மலேசியாவின் இனப் பிரசினை

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

குவா கியா சூங்


பெடாலிங் ஜெயா செலாடன் என்ற இடத்தில் சேரியில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் இனவாதப் பிரசினைகள் எப்படி மலேசியாவில் உள்ளன என்பதை எதிர்கொள்ள நம்மை நிர்ப்பந்திக்கிறது.

ஐ நா இனவெறி, இன ஒதுக்கல் , இனவெறுப்பு மற்றும் சகிப்பின்மை பற்றிய மாநாடு தென் ஆப்பிரிக்கா, டர்பனில் நடத்தியுள்ளது. இந்த நேரம் இது பேசப் படவேண்டும்.

இனஒதுக்கலும், இனப் பாகுபாடும் மலேசிய அரசியல், பொருளாதார , சமூக, கலாசார யதார்த்தங்களில் , காலனியாதிக்க காலத்திலிருந்தே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. இன்று இனம் என்பது மிக ஆழமாகப் பதிந்திருக்கிறறது. அரசு திட்டங்களில் பயனடைவதற்கு , வியாபார காண்ட்ராக்ட்கள் பெறுவதற்கு, கல்விக்கு, சமூக நலத் திட்டங்களுக்கு . கலாசாரக் கொள்கைகளுக்கு, வீடுகள் ஒதுக்கீட்டிற்கு என்று எல்லாவற்றிற்குமே இனம் ஒரு காரணியாய் முன்னிற்கிறது.

மலாய் மக்களை மையப் படுத்திய ‘பூமிபுத்திரர்கள் ‘ கொள்கை தான் மலேசியாவின் வாழ்பவர்களைப் பெரிது பாதித்துள்ளது. தினசரி வெகு ஜன ஊடகங்களில் வெட்கமே இல்லாமல் எல்லா அரசியல் தலைவர்களும் இதனையே வலியுறுத்துகிறார்கள். இனம் சார்ந்த பிரிவு மலேசியாவின் எல்லா அமைப்புகளிலும் ஊடுருவி நிற்கிறது. மலேயாப் பல்கலைக் கழகத்தின் ஆய்வு ஒன்றின் படி 99 சதவீத மலாய் மாணவர்கள் மற்ற இனங்களுடன் கலந்து பழகுவதில்லை. சீன மாணவர்களில் 99 சதவீதமும், இந்திய மாணவர்களிடையே 97 சதவீதம் பேர்களும் வேறு இனங்களுடன் கலந்து பழகுவதில்லை. அரசாங்கம் இந்தப் பிரிவினைக்கு வேறு காரணங்களை வேர்கள் என்று கூறினாலும் – உதாரணமாக தாய்மொழிப் பள்ளிகள் இருப்பது ஒரு காரணமாய்ச் சுட்டப் படுகிறது – இனவாதம் அன்றாட வாழ்க்கையில் ஊடுருவி நிற்கும் வகையில் செயல்படும் அரசுச் செய்கைகள் தாம் இதற்குக் காரணம்.

பிரிக்க முடியாத பகுதி

இனவாதம் மெலேசியாவின் சமூக அரசியல் அமைப்பில் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளது. ஆளும் கூட்டணி இன்றும் இன அடையாளம் கொண்ட கட்சிகளைக் கொண்டதே. ஐக்கிய மலாய் தேசீயக் கட்சி ( United Malays National Organaisation – UMNO) , மலேசிய சீனர்ச் சங்கம் , மலேசிய இந்திய காங்கிரஸ். இந்தக் கட்சிகள் தம்முடைய இனங்களிடையே தான் தமக்கு ஆதரவைக் கோரி நிற்கிறார்கள். ‘இன நலன் ‘ எனபது இவர்களின் அன்றாட மந்திரம். அவர்கள் கட்சி மாநாடுகளிலும் இந்த இனக் குரல் தான் கேட்கிறது.

சில எதிர்க் கட்சிகளும் இந்த இனவாதப் பாதையிலேயே போகின்றன. இதனால் முடிவில்லாமல் இனவாதப் பிரிவினைச் சூழல் தொடர்கிறது. UMNO கட்சி மலாய்களின் ஒற்றுமை, மலாய்களின் மேலாண்மை தான் தேசிய ஒற்றுமைக்கு வழி என்று பிரசாரம் செய்கிறது. ஆளும் மலாய் மேல் தட்டு மக்கள் இந்தக் கருத்து கூட்டாட்சி சட்ட அமைப்பின் கீழ் சரியானதே என்று சொல்கிறார்கள். மலாய் மேலாண்மை என்பது, மலாய் மக்களுக்குச் சலுகைகள் என்பதாய் அர்த்தம் கொள்கிறது.

இனவாதம் தவிர்த்த தீர்வுகள் முன்வைக்கப் படும்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் மலாய் மக்களுக்கான சிறப்புச் சலுகைகள் பாதிக்கப் படும் என்ற அச்சுறுத்தலினால் மீண்டும் இனவாதமே வலுப்பட நேர்கிறது. மலாய் அற்ற மக்கள் மீது இனவாத எதிர்ப்புகளை செயல்படுத்தும் அரசு வழிமுறைகளுக்குப் பல உதாரணங்கள் உண்டு.

வெள்ளை அறிக்கை

அரசு தயாரித்த வெள்ளை அறிக்கையிலேயே எப்படி 1987-ல் மலாய்க் கட்சியின் ஜலன் ராஜா முதா அரங்கில் நடந்த இளைஞர் பேரணியில் இனவாதக் குரல்கள் ஒலித்தன என்று சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. ‘சீன ரத்தம் செருகட்டும் ‘ என்று குரல் கொடுத்தவர்கள் இன்று அமைச்சர்களாய் இருக்கிறார்கள்.

ஆளும் கட்சி இது பற்றி சொல்லும் போது சீனப் பள்ளிகளில் தகுதியற்ற அலுவலர்களை நியமித்ததற்கு சீனர்கள் தெரிவித்த எதிர்ப்பைக் காரணமாய்ச் சுட்டிக் காட்டியது. மலாய் கட்சியின் இளைஞர் அணி சீனர் கூட்டத்தில் குழப்பம் விளைவித்ததற்குக் காரணமாய் , சீனர்கள் பேச்சு சரியில்லை என்று குறிப்பிட்டார்கள். மலாய்க் கட்டியின் உட்கட்சிப் பிரசினைகளைச் சமாளிக்க இப்படி வெளி யாட்கள் மீது இவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.

பிப்ரவரி 4, 2001- அன்று மலாய் செயல் வீரர்கள் அமைப்பு கத்தியொன்றுன் ரத்தச் சிவப்பு நிறத்தில் பதிந்த கொடியை ஏற்றி, மலாய் சலுகைகளுக்காக வாதாடினார்கள். இதில்லாமல், ஆதிவாசி மக்கள் தம் இருப்பிடந்திலிருந்து பெயர்த்தெடுக்கப் பட்டு, அணைக்கட்டும், பெரும் தோட்டங்களும் ஏற்படுத்த வேண்டி வேறு இடங்களில் சகட்டு மேனிக்கு குடியேற்றுவதிலும் இனவாதக் கொள்கைகள் வெளிப்படுகின்றன. ஆதிவாசிகளின் நில உரிமையை வளர்ச்சித் திட்டங்கள் மதிக்காமல் செயல் படுகின்றன. பின்பட்ட அவர்களை ‘நவீனப் படுத்துகிறோம் ‘ என்று சொல்லி அவர்களை பெயர்த்தெடுக்கிறார்கள். இவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் இஷ்டத்திற்கு இது செய்யப்படுவதால் இது இனப்படுகொலையில் முடிகிறது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இனவாதத்திற்கு பலியாகும் இன்னொரு குழுவினர். மலேசியாவில் 20 லட்சம் பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். வீடு வேலைக்காக இவர்களில் 10,000 பேர் பயன் படுகிறார்கள். இவர்கள பற்றி ஏளனமான எண்ணம் இருப்பதால் இவர்கள் மீது அடக்கு முறை அதிகம். பெண் பணியாளர்கள் சொல்லாலும், செயலாலும், பாலியல் ரீதியாகவும் தாக்கப் படுவதும் உண்டு.

முன்னுரிமை

மலாய்க் கட்சி , பூமிபுத்ர கொள்கை பற்றி பெருமிதம் கொள்கிறது. பூமி புத்திரர்கள் என்று சொல்லப் படுவது மலாய் மக்களைத் தான். ஆனால் உண்மையானா பூமி புத்திரர்களான ஆதி வாசிகள் பூமி புத்திரர்களாயக் கருதப் படுவதில்லை. 1971-ல் தொடங்கப் பட்ட பொருளாதாரக் கொள்கைக்கு இந்த தவறான பூமிபுத்ர கொள்கையே அடிப்படையாகும்.

இந்த முன்னுரிமைக் கொள்கையால் மலாய் மக்களைக் காட்டிலும், ஆளும் மலாய் மேட்டிமையினர் இந்தக் கொள்கையின் முழுப் பலனையும் அடையுமாறு இந்தக் கொள்கை வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மூலதன வாதம் , மற்றும் தனியார் மயம் முக்கிய கொள்கையாய் உள்ள இந்த பொருளாதாரக் கொள்கையால் , மற்ற இனத்தவரில் உள்ள மேல்தட்டுக் காரர்களும் பயன் பெறுகின்றனர். பல்வேறு இனங்களானாலும், ஒற்றுமை கொண்டுள்ள இந்த மேல் வர்க்கம், இனவாதக் கொள்கை அரசியலில் பெரும் பயனை அடைந்துள்ளது.

மலேசியர்கள் கூட்டமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள , இனவாதம் தவிர்த்த சமத்துவத்தை வேண்டிப் போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது. மனித உரிமைகளுக்காகப் போராட வேண்டிய தருணம் வந்து விட்டது.

சட்ட அமைப்பில் பிரிவு 8(1) எல்லா மலேசியர்களும் சமம் என்று சொல்கிறது பிரிவு 12(1) மதம், இனம், வம்சாவளி, பிறப்பிடம் இவற்றை அடிப்ப்டையாய்க் கொண்டு உரிமை மறுப்பு தவறு என்று சொல்கிறது.

பிரிவு 153, மலாய்களுக்கு தனி சலுகைகள் வழங்க ஏற்படுத்திய போது இந்தியாவில் ஹரிஜன்களுக்காக ஏற்படுத்திய முன்னுரிமையை உதாரணம் காட்டினார்கள். ஆனால் மலேசியச் சூழல் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். மலேசியாவில் சலுகைகள் ஏற்கனவே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள மலாய் மக்களுக்கு ஆதரவாய் உள்ளன.

மலாய் மேலாண்மை

1957-ல் விடுதலை பெற்ற போது மலாய் மக்களின் பாதுகாப்பு நான்கு விதங்களில் செய்யப் பட்டது : நிலம், பொதுப்பணியில் வேலைகள், படிப்புக்கு உதவித் தொகை, கல்விக்கான வேறு உதவிகள்.இதைத் தாண்டிய மலாய் மேலாண்மை என்பது முற்றிலும் இனவாதக் கோட்பாடே.

இப்படி ஷரத்துகள் சட்டை அமைப்பில் வேண்டுமா என்ற காள்வியை ரீட் கமிஷன் எதிர்கொண்ட போது கீழ்க்கண்ட அபிப்பிராயம் ரீட் கமிஷன் தெரிவித்தது : ‘ இந்தச் சலுகைகள் சிறிது காலத்திற்குப் பிறகு நீக்கப் படவேண்டும், என்று தான் நாங்கள் சிபாரிசு செய்கிறோம். ‘

துங்கு 1971-ல் பதவியிறக்கம் கண்டபோது, ஆளும் மலாய் வர்க்கம் , மலாய் மக்களுக்குத் தேவையான வசதிகள் கிடைக்கவில்லை என்று அபிப்பிராயப் பட்டது. 1971-ல் அவசர நிலைப் பிரகடனத்தை சாக்கிட்டு, பிரிவு 153-ல் உயர்கல்வி நிறுவனங்களில் மலாய் மக்களுக்கு கோட்டா கிடைக்க வசதி செய்யப் பட்டது. உப பிரிவு 8(அ) வின் கீழ் பல்கலைக் கழகம், கல்லூரிகளில் கோட்டா முரை அமல படுத்தப் பட்டது.

கோட்டா அமைப்பு

ஆனால் இன்று இருக்கும் கோட்டா அமைப்பு , மற்றவர்களுக்குத் தெரியாதபடி முன்னுரிமை வழங்க வழி செய்கிறது. யாருக்கும் விளக்கம் தரத் தேவையில்லாத ஒரு ரகசிய கோட்டா அமைப்பாய் உள்ளது.

பிரிவு 8(அ) வின் கீழ் மக்கள் தொகைக்குத் தக்க கோட்ட ஏற்பட வேண்டுமே தவிர முழுக்க முழுக்க மலாய்களை மட்டுமே கொண்டிருக்க வழியில்லை. எல்லா இனத்தவருக்கும் தக்க முறையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். மற்றவர்களுக்கு உரிமை மறுக்க முடியாது.

இனரீதியான கோட்டா அமைப்பு செயல்படுத்தப் பட்டாலும் இது நாடாளுமன்ற ஒப்புதலும் பெறவில்லை, கெஜட்டிலும் பதிவு பெற வில்லை. கல்வி அமைச்சகம் இதை சட்டமாய் நிறைவேற்றி பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் இது நடக்கவில்லை.

இதனால், கோட்டா அமைப்பு எல்லா பல்கலைக் கழகங்களையும் கணக்கில் கொண்டு செயல்படுகிறதா அல்லது, குறிப்பிட்ட இடத்தில் உள்ள நிறுவனங்களில் உள்ள காலி இடங்களை கணக்கில் கொண்டு செயல் படுகிறதா என்றும் அறிய வழி இல்லை. தனிப்பட்ட அமைப்புகளில் கோட்டா அமைப்பைச் செயல்படுத்துவது சட்டப்படி தவறாகும்.

பிரிவு 153(8அ) மாணவனுக்கு அனுமதி மறுக்க , கோட்டா அமைப்பு வழி வகை செய்யவில்லை. சில துறைகள் முழுக்க முழுக்க மலாய் மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப் பட்டிருப்பது சட்டபடி தவறாகும். மற்ற இனங்களைத் தவிர்த்து மலாய் மாணவர்களை மட்டும் அனுமதிக்க சட்டம் வழி செய்யவில்லை.

சட்டரீதியாய் இது சரியா என்று யாருமே இதுவரை வழக்குத் தொடரவில்லை.

கடந்த கால நோக்கங்கள்

மெர்டெகா சட்ட அமைப்பில் ‘மலாய் சிறப்புச் சலுகை ‘களுக்கு என்ன காரணம் என்று நாம் அறிவோம். ஆனால் அதன் அடிப்படையில் 1971-ல் இயற்றப்பட்ட சட்டம் தவறு. சட்ட அமைப்பின் அடிப்படையைத் தகர்க்கும் விவகாரம்.

உலக சட்டம் முன்னுரிமைச் செயல்பாடுகளில் சில வரம்புகளை இட்டிருக்கிறது. இனவாதமாய் இவை ஆகக்கூடாது என்பதை இந்தச் சட்டங்கள் வலியுறுத்துகின்றன. மனித உரிமைகளை மறுக்கலாகாது. சரியான காரணம் இல்லாமல் இவை செயல்படுத்தலாகாது.காரணம் வெளிப்படையாய் நிரூபிக்கத் தக்கதாய் இருக்க வேண்டும்.

இன்னொரு ஷரத்து அவை குறுகிய காலத்திற்காகத் தான் இருக்க வேண்டும். இந்த தவறான கொள்கையால் , சமமான அளவில் செல்வங்களின் பகிர்வு என்பது நடக்கவில்லை. ஆதிவாசி மக்களும் சரி மற்ற இனத்தினரும் சரி ஏழ்மை அடைந்துள்ளனர். இந்தக் கொள்கை ஏற்படுத்திய இன வேறுபாடு, பல இனங்கள் வாழும் சமூகத்தில் இயல்பாய் நிகழும் ஒன்று அல்ல என்று அழுத்திச் சொல்ல வேண்டும்.

காலனியாதிக்கத்தின் பிரித்தாளும் கொள்கையில் தான் இந்த இனவாதத்தின் வேர்கள் உள்ளன. 1969-ல் அவசர நிலைச்சட்டத்தின் கீழ் இந்த இனவாதம் மிகப் பெரும் அளவில் எல்லா நிலைகளிலும் ஊடுருவக் காரணமாய் இருந்தது ‘புதிய பொருளாதாரக் கொள்கை ‘.

Elite cohesion

மேல்தட்டு மக்களின் இணைந்த சதி

எந்த இனமாயினும் எல்லாத் தட்டு மக்களையும் மேம்படுத்துவது தான் நோக்கம் என்ற்து சொல்லப் பட்டாலும், உண்மை இதற்குப் புறம்பானது. புதிய பொருளாதாரக் கொள்கை அமல் படுத்தி 10 வருடங்களுக்குப் பின்பு இதன் பாதிப்பு நேருக்கு மாறாய் இருந்தது. 1980 சென்சஸின் படி அரசு ஊழியர்களில் 80 சதவீதம் பேர் மலாய்கள். அரசு நிதி உதவி பெறும் கல்விச்சாலைகளில் 75 சதவீதம் பேர் மலாய்கள். ஃபெல்டா குடியேறப் பகுதியில் 96 சதவீதம் பேர் மலாய்கள்.

1990-ல் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பு பணக்கார மலாய் அல்லாத மேல்தட்டினர் இந்தக் கொள்கையினால் பெரும்பயன் பெற்றதையும் காட்டியது. அதனால் இந்தப் பிரிவினரும் இந்த இனவாதக் கொள்கையை எதிர்க்கவில்லை. செல்வம் வினியோகம் நடைபெறாமல், செல்வர்கள் மேலும் செல்வர்களாவது தான் நிகழ்ந்தது. 80-களின் மத்தியில் ஒரு குறிப்பின் படி : 40 பங்குதாரர்கள் தேசியக் கம்பெனிகளின் 63 சதவீதப் பங்குகளை வைத்திருந்தார்கள். அமானா சஹம் நேஷனல் வைப்புகளில் உச்சத்தில் இருந்த 4.4 சதவீதம் பேரின் சேமிப்பு 70 சதவீதமாய் இருந்தது. இந்த வங்கி மலாய்கள் தவிர்த்த மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதில் பாரபட்சம் காட்டுவதும் தெரிய வருகிறது.

Problem ignored

கண்டுகொள்ளப் படாத பிரசினை

மலாய் அல்லாதாரின் தாய்மொழிப் பள்ளிகளுக்கு உதவி அளிப்பதிலும் அரசு பாரபட்சம் காட்டுகிறது. தேச விடுதலையின் போது சீனப்பள்ளிகள் 1342 இருந்தன. இன்று 1284 தான் உள்ளன. தமிழ்ப் பள்ளிகள் 888 இருந்தன. இன்று 535 தான் உள்ளன. இந்த இனத்தவரின் ஜனத்தொகை 44 வருடங்களில் இரண்டுமடங்காகியும் இந்த நிலை. பட்டப் படிப்பில் உதவித் தொகையை மலாய்கள் 90 சதவீதம் பேர் பெற்றனர். உள்ளிருந்தே படிக்கும் பள்ளிகளில் 95 சதவீதம் பேர் மலாய்கள்.

செயல்பட வழிகள்

அமைதி மற்றும் சுதந்திரம் நாடும் மலேசிய மக்கள் அனைவரும் இணைந்த்து செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

1) இனவாத அடிப்படையிலான கட்சிகள் தடை செய்யப் படவேண்டும்.

2) உலக மனித உரிமை அமைப்புகளின் சட்டதிட்டங்கள் இங்கு அமல் செய்யப் படவேண்டும்

3) இனவாதம் எதிர்த்துப் போரிட ஒரு கமிஷன் அமைக்கப் படவேண்டும்.

4) ஒரு ஆள் ஒரு வாக்கு என்ற முறையில் வாக்குரிமை அளிக்கப் படவேண்டும்.

5) உள்ளாட்சியை ஏற்படுத்த வேண்டும். வீடு, பள்ளிகள் பற்றிய போதாமை இனவாதம் தவிர்த்த முறையில் தீர்க்கப்பட இதுவே வழி.

6) ரணுவம் மற்றும் சிவில் வேலைகளில் இனப்பாகுபாடு இருக்கலாகாது.

7) தகவல் ஒலிபரப்புக்கென தனிப்பட்ட அமைப்பு ஏற்படுத்தி எல்லா இன மக்களையும் பற்றிய உணர்வு ஏற்பட வழி செய்ய வேண்டும்.

8) அரசு காண்ட்ராக்ட் பற்றி ரகசியம் ஏதும் இல்லாமல் திறந்த முறையில் செயல்பட வேண்டும்.

9) முன்னுரிமையால் பாதிக்கப் பட்ட மற்ற இனத்தவரின் , தோல்வியுற்ற வியாபார தொழில் முயற்சிகளுக்கு உதவி செய்து முன்னேற்ற வேண்டும்.

10) வருமானத்தில் அதீத வேறுபாட்டைக் குறைப்பதற்கு இனப் பாகுபாடில்லாமல் முயல வேண்டும்.

11) சிறு தொழில் மற்றும், இடைநிலை தொழிற்சாலைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

12) பன்றி வளர்க்கும் தொழிலில் ஈடுபடும் மக்கள் உட்பட அனைவருக்கும் பிரசினை ஏற்படும்போது அரசு உதவ வேண்டும்.

13) எல்லா இனத்தவருக்கும் நிலம் உரிய முறையில் வினியோகிக்கப் படவேண்டும்.

14) இனப் பாகுபாட்டின் இடத்தில் தேவை, மற்றும் ஏழ்மையை முன்னிறுத்திய சலுகை முறைகள் தேவை. பெரும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு நிறைய உதவியும் செய்ய வேண்டும்.

மலேசிய வளர்ச்சிக்கு இன அடிப்படையற்ற தீர்வுகள்

15) 450 புதிய கிராமங்கள் 50 வருடங்களுக்கும் மேலாக சிறு தொழில் மற்றும் இடைநிலைத் தொழில்கள் கொண்டுள்ளன. இவை நவீனப் படுத்தவேண்டும்.

16) தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்முறைகளில் முன்னேற்றம் காணவேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். குறைந்தபட்ச வருமானம் நிர்ணயிக்கப் பட்டு அமல் செய்ய வேண்டும்.

17) வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கான சட்ட திட்டங்கள் அமல் செய்ய வேண்டும்.

18) வேலைவாய்ப்பில் சம உரிமையைப் பாதுகாக்கும் சட்டம் இயற்றி செயல்படுத்த வேண்டும்.

19) ஆதிவாசிகளின் நிலங்களும் உரிமைகளும் பாதுகாக்கப் படவேண்டும்.

20) நகர்ப்புறச் சேரிகளில் வசிக்கும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும்.

21) பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் நலன் பாதுகாக்கப் படவேண்டும்.

22) இளைஞர்களுக்கு இனவாத அமைப்புகளாய் அல்லாமல் பொதுப் பொழுதுபோக்கிற்கான ஆரோக்கியமான மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.

23) இனப்பகுப்பு இல்லாமல் எல்லோருக்கும் வீடுகள் அமைக்கப் படவேண்டும்.

24) ஏழ்மை அகற்றும் வழிமுறைகள் எல்லோருக்குமாகச் செயல்படவேண்டும்

மலேசியாக் கல்வியில் இனவாதம் தவிர்ப்பது பற்றி :

25) இன அடிப்படையில் அல்லாமல் எல்லா இனத்திலும் உள்ள ஏழைகள் பயனடையும் விதத்தில் உதவிகள் அளிக்கப் படவேண்டும்.

26) கல்விக்கான பண உதவிகள் யாருக்கு அதிகம் தேவையோ அவர்களைச் சென்றடைய வழிவகைகள் செய்ய வேண்டும்.

27) கல்விச் சான்றிதழ்களை அங்கீகாரம் செய்ய தேசிய அளவில் அமைப்பு ஒன்று வேண்டும். இன அடிப்ப்டையில் சான்றிதழ்கள் அங்கீகாரம் தவிர்க்கப் படவேண்டும்.

28) சிறுபான்மையினர் தம்முடைய மொழியில் பயில்வதன் காரணமாக அவர்களின் கல்வி நிலையங்களுக்குப் பண உதவி தருவது நிறுத்தப்படலாகாது.

29) சீன தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக் குறை போக்கப்படவேண்டும்.

30) 1996-ல் இயற்றப்பட்ட கல்விச்ச்ட்டம திருத்தப்பட்டு, தாய்மொழிக்கல்விக்கு அங்கீகாரம் வழங்கப்படவேண்டும்.

31) ஐந்து மாணவர்கள் இருந்தாலும் கூட தாய்மொழியில் கல்வி பயிலும் உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும்.

32) மற்ற இனத்தவர் மீது மதிப்பும், மரியாதையும், அவர்கள் பற்றிய அறிவும் ஏற்படும் வண்ணம் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

33) வழிபாட்டுத் தலங்களைப் பற்றிய கட்டுப்பாடுகளை நீக்கி இப்போது உள்ள வழிபாட்டுத் தலங்களை நன்முறையில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

35) எல்லா அரசியல், கலாசார, ஊடக அமைப்புகளிலும் எல்லா இனக்குழுக்களும் இடம் பெற வேண்டும்.

***

( டாக்டர் குவா கியா சூங் மனித உரிமைப் போராளி. இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்)

Series Navigation

குவா கியா சூங்

குவா கியா சூங்