‘தனிமைப்படுத்திக்கொண்டால் தேங்கித் தான் போவீர்கள் ‘

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

மெளலானா வாஹிதுதீன் கான் நேர்காணல்: யோகீந்தர் சிகன்த்


மெளலானா வஹிதுதீன் கான் அவர்கள், அல் ரிஸாலா என்ற உருதுப்பத்திரிக்கையின் ஆசிரியர். உருது மொழியிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான புத்தகங்களை எழுதிய இவர், இந்தியாவின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகக் கருதப்படுகிறார். மதங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் உரத்த குரலெழுப்பும் இவர், பரந்த விஷயங்களைப் பற்றியும், மதவாதம் பற்றியும், மத சகிப்புத்தன்மை பற்றியும், இஸ்லாமிய மதச்சிந்தனை பற்றியும், ஒரு மதத்தினர் மற்ற மதங்களைப் புரிந்து கொள்வதைப் பற்றியும் யோகீந்தர் சிகந்த் அவர்களிடம் பேசினார்.

கேள்வி: பல முஸ்லீம் நாடுகளில் இருக்கும் மக்களிடம் அமைதியின்மைக்கான காரணம் என்று என்ன நினைக்கிறீர்கள் ?

பதில்: இன்றைய முஸ்லீம் உலகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, ஒருகாலத்தில் முஸ்லீம்கள் ஸ்பெயினிலிருந்து இந்தியா, இன்னும் இந்தியாவுக்குக் கிழக்கே வரை நீண்டிருந்த பெரும் பேரரசை வைத்திருந்தார்கள் என்பதை நினைவுகூர வேண்டும். இவை எல்லா பிரதேசங்களும் ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் கீழ் வந்தன. அன்றைய முஸ்லீம் சிந்தனையாளர்கள் சரியான முறையில் ஐரோப்பிய சவாலை எதிர்கொள்ளத் தவறிவிட்டார்கள். அன்றைய அவர்களது சமூகத்துக்குத் தேவையான ஒரு தலைமையைக் கொடுக்கத் தவறிவிட்டார்கள். அவர்கள் ஐரோப்பியக் காலனியாதிக்கத்தை முஸ்லீம்களுக்கு எதிரான சதியாகவும், சிலுவைப்போர்களின் தொடர்ச்சியாகவும் கண்டார்கள். மனக் கசப்புடன் ஐரோப்பியர்களை இஸ்லாமின் எதிரிகள் என விமர்சித்தார்கள். ஆனால், ஐரோப்பிய வெற்றிக்கு அது முழுக்க முழுக்க தவறான விளக்கம் என்று நான் நினைக்கிறேன். உண்மையில், ஒரு சக்தி மிகவும் வலிமையுள்ளதாக வளர்வதும், பிறகு மெல்ல மெல்ல நசிந்து இன்னொரு சக்தி அதன் இடத்தில் தோன்றுவதும் வரலாற்றின் விதிகளில் ஒன்று. ஆகவே, இந்தியாவில் முன்பு ராஜாக்கள் இருந்தார்கள், பிறகு மொகலாயர்கள் வந்தார்கள், பிறகு இறுதியில் பிரிட்டிஷ்காரர்கள் வந்தார்கள். பிறகு இந்தியா சுதந்திரமடைந்தது.

இப்போதும் சில சமயங்களில் காங்கிரஸ் ஆள்கிறது, சில சமயங்களில் பாஜக ஆள்கிறது. ஆகவே என் பார்வையில், ஐரோப்பியர்கள் முஸ்லீம் உலகத்தைக் கைப்பற்றியதன் காரணம் இஸ்லாமுக்கு எதிரான சதி இல்லை. ஐரோப்பியர்கள் தொழில்நுட்பத்தில் சிறப்பாக இருந்ததுதான் காரணம். நாம் தண்ணீரை தண்ணீர் என்று மட்டும் தான் பார்க்கிறோம். இன்னும் அதிகமாகப் போனால், தண்ணீரைக் கொண்டு ஓடும் தண்ணீரின் சக்தியைப் பயன்படுத்தி வாட்டர்மில் – நீரினால் செலுத்தப்படும் சக்கர யந்திரம் – வைத்து மாவரைக்க உபயோகப்படுத்துகிறோம். ஆனால் ஐரோப்பியர்கள் இன்னும் முன்னேறி தண்ணீரை நீராவியாக்கி அதன் சக்தியை உபயோகப்படுத்தினார்கள். நாம் கத்திகளைக் கொண்டு சண்டை போட்டோம். அவர்கள் துப்பாக்கிகளைக் கொண்டு சண்டை போட்டார்கள். இயற்கையாகவே நம்மை அவர்கள் வெற்றிகொண்டார்கள்.

இப்போது, நான் முன்பு சொன்னது போல, சென்ற நூறாண்டுகளாக, முஸ்லீம் சிந்தனையாளர்கள், ஏன் இன்றும் கூடத்தான், ஐரோப்பியர்களையும், அமெரிக்க மேலாண்மையையும் பெரும் இஸ்லாமிய எதிர்ப்பு சதியாகப் பார்க்கிறார்கள். ஆகவே, இதைத்தான், முடிவே இராத வன்முறைச் சுழற்சியாக முஸ்லீம் உலகமெங்கும் நீங்கள் பார்க்கிறீர்கள். சாதாரண முஸ்லீம்கள், முஸ்லீம் அல்லாதவர்கள் மீது கொண்டிருக்கும் அளவு கடந்த வெறுப்பு, உண்மையிலேயே எனக்கு பெரும் பயத்தை கொடுக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது, பிரிட்டிஷார் எல்லோரும் கொடுமையான தீயவர்கள் என்றும், எந்த நல்ல விஷயத்தையும் அவர்களிடம் பார்க்க முடியாது என்றும் படிப்பிக்கப்பட்டு வளர்ந்தேன். பிறகுதான் நான் அவர்கள் நவீன பள்ளிகள், ரயில்வேக்கள் என்று ஏராளமான நல்ல விஷயங்களை இந்தியாவுக்குச் செய்திருக்கிறார்கள் என்பதைக் கண்டேன். நமது சிந்தனையாளர்கள் முஸ்லீம் சக்தியின் நசிவுக்குக் காரணம் இஸ்லாமுக்கு எதிரான சதி அல்ல என்பதையும், மேற்கின் தொழில்நுட்பச் சிறப்புதான் காரணம் என்பதையும் ஆரம்பத்திலிருந்து சொல்லிவந்திருந்தார்கள் என்றால் இப்போது காணப்படும் முஸ்லீம் வன்முறைவாதத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று நினைக்கிறேன்.

கேள்வி: ஐரோப்பிய வளர்ச்சியை முஸ்லிம்களுக்கு எதிரான சதி என்று காணும் இந்தச் சிந்தனை முறை இப்போதும் முஸ்லீம் உலகத்தில் உறுதியாக இருக்கிறதா ?

பதில்: நிச்சயமாக. இஸ்லாமிய புத்தகங்கள் என்ற பெயரில் சந்தையில் கிடைக்கும் எந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தாலும் முஸ்லீம் அல்லாதவர்களை இஸ்லாமுக்கு எதிரான சாத்தான்கள் என்றும், அவர்களின் ஒரே குறிக்கோள் இஸ்லாமை ஒழிப்பதுதான் என்றும் பேசும் இப்படிப்பட்ட சதிப் பேச்சுதான் பரப்பப்பட்டு வருகின்றது என்பதைக் காணலாம். நேற்றுத்தான் எனக்கு காஷ்மீரிலிருக்கும் ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. சமீபகாலம் வரை அவர் இஸ்லாமிய புத்தகங்கள் என்ற வன்முறைவாதக் கும்பலின் புத்தகங்களைப் படித்துவிட்டு, இந்துக்கள் எல்லோரும், பொதுவாகவே எல்லா முஸ்லீம் அல்லாதவர்களும் முஸ்லீம்களின் நிரந்தர விரோதிகள் என்று நம்பியிருந்ததாகவும், பிறகு சமீபத்தில் என்னுடைய புத்தகங்கள் கிடைக்கப்பெற்று, தன்னுடைய உலகப் பார்வையை புரட்சிகரமாக மாற்றிக்கொண்டதாகவும் எழுதியிருந்தார். முழுக்க முழுக்க மனமாற்றம் பெற்று அவர் இப்போது இந்துக்கள் கடவுளின் குழந்தைகள்தான் என்றும், அவர்களையும் நாம் நேசிக்க வேண்டும் என்றும் என்று உணர்வதாக அவர் எழுதியிருந்தார்.

கேள்வி: ஆனால், இஸ்லாம் பார்ப்பது போல, முஸ்லீம் அல்லாதவர்கள் எல்லோரும் காஃபிர்கள் இல்லையா ? அது பாரபட்சமான விஷயம் இல்லையா ?

பதில்: இல்லவே இல்லை. காஃபிர் என்ற வார்த்தைக்கு ‘ஒரு விஷயத்தை மறுக்கிறவர் ‘ என்றுதான் பொருள். நான் உங்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், நீங்கள் அதனை நம்பவில்லை என்றால், அந்த விஷயத்தைப் பொறுத்த மட்டில் நீங்கள் எனக்குக் காஃபிர். அது திட்டும் வார்த்தை அல்ல. அது ஒரு விஷயத்தை விளக்கும் வார்த்தை. ஆகவே, நீங்கள் இந்துக்களின் மறுபிறப்புக்கொள்கையை நம்பினீர்கள் என்றார், நான் அதனை மறுத்தேன் என்றால், அந்தக் கொள்கையைப் பொறுத்த மட்டில் நான் காஃபிர்.

கேள்வி: முஸ்லீம்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு மத பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு இருக்கிறதா ?

பதில்: மதங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமான தேவையான ஒன்று. இஸ்லாம் அதனை வலியுறுத்துகிறது. சொல்லப்போனால், வரலாற்றில் முன்னேற்றம் நடந்ததெல்லாம், வெவ்வேறு மக்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உறவு முறைகள் வளர்ந்த போதுதான். இது பள்ளிக்கூட அளவிலிருந்து தொடர்ந்து நடக்கவேண்டும். குழந்தைகளுக்கு வேறு மதங்களைப்பற்றிச் சொல்லிக்கொடுத்தால் அவர்கள் இஸ்லாமைவிட்டுச் சென்றுவிடுவார்கள் எனச் சில மெளல்விகள் கூறுகிறார்கள். மற்ற மதங்களைப் பற்றிய உண்மையைச் சொன்னால், தங்களுடைய மதத்தை விட்டு விடும் அளவுக்கு வலிமையற்றதா இஸ்லாமின் மீதான நம்பிக்கை ? இஸ்லாம் எளிதில் தூள் தூளாக உடைந்துவிடும் ஒரு கண்ணாடிப் பாத்திரமல்ல. இது வலிமையான இரும்புப் பாத்திரம் போன்றது. நாம் உண்மையிலேயே மற்றவர்களது மதங்களைப்பற்றி உண்மையாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்குள் வந்துவிட்ட தவறான எண்ணங்களைக் களையவும் முடியும். ஏனெனில் நமது மனச்சாய்வு நம் அறியாமையாலும், தவறான சித்தரிப்புகளாலேயுமே கட்டப்பட்டது. இஸ்லாமைப் பொறுத்த மட்டில், குரான் வலியுறுத்தும் ஒரு கடமை, மதங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை. தனது இறுதி மெக்கா பிரயாணத்தின் போது, நபிகள் நாயகம் சுமார் 1,25,000 சீடர்களிடம் உலகெங்கும் சென்று இஸ்லாமைப் பரப்ப வேண்டி கேட்டுக்கொண்டார். ஆகவே அவர்கள் உலகெங்கும் சென்று இஸ்லாமை போதித்தார்கள். ஆனால் அது அவர்களது வேலையில் ஒரு அம்சம்தான். அவர்கள் அறிவைத்தேடியும், பல்வேறு மக்களுடன் விவாதிக்கவும், மற்றவர்களோடு பழகவும் அவர்கள் உலகெங்கும் பிரயாணித்தார்கள்.

ஆகவே, உதாரணமாக, சில ஆரம்ப கால முஸ்லீம்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். அவர்கள் இங்கு சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்டு, சமஸ்கிருத புத்தகங்களை அராபிய மொழியில் மொழிபெயர்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால், ஸ்பெயின் முஸ்லீம் ஆட்சியின் கீழ் இருந்தபோது, பல கிரிஸ்துவர்கள் அங்கு முஸ்லீம் படிப்பாளிகளிடமிருந்து விவிலியத்தைக் கற்றுக்கொள்ள அங்கு வந்தார்கள்.

கேள்வி: இந்த மதங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக மதரஸா பள்ளி மாணவர்களும் மற்ற மதங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் எனக் கருதுகிறீர்களா ?

பதில்: நிச்சயமாக. மதரஸா பள்ளி அமைப்பை புணருத்தாரணம் செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. நவீன பாடங்கள் அங்கு சொல்லித்தரப்படவேண்டும். ஆனால் பிரச்னை, புதிய பாடங்களைச் சொல்லித்தர ஆசிரியர்கள் இல்லை. ஏன், பழைய பாடங்களைப் புதிய முறையில் சொல்லித்தரவும் ஆசிரியர்கள் இல்லை. மதரஸாக்களுடன் இணைந்த சில மெளல்விகள் இது போன்ற பேச்சுவார்த்தை முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, லக்னவில் இருக்கும் நத்வாத் உல்-உலீமா மதரஸாவை நடத்தும் அலி மியான் (அபுல் ஹசன் அலி) வழக்கமாக இந்து சிந்தனையாளர்களை தன்னுடைய பள்ளிக்கூடத்துக்கு அழைத்து செமினார்களில் பேசவைக்கிறார். ஆனால் இது அவ்வளவு முக்கியமல்ல. ஏனெனில் இவர்கள் பிரச்னை அற்ற இந்துக்கள். இவர்கள் ஏற்கெனவே இந்து-முஸ்லீம் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள். நாம் பிரச்னையான இந்துக்களை அணுகவேண்டும். அதாவது ஆர்.எஸ்.எஸ்-இல் இருக்கும் இந்துக்களை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். இதற்காக பல முஸ்லீம்கள் என்னைத் தீவிரமாக எதிர்க்கிறார்கள். உண்மையில், நான் பல ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள் முஸ்லீம் எதிர்ப்பாளர்களாக இருப்பதன் காரணம், அவர்களிடம் உள்ள இஸ்லாம் பற்றிய அறியாமையும், தவறான புரிதலும்தான் என்பதை கண்டிருக்கிறேன். அவர்களோடு பேச்சுவார்த்தை கொள்வதால், அவர்களிடம் இஸ்லாம் என்றால் உண்மையில் என்ன என்பதை விளக்குவதால், அவர்கள் தங்களுடைய மனச்சாய்வை மெல்ல மெல்ல உதறுகிறார்கள். அப்புறம் ஏராளமான முஸ்லீம்கள் தங்களது குழந்தைகளை முஸ்லீம்கள் நடத்தும் மதச்சார்பற்றப் பள்ளிகளுக்கு அனுப்ப விழைகிறார்கள். பெரும்பாலானவை தரமற்றவை. இங்கும், எல்லா முஸ்லீம் அல்லாதவர்களும், முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் என்ற கருத்தே வேலை செய்கிறது. இது கெட்டோ மனவிளைவை உருவாக்குகிறது. இதன் விளைவாக, பல முஸ்லீம் குழந்தைகள் முஸ்லீம் அல்லாத குழந்தைகளோடு எந்த வித பழக்கமும் இல்லாமல் வளர்வது, இன்னும் மற்றவர்களைப் பற்றிய அறியாமைக்கும், தவறான புரிதலுக்கும் உரம் போடுகிறது. நான் இது மாறவேண்டும் எனத் தீவிரமாக விரும்புகிறேன். முஸ்லீம் குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு வளரவேண்டும் எனத்தான் விரும்புகிறேன். நீங்கள் உங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டார்கள் என்றால், நீங்கள்தான் தேங்கிப்போவீர்கள்.

கேள்வி: சுபிகள், முஸ்லீம் துறவிகள், மத நல்லிணக்கத்துக்கும், மதங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கும் பெருமளவில் உதவியிருக்கிறார்கள், இல்லையா ?

பதில்: நிச்சயமாக. சுபியிஸம், அல்லது இஸ்லாமிய துறவியம் மைய நீரோட்டமாக, முஸ்லீம்களுக்கும், மற்றவர்களுக்கு இடையில் பாலமாக இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் சுபி சத்திரங்களில் (khanqah), முஸ்லீம்களும் இந்துக்களும் இணைந்து உட்கார்ந்து சாப்பிடுவதை ஊக்குவிக்க சைவ உணவுதான் பரிமாறப்படுகிறது. இது தீண்டாமை மிகவும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்ட அந்த நாட்களில் மிகவும் புரட்சிகரமானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, சுபியிஸம் இன்று நசிந்து விட்டது.

http://www.milligazette.com/Archives/01062002/0106200230.htm

Series Navigation

மெளலானா வாஹிதுதீன் கான் நேர்காணல்: யோகீந்தர் சிகன்த்

மெளலானா வாஹிதுதீன் கான் நேர்காணல்: யோகீந்தர் சிகன்த்