வாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

மத்தளராயன்


முதல் தடவை கண்ணில் பட்டபோது நம்பவே முடியவில்லை. மனம் விசிலடித்தபடி தறிகெட்டுப் பாய, கண் ரெண்டும் வேடிக்கை விநோதமாக எதையோ சித்தரித்து நிறுத்தியதாக ஒரு தோணல். முந்தைய ராத்திரியில் ஊற்றிக் கொண்ட வெள்ளை ஒயினில் எக்ஸ்டசியைக் கலந்து கொடுத்து விட்டானா எழவெடுத்தவன் என்று மதுக்கடைக்காரனை – காரியைத் திட்டித் தீர்த்தபடி இன்னும் சிரத்தையாகப் பார்த்தபோது லண்டன் கோபுர வளாகப் பக்கம் அந்த ரிக்ஷா சடுதியில் ஓடி மறைந்தே போனது.

ஈரமான ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இன்னொரு ரிக்ஷா கண்ணில் பட்டது இரண்டு மாதம் கழித்து. பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வலப்புறமாக, தழையத் தழைய மரங்கள் பூ உதிர்க்கும் சாலையில் காவல் சேவகர் அலுவலகத்தை ஒட்டிச் சிட்டாக அது விரைந்து போய்க்கொண்டிருந்த காட்சி நிச்சயம் மனப் பிராந்தியோ விஸ்கியோ இல்லை.

வெள்ளைக்காரன் ஓட்ட, இன்னொரு வெள்ளைக்காரன் உட்கார்ந்து போகிறான். ஓட்டுகிற துரை முகத்தில், உடற்பயிற்சிக்காக சைக்கிள் மிதித்து நாலுகல் தொலைவு போகிறவனின் உற்சாகம். படம் பிடித்துக் கொண்டு ஆரிஃப்ளக்ஸ் காமிரா பின்னாலேயே தொடர்ந்து வருகிற மாதிரியும் அதற்கு வேண்டி அபிநயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது போலவும் அவனுக்குப் பின்னால் உட்கார்ந்து போகிறவன் உடம்பை அப்படியும் இப்படியும் அசைத்தபடி போகிறான். பாட்டு எடுத்து விடாததுதான் குறை.

பெடிகேப் என்ற ரிக்ஷாக்கள் இப்படி லண்டன் மாநகரத்திலும் அங்கங்கே இருக்கிற, உருண்டோடுகிற செய்தி தெரிய வந்தபோது ஏற்பட்ட ஆசுவாசம் கொஞ்ச நஞ்சமில்லை. தொப்பியைத் திருப்பி மாட்டிக்கொண்ட வெள்ளைத் தோல் துரையானால் என்ன, பீடி வலித்தபடி ரிக்ஷா மிதிக்கும் நம்ம ஊரு கன்னியப்பனோ முனுசாமியோ ஆனால் என்ன, இந்த ரெண்டு சக்கர வாகனம் நகர நாகரீகத்தின் அடையாளமாகக் கிட்டத்தட்டக் காமன்வெல்த் பிரதேசம் முழுக்க எல்லாக் குடிபடைகளையும் இணைக்கட்டும் என்று ஆசிர்வதித்த தேவனுக்கும் எலிசபெத் ராணியம்மாளுக்கும் ஸ்தோத்ரம் சொல்ல விடாமல் கென் லிவிங்ஸ்டன் குறுக்கே வந்து விழுந்தார்.

ஆசாமி டோனி பிளேரின் தொழிற்கட்சியில் போக்கு வரத்துப் பிரமுகர். அதாவது கட்சிப் பதவியில் இருந்து, கட்சியை விட்டு வெளியேறி, மறுபடி உள்ளே வந்தவர். லண்டன் மாநகர மேயர். தடால் தடால் என்று கராத்தே அடியாகத் திட்டம் போட்டுச் செயல்படுத்துவதில் பேர்போன அந்த ஊர் அரசியல்வாதி.

கார் ஓட்டத் தெரியாத லிவிங்க்ஸ்டன் போன தடவை பதவிக்கு வந்ததும் குறி வைத்தது கார் வைத்திருக்கும் லண்டன் வாசிகளை. அரசாங்கக் கஜானாவிலிருந்து காசைத் தண்ணீராகச் செலவழித்து மாநகரப் பேருந்தும், பாதாள ரயிலுமாக நாள் முழுக்க ஊரெல்லாம் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். அவ்வப்போது ரயில் எங்கேயாவது முட்டி மோதி விபத்தாகி நாலு நாள் தினப்பத்திரிகையிலும் கேபிள் டிவியிலும் வேலையற்ற கிழவர்கள் கருத்துச் சொல்லி, சண்டை போட்டுச் சமாதானமாகிறார்கள். அம்மா குடி அப்பா குடி என்று ஆற்றுத் தண்ணீராகப் போய்க் கொண்டிருக்கும் அரசு சேவையை நகர வாசிகள் இன்னும் நிறையப் பயன்படுத்தவில்லையே என்ற ஆதங்கம். கூடவே பெட்ரோல் வாங்கிய, விற்ற காசின் வாடையடிக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நல்ல எண்ணம். இதெல்லாம் உந்தித்தள்ள லிவிங்க்ஸ்டன் கொண்டு வந்தது கஞ்சஷன் டாக்ஸ் என்ற நெரிசல் வரி.

ஈராக்கில் புஷ்ஷுக்கு ஆதரவாகப் பிரிட்டாஷ் பட்டாளத்தை டோனி பிளேர் அனுப்பியதைத் திரண்டெழுந்து எதிர்த்த லண்டன்வாசிகள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டதுபோல் லிவிங்க்ஸ்டனின் நெரிசல் வரிக்கு எதிர்ப்பே காட்டாமல் சுளுவாகப் பழகிவிட்டார்கள். லண்டனிலும் வெஸ்ட்மினிஸ்டரிலும் நெரிசல் மிகும் காலை – மாலை நேரங்களில் காரை ஓட்டிப் போக தினசரி, மாசாந்திர வரி கட்டுகிறவர்களும், வண்டியை வீட்டில் விட்டுவிட்டு ரயிலைப் பஸ்ஸைப் பிடிக்க ஓடுகிறவர்களும் லிவிங்க்ஸ்டன் தொடர்ந்து பதவியில் நீடிக்கவும் வழிவகை செய்து விட்டார்கள்.

அண்ணன் கவனம் அடுத்து ரிக்ஷா மேல் திரும்பி இருக்கிறது. இந்த தகர டப்பாக்களை ஒழித்துக் கட்டுவதே அடுத்த வேலை என்று மனுஷர் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இம்மாம் பெரிசு பட்டணத்தின் அழகைக் கெடுக்க என்று வந்து வாய்த்ததே என்று அவர் கரித்துக் கொட்டும் ரிக்ஷாக்களின் மொத்த எண்ணிக்கை ஐநூறுக்குள் தான். சுற்றுச் சூழலைப் பாதிக்காமல், படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்குத் தொழில் தரும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டதாக ரிக்ஷா சர்வீஸ் கம்பெனிகள் சொன்னாலும், இவனுகளைக் கண்டுக்காதேப்பா என்று லண்டன் டாக்சி டிரைவர் சங்கம் லிவிங்க்ஸ்டனுக்குத் தூபம் போட்டு ரிக்ஷா ஒழிப்பு இயக்கம் நடத்தச் சொல்கிறது.

பின்னே என்ன ? டாக்சி ஓட்ட லைசென்ஸ், வரி, வட்டி, கிஸ்தி எல்லாம் வேணும். சென்னை அண்ணாசாலையில் துள்ளிக் குதித்து வருகிற மீன் வண்டி போல் லண்டன் ரிக்ஷாவுக்கும் இதெல்லாம் தேவையே இல்லாத சங்கதி. கருப்பு ஆஸ்டின் காரை ஓட்டி பத்தும் இருபதும் பவுண்ட் மீட்டருக்குக் கட்டுப்பட்டுக் கட்டணம் வாங்கி ஜீவிக்க விடாமல், ரெண்டு பவுண்டுக்கும் நாலு பவுண்டுக்கும் ரிக்ஷா வலிக்கிறவர்களின் தொழில் போட்டி.

கோர்ட்டுக்குப் படியேறி, ஆயிரத்து எண்ணூற்று அறுபதாம் வருடப் பாட்டன் காலத்து நியதிப்படி, ஸ்டேஜ் கோச் என்று டாக்சி ஓட்டிக் காசு சம்பாதிக்கத்தான் அரசு சட்டம் வழிசெய்கிறது என டாக்சி டிரைவர்கள் சங்கம் முறையிட்டது. அதெல்லாம் சரிதாம்ப்பா, வழி முச்சூடும் நிறுத்திப் பயணிகள் ஒவ்வொருத்தரிடமும் காசு வாங்கிப் பாக்கி கொடுத்து ஓட்டிக் கொண்டு போகிற ரிக்ஷாவும் கூட ஸ்டேஜ் கோச்தான் என்று அடித்துச் சொல்லி விட்டார் நீதிபதி.

ஆனாலும் நம்பிக்கை இழக்காத லண்டன் டாக்சி டிரைவர்கள் லிவிங்க்ஸ்டன் ஆண்டவருக்கு நேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்தில் லண்டனில் ரிக்ஷா ஓடுமா இல்லை மியூசியத்துக்கோ காயலான்கடைக்கோ போய்விடுமா என்று தெரிய வரலாம்.

மினுமினுக்கும் மஞ்சள் குளித்த, சைலன்சரை அசைலன்சர் ஆக்கி மாட்டிய ஒரு நூறு ஆட்டோ ரிக்ஷா. பிக்கடலி சர்க்கிளிலோ, ஸ்ட்ராண்டிலோ எதிரே, பக்கத்தில் விரைகிற காரையும் பஸ்ஸையும் லட்சியமே செய்யாமல் சர்ரென்று குறுக்கே புகுந்து புறப்பட்டபடி அதெல்லாம் லண்டன் வீதிகளில் குறுக்கும் நெடுக்கும் போனபடிக்கு ..

லண்டன் ரிக்ஷாக்காரர்கள் சென்னை ஆட்டோ நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு நடந்தால் ஆஸ்டின் டாக்சிக்காரர்களை ஒரு கை பார்த்து விடலாம்.

மீட்டருக்கு மேலே அஞ்சு பவுண்டு போட்டுக் கொடு தொரை. மீட்டரைத் தொடாதே. சுடும்.

****

குஞ்ஞாலிக்குட்டிக்குத் தலைவலியும் போகாமல் கூடவே திருகுவலியும் சேர்ந்து கொண்டிருக்கிறது. எட்டு வருடம் முன்பு கோழிக்கோடு ஐஸ்கிரீம் பார்லரில் வேலை பார்த்த மைனர் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மேல் எழுந்த குற்றச்சாட்டு ஒட்டு மொத்த கேரள அரசியலைக் கெல்லிப் பார்க்கிறது. ஐஸ்கிரீம் பார்லர் பெண் விவகாரம் பற்றிப் பேசிய நேரம் போக மிச்சத்தில் தான் கெர்ரி தோற்று, புஷ் வென்றதற்கும், பெட்ரோல் விலை உயர்வுக்கும், சந்தோஷ் ட்ராபி கால்பந்து கெலித்ததற்கும் முறையே வருத்தம், ஆத்திரம், கண்டனம், சந்தோஷம் எல்லாம் தெரிவிக்கிறார்கள் ஓணம் கேராத கேரள மூலை முடுக்குகளிலும் இருக்கப்பட்ட கேரளீயர்.

அரபு நாட்டிலிருந்து கோழிக்கோட்டுக்குத் திரும்பி வந்த குஞ்சாலிக்குட்டிக்கு கரிப்பூர் விமானத் தாவளத்தில் வைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் கறுப்புக் கொடி காட்ட முற்பட்டபோது முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் அவர்களை அடித்து உதைத்தது. டெலிவிஷனின் பெண் பத்திரிகையாளரை ஆபாசமாகத் திட்டித் தாக்கியதோடு காமிராவையும் உடைத்துப் போட்டவர்கள் விமான நிலையத்தில் பச்சைக்கொடி பறக்க விட்டபோது பொலீஸ் பரம சாதுவாகப் பார்த்துக் கொண்டிருந்தது.

இதற்கிடையே குஞ்ஞாலிக்குட்டி மேல் பாலியல் வன்முறை புகார் கொடுத்த ரஜீனா திடார் என்று அந்தர்பல்டி அடித்து, பழைய நக்சல் வாதியும் ‘அன்வேஷி ‘ சமூக சேவை அமைப்பின் தலைவியுமான அஜிதா சொல்லிக் கொடுத்துத்தான் தான் குஞ்ஞாலிக்குட்டி மேல் புகார் சொன்னதாக அடுத்த பரபரப்பு பேட்டி அளித்திருக்கிறார். அஜிதா இதை மறுக்கிறார்.

ரஜீனாவை இப்படி வார்த்தை மாறிச் சொல்ல வைக்க குஞ்ஞாலிக் குட்டி பக்கத்திலிருந்து ஏகப்பட்ட பணம் கைமாறியதைப் பார்த்ததாக ரஜீனாவின் சித்தி மகனான பத்து வயதுச் சிறுவன் சொல்கிறான். அந்தப் பையன் என் பணத்தைத் திருடி விட்டான் என்று ரஜீனா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை ச்ன்னப் பையனைக் கைது செய்கிறது. அப்புறம், எட்டு வருடம் முன்னால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற குற்றத்துக்காக ரஜீனாவையும் இப்போது கைது செய்துள்ளது.

பெரும்பான்மை மலையாளிகள் குஞ்ஞாலிக்குட்டி பதவி விலக வேண்டும் என்று கருதுகிறார்கள். குறைந்த பட்சம் அவர்மேல் உம்மன் சாண்டி ஒரு விசாரணைக் கமிஷன் போட்டு அது விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்வரை குஞ்ஞாலிக்குட்டி மந்திரிசபையிலிருந்து மாறி நிற்க வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை.

எம்.டி.வாசுதேவன் நாயர், சாரா ஜோசப், கவிஞர் ஒ.என்.வி.குரூப்பு, சுகதகுமாரி என்று கேரள இலக்கியவாதிகள் குஞ்ஞாலிக்குட்டிக்கு எதிரே ஒரே அணியாகத் திரள, அஜிதாவும், சாரா ஜோசஃபும், மற்ற கவிதாயினிகள், கதாசிரியைகளும் கையில் துடைப்பம் ஏந்தித் திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தை நோக்கிப் போராடக் கிளம்பி இருக்கிறார்கள்.

வலது பக்கம் பா.ஜ.க மாஜி அமைச்சர் ராஜகோபால், இடதில் சகாவு அச்சுதானந்தன் என்று காவி, செங்கொடி பேதமில்லாமல் இந்த விஷயத்தில் ஒரே நிலைபாடு எடுத்திருக்க, குஞ்ஞாலிக்குட்டிக்கு எதிரே எட்டு வருடத்துக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தபோது இடது முன்னணி மந்திரிசபைதான்அது முன்னேற விடாமல் பார்த்துக்கொண்டது என்று இன்னொரு பக்கம் புகார்.

முதலமைச்சர் உம்மன் சாண்டி எல்லாவற்றையும் கண்டும் கேட்டும் சும்மா இருக்கிறார். இனியும் இப்படி இருந்தால் குஞ்ஞாலிக்குட்டியோடு அவரும் வீட்டுக்குப் போக வேண்டியிருக்கும் என்கிறார்கள் சேட்டன்மார்.

இன்னும் ஒரு மாதத்துக்காவது குஞ்ஞாலிக்குட்டி தயவில் பத்திரிகை, டெலிவிஷன் எல்லாவற்றுக்கும் ஸ்கூப் ஸ்கூப்பாகச் செய்தி ஐஸ்கிரீம் கிடைத்துக் கொண்டிருக்கும் என்பதில் ஒட்டும் சம்சயமில்லை.

****

ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமமே தேவைப்படுகிறது.

சமுதாய வாழ்க்கையின் மகத்துவத்தைச் சொல்லும் இந்த அழகான ஆப்பிரிக்கப் பழமொழியைப் படித்தது மொழிபெயர்ப்பில் வந்த ஆப்பிரிக்க நாவலிலோ, கவிதையிலோ இல்லை. யு.எம்.எல் என்ற யூனிஃபார்ம் மாடலிங் லாங்க்வேஜ் பிரம்மாக்களில் ஒருவரான ஐவர் ஜேக்கப்சன் எழுதிய மென்பொருள் பகுதி மறுபயன்பாடு (சாஃப்ட்வேர் காம்பொனண்ட் ரீயூஸ்) பற்றிய புத்தகத்தில்.

ஆப்பிரிக்க, ஆசிய நாகரிகங்களில் கிராமம் என்பது அன்றாட சமூக வாழ்க்கையின் பிரித்துப் பார்க்க முடியாத ஓர் அங்கமாக சமீப காலம் வரை விளங்கி வந்திருக்கிறது. இந்த அமைப்பின் பலத்தை ஆப்பிரிக்காவில் பார்த்தால், அதன் பலவீனத்தை இங்கே பார்க்கலாம். ஒரு கிராமமே ஒட்டு மொத்தமாகத் சாதி அடிப்படையில் திரண்டு, கூட்டத்தில் உட்படாதவர்களைக் கொடூரமாக வதைப்பதும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதும் இங்கே சாதாரணமாகக் காணக் கிடைப்பது.

கொஞ்சம் ஆழ்ந்து அவதானித்தால், இனப் படுகொலையில் நசித்த ருவாண்டாவிலும் வலுவான கிராம சமுதாயம் இருந்திருக்கிறது. அதன் ஒட்டுமொத்த வலுவை டூட்சி, ஹூட்டு என்று இனப் பாகுபாடு பிளந்து எரிய அதிக நேரமாகவில்லை என்பதற்கு இந்தக் கூட்டுத் தொகுதியான பலமே காரணமோ என்னமோ.

மனிதருக்கு மனிதர் பெளதிகமாகவும், மனத்தளவிலும் அகன்று சுவாசிக்கும் நகர அமைப்பில் இப்படி ஒரு – இரு முனையாகச் சட்டென்றோ நாட்படத் தொடர்ந்தோ குவியம் ஏற்பட வாய்ப்பு குறைவு. குஜராத் விதிவிலக்கு என்றாலும்.

என் குழந்தையை வளர்க்க என் வீட்டு டி.வியும், பிரிட்ஜில் மில்க் சாக்லெட்டும், பள்ளிக்கூட வேனும், சாயந்திரம் வரும் பாட்டு வாத்தியாரம்மாவும், எப்போதாவது பாதிக் கதவைத் திறந்து வைத்துப் பேசிவிட்டு வேஃபர் பிஸ்கட் தரும் பக்கத்து வீட்டுப் பாட்டியும் போதும் போல இருக்கிறது.

****

லண்டன் ரிக்ஷா பற்றி எழுதிக் கொண்டிருந்தபோது மனதில் பின்னணி இயக்கமாக கொல்கத்தா நகர கைரிக்ஷா நினைவு வந்தது. இந்தியாவில் வேறு எந்த மகாநகரிலும் இல்லாத இரண்டு விஷயம் கொல்கத்தாவில் உண்டு. ஒன்று டிராம் வண்டி. மற்றது பீகார் மாநிலத்து ஏழை எளியவர்கள் நகரப் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே மூட்டை மூட்டையாக வங்காளிகளை ஏற்றிக்கொண்டு இழுத்துத் திரியும் கை ரிக்ஷா. அறிவு ஜீவி வங்காளிகள் இன்னும் மனிதன் இழுக்க மனிதன் ஊர்ந்து போகும் அவலத்தை நிகழ்காலத்திலும் நீடிக்க வைத்திருப்பது எதற்காக என்று புரியாவிட்டாலும் அவர்களிலும் பஞ்சை பராரிகள் உண்டு, அவர்கள் இதைப் பற்றிக் கரிசனம் கொண்டவர்கள் என்பது தெரியும்.

மறைந்த அறிவுஜீவி நடிகர் பால்ராஜ் சாஹ்னி அடுத்து நினைவு வருகிறார். சிவப்புச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, சகாக்களும் மேன்மையான கலைஞர்கள், எழுத்தாளர்களுமான கே.ஏ.அப்பாஸோடும், ஏ.கே.ஹங்கலோடும், சலீல் செளதிரியோடும், தன் சொந்தத் தம்பி பீஷ்ம் சாஹ்னியோடும் சேர்ந்து அவர் கட்டி நிறுத்திய இந்திய மக்கள் நாடக மன்றம் (இப்டா) இந்திய நாடக இயக்க வரலாற்றில் ஒரு மைல்கல். சமூக அக்கறையைப் பிரதிபலிக்கும் ‘நயா தெளர் ‘ திரைப்படம் இப்டா வழங்கிய கொடைதான்.

‘தோ பீகா ஸமீன் ‘ படத்தில் பீகார் கிராமத்திலிருந்து குடிபெயர்ந்து கல்கத்தா நகரில் கை ரிக்ஷா இழுக்கும் தொழிலாளியாக பால்ராஜ் சாஹ்னி நடித்தபோது பால்ராஜ் சாஹ்னி என்ற கலைஞர் பின்னுக்குப் போக, ஷொம்பு என்ற அந்த ரிக்ஷாக்காரர்தான் திரையிலும் மனதிலும் நிறைந்து நின்றார். இங்கேயும், சோவியத் ஒன்றியத்திலும் அடித்தட்டு மக்களின் மனதைத் தொட்ட ராஜ்கபூர் கூடச் சாதிக்க முடியாதது இது.

பால்ராஜ் சாஹ்னியின் சுயசரிதத்தில் ஒரு காட்சி.

‘தோ பீகா ஸமீன் ‘ படத்தில் ஒரு காட்சியில் ரிக்ஷா இழுத்து வந்த பால்ராஜ் சாஹ்னி நடுத்தெருவில் மயங்கிச் சாய்கிறார். அப்போது தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த சாமானியர்கள் எல்லாம் தன்னிச்சையாக அவருக்குக் கைகொடுத்து எழுப்பிவிட முன்னால் ஓடுகிறார்கள். இவர்களில் யாரும் திரைப்படத்தில் நடிக்கக் காசு கொடுத்துக் கூட்டி வந்த துணை நடிகர்கள் இல்லை.

தூரத்தில் உயரத்தூக்கியில் திரைப்படக் காமிரா அவர்கள் கண்ணில் பட்டதாம். அப்போது அவர்கள் பால்ராஜ் சாஹ்னியைப் பார்த்த பார்வையில் இருந்த ஏமாற்றமும், கோபமும் பற்றி சாஹ்னி சொல்கிறார். அந்த மக்கள் கலைஞன் மனதில் இறுதிவரை அழியாமல் நின்ற பார்வை அது. ரொபீந்த்ரநாத் தாகூர், ஜோதிபாசு, புத்ததேவ் தாஸ்குப்தா, சத்யஜித்ராய், மிருணாள் சென் – எல்லோரையும் இந்தப் பார்வை தொடர்ந்து வந்து கொண்டேதான் இருந்தது. இருக்கிறது.

****

இந்த வாரம் ரசித்தது –

அக்டோபர் 2004 புக் ரெவ்யூ இதழில், வைணவ ஆசாரியாரான வேதாந்த தேசிகரின் தமிழ், வடமொழி, பிராகிருத படைப்புகள் பற்றி ஸ்டாவன் பால் ஹாப்கின்ஸ் எழுதி, ஓக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிரஸ் பிரசுரித்த ‘ சிங்கிங் த பாடி ஓஃப் காட் ‘ புத்தகம் பற்றி பாகீரதி ஜகன்னாதன் எழுதிய மதிப்புரையிலிருந்து.

The prestige of the Oxford University Press being what it is, I was constantly checking the dictionary for meanings of new, unfamiliar words, only to find that they don ‘t exist outside the poorly proof read text.

****

மத்தளராயன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்