விஸ்வாமித்ரா
—-
ஒரு மனிதன் ஒரு கொள்கையை அறிவிக்கின்றான், தனக்கென்று ஒரு நிலையை எடுத்துக் கொள்கிறான். பின்னர் தன் சுய நலனுக்காக தன் எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டையே மாற்றி நடந்து கொண்டு தான் செய்தது சரி என்று வாதிடுகிறான். அது நாள் வரை தான் பரப்பி வந்த கொள்கைகளையெல்லாம் ஒரே நாளில் காற்றில் பறக்க விட்டு, விட்டு சுயநலத்தால், தான் நம்பிய கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொண்டு அதை நியாயப் படுத்தவும் முயல்கிறான். அப்படிப் பட்ட மனிதனை என்ன சொல்லி அழைப்பீர்கள் ? ஊருக்கு உபதேசி ? ஏமாற்றுக்காரன் ? பித்தலாட்டக்காரன் ? ஆனால் அப்படி ஒரு மனிதரை ‘பெரியார் ‘ என்றும் சீர்திருத்தவாதி என்றும் பட்டம் கொடுத்துக் கொண்டு ஒரு கூட்டமே பின்னால் அலைகிறது. உண்மையறியாத வருங்காலச் சமுதாயமும் அதை உண்மையென்று நம்பிக் கொண்டு அவரைக் கொண்டாடுகிறது.
பொருந்தாத் திருமணம் குறித்து ஈ வெ ரா கொண்டிருந்த நிலைப்பாடு என்ன ? பின் அவரே தான் சொன்னதை மறந்து செய்தது என்ன என்பதையெல்லாம் ஆதாரபூர்வமாக திரு.ம.வெங்கடேசன் தனது ‘ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ‘ என்ற நூலில் அலசுகிறார். அதில் பொருந்தாத் திருமணம் குறித்து ஈ வெ ராவின் இரட்டை வேட நிலைப்பாடுகளைப் பற்றித் தெளிவாக அலசுகிறார். ஈ வெ ரா என்பவர் தன் திருமண விஷயத்தில் எவ்வாறு முரண்பாடுகளின் மொத்த உருவமாக வாழ்ந்து வந்துள்ளார், அந்தக் கொள்கைகளில் அவரது பிறழும் நிலைப்பாடுகளையும் கொள்கைக் குழப்பங்களையும் அறியத் தருகிறது ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்.
ஊருக்கெல்லாம் சுயமரியாதைத் திருமணத்தைப் பரப்பிய ஈ வெ ரா தள்ளாத வயதில் தனது இரண்டாவது திருமணத்தை எவ்வாறு செய்து கொண்டார் ?
புத்தகத்திலிருந்து துவக்கம்
—-
சுயமரியாதைத் திருமணத்தை மறந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்
ஈவேராவின் இரண்டாவது திருமணம் 9-7-1949 ஆம் ஆண்டு நடந்தது.
அப்போது ஈவேராவின் வயது 72. மணியம்மைக்கு 26.
தன்னைவிட 46 ஆண்டுகள் இளைய பெண்ணை மணக்குமுன்
திருமணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஈவேரா சொல்வது என்ன
தெரியுமா ?
—-
‘ ‘மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும்,
பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர்
தீர்மானம் செய்து விட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற
நிர்ப்பந்த முறையில் நடப்பது சுயமரியாதை அற்ற திருமணங்கள் என்றே
சொல்லலாம். ‘ ‘
(குடியரசு 3-6-1928)
—-
அது மட்டுமல்ல 1940-ல் ஈவேராவின் பத்திரிகையான விடுதலையில்
அண்ணாதுரை எழுதிய ஒரு தலையங்கத்தில் ‘ ‘தாத்தா கட்ட இருந்த தாலி ‘ ‘
என்ற தலைப்புக் கொடுத்து எங்கோ வடதேசத்தில் நடந்த ஒரு
திருமணத்தைக் குறித்து சொல்வது:
—-
‘தொந்திசரிய மயிரே வெளிர நிறைதந்தமனைய உடலே படைத்த 72
வயதான ஒரு பார்ப்பனக் கிழவர் துள்ளுமதவேட்கைக் கணையாலே
தாக்கப்பட்டுக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். வயது 72.
ஏற்கனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டி,
பேரன்பேத்தியும் பெற்றவர் இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன ?
இருண்ட இந்த இந்தியாவில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆண்மகன்
கல்யாணம் செய்து கொள்ளலாமே ‘
—-
என்று தொடங்கி இந்தப் பொருந்தாத் திருமணத்தை நீண்டதொரு
தலையங்கத்தில் பொதுவாய்ப் பார்ப்பனர்களைச் சாடக் கிடைத்த மற்றொரு
வாய்ப்பாய் அண்ணா எழுதியதைப் பிரசுரித்து மகிழ்ந்த ஈவேரா அடுத்த ஆறு
ஆண்டுகளிலேயே இப்படித் திருமணம் செய்து கொண்டதுதான் பெரிய
புரட்சி!
இந்தத் திருமணத்தை ஏற்காமல் அண்ணா வெளியேறியது மட்டுமல்ல.
அப்போது ஈவேராவின் மிக நெருக்கமான இராம.அரங்கண்ணல் ஒரு
காரியம் செய்தார். அதை அவரே சொல்லக் கேட்போம்.
—-
‘பழைய குடியரசு ஏடுகளில் இருந்து பெரியாரின் பேச்சுகளை அடிக்கடி
விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளைப் புரட்டிக்
கொண்டிருந்தபோது பொருந்தாத் திருமணம் பற்றிய பேச்சு கண்ணில்
பட்டது ‘ஒரு இளம்பெண்னை வயதானவர் கட்டிக் கொள்வது சரியல்ல ‘
என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து ‘தக்க வயதுப்
பொருத்தமே திருமணத்தின் இலட்சியம் – பெரியாரின் பேருரை ‘ என்று
கொட்டை எழுத்துக்களில் தலைப்பிட்டுக் கம்போசிங்குக்குக் கொடுத்தேன்.
அதுவும் உடன் வெளிவந்தது. பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு
பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காகச் சென்றபோது பெரியார்
கடுங்கோபத்தில் இருந்தார். என்னைப் பார்த்து ‘பெருமாள் வீட்டுச்
சோத்தைத் தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க ‘ என்று
சொன்னார். நான் பதில் பேசாமல் வெளியேறினேன்.
(நூல்: இராம அரங்கண்ணலின் நினைவலைகள்)
—-
இந்தத் திருமணத்தைக் கண்டித்துப் பல இடங்களில் பேசினார் அண்ணா.
அவர் திராவிடநாடு பத்திரிகையில் எழுதிய நீண்டதொரு மடலின்
கடைசியில் இப்படிச் சொல்கிறார்:
—-
‘அப்பா அப்பா என்று அந்த அம்மையார் மனம் குளிர வாய் குளிர கேட்போர்
காது குளிரக் கூறுவதும் அம்மா அம்மா என்று கேட்போர் பூரிப்பும்
பெருமையும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைப்பதும்
இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புமகள் இந்த மணியம்மை எனப்
பல்லாயிரவர் எண்ணி மகிழ்வதான நிலை இருந்தது. அந்த
வளர்ப்புப்பெண்தான் இன்று பெரியாரின் மனைவியாகி இருக்கிறார். பதிவுத்
திருமணமாம்.
‘கையிலே தடி மணமகனுக்கு, கருப்பு உடை மணமகளுக்கு ‘ என்று ஊரார்
பரிகாசம் செய்கிறார்களே. ‘ஊருக்குத்தானய்யா உபதேசம் ‘ என்று
இடித்துரைக்கிறார்களே.
‘எனக்கென்ன வயதோ 70க்கு மேலாகிறது. ஒருகாலை வீட்டிலும், ஒரு
காலைச் சுடுகாட்டிலும் வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ
ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை ‘ என்றெல்லாம்
பேசிய பெரியார் கல்யாணம் செய்து கொள்கிறாரய்யா என்று கடைவீதி
தோறும் பேசிக் கை கொட்டிச் சிரிக்கிறார்களே.
வெட்கப் படுகிறோம் அயலாரைக் காண, வேதனைப் படுகிறோம்
தனிமையிலே!
பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை எவ்வளவு
காரசாரமாக, எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்திருக்கிறோம்!
இப்போது எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும்
கொள்கையையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது
தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார்.
நம்மை நடைபிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டுமக்களின்
நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன
என்று தெரிவித்து விட்டார்.
இதைச் சீர்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்திருப்பது காலத்தால்
துடைக்க முடியாத கறை என்பது மறுக்க முடியாதே!
இந்த நிலையை யார்தான் எந்தக் காரணம் கொண்டுதான்
சாதாரணமானதென்று சொல்ல முடியும் ?
நூற்றுக் கணக்கான மாநாடுகளிலே நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம்
பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைக் காட்டிப் பெருமையாக ‘இதோ
தாத்தாவைப் பார், வணக்கம் சொல்லு! ‘ என்று கூறுவர். கேட்டோம்
களித்தோம்.
பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மனியம்மையைக் காட்டி ‘தாத்தா
பெண்ணு ‘ என்று கூறுவர்.
இன்று அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம். பனிவிடை செய்துவந்த
பாவையுடன்.
சரியா முறையா என்று உலகம் கேட்கிறது.
அன்புள்ள
சி.என்.அண்ணாதுரை ‘
(ஆதாரம்:திராவிடநாடு 3-7-1949)
—-
பலவித எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் ஈவேராவின் இந்தத் திருமணம்
முடிந்தவுடன் கட்சியை விட்டு அண்ணா வெளியேறிப் பின் எழுதியது:
—-
‘பெரியாரின் திருமணம் கட்சிப் பெருமையின் மீது வீசப்பட்ட ஈட்டி.
இயக்கத்தின் மாண்பு அதன் தலைவரின் தகாத செயலால்
தரைமட்டமாகிவிடும். உரத்த குரல் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும் இனி
தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவை காப்பாற்றிவிட
முடியாது. போற்றிப் பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும்
அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டு போய் விட்டுவிட்டது. இனி
அவரின் கீழிருந்து தொண்டாற்றுதலால் பயனில்லை. உழைத்து நாம் சிந்தும்
கண்ணீர்த்துளிகள் அவரது ‘சொந்த ‘ வயலுக்கு நாம் பாய்ச்சிய
தண்ணீராகவே ஆகும் என்று கருதி அவரது தலைமை கூடாது; அது மாறும்
வரை கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற
கழகங்களும், தோழர்களும், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும்
கண்ணீர்த்துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர். ‘
(நன்றி: திராவிடநாடு – 21-8-1949)
—-
கற்புக்கனல் கண்ணகியைச் சாடிவந்த ஈவேராவின் இந்தத் திருமணம்
முடிந்தவுடன், பின்னர் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் சொன்னது:
—-
‘கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்குச் சிறிதாவது அறிவு,
மனித உணர்ச்சி, தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக்
கொள்ளமுடியுமா ? ‘ என்று கம்பீரமாகக் கேள்வி கேட்டு வந்தார் ஈவேரா.
முதலில் தந்தையாக உறவு கொண்டு பிறகு அவரையே கணவராகக்
காதலிக்கும் பெண் அறிவுக்குப் புறம்பானவள்தான். உணர்ச்சிக்காக
அல்லாமல், உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித
உணர்ச்சி அற்றவள்தான். ஊரார் பழிக்கும் நிலைமையிலும், உணர்ச்சி
அற்ற கட்டையாக கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானம் அற்றவள்தான்.
இந்தக் குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈவேரா
சந்தித்து விட்டார் போலும். அவளை நினைவில் வைத்துக் கொண்டு
கண்ணகியைச் சாடுகிறார். ‘
(நன்றி: தமிழ்முரசு – ஏப்ரல் 1951)
—-
புத்தகத்திலிருந்து முடிவு
இதுதான் பொருந்தாத் திருமணத்தை எதிர்த்துப் போராடிய பகுத்தறிவுப் பகலவனின் லட்சணம். எந்த வயதில் யாருடன் வேண்டுமானாலும் திருமணம் கொள்ளலாம், அது அவரவர் விருப்பம். ஆனால், தன் வாழ்நாள் முழுவது அவ்வாறான திருமணங்களை எதிர்த்து முழங்கி விட்டு, அதே செயலைத் தானே செய்தவரை எங்கனம் பகுத்தறிவுப் பாசறை என்று வழங்குகிறார்கள் ? அவ்வாறு ஒரு சின்னத்தனமான காரியத்தை செய்தவர் எங்கனம் பெரியார் என்று அழைக்கப் படுகிறார் ? கண்ணகியை வசை பாடுவதற்கு இவருக்கு என்ன அருகதை இருக்கிறது ? இவர் தன் மடத்துச் சொத்துக்களைக் காப்பாற்றுவதற்காகவே வேறு எதற்காகவோ திருமணம் செய்து கொள்ளட்டும், அது வரை சீர்த்திருத்தம் பற்றி பேசியதெல்லாம், சாத்தான் ஓதிய வேதம்தானே ? நான் கேட்கவில்லை, அவரது கண்ணீர்த் துளிகள் கேட்கின்றன. ஒரு இளம் பெண்ணை அதுவும் மகள் போல் வளர்த்த ஒரு இளம் பெண்ணை தள்ளாத வயதில் திருமணம் புரிந்து கொண்டவர் எப்படி பெண்கள் உரிமைக்காகப் போராடியவர் என்று கருத முடியும் ? அவர் என்னதான் அது குறித்து பேசினாலும் எழுதினாலும் யார் மதிப்பார்கள் ? அடுத்தவனுக்கு அறிவுரை கூறு முன்னால் தான் நடந்து கொண்ட விதம் என்ன ? ஒரு வேளை இவரது பகுத்தறிவுக்கு மட்டும் 72 வயதும் 26 வயதும் சரியான பொருத்தமான வயதாக தோன்றிவிட்டதோ ? இவரை பகுத்தறிவுப் பகலவன் என்று அழைப்பவர்கள் தான் விளக்க வேண்டும். கேட்டால் அவர் அது குறித்து தன்னிலை விளக்கக் கையேடு போட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். தன் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்
யாருமே அவ்வாறான தன்னிலை விளக்கம் கொடுக்கக்கூடும்தான் ஆனால் பொதுவாழ்வில் நேர்மை என்று ஒன்று உண்டல்லவா ? எந்தக் குற்றவாளிதான் தான் குற்றவாளி என்று ஒப்புக் கொள்கிறான் ? சுய விளக்கக் கையேடு போட்டதும் அது போன்ற ஒரு தன்னிலை விளக்கம்தானேயன்றி அது அவருடையக் கொள்கை முரண்பாடுகளையும், சுயநல அபிலாஷைகளையும் மறைக்க உதவாது.
தன் மகன் அதிகமாக இனிப்புச் சாப்பிடுகிறான் அவனுக்கு அறிவுறை கூற வேண்டும் என ஒரு துறவியிடம், ஒரு தாய் கேட்க அவரோ, மறுநாள் உன் மகனை அழைத்து வா என்று கூறினாராம். முதலில் அந்த வழக்கத்தைத் தான் நிறுத்தினால்தான் அடுத்தவருக்கு அறிவுரை கூறுவது முறையாக இருக்கும் என்பதால் அவ்வாறு கூறியுள்ளார். ஆனால் ஈ வெ ரா விஷயத்திலோ, ஊரில் இருப்பவனெல்லாம் பொருந்தாத் திருமணம் செய்யக் கூடாது என்று உபதேசித்து விட்டுத் தான் மட்டும் செய்து கொள்கிறார். ஊரில் இருப்பவெர்க்கெல்லாம் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்து விட்டுத் தான் மட்டும் பதிவுத் திருமணம் பண்ணிக் கொள்கிறார். எங்கேயோ வடநாட்டில் ஒரு பார்ப்பனக் கிழவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை இடித்துரைத்த இவர்களுக்கு, இங்கே செய்பவர் பெரியாராகத் தேற்றமளிப்பது வேடிக்கைதான்.
மற்றொன்றும் கவனிக்கப் பட வேண்டும், கடவுள் இல்லையென்று கூறும் ஈ வெ ரா பழமொழியாக ‘பெருமாள் வீட்டுச் சோத்தைத் தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க ‘ என்று தன்னிடம் பணிபுரிந்தவரிடம் அநாகரீகமாகக் கூறியுள்ளார். இவரிடம் சம்பளம் வாங்கினால் இவருக்கு அடிமை என்று நினைத்துக் கொண்டுள்ளார். மனிதனை, தன்னிடம் பணிபுரிபவரையே அடிமைத்தனமாக நடத்திய ஈ வெ ராதான் மனிதனை மனிதன் அடிமைப் படுத்துவது ஒழிய வேண்டும் என்கிறார். ஒரு வேளை தனக்குத்தானே சொல்லிக் கொண்டதுதானோ அது ? என்னே இரட்டை வேடம் ? என்னே மனிதாபிமானம் ? என்னே மனித நேயம் ? என்னே மனித நாகரீகம் ? பெண்ணுரிமை பற்றி வாய் கிழியப் பேசிய இதே ஈ வெ ரா தன் முதல் மனைவியை எவ்வளவுக் கேவலமாக நடத்தியுள்ளார் என்பதை அவரது சீடர்களில் ஒருவரான சுவாமி சிதம்பரம் என்பவரே விரிவாக எழுதியுள்ளார். அறிவுரை, உபதேசம், சீர்த்திருத்தம் எல்லாம் அடுத்தவனுக்குத்தான். என்ன பகுத்தறிவோ ? என்ன சீர்திருத்தமோ ? அந்த வெங்காயத்துக்குத்தான் வெளிச்சம்
பகுத்தறிவு உள்ள அனைவரும் சிறிதாவது சிந்திக்க வேண்டும்.
விஸ்வாமித்ரா
—-
viswamitra12347@rediffmail.com
- நெருப்பு நிலவன் பேனா மையில் கலந்திருப்பது என்ன ? விளம்பர மையா ?
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-4
- ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்
- கவிதை….
- எழுநிலை மாடம்
- சுமதி ரூபனின் ‘யாதுமாகி நின்றாள் ‘
- விஷ்வதுளசி -இணையாத உறவுகள்
- வெளி ரெங்கராஜனின் கலையும் வாழ்க்கையும்
- பெண்கள் எதிர்கொள்ளும் காலங்களின் பதிவு
- ஆசி. கந்தராஜாவின் உயரப் பறக்கும் காகங்கள் ஒரு பார்வை
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 2
- கடிதம் – ஏப்ரல் 1, 2005
- பூகோள அச்சின் சாய்வு, சுற்று வீதியின் மாறுதல். பனியுகமும் பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகளும். (6)
- பெரியார் மீதான விமர்சனங்களும், உண்மைகளும்
- புஷ்பராஜன் நூல் வெளியீடு
- சடச்சான்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஐந்து: லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு
- விடியலை நோக்கி
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)
- வலி
- யுனித்தமிழ் – ஜிமெயில் – கூகுள் குழுமம்
- ‘இடிபாடுகளுக்கிடையில்” – வெளி ரெங்கராஜனின் கட்டுரைத் தொகுப்பு
- பாப்லோ நெருதாவின் துரோகம்
- அறிவியல் கதை – (விண்வெளியில்) சமைப்பது எப்படி ? (மூலம் : எலன் க்ளேஜஸ்)
- அகத்தின் அழகு
- மா..மு..லி
- விடுதலை
- வேஷங்கள்
- தேன்கூடு
- து ணை -பகுதி 8 / குறுநாவல்
- அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்
- வீங்கலையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மக்களுக்கு மறுவாழ்வளிப்பதும் மீன் பிடித்தல், உள்நாட்டு நாவிகம் உட்பட்ட கடற்கரைப் பாதுகாப்பு
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – ஹோ சி மின்
- முரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா
- குரங்குகளின் ராஜ்ஜியத்தில்…
- உயிரே
- பெரிய புராணம் – 20. ஆனாய நாயனார் புராணம்
- கவிதைகள்
- கையிருப்பு மானிடராய் வாழ்ந்து செல்வீர்
- நிழல்களைத் தேடி …. (2)
- வம்ச விலக்கு
- றகுமான் ஏ. ஜெமில் கவிதைகள்
- அதீத வாழ்வு
- ஏ.எம். குர்ஸிதின் ஒரு கவிதை
- தொலைக் கடத்தி