மாண்புமிகு தமிழக முதல்வருக்கு

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

பொறையாறு நந்தன்


எங்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மான்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி அவர்களுக்கு,

தேர்தல் முடிவுகளை கண்டு துவண்டு விழும் சராசரி அரசியல் வாதி அல்ல நீங்கள். துணிவுக்கே தூண்டுகோலாகவும் பணிவுக்கு பாத்திரமாகவும் விளங்குபவர் நீங்கள். தங்களோடு சேர்ந்து தோல்வியை தழுவிய தங்களின் ஒரே கூட்டனியான ‘பா.ஜ.க ‘வின் தலைவர்கள் தற்போது விடும் அறிக்கைகளை படித்து கொதித்திருப்பீர்கள். பா.ஜ.க.வினரின் அறிக்கைகள், தங்களோடு கூட்டணி வைத்ததால்தான் தமிழகத்தில் பா.ஜ.க தோற்றுவிட்டதுபோல் பிதற்றுகின்றன. தமிழக பா.ஜ.க தலைவரும் தங்களின் எதிரியுமான ‘திருநாவுக்கரசர் ‘ விடும் அறிக்கைகள் கொஞ்சம் ‘காராசாரமாக ‘ ‘வீராவேசமாக ‘ இருக்கிறது. பா,ஜ.க. தனியாக நின்றிருந்தால் கூட இரண்டு மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்குமாம். தி.மு.க. கூட்டனி என்ற புயலை எதிர்த்த ஆலமரம் போன்ற நீங்களே தலைகுப்புற வீழ்ந்து கிடக்கும்போது, பா.ஜ.க. இப்படி குசும்பு பேசி திரிவதுதான் கூட்டனி தர்மத்தின் அழகா ?

தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.க வில் தலைவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் தொண்டர்கள் இல்லை என்பது அவர்களுக்கே தெரிந்த விஷயம். பா.ஜ.க யார் ? மசூதி பிரச்சினையை மட்டும் அடிப்படையக வைத்து, மக்களை குழப்பி கூறுபோட்டு, வடமாநிலங்களில் வளர்ந்த கட்சிதானே அது. அதில் இருப்பவர்கள் யார் ? செயல்படமுடியாதவர்களும் மற்றும் அம்னீஷியா பிடித்தவர்களும் தானே!

தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க செல்லாக்காசு. ஏதோ வடஇந்தியாவில் இருக்கும் ஓரளவு செல்வாக்கை மிகைப்படுத்திக்காட்டி, தமிழகத்தின் திராவிட கட்சிகள் (பேரில்தான் திராவிடம்..செயல்பாடுகளில் அல்ல) என்னும் ஆலமரங்களில் ஒட்டிக்கொண்டு புல்லுருவி போல் வளர்ந்தவர்கள்தான் அவர்கள் என்பதை மறந்துவிட்டார்களே! நீங்களும், கருனாநிதியும் பா.ஜ.க.வினரை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தாவிட்டால் தமிழகத்தில் பா.ஜ.க. வை அறிந்திருப்பவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு என்ணிவிடலாம்..

சென்ற தேர்தலில் தி.மு.க வாக்குகளால் நான்கு தொகுதிகளை வென்றுவிட்டு, வாஜ்பாய்-அத்வானி காரனமாகத்தான் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதாக ‘பஜனை ‘ பாடி தி.மு.க கூடாரத்தை விட்டு வெளியேறிய ‘நன்றிகெட்டவர்கள் ‘, இந்த தேர்தலில் ஒருவேளை அதிமுக கூட்டனி வென்றிருந்தாலும் அதே ‘பஜனையை ‘த்தான் பாடியிருப்பார்கள். பா.ஜ.க-வை ‘பண்டாரங்கள் மற்றும் பரதேசிகளின் ‘ கூடாரம் என்று அழகாக சொன்னார் கலைஞர் கருணாநிதி. சோறுக்காக சுத்தி வரும் ‘பண்டாரங்கள் பரதேசிகளை ‘ப் போல் சீட்டுக்காக கூடாரம்விட்டு கூடாரம் மாறும் அரசியல் கொள்கையில்லா பண்டாரங்கள்தானே பா.ஜ.க.வினர்.

தமிழகத்தில் அ.தி.மு.க வோடு கூட்டணி வைக்க தூண்டிய தமிழக மற்றும் மத்திய பா.ஜ.க தலைவர்களை தேர்தல் தோல்விக்கு பிறகு வாஜ்பாய் கடிந்துக்கொண்டாராம். ஏன் கடிந்துக்கொள்ளமாட்டார் ? நேர்மையான அரசியல் செயல்பாடுகள் மூலமாகவா பா.ஜ.க இன்றைக்கு ஒரு அரசியல் கட்சியாக வளர்ந்திருக்கிறது ? அல்லவே..அயோத்தி பிரச்சினையை வைத்து மக்களின் மத உணர்வுகளை தூண்டி, ராமனின் பெயரைவைத்து வளர்ந்த கட்சிதானே அது ? அயோத்தி இல்லையென்றால் இன்றைக்கு பா.ஜ.க வே இருந்திருக்காது.

தன்னிச்சையாக ‘செயல்படமுடியாத ‘ பிரதமர் வாஜ்பாய்க்கு உதவியாகத்தானே ‘அம்னீஷியா ‘ அத்வானியை உதவி பிரதமராக நியமித்தனர். அவர்களுக்குள் பதவிக்காக எவ்வளவு குடிமிப்பிடி சண்டைகள். ‘மிதவாதிகள் ‘ ‘தீவிர வாதிகள் ‘ என்று பா.ஜ.க.வில் கோஷ்டி கலாச்சாரம் வளர்ந்துகிடக்கிறது. ஒருவேளை உங்களின் ஆதரவு பெற்ற பா.ஜ.க ஆட்சிக்கு வந்திருந்தால் அத்வானியை பதவி நீக்கம் செய்துவிட்டு உங்களுக்கு உதவி பிரதமர் பதவியை கொடுத்திருப்பார்களா ? நிச்சயமாக அவ்வாறு செய்திருக்கமாட்டார்கள்.

தமிழக பா.ஜ.கவினருக்கு நீங்கள் மரியாதை கொடுக்கவில்லையாம்! யார் யாரிடம் மரியாதை எதிர்பார்ப்பது என்ற வரைமுறையே இல்லையா ?பா.ஜ.க. வினரின் சொல்லுக்கும் செயலுக்கும் முரன்பாடு எப்பொழுதும் உண்டு என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. தேர்தல் கூட்டனிக்கு முன்பாக, தமிழக பா.ஜ.க வினரான ராதாகிருஷ்ணன், குமாரவேலு மற்றும் ராஜாவும் தங்களின் காலில் விழுந்து சீட்டு மட்டும்தானே கேட்டார்கள். சீட்டோடு சேர்த்து மரியாதையுமா கேட்டார்கள் ? இல்லையே. ஆனால் தற்போது, வாஜ்பாயும் அத்வானியும் கேட்டுகூட தமிழக பா.ஜ,க. வினரில் எவருக்கும் நீங்கள் கொஞ்சம்கூட மதிப்போ மரியாதையோ தரவில்லை என்று அறிக்கைவிடுகிறார்களே!

தேர்தல் உடன்படிக்கையில், மரியாதையும் வேண்டும் என்று கேட்டிருந்தால் போயஸ் தோட்டத்து வாசலில் கூட சேர்த்திருக்கமாட்டார்கள் என்று கூட அறியாதாபண்டாரங்களான தமிழக பா.ஜ.க வினருடனா கூட்டணி வைத்தீர்கள் என்று வேதனையாக இருக்கிறது ?

வாஜ்பாய்க்கு தங்களின் மேடையில் நாற்காலி போட பெருந்தன்மையோடு அனுமதித்தீர்களே, மேடையில் அத்வானியை தங்களின் காலில் விழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல் கருணை காட்டினீர்களே. தமிழக பா.ஜ.க. வுக்கு இந்த மரியாதை போதாதா ?

கூட்டனி உடன்படிக்கைக்கு முன்பு தன்மானம் மற்றும் சுயமரியாதை பற்றி சிந்திக்காத, கவலைப்படாத தமிழக BJP – தங்களின் ஆணையையேற்று தமிழக பா.ஜ.க தலைவர் திருநாவுக்கரசரையே தேர்தல் பணியில் ஈடுபடவிடாத ‘சுயமரியாதை ‘(!) நிறைந்த BJPக்கு இப்பொழுது திடிரென்று சூடுசொரனை வர காரணமானவர்கள் யார் ? அவர்களை கட்சியை விட்டு நீக்கினால்தான் சட்டசபை தேர்தலில் சீட்டு என்று கறாராக சொல்லிவிடுங்கள். இனிமேல் தமிழக BJP க்கு உங்களை விட்டால் வேறு கதியில்லை (கலைஞர் கருணாநிதியோ, ராமதாஸோ, அல்லது வைகோ வோ இந்த ஜென்மத்தில் BJP யோடு கூட்டனி வைக்க மாட்டார்கள். நன்றிகெட்டவர்களுடன் கூட்டணி வைத்து பட்டது போதும் என்று அவர்களுக்கு ஆகிவிட்டது). சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் கூட இல்லாத தமிழக BJP- வடமாநிலங்களிலிருந்து எவ்வளவு ‘RSS ‘ தொண்டர்களை இறக்குமதி செய்து ‘பூத் ‘ ஏஜென்ட்டாக்க முடியும் ? ஆரம்பத்திலேயே தலையில் குட்டி வையுங்கள்.

தமிழக பா.ஜ.க. வுக்கு பல நிர்ப்பந்தங்கள் விதித்ததாகவும்- வேட்பாளர் தேர்வில் கூட நீங்கள் தலையிட்டதாகவும் குற்றச்சாட்டுகிறார்கள். ஆண்டாண்டு காலமாக அ.தி.மு.க கட்சிக்கு உழைத்த தலைவர்களுக்கும் கழக கண்மனிகளுக்கும் கூட ‘நூதனமான ‘ நிர்ப்பந்தங்களும் கட்டுப்பாடுகளும் விதித்த நீங்கள் ‘தமிழகத்தில் ‘ பிழைப்புக்காக- தங்களைவிட்டால் வேறு வழியில்லை என்று கூட்டனி அமைக்க வந்த பா.ஜ.க பண்டாரங்களுக்கு நிர்ப்பந்தம் விதிக்கக்கூடாதாம் அவர்களின் உட்கட்சி விஷயத்தில் தலையிடக்கூடாதாம். திமிரைப்பார்த்தீர்களா ?- இவ்வளவு நாட்களாக வாயை பொத்திக்கொண்டு, ‘போடு தோப்புக்கரணம் ‘ என்ற தங்களின் கட்டளைக்கு பயந்து ‘எண்ணிக்கொள்ளுங்கள் அம்மா ‘ என்று ‘தோப்புக்கரணம் ‘ போட்டுக்கொண்டிருந்த தமிழக பா.ஜ.க.வால் எப்படி ‘எகத்தாளம் ‘ பேச முடிகிறது ? தேர்தல் முடிந்துவிட்டதே என்ற தெனாவெட்டா ?

‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி ‘ என்று நடிகர் ரஜினி சினிமாவில் பேசிய வசனத்தை வேதவாக்காக நிணைத்து, அவரின் ரசிகர்கள் போடும் ‘ஒரு ஓட்டு நூறு ஒட்டுக்கு சமம் ‘ அதனால் உஙகளின் ஆதரவு இல்லாவிட்டால் கூட சுலபமாக தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று கற்பனையில் மிதந்தனர் தமிழக BJP யினர். ரஜினியை ஏதோ ‘அவதாரப்புருஷனை ‘ப்போல் கருதினர். ரஜினி மோகத்தில் ரசிகர்கள் அனைவரும் தங்களை ‘சூப்பர் ஸ்டாராக ‘ கருதிக்கொண்டு அறிக்கை என்ற பெயரில் பா.ம.க. தலைவர் இராமதாசை வம்புக்கிழுத்த பொழுதெல்லாம் இராமதாஸ், கருணாநிதி, வை.கோ அனைவரும் ரஜினியின் செல்வாக்கிற்கு பயந்து வாயை பொத்திக்கொண்டு (தேர்தல் முடியும் வரை மட்டும்) இருந்தபோது, நீங்கள் ஒருவர் மட்டும், ரஜினியே தானாக வந்து அ.தி.மு.க வுக்கு ஆதரவாக வாக்களிக்க சொல்லியும் அதை வேண்டாமென ‘தன்னம்பிக்கையோடு ‘ உதறித்தள்ளிய துனிவு உங்களைத்தவிர வேறு யாருக்கு வரும் ?

ஆதரவு தருகிறேன் என்று சொல்கிறவர்களுக்கும், பிற கட்சிகளில் சீட்டுக்கிடைக்காத ‘கட்சிமாறிகளுக்கும் ‘ உடனடியாக சீட்டுக்கொடுத்தும் நடிக-நடிகையருக்கு காசு கொடுத்து கால்ஷீட் வாங்கி ‘ராமர்-சீதை ‘யைப் போல் வேஷம் போட்டு, படிப்பறிவில்லா அப்பாவி மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டிய பா.ஜ.க நிலையில் நீங்கள் இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிடுங்கள்.

சரி அடுத்து நீங்கள் செய்யவேண்டியது என்ன என்ற விஷ்யத்துக்கு வருவோம்.

வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தங்களின் அனுகுமுறையையும் ஆட்சிமுறையையும் சிறிது மாற்றினால் நீங்கள் தமிழக மக்களின் மனதில் ஓரளவாவது இடம்பிடித்து இருக்கின்ற மானம் மரியாதையை காப்பாற்றிக்கொள்ளலாம், இலையென்றால் பெங்களூர் அல்லது ஹைதராபாத் என்று குடியேறி ‘வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர் ‘ (Non Resident Tamilian) என்ற அந்தஸ்தில் வசிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படலாம் அதனால் மீதமிருக்கின்ற ஆட்சிக்காலத்திலாவது மக்கள் நலனை கருத்தில்கொண்டு- சசிக்கலா சார்ந்த சமூகத்திற்கு மட்டுமல்லாது மற்ற பிற சமூகத்துக்கும் பலனளிக்கும் வகையில் ஏதாவது நல்லது செய்ய முயற்சியுங்கள்.

மக்களுக்காக தியாகம் எதுவும் செய்யாமல், அரசு வரிப்பணத்தை லட்சக்கனக்கில் செலவிட்டு யாகம் செய்தால் மட்டும் தெய்வங்களும்-முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து வாக்களித்து உங்களை ஆட்சி கட்டிலில் அமர்த்திவிடுவார்கள் என்ற மடத்தனத்தை தயவு செய்து கைவிடுங்கள்.

சங்கரரையும், மலையாள மாந்த்ரீகர்களையும் தங்களுக்கு அரசியல் ஆலோசகர்களாகவும், அரசியல் புரோக்கர்களாகவும் வைத்திருப்பதை உடனடியாக நிறுத்துங்கள்.(இவர்களையெல்லாம் விட சோ.ராமசாமி எவ்வளவோ மேல்!). தங்களுக்கு தவறான கணிப்புக்களை வழங்கிய ‘ஆஸ்தான ‘ ஜோதிடர்களில் சிலரையும், வெற்றியை ஈட்டித்தராத ‘வெட்டி யாகங்கள் ‘ செய்த நம்பூதிரிகளில் சிலரையும் ‘POTA ‘ வில் போடுங்கள்.

ஜோசியம், ஜாதகம், ராகுகாலம், எமகண்டம், அதிர்ஷ்ட எண், வாஸ்து சாஸ்திரம் போன்ற மூட நம்பிக்கைகளை கைவிட்டு இனிமேலாவது ஒரு மாற்றத்திற்காகவது பகுத்தறிவின் மீது நம்பிக்கைகொண்டு ஆட்சி செய்ய முயற்சியுங்கள்! நீங்கள் நம்பிக்கை வைத்த நடமாடும் மற்றும் நடமாடா தெய்வங்களும், வீரத்துறவிகளும், பூஜை-புனஷ்காரங்களும், மெகா மற்றும் மகா யாகங்களும் மற்றும் விஷேச அர்ச்சனைகளும் அம்போவென்று தங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டதே!

தங்களின் எதிரி திருநாவுக்கரசரின் தயவில் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் தமிழக பா.ஜ.க வுடனான கூட்டனி உறவை முறித்துக்கொள்ளுங்கள் (அவர்களோடு கூட்டனி வைத்த பாவத்திற்காக ஏதாவது ‘பரிகாரம் ‘ செய்து கொள்ளுங்கள்)

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது மீண்டும் சோனியா காந்தியை இத்தாலிக்காரர். என்று தேய்ந்துபோன ‘ரெகார்டு ‘ போல சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லாதீர்கள். இதுவரை தமிழக மக்களுக்கு நன்மை என்று நீங்கள் ஏதாவது செய்திருந்தால் அதைப்பற்றி சொல்லுங்கள், இல்லையென்றால் இனிமேலாவது செய்வேன் என்று பேச்சுக்காகவாவது உறுதிகூறுங்கள்.

உங்களின் தனிப்பட்ட செல்வாக்கு மூலம் தரனியை வென்றுவிடலாம் என்ற எண்ணத்துக்கு முழுக்கு போட்டுவிடுங்கள். அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணபலத்தின் துனையோடு மட்டும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற என்ணத்தை கைவிட்டுவிடுங்கள்.

சிறுபான்மை மக்களையும் அரவனைத்தால்தான் ஆட்சி நடத்தமுடியும் என்பதால் உடனடியாக நீங்கள் கொண்டுவந்த ‘மதமாற்ற தடைசட்டத்தை ‘ விலக்கி அதையே சிறுபான்மை மக்களுக்கு செய்த மிகப்பெரிய சலுகையாக கூறுங்கள்.

சிலவருடங்களுக்கு முன்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்திய முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாட்டில், தி.க தலைவர் வீரமனி முன்னிலையில் தமிழக முஸ்லிம்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதியான ‘பா.ஜ.க என்ற விஷ விருட்சத்தை பூண்டோடு பிடுங்கி தமிழக மண்ணிலிருந்து எறிவேன் ‘ என்று கூறியதை நினைவுறுத்தி, 2004 தேர்தலில் பா.ஜ.கவோடு கூட்டு சேர்ந்து பா.ஜ.க. வுக்கு சமாதி கட்டிவிட்டதாக திசைதிருப்பி பேசி முஸ்லிம்களின் வாக்குகளையும் கவர முயலுங்கள்.

இறுதியாக ஒரு வேண்டுகோள் மேடைகளில் எதிர்கட்சியை பற்றி தாக்கும்போது எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள் ஆனால் உணர்ச்சிவசப்பட்டு ‘பதிபக்தி ‘ ‘பத்னிபக்தி ‘ என்று எதையாவது பேசி கலைஞர் கருனாநிதியிடம் வாயைக்கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.

அன்புடன்

பொறையாறு நந்தன்

—-

ananthakumaran@hotmail.com

Series Navigation

பொறையாறு நந்தன்

பொறையாறு நந்தன்