காஷ்மீர் பிரிவினை இயக்கத்தின் சமூகப்பின்னணி. – முஸ்லீம் பணக்காரர்களின் பங்கு

This entry is part [part not set] of 19 in the series 20011210_Issue

கே. என். பண்டிதா


முதலாம் உலகப்போர் சிறிய வியாபார பணக்காரர்களை காஷ்மீரி முஸ்லீம்களுக்கு மத்தியில் உருவாக்கியது. இவர்கள் ‘ஜெர்மன் கோஜா ‘க்கள் என்று அழைக்கப்பட்டார்கள். பிரிட்டிஷ் அரசு தன்னுடைய பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றி, இந்த முஸ்லீம்களை அவர்களது முஸ்லீம் அடையாளத்தை அடிக்கடி குறிப்பிட்டும், அவர்களது முஸ்லீம் பெரும்பான்மையை அடிக்கடி ஞாபகப்படுத்தியும், அவர்கள் முஸ்லீம் அல்லாத ராஜாவின் கீழ் வறுமையில் இருப்பதையும் குறிப்பிட்டு வந்தது. புதிதாக படிப்பறிவுபெற்ற முஸ்லீம் இளைஞர்கள் மத்தியில் காஷ்மீர் முஸ்லீம் சமூகம்

முஸ்லீம் மாநாடு கட்சியிலிருந்து தேசிய மாநாடு 1938-இல் உருப் பெற்றது. காஷ்மீரின் முஸ்லீம்களை புதிய ஆளும் வர்க்கமாய் உருவாக்க வேண்டுமென்ற அதன் லட்சியம் அதன் பிரபலத்திற்குக் காரணமாயிற்று. நிலச் சீர்திருத்தங்களும், பொருளாதார முன்னேற்றமும் இரண்டாம் பட்சமாயின. இதனால் வேறுபட்ட கொள்கைகளையுடைய மற்ற கட்சிகளுடன் தேசிய மாநாடு கூட்டுச் சேரத் தொடங்கியது. 1950-52-இல் நிலச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப் பட்ட போதும் , விவசாயத்தில் பாரதூரமான சமூக மாற்றத்தை இது ஏற்படுத்தவில்லை., ஒரு புதிய நில உரிமையாளர் குழு ஏற்பட்டது. இந்தக் குழு புதிதாகக் கிடைத்த தம் செல்வாக்கை அதிகாரம் பெறப் பயன் படுத்தினர். தொழிற்சாலைகள் ஏதும் இல்லையாதலால், தொழிலாளர் வர்க்கமும் உருவாகவில்லை. இதனால், இனவாதம் சார்ந்த , முறுகிய குழு சார்ந்த அரசியல் காஷ்மீரில் எழலாயிற்று.

இந்த ‘சிறப்பு தகுதி ‘ இந்திய சட்ட அமைப்பு வழங்கியபின், காஷ்மீரின் தலைமை தம் ‘ பிற்பட்ட ‘ மாநிலத்திற்கு மேலும் மேலும் நிதி உதவியைக் கோரி நின்றார்கள். நேருவும் பின்பு இந்திரா காந்தியும் அளித்த உதவி எங்கே சென்று மறைந்ததென்றே தெரியாத படி தொலைந்து போயிற்று. ஊழல், நிர்வாகச் சீர்கேடு, தொலைநோக்கின்மை, இனக்குழுவாதம், வீண் செலவுகள் என்று இந்த உதவி வீணாயிற்று. இதன் மூலம் ஏற்பட்ட பெரும் பாதகம் மைஅய அரசுக்குப் புலப்படவில்லை., காஷ்மீரி முஸ்லீம்கள் வணிகத்தில் பணக்காரர்கள் ஆனார்கள் – மத்திய தர வர்க்கமும் வளர்ச்சி பெற்றது. அவர்களின் செல்வக் கொழிப்பு எல்லாருக்கும் தெரியும்படியாய் இருந்தது.

காஷ்மீரின் அதிகார வர்க்கம் தான் இப்படி மைய அரசு அளித்த ஐந்தாண்டுத் திட்ட உதவி, மானியம் எல்லாவற்றையும் பங்கு போடப் பொறுப்பேற்றது. காஷ்மீரின் உயர் வர்க்கத்தில் இவர்கள் தான் இருந்தார்கள். அவர்கள் தகுதியினாலோ, நிர்வாகத்திறமையினாலோ செல்வம் படைத்தவர்கள் ஆகவில்லை – ‘நசுக்கப் பட்ட மக்களு ‘க்குக் கிடைத்த உதவியை விழுங்கித்தான் இப்படி ஆனார்கள். பிரிவினை என்ற ‘பிளாக் மெயில் ‘-இல் ஈடுபட்டிருந்தவர்களின் ஆதரவில் உயிர்த்திருந்த அரசியல் வாதிகளின் கூட இவர்கள் இணைந்து கொண்டனர்.

இப்படித்தான் காஷ்மீர் பள்ளத் தாக்கின் உயர்வர்க்க முஸ்லீம் உருவாகியது. திருமண உறவு, வணிக உறவு, அரசியல் உடன் பாடு என்று ஏற்பட்ட ஒரு பிணைப்புத்தான் அவர்களை ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தருகிற முறையில் வளரச் செய்தது. ஒரு நூறு குடும்பங்களே அரசியலிலும், வியாபாரத்திலும் முன்னணியில் நின்றது. ஆட்சி மாற்றம் இவர்களை எதுவுமே செய்ய முடியவில்லை. பிணைப்பு அவ்வளவு உறுதியாய் இருந்தது.

இந்தச் சுரண்டல் பேர்வழிகள் பெற்ற வசதிகள் சாமானிய மக்களிடமிருந்து இவர்களை அன்னியப் படுத்தியது. இவர்கள் கிடைத்த எல்லாவற்றையும் சுருட்டிக் கொள்ள சாமனியர்கள் வறுமைப் பட்டார்கள்., இவர்களின் மகன் மகள்களே அரசு வேலை, கல்வி நிலையங்கள், வங்கிக் கடன்கள் எல்லாம் பெற்று கொழித்தார்கள். சாமானியர்கள் பாவம், பியூன் வேலை கிளார்க் வேலை கிடைத்தாலே அதிகம் .

காஷ்மீர் பணக்காரர்கள் பெரும் தோட்டமும், எஸ்டேட்களும் வாங்கினார்கள். காஷ்மீர் மட்டுமல்லாமல் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் கட்டடங்களை வாங்கிக் குவித்தார்கள். ஜம்மு காஷ்மீரில் ஏகத்துக்குச் சொத்து இருந்தாலும் கூட, ஐ ஏ எஸ், ஐ பி எஸ் ஆட்களுக்கு இந்தியாவில் பிற இடங்களில் வீட்டு மனைகள் ஒதுக்கப் பட்டன. இதைத் தடுக்க முயன்ற ஜக் மோகன் , காஷ்மீரி அதிகாரவர்க்கத்தின் கோபத்திற்கு ஆளானார். இன்றைய முதல் மந்திரி ஃபரூக் அப்துல்லா கூட ஜக்மோகன் மேல் பாய்ந்தவர் தான்.

இந்த படாடோபமான வாழ்க்கை கீழ் மத்திய தர வர்க்கத்தின் மீது செலுத்திய பாதிப்பு, ஏமாற்றமாய் இருந்தது. இஸ்லாமின் ஸ்தாபகர் கற்பித்த எளிமை, சமத்துவம் பெரும் ஆறுதலை அளிக்க வல்லதாய் இருந்தது. இந்த வாய்ப்பிற்காகத் தான் ஜமாத்-இஸ்லாமி காத்திருந்தது. சமூக நீதியைத் தன் நோக்கம் எனக் கூறிக்கொண்டு ஜமாத் இஸ்லாமி குரான், இஸ்லாம் போதனைகளுடன் சேர்த்து, பணக்காரர்களின் வாழ்க்கை ‘இஸ்லாமிற்கு எதிரானது ‘ என்று பிரசாரம் செய்யத் தொடங்கியது.

அன்னியமாய் உணர்ந்த கீழ் மத்திய தர வர்க்கத்தினரும், வறியவரும் இதில் புகலிடம் தேட, ஜமாத்-இஸ்லாமி உளவியல் ஆயுதத்தைச் சரியாகப் பிரயோகித்தது. சம்பிரதாயங்களை எளிமைப் படுத்தி, திருமணம் கூட ஒரு தேநீர்க் கோப்பையும் – ரொட்டித் துண்டும் கொண்டு செய்தால் போதும் எனக் கூறியது. செல்வர்களின் ஆடம்பரத்தைக் கண்டனம் செய்தது. இதில் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் இந்தச் செல்வர்களை , தண்டிக்க சமூகப் பிரஷ்டம் செய்ய வேண்டும் என்று கோரினர்.

பிரிவினை மிகத் தெளிவாகவே இருந்தது – ஒரு புறம் புறக்கணிக்கப் பட்ட மக்கள், இன்னொரு புறம் சலுகைகள் பெற்று செல்வரான மக்கள். 70-களின் இறுதியில் மக்களுக்கு எதிரான வர்க்கம் சரியாக அடையாளம் கண்டு கொள்ளப் பட்டது. ஜமாத் சார்ந்த பலரும் , இதே காரணத்தினால், ஜம்மு காஷ்மீர் சொற்பச் சம்பளம் பெறும் ஊழியர் சம்மேளனத்தில் இணைந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கீழ்மட்ட ஊழியர்களின் கேள்வி இது தான் : ‘புது தில்லி தான் தரும் பணம் இப்படி ஒரு சிலர் கையில் போய்ச் சேர்வது தெரிந்திருந்தும் ஏன் கொட்டிக் கொடுக்கிறது ? ‘ இந்தக் கேள்வியின் பதிலாக அவர்கள் கொண்டது : ‘ இந்தச் செல்வர்களை உபயோகப் படுத்தி காஷ்மீரைத் தன் கைக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று புது தில்லி எண்ணுகிறது. இதை எப்படி மறுக்க முடியும் ?

‘சமூகச் சீர்திருத்தம் ‘ என்ற மெல்லிய போர்வையைக் கழற்றி எறிந்த ஜமாத் , இஸ்லாம் ஒன்றே சமூக பொருளாதார சமத்துவம் அளிக்க முடியும் என்று பிரசாரம் செய்யத் தொடங்கியது. சூனி பிரிவைச் சேர்ந்த இமாம்கள் பீஹார், உ பி போன்ற இடங்களிலிருந்து வந்து மதச் சார்பின்மையையும், ஜன நாயகத்தையும் தாக்கத் தொடங்கினர். இந்தியச் சட்ட அமைப்பு இஸ்லாமிற்கு எதிரானது என்று பிரசாரம் செய்யத் தொடங்கினர். ‘இஸ்லாமின் சமூக – மனிதாபிமானப் பார்வை கொண்ட முகத்தை ‘ கீழ் மத்திய தர வர்க்கத்தினருக்கு நம்பிக்கை ஒளி என அளிக்கத் தொடங்கினர். இந்த மத்திய தர வர்க்கத்தினர் இந்த வெளிச்சம் எட்டாத தூரத்தில் இருந்ததை உணரவில்லை. ஜமாத் பணியாளர்கள் சமூகச் சீர்திருத்தத்திற்குப் பாடுபடுவதாய்ச் சொல்லிக் கொண்டே மெள்ள அரசியலில் ஈடுபடத் தொடங்கினர். மதப் பிரசாரமும், கூடவே முஸ்லீம் அல்லாதவர்கள் மீது வெறுப்பை உமிழும் ஓர் அமைப்பாய் ஜமாத் மாறியது. பள்ளிகள் தொடங்கி , முஸ்லீம் அல்லாத மக்களை வெறுக்கப் பாடம் சொல்லித் தரப்பட்டது. மூளைச் சலவை செய்யப்பட்டு, குறிப்பாக கிராமத்தின் குழந்தைகள் மத வெறியூட்டப் பட்டனர்.

இந்த எதிர்ப்பை உணர்வைத் தெரிந்த மேல்வர்க்கத்தினர், விரைவாகவும், நுண்மையாகவும் செயல்பட்டனர். முதல் படியாக , முஸ்லீம் மக்களின் முதன்மையான கூடுமிடமாக, மசூதிகளைக் கைப்பற்றினர். மசூதி நிர்வாகக் குழுக்களில் ஊடுருவினர். பணமும் அளித்தனர். பாகிஸ்தானிகளின் தேசிய உடையான சல்வார் கமீஸ் அணிந்தனர். வீடு வீடாய்ப் போய் பணம் வசூல் செய்ய ஆரம்பித்தனர். இலாகாவின் தலைவர்கள், தலைமைச் செயலாளர்கள், கமிஷனர்கள் எல்லாம் ரசீதுப் புத்தகத்துடன் வீடு வீடாய் ஏறி இறங்கியதே ஒரு விசித்திரக் காட்சி.

உள்ளூர் மசூதிகளின் தொழுகை அழைப்பின் போது முதலில் இவர்கள் தான் ஆஜராகினர். மசூதி நிதிக்கு , ஒரு கல்வித் துறை இயக்குனர் தனக்குக் கீழ் வேலை பார்த்தவர்களின் முதல் சம்பள ஏற்றத்தை அளிக்கச் சொன்னார். பல இடங்களில் புதிய மசூதிகள் உருவாகின. அதிகார வர்க்கத்தினர் இந்த மசூதிகளின் இமாம்களுக்குப் பணம் அளித்து அவர்கள் கக்கும் விஷத்தை ஊக்குவித்தனர். சமூகச் சீர்திருத்த அமைப்புகளின் உள்ளேயும் ஊடுருவி , அதன் சமூகச் சிந்தனைகளைக் கொன்று போட்டு தூய இஸ்லாம் வேடத்தை அணிந்தனர். தாடி வைத்துக் கொண்டு, ‘கான் உடை ‘ என்று அழைக்கப் பட்ட பாகிஸ்தான் தேசிய உடையை அணிந்து , அலுவலகத்திற்கு ‘தொழுகைப் பாயுடன் ‘ வந்து அலுவலகங்களை சிறு மசூதிகள் ஆக்கினர். மதத்தைப் பய்ன படுத்தித் தம் மீதான விமர்சனங்களை முனை மழுங்கச் செய்து , தூய இஸ்லாமியர்களாய் வேடம் பூண்டனர்.

தூய முஸ்லீம்களாய்த் தம்மைக் கட்டமைத்துக் கொண்ட இவர்கள் புது தில்லியை வில்லனாய்ச் சித்தரித்து , இவர்கள் கஷ்டங்களுக்கு உண்மையான காரணமாய் புது தில்லியைச் சுட்டுவதன் மூலம் தம் மீதான தாக்குதல்களைத் திசை திருப்பி விட்டனர். புது தில்லி மதச் சார்பற்ற ஜன நாயகத்தின் குறியீடு என்பதை மறைத்து இந்து மேலாண்மையின் குறியீடு என்று பொய்ப் பிரசாரம் செய்தனர். மதவாத-இனவாத-பிரிவினைவாதப் போக்கிற்கு எல்லை தாண்டி பாகிஸ்தானிலிருந்து வரவேற்புக் கிடைத்தது – வரவேற்பு மட்டுமல்ல கட்டளைகளுக் செயல் திட்டங்களும் கூட பாகிஸ்தானிடமிருந்து பெறப் பட்டன். ஜமாத்தின் குறிக்கோள் அரங்கேறியது.

பிரிவினைவாதத்திற்கும், இனவாதத்திற்கும் சப்பைக் கட்டுக் கட்டக் கூடிய அறிவு ஜீவிகளும் , படித்த பெருமக்களும், காஷ்மீரின் மேல்தட்டு அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாகி , கட்டுக் கதைகளை புது தில்லியில் பரப்பினார்கள். அதிகார வர்க்கத்தினருக்கு எதிரான போராட்டம், கடைசியில், அதிகார வர்க்கத்தினாலேயெ கைப்பற்றப் பட்டு , மதம் சார்ந்த பிரிவினை இயக்கமாய் உருவெடுத்தது.

காஷ்மீரின் அதிகாரவர்க்கம் கட்டுப் படுத்தப் பட்டு, சட்டம் மீறிய வகையில் இவர்கள் சேர்த்த சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களைத் தண்டித்தால் தான், காஷ்மீரின் கீழ் மத்திய தர வர்க்கத்தினரின் நியாயமான கோரிக்கைகள் , ஒடுக்கப் படாமல், கவனிக்கப் படும் உணர்வைத் தர முடியும். இதே போல ஜமாத் இஸ்லாமி அமைப்புப் பின்னியிருக்கும் கொடூர வலைகளையும் பிரித்தெறிய வேண்டும் . அப்போது தான் காஷ்மீரின் பயங்கரவாதம் கட்டுக்குள் வரும்.

( INAV)

Sociological background of Kashmir seccessionist movement

THE ROLE OF MUSLIM ELITE

By K. N. Pandita

Series Navigation

கே. என். பண்டிதா

கே. என். பண்டிதா