வாரபலன் மே 20,2004 : தொண்டு கிழம் வயசாளி எம்பியாகித் தொண்டு செய்ய.. , அட்டப்பாடி அடாவடி, எருதந்துறையில் கவிதைத் துறை,

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

மத்தளராயன்


தமிழ் கூறும் நல்லுலகமும், களி தெலுங்கு, கவின் மலையாள மாநிலங்களும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக நடந்து முடிந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று தீர்மானமாகத் தெரிவித்து விட்ட நேரத்தில் கன்னட சோதரர்கள் சகல அரசியல்வாதிகளுக்கும் காராபாத்தும் செளசெளபாத்தும் மாறி மாறிப் பரிமாறி தொகள்ரே என்று கொடுத்து விழுங்க வைத்திருக்கிறார்கள்.

ஆத்ம கெளரவம் மிக்க தெலுங்குதேச தம்புடுமார் முதலமைச்சர் நாயுடுகாருவுக்கு குண்டூர் மிளகாய் விழுதை உட்காருமிடத்தில் அன்போடு வழித்துத் தடவினதுபோல போல நடக்காவிட்டாலும், எஸ்.எம்.கிருஷ்ணாவைப் போதும் போங்க என்று புறங்கையைக் காட்டிவிட்டார்கள் கன்னடர்கள்.

மதசார்பற்ற ஜனதா தள் என்று பழம்பெரும் பிரதமர் தேவே கெளடா வழக்கமான தூக்கத்தை உதறித்தள்ளிக் கண்ணைத் துடைத்துக்கொண்டு கிளம்பி கர்னாடகத்தைச் சுற்றிவந்து ஏற்படுத்திய மும்முனைப் போட்டியில் அவர் கட்சிக்குக் கிடைத்த இரண்டு இடத்தை விட, கிருஷ்ணாவிடமிருந்து தட்டிப் பறித்து பா.ஜ.கவுக்குச் சமர்ப்பித்தது அதிகம்.

சன் டிவி குடும்பத்தில் பட்ட உதயா டிவியில் செய்தி வாசித்து நிகழ்ச்சி தயாரித்த தேஜஸ்வினி ரமேஷ் காங்கிரஸ் வேட்பாளராகக் கனகபுரத்தில் ஜெயித்து தேவே கெளடரைத் தேவையில்லாக் கவுடராக்கினாலும் அவ்ர் முன் ஜாக்கிரதையாகப் போட்டியிட்ட இன்னொரு தொகுதியான ஹாசன் ‘தில்லி போய் ஜோராத் தூங்குங்க சார் ‘ என்று பிரியமுடன் நாடாளுமன்றத்துகு அனுப்பி வைத்திருக்கிறது.

காங்கிரஸிலிருந்து பா.ஜ.கவுக்குத் தாவிக் குதித்த பங்காரப்பா, இங்கேயிருந்து அங்கே போய் அங்கே இருந்து திரும்ப இங்கே ஓடி வந்த அவர் மகன் மாஜி நடிக அமைச்சர் குமார் பங்காரப்பா என்று இரண்டு பேரையுமே நாடாளுமன்றத்துக்கு அனுப்பிக் குடும்பத்தில் அமைதியைக் காக்க உதவிய கன்னடர்கள் உருப்படியான தென்னிந்திய நடிகர்களில் ஒருவரான அம்பரீஷையும் கதர்ச்சட்டையோடு காங்கிரஸ் சீட்டில் தில்லி சலோ என்று அனுப்பியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்க முயன்ற ஜனதாதள் ஜெயந்தி, அனந்த் நாக், பாஜகவின் ‘முக்கிய மந்திரி சந்துரு ‘ போன்ற திரைப்பட நட்சத்திரங்களையும், சீனியர் பங்காரப்பாவின் இளைய மகனான திரைப்படத் தயாரிப்பாளர் மது பங்காரப்பாவையும் வேறே கெல்சா மாடச் சொல்லித் திருப்பியனுப்பியதும் இவர்கள் தாம்.

இதெல்லாம் சரிதான். உத்தர கன்னடத்தில் பிதார் தொகுதி மக்கள் ராமச்சந்திர வீரப்பாவை என்னத்துக்குக் கஷ்டப்பட்டுத் திரும்பவும் நாடாளுமன்றம் அனுப்பியிருக்கிறார்கள் என்று எத்தனை யோசித்தாலும் புரியவில்லை. ‘சபாஷ், சரியான போட்டி ‘ என்று யாரும் சொல்லாத மும்முனைப் போட்டியில் வாஜ்பேயி கட்சி சார்பில் கெலித்த வீரப்பா பல்லே இல்லாமல் வெற்றிச் சிரிப்புச் சிரிக்கிறார். நேரு, சாஸ்திரி, இந்திரா, மொரார்ஜி, சரண்சிங்க், திரும்ப இந்திரா, ராஜிவ் காந்தி, வி.பி.சிங்க், நரசிம்ம ராவ், வாஜ்பேய் என்று யார் பிரதமராக இருந்தாலும் யாருப்பா பிதார் தொகுதி எம்.பி என்றால் பல சந்தர்ப்பங்களில் பின் வரிசையிலிருந்டு ஆஜர் கொடுத்தவர் வீரப்பர் தான். ‘பாத்ரூம் எங்கே இருக்கு ? ‘ என்று பக்கத்து சீட்டில் இருந்து கேட்ட சக எம்.பிக்குப் பதிலளித்தது போக, நாடாளுமன்றத்தில் இவர் வாயைத் திறந்த நேரங்களைப் பற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

வாஜ்பேய், தேவே கெளடா, தோழர் சோம்நாத் சட்டர்ஜி போன்ற மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் அண்ணனுக்கு அண்ணனான அடலேறு வீரப்பருக்கு வயது சும்மா தொண்ணூற்றுச் சில்லறை. நாலு தலைமுறை அடங்கியதான தொண்ணூறு பேர் கொண்ட குடும்பத்தின் தலைவர் இவர்.

தாத்தா, நீங்க பாஸ் என்று வாக்கெடுப்பு அதிகாரி இவரிடம் வெற்றிச் சான்றிதழை நீட்ட, வாங்கிக் கண்ணுக்கு மேலே கையால் ஷேடு கட்டிக் கொண்டு பார்த்த வீரப்பருக்கு வந்ததே கோபம்.

பின்னே இல்லையா, சர்ட்டிபிகேட்டில் இவர் வயது 94 என்று தப்பாக எப்படிப் போடலாம் ? 97 என்று சரியாகப் போட்டுக் கொடுங்கப்பா என்று தாத்தா எகிறி இருக்கிறார்.

ஹர்கிஷன் சிங்க் சுர்ஜித்தும் மன்மோகன் சிங்கும் தோழமையோடு சேர்ந்து இருந்து சுக்கா ரொட்டியும் சர்ஸோன் கா சாகும் சாப்பிட்டபடி அருண்ஷோரி ஆரம்பித்து வைத்த டிஸின்வெஸ்ட்மெண்ட் மினிஸ்ட்ரி நீடிப்பதா வேண்டாமா என்று நீளமாக விவாதம் செய்தபடியே நாட்கள் நகர, சகாக்களின் பின் துணையோடு சோனியா ஆட்சி ஐந்து வருடம் நீடிக்கப் பலமான வாய்ப்பு உண்டு. ஆகவே இன்னும் மூன்று வருடத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் திடாரென்று ஒருநாள் சத்தமாக இந்தியிலும் தொடர்ந்து மற்ற ஆட்சி மொழிகளிலும் ஹேப்பி பர்த் டே டூ யூ பாட்டு கேட்கலாம். வீரப்பர் செஞ்சுரி அடித்த நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்துக்குத் தேசிய விடுமுறை அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.

****

பக்கத்துப் பக்கத்து லத்தீன் அமெரிக்க நாடுகளாக இருந்தாலும் கியூபாவுக்கும் மெக்சிகோவுக்கும் உறவு அவ்வளவாக சுமுகமாக இல்லை. போதாக்குறைக்கு, காஸ்ட்ரோவை எப்படியாவது பதவியிறக்கி கியூபாவிலும் இராக்கிய மாடல் ஜனநாயகத்தைக் கொண்டு வந்து விடவேண்டும் என்று ஐம்பது வருடத்துக்கு மேலாக வெள்ளை மாளிகை வாசிகள் மெனக்கெட்டு காஸ்ட்ரோவை மற்ற அண்டை அயல் நாடுகளில் சுருட்டுப் பூச்சாண்டியாகச் சித்தரித்து வருவதும் தொடர்கிறது. ஒரு சான்ஸ் கிடைத்தால் அவரையும் அமுக்கிப் பிடித்து டெலிவிஷன் காமிராவுக்கு முன்னால் வாயை அகட்டித் திறந்து பல்லை எண்ணிப் பார்க்கலாம் தான். மனுஷன் சிக்க மாட்டேன் என்கிறாரே.

இந்த நிலையில், கோபி அண்ணன் கண்ணைத் திறந்து கொண்டே தூங்கும் ஐக்கிய நாடுகள் சபையில் கியூபாவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக இந்த ஜனநாயகக் காவலர்கள் முன்கை எடுத்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். கட்டைப் பஞ்சாயத்து எட்டுப்பட்டிப் பஞ்சாயத்தானதில் டம்மியாகிப் போய் பின்வரிசையில் நிற்கிற பெரிசுகள் போல் மெக்சிகோவும் அப்படிங்களா, அப்ப காஸ்ட்ரோவைக் கண்டிக்க வேண்டியதுதான் என்று தலையை ஆட்ட, காஸ்ட்ரோ கடுப்பாகிப் போனார்.

கம்பீரமான அந்தத் தாடிக்காரக் கிழவர் ஹவானா சுருட்டைக் கடித்துப் பற்ற வைத்துக் கொண்டே மெக்சிகோவை ஒரு பிடி பிடித்தார். மெக்சிகோ ரோஷத்தோடு கியூபா நாட்டுத் தூதரை வீட்டுக்குப் போய்யா என்று அனுப்பிய கையோடு கியூபாவிலிருந்து தங்களுடைய தூதரையும் உடனே மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு வண்டியேற உத்தரவு போட்டது.

அப்படிப் போடு கண்ணு, ஒரு கை கொடு. கிளவன் சுருட்டைப் பொருதி ஊத வாயோ தலையோ இல்லாமப் பண்ணிடலாம் என்று அமெரிக்கா உற்சாகமாகக் கிளம்ப, மெக்சிகோ விழித்துக் கொண்டது. அங்கே ஆளும், எதிர்க்கட்சிகள் புஷ்திமதிகளைப் புறம்தள்ளி காலம் காலமாக நிலை நிற்கும் கியூபாவோடான உறவு முக்கியம் என்பதை உணர்ந்து அதைப் பலப்படுத்த முடிவு செய்தன.

மெக்சிகோவுக்கும் கியூபாவுக்கும் நல்லுறவு வளர்க்க யார் உதவியை நாடலாம் என்று யோசித்தபோது நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் காப்ரியல் கார்சியோ மார்க்வெஸ் நினைவு வந்தது அவர்களுக்கு. கொலம்பியாவில் பிறந்து, மெக்சிகோவில் வசிக்கும் மார்க்வெஸ் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பர். ‘நூறாண்டுத் தனிமை ‘ நாவலை ஃப்ருப் பார்த்து அது அச்சாவதில் உறுதுணையாக இருந்தவர்களில் காஸ்ட்ரோவும் ஒருவராம்.

மார்க்வெஸ் மாட்டேன் என்று சொல்ல மாட்டார் என்று நம்பலாம். அவர் ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் இப்படியான நல்ல காரியத்தைச் செய்திருக்கிறதாகத் தகவல்.

கியூபாவும் மெக்சிகோவும் மார்க்வெஸ்ஸும் இருக்கட்டும். இங்கே நம்ம அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து வெளியாகும் மலையாளப் பத்திரிகைகளின் ரவுசு தாங்க முடியவில்லை. போன மாதம் ஒரு செய்தி போட்டிருந்தார்கள். கோயம்புத்தூரில் நாற்பது தெருநாய்களை வளைத்துப் பிடித்து வண்டியிலேற்றி அவற்றை மாநில எல்லையில் கேரளத்தில் இருக்கும் அட்டப்பாடியில் இறக்கி விட்டுப் போனதாக நாலு காலத்தில் பெட்டி கட்டி வந்தது அது.

அது எப்படி நாற்பது நாய், அட்டப்பாடியில் திரியும் அந்த நாயெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து வந்தது என்று கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. போகட்டும். அப்புறம் இன்னொரு செய்தி. தமிழ்நாடு வெள்ளம் திருடுகிறதால் அட்டப்பாடியில் குடிதண்ணீர்ப் பிரச்சனை. இன்னும் ஒரு செய்தி. கோவையிலிருந்து பிச்சைக்காரர்களையும் மன நோயாளிகளையும் வளைத்துப் பிடித்து அட்டப்பாடியில் இறக்கி விட்டுப் போகிறார்களாம்.

போன வாரம் அட்டப்பாடியில் திடாரென்று அடைமழை பெய்து பலத்த சேதமாம். நல்ல வேளையாக இதுவும் தமிழ்நாடு செய்த சதி என்று சொல்லவில்லை. போகிற போக்கில் அட்டப்பாடியில் யாருக்காவது ஜலதோஷம் பிடித்தால் கூட தமிழ்நாட்டிலிருந்து நாலைந்து பேர் வந்து மூக்குச் சிந்திவிட்டுப் போனதே காரணம் என்று காட்டப்படலாம்.

மார்க்வெஸ் மாதிரி இங்கே யாரும் இல்லையா ?

****

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு தேர்தல் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவிக்கு வந்திருப்பார்.

மத்தளராயன் குழல்விளக்குராயனாக மார்ஃப் ஆனதாக நினைக்க வேண்டாம். இங்கே குறிப்பிடப்படும் தேர்தல் எருதந்துறைப் பல்கலைக் கழகத்தில் நடப்பது. (ஆக்ஸ்ஃபோர்டைத் தமிழாக்கிய அருங்காட்சியக நண்பருக்கு நன்றி).

மேற்படி தேர்தல் கவிதைப் பேராசிரியரைத் தேர்வு செய்ய. அப்ளிகேஷன் போடச் சொல்லி, இண்டர்வியூ வைத்து – சரிங்க, அதுக்கு மேலே வேணாம் – இந்த மாதிரி வேலைக்கு ஆளைத் தேர்ந்தெடுப்பது நம்ம ஊர்ப் பழக்கம். ஆனால் ஆக்ஸ்ஃபோர்டில் முன்னூறு வருடமாக வழக்கில் இருப்பதோ வாக்குச் சீட்டு மூலம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுப்பது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் போல் இந்தக் கவிதைப் பேராசிரியர் பதவியும் ஐந்து வருட காலத்துக்கு.

இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமை பட்டதாரிகளுக்கே. முன்னொரு காலத்தில் பட்டப் படிப்பு மாணவர்களுக்கும் ஓட்டுரிமை கொடுத்திருந்தார்களாம். விடலைப் பசங்கள் குத்துச் சண்டை வீரர் முகம்மது அலியில் தொடங்கி கவிதையோடு ஸ்நானப் பிராப்தி இல்லாத சகலரையும் நாமிநேட் செய்ய, இவங்க சங்காத்தமே வேணாம் என்று முடிவு செய்து இதெல்லாம் கிராஜுவேட் சமாசாரம் என ஆக்கி விட்டார்கள். இப்படிப் பட்டதாரிகளாக, இருபது பவுண்ட் பணம் கட்டிப் பதிவு செய்து கொண்டு ஓட்டுரிமை பெற்ற ஒண்ணரை லட்சம் வாக்காளர்களில் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் அதிகம்.

பல்கலைக் கழகத் தேர்தல். அதுவும் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் முன்னணியில் இருக்கும் இங்கிலாந்தில். நாடு முழுவதும் இருக்கப்பட்ட பட்டதாரி வாக்காளர்கள் இருந்த இடத்திலிருந்தே ஓட்டுப் போட இண்டர்நெட்டைப் பயன்படுத்தினால் சுளுவாகக் காரியம் முடிந்துவிடும் தான். ஆனால், பாரம்பரியத்தை மாற்ற முடியுமா என்ன ? முன்னூறு வருடத்துக்கு முன்னால் எப்படி நடந்ததோ அதே போல் தான் இந்த எலக்ஷனும் நடக்க வேண்டும். அதாவது நேரில் வந்தே ஓட்டுப் போட்டாக வேண்டும். சரி வரட்டும். வந்ததும் பட்டனைத் தட்டி ஓட்டுப் போட்டுவிட்டு இறங்க எலக்ட்ரானிக் ஓட்டு யந்திரத்தைப் பயன்படுத்தலாமே ? என்னத்துக்காம் ? விக்டோரியா மகாராணி காலத்திலோ அதுக்கு முன்போ இதுக்கெல்லாம் யந்திரமா இருந்தது ? ஆகவே வா ராஜா வா என்று வாக்காளர்களை ஆக்ஸ்ஃபோர்டுக்கு ஒரு நடை வந்து போக அழைத்திருக்கிறார்கள்.

மற்றவர்கள் எப்படியோ, ஆக்ஸ்போர்ட் பல்கலையில் காண்டான் நடத்துகிறவர்கள் குஷியாக இருக்கிறார்களாம். லட்சக் கணக்கில் பிஸ்ஸாவும் சாசேஜும் சுடச்சுட விற்க இது மாதிரி இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்க ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும்.

சரி, ஓட்டுப் போட நேரில் எப்படி வரவேண்டும் ? பட்டம் வாங்க அணிந்து போகும் கவுனை மாட்டிக்கொண்டு ஹாம்லட் நாடகத்தில் பிசாசு போல் எருதந்துறையில் பிரவேசிக்க வேண்டும். அது மட்டுமா ? யாருக்கு ஓட்டு என்று காகிதத்தில் எழுதிக் கொடுக்க வேண்டும். யாரிடம் ? பல்கலைக் கழகத் துணை வேந்தரிடம். அவரும் ஒரு கையால் வாங்கி வைத்துக் கொண்டு இன்னொரு கையால் தன் தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்துவார்.

முன்னூறு வருடப் புராதனமான பழக்கம்னாலும் வேணாம் என்று தீர்மானமாக மறுத்து விட்டாராம் இன்றைய ஆக்ஸ்ஃபோர்ட் துணைவேந்தர். ஒண்ணரை லட்சம் தடவை தொப்பியைக் கழற்றி ஒவ்வொரு ஓட்டாக வாங்கி முடிப்பதற்குள் அவர் கையும் காலும் இடுப்பும் ஒடிந்து போய்விடாதா என்ன ?

ஆக, நம்ம ஊரில் அந்தக் காலத்தில் நடந்ததுபோல் ஓட்டுச் சீட்டில் முத்திரை குத்திப் பெட்டியில் போட்டு எலக்ஷன் நடக்கிறது.

வெற்றியடைந்த கவிஞர் கவிதைப் பேராசிரியராக பல்கலைக் கழகத்தில் பதவியேற்று வருடம் ஐயாயிரத்து நானூற்று ஐம்பத்தேழு பவுண்ட் சம்பளம் வாங்குவார். ஆண்டுக்கு மூன்று வகுப்பு எடுக்க வேண்டும் அவர். டபிள்யூ.எச். ஆடன் போன்ற புகழ் பெற்ற கவிஞர்கள் எல்லாம் தேர்தலில் நின்று வெற்றி பெற்று இந்தக் கவிதைப் பேராசிரியர் பதவியை அலங்கரித்திருக்கிறார்கள்.

சம்பளத்துக்காக இல்லை. அரசவைக் கவிஞருக்கு அடுத்தபடியாக மதிப்பு வாய்ந்த பதவி என்பதால் இந்த ஆண்டும் ஏகப்பட்ட கவிஞர்கள் போட்டியில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.

ஆமா, இங்கே தான் லோக்சபா எலக்ஷன் முடிந்து, சட்டசபைத் தேர்தல் எப்போ வருமென இருக்கும் நேரமாச்சே. இடைப்பட்ட சமயத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கி இங்கேயும் கவிதைப் பேராசிரியர்களை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கலாமே என்று நம்மாலான யோசனையை முன்வைக்கிறோம்.

மத்தளராயன்

—-

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்