ஈரோட்டுப் பாதை சரியா ? – 2

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

ப. ஜீவானந்தம்


சுயமரியாதை இயக்கம்:

பார்ப்பனரல்லாத சமூக சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்ற பேர் தாங்கிற்று. பார்ப்பனீயம் – வருணாஸ்ரம தர்மம், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவைகளையும் அவைகளுக்குக் காரணமான வேதசாத்திர புராணங்களையும், குறிப்பாக மனுஸ்மிருதியையும், இவைகளுக்கு அடிப்படையான இந்து தர்மத்தையும், பெண்ணடிமையையும் இடைவிடாமல் எதிர்த்து நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி, ஈ.வெ.ரா.வும் அவரைப் பின்பற்றியவர்களும் பிரசாரம் செய்து வந்தார்கள்.

பல காலமாக, பழிக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்டுக் கிடந்த மக்கள் உள்ளங்களில் தன்மான உணர்ச்சி கொழுந்துவிட்டு எரியவே அவர்களுடைய அனுதாபமும் ஆதரவும் சுயமரியாதை இயக்கத்திற்கு கிடைத்தன.

சைமன் கமிஷன் வரவேற்பு:

இந்தியாவுக்கு அரசியல் உரிமையைப் பற்றி ஆராய சைமனைத் தலைவராகக் கொண்டு ‘ராயல் கமிஷன் வந்தது ‘ 1928ல். காங்கிரஸ் கமிஷனை பகிஷ்கரிக்க முடிவு செய்தது. இதர கட்சியினரும் பகிஷ்காரப் பாதைக்கே ஓட்டு அளித்தனர். ஈரோட்டுப் பாதை தனது தனிச்சிறப்பைக் காட்டிற்று. ஈ.வெ.ரா. ஒருவரே கமிஷனை வரவேற்கப் பிடிவாதம் காட்டினார்.

காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சிக்கும், பொதுஜனங்களின் இயக்கத்திற்கும் தொடர்பில்லாது இருந்த காலம் அது. சோஷலிஸத்தைக் குறிக்கோளாகக் கொண்ட தொழிலாளி வர்க்கம் சுயேச்சையான அரசியல் சக்தியாக உருவாகிவந்த காலம் அது. ஜவஹர்லால் நேருவும், சுபாஷ் சந்திர போசும் சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்புச் சங்கத்தின் காரியதரிசிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அந்நாட்களில்தான். இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸில் இடதுசாரிகள் ஆதிக்கம் பெற்றிருந்தனர். நாடு முழுவதும் தேசீய வாலிபர் சங்கங்களும், மாணவர் கழகங்களும் தோன்றிக் கிளர்ச்சி செய்தன. சென்னையில் நடந்த காங்கிரஸ் பேரவையில் வலதுசாரித் தலைவர்களின் பலத்த எதிர்ப்புக்களிடையே பூர்ண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில்தான் சைமன் கமிஷன் வந்தது. எனவே, இமயம் முதல் குமரி முனைவரை பகிஷ்கார ஆர்ப்பாட்டம் அமர்க்களப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. காங்கிரசின் பிற்போக்காளர்கள்கூட, காலவெள்ளத்தை எதிர்த்து நிற்க முடியாமல், பகிஷ்காரத்திற்கு இடம் கொடுத்தனர்; தொழிலாளிவர்க்கம் முக்கிய பங்கெடுத்து, வேலைநிறுத்தப் புயலைக் கிளப்பிவிட்டது. கமிஷன் போன ஒவ்வொரு நகரத்திலும் வாலிபர்களும், மாணவர்களும், பொதுமக்களும் பகிஷ்கார ஆர்ப்பாட்டங்களின் சிகரங்களைத் தொட்டனர். லாலா லஜபதிராய், தென்னாட்டில் சீனிவாச அய்யங்கார் போன்ற சிறந்த தேசீயத் தலைவர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்திச் சென்றனர். என்றும் காணாதவாறு தேசீயமான உணர்ச்சி அடிபட்ட புலிபோல் சீறிற்று. மக்கள் எழுச்சியைக் கண்டு ஏகாதிபத்தியத்தின் பரமதாசர்களான ஜஸ்டிஸ் கட்சியார்கூட செய்வதறியாது தடுமாறினர்.

ஈ.வெ.ரா. மாத்திரம் சைமன் கமிஷனை வரவேற்கும்படி ஜஸ்டிஸ் கட்சிக்கு உபதேசம் செய்தார். ‘டாக்டர் நாயர், சர்.பி.தியாகராயர் ஆகிய தலைவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, வாய் இல்லாத பூச்சிக்களாய் கிடக்கின்ற பாமர மக்களுக்கும், தொழிலாளிகளுக்கும், நாம்தான் பிரதிநிதிகள் என்பதை நினைவில் வைத்து கமிஷனை நமது கட்சி வரவேற்க வேண்டு ‘மென்று ஈ.வெ.ரா. காரணம் காட்டினார். ஜஸ்டிஸ் கட்சியும் வரவேற்க முடிவு செய்தது.

காங்கிரஸீம், நாட்டுப் பொதுமக்களும், தொழிலாளர், வாலிபர், மாணவர்களும் சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்தனர். ஈ.வெ.ரா.வின் பேச்சைக் கேட்டு பாமர மக்களுக்கும், தொழிலாளி மக்களுக்கும் தன்னைத்தானே பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சி சைமன் கமிஷனை வரவேற்கத் துணிந்தது.

1928 இறுதியில் சென்னையில் சீர்திருத்த மகாநாடு ஈ.வெ.ரா.வின் தலைமையில் நடந்தது. தான் சீர்திருத்தவாதி அல்லவென்றும், அழிவு வேலைக்காரனென்றும் அதிதீவிரவாதம் பேசினார் ஈ.வெ.ரா. அந்த மகாநாட்டில். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பனகல் அரசர் அந்த மகாநாட்டில் கலந்துகொண்டு ஈ.வெ.ரா.வை இருபதாம் நூற்றாண்டின் புத்தர் என்று வானளாவப் பேசி ஜஸ்டிஸ் கட்சிக்கு ஈ.வெ.ரா. செய்த சேவைக்கு நன்றியறிதல் தெரிவித்தார்.

செங்கற்பட்டு மகாநாடு:

1929ம் வருஷ ஆரம்பத்தில் முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாடு நடந்தது. மகாநாட்டை நடத்தியவர்கள் ஜஸ்டிஸ் பிற்போக்கு கும்பலும், ஜமீந்தார்களுமான எம்.கே.ரெட்டியார், வேதாசலம் முதலியார், ஜெயராம் ரெட்டியார் போன்றவர்கள். ஜஸ்டிஸ் கட்சியோடு கூடிக்குலாவி மந்திரிப் பதவியில் அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டிருந்த சுப்பராயன் கூட்டத்தாரும் மகாநாட்டைச் சிறப்பித்தனர். ஏ.ராமசாமி முதலியார் போன்ற ஏகாதிபத்தியத்தின் நல்ல பிள்ளைகளும் அந்த விழாவை அலங்கரித்தனர். ஆயினும் சமூக, ஜாதி மத விஷயங்களில் முற்போக்குக் கருத்துக்கொண்ட ஆயிரக்கணக்கான வாலிபர்கள் மகாநாட்டில் கலந்துகொண்டனர் என்பது மறக்க முடியாதது. மகாநாட்டின் தலைவர் சவுந்திரபாண்டியன் தனது தலைமையுரையில் ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம் மெதுவாக முன்னேற்றம் அடைந்து வருங்கால், அவ்வியக்கத்திற்கு திடாரென ஒரு நற்காலம் கிட்டியது. மக்களிடை செல்வாக்குப் பெற ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அதுதான் இப்பொழுது தமிழ்நாட்டில் வீரகர்ஜனை புரிந்துவரும் சுயமரியாதை இயக்க ஆரம்பமாகும். மக்களுக்கு நலன்பல விளைவித்து வருபவரான, நமது மாபெரும் தலைவர் உயர்திரு. ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் அவர்களால் சுயமரியாதை வேதம் மக்களிடையே பரவிய புண்ணிய தினத்தையே யான் இங்கே குறிக்கின்றேன் ‘ என்று சுயமரியாதை இயக்கத்திற்கும் ஜஸ்டிஸ் கட்சிக்குமுள்ள தொடர்பை தெளிவாகக் கூறினார்.

இதிலிருந்து ஆயிரக்கணக்கான வாலிபர்கள் கருதியதுபோல், சுயமரியாதை இயக்கம் தனிச்சமூக சீர்திருத்த இயக்கம் அல்ல என்பதும், ஜஸ்டிஸ் கட்சிக்கு மக்களிடையில் செல்வாக்குபெற சந்தர்ப்பம் அளிக்கும் இயக்கம் என்பதும் தெளிவாகும். ஆயினும் ‘மகாநாட்டுத் தீர்மானங்கள் பல ஜஸ்டிஸ் கட்சி வைதீகர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் சமுதாயச் சீர்திருத்தத்தில் மேற்போக்காகவே நடந்து கொண்டனர். ‘ (தமிழர் தலைவர் 102ம் பக்கம்) ஜஸ்டிஸ் கட்சிக்கு சமூகச் சீர்திருத்தத்தைவிட பதவி மோகமே பெரிது என்பதை உணர்ந்தவர்களுக்கு இதில் வியப்பு இராது.

ஈரோடு மகாநாடு:

செங்கற்பட்டு மகாநாட்டுக்கும், ஈரோட்டு மகாநாட்டுக்கும் இடையில் ராமாயண ஆராய்ச்சி, பெரிய புராண ஆராய்ச்சி, பாரத ஆராய்ச்சி மற்றும் பல புராண ஆராய்ச்சிகளும் வெளிவந்தன. இந்துமத எதிர்ப்புப் பிரசாரத்தின் பலனாக வைதீகர்கள், சைவ, வைணவப் பண்டிதர்களின் எதிர்ப்பும், வாலிபர்களின் ஆதரவும் ஒருப்போல் வளர்ந்து வந்தன.

1930ல் அரசியல்மிதவாதப் பழமான மகாகணம் ஜெயகர் தலைமையில் 2வது சுயமரியாதை மாகாண மகாநாடு நடந்தது. மகாநாட்டுத் தலைவர் விரிவுரையில் ஜெயகர் ‘ஈ.வெ.ராமசாமியார் சட்டசபைகளைப் பற்றியோ, அரசாங்கத்தைப் பற்றியோ கவலை கொள்ளாதவர். அவர் ஏழை மக்களுக்குத் தொண்டு செய்வதே தனது பிறவியின் பயன் என்று கருதியிருப்பவர் ‘ என்று ஈ.வெ.ரா.வைப் புகழ்ந்தார். ஈ.வெ.ரா. அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்ற கருத்தை வாலிபர்கள் உள்ளத்திலும் பொதுமக்கள் மனத்திலும் புகுத்துவதற்கான நல்ல ஏற்பாடு இது.

ஈரோட்டு மகாநாட்டுக்கு முன்பே, நாடு முழுவதிலும் உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பமாகிவிட்டது. (1929ல் லாகூரில் காங்கிரஸ் மகாசபை நிறைவேற்றிய பூர்ண சுதந்திரத் தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை இது.) உப்புச் சத்தியாக்கிரகம் காந்திஜியின் திட்டம். இருந்தபோதிலும், சத்தியாக்கிரகப் போராட்டம் நாடு முழுவதிலும் உள்ள தீவிர தேசியவாதிகளான வாலிபர்கள், மாணவர்கள் நடத்திய திரண்ட கிளர்ச்சியின் பலனாக, காங்கிரஸ் தலைமை நிர்ப்பந்திக்கப்பட்டு தொடங்கியதாகும். எனவே, அந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் வாலிபர்கள் ஆயிரக்கணக்கில் தலைகால் புரியாமல் குதித்தனர். நாடு முச்சூடும் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகள் தழுவிநின்றன. ஈ.வெ.ரா. எதிர்த்தார்.

‘குடியரசில் ‘ உப்புப் போரை எதிர்த்து எழுதினார். ‘இந்தியாவின் இன்றைய நிலைமைக்கு பூரண சுயேச்சை வேண்டுமானால் – விடுதலை வேண்டுமானால் – சுயராஜ்யம் என்பது வேண்டுமானால் – வெள்ளைக்காரர் சுயநல ஆட்சி ஒழிய வேண்டுமானால் முதலில் மத ஆதிக்கமும் அதன் குருட்டு நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும், ஜாதி ஒழிய வேண்டும், பார்ப்பன ஆதிக்கம் அடியோடு ஒழிக்க வேண்டும், இவ்வளவும் நடந்தபிறகுதான் வெள்ளைக்காரர் கொடுங்கோன்மை (தானாய் ஒழிந்துவிடும் அல்லது) நம்மால் ஒழிக்கப்பட வேண்டும்; ஒழிக்கப்படவும் முடியும் எனப்து நமது முடிவு. ‘ (குடியரசு – 16-3-30)

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றித்தான் சமூகவாழ்வை சீர்திருத்த முடியும் என்பது சரித்திரம் கண்ட உண்மை. அனுபவ அரசியலும்கூட. ஆயினும் தனது ‘சுயமரியாதைச் சித்தாந்தத்திற்கு ‘ ஆக்கம் தேடும் நோக்கத்தோடு வெள்ளைக்கார ஆட்சி ஒழியுமுன்பே ஜாதியும், மதமும், பார்ப்பன ஆதிக்கனும், முதலாளித்தன்மையும் ஒழிய வேண்டுமென்று குதிரைக்கு முன் வண்டியைக்கட்டி ஓட்ட முடியுமென்பதுபோல் சாதித்தார் ஈ.வெ.ரா.

இன்னும் ஒருபடி மேற்சென்று உப்பு சத்தியாகிரகத்தை எதிர்த்து (குடியரசு, 13-4-30) எழுதுகிறபோது, ‘எப்படி இருந்தாலும் சரி, உப்பு காய்ச்சும் சட்டமறுப்பு வெற்றிபெற்று தெருத்தெருவாக உப்பு மலைமலையாகக் குவிந்து கிடந்தாலும், அங்கே அதோடு வெள்ளைக்கார ராஜாங்கமே ஒழிந்து, இந்தியா பூர்ண சுயேச்சை அடைந்து இங்கிலாந்து தேசமும் நமது கைக்கு வருவதாயிருந்தாலும் சரி, இந்த உப்புக் காய்ச்சும் காரியத்தையோ, இது சம்பந்தமான சட்டமறுப்புக் காரியத்தையோ நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதை தைரியமாகச் சொல்வதோடு, இதனால் இந்தியாவுக்கு வளைந்துபோன குண்டூசி அளவுகூட நன்மை ஏற்படாதென்று கோபுரத்தின்மீது நின்று கூறுவோம் ‘ என்று எழுதி தனது காங்கிரஸ் எதிர்ப்பு உணர்ச்சியின் வேகத்தை காட்டினார்.

உப்புச் சத்தியாக்கிரக காலத்தில் நாடு முழுவதும் பல இடங்களிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டில் சென்னையிலும் வேதாரண்யத்திலும் அடக்குமுறை பேயாட்டம் ஆடியது. ஈரோட்டு மகாநாட்டில் அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற சில இளைஞர்கள் முயன்றனர். இந்தத் தீர்மானம் விஷயாலோசனை கமிட்டிக்கு வந்தபொழுது, கமிட்டிக்குத் தலைமை வகித்த ஆர்.கே.ஷண்முகம், சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கலாமா, கூடாதா என்று முடிவு கட்டியபின்னர்தான், தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள முடியுமென்றார். உடனே ஈ.வெ.ரா. ‘சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக் கூடாது. யார் எவ்வளவு தூற்றினாலும் சரி, போற்றினாலும் சரி, சட்டமறுப்பை ஆதரிக்கக்கூடாது. தனித்த சமூக இயக்கமாகவே நடைபெற வேண்டும் ‘ என்று அழுத்தமாகக் கூறிவிட்டார். தீர்மானத்திற்கு இடம் கிடைக்கவில்லை.

இந்த மகாநாட்டிற்குப்பின் சுயமரியாதை இளைஞர்கள் பலர் இயக்கத்தை விட்டு விலகினர். ஏகாதிபத்ய எதிர்ப்புப் போரால் வசீகரிக்கப்பட்டு காங்கிரஸில் சேர்ந்தனர். சுயமரியாதைக் கொள்கைகளோடு தேசீயமும் அவசியம் என்பதை உணர்ந்து தேசீய சுயமரியாதைக்காரர்களென்று பேர் பூண்டு, ஈ.வெ.ரா.வின் தேசீய எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பைக் கண்டித்தனர்.

1930ல் செப்டம்பரில் சென்னை சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. சட்ட மறுப்பில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ், தேர்தலில் ஈடுபடவில்லை. இது ஜஸ்டிஸ் கட்சிக்கு நல்ல வாய்ப்பாக முடிந்தது. சுயேச்சையாக நின்ற பலர் தோல்வியுற்றனர். ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்றது.

‘ஜஸ்டிஸ் கட்சியின் இவ்வெற்றிக்குக் காரணம் சுயமரியாதை இயக்கமும், ஈ.வெ.ராவின் உழைப்புமே ‘ என்று ஈ.வெ.ரா.வின் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.

பிற்போக்கு அரசியல் கட்சியான ஜஸ்டிஸ் கட்சிக்கு தேர்தல் ஏஜண்டாக ஈ.வெ.ரா.வும், சுயமரியாதை இயக்கமும் ஊழியம் புரிந்தபோது சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக் கூடாதென்று ஈ.வெ.ரா. சொன்னதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்புத் திட்டம் கொண்ட காங்கிரஸையோ, காங்கிரஸ் போராட்டங்களையோ சுயமரியாதை இயக்கமும், ஈ.வெ.ரா.வும் எதிர்த்தபொழுதும் சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக்கூடாதென்று, ஈ.வெ.ரா. சொன்னதில்லை. அரசாங்க அடக்குமுறையைக் கண்டித்து, காங்கிரஸ் போராட்டத்திற்கு அனுதாபம் காட்ட தீவிர இளைஞர்கள் முன்வந்த பொழுதுதான் ‘சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக் கூடாது, தனித்த சமூக இயக்கமாகவே நடைபெற வேண்டும் ‘ என்று ஈ.வெ.ரா. கூறினார் என்பதை நன்றாகச் சிந்திக்க வேண்டும்.

(தொடரும்…)

Series Navigation

ப. ஜீவானந்தம்

ப. ஜீவானந்தம்