வாக்கு சதவீதங்கள் சரியானவை அல்ல. உதாரணமாக 2001இல் நடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்களை பார்ப்போம்.

http://eci.gov.in/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf என்ற முகவரியில் தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கும் தகவல்களை தருகிறேன்.

அதிமுக 141 இடங்களில் போட்டியிட்டு 132 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 31.44 சதவீதம்

திமுக 183 இடங்களில் போட்டியிட்டு 31 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 30.92 சதவீதம்

மூப்பனார் காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 6.73 சதவீதம்

பாமக 27 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 5.56 சதவீதம்

மதிமுக 211 இடங்களில் போட்டியிட்டு 0 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 4.65 சதவீதம்

பாஜக 21 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 3.19 சதவீதம்

காங்கிரஸ் 14 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களை வென்றது. பெற்ற வாக்குக்கள் 2.48 சதவீதம்

சிபிஐ 8 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 1.59 சதவீதம்

சிபிஎம் 8 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 1.68 சதவீதம்

புதிய தமிழகம் 10 இடங்களில் போட்டியிட்டு 0 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 1.27 சதவீதம்

இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது மதிமுக. இந்தக் கட்சி தனியாக நின்றிருக்கிறது. 211 இடங்களில் தனியாக போட்டியிட்டதால் அதன் சதவீதம் 4.65 ஆக இருக்கிறது. ஆனால், அதன் உண்மையான ஆதரவு அதைவிட அதிகமாக இருக்கும். ஏனெனில், அதன் வெற்றிபெறும் சாத்தியம் குறைவு என்பதால் மதிமுகவுக்கு வரக்கூடிய வாக்குக்கள் வெற்றி பெறக்கூடிய ஒருவருக்கு சென்றிருக்கும். ஏனெனில் நமது வாக்குக்கள் பெரும்பாலும் நெகட்டிவ் வாக்குக்கள். இன்னார் வரக்கூடாது என்பதற்காக, அவரை எவர் வீழ்த்தக்கூடுமோ அவருக்கு ஆதரவாக போடப்படுபவை. இதனால், ஒரு கட்சியின் உண்மையான வாக்கு நிலவரம்/ ஆதரவு நிலவரம் தெரியவராது.

குத்துமதிப்பாக பார்த்தால், அதிமுகவின் வாக்கு பலம் 31.44 சதவீதம், திமுகவின் வாக்கு பலம் 30.92 சதவீதமாகத் தெரியலாம். அது ஏறத்தாழ உண்மையாக இருக்கும். ஏனெனில், இந்த கட்சிகள் விட்டுக்கொடுக்கும் தொகுதிகளில் அதிமுகவின் வாக்குக்கள் ஆதரவு கட்சியின் கணக்காக எழுதப்பட்டுவிடும். அதே போல ஆதரவு கட்சிகளின் வாக்குக்கள் அதிமுகவின் வாக்குகளாக அதிமுக நிற்கும் தொகுதிகளில் கணக்கிடப்படும். ஆகவே அதிமுகவின் பலம் 30 சதவீதம் திமுகவின் பலம் 30 சதவீதம் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் முன்னரே சொன்னது போல, இது ஒரு வகை போலியான வாக்கு பலம். மேலே மதிமுக விஷயத்தில் சொன்னது போன்று, மதிமுக, பாஜக, பாமக காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு சென்றிருக்கக்கூடிய பல வாக்குகள், திமுக ஜெயிக்கக்கூடாது என்று அதிமுகவுக்கும் அதிமுக ஜெயிக்கக்கூடாது என்று திமுகவுக்கும் விழுபவை. உண்மையிலேயே இவர்களது பலம் ஒரு விகிதாச்சார முறையில் தெரியவரும். ஆனால் தற்போதைய தேர்தல் முறையின்படி, நாம் ஒரு குத்துமதிப்பாகவே இதனை கணக்கிட முடியும். அப்படி குத்துமதிப்பாக கணக்கிட்டோமானால், குறைந்த பட்சம் 1 சதவீத வாக்குக்களையாவது இது போன்ற உதிரிக்கட்சிகளுக்கு அதிகரிக்கலாம் என்பது என் எண்ணம். உதாரணமாக, பாஜக தனியாக நின்றபோது தமிழ்நாடு முழுவதும் பெற்ற வாக்குக்களின் எண்ணிக்கையை விட 27 இடங்களில் நின்று பெற்ற வாக்குக்கள் எண்ணிக்கை குறைவு. அதுவே பாஜக வெற்றிபெறக்கூஇடிய வாய்ப்பு இருக்கிறது என்று வரும்போது அதற்கு விழும் வாக்குக்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

தற்போதைக்கு, மொத்தம் 60 சதவீதத்தை கழித்துவிட்டுப் பார்த்தால் மீதம் இருக்கும் 40 சதவீதம் இதர கட்சிகளின் வாக்குக்களாக ஆகின்றது. ஒரு பேச்சுக்கு, இந்த 40 சதவீதமும் இருங்கிணைந்து நின்றால், திமுக 30 சதவீதம் அதிமுக 30 சதவீதம் இரண்டையும் விட அதிகமாக இருப்பதால், மும்முனைப் போட்டியில் மூன்றாவது அணி வெற்றி பெறும் என்று நினைக்கலாம்.

இந்த 40 சதவீத வாக்குக்களில் 6 சதவீதம் சுயேச்சைகளில் வாக்குக்கள். இவைகள் ஒரு போதும் மூன்றாவது அணிக்கு வராது. எந்த தேர்தலிலும் சுமார் 7 சதவீத வாக்குக்கள் சுயேச்சைக்கு செல்லும் என்று கணக்குப் போட்டுத்தான் ஆக வேண்டும். ஆகவே மூன்றாவது அணியாக அதிமுக திமுக கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்தால், அதன் வாக்கு சதவீதம் 33 ஆகத்தான் இருக்கும் என்றுதான் கணக்குப் போடவேண்டும்.

ஆனால் மூன்றாவது அணி என்று உருவானால், அதன் வாக்கு சதவீதம் 33 சதவீதத்தை தாண்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதற்கு மூன்றாவது அணி ஒரு ஒருங்கிணைந்த முன்னணியை மக்கள் முன் நிறுத்த வேண்டும்.

அடுத்து அந்த மூன்றாவது அணிக்குள்ளும் எது முதன்மை கட்சி என்றும், யார் முதலமைச்சர் என்பதையும் மக்களிடம் சொல்ல வேண்டும்.

இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்காகவும் ஆட்சியில் அமர்வதற்காகவும் போட்டியிடுகிறது என்பது மக்களிடம் சொல்லப்பட வேண்டும்.

நல்லக்கண்ணு அவர்களை முதல்வர் பதவிக்கு முன்னிருத்தலாம். அது ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் அடாவடிகளுக்கு எதிராக நல்லக்கண்ணுவின் நேர்மையை நிறுத்துவதாக அமையும். காங்கிரஸ் கட்சியினுள் உள்ள கோஷ்டிப்பூசலுக்கு வேறு வழியும் இல்லை.

அப்படிப்பட்ட ஒருங்கிணைந்த மூன்றாவது அணி தோன்ற சாத்தியங்கள் இருந்தாலும், தலைவர்களுக்கிடையே நடக்கும் கட்சி பேரங்கள் போன்றவை இப்படிப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த மூன்றாவது அணியை தோன்றாமல் அடிக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இருப்பினும், தலைப்பை நியாயப்படுத்த வேண்டி, சாத்தியங்களை ஆராயலாம்.

பாஜகவை தவிர்த்து மற்ற காங்கிரஸ், மதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து மூன்றாவது அணி உருவாக சாத்தியம் இருக்கிறது. பாஜகவை இந்த கூட்டணி கட்சிகள் அனைத்தும் நிராகரிக்கின்றன என்பதும் ஒருங்கிணைப்புக்கான அடிப்படையாகவும் இருக்கலாம்.

2001 தேர்தல் வாக்குபலங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், பாஜக தவிர்த்து இவர்களின் வாக்குபலம், 6.73 +5.56 +4.65 + 2.48 +1.59 + 1.68 + 1.27 = 23.96

ஏறத்தாழ 24 சதவீதம். 2001இல் காங்கிரஸ்தான் மிக அதிகமாக வாக்குக்கள் (சுமார் 9.5 சதவீதம்) பெற்ற கட்சி என்பதால், இந்த கூட்டணிக்கு அதுவே தலைமையும் வகிக்கலாம். அல்லது காங்கிரஸ், பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் என்ற சுழல்முறை முதல்வர் அமைப்பையும் அறிவிக்கலாம்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்குபலம் மேலே குறிப்பிட்டவற்றை விட மிக மிக அதிகம். கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் பங்கு பெறுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்குத் தோன்றினால், அவர்களது உண்மையான வாக்கு நிலவரம் வெளியே வரும். மற்ற கட்சி ஆதரவாளர்களுக்குக் கூட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் நேர்மை மற்றும் அறிவு மீது நம்பிக்கை உண்டு. அதுவும் இந்த கூட்டணிக்கு வலு சேர்க்கும்.

இந்த கட்சிகளில் வேலை செய்யும் பலர் தங்களது கட்சி எதிர்காலம் ஏதோ ஒன்றில் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையிலோ அல்லது நம் கட்சி ஆட்சியை பிடிக்காது என்று தெரிந்தும் கட்சி அபிமானத்தால் வேலை செய்பவர்கள். ஆனால், அந்த கட்சி ஆட்சியை இந்த முறை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை தோன்றினால், அவர்களது உழைப்பு மிக மிக அதிகமாகும். அது இன்னும் கட்சிகளின் வாக்கு பலத்தை அதிகரிக்கும்.

அதிமுக திமுக என்று மாறி மாறி ஓட்டுப்போட்டு அலுத்துப்போனவர்கள் கம்யூனிஸ்ட்கள் மீதும் காங்கிரஸ் மீதும் தங்கள் ஜாதிக்கட்சிகள் மீதும் நம்பிக்கை வைத்து ஓட்டுப்போட்டு மூன்றாம் அணி வெல்லவும் வெல்லலாம். வெற்றிபெறக்கூடிய கட்சி என்பது ஒரு பெரிய ஆயுதம். கடந்த பிகார் தேர்தலில், பாஜக ஜனதாதள கூட்டணி பெற்ற அலைபாயும் வாக்குக்கள் (Swing votes) சுமார் 10 சதவீதம். அப்படிப்பட்ட ஒரு அலையை இந்த மூன்றாவது அணிக்கு ஆதரவாக உருவாக்கினால், இந்த கூட்டணி பெறும் வாக்கு எண்ணிக்கை 33 சதவீதத்தை தாண்டும்! நிச்சய வெற்றி.

பாஜக வாக்கை மேற்கண்ட 24 சதவீதத்துடன் சேர்த்தாலே 29 சதவீத வாக்குகள் வரும். பாஜகவின் வாக்குபலம் சுமார் 4இலிருந்து 5 சதவீதம் வரை என்பது என் எண்ணம். அதுவும் சேர்ந்து ஒரு மகா கூட்டணி அமைந்தால் வெற்றி நிச்சயமாக மூன்றாவது அணிக்குத்தான் இருக்கும். (இது பெரிய வினோதம் இல்லை. வங்காளத்தில் காங்கிரஸ், பாஜக, திரினாமூல் ஆகியவை இணைந்து மகா கூட்டணி அமையும் என்று மம்தா பானர்ஜி உழைத்துக்கொண்டிருக்கிறார். கேரளாவிலும் வங்காளத்திலும் காங்கிரஸை எதிர்த்துக்கொண்டே மத்தியில் காங்கிரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தருகின்றன. சரத்பவார் சோனியாவை எதிர்த்து காங்கிரஸை விட்டு பிரிந்து தேர்தலில் நின்றபிறகு காங்கிரசோடு கூட்டணி ஆட்சி நடத்துகிறார். தத்துவமேதை கவுண்டமணி சொல்வது போல, ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ‘) ஒவ்வொரு கட்சிக்கும் வந்திருக்கக்கூடிய ஆனால் அதிமுக திமுகவுஇக்கு சென்று விட்ட வாக்குக்கள் என்று 1 சதவீதத்தை ஒவ்வொரு கட்சிக்கும் சேர்த்தால், 36 சதவீதம். இது திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் பெறக்கூடிய வாக்குக்களை விட சுமார் 6இலிருந்து 8 சதவீதம் வரை அதிகம். இது சொல்லப்போனால் இப்படிப்பட்ட மும்முனை போட்டியில் மூன்றாம் அணி மகத்தான வெற்றியாக இருக்கும்.

வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்தான் தேர்தலில் இறங்குகிறார்கள்.

ஒரு பேச்சுக்கு மூன்றாவது அணி வெற்றி பெறவில்லை என்று வைத்துக்கொள்வோம்.

24 சதவீத வாக்குக்கள் ஒரு இடத்தில் குவிந்தாலே அந்த கூட்டணி ஒரு குறிப்பிட்ட அளவு இடங்களை பெறும். அதுவும் மும்முனைப் போட்டியில் திமுக அதிமுக மூன்றாம் அணி ஆகிய மூன்றும் தனித்தனியே ஏறத்தாழ 30 சதவீத வாக்குக்களோடு மோதும்போது, தொகுதிகள் மூன்றாக பிரிந்து விழும் என்று குறைந்த பட்சம் எதிர்பார்க்கலாம். (தற்போது, உத்தர பிரதேசத்தில் மும்முனைப் போட்டியில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக என்று மூன்றாக பிரிந்து விழுகிறது.)

234இல் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் இந்த கூட்டணிக்கு நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதாவது 78 தொகுதிகள். இந்த 78 தொகுதிகள் தற்போது மூன்றாம் அணியில் சேரக்கூடிய கட்சிகளிடம் இருக்கும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம்.

எந்த கட்சி அதிகமாக வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கு நிற்பதையே கட்சிகள் செய்யும். ஒரு சில இடங்களில் மனத்தாங்கல் வர வாய்ப்புண்டு என்றாலும், பொதுவாக பார்க்கும்போது முன்பு கிடைத்துக்கொண்டிருந்ததைவிட அதிகமான இடங்களையே இன்று அவைகள் பெற்று தொகுதிகளில் நிற்கும்.

இந்த மூன்றாம் அணி தோற்றாலும், இந்த மூன்றாம் அணியில் உள்ள கட்சிகளுக்கு மவுசும் அதிகரிக்கும். ஏனெனில், மேலே பார்த்தது போல 78 தொகுதிகளை வைத்துக்கொண்டிருக்கும் மூன்றாவது அணி ஆதரவின்றி யாரும் பெரும்பான்மை ஆட்சியை அமைக்க முடியாது. திமுகவும் அதிமுகவும் இந்த கட்சிகளிடம் (அல்லது அதிகமாக தொகுதிகளை வைத்துக்கொண்டிருக்கும் கட்சிகளிடம்) பேரம் பேசித்தான் ஆகவேண்டும். அப்போது, இவர்கள் ஆட்சியில் பங்கையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆகவே தோற்றாலும் இவர்கள் ஆட்சியில் இருப்பார்கள். வென்றாலும் ஆட்சியில் இருப்பார்கள்.

ஆனால், திமுக கூட்டணியில் இணைந்தாலும் அதிமுக கூட்டணியில் இணைந்தாலும் அவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்பது எட்டாக்கனிதான். அதனை தொடர்ந்து தமிழக தேர்தல் முடிவுகள் நிரூபித்துக்கொண்டு வருகின்றன.

தொடர்ந்து அதிமுக அல்லது திமுகவுக்கு வாலாக இருக்கப்போகிறோமா அல்லது தமிழக ஆட்சி பீடம் ஏறுவோமா என்பதை காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளுமே முடிவு செய்யவேண்டும். அப்படி ஒரு வேளை பனைமரத்தில் கொய்யாக்காய் காய்த்தால், ‘மூன்றாவது அணி ‘ என்று பெயர் வைக்காமல் ‘முதன்மை அணி ‘ என்று பெயர் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

#

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்