பாவண்ணன்
எண்பதுகளின் தொடக்கத்தில் படிகள் இதழில் வந்திருந்த சதங்கை இதழின் முகவரியைப் பார்த்துத்தான் முதன்முதலாக அவருடன் தொடர்பு கொண்டேன். ஐதராபாத்தில் இருந்த சமயம் அது. என் படைப்புகள் என்று சொல்லிக் கொள்ள மூன்றோ நான்கோ கதைகள் மட்டுமே வந்திருந்தன. இரண்டு வார இடைவெளியிலேயே அவரிடமிருந்து பதில் வந்தது. சதங்கை இதழும் வந்தது. அழகான குண்டுகுண்டான கையெழுத்து. கோடிழுத்தது போல செட்டான வரிகள். என் கதையைப் படித்ததாகவும் பிடித்திருந்ததாகவும் அவர் எழுதியிருந்தார். இருபத்தேமுன்று வயதான இளைஞனுக்கு ஒரு பத்திரிகை ஆசிரியரிடமிருந்து வரும் கடிதம் உருவாக்கும் கிளர்ச்சியும் ஆனந்தமும் கொஞ்சநஞ்சமல்ல. அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தேன். சில நாட்களிலேயே அவருக்கென்று ஒரு கதை எழுதி அனுப்பியிருந்தேன். அடுத்த சதங்கையிலேயே அக்கதை இடம்பெற்றது. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தியபடி அவரிடமிருந்து கடிதங்கள் வந்தன. ஐதராபாத் வாசம் முடிந்து வேறு வேறு ஊர்களுக்குச் சென்றபடி இருந்தேன். நடுவில் ஏதோ ஓர் ஊரில் இருக்கும் போது இதழை நிறுத்திவிட்டதாக எழுதியிருந்தார்.
இது நடந்து இருபதாண்டுகள் ஓடிவிட்டன. வெறும் கடிதங்கள் வழியாக மட்டுமே உரையாடிக் கொண்டிருந்தவரை திருநெல்வேலியில் காலச்சுவடு ஏற்பாடு செய்திருந்த கூட் டத்தில்தான் முதன்முதலாகப் பார்த்தேன். பளீரென்ற வெள்ளை உடைகள். ஏதோ வலியைத் தவிர்க்கக் கழுத்தில் கட்டப்பட்ட இறுக்கமான அட்டை மடிப்பு. நட்பு மிகுந்த புன்னகை. இறந்த காலத்தை நினைவூட்டி அவர் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. சதங்கை மீண்டும் உயிர்பெற்று ஒலிக்கத் தொடங்கியிருந்தது அப்போது. தமிழினி கருத்தரங்கில் இரண்டாவது முறையாகப் பார்த்துக் கொண்டோம்.
பார்த்துக் கொண்ட இரு சந்தர்ப்பங்களிலும் அவர் சதங்கையில் வரவேண்டிய படைப்புகள் பற்றியே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சதங்கை பற்றிய மிகப்பெரிய கனவு அவருக்குள் இருந்தது. இளம்படைப்பாளிகளுடன் சதங்கையை நெருக்கமாக்கும் ஆசையும் ஆர்வமும் அவர் பேச்சில் தெரிந்தன. விவாதப்பொருள் பற்றிய கட்டுரைகள் அதிக அளவில் இடம்பெற வேண்டும் என்றும் விரும்பினார். இதழில் வெளிவந்த சில சாதாரண கதைகள் பற்றிக் கேட்டேன். ‘சாதாரண கதையாகத்தான் இருக்கட்டுமே, தெரிந்துதான் போட்டேன். சாதாரணக்கதையை எழுதியவனாக இருந்தாலும் ஓர் இளம்படைப்பாளிக்கு இடம் தரவேண்டியது முக்கியம். இது பல விதங்களில் அவனுக்கு உதவும். தன் படைப்பை மற்ற படைப்புகளின் நடுவில் வைத்துப் பார்க்கும் போது உருவாகும் விமர்சன மனப்பாங்கு அவனை வளம்பெறச் செய்யும். படைப்புகளின் நுட்பங்கள் மெல்ல மெல்ல அவன் மனத்தில் புகும். அவனை மாற்றும். சாதாரணக்கதை என்று ஒரு படைப்பை வெளியிடாமலே போனால் யார்தான் அவனுக்குச் சொல்லித்தருவார்கள் ? ‘ என்று கேட்டார். தொடர்ந்து ‘சதங்கை இளம்படைப்பாளிகளுக்கு மேடையாக இருக்கும். அதே சமயத்தில் மூத்தவர்களையும் எழுதவைத்தபடி இருப்பேன் ‘ என்றார்.
ஆரம்பக்கட்ட சாதாரணக்கதைகளை வெளியிடுவதிலும் அவருக்குள் ஒரு வரையறை இருந்தது. தனது உள்ளுணர்வை நம்பியே அந்த வரையறையைக் கடைப்பிடித்து வந்தார் அவர். ‘ஓர் இளம்படைப்பாளியின் மூன்று கதைகள் வரை சாதாரணத் தரத்தில் வந்தாலும் பரவாயில்லை என்று பிரசுரிப்பேன். நாலாவது கதையும் அதே தரத்தில்தான் வந்ததென்றால் கைவிட்டு விடுவேன். நாலாவது கதையை எழுதுவதற்குள் தன் தரத்தை உயர்த்தத் தெரிந்த இளம்படைப்பாளியே முக்கியமானவன். தன்னை முக்கியமானவனாக ஆக்கிக் கொள்ள முனைப்பில்லாதவர்களின் எழுத்தைத் தொடர்ந்து பிரசுரிப்பதில் அவர்களுக்கும் லாபம் இல்லை. சதங்கைக்கும் லாபம் இல்லைஏ என்றார். இன்று கடந்த ஆண்டுகளில் வந்த சதங்கை இதழ்களை ஒருங்கே பார்க்கும்போது அவர் எண்ணமும் கனவும் எவ்வளவு மகத்தானவை என்று புரியும்.
பல சமயங்களில் அவர் படைப்புகள் கேட்கும்போது மூன்று பக்கங்கள், நான்கு பக்கங்கள் என்றெல்லாம் வரையறை குறித்து எழுதுவதுண்டு. பல நண்பர்கள் இதைப்பற்றிச் சொல்லிச் சலித்திருப்பதை நேரிடையாகக் கேட்டிருக்கிறேன். ஆனால் எந்தப் படைப்பையும் சற்றே நீளமாக இருக்கிறது என்று அவர் திருப்பியனுப்பியதோ பிரசுரிக்க மறுத்ததோ இல்லை. அவர் பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்தவர். மாணவமாணவிகளிடம் இத்தனை பக்கங்களில் அல்லது இத்தனை பத்திகளில் கட்டுரைகளையோ, பதில்களையோ எழுதச் சொல்லிச் சொல்லி இலக்கியப் படைப்பாளிகளுக்கு மடல் வரையும் போதும் பக்க வரையறை சொல்லி எழுதுவது பழக்கமாகியிருக்க வேண்டும். அவரைப் புரிந்து கொண்ட நண்பர்கள் அவ்வரிகளுக்காக அவரைக் கடிந்து கொண்டதில்லை.
பல சமயங்களில் திடார்திடாரென்று மலர் அறிவிப்பு செய்து படைப்புகளைச் சேகரிக்கப் பாடுபடுவார். அவர் வெளியிட்ட மலர்கள் அனைத்துமே படித்துப் பாதுகாக்கும் தரத்திலேயே இருந்தன.
தொடர்ச்சியான பல பிரச்சனைகளால் கடந்த சில ஆண்டுகளாக அவர் மனநலமும் உடல்நலமும் குன்றியிருந்தார். கண் சிகிச்சை பெரிய பிரச்சனையாக இருந்தது. தொடர்ந்து உடல் சர்க்கரை அளவு ஒரு கட்டுக்குள் வராததால் அறுவை சிகிச்சை தள்ளித்தள்ளிப் போனது. அதைத் தொடர்ந்து தொழில்நுட்பப் பயிற்சிச்சாலையில் பணிபுரிந்த தன் இளம்வயதுடைய மகனைத் தழுவிய மரணத்தால் நேர்ந்த அதிர்ச்சியும் அவரைக் குலைய வைத்துவிட்டது. அந்த அதிர்ச்சிகளிலிருந்தெல்லாம் மீண்டுவிட வேண்டும் என்கிற வேகத்தில் தன்னை முழுக்க முழுக்கச் சதங்கை இதழுடன் இணைத்துக் கொண்டிருந்தார்.
சதங்கையின் வரலாற்றில் தொடர்ந்து வெளிவந்த நுால்மதிப்புரைகள் மிக முக்கியமானவை. அநேகமாகத் தமிழில் வந்த முக்கியமான நுால்கள் பற்றிய பொருட்படுத்தத்தக்க மதிப்புரைகளைச் சதங்கை வெளியிட்டிருக்கிறது என்பது மிகையான கூற்றாகாது.
அவர் கேட்டு நான் எதையும் எழுதாமல் விட்டதில்லை. பிரபஞ்சன் படைப்புகள் பற்றி ஒரு கட்டுரையை நான் எழுத வேண்டும் என்று அவர் விரும்பினார். எனக்கும் அவரைப் பற்றி எழுத வெகுநாட்களாகவே விருப்பம் இருந்தது. சிறுகதைகளைப் பற்றி மட்டுமே எழுதுவதாகச் சொல்லித் தொகுதிகளைத் தேடத் தொடங்கினேன். என்வசம் சிலவே இருந்தன. கடலுாரிலிருந்தும் சென்னையிலிருந்தும் நண்பர்கள் தொகுதிகளை வாங்கிக் கூரியரில் அனுப்பியிருந்தார்கள். எல்லாவற்றையும் படித்த நிறைவில் கட்டுரையைக் குறித்த கெடுவுக்குள் எழுதி அனுப்பினேன். வழக்கமாக எப்படைப்பை அனுப்பினாலும் கிடைத்த ஒருவாரத்துக்குள் தகவல் வந்து விடும். இருவாரங்கள் வரைக்கும் பதில் வராததால் சற்றே எனக்கும் வருத்தமாக இருந்தது. ஏதோ நேரப்பிரச்சனையால் எழுதாமல் விட்டிருக்க வேண்டும் என்று நினைத்து அமைதியடைந்தேன். நான் எதிர்பாராத தருணத்திலெல்லாம் உடனுக்குடன் பதில் எழுதியவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் பதில் போடாதது ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருந்தது.
இன்று அவர் உலகைவிட் டு மறைந்து விட்டார் என்கிற செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. அவருடைய பதில் கடிதம் வருவதற்கு இனி வாய்ப்பே இல்லை என்பதை என் மனம் நம்ப மறுக்கிறது. என்றாவது ஒருநாள் அக்கடிதத்தைக் கனவிலாவது வாங்கிப் படிப்பேன் என்றே தோன்றுகிறது.
***
- அவள் அழுகிறாள்….
- மருமகள்
- ஒலிக்கும் சதங்கை
- யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ காட்சி பதிவும் கதை வெளியும்
- விளையாட்டும் விபரீதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 19 – சி.சு.செல்லப்பாவின் ‘குருவிக்குஞ்சு ‘)
- திருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘
- மனிதர்களிடன் இருக்கும் எய்ட்ஸ் -எதிர்ப்பு ஜீன்
- கண்ணே! கவிதைப் பெண்ணே!
- கனவு வந்து போனது
- இதுவும் அதுவும்
- ஆழம்
- ஐந்தாம் வகுப்பு நண்பன்.
- நட்பு
- அந்த ஒரு மாதம்…
- ஆழ்ந்த ஆசை
- அதிசயம் ஆனால் உண்மை : அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தனர்
- சிகாகோவில் தமிழ் மாநாடு : மறுபடியும் பழமைக்குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவோம்.
- இந்த வாரம் இப்படி – சூலை 14 2002 (வைகோ, அரசியல்வாதிகள், ஜம்மு காஷ்மீர், படுகொலைகள்)
- ஒலிக்கும் சதங்கை
- கொச்சைப்படுத்தாதீர்கள், தயவு செய்து..
- இலைக் குணம்