இந்தவாரம் இப்படி – ஜனவரி 15 2001

This entry is part [part not set] of 14 in the series 20010115_Issue

சின்னக்கருப்பன்


**

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கல் விழாவாவது அரசியலாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது தமிழர்களின் கடமை. இதைத் தமிழர் திருவிழா என்று திராவிட இயக்கப்படுத்த ஆரம்பகால திராவிட இயக்கத்தினர் முயன்றார்கள். ஆனால் இன்று தமிழ்நாட்டுப் பொங்கலும், வடநாட்டு மகர சங்கராந்தியும் அரசியலற்று மகிழ்ச்சித் திருநாளாக மட்டும் இருக்கின்றன.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

**

சில நேரங்களில் சில மனிதர்கள்

சோனியாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பாலமாக இருந்து சுமார் 600 கோடி அரசாங்கப்பணத்தை விரயம் செய்து ஒரு தேர்தலைக் கொண்டுவந்த சுப்பிரமணிய சாமி சோனியாவும் அவரது நண்பரான அர்சுன் சிங்கும் இந்திய கலாச்சார பாரம்பரிய தொல்பொருள்களை வெளிநாடுகளுக்கு கடத்தல் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். டெஹல்கா என்ற வலைப்பக்கம் படித்துப் பாருங்கள்.

**

தாய்வான் டிஜிட்டல் கேமரா தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்க முடிவெடுத்திருக்கிறது

டிஜிட்டல் காமெரா என்ற மின்னொளிப்படக்கருவி இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. நானே ஒன்று வாங்கலாம் என்று தீவிரமாக தேடிக்கொண்டு இருக்கிறேன்.

முதன் முதலில் மின்னியல் ஒளிப்படக்கருவி செய்த நிறுவனம் ஜப்பானின் சோனி. இப்போது எல்லா ஒளிப்பட நிறுவனங்களும் (ஒலிம்பஸ், கொடாக், மினோல்ட்டா, பெண்டாக்ஸ், ரிக்கோ, அக்ஃபா) இதில் முதலாவதாக ஒளிப்படக்கருவிகள் செய்து விற்கின்றன. இதோடு போட்டியாக மின்னியல் நிறுவனங்களான ஜேவீஸி, ஹெச்பி போன்ற நிறுவனங்களும் இதில் நுழைந்திருக்கின்றன.

அதைவிட இன்னும் தோனாந்துருத்திக் நிறுவனங்கள் எல்லாம் இதில். யூமாக்ஸ், இன்னும் பெயர் தெரியாத கம்பெனிகளெல்லாம் இதில் ஆராய்ச்சி செய்து சிமோஸ் சில்லுகளை உபயோகித்து இதில் விலைகுறைத்து அதிக அளவில் தயார் பண்ணி போட்டியிடுகின்றன.

சமீபத்தில் மிக அழகான ஜேவீஸி நிறுவனத்தின் 6.6 மெகாபிக்ஸல் ஒளிப்படக்கருவி பார்த்தேன். சிமோஸில் 10 மெகாபிக்ஸல் ஒளிப்படக்கருவி அடுத்த மாதம் ஒரு சின்ன நிறுவனம் குறைந்தவிலையில் வெளியிடப்போவதாய் செய்தி.

இப்போது எல்லா ஒளிப்படக்கருவிகளும் அதிக விலை கொண்ட ஞாபகச்சில்லுகளை (Flash memory, memory Stick, Sandisk) உபயோகப்படுத்துகின்றன. ஒரு 16எம்பி அட்டை சுமார் 100 டாலர். இத்தனைக்கும் இதில் சுமார் 30 நல்ல படங்களை மட்டுமே சேமிக்க இயலும்.

சமீபத்தில் டாடாபிளே என்ற நிறுவனம் ஒரு 50பைசா அளவுக்கு இருக்கும் ஒளிசிடியைக் கண்டுபிடித்திருக்கிறது. இது சுமார் 10 டாலருக்கு 500 எம்பியைக் கொடுப்பதாக சொல்லியிருக்கிறது. ( இந்த ஞாபகச்சில்லில் எழுதினால் அழிக்க முடியாது) இது விரைவில் டோஷிபா மின்னொளிப்படக்கருவியில் வெளிவர இருக்கிறது. இன்னும் பல ஒளிப்படக்கருவி நிறுவனங்கள் இதில் ஆர்வம் செலுத்தியிருக்கின்றன.

சிமோஸில் ஒளிப்படக்கருவி செய்து அடுத்த வருடத்துக்குள் 30எம்எம் திரைப்படத்தைவிட துல்லியமாக திரைப்படம் தயாரிக்கலாம் என்று சொல்லி வருகிறார்கள். உலகத்திலேயே அதிகமாக பிலிம்களை செலவிடும் இந்தியாவில் இதற்கான ஆராய்ச்சியோ அந்த துறையில் இருக்கும் வளர்ச்சியை தொழில்நுட்ப ரீதியில் அணுகி இதன் மூலம் பணமும் பலனும் அடைய முன்வரவில்லை என்பது கேவலம்.

இன்னமும் ஊட்டியில் வெள்ளைக்கருப்பு பிலிம் தயார்பண்ணும் நிறுவனத்தையும் அதில் வேலைசெய்யும் தொழிலாளர்களையும் காப்பாற்றியே தீருவது என்று போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு உலகம் அவர்களைத் தாண்டி எங்கோ போய்விட்டது தெரிகிறதா என்ன ?

தாய்வான் அரசாங்கம் முன்னுதாரணமாய் நிறைய செலவழித்து சில ஆராய்ச்சிகளை இதில் செய்து அதை தாய்வான் கம்பெனிகளுக்கு அளித்து அவைகளை இது போன்ற புதுத் தொழில்நுட்பங்களில் முன்னுக்கு வரவும் பெரும் அமெரிக்க ஐரோப்பிய ஜப்பானிய கம்பெனிகளோடு போட்டியிடவும் உதவி வருகிறது.

இன்று உலகத்தின் ஞாபகச்சில்லுகளில் 70 சதவீதம் தாய்வானிலேயே உற்பத்திச் செய்யப்படுகின்றன.

இந்தியாவிலும் இதுபோன்ற புதுத் தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளித்து தனியாரும் அரசாங்கமும் ஆராய்ச்சிக்கு நிறைய செலவழிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற புதுத் தொழில்நுட்பங்கள் வளர்ந்து அது சம்பந்தமான தொழிற்சாலைகள் பெருகும். அப்போதுதான் கைத்தறி போன்ற மான்யம் தேவைப்படும் தொழில்களில் சிறையுண்டு கிடக்கும் இந்திய தொழிலாளர்களும், அவர்களுக்கு மான்யம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அரசாங்கமும் (மாநில அரசாங்கங்களும்) விடுதலை பெறும்.

**

சோக்கிலா அய்யர் வெளியுறவு செயலாளராக நியமனம்

சரி, வழக்கம்போல வடஇந்தியர்கள் நம்ம ஊர் கோகிலா அய்யரை இப்படி பெயர்நாசம் செய்கிறார்கள் போல என்று பார்த்தால், இவர் தமிழ்நாட்டாள் இல்லை. பெயர் சோக்கிலா தான். சிக்கிமைச் சேர்ந்த பழங்குடியினர்.

இந்தியாவின் இன்றைய நிலையில் மிகவும் முக்கியமான வேலை இந்த வெளியுறவுச் செயலாளர் வேலை. ஐஏஎஸ் அதிகாரிகளின் கனவு வேலை. திறமை இன்றி ஐஏஎஸ் ஆகவே முடியாது என்ற நிலையில், அதில் இந்த முக்கியமான பதவியை தன் திறமையாலும், சிந்தனையாலும், அறிவுத்திறத்தாலும் பெற்ற சோக்கிலா அய்யருக்கும் இதன் மூலம் தாங்கள் மதிக்கப்படுகிறோம் என்று உணர்ந்து முன்னேற முயலும் அனைத்துப் பழங்குடி மக்களுக்கும் வாழ்த்துக்கள்.

**

விகடனில் கவனிக்க ஒன்று

தமிழின் வியாபாரப் பத்திரிகைகளைப் பற்றி நல்லதாக ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் மிக மிக முயற்சி செய்து, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு தேட வேண்டும். அதுவும் விகடனைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். ஆங்கில வார்த்தையில்லாத ஒரு பக்கம் கூடக் கிடைக்காது. எளிய விஷயம் கூட ‘சிம்பிள் மேட்டர் ‘ ஆகி விடும். தமிழ் நாட்டின் மத்திய தர வர்க்கத்தின் கேளிக்கைப் பக்கங்களாய் மாறிய இந்த ஏட்டின் போக்கு அவ்வப் போது மதன் போட்ட சில நல்ல கார்ட்டூன்களால் தரம் பெற்றதுண்டு. சுஜாதாவும் அதன் முன்பு ஜெய காந்தனும் அதன் முன்பு ஆர் கே நாராயண் என்று சிலர் இடம் பெற்றதுண்டு. தமிழ் நாட்டின் மத்திய தர வர்க்கக்த்தின் ஆங்கில மோகப் போக்கை இது வெறுமே பிரதி பலிக்கிறதா அல்லது, அதை வளர்த்து விடுவதன் மூலம் சில தவறான மதிப்பீடுகளைத் தெரிந்தே உருவாக்கி உறுதிப் படுத்துகிறதா என்பது விவாதிக்க வேண்டிய விஷயம். ஆனால் இதிலும் ஓரிரு பக்கங்கள் நன்றாய் அமைந்து விடுவதுண்டு. சமீபத்தில் சில இதழ்களாக வருகிற ஒரு நல்ல பகுதியைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.

தமிழ் நாட்டின் மத்திய தர வர்க்கத்தின் கண்களில் அன்றாடம் பட்டுக் கொண்டிருந்தாலும், சிலர் கண்ணிலும் மனதிலும் புகாத கடைநிலை மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி அவர்களிடம் பேசி பேட்டி கண்டு வெளியிட்டு வருகிறார்கள். பால்யூ என்பவர் பேட்டி காண்பவர். கண் தெரியாத மனிதர் தேவராஜ் புகை வண்டியில் பாடி மக்களை மகிழ்வித்து, சம்பாதிக்கிறார். பலூன் விற்கும் முருகேசன் குழந்தைகளின் கூட்டத்தில் பலூன் விற்க நேர்ந்ததிற்காகக் குதூகலிக்கிறார். பாத்திரங்களில் பெயர்களைப் பொறித்து தினசரி தன் பிழைப்பை நடத்தும் நண்பர் ‘ஒரு முறை கூட தான் பொறித்த பெயர்களில் தவறு செய்ததில்லை ‘ என்று பெருமிதம் கொள்கிறார். இவர்களைப் பற்றிய இந்தப் பேட்டிகள் உண்மையான மனிதாபிமானத்தை வெளிப் படுத்தும் அரிய சித்திரங்கள்.

***

பதில் சொல்ல இயலாத இந்தவாரக் கேள்விகள்

1) வீரமணி அமைத்த கூட்டத்துக்கு ஜெயலலிதா ஏன் போகவில்லை ?

2) சோனியாவாலும், அர்சுன் சிங்காலும், சுப்பிரமணியசுவாமி மேல் ஏன் மானநஷ்ட வழக்கு இன்னும் போடப்படவில்லை ?

3) ஹரியத் கட்சியினர் பாகிஸ்தான் போவதன் காரணம் என்ன ? அங்கு போய் என்ன சாதிக்கத் திட்டமிடுகிறார்கள் ?

4) எப்போது மூப்பனார் தெளிவாகப் பேசுவார் ?

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்