மன அஜீரணத்துக்கு மருந்து.

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

கோமதி நடராஜன்


1.நம்மைப் பற்றி அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நினைப்பதை விடுத்து,நம்மைப் பற்றி ஆண்டவன் என்ன நினைப்பான் என்று எண்ணத் துவங்குவோம்.நம் வாழ்க்கைப் பயணத்தின் பாதை, தானே செப்பனிடப் பட்டு விடும்

2.நம் குழந்தைகள்,நம் சொத்துக்கு மட்டும் வாரிசுகள் இல்லை,நம் பாவ புண்ணியங்களின் பலன்களுக்கும் அவர்கள்தான் உரிமையாளர்கள்.சொத்துக்கள் திசைமாறிப் போகலாம் ,பாவத்தின் தண்டனையும் புண்ணியத்தின் நற்பலன்களும் எங்கும் போகாமல் நம் குழந்தைகளைத்தான் சென்றடையும்.நம் ஒவ்வொரு அடியையும் கவனமாகப் பார்த்து எடுத்து வைப்போம்.

3.நாம் ஒருவரை ஆயிரம் ரூபாய்க்கு ஏமாற்றினால்,நம் குழந்தை,லட்ச ரூபாயை யாரிடமாவது இழந்து நிற்கும்.நீதி போட்ட சட்டத்தை,காசு கொடுத்து மாற்றிவிடலாம்,ஆனால்,இறைவன் போட்ட கணக்கை,அந்த இறைவனாலும் மாற்றமுடியாது.

4.நமக்காக செலவு செய்த பணம்,கிணற்றில் விழுந்த கல்,திரும்ப வராது.அடுத்தவருக்கு உதவ அளித்த பணம்,வானை நோக்கி வீசப்பட்டது ,அது மறுபடியும் நம் கையில் வந்து விழும்.அடுத்தவருக்காகத் தர, நாம் தயாராக இருந்தால் இறைவன், நமக்குத் தர, எப்பொழுதும் தயாராக இருப்பான்.

5.நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் நாம் அறிந்ததே.அகக்கண் மட்டுமே அறிந்த மூன்றாவது பக்கம் ஒன்று உண்டு .அந்த பக்கத்தில், ‘இந்த நாணயம், நாணயமாகச் சம்பாதிக்கப் பட்டது ‘ என்று மனசாட்சி குத்திய முத்திரை, மின்னும் .முக்கியமான மூன்றாவது பக்கமிது.இதைப் பொறுத்து இருக்கிறது,அந்த நாணயம், நம்மிடம் தங்குவதும், தவறிப் போவதும்.

6.நியாயமாகச் சம்பாதித்த ஒரு கோடி,வாழ்நாள் முழுக்க நம் அடிமையாக இருந்து சேவகம் செய்யும்,அநியாயமாக ஈட்டிய ஒரு ரூபாய் ஆயுளுக்கும் நம்மை அல்லல் படுத்தி ஆட்டிவைக்கும் எஜமானனாக உருவெடுக்கும்.ஆபத்தானது அந்த ஒற்றை நாணயம்.

7.அடுத்தவரைச் சேர வேண்டிய பொருள் நம் இல்லத்தில் இருந்தால்,நம்மைத் தேடி வரும் லட்சுமி நம் வீட்டு வாசற்படியிலேயே நின்று விடுவாள்.ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க வேண்டியவளை வாசற்படியிலேயே நிறுத்திவிடலாமா ?

8.முன்னோர்களின் சொத்துக்களுக்கு நாம் சட்டப்படி உரிமையாளர்கள் என்று,தலையை நிமிர்த்திச் சொல்லிக் கொள்ளலாம்,தகுதிப்படி எத்தனை சதவிகிதம் நம்மைச் சேரவேண்டும் என்று மனசாட்சியோடு கணக்கிட்டால்,குனிந்த தலை நிமிராது.

9.யாருக்குப் போய்ச் சேரவேண்டும் என்று ஒவ்வொரு அரிசியிலும் பெயர் எழுதப்பட்டுகிறது என்று திருக்குரான் கூறுகிறது.ஒரு சின்ன அரிசியிலேயே, உரிமையாளர்களின் பெயர் பொறிக்கப் படுகிறது என்றால்,ரூபாய் நோட்டில் எழுதப்படாமல் இருக்குமா ?போய்ச்சேர வேண்டிய இடம் மட்டுமில்லாது,வந்த பணம் எப்படி நம் கையை விட்டுப் போகும் என்பதையும் சேர்த்தே எழுதப்பட்டு வருகிறது.அதை யாரும் தட்டிப் பறிக்கவும் முடியாது,அதட்டிக் கேட்கவும் முடியாது.

10.போகும்பொழுது என்ன கொண்டு போகப் போகிறோம் என்று,எதிராளிக்கு உபதேசிப்பதோடு நிற்காமல்,நாமும் நம் மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்வோம்.

—–

ngomathi@rediffmail.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்