பேரரசின் புதிய விசுவாசிகள்

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

தாரிக் அலி


வியத்நாம் போரின் போதும் கொரியா போரின் போதும் அமெரிக்காவை தீவிரமாக ஆதரித்த, ஒரு சமயத்தில் சிஐஏவுக்கு ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்த சால்மர்ஸ் ஜான்ஸன் என்ற முக்கியமான அமெரிக்க ஆய்வாளர், தீவிரவாதிகள் விமானத்தைக் கொண்டு பெண்டகனை தாக்குவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு, எதிர்நிற்கும் ஆபத்துக்களை குறித்து அமெரிக்கர்களை எச்சரித்தார். பனிப்போருக்கு பின்னர் தோன்றிய பேரரசின் கொள்கைகளுக்குத் தீவிரமான விமர்சனத்தை முன் வைத்தார். ‘பதிலடி ‘ என்ற ‘Blowback ‘. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான் ‘ என்று சொல்லலாம். ‘என்ன விதைத்தது என்று தெரியாவிட்டாலும் கூட ‘

‘அமெரிக்காவின் வளமையின் காரணமாகவும், அதன் வலிமை காரணமாகவும், அமெரிக்காவே முதன்மையான குறியாக, உலகெங்கும் இருக்கும் அமெரிக்க போர்ப்படைகளுக்கு எதிராகவும், அமெரிக்காவின் உள்ளேயும், பயங்கரவாதச் செயல்கள் இது போன்ற ‘பதிலடி ‘யாக இருக்கும். ‘ என்று ஜான்ஸன் குறிப்பிட்டார்.

அமெரிக்க அரசுக்குள் ஆராய்ச்சியாளராக இருந்த ஜான்ஸன் தன்னுடைய கடந்த காலத்திலிருந்து இந்த படிப்பினையைப் பெற்றார். இதன் மூலம், பொருளாதார ராணுவப் பேரரசாக இருப்பதில் உள்ள அடிப்படை ஆபத்துக்களைப் பற்றி இவர் எச்சரிக்கிறார். ஆனால், அமெரிக்கப் பேரரசின் முன்னாள் விமர்சகர்கள், செப்டம்பர் 11இன் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டுவிட்டார்கள். இன்று பெரும்பான்மையான விமர்சகர்கள் பேரரசின் தீவிரமான விசுவாசிகளாகி விட்டார்கள். அட்லாண்டிக் பெருங்கடலின் இருபுறமும் தாராளவாதப் பத்திரிக்கைகளில் எப்போதும் இருக்கும் ஸல்மான் ருஷ்டி, மார்டின் ஆமிஸ் இதர நண்பர்கள் பற்றி நான் குறிப்பிடவில்லை. இவர்கள் திரும்பவும் ஒரு முறை மாறலாம். ஃப்ரஞ்ச் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் அமெரிக்கக் கொடியை உடல் மீது போர்த்திக்கொண்டு போஸ் கொடுத்த ஸல்மான் ருஷ்டி தன்னை மீண்டும் ஒருமுறை மாற்றிக்கொள்ளலாம். அவர் சிறுது காலம் இஸ்லாமியராக மதம் மாறிக்கொண்டு வாழ்ந்ததைப் போல, அவர் இந்த பேரரசின் மீது கொண்டுள்ள காதலும் சில வருடங்களில் மறைந்துவிடலாம்.

எனக்குக் கவலைதருவது இன்னொரு குழு. இடதுசாரி வேலைகளில் தீவிரமாக இருந்த ஆண்களும் பெண்களும். புரட்சிகர அரசியலின் ஓரங்களிலிருந்து, அமெரிக்க அரசின் மத்திய அமைச்சகத்தை நோக்கிய வீறுநடை பயில்கிறார்கள். பெரும்பாலான புதிய மதமாறிகள் போல, இவர்களும் அரக்கத்தனமான சுயநம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். இடதுசாரி சிந்தனையில் தங்களது கொள்கை ரீதியான பேச்சுக்களின் மூலம் கூர்மைப்படுத்திக்கொண்ட திறமைகளை இன்று தங்களது முன்னாள் நண்பர்கள் மீதே பிரயோகம் செய்கிறார்கள். அதனாலேயே இவர்கள் அமெரிக்கப் பேரரசின் உபயோகமான முட்டாள்களாக ஆகிவிட்டார்கள். இவர்கள் உபயோகப்படுத்தப்பட்டு உதறப்படுவார்கள். இன்னும் பலர் வெகுதூரம் நடந்து சால்மர்ஸ் ஜான்ஸன் காலி செய்த இடத்துக்குப் போட்டி போடலாம். அவர்களுக்கு எச்சரிக்கை. அதற்கு நீண்ட வரிசை இருக்கிறது.

இன்னும் பலர் ஆப்கானிய பொம்மையான ஹாமித் கார்ஜாய் போல தாங்களும் சோமாலிய, பாகிஸ்தானிய , இராக்கிய, இரானிய தலைமை கிடைக்கலாம் எனக் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இவர்களும் ஏமாற்றப்படலாம். நன்கு பரிசோதிக்கப்பட்ட வேலையாட்களுக்கே அந்த அதிகாரம் கிடைக்கும். முன்னாள் மார்க்ஸியவாதிகம், மாவோயிஸ வாதிகளும் (பேரரசு வைக்கும்) பரிட்சையில் தேற முடியாது. அப்படி தேர்வதற்கு, தங்களது கடந்த கால வாழ்க்கையையே திருப்பி எழுத வேண்டும். பேரரசின் முந்தைய எதிரிகளை ஆதரித்தது தவறு என்று ஒப்புதல் வாக்கு மூலம் எழுதித்தர வேண்டும். க்யூபா, வியத்நாம், அங்கோலா, ஆஃப்கானிஸ்தான், கிழக்கு அரேபியா ஆகிய தேசங்களை ஆதரித்தது தவறு என்று எழுதித்தரவேண்டும். மறுவார்த்தைகளில் சொன்னால், அது டேவிட் ஹோரோவிட்ஸ் தேர்வு. இந்த டேவிட் ஹோரோவிட்ஸ் , கம்யூனிஸ்ட் மற்றும் வரலாற்றாசிரியர் ஐசக் ட்யூட்சருக்குப் பிறந்த மகன். 1970-களில் அமெரிக்காவினால கழுவிச் சுத்திகரிக்கப் பட்டு இன்று தாராளவாதமே, இடதுசாரிச் சிந்தனையின் படிக்கட்டு என்று எழுதுகிற வலதுசாரியாகிவிட்டார்.

அவரை ஒப்பிட்டால், முன்னாள் ட்ராட்ஸ்கியிஸ்டுகளான கிரிஸ்டோபர் ஹிட்சென்ஸ் அவர்களும், கானான் மாகியாவும் விளிம்பு நிலை மனிதர்கள்தான். தீவிரமாய் யாரும் இவர்களை எடுத்துக் கொள்வதில்லை. இப்போது ஈராக் குண்டுவீசி தாக்கப்பட்டு, அதனுள் அமெரிக்கப் படைகள் நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றும் வழியில் போகலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில், நம் இந்த வீரர்கள் எப்படி பேசுவார்கள் ? ஈராக்கின் மிகச்சிறந்த சிந்தனையாளர் என்று ‘கவுன்டர் பஞ்ச் ‘ பத்திரிக்கையில் விவரிக்கப்பட்ட கானான் மாகியா, ‘செப்டம்பர் 11 புதிய தரத்தை உருவாக்கி விட்டது… நீங்கள் பயங்கரவாத வேலைகளில் இருந்தீர்கள் என்றால், நீங்கள் பெரிய அளவில் சிந்திக்க வேண்டும்.. அதற்கு உங்களுக்கு கூட்டாளிகள் வேண்டும். நிச்சயம் ஈராக்கை நீங்கள் கூட்டாளியாகச் சேர அழைப்பீர்கள். ‘ என்றார்.

ஒரு அடிப்படையும் இல்லாமல், ஒரு தராதரமும் இல்லாமல், இப்படி கதை மேல் கதையாக தலைசுற்றும் அளவுக்கு உளற மாகியாவுக்கு இருக்கும் திறமை ஆச்சரியமானது. எந்த ஒரு அமெரிக்க உளவு நிறுவனமும், செம்டம்பர் 11க்கும், ஈராக்கும் உள்ள சம்பந்தத்தை காட்டமுடியவில்லை. இந்தக் காரணத்தால், புதிய காரணமாக, ‘ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பதற்காக ‘ ஈராக் மீது போர் தொடுக்கலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். சதாமின் பழைய எதிரிகள் கூட இந்த அபத்தத்தை நம்பத் தயாரில்லை.

நியூயார்க் வாஷிங்டன் தாக்குதல்களுக்கு, ஹிட்சென்ஸ், மிகவும் சிந்தித்து எழுதினார். ‘ஆராயும் மனம் ‘ ‘தள்ளி வைக்கப்பட்டு விட்டது ‘ என்று எழுதினார். இருப்பினும், அவர் அமெரிக்கா தன் பழைய கொள்கைகளுக்கு பதிலாகத்தான் இந்த அடிகள் நடந்திருக்கின்றன என்றும், ஜார்ஜ் புஷ் பயங்கரவாதச் செயலையும் போர்ச்செயலையும் குழப்பிக்கொள்வதாகவும் எழுதினார். ஆனால், இவரைவிடத் தீவிரமாக அமெரிக்காவை எதிர்த்தவர்களை , எதிர்ப்பதற்குத் தொடங்கினார். ‘மென் இடதுசாரிகளின் பாசிஸ ஆதரவுகள் ‘ என்பது போல எழுத ஆரம்பித்துவிட்டார். அதாவது நோம் சோம்ஸ்கி, ஹரோல்ட் பிண்டர், கோர் விடால், சூசன் சோண்டாக், எட்வர்ட் சையது ஆகியோருக்கு எதிராக. ஹென்ரி கிஸ்ஸின்ஞ்சரையும், பில் கிளிண்டனையும், அன்னை தெரஸாவையும் சுற்றி இருந்த ஒளிவட்டங்களை ஊதி எறிந்த அற்புதமான ஆராய்ச்சி மூளை இன்று சலூன் கடையில் சலிப்புத்தரும் அக்கபோர் பேசும் ஆள் போல ஆகிவிட்டார்.

பேரரசின் இந்தப் புதிய விசுவாசிகள் எல்லோரையும் இணைக்கும் மாளாத நம்பிக்கை, ‘எவ்வளவு தவறுகள் இருந்தாலும், அமெரிக்காவின் ராணுவ பொருளாதார வலிமை மட்டுமே ஒரே ஒரு விடுதலை தரும் சக்தி ‘ என்ற கருத்துருவாக்கம். ஆகவே இதனை யார் எதிர்த்தாலும் அவர்களை எதிர்க்கவேண்டும். சிலர் ஒருவேளை புஷ்-உக்குப் பதில் கிளிண்டனை சீசர் போன்ற சக்கரவர்த்தியாக விரும்பலாம். ஆனால் இது வெற்று ஆசை தான். ஆழமான உண்மை என்னவென்றால் தலைவர்களை விடவும் பேரரசு உயர்ந்தது. அவர்களும் இதை அவர்கள் அறிவார்கள்.

இவர்கள் மறந்து போனது என்னவென்றால், பேரரசு எப்போதுமே தன்னுடைய சுய லாபத்துக்காகவே காரியங்களைச் செய்கிறது என்பதுதான். பிரிட்டிஷ் பேரரசு அடிமைத்தனத்துக்கு எதிராகத் தோன்றிய போராட்டங்களை புத்திசாலித்தனமாக உபயோகப்படுத்திக்கொண்டு ஆப்பிரிக்கா முழுவதையும் தன் காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. இன்று அமெரிக்கப் பேரரசு, தன்னார்வக்குழுக்களின் மனித நேயப் போர்வையில் தன்னுடைய புதிய போர்களை நடத்துகிறது. அமெரிக்கப் பேரரசு, உலகத்தின் நாடுகளின் எல்லைக்கோடுகளை மறுபடி வரைவதற்கு செம்டம்பர் 11ஐ பயன்படுத்திக்கொள்கிறது. டிக் செனிக்கும், டோனால்ட் ரம்ஸ்ஃபீல்டுக்கும், ஐரோப்பிய அரசியல்வாதிகளின் பொய்யான தெய்வங்கள் எரிச்சல் மூட்டுகின்றன. ஐரோப்பிய அரசியல்வாதிகள் ஐக்கிய நாடுகள் சபைக்குப் புத்துயிர் ஊட்டவேண்டும் எனப் பேசுவது, வாஷிங்டனில் சிரிப்பை வரவழைக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையில் 189 நாடுகள் இருக்கின்றன. அதில் 100 நாடுகளில் அமெரிக்கப்படைகளுக்கு கூடாரங்கள் இருக்கின்றன. இனி ஐ.நா (ஐக்கிய நாடுகள்) என்பதை ஐ.அ (ஐக்கிய அமெரிக்கா) என்று படிக்கலாம். ஐஎம்எஃப் முல்லாக்களால் திணிக்கப்படும் நியோ லிபரல் பொருளாதாரம், எல்லா கண்டங்களிலும் இருக்கும் பல நாடுகளை வறுமைக்குத்தள்ளி, அவற்றின் மக்களை சோகத்தின் விளிம்புக்குக் கொண்டுவந்துவிட்டன. பனிப்போரின் போது தோன்றிய சமூக ஜனநாயகம் என்ற கருத்துருவாக்கம் இப்போது அவ்வளவு சுவாரஸ்யமானதாக இல்லை. எதையும் மாற்றுவதற்கு முடியாத ஜனநாயக பாராளுமன்றங்களின், அதில் இருக்கும் அரசியல்வாதிகளின் சக்தியின்மை, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கி விட்டது. அரசியல்வாதிகளின் மாமன் மச்சான்களுக்கு இருக்கும் தொழிற்சாலை, சொத்துக்கள் அதிகாரம் ஆகியவைகளுக்கு ஜனநாயகம் தேவையில்லை.

உலகம், அமெரிக்காவால் ‘விடுதலை செய்யப்படுவதால் ‘ களைத்துப் போகும் போது, பல லிபரல்கள் மெளனத்தால் மரத்துப் போயிருப்பார்கள். அமெரிக்காவின் கவர்ச்சிகரமான விஷயம், மேல் தளத்தின் கீழ், பல படுகைகளாக இருக்கும் விமர்சனக்குரல்கள் வலுவாக இருந்து வந்தது தான். 1970இல் பல ஆயிரக்கணக்கான அமெரிக்க போர் வீரர்கள் பெண்டகனுக்கு முன்னாள் போராட்டம் நடத்தி வியத்நாமியர்கள் வெற்றி பெறவேண்டும் என்று கோஷம் எழுப்பியபோது, பெண்டகனின் ஜெனரல்கள் செப்டம்பர் 11 கொடுத்த அடியைவிட பலமான அடியைப் பெற்றார்கள். அமெரிக்கப் பேரரசின் புதிய விசுவாசிகள், இந்த பாரம்பரியத்தை அமுக்க உதவுவதால், இன்னும் பல ‘பதிலடி ‘களுக்குத் தேவையான நிலைமைகளை உருவாக்கத்தான் உதவி செய்கிறார்கள்.

(தாரிக் அலி சமீபத்தில் ‘அடிப்படைவாதத்தின் மோதல் ‘ என்ற புத்தகத்தை எழுதியவர்)

(Tariq Ali is a frequent contributor to CounterPunch where this originally appeared. His most recent book is The Clash of Fundamentalism, published by Verso.)

Series Navigation

தாரிக் அலி

தாரிக் அலி