ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

ஆசாரகீனன்


இனி, தனி நபர் சுய முன்னேற்ற வேட்கைகள், பொது நல நோக்கு என்ற வேடத்தில் வெளிப்பட்டு இந்தியாவை ஒரு கலக்கு கலக்கியது பற்றி ஒரு குறிப்பு. காலனியத்தில் இருந்து விடுபட்ட இந்தியா அதன் எல்லைகள், ஒருமை, உட்கட்டுமானம் ஆகியவற்றை உறுதி செய்யும் முன்னரே அதைக் குலைக்கவும், அழிக்கவும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. இதில் முன்னாள் காலனிய ஐரோப்பிய/மேலை நாடுகளின் பங்கு என்ன என்பது இன்னமும் தெளிவாகவில்லை. ஆனால், மேலை நாடுகள் தம் எல்லைகளுக்குள்ளிருந்து இந்தியாவின் ஒருமையைக் குலைக்க எழுந்த முயற்சிகளை அன்றும் சரி, இன்றும் சரி கண்டிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ சிறிதும் விரும்புவதில்லை. மாறாக, சீனாவின் ஒருமையைக் காப்பாற்ற மேலை முதலாளியம் விழுந்தடித்துக் கொண்டு முன்னே நிற்கிறது.

அடிக்கடி ஐரோப்பியரும், அமெரிக்கரும் தாய்வான் அதிபருக்கு எச்சரிக்கை விடுவதைக் கவனித்தால் இது புரியும். தாய்வான் தன்னைத் தனி நாடாக அறிவிக்காமல் தடுக்க இந்த நாடுகள் முன்னால் நிற்கும். ஆனால், இந்தியாவில் நாகர்கள், அஸ்ஸாமியர், தமிழர், சீக்கியரிலிருந்து ஓர் 20 சதவீதம் மக்கள் தம் நிலப்பரப்பு இந்தியா அல்ல, அது தனி நாடு என்று அறிவிக்க முற்பட்டால் இதே நாடுகள் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து அந்தப் புது நாட்டை தனி நாடாக அங்கீகாரம் செய்யத் தயாராக இருக்கும். இதற்கு என்ன காரணம் பற்றி என்று நாம் எல்லாருமே சிந்திக்க வேண்டி இருக்கிறது. ஏன் ஒரு ஜனநாயக நாட்டை உடைப்பதில் மேலை நாடுகள் இத்தனை ஆர்வம் காட்டுகின்றன ? ஆனால், அவர்களுடைய அரசியல் பொருளாதார அமைப்புக்கு எதிரான ஒரு கருத்தியலும் அரசியல் நோக்கமும் கொண்ட சீனாவை ஏன் இவை அரும் பாடுபட்டு காக்க முயல்கின்றன ? ஒரு காரணம், அங்கு இந் நாடுகள் கடந்த இருபது ஆண்டுகளாக போட்டு வைத்துள்ள முதலீட்டைக் காப்பாற்ற வேண்டுமே என்பது. இது ஒன்றே சரியான காரணமா என்பது எனக்கு உறுதியாகவில்லை. இந்தியாவை உடைக்க எழுந்த பல முயற்சிகளில் ஒன்றான 70-களில் தொடங்கி 80-களின் துவக்கத்தில் மிகத் தீவிரம் பெற்று இந்தியாவிற்கு ஒரு பெரும் சவாலாக எழுந்த காலிஸ்தானி இயக்கம் கவனிக்கத் தக்கது. நாகர்கள், மிசோக்கள் போன்ற பழங்குடியின மக்களின் ‘விடுதலைப் ‘ போராட்டத்திற்கு பிரிட்டனும், அமெரிக்காவும் கணிசமாக ஆதரவு காட்டி இருக்கின்றன என்பதற்கு மதம் ஒரு காரணம் என்ற ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. இந்த மக்களின் ‘விடுதலை வீரர்கள் ‘ பெரும்பாலும் கிருஸ்தவர்களாகவும், சில நேரம் கிருஸ்தவ மதப் பிரசாரகர்களாகவுமே இருப்பதும் ஒரு காரணம் என்றும் கருதப்படுகிறது.

காலிஸ்தான் பிரிவினை இயக்கம் வலுப் பெற்றததற்குப் பல காரணங்கள் உண்டு என்று சொல்லப்படுகிறது. உட்காரணிகள், வெளிக்காரணிகள் என்று பிரித்து அதில் வெளிக்காரணிகளை மட்டும் இங்கு சுருக்கமாகக் காணலாம். உள் காரணங்கள் அனேக இந்திய அரசியல் சிக்கல்களைப் போலவே அடியும் முடியும் எளிதில் தெரியாத பேருரு. சீக்கியருக்கு சுலபமாகக் கைவசப்பட்ட பெரும் பொருளாதார வளம் ஒரு முக்கிய உட்காரணம். சீக்கியர் என்று சொல்வதை விடக் குறிப்பாக, சீக்கிய சமூகத்தில் ஒரு கணிசமான எண்ணிக்கையில் உள்ள மேல் நிலை விவசாயிகளுக்கும், இயந்திரத் தொழில் முதலாளிகளுக்கும் கிடைத்த அபரிமித வளம். இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவு வளம் பெருகவும், அதன் காரணம் தாமும், தம் சமூகத்தின் தனிச் சிறப்பான குணங்களும் தான் என்று ஒரு கோணல் கணக்கு அந்த சமூகத்தின் நடுவே எழுந்தது. இது துரிதமாக முன்னேறும் எந்த ஒரு சமூகக் குழுவுக்கும் ஏற்படக் கூடிய ஒரு மன நோய். அவர்கள் இதைத் தமது உற்சாகமான உலகப் பார்வை என்று தவறாகக் கருதக் கூடும். அதை இங்கு கவனிக்க அவகாசம் இல்லை.

இதர இந்தியா வறுமையிலும், அசைக்க முடியாத அரசின் மெத்தனத்திலும், பெரும் ஊழல் நிறைந்த நேருவிய சோசலிசக் கட்டுமானத் திட்டத்திலும் சிக்கி உழன்றிருக்க, மேலைப் பொறியியல், வேளாண்மை முறைகள், வேளாண்மையில் முதலின் செறிவு நேர்ந்தமை போன்ற பல காரணிகள் பஞ்சாபின் பொருளாதாரத்தை இந்தியாவின் முதல் நிலையில் நிறுத்தியிருந்தன. இது அந்த சமூகத்தின் மேல் நிலையாளருக்கு (elite) செயல் திறனோ, நல்ல எதிர்காலத் திட்டமோ, எதிர்காலத்துக்கான நம்பிக்கையோ இல்லாத இதர இந்தியாவை எள்ளலுடன் நோக்கவும், ஓரளவு இந்துக்களை வெறுக்கும் இனவெறியை ஒத்த மத அடிப்படைவாதத்துக்கும் இட்டுச் சென்றது. இதே நேரம், மேலை நாட்டில் அந் நாடுகளின் குடிமக்களாக வாழும் சீக்கியரில் ஒரு சிறு கூட்டம், பெரும்பாலும் சீக்கிய அடிப்படைவாதிகள், பஞ்சாபை சீக்கியர்களின் புண்ணிய நாடாகக் கருதி, இந்தியாவில் இருந்து அதைப் பிரித்து ஒரு சீக்கிய ரோம் நகரம் போல (Rome) அமிருத்சரை மாற்ற வேண்டும் என்று கருதி, அத்தகைய பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க ஏராளமான நிதி அனுப்பி, பிரிவினைவாதத்தை 70-களில் பஞ்சாபில் எழுப்பினர். பஞ்சாபில் சுமார் 40 சதவீதம் பேருக்கும் மேல் இந்துக்கள் இருந்தனரே, அவர்கள் இந்தியாவில் இருந்து பிரிய விரும்பவில்லையே என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை [கு1]. மார்க்சியரும் இடதுசாரியினரும் யதார்த்தமான கள நிலைகளில் இருந்துதான் மதிப்பீடுகள் எழுகின்றன என்று மெத்தனமான ஒரு கருத்தியலைக் கட்டி வைத்திருக்கின்றனர். மாறாக, மேற் சொன்ன வகை அடிப்படைவாதங்கள் பல நேரம் கள நிலைகளால் ஆதரிக்கப்படாத போதும், கற்பனையான துன்பங்களைக் காட்டி எதிர்ப்பு இயக்கங்கள் எழுப்பப்படக் கூடும் என்பதற்கு ஒரு நிரூபணமாக உள்ளன.

இங்கு புலம் பெயர்ந்த மக்கள், தாய் நாட்டில் இருக்கும் அவர்களது சமூகக் குழுவினரை விடக் கூடுதலாக மரபுச் சிந்தனை உள்ளவராக மாறுவது ஏன் என்று ஆராய அவகாசம் இல்லை. நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், காலனியத்தில் இருந்து விடுபட்ட மக்களும், திறம்படவும், பல நூறாண்டுகளாக மேலதிகாரத்தில் இருப்பதால் உள்ள தன்னம்பிக்கையுடனும், ஓரளவு கறார் தன்மையுடனும் கட்டப்பட்ட மேலை நாகரிகத்தை – தம் பண்பாடு, வரலாறு ஆகியன பற்றிய ஆழமான புரிதலும் இல்லாது, தம் பண்பாட்டின் மீது நம்பிக்கையோ, அது குறித்து எந்த உற்சாகமோ கொள்ளாத நிலையில் தான் இருக்கையில் – தனி நபர் அளவில் எதிர் கொண்டு அல்லல்பட்டுப் போன மனிதரும், தமது சமூகக் குழுவின் அரசியல் – பொருளாதார – பண்பாட்டுத் தோல்வியை எதிர் கொள்ள முடியாமல், தம் துவக்கங்களில் அல்லது பழம் பண்பாட்டில் மதிப்பிட முடியாத அளவு உயர் தரமான அம்சங்கள் நிச்சயம் இருக்கும் என்று ஒரு வெற்று நம்பிக்கையை மட்டும் வளர்த்துக் கொண்டு, அதற்கான தகவல்களை ஒருங்குபடுத்த விழையும் பின்னோக்கிய பார்வையோடு தேடி, ஓர் ஒருமையைத் தோண்டி எடுத்து அதையே சமூகத்தில் கூட வாழும் எல்லா மக்கள் மீதும் திணிக்க முனையும் அவசரத்தைத் தான். இதுவே இன்று பலவித அடிப்படைவாதங்களாக உலகெங்கும் உலவுகிறது.

இதில் சமீப காலமாக இன்னொரு விபரீதமும் உண்டு. மைய நாடுகளாக அல்லது உலக அந்தஸ்துப் படிகளில் மேல்படியில் உள்ளனவாக அறியப்படும் சில நாடுகளில் கடந்த இரு பத்தாண்டுகளில் பின்னே விடப்பட்டுப் போன மக்கள் கூட்டம் ஒன்று கணிசமான எண்ணிக்கை உள்ளதாக இருக்கிறது. இந்த மக்கள் கூட்டம் அமைப்பியல் ரீதியாகப் பார்த்தால் முன்னாள் காலனியப் பிரஜைகளில் ஓரளவு வசதியான மத்திய நிலை மக்களை ஒத்த பொருளாதார நிலையில் இருக்கிறது எனலாம். ஆனால் இதர குறிப்பான்களைப் (indicators) பார்த்தால் – அதாவது, பொருளாதார ரீதியாக எதிர்காலத்துக்கான ஆயத்த நிலை, படிப்பு, தொழில் திறமை, வசிக்கும் இடத்தின் பொருளாதார நிலையில் இவர்களது பங்கு என்பனவற்றை வைத்துப் பார்த்தால் – இவர்களின் நிலை ஓரளவு தாழ்ந்து தான் இருக்கும். பல குறிப்பான்களில் இவர்கள் கீழே கூட இருக்க வாய்ப்பு உண்டு.

அனேக சமூக இயக்கங்களைப் போல இம் மக்களின் அரசியல் செயல்பாடும் யதார்த்த நிலைகளின் கறாரான ஆய்வால் உந்தப்படாமல், யதார்த்த நிலையைப் பற்றிய கணிப்புகள் அல்லது எதிர்பார்ப்புகள் அல்லது பிறரால் ஊக்குவிக்கப்பட்ட கவலைகளால் அதிகம் இயக்கப்படுவதால், பல நேரமும் தவறான பாதைகளில் இவர்களை இட்டுச் செல்கிறதாக அமைகிறது. விளைவு – விளிம்பு நாடுகள், விளிம்பு நிலை மனிதர் ஆகியோர் சகஜமாக மேற்கொள்ளும் ஆபத்தான செயல் முறைகளில் இவர்களைப் பின்னி விடுகிறது. ஆக, அடிப்படைவாதம் இனிமேல் விளிம்பு நிலை மக்களிடம் மட்டும் எழுவதாகக் கொள்ள முடியாது. உயர் நிலை மக்களும், அதாவது ஒப்பீட்டில் உயர் நிலையில் இருப்பதாகத் தெரிபவர் மத்தியிலும் அடிப்படைவாதம் எழும். இதையே ஃபூகோவின் கருத்துகள் எதிர் பார்த்திருக்கின்றன எனலாம். மனிதரின் அக நிலைகள் வரலாற்றால் உந்தப்படுபவைதான். ஆனால், வரலாறு குறித்த தெளிந்த அறிவோ அல்லது சாமர்த்தியமான கணிப்போ கூட இல்லாமல், ஊகத்தாலும், பயத்தாலும், சூதாட்ட மன நிலையாலும் (அடுத்த பகுதியில் காட்டப்படும் அல்பேனிய அமெரிக்கர் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுத்தனர்), இன்னும் பல வகை அறிவார்ந்தன என்று சொல்லப்பட முடியாத வகை செயல்பாடுகளாலும் கூட உந்தப்படுகின்றன. இதில் எது சகஜமான ஒத்துக்கொள்ளப் படக்கூடிய வகை நடத்தை, எது அதீதம் அல்லது நிலை பிறழ்ந்தது என்று யார் தீர்மானிப்பது ? இது குறித்து ஃபூகோவின் சிந்தனைகளைத் தேடிப் படிக்குமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

ஆனால் இத்தகைய மாறுதல், அதாவது கள நிலைகளால் நேர்கோட்டு தர்க்கத்தால் செலுத்தப்படாத வரலாற்று நிகழ்வுகள், மனிதத் தேர்வுகள் உலக சமூக அரசியல் அமைப்புகளுக்கு சவாலாக எழுந்துள்ளமை இன்று உலகில் பல இடங்களிலும் கவனிக்கப்பட்டு, ஓரளவு தீவிரமாகவே ஆராயப்படுகிறது. உதாரணமாக, முன்னாள் சோசலிச நாடான யூகோஸ்லாவியாவின் [கு2] ஒரு மாநிலமான கோசவோவில், பெரும்பான்மை அல்பேனியருக்கும் சிறுபான்மை செர்பியருக்கும் பெரும் மோதல் பல பத்தாண்டுகளாக தொடர்கிறது. தமது நாட்டில் மார்க்சிய லெனினியத்தின் கொடுங்கோல் ஆட்சியைத் தாங்க முடியாமல் அகதிகளாக ஓடி வந்த அல்பேனியருக்குப் புகலிடம் கொடுத்தது செர்பியர் பெரும்பான்மையான யுகோஸ்லாவியா. ஆனால், ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது போல, மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், புலம் பெயர்ந்தவர்களாலும் அல்பேனியர் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகம் குழந்தைகள் பெறாது நவீனத்துவத்தைப் பின்பற்றிய செர்பியர் துரிதமாகவே தமது மாநிலத்தில் சிறுபான்மையினர் ஆயினர். அல்பேனியர் சிறிது சிறிதாக செர்பியரை சீண்டி, தொடர்ந்து துன்பப்படுத்தி தமது உறைவிடங்களை விட்டு ஓடவைத்தனர். இதில் கவனிக்கத் தக்கது என்னவென்றால், செர்பியர் கோசவோ மாநிலத்தைத் தமது தாயகமாகக் கருதுகின்றனர் என்பது. பொதுவுடைமை ஆட்சி (கம்யுனிசம்) 80-களின் இறுதியில் ஐரோப்பாவில் நொறுங்கிச் சிதறிய போது கோசவோவில் அல்பேனியர் 90 சதவீதம், ஆனால் செர்பியர் எண்ணிக்கை 10 சதவீதம் தான்.

யூகோஸ்லாவியா சோசலிச நாடு என்ற அரிதாரத்தை இன்னமும் பூசி இருந்தபோது, அதிபர் டிடோ என்பவரின் ஆட்சிக் காலம் வரை, செர்பியருக்கு இந்தப் பிரச்சினைக்கு வழி தெரியவில்லை. பிற்பாடு கம்யுனிசம் மூளியாகத் தொடங்கி, உலகில் ‘பொதுவுடைமை ‘க் கருத்தாக்கத்துக்கு மவுசு குறைந்து போய், மக்கள் நல் வாழ்வுக்கு இந்தச் சிறையில் இருந்து விடுபடுவதுதான் வழி எனக் கருதி அதற்குப் போராட ஆரம்பித்த காலத்தில், பச்சோந்தியாக வாழ்வதில் மிகத் திறமை உள்ள பல பொதுவுடைமைக் கட்சி மேலாட்சியினர், தமது பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர் அடையாளத்தைப் பின்னொதுக்கி, தம்மை பெரும்பான்மை இனத்து மக்களின் காவலனாக முன் வைத்து, ஒரு தீவிர செர்பிய இன அரசியலை நடத்தி அதன் வழியே தம்மை அதிகாரத்தில் இருத்திக் கொண்டனர். இவர்களில் முக்கியமானவர் செர்பியாவின் முன்னாள் அதிபர் ஸ்லோபொதான் மிலாசெவிச். 90-களில் இவர் பாஸ்னிய முஸ்லிம்கள், குரோவேசியர்கள், மேலும் அல்பேனிய மக்கள் நடுவே இனப் படுகொலைகளை முன் நின்று நடத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டு, உலக நீதி மன்றத்தில் குற்றவாளியாக விசாரிக்கப் படுகிறார். இது அனேகமாக எல்லாருக்கும் தெரியும். ஆனால் கோசவோ வெடித்து ஓர் இனப் போராக ஏன் மாறியது ? இதர இனப் போர்கள் உலகெங்கும் நடக்கையில் இது ஏன் அமெரிக்கரின் கவனத்தை ஈர்த்தது ?

இப்போது தகவல்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. சிலே, நிகராகுவா, பிரேசில், ஆர்ஜண்டினா போன்ற நாடுகள் பெரும் வன்முறை அல்லது பொருளாதாரச் சிக்கலில் மாட்டிய விதம் பற்றிய வரலாறுகள் துளித் துளியாக இப்போது வெளிவந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடுமைகளை நம் முன் வைப்பது போல, இன்று ஐரோப்பாவில் 90-களில் நடந்த பல வகைச் சீரழிவுகள் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் இப்போது நமக்குக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றன. குறு நில தேசியங்கள் பெரும் தேசியத்தை எப்படிக் குலைத்து விட்டன என்பது இந்த வரலாற்றுப் பதிவுகளில் வெளி வருகிறது. இந்தியா போன்ற ஒரு பல வகைப் பண்பாடுகள் ஒன்றிணைந்த பெரும் தேசியத்தைப் பற்றி சிந்திப்பவர்கள் இத்தகைய வரலாற்றுப் பதிவுகளையும், ஆய்வுகளையும் ஊன்றிப் படிக்க வேண்டி இருக்கிறது.

நம் நாட்டிலும், மேற்கிலும் பல கருத்தியல்வாதிகள் இத்தகைய பதிவுகளின் உதவி இல்லாமலே தம் விருப்பத்துக்கு வரலாற்றை வளைக்க முயன்று, சென்ற பத்தாண்டுகளில் எழுதிய பல புத்தகங்களை எதிர் கொள்ளும் இந்த யதார்த்த வாழ்வின் பதிவுகள் அந்த கருத்தியல்களின் மைய வாதங்களை வலுவிழக்கச் செய்கின்றன.

ஒரு சமீபத்துப் புத்தகம் கோசவோ போர் பற்றியது. அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த அல்பேனியரில் ஓரளவு வளமான வாழ்வை அடைந்த சிலர் கோசவோவை முழுவதும் அல்பேனியரின் கைவசப்படுத்தத் திட்டமிட்டு, கோசவோ விடுதலைப் படை என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதற்கு ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் ஆகியன வாங்குவதற்கு அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் இருந்த அல்பேனியரிடம் நிதி திரட்டி, கோசவோவில் இருந்த செர்பிய மக்கள் மீது கொரில்லா நடவடிக்கைகள் மூலமாகத் தாக்குதல் நடத்தினர். அவர்களது திட்டம் என்னவென்றால், செர்பிய இன அரசியல் நடத்தும் மிலாசவிச் இந்த இயக்கத்தை அடக்க கடுமையாக எதிர்த் தாக்குதல் நடத்துவார், இதை சாக்காக வைத்துக் கொண்டு செர்பியரை இன வெறியர் எனப் பழி சாட்டி கோசவோ அல்பேனியரை அபலைகளாகக் காட்டி பன்னாட்டு அரசுகளிடம் இருந்து ஆதரவு பெற்று, செர்பியாவிடமிருந்து கோசவோவை விடுவிப்பது என்பது. இதை புலம் பெயர்ந்த அல்பேனியர் ஒருவர் (கட்டிடத் தொழிலாளி), அமெரிக்காவில் இருந்து பல வருடம் முனைந்து செய்த சதித் திட்டம் எனவும், இதை அமெரிக்க அரசு இனம் காணாது இருந்ததில் இப்போர் பேருரு பெற்று, பல்லாயிரம் செர்பியரும், அல்பேனியரும் கொல்லப்பட வகை செய்தது, செர்பியாவின் பொருளாதாரமும் சமூக அமைப்பும் கடும் துன்பங்களுக்கு ஆளாயின எனவும் இப் புத்தகம் வரலாறாகக் காட்டுகிறது. [கு 3]

இதே போலப் புலம் பெயர்ந்து மேலை நாடுகளில் வாழும் பல இன மக்கள், தமது சிறுபான்மை அடையாளத்துடன் வெற்றிகரமாக இணைந்து வாழ முடியாமலோ அல்லது தாம் தம் தாய்நாட்டில் நல்ல நிலையில் வாழ முடியாமல் வேறு நாட்டில் வாழ வேண்டி வருவதையே ஓர் அவலம் எனவும், வரலாற்றில் தம் மக்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டதன் அறிகுறி எனவும் கருதி அதை ஏற்க முடியாமலோ அல்லது மேற்கில் தனி நபர்களுக்குக் கொடுக்கப்படும் உரிமைகள் தமது தாயகத்திலும் தம் இனக் குழுவுக்கும் கிட்ட வேண்டும் என்ற கருத்தாலோ, இது தவிர வேறு சில ஆதர்சங்களாலோ மேலை நாடுகளில் தம்மால் நடத்த முடியாத சுய நிர்ணயக் கோரிக்கை, உள் நாட்டுப் போர், மேலும் அடையாள அரசியல் ஆகியவற்றைத் தம் தாய்நாடுகளில் நடத்த முற்படுகிறார்கள். சமூக ஆய்வாளர்கள் இதை ‘இடம் பெயர்ந்தவரின் எதிர்வினைத் தேசியம் ‘ என்று அடையாளம் காணத் துவங்கி இருக்கிறார்கள்.

(தொடரும்)

[கு1] அன்றும் இன்றும் சீக்கிய சுய நிர்ணயத்தை ஊக்குவிக்கும் இந்திய மார்க்சியர், இடதுசாரிகளுக்கும் இது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை இந்திய ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளைத் தலைமேல் தாங்கி முன் நடத்த முற்படும் இடதுசாரியினர்தான் முன் மொழிகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை நமக்குப் புரியும்படி மொழி பெயர்த்தால், சிறுபான்மையினர் என்பவர் இந்துக்களாக இல்லாத பட்சத்தில் இந்திய இடதுசாரியினர் அவர்களைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவர். இந்துக்கள் மக்கள் தொகையில் 5 சதவீதமாகவோ, 30 சதவீதமாகவோ எல்லாம் இருந்தாலும் அவர்கள் சிறுபான்மையினர் அல்ல. அவர்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டிய பண்பாட்டைச் சேர்ந்தவரே. அதாவது இந்து எனக் கருதப்படுபவர் மக்களே அல்ல. மூலவர் மார்க்ஸ் அருளிச் சென்றாரே ஒரு வேத வாக்கு – யூதர் யூதராக இருக்கும் வரை அவர்கள் இதர மனித குலத்தில் உறுப்பினராக இருக்கத் தகுதி அற்றவர் என்று. அந்த வேத வாக்கை, அப்படியே இன்று இந்துக்களுக்கு மாற்றி இருக்கிறார்கள் இந்திய மார்க்சியர், மாஒயிஸ்டுகள் மற்றும் இதர இடதுசாரியினர். இந்த அழகில் ‘நாங்கள் வாய்ப்புக்கு ஏற்ற மாதிரி அரசியல் நடத்தும் opportunists அல்ல ‘ என்று வேறு மார்க்சியக் கட்சியின் பிரபாத் கார் அறிக்கை விடுகிறார். அதைத் தவிர வேறு என்ன அரசியல் இவர்களுக்குத் தெரியுமாம் ? வழிமுறைகள் பற்றிய அக்கறை முக்கியம் அல்ல, இலக்குதான் முக்கியம் என்பதுதானே மார்க்சியத்தின் அடிப்படை அரசியலே ? அற நெறி என்பதே மூட நம்பிக்கை என்பதுதானே இந்த சித்தாந்தத்தின் அடிப்படை ?

[கு2] இதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், வழக்கமான சிறு குழு அடக்கு முறை ஆட்சி, ஓரளவு மக்களுக்கு அடிப்படை வசதிகளை அளித்து விட்டு அவர்களை வாயடைத்து, கை கட்டி மந்தையாக இருக்க வைக்கும் ஓர் ஆட்சி முறை என்றுதான் அறிய வேண்டும். ஆனால், இத்தகைய நாடுகள் எல்லாம் ஒரே போல இருப்பதில்லை. அவற்றிலும் வகைகள் உண்டு. சோசலிசத்தைக் கந்தலாகக் கிழித்துப் போட்டு, நரகத்துக்கு ஒப்பான ஆட்சியாக இருந்த/இருக்கிற வட கொரியா, அல்பேனியா, ருமானியா போன்ற நாடுகள் ஒரு வகை என்றால், ஓரளவு மக்களை மனிதர் போல நடத்தி, ஆனால் பலவகைக் காரணங்களால் முடக்கம் கண்ட ஆட்சிகள் ஒரு வகை – இவற்றில் நிகராகுவா, போலந்து, ஹங்கேரி இவற்றோடு யூகோஸ்லாவியாவையும் சேர்த்துக் கொள்ளலாம். சீனா அனேக வருடம், குறிப்பாக நெடுநாள் பயங்கரவாதியான மாஒ காலத்தில் முந்தைய வகை கொடுங்கோல் நாடுகளுடன் சேர்ந்திருந்தது. டெங் சியாவ் பெங்கின் சாதுரியமான சந்தைப் பொருளாதார சேவை வழி அமலுக்கு வந்த பிறகு பூடகமாக்கப் பட்ட அடக்குமுறைகள் நடைமுறைக்கு வந்தன. சாதாரண மக்களுக்கு ஓரளவு பொருளாதார உரிமைகள் கிட்டின. இந்த பேதங்கள் எல்லாம் பொருண்மையின் மெய்மை பற்றி கதைக்கும் இந்திய மார்க்சியருக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் இவற்றை விவாதிக்க ஆரம்பித்தால், தம் ஆதர்ச அரசியலால் செலுத்தப்படும் அரசுகள் உலகெங்கும் மக்களை ஒடுக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய வாழ்வில் எந்த முன்னேற்றமும் கொண்டுவரச் சாமர்த்தியமற்று இருப்பதற்கு ஓர் அடிப்படைக் காரணமே தத்துவக் கோளாறு, அரசியல் இயக்கக் கோளாறு என்று ஒப்புக் கொள்ள வேண்டி வரும். தம் குறைகளை அவ்வளவு நா நயத்துடன் ஒப்புக் கொள்ள யாருக்கு மனம் வரும் ? ஆனால், உளவியல் ரீதியில் மனிதரைப் புரிந்து கொள்ள முற்றிலும் தவறியதில் முதல் இடம் சங்கர மடத்துக்கும், வஹாபிசத்துக்கும், தீவிரக் கிருஸ்தவத்துக்கும், ரேகன்+தாட்சரிசத்துக்கும் என்றால், அடுத்த இடம் அனேகமாக மாஓயிசங்களுக்கும் இந்திய மார்க்சியருக்குமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இவற்றோடு இந்துத்துவா கூட்டத்தையும் சேர்த்துக் குலுக்க விழைந்தீர்களானால் எனக்கு ஏதும் ஆட்சேபம் இல்லை.

[கு3] மேல் தகவல்களுக்குப் படிக்க வேண்டியவை: ஸ்டேஸி ஸல்லிவன் எழுதிய, ‘பயப்பட வேண்டாம், உங்கள் பிள்ளைகள் தான் அமெரிக்காவில் இருக்கிறார்களே! – ஒரு புரூக்லைன் கூரை போடுபவர் எப்படி அமெரிக்காவை கோசவோ போருக்குள் இழுத்து விட்டார் என்பது பற்றி ‘ – என்ற இப் புத்தகம் அல்பேனியப் புலம் பெயர்ந்த நபர் ஒருவர் எப்படி அமெரிக்காவில் இருந்த சக அல்பேனியரிடமிருந்து நிதி திரட்டி, ஒரு ரகசியப் படையைத் திரட்டி, செர்பியரைத் தாக்கி ஒரு போரை உண்டாக்கினார் என்பது பற்றிது. இதற்கும் பஞ்சாபில் சீக்கியர் நடுவே எழுந்த காலிஸ்தானிய இயக்கத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் மிகவும் அதிகம். இந்திய இடதுசாரியினரும், உலக இடதுசாரியினரும் இரு இடங்களிலும் பெரும்பான்மையினர் என்று அவர்கள் கருதிய செர்பியரையும், இந்தியரையும் எதிர்க்கும் நிலையை எடுத்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

BE NOT AFRAID, FOR YOU HAVE SONS IN AMERICA

How a Brooklyn Roofer Helped Lure the U.S. into the Kosovo War.

By Stacy Sullivan. St. Martin ‘s. 330 pp. $27.95

aacharakeen@yahoo.com

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 5)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)

அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்