காபூல் நாட்குறிப்பு – வாழ்க்கையே ஒரு திரைப்படம்

This entry is part [part not set] of 20 in the series 20011202_Issue

பெபெ எஸ்கோபார் (ஆசியா டைம்ஸ் இதழிலிருந்து)


பாக்தார் சினிமா கட்டடத்தின் முன்னர் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. இது செவ்வாய் காலை, நவம்பர் 20. கூட்டமோ பைத்தியக்கார கூட்டம் போல கலவரமாக இருந்தது. எல்லாம் எலான் என்ற இந்திப்படத்தின் மெட்னி ஷோ பார்க்கத்தான்.

பாக்தார் நேற்றைக்கு முந்தைய நாள்தான் திறந்தது. காபூலில் தாலிபான் இருந்த 5 வருடங்களாக மூடிக்கிடந்தது. திறந்ததும் அதுவே காபூலின் மிகவும் பெரிய காட்சி. சினிமாவில் சுமார் 650 பேர்தான் உட்காரலாம். ஆனால் அதன் முன்னர் கூட்டமோ சுமார் 5000த்துக்கும் மேல் நின்று அந்த காலைக்காட்சியைப் பார்க்க அலை மோதிக்கொண்டிருந்தது.

ஒரு டிக்கெட் சுமார் 5000 ஆஃப்கானி பணம். (அதாவது சுமார் 5 ரூபாய்). கூட்டத்துக்குள் காணாமல் போன நஸீம் என்பவருக்கு அவரது உற்சாகத்தைக் தடைபோட முடியவில்லை. கடைசியாக அவர் பார்த்த படம் ராம்போ-4. ‘இங்கே எந்தவிதமான வாழ்க்கையும் இல்லை. இப்போது மீண்டும் பிறந்தது போல இருக்கிறது. எங்களுக்கு என்னவோ இதுவரை இறந்திருந்தது போல இருக்கிறது ‘

பாக்தார் சினிமா கட்டடத்தின் உள்ளே அங்கங்கே பழைய இந்திப்படங்களின் போஸ்டர்கள் கிழிந்து தொங்குகின்றன. ஆதீஷ் (சஞ்சய் குப்தா இயக்கியது), சதக் (மஹேஷ் பட் இயக்கியது) காலி கங்கா (ராஜ் சிப்பி இயக்கியது). தாலிபானின் கலாச்சார படுகொலையிலிருந்து சுமார் 40 சினிமா பிரதிகள் தப்பியிருக்கின்றன. சாலே முகமது என்ற பாக்தார் சினிமாவின் சொந்தக்காரர் இதுவரை சட்டிப்பானைகளை விற்றுக்கொண்டிருந்தார். இந்த சினிமாக்கட்டிடம் அவருக்குச் சொந்தமானது – கடந்த 28 வருடங்களாக. தாலிபான் இந்த காபூல் நகருக்குள் நுழைந்தபோது அவர் சிறைப்படுத்தப்பட்டு 22 நாட்கள் கடுங்காவலில் வைக்கப்பட்டிருந்தார். சினிமா மூடப்பட்டது. அவர் 5 லட்சம் ஆஃப்கன் பணம் ஈட்டுத்தொகையாக கட்ட வேண்டியிருந்தது. ‘தாலிபானால் நான் ஒரு குற்றவாளியாகிவிட்டேன் ‘ என்றார்

அசாதாரணமான குணசித்திரங்கள் மனித, இரும்பு வேலிகளைக்கடந்து திரைக்கு முன்னர் வந்து உட்கார்கின்றன. போர்வீரர்கள், மிகவும் காயம்பட்ட சிதிலமடைந்த மனிதர்கள், குழந்தைகள், தாஜிக் இன மக்கள், ஹஜாரா இன மக்கள்.. ஆகிய எத்தனையோ பேர். இவர்களில் பலர் போர்வைகளையும் ‘மேட் இன் சைனா ‘ போட்ட அசிங்கமான தோல் ஜாக்கெட்டுக்களையும் போட்டுக்கொண்டு குழுமுகிறார்கள். வேர்த்து வழியும் இந்த மனிதக்கடலின் உள்ளே ஒரு பெண்மணியோ பெண் குழந்தையோ இல்லை. அப்படியே யாரும் இருந்தாலும், இந்த கூச்சல் குழப்பம் ஆரவாரத்தைத் தாண்டுவது கஷ்டம்.

ஒரு காவலாளி என்னிடம் கூறுகிறார், ‘நாங்கள் மக்களை அடிக்கும்போது படம் எடுக்காதீர்கள் ‘. உண்மையிலேயே மக்கள் இரக்கமின்றி குச்சியாலும், சவுக்காலும் அடிபடுகிறார்கள். எல்லோரும் ஏதேனும் ஆயுதம் வைத்திருக்கிறார்களா என்று காவலாளிகளால் பரிசோதிக்கப்படுகிறார்கள். இந்த அவசர அடி பாதுகாப்புகுழு இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர், நான்கு முட்டி உடைப்பான்கள், 14 கத்திகள், 8 ரேடியோக்கள் ( ‘உள்ளே குண்டு இருக்கலாம் ‘), அப்புறம் கசாப்பு கத்திகள். வட முன்னணி போர்வீரர்கள் தங்களது இயந்திர துப்பாக்கி குண்டுகளை காவலாளிகளிடம் கொடுத்துவிட்டு துப்பாக்கிகளை வைத்துக்கொள்கிறார்கள். பிராந்திய போலீஸாரும் இப்படியே தங்களது குண்டுகளை காவலாளிகளிடம் கொடுத்து விடுகிறார்கள். இந்த பைத்தியக்கார கூச்சல் குழப்பத்துக்கிடையில் எல்லோரும் போதை மருந்து சாப்பிட்டாற்ப்போல சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒரு ஆள் கத்துகிறான் ‘ இந்த ஆறு வருடங்களாக ஒரு சினிமா பார்க்க விரும்பினேன். ரொம்ப நல்லது. ரொம்ப நல்லது ‘

பாக்தார் சினிமா இப்போது நல்ல வியாபாரத்தில் இருக்கிறது. தினம் மூன்று அல்லது நான்கு காட்சிகள். ஆயிரக்கணக்கானவர்களை ராம்போ-4, ஜாக்கி சான் படம், பழையா ஆஃப்கன் படமான் உரோஜ் போன்றவை ஓடுகின்றன. உரோஜ் படத்தின் போஸ்டரில் கெட்ட கம்யூனிஸ்ட் ஒரு வாட்கா சாராய பாட்டிலை ஏழையின் தலையில் உடைப்பதாக இருக்கிறது. மேனேஜர் தன் கையில் இப்போது இருக்கும் ஏராளமான பணத்தைக்கொண்டு புதிய இந்தியப்படங்களை இறக்குமதி செய்யப்போவதாகச் சொல்கிறார். ‘அமெரிக்கப்படங்கள் விலை அதிகம் ‘

விடுதலை செய்யப்பட்ட காபூலில் வாழ்க்கையே ஒரு சினிமா போல. அசாதாரணமான கதைகளும், திடுக்கிடும் திருப்பங்களும் நிறைந்த தனிமனிதர்களின் வரலாறு ஃப்ரெடெரிக்கோ ஃபெலினியைக் கூட பைத்தியமடித்துவிடும். கோகோசார் என்ற ஈரானிய பாடகரின் பாடல்கள் எல்லா ஒலிநாடாக்கடைகளிலும் அதிகமாக விற்கிறது. துணைக்கோள் தட்டு (satellite dish) தொழிற்சாலை ஒரு நாளைக்கு 25 தட்டுக்களை உற்பத்திச் செய்கிறது. எல்லாமே விற்றுப்போய்விடுகிறது. ஆஃப்கானிஸ்தான் சிட்டி வங்கியின் முன்னர் ஒரு காவலாளி ராக்கெட் லான்சர் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்கிறார். உள்ளே ஒரு பணமும் இல்லை. எல்லா மக்களும் தங்களது பணத்தை தங்களிடமே வைத்துக்கொண்டிருந்தார்கள் தாலிபான் காலத்தில். அதைச் செலவு செய்யவும் இல்லை. செலவு செய்யவும் ஒன்றும் இல்லை. இப்போது எல்லோரும் வானொலியும், ஒலிநாடாக்களையும், துணைக்கோள் தட்டுக்களையும் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்துல் அஜீஸ் பக்ஷி என்ற மின்னியல் பொறியாளர் – உஸ்பெகிஸ்தானில் பட்டம் பெற்றவர் — திறந்த வெளிச் சந்தையில் சீனாவிலிருந்து வந்த பழைய துணிகளை விற்கிறார். அருமையாக ஃப்ரெஞ்ச் மொழி பேசுகிறார். காபூலின் புகழ் பெற்ற இஸ்திலிகால் பள்ளியில் பயின்றவர் அவர். வடக்குக் கூட்டணியின் , கொல்லப்பட்ட தலைவர் அஹமது ஷா மசூத் , இவருக்கு ஒரு வருடம் முன்னால் அதே பள்ளியில் பயின்றவர். ஃப்ரெஞ்ச் தொண்டு நிறுவனம் ‘ஆக்டெட் ‘ என்ற அமைப்பில் வேலை செய்தவர். கிட்டத்தட்ட சந்தையில் ஒரு நாளைக்கு இப்போது 4 லட்சம் ஆஃப்கானி(ரூபாய் 450) சம்பாதிக்கிறார். அவருடைய குடும்பத்தினருக்கும் ஃப்ரெஞ்ச் பயிற்றுவிக்கிறார். இப்போது சந்தைக்குப் பெண்கள் தாமாகவே வந்து பொருட்கள் வாங்குவது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தாலிபன் தொந்தரவில்லை. மறுபடி ஃப்ரெஞ்ச் நிறுவனத்தில் பணி புரிய ஆவலாய் இருக்கிறார்.

ஹஜதுல்லாவின் ரொட்டிக் கடை உலக உணவுத் திட்டத்தின் கீழ் ஐந்து மாதம் முன்னால் வரையில் இயங்கி வந்தது. கடந்த எட்டு வருடமாய் மிகப் பெருமிதத்துடன் இந்த ரொட்டிக்கடையை ஹஜதுல்லா நடத்தி வந்திருக்கிறார். இவர் பஞ்சசிரி வகுப்பைச் சேர்ந்தவர். மாவை உலக உணவுத் திட்டம் வழங்கி வந்தது. தாலிபன் வந்தவுடன் இது நிறுத்தப் பட்டது. அதனால் கிட்டத்தட்ட 950,000 ஆஃப்கானிகள் (ரூபாய் 1000) 10 கிலோ மாவிற்குச் செலவிட வேண்டும். பதினொரு பேரை வேலைக்கு அமர்த்தி அவர் , தினமும் 2000 நான் ரொட்டியை விற்கிறார். உலக உணவுத் திட்டம் உதவினால், ஏழைகளுக்கும் உதவலாம் என்கிறார்.

தாலிபன் புரிந்த பெண்கொடுமை, காபூல் முழுவதும் பல காயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தும் காபூல் வாசிகளின் ஆர்வச் செயல்களை அவர்களால் தகர்க்க முடியவில்லை. 15 வயதான சபீரா கபுலின் ஒரு மதச் சார்பற்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள். சரியாக திரை அணியவில்லை என்பதால் தாலிபனால் அடிக்கப் பட்டவள். ஆனால் அவள் தாலிபனை இனிமையான முறையில் பழி வாங்கினாள். அவளும் , மற்ற 17 சிறுமிகளும் சேர்ந்து கடந்த ஒரு வருடமாக தினமும் 4 மணி முதல் 5 மணி வரை ஷாரியத் சட்டத்திற்கு எதிரான, தீவிர சதித் திட்டத்தில் ஈடுபட்டனர் : அது ஆங்கிலம் கற்றுக் கொள்வது. தினமும் அவர்கள் , 27 வயதான ஒரு ஆசிரியையின் கீழ் ஆங்கிலம் பயின்றனர். வாராவாரம் தாலிபன் வரும் நேரம் மட்டும், குரான் படிப்பது போல் பாவனை.

சமீரா சொல்கிறாள் : ‘ எங்கள் ஆசிரியர்கள் அற்புதமானவர்கள். நாங்கள் மிக மகிழ்ச்சியாய் இருந்தோம். ஆனால், தாலிபன் மூன்று மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்தை மூடி விட்டார்கள். ரொம்பப் பொறாமை கொண்டவர்கள் அவர்கள். ‘ அவளுடைய ஆங்கில ஆசிரியை இப்போது இல்லை. – லோகார் பகுதிக்குச் சென்றிருக்க வேண்டும். இனி அதிகார பூர்வமாய்ட் திறக்கப்பட விருக்கும் பள்ளியில் அவள் கல்வி தொடரும் என்று சமீரா நம்புகிறாள்.

கமீலா யல்தாலி என்ற பெண்மணி ரொம்பப் பயங்கரமான ஆள் – ப்ரெக்டின் நாடகம் ‘துணிச்சலுள்ள அம்மா ‘ என்ற நாடகத்தில் வருகிற அம்மாவைப் போல. கமீலா தானே முன்வந்து ஐந்து வருடம் முன்பு இந்தப் பள்ளியை -தாலிபன் அரசாங்கம் அமைத்தவுடன் – ஆரம்பித்தாள். அபோது வெறுமே நான்கு மாணவர்கள் தான் – அவள் மகன் அனிலையும் சேர்த்து . தாலிபன் காபுலை விட்டுத் துரத்தப்படும் போது 180 பேர் மாணவர்கள் இருந்தார்கள். 120 பேர் 5 லிருந்து 17 வயது வரையிலான பெண்களும் இதில் அடக்கம்.

மிக ஆபத்தான வேலை இது. கமீலா வடகிழக்குப் பகுதியில் படக்ஷான் பகுதியைச் சேர்ந்தவள் – அதனால் வடக்குக் கூட்டணிக் காரி என்று தாலிபன் சந்தேகப் பட இடம் இருந்தது. ஆரம்பத்தில் அவளுடைய வீடு பூட்டப்பட்டு , வீட்டில் இருந்த சாமான்கள் எல்லாம் தாலிபனால் திருடப் பட்டது. அவள் மனம் தளரவில்லை. மாணவர்கள் எல்லோரும் தானாகவே, ஒவ்வொருவராக , ஒளிந்து ஒளிந்து , பள்ளிக்கு வந்தார்கள். ‘இருந்தாலும் தாலிபன் அடிக்கடி வருவார்கள். குரான் தான் சொல்லிக் கொடுக்கிறோம், கூடவே தையல் வேலையும் சொல்லிக் கொடுக்கிறோம்- என்று சொன்னோம். ‘

தாலிபனின் உளவாளிகள் போன்ற பெண்களும் வந்து பள்ளியின் பாடத் திட்டம் பற்றி விசாரிப்பார்கள் என்று கமிலா சொல்கிறாள். ‘நான் அவர்களை ஏதாவது சொல்லி அனுப்பி விடுவேன். ‘ பள்ளியைச் சூழ்ந்துகொண்டு தாலிபன் காற்றில் சுடுவதும் உண்டு – இவர்களைப் பயமுறுத்த.

‘குழந்தைகளைக் காப்பாற்றுவோம் ‘ என்ற அமைப்பு அளித்த சில புத்தகங்கள் முன்னால் இருந்ததுண்டு — ஆனால், அடிப்படையில் ஆசிரியர்களே தாமே வாங்கியோ அல்லது உருவாக்கியோ பாடத்திற்கான உபகரணங்களைப் பயன் படுத்தினார்கள். ‘ தாலிபனுக்கு எதிரான ஒரு போராட்டம் தான் அது ‘ என்கிறாள் கமிலா.

உர்ஃஆன் பள்ளியில் பல பாடங்கள் உண்டு : தாரி மொழி, பஷ்டோ மொழி, ஜியோமிதி, கலை, தையல் இப்படி. கொல்லைப் புறத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பாடம் நடக்கும். 30 மாணவர்கள் இருந்தும் மிக அமைதியாய் இருந்தது வகுப்பு. புன்னைகையுடன் கமிலா சொல்கிறாள்: ‘ நான் சர்வாதிகாரியாக்கும். ‘

இப்போது உர்ஃபான் பள்ளியில் ஏற்பட்ப்போகும் மிகப் பெரிய மாற்றம் – இனி இது ரகசியப் பள்ளியாக இருக்காது. இப்போது அவர்களுக்கு எல்லாமே அவசியம்: ஆசிரியர்கள், புத்தகங்கள், விரிப்புகள். கமிலாவிற்கு ஒரு புதிய கணிப் பொறி வருமென்று மகிழ்ச்சி – அவள் மகன் அனில் – வயது 16 — அருகில் உள்ள பள்ளியில் இன்னும் எட்டுப் பேருடன் சேர்ந்து கணிப் பொறி பயில்கிறான்.

நகரின் இன்னொரு பகுதியில் 10 பெண்கள் புன்னைகையுடன், முகத்திரையில்லாமல் , மகிழ்வாய்ப் போகிறார்கள். சேர்ந்தே அவர்கள் நடக்கிறார்கள் – நிலைமை இன்னமும் பாதுகாப்பானதில்லை. சுற்றிலும் கலஷ்னிகோவ் துப்பாக்கிகளுடன் பஞ்ச் சிரி வகுப்பைச் சார்ந்த போர்வீரர்கள். இந்தப் பெண்களில் மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள் இருக்கிறார்கள். உலக உணவுத் திட்டம் என்ற அமைப்பிற்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது வேலை கிடைக்கலாம் என்று நம்பிக்கை இருக்கிறது. இதற்கு முந்திய தினம் தான் ஆயிரத்துக்கு மேலான பெண்கள் – முகத்திரையில்லாமல், உடல்திரையில்லாமல் – ஒரு ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள். புதிதாய்த் திறந்த ஆஃப்கானிஸ்தான் தொலைக்காட்டியில் இதையும் காட்டினார்கள். வேலை செய்யவும், கல்வி பயிலவும் பெண்களுக்கு உரிமை கோரிப் போராட்டம் அது.

சமூக ஏற்றத்தாழ்வு காபூலில் மனதை மிகவும் பிசைகிறது. சையது நபி ஹஷ்மி போன்றவர்கள் காபூலில் காண்பது அரிது. ஆரியானா விமானப் போக்குவரத்தில் அவன் விமான ஓட்டி. ஆஃகப்கானிஸ்தானின் அதிகார பூர்வமான விமான கம்பெனி இது. ஆனால் பொருளாதாரத் தடைகள் உள்ளன. ஹஷ்மி இரண்டு மாடிக் கட்டடத்தில் , அல் கைதாவின் விருந்தினர் மாளிகைக்கு முன்னால் , வசிக்கிறான். வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருக்கிறது. இளம் மனைவியும், மூன்று குழந்தைகளும் உண்டு. அதில் நான்கு மாதப் பையனும் ஒருவன். பெரிய பையனுக்கு ஏழு வயது. கணிப்பொறி பயில்கிறான் – வீட்டிலேயே. துபாயிலிருந்து கொண்டுவந்த செவெர்லே கார் ஓட்டுகிறான். காபூலிலே இருக்கிற ஒரே ஒரு செவர்லே கார் இது தான்.

சேரி என்று சொல்லத்தக்க பகுதியில் சந்தித்த நெளரியாவின் கண்களில் எல்லையில்லாச் சோகம். 35 வயதானவள். காபூல் வாசி. இளமையாய் இருந்த போது மிகவும் அழகாய் இருந்தவள் என்பது சுவரில் தொங்கும் ஒளிப்படங்களில் தெரிகிறது. இப்போது அவள் பிச்சை எடுத்துத் தான் ஐந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். அதில் ஒன்பது மாதமேயான குழந்தையும் அடக்கம். வீடு வீடாய்ப் போய் அவள் பிச்சை எடுக்கிறாள். ஆனால் எல்லோருமே ஏழை தானே. தினமும் கிட்டத்தட்ட இருபது ரூபாய் கிடைக்கும். அவளிடமிருந்த பொருட்களையெல்லாம் ஒவ்வொன்றாய் விற்றுவிட்டாள். பழைய துணியையும் அங்குமிங்கும் வாங்கி தெருவில் விற்கிறாள்.

நெளரியாவின் கணவன் , அட்டா முகம்மது, மஜார்-ஏ-ஷரீஃப்-இல் பஸ் ஒட்டியாய் வேலை பார்த்த போது, இடது காலில் தோட்டா துளைத்து, ஊனமாகிவிட்டான். இரண்டு வருடம் மருத்துவமனிஅயில் இருந்தும், காலை இழக்க வேண்டியதாயிற்று. கம்போடியாவில் ஊனமானவர்களுக்குத் தருவடு போல பிளாஸ்டிக் கால் கூட அவனுக்குக் கிடைக்கவில்லை.

இதனால், நெளரியா பிச்சை எடுக்க வேண்டியதாயிற்று – இரண்டு குழந்தைகளுடன் கூட. வீட்டில் கணவன் தையல் வேலை செய்கிறான். மருத்துவப் பிரசினை பெரிதாகி விட்டால் உறவினர்களிடன் கடன் வாங்க வேண்டும்.

தாலிபனும் சரி, அராபியர்களும் சரி இந்தக் குடும்பத்திற்கு உதவவில்லை. ‘வீடு இருந்தால் வீட்டின் எண்ணைக் குறித்துக் கொண்டு தினசரி ரொட்டி ரேஷன் தருவார்கள். ‘ உலக உணவுத் திட்டஹ்தின் கீழ் அல்லது அல் ரஷீத் தொண்டு நிறுவனத்தின் உதவி தேவைப்படின் பல சிபாரிசுகள் தேவை. ‘சிவப்புப் பிறைநிலா ‘ ( செஞ்சிலுவைச் சங்கம் போன்ற ஓர் அமைப்பு – மொ பெ) நடத்தும் ரொட்டி வினியோகத்தினாலும் இவளுக்குப் பயனில்லை.

நெளரியாவும் அட்டாவும் திருமணம் செய்துகொண்டு 12 வருடங்களாகி விட்டன. இருவருமே கிராமத்திலிருந்து வந்தவர்கள் தான். அவனுக்கு இவள் இரண்டாவது மனைவி. கடந்த இரண்டு வருடங்களாய் நிலைமை மிக மோசம். ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு சுமார் 12 லட்சம் ஆஃப்கானிகள் ( 1400 ரூபாய்) தேவை – வாடகை தரவும் , உணவு உண்ணவும். (ஆஃப்கானின் சராசரி வருமானம் 1000 ரூபாய்)

இவர்களின் வீட்டுக்கு உரிமையாளர் பெஷாவரில் வசிக்கிறார் – சீக்கிரமே வாடகையை ஏற்றி விடுவார். குழந்தைகள் பள்ளி சென்றதில்லை. நெளரியா அவர்களுக்கு குரான் கற்பிக்கிறாள். அமெரிக்கக் குண்டு வீச்சின் போது எங்கும் அவர்களால் தப்பியோட முடியவில்லை. ‘பூகம்பம் மாதிரியிருந்தது. அறைகள் முழுக்க தூசு. குழந்தைகள் அழுது கொண்டே இருந்தார்கள். ‘ ஆனால் இப்போது அவர்கள் மிகச் சந்தோஷமாய் இருந்தார்கள் – தாலிபான் போய்த் தொலைந்ததே. நெளரியா வேலை கிடக்கும் என்று நம்புகிறாள். என்னதான் நம்பிக்கை இருந்தாலும், கண்களில் மண்டிக் கிடக்கும் அதீத சோகம் மறையவே இல்லை.

Series Navigation

பெபெ எஸ்கோபார் (ஆசியா டைம்ஸ் இதழிலிருந்து)

பெபெ எஸ்கோபார் (ஆசியா டைம்ஸ் இதழிலிருந்து)