போடோவை முழுக்க நிராகரியுங்கள்

This entry is part [part not set] of 20 in the series 20011202_Issue

பிரஃபுல் பித்வாய்


Prevention of Terrorism Ordinance என்ற POTO போடோ சட்டத்தைப் போல சமீபத்தில் வெறெந்த சட்டமும் இந்தியாவின் அரசியல், மற்றும் பத்திரிகை உலகில் பரபரப்பை உருவாக்கியதில்லை. இந்தியக்குடிமகனின் சுதந்திரத்தையும், நமது நீதித்துறையின் நியாயமுறையையும் குறி வைக்கிறது இந்தச் சட்டம். நமது பாராளுமன்றம் கூடியவுடன், இந்தச் சட்டத்தை முழுமூச்சாக எதிர்த்து இது முழுமையான சட்டமாகாமல் தடுத்து நிறுத்த வேண்டும். போடோ சட்டத்தை எதிர்க்க வேண்டிய காரணம், பயங்கரவாதத்தை எதிர்க்கக்கூடாது என்பதற்காக அல்ல, போடோ சட்டம், இன்னும் பல பயங்கரவாதிகளை உருவாக்கி விடும் என்பதற்காக. டாடா (TADA) என்ற சட்டம் எவ்வாறு பொறுப்பற்ற போலீஸ் வரம்பு மீறல்களுக்கு ஏதுவாக இருந்ததோ, சந்தேகக்கேஸ்களில் சாதாரண மக்களை பிடித்து நிரூபணமும், குற்றமும் இல்லாமலேயே எவ்வாறு பலர் சிறைக்குள் அடைக்கப்பட்டார்களோ அது போல இதுவும் இன்னொரு வரம்பு மீறலுக்கு அடித்தளம் அமைக்கிறது. இது இன்னும் பலரிடம் அரசுக்கு எதிரான சிந்தனையைத் தோற்றுவிக்கவும், அரசு சார்ந்த போலீஸ் துறையே பயங்கரவாதத்தில் ஈடுபட வழி வகுத்து ,எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும்.

போடோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது ஒரு புறம் இருக்கட்டும், போடோ சட்டத்தை சரியாகப் பயன்படுத்தினாலே சுதந்திரத்தை விரும்புபவர்கள் கவலை கொள்ள வேண்டும். போடோ டாடா சட்டத்தின் மறு பிறவி அல்ல. சில விஷயங்களில் போடோ சட்டம் டாடா சட்டத்தை விடப் பரவாயில்லை. உதாரணமாக, போடோ சட்டம் கலகச் செயல்களை ( ‘disruptive ‘ activities) கண்டிப்பதில்லை. இந்த சரியாக எழுதப்படாத டாடா சட்டத்தால், ஸ்டிரைக் செய்யும் மாணவர்களைக் கூட சிறைப்படுத்தலாம். பெயில் கிடைக்காமல் போனால், மாநில உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர வழி செய்கிறது. டாடா சட்டத்தின் படி உச்ச நீதி மன்றத்தில் மட்டுமே முறையீடு செய்ய முடியும். குற்றப் பத்திரிகையே இல்லாமல் சிறைப்படுத்த்க் கூடிய காலக்கட்டத்தை குறைத்திருக்கிற – . 90 நாட்கள். ஆனால் இதுவும் அதிக நாட்களே.

ஆனால், போடோ சட்டம், டாடாவைவிட எந்த விதத்தில் மோசம் என்றால், இதனது வீச்சு ‘பயங்கரவாத அமைப்புகளுக்கும் ‘, அதன் ஆதரவாளர்களுக்கும், அந்த அமைப்புகளின் அனுதாபிகளுக்கும் குறி வைக்கிறது. இதுவே போடோவின் மிகவும் மோசமான அம்சம். அரசாங்கத்துக்கு தொலைத்தொடர்புகளையும் பேசுவதை ஒட்டுக்கேட்கவும் அதிகாரம் அளிக்கிறது. சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் அரசாங்கத்துக்கு அதிகாரம் அளிக்கிறது. பயங்கரவாத வேலைகள் பற்றி விஷயம் தெரிந்து கொண்டு அந்த விஷயத்தை அரசாங்கத்திடம் சொல்லாமல் இருப்பவர்களை மிகவும் கடினமாகத் தண்டிக்கிறது. இது பத்திரிக்கை துறையில் இருப்பவர்களின் சுதந்திரத்தை மிகவும் தீவிரமாகப் பாதிக்கிறது. போடோ அரக்கத்தனமான ‘முன் கூட்டிய காவல் ‘ (preventive detention) சட்டம். இது நிரூபணத்தை குற்றவாளியிடம் தள்ளிவிடுகிறது. இது அரசியல் எதிர்ப்பாளர்களை நசுக்க ஏராளமான அதிகாரத்தை அரசாங்கத்திடம் அளிக்கிறது.

செக்ஷன் 3(1) ஒரு பயங்கரவாதியை ‘இந்தியாவின் ஒற்றுமை, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை பாதிக்கும் விருப்பத்துடன்.. ‘, வன்முறை செயல்களை ‘குண்டுகள் மற்றும் எரியக்கூடிய பொருட்கள், விஷங்கள்.. ‘ போன்றவற்றுடன், இறப்பு, காயம், அல்லது பாதகமான விளைவுகளை உருவாக்கவும், இந்தியாவின் பாதுகாப்புக்கோ அல்லது மற்ற விஷயங்களுக்கோ தேவையான ‘சொத்துக்களுக்கு ‘ அழிவு ஏற்படுத்த முயல்பவர்களாக சித்தரிக்கிறது. ‘மற்ற விஷயங்கள் ‘ என்ற வார்த்தை பல விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். ஆனால், குறைந்தபட்சம், ஒரு காரியம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த காரியத்துக்காக, மரண தண்டனையோ, ஆயுள்தண்டனையோ வழங்கப்படலாம். ஆனால், போடோவின் மூன்றாம் அத்தியாயம், மேற்கண்டதை குப்பையாக்கி, ‘பயங்கரவாத அமைப்புகள் ‘ என்ற வரிசையை குறிப்பிட்டு, பிற்சேர்க்கையில் குறிப்பிட்டுள்ள அமைப்புகள் என்று எழுதுகிறது. ஏற்கெனவே 23 குழுக்கள் இந்த வரிசையில் இருக்கின்றன. இந்த குழுக்கள் எந்தவிதமான பயங்கரவாதக் குற்றத்தையும் செய்திருக்க வேண்டாம். இவைகள் ‘பயங்கரவாதத்தை தூண்டவும் ‘, அல்லது ‘மற்றபடி பங்கு பெறவும் ‘ இருந்தால் போதுமானது.

மத்திய அரசாங்கம் எந்த ஒரு அமைப்பையும் தான் தோன்றித்தனமாக, ‘பயங்கரவாத அமைப்பு ‘ என்று பெயர் சொல்லிவிட்டால் போதுமானது. பிறகு அந்த அமைப்பு சார்ந்த உறுப்பினர்களையும், அதன் ஆதரவாளர்களையும், அந்த அமைப்பு உறுப்பினர்களுக்கு இடம் அளிப்பவர்களையும் சித்திரவதை செய்யலாம். ஒரு அமைப்பின் குறிக்கோளை ஆதரிப்பவர்கள் (sympathiser) 10 வருடம் கடுங்காவல் தண்டனை பெறலாம். உறுப்பினர்கள் ஒரு வன்முறை காரியத்தை செய்தாலோ செய்யாவிட்டாலோ அவர்களுக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை நிச்சயம். இந்த அமைப்புகளுக்காக பணம் சேர்ப்பவர்களுக்கு 14 வருடம் கடுங்காவல் தண்டனை.

அரசாங்கம் எந்த பேச்சையும் ஒட்டுக்கேட்கலாம். மின்னணு, கம்பியில்லாத்தந்தி, மின்னஞ்சல் போன்ற எந்த விஷயத்தையும், ஒரு பயங்கரவாதி என்று அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட ஒருவர் பேசுவதை கேட்கலாம். இது நீதிமன்றத்தின் முடிவல்ல, அரசாங்கத்தின் முடிவு என்பதைக் கவனியுங்கள். இவ்வாறு ஒட்டுக்கேட்கப்பட்ட விஷயங்கள் நீதிமன்றத்தில் சாட்சியங்களாகவும் சமர்ப்பிக்கலாம். இதை வைத்து மக்களை பயமுறுத்தவும் செய்யலாம். ஒரு சூப்பரிண்டண்ட் போலீஸ் ஒப்புதல்களை வற்புறுத்திப்பெற்று அவற்றைச் சாட்சியங்களாக சமர்ப்பிக்கலாம். இந்த அம்சம், பெருமளவு தவறானது. ரகசியமான முறையில் பெறப்பட்ட சான்றுகளும், போலீஸ் வளாகத்துக்குள் பயத்தாலும், வன்முறையாலும் பெறப்பட்ட வற்புறுத்தல் சாட்சியங்களும், தன்னைத்தானே குற்றம் சொல்லிக்கொண்ட சாட்சியங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது என்ற நீதியின் அடிப்படை அம்சத்தை இந்த அம்சம் தகர்க்கிறது.

நவீன நீதிமன்றப் பழக்கவழக்கத்தில் உள்ள ‘நிரூபிக்கும் வரை குற்றமற்றவன் ‘ என்ற அடிப்படை கருத்தை, நிரூபணத்தின் சுமையை குற்றவாளியிடமே கொடுப்பதனால் இந்த சட்டம் உடைக்கிறது. வருமானவரி சட்டம், போதைப்பொருள் சட்டம், சதி (விதவை தீக்குளிப்பு) சட்டம் போன்றவை நிரூபணத்தின் சுமையை குற்றவாளியிடம் கொடுக்கலாம். ஆனாலும், இதை வைத்து போடோவை நியாயப்படுத்த முடியாது. அவைகளின் விளைவுகளை ஒப்பிட முடியாது. உதாரணமாக உங்களது வங்கி கணக்கு ஏராளமான பணம் இருப்பதாக காட்டினால், உங்களது வருமானத்தை வருமான வரி அதிகாரிகளிடம் நிரூபிக்க வேண்டும். போடோவில் போல நீங்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள். பெரும்பாலான சட்டங்கள் தீர்வுக்கு வழியைத் தருகின்றன. போடோவில் இல்லை. நீங்கள் என்ன நடக்கிறது என்று உணருமுன்பே சிறையில் அடைக்கப் படுவீர்கள்.

யாருக்கும் பயங்கரவாத செயல் முன் கூட்டியே தெரிந்திருந்து அதனை போலீஸிடம் சொல்லாமல் இருந்தால் அவர்களைத் தண்டிக்க போடோ செக்ஷன் 3(8)வும் செக்ஷன் 14வும் இருக்கின்றன. இது தவறாக விடுபடுவதை (omission) தண்டிக்கிறது. போலீஸ் தொந்தரவுக்கு பயந்து சாதாரண குற்றங்களுக்குக் கூட சாட்சியமாக வராத மக்களை, போலீசுக்கு விஷயம் சொல்லவேண்டி கட்டாயப்படுத்துகிறது. இதனை, செய்திகளைச் சொல்லவேண்டி கட்டாயப்படுத்தும், குற்றச்சட்டம் செக்ஷன் 39வும் ஒப்பிடுவதும் தவறு. இந்தச் சட்டமும் இந்தியக் குற்றச்சட்டம் செக்ஷன் 377 போல (ஓரினப்பாலுறவு சம்பந்தப்பட்டது) பெரும்பாலும் பயன்படுத்தாத சட்டம்.

செக்ஷன் 14வும், செக்ஷன் 3(8)வும் ‘பயங்கரவாதிகளையோ ‘ அல்லது ‘அதன் ஆதரவாளர்களையோ ‘ பேட்டி எடுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஒரு சட்டம். இந்தச் சட்டம் இப்படிப்பட்ட பத்திரிக்கையாளர்களை 3 வருடம் கடுங்காவல் தண்டனை கொடுத்து அவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க உதவும். பத்திரிக்கையாளர்கள் தங்களிடமுள்ள செய்திகளைக் கொடுக்கவேண்டுமென்ற கட்டளைக்குப் பொருள், செய்திகளைப் பெறுவதற்கான உரிமையை, சரியாக நிர்ணயம் செய்யாத ‘நாட்டுக்கு செய்யவேண்டிய கடமை ‘க்கு எதிராக வைக்கிறது. பத்திரிக்கையாளர்களது உரிமைகளும், போலீஸ் உரிமைகளும் முரண்பட்டு நிற்கும் வாய்ப்புகள் மிகவும் அரியவை. அபூர்வமாக, எப்போதோ நடக்கப்போகும் ஒரு விஷயத்தை வைத்து சட்டம் எழுதுவது சரியல்ல. போடோவுக்குள் வந்தால் என்ன செய்வதென்று கருதி, ‘பாதுகாப்பாக ‘ இருக்க விரும்பும் பத்திரிக்கையாளர்கள் சில பல விஷயங்களைப் பற்றி எழுதவே மாட்டார்கள். இதனால், பொதுமக்களுக்குத்தான் முக்கியமான விஷயங்கள் தெரியாமலே போக இது வழி வகுக்கும்..

இருந்தும். எல் கே அத்வானி, இந்த போடோ சட்டம் ‘வெற்றி-வெற்றி ‘ எனக் குவிக்கும் எனப் பார்க்கிறார். இது நிறைவேறினால், தேசீய ஜனநாயக முன்னணி அரசு தன்னிடம் அளப்பரிய அதிகாரங்களைக் குவித்துக்கொள்ளும். இது நிறைவேறவில்லை என்றால், எதிர்க்கட்சிகளை ‘வெற்றிகரமாக ‘ குறை சொல்லலாம். உண்மையில் இது ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் ‘தோல்வி-தோல்வி ‘ நிலைமை. அரசு பயங்கரவாதத்தால் வரும் சமூகச் சீர்கேட்டுக்கு எதிராக வந்த மோசமான பதில். வெகுகாலம் ஸ்வயம்சேவக்காக இருக்கிற என் எம் காடகே (இவர் சிறந்த படிப்பாளர் என்பதற்கு ஆதாரம் இவர் வாஜ்பாயி அவர்களின் பேச்சுக்களை தொகுத்ததே) போன்றோரை உறுப்பினராகக் கொண்டதால், பழைய சட்ட கமிஷனின் மோசமான இழிவாகப் போன சட்ட கமிஷனின் 173ஆவது அறிக்கையை அடிப்படையாகக் கொண்டுவந்திருக்கிறது. இந்த சட்ட கமிஷன் அறிக்கை ‘அடிப்படைவாத பயங்கரவாதிகளை ‘ பற்றி பேசுவதன் மூலமும், கலவரங்களின் போது ‘இந்துக்குடும்பங்கள் ‘ பெறும் கஷ்டத்தைப் பற்றி பேசுவதன் மூலமும், ‘பம்பாய் வெடிப்புகளை ‘ பற்றி பேசுவதன் மூலமும் (பாப்ரி மசூதியைப் பற்றி பேசாமலும்), முஸ்லீம் பயங்கரவாதிகளைப் பற்றி பேசுவதன் மூலமும் தன் குழுச்சார்பைத் தெளிவாகச் சொல்கிறது. இந்த மனச்சார்பை சட்டத்துக்குள்ளும் ஏற்றிக்கொண்டுவிட்டது அரசாங்கம். போடோ மூலம் பாஜக, சிறுபான்மையினரை அச்சுறுத்தவும், சமூகங்களைப் பிரிக்கவும், முக்கியமாக உத்தர பிரதேசத்தில், பயன்படுத்தப்படும்.

அரசாங்கம் டாடா சட்டத்தின் விளைவிலிருந்து ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சட்டத்தின் மூலம் சுமார் 76,036 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் மூன்றில் இரண்டு பங்கினர் ஒரு குற்றமும் சாட்டப்படாமல் விடுவிக்கப்பட்டார்கள். இந்த டாடா சட்டத்தின் கீழ் உண்மையிலேயே குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர்கள் சுமார் 0.9 சதவீதம் மட்டுமே. குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மிகவும் அதிகமாக டாடா பயன்படுத்தப்பட்டது. இதில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள், தொழில் சங்கத்தினர், பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இன்னும் அரசாங்கத்துக்கு வசதியாக இல்லாமல் இருப்பவர்கள் போன்றவர்களே. 1995இலேயே டாடா சட்டம் மரியாதை இழந்துவிட்டது. தேசீய முன்னணி ஆட்சிக்கு வரும் வரை வேறு யாரும் இதற்குப் புத்துயிர் கொடுக்கக்கூட சிந்திக்கவில்லை. செம்டம்பர் 11 படுகொலைக்குப் பின்னர், பாராளுமன்றத்துக்கு கொண்டுவராமலேயே இந்தச்சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. அரசாங்கம் பாராளுமன்ற கமிட்டிகளுக்குச் சொல்லக்கூட இல்லை.

போடோ போன்ற சட்டங்கள், அமைப்புக்கு அதிக பளு ஏற்றி, அமைப்பையே கெடுத்து விடுகின்றன. தேசீய மனித உரிமைகள் கமிஷன் சொல்வது போல, பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், இந்தியாவின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் காப்பாற்றவும் ஏராளமான சட்டங்கள் இருக்கின்றன. இந்தியகுற்றப்பிரிவின் இபிகோ செக்ஷன் 153-B, வெடிப்பொருட்கள் சட்டம், ராணுவ சக்திகள்(சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்.1958, சட்டத்துக்கு மீறிய காரியங்கள் சட்டம், 1967 இன்னும் நான்கு மத்திய பாதுகாப்பு சிறை சட்டங்கள் இன்னும் பல மானிலச் சட்டங்கள். ஆனால், இந்த அரசாங்கம் இன்னுமொரு சட்டத்தை கொண்டுவரத்துடிப்பதன் காரணம், போலீசுக்கு குற்றங்களை ஆராயத் தேவையில்லாத நிலையை உருவாக்க விரும்புவதே. இது இன்னும் மோசமான போலீஸ் தாக்குதல்களையே ஊக்குவிக்கும். ஏற்கெனவே போலீஸ் பல குற்றங்களை ஆராய்வதும் இல்லை, குற்றவாளிகளைக் கைது செய்வதும் இல்லை.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் அரசாங்கங்களில் ‘பாதுகாப்புச் சிறை ‘ (சந்தேகக்கேஸ்) சட்டங்கள் இருக்கின்றன என்று வாதிடுவது சரியல்ல. எல்லா இடங்களிலும் இருக்கும் இது போன்ற சந்தேகக்கேஸ் சட்டங்கள் போக வேண்டும். டாடா இல்லாமல் இருந்திருந்தால், ராஜீவ் காந்தி கொலையாளிகள் தப்பித்திருப்பார்கள் என்று அருண் ஜெட்லி வாதிடுவதும் அவலமானது. ஏற்கெனவே உச்சநீதி மன்றம் டாடா சட்டம் அதற்குப் பொருந்தாது என்று அறிவித்து விட்டது. கடைசியில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரில் 7 பேர் தவிர எல்லோரையும் விடுவித்து விட்டது. அந்த நான்கு பேரையும் ‘கொலைக்குற்றம் ‘ என்றுதான் குற்றம் சாட்டியது.

டாடா போடோ போன்ற சட்டங்கள் நம் உரிமைகளை நசுக்குவது மட்டுமல்ல, நம் ஜனநாயக உள்ளுணர்வுகளையும் பாதிக்கின்றன. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது அதிகாரத்தையும் அளவுக்கு மீறிய சக்தியையும் பயன்படுத்துவதால் முடியாது. ஸ்லீமென் என்ற பிரிட்டிஷ் போலீஸ்காரர் ‘தக்கி ‘ (மொ.கு: வட இந்தியாவின் குற்றப்பரம்பரையினர்) பிரச்னையை தக்கிகளை கொல்வதனால் தீர்க்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்தி அவர்களது குற்றத்தை நிரூபிப்பதன் மூலமே அந்தப் பிரச்னையை முடித்தார். பஞ்சாப் பயங்கரவாதத்தின் முடிவு, அவதார் சிங் சந்து போன்றவர்களை கொன்றதனாலும், ராணுவ குழுக்கள் நம்பர் எழுதாத ஜீப்புகளில் கிராமம் கிராமமாகச் சென்று பயமுறுத்தியதனாலும், வரவில்லை. அது பஞ்சாபின் பயங்கரவாதிகளை அரசியல் ரீதியான முறையில் அணுகியதாலும், அவர்களை கற்பழிப்பாளர்கள் என்றும், பணம் பிடுங்குபவர்கள் என்றும் வெளிப்படுத்தியதால் முடிந்தது. நாகா பிரச்னை முடிந்தாலும் அது பேச்சுவார்த்தைகள் மூலமாகவே முடியும். இந்தியாவில் இருக்கும் சட்டங்கள் பிரச்னைகளை தீர்க்க போதுமானவை. இதற்கு சந்தேககேஸ் சட்டங்கள் வேண்டாம். பழைய சட்டங்களை பிரயோகிப்பவர்களே சரியானபடி இதை பயன் படுத்த இயலாதவர்கள் என்பது தான் விஷயம். . இவர்கள் கட்டுக்குள் வரவேண்டும். போடோ சட்டம் தூக்கி எறியப்பட வேண்டும்.

Series Navigation

பிரஃபுல் பித்வாய்

பிரஃபுல் பித்வாய்