நாடகம் நடக்குது நாட்டிலே!

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

அக்னிப்புத்திரன்.


தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஆளுநர் மாற்றம் நிகழ்ச்சியில் மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்கள் முதல் ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளர் வரை பகிரங்கமாகக் கருத்துகளை வெளியிட்டு மோதிக்கொள்கிறார்கள். எல்லாவற்றிர்க்கும் சிகரமாய் உள்துறை அமைச்சருக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் தொலைபேசி உரையாடலை வெளியிட்டு அதன் வழியாக மத்திய மாநில அரசுகளின் உறவின் விரிசலுக்கு அடிகோலியதோடு, மீண்டும் ஒரு மிகப்பெரிய அரசியல் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார் முதல்வர் செல்வி.ஜெயலலிதா.

முதலில், பிரதமருக்கு அடுத்த நிலையில் உள்ள பலம் பொருந்திய உள்துறை அமைச்சகத்தின் அமைச்சரின் தொலைபேசி உரையாடலை அவருக்கே தெரியாமல் பதிவு செய்யலாமா ? சரி, அப்படியே பதிவு செய்யப்பட்டாலும் அந்த உரையாடலை அனைவருக்கும் பகிரங்கமாக அம்பலப்படுத்தலாமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இது அரசியல் சாசன விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும் இரகசிய காப்புப் பிரமாணம் மாநில முதல்வரால் மீறப்பட்டுள்ளது என்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கூறுகின்றன. முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் திரு. கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் திரு.வாசன், பாமக நிறுவனர் திரு. இராமதாஸ், திரு. வைகோ, திரு.நல்லக்கண்ணு மற்றும் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், தயாநிதிமாறன் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

உள்துறை அமைச்சரின் அரசு நிர்வாகச்சம்பந்தப்பட்ட தொலைபேசியின் உரையாடலைப் பதிவு செய்து அதை அனைவருக்கும் அம்பலப்படுத்துவது என்பது முறையான செயல் இல்லை என்பதும் இது விதிகளுக்கு முற்றிலும் முரணானது என்பதும் இரண்டு முறை முதல்வர் பதவி ஏற்றுள்ள செல்வி.ஜெக்குத் தெரியாத ஒன்றாகக் கண்டிப்பாக இருக்க முடியாது. சரி, இப்படிக் கற்பனை செய்து பாருங்கள் முதலமைச்சராக உள்ள இவர் தன் அமைச்சர்களிடமோ அல்லது உயர் அரசு அதிகாரிகளிடமோ நிர்வாகச்சம்பந்தமாகத் தொலைபேசி வழி பேசுவதைச் சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்து அனைவருக்கும் அம்பலப்படுத்தினால் இவரால் சகித்துக்கொள்ள இயலுமா ? அல்லது பொறுத்துக்கொண்டுத்தான் சும்மா இருக்க முடியுமா ? அவர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவாரா ?

எனவே இந்நிகழ்வு, மத்திய அரசுடன் மோதல் போக்கை உருவாக்கி அதன் வழி அரசியல் ஆதாயம் பெறுவதற்காக அரசியல் அரங்கில் திட்டமிட்டு நடத்தப்படும் நாடகமே இது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

தற்போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், வீரப்பன் விவகாரம், வீராணம் தண்ணீர், திருட்டு விசிடி ஒழிப்பு போன்றவைகளில் தங்களுக்குச் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக அதிமுகவினர் கருதுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டால் அதைக் காரணம் காட்டி மத்திய அரசு, மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்கும். அப்படி நடவடிக்கை எடுக்கும்போது மோதலை முற்றச்செய்து, ஆட்சி கலைப்பு வரை கொண்டு சென்றுவிட்டால், அதையே அனுதாபமாக மாற்றி மக்களிடம் நீதி கேட்டு, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டமாகவே இது இருக்கக்கூடும். இப்படிப் பரபரப்பாக அரசியல் காய்களை நகர்த்திச் சென்றால், மற்றப் பிரச்சினைகள் எல்லாம் திசை திருப்பிவிடப்பட்டு மறக்கடிக்கப்படலாம்.

இதைத் துல்லியமாக உணர்ந்துகொண்டதால்தான் மாநில எதிர்க்கட்சிகள் சாமர்த்தியமாக ஆட்சி கலைப்பைக் கோராமல், முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளரின் ராஜினாமவை மட்டுமே வலியுறுத்துகின்றன. தமிழக ஆளுநர் மாற்றல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பப்போவதாக பா ஜ க தலைவர் அத்வானி கூறியிருப்பதும் இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது.

-அக்னிப்புத்திரன்.

agniputhiran@yahoo.com

Series Navigation

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்