புரட்சியாளர்கள் மனிதஉரிமையாளர்கள் கலைஞர்கள்

This entry is part [part not set] of 9 in the series 20000528_Issue

யமுனா ராேஐந்திரன்


I

மரணதண்டனைக்கு எதிரான இயக்கமும் மனித உரிமை சார்ந்த அக்கறைகளும் முக்கியத்துவம் பெற்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனித உரிமையைச் சார்ந்த அக்கறைகளை அரசும் நீதியமைப்புக்களும் மட்டுமல்ல, அரசு சாரா அமைப்புக்களும் நிறுவனங்களும் விடுதலை அமைப்புக்களும் பெற வேண்டும் என்கிற குரல்களை மனித உரிமை அமைப்புக்களிடம் இருந்து மட்டுமல்ல, விடுதலைப் போராட்டங்களின் பால் அக்கறை கொண்டவர்களிடமிருந்தும் நாம் கேட்கிறோம். பின்-சோவியத்து உலகில் கெடுபிடிப் போர்க் கால கட்டத்திற்குப் பின்னான உலகில் ஐனநாயகம் குறித்த அவாவுடனும் தனிநபர் உரிமை குறித்த அவாவுடனும் தான் இப்பிரச்சினையை நாம் வைத்துப்பார்க்கமுடியும். மரணதண்டனைக்கு எதிரான வாதங்கள் பல்வேறு தளங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மதம் சார்ந்த அறவியல் தளங்களில் இருந்தான விவாதங்கள் கடவுள் கொடுத்த உயிரை எடுத்துக் கொள்கிற உரிமை எவர்க்கும் இல்லை என்கிற வகையில் அமைகிறது. அரசு நீதியமைப்புக்கள் போன்றவற்றின் உச்சபட்ச அதிகாரங்களைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் அரசினது மதிப்பீடு சார்ந்த தன்மைகளையும் கேள்விக்குட்படுத்துவதாகவும் இந்நோக்கு அமைகிறது. கிறித்தவத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள போப் ஐான் பால் போன்றவர்கள் இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள மகாத்மா காந்தி போன்றவர்கள் இந்நிலைப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.

‘இறைவன் மட்டுமே உயிரைப்பறிக்கமுடியும் ஏனெனில் அவன் மட்டுமே அதைக் கொடுக்கிறான். தனிமனிதர்களை அழித் தொழிப்பது ஒருபோதும் நற்செயலாகாது. தீமை செய்வோர்களை சாகடிக்கக் கூடாது. இன்று மரணதண்டனை ஒழிப்புக்கான இயக்கம் தோன்றியுள்ளது. குற்றம் செய்பவர்களை ஏதோ ஒரு நோயால் அவதிப்படுபவர்களாகக் கருதி சிறைகளை மருத்துவ மனைகளாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. ‘(1)

மகாத்மா காந்தியின் இத்தகைய அறவியல் பார்வையை இன்றைய சூழலுக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மிருகத்தனமான நாட்கள் போய் மறைந்த இன்றைய சூழலுக்கு பொறுத்தமான மானுட நேயமாகக் காண்கிறார் நீதிநாயகம் வி. ஆர்.கிருஷ்ணய்யர்.

‘காலனியாதிக்கத் தண்டனை முறை என்பது பெரிதும் பேரரசின் விழுமியங்களுக்கும் செயல் நோக்கங்களுக்கும் கட்டுப்பட்டதாய் இருந்தது. காந்தியின் நாடு ஒரு பெரும் பாய்ச்சலில் மனிதத்தன்மையற்ற தண்டனை என்ற நிலையிலிருந்து முற்போக்கு மாந்த நேயம் என்ற நிலைக்கு மாறியுள்ளது. குற்றவாளியைத் திருந்தச் செய்தல் அவரைப் பயனுள்ள குடிமக்களாய் ஆக்குதல் என்ற காந்தியப்பார்வையில் குற்றத்துக்குத் தண்டனை என்பதையும் குற்றவாளியின் மீட்சி என்பதையும் செவ்வனே இணைத்திடும் சேர்க்கையில் இந்த மாந்தநேயம் ஊடிழையாகத் திகழ்கிறது. இந்த மீட்டுருவாக்க நுட்பம் இந்த இரட்டை நோக்க உத்தி நமது அரசமைப்புச் சட்ட விழுமியங்களில் எதிரொலிக்கிறது. ஆகவே, நீதித்துறையின் தொலைநோக்கானது கருணை சார்ந்த இந்த முற்போக்கு அணுகுமுறைக்கு இணங்கியாக வேண்டும். ‘(2)

அந்நிய அரசியல் திக்கத்தின் பாலான விமர்சனத்திலிருந்து மானுட அறம் சார்ந்த பாய்ச்சலாக மரண தண்டனைக்கு எதிரான பார்வையை முன் வைக்கிறார் கிருஷ்ணய்யர். காட்டுமிராண்டித்தனமான ஏகாதிபத்தியம் குறித்த விமர்சனங்களிலிருந்து பின் சோவியத் ஐனநாயகம் பற்றிய நமது அவதானங்களிலிருந்து மேலும் முன்னோக்கியதான மாந்த நேயத்துக்கான மனித உரிமை அணுகுமுறையையே அவர் கோருகிறார் என்பது இங்கு வெளிப்படையாகிறது. விடுதலைப் போராட்டங்களின் பால் அக்கறை கொண்டவர்கள் விடுதலையில் ஈடுபட்டவர்களின் மேல் மரண தண்டனையை மேற்கொள்வதில் உள்ள அரசமதிப்பீடுகளின் சார்புத் தன்மைக்கு எதிராகவே மரணதண்டனையை நிராகரிக்கிறார்கள்.

அமெரிக்காவில் இயங்கும் மரணதண்டனைக்கு எதிராணவர்கள் இத்தண்டனை பெரும்பாலும் கறுப்பு மக்கள் மீது, வறிய மக்கள் மீது திணிக்கப்படுகிறது என்கிறார்கள். அத்தோடு நிறவெறியின் சட்டபூர்வமான வடிவமாகவும் மரணதண்டனை அமைகிறது என்கிறார்கள். பாரம்பர்யமாக இடதுசாரி அமைப்பைச்சார்ந்தவர்களும் விடுதலை அமைப்பைச் சார்ந்தவர்களும் ஒரு புறம் தமது அரசியல் நலன்களின் பொருட்டு மரணதன்டனைக்கு எதிரான மத அறவியல் சார்ந்த மதிப்பீடுகளை மட்டுமல்ல மேற்கின் மனித உரிமை சம்பந்தமான மதிப்பீடுகளையும் அரசியல் தந்திரோபாயம் என்கிற வகையிலேயே மேற்கொள்கிறார்கள். மறுபுறத்தில் தமது அமைப்புகளுக்கு உள்ளான அல்லது மக்கள் மீதான அல்லது விமர்சனபூர்வமான கலைஞர்கள் மீதான தமது மனித உரிமை மீறல்கள் என்று வருகிற போது மேற்கின் மனித உரிமை மதிப்பீடுகளை நிராகரிப்பது மட்டுமல்ல, மூன்றாம் உலகிற்கான மனித உரிமைகள் விடுதலைப் போராட்டத்துக்கான மனித உரிமைகள் தமது கலாச்சாரம் சார்ந்த மனித உரிமைகள் எனும் கருத்தாக்கங்களை முன் வைக்கிறார்கள். இங்கு மூன்று விதமான அரசியல் சார்ந்த மனித உரிமைக் கருத்தாக்கங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அ. மூன்றாம் உலகின் மனித உரிமைகள் என்கிற கருத்தாக்கம்

ஆ. விடுதலைப் போராட்டம் சார்ந்த மனித உரிமைகள் எனும் கருத்தாக்கம்

இ. கிழக்கத்திய கலாச்சாரம் சார்ந்த மனித உரிமைகள் எனும் கருத்தாக்கம்

மூன்றாம் உலகிற்கான மனித உரிமை மதிப்பீடுகள் அல்லது கிழக்கத்திய கலாச்சாரம் சார்ந்த மதிப்பீடுகளுக்கான விவாத அடிப்படைகளை கெடுபிடிப்போர் காலகட்ட விவாத அடிப்படையிலேயே காணமுடியும். சோல்செனித்ஸன் ஸகரோவ் பற்றிய விவாதங்களின் அதே தளத்தில் தியானெனமென் சதுக்கம் பற்றிய விவாதங்களின் அதே தளத்தில் இந்தோனேஷிய மலேசிய பர்மிய இந்திய வடகொரிய துருக்கிய அரசுகளின் விவாதங்களையும் நாம் காணமுடியும். சிறை அமைப்புக்கள், கைதிகள் நடத்தப்படும் முறை, குழந்தைத் தொழிலாளர் சுரண்டல், உபரி மதிப்பை கைதிகள் உழைப்பிலிருந்து சுரண்டுவது போன்றவை இந்நாடுகளில் கவனத்திற்குரிய மனித உரிமை மீறல் சார்ந்த அடிப்படைகளாகவே ஒப்புக் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமிய நாடுகளின் மனித உரிமைகளுக்கு மிகப் பலமான மத அடிப்படை அமைந்திருக்கிறது. அவர்களது தண்டனைச்சட்டங்கள் கூட மத அடிப்படையிலேயே அமைகிறது. சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், துருக்கி, குவைத், பர்மா போன்ற நாடுகளின் கொடூரமான சட்டங்களே இதற்கு சாட்சியமாகிறன. மூன்றாம் உலக மனித உரிமையின் தனித்துவம் என்று எவற்றை இன்று இவர்கள் முன் வைக்கிறார்கள் ?

‘மூன்றாம் உலக நாடுகளின் மனித உரிமைக் கருத்தியல் என்பது உரிமைகள் மையப்பட்டது என்கிற மேற்கத்திய கருத்தாக்கத்திலிருந்து மாறுபட்டு கடமையை மையமாகக் கொண்டது. இந்து இஸ்லாமிய புத்த மத அறவியல்களின் அடிப்படையில் உரிமைகள், தனிநபர் மையமானது என்பதை விடவும் சமுகத்துக்காக அவர்கள் ஆற்றவேண்டிய கடமைகளை மையமாகக் கொண்டே அமைகிறது. இவ்வகையில் மேற்கு அல்லாத நாடுகளின் மனித உரிமைக்கான அடிப்படை, மதம் சார்ந்ததாக, தனிநபரிலிருந்து சமுகம் சார்ந்ததாக மையம் கொள்கிறது. மார்க்ஸியம் சார்ந்த மனித உரிமைகளும் இத்தகையதே என்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. ‘(3)

தனிநபரின் உரிமை என்பதற்கு அப்பால் சமுகத்தின் உரிமை குழுவின் உரிமை இனக்குழுவின் உரிமை அரசியல் இயக்கத்தின் உரிமை அரசின் உரிமை தேசீய அரசின் உரிமை இங்கு முதன்மை பெறுகிறது. இவைகளுக்கான கடமையை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், அது, நாடு, குழு, இயக்கம், தேசம் ,மதம் போன்றவற்றுக்கான தனிநபரின் கடமை மீறலாக எடுத்துக் கொள்ளப்பட்டு தண்டனைக்குரியதாகவும் ஆகிறது. மூன்றாம் உலக நாடுகளின் சமுகப் பொருளாதார, கலாச்சார வளர்ச்சி என்பன சமூகத்துக்குத் தனிநபரின் கடமை சார்ந்ததாகவே அமைகிறன.

மேற்கு நாடுகளின் மனித உரிமைக் கருத்தாக்கம் என்பது பதினெட்டாம் நுாற்றாண்டிற் தோன்றிய, ‘அனைத்து மனிதரும் சமம் ‘ எனும் தாராளவாதக் கருத்தியலின் அடிப்படையிலும் காரணகாரிய ரீதியிலான மனிதாபிமான மானுடவியல் அடிப்படையிலும்தான் தோன்றியது. அமெரிக்கப் பிரெஞ்சுப் புரட்சிகளின் அனுபவம், இரண்டாம் உலகப் போர்காலகட்ட யூதமக்களின் அனுபவம் போன்றன நவீன மனித உரிமைகளுக்கான சட்டகமாக அமைந்தன. மனித சுதந்திரத்திற்கான அவா என்பதும் அதிகரித்தது. பத்தொன்பதாம் நுாற்றாண்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேச விடுதலை யுத்தங்கள், சோசலிச சமுகத்தின் தோற்றம் சமூகப் பொருளாதார கலாச்சார வளர்ச்சி குறித்த மூன்றாம் உலக நாடுகளின் விழிப்புணர்ச்சி போன்றவையும் தோன்றின. மத அறவியல் சார்ந்த கடமையுணர்வும் புதிதாகத் தோன்றிய அரசியல் பொருளியல் கலாச்சாரத் தேவைகளும் இணைந்து புதிய வகையிலான மனித உரிமைக கருத்தாக்கத்தை உருவாக்கக் கோரின. இவ்வாறாகவே மூன்றாம் உலக நாடுகளின் மனித உரிமை என்கிற கருத்தாக்கம் தோன்றுகிறது.

தேசிய சுயநிர்ணயத்துக்கான காலனியாதிக்க எதிர்ப்பு யுத்தங்களை ஏகாதிபத்திய நாடுகள் பயங்கரவாதமாகப் பார்த்தது. தேசிய விடுதலை இயக்கங்களும் சோசலிச நாடுகளும் விடுதலையில் வன்முறை தவிர்க்கப்படமுடியாதது என்று சொன்னது. மக்களின் சம உரிமைக்காகவும் தேசத்தின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுபவர்களுக்கு வன்முறை போராட்டத்தின் ஒரு தவிர்க்கமுடியாத பகுதியாக ஆகியது. மேற்குக்குப் பயங்கரவாதமாக இருந்தது, மூன்றாம் உலகின் விடுதலைக்கு தவிர்க்க முடியாத வன்முறையாக ஆகியது. மேற்குக்குத் தனிநபர் உரிமையாக அமைந்தது, மூன்றாம் உலக நாடுகளுக்கு தேசத்திற்கான கடமை சார்ந்த உரிமையாக ஆகியது. கியூபாவிலிருந்து குர்திஸ்தான், ஈராக், இலங்கை வரை இதுவே மூன்றாம் உலக இடதுசாரிகளின் புரட்சியாளர்களின் பார்வையாக மட்டுமல்ல, தேசிய அரசுகளின் பார்வையாகவும் ஆகியது. தேசிய விடுதலைக்காக, சுய நிர்ணய உரிமைக்காக, வன்முறையைத் தேர்ந்து கொண்ட இவர்கள், தமது தேசிய அரசுகளைக் காப்பாற்றும் பொருட்டு, அதற்காக குடிமக்களின் கடமையைக் கோரும் பொருட்டு, தமது சொந்த மக்களின் மீதே இனக்கொலை யுத்தங்களை, சிறுபான்மையினர் எதிர்ப்பு யுத்தங்களைத் திணித்தார்கள். சோசலிச நாடுகளும் இதற்கு விதி விலக்காக இருக்கவில்லை. இவர்கள் தமது சொந்த மக்களின் உரிமைகளை இவ்வாறாகப் பார்த்தார்கள் :

‘சம்பந்தப்பட்ட அனைத்துப் பகுதியினரும் நாட்டின் ஒற்றுமையை ஒப்புக் கொள்வார்களானால், அப்போது அவர்களால் மனித உரிமைப்பிரச்சினையைச் சுலபமாகத்தீர்க்க முடியும். அவர்கள் நாட்டின் ஐனநாயகத்தைப் பலப்படுத்துவது, நீதியை நிலைநாட்டுவது, அடிப்படை உரிமைகள் குறித்துப்பேசுவது, அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது என அனைத்து விஷயங்களையும் தீர்க்க முடியும். தகாத நடவடிக்கைகள் கண்டு களையப்படமுடியும். ஒருவரது கலாச்சார மத உரிமைகள் காப்பாற்றப்படமுடியும். எப்போது நாட்டின் ஒற்றுமை நேரடியாக பயமுறுத்தப்படுகிறதோ அப்போது இவையனைத்துமே பிரச்சினைக்குரியதாகிவிடும். ‘ (4)

II

மூன்றாம் உலகின் கிழக்கத்தியக் கலாச்சாரங்களின் மனித உரிமை மீறல்களை மிகத் தீவிரமாக விமர்சித்து வருபவர் நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளியலாளரான அமர்த்யா ஸென் . எதேச்சாதிகாரமும் அதிகார மத்தியத்துவமும் வாக்களித்தல், விமர்சித்தல், கிளர்ச்சி செய்தல் போன்ற அரசியல் உரிமைகள் மறுப்பும் பொருளாதாரரீதியிலான சமூக வளர்ச்சியைக் கொண்டுதரும் என்பதை அமர்த்தியா ஸென் மறுக்கிறார்.

‘சூடான், எத்தியோப்பியா, சோமாலியா போன்றவற்றின் பட்டினிச்சாவுகளைப் பார்த்தாலும் சரி, அல்லது சர்வாதிகாரிகள் ஆண்ட நாடுகளின் பஞ்சத்தைப் பார்த்தாலும் சரி, 1930களின் சோவியத் யூனியனைப்பார்த்தாலும் சரி, 1958 முதல் 1958 வரையிலான சீனாவைப்பார்த்தாலும் சரி ( மாபெரும் பாய்ச்சல் தோல்வியுற்ற காலம்- இரண்டரை கோடியிலிருந்து மூன்று கோடி மக்கள் மரணித்த காலம்), அல்லது இன்றைய வட கொரியாவை எடுத்துக் கொண்டாலும் சரி, இக்கால கட்டங்களில் அதிகாரபலம் வாய்ந்த அரசுகள்தான் பதவியிலிருந்தன. அரசியல் உரிமைகளை மறுத்த அரசுகள்தான பதவியிலிருந்தன. இருந்த போதும், வளர்ச்சியைக் கொண்டு வராதது மட்டுமல்ல அழிவையும் இவ்வரசுகளால் தடுக்க முடியவில்லை. ‘(5)

ஜரோப்பிய மதிப்பீடுகளுக்கும் சிய மதிப்பீடுகளுக்குமான வித்தியாசங்களைச் சொல்லி தமது நாட்டின் அரசியல் உரிமைகள் மறுப்பை நியாயப்படுத்தும் போது தென் கொரியாவைச் சேர்ந்த லீ குவான் யூ, மற்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர், சீன வெளியுறவு அமைச்சர் போன்றவர்கள் 1993 ஆம் ண்டு வியன்னாவில் நடைபெற்ற உலக மனித உரிமைக்கருத்தரங்கில் பேசும் போது—-

‘மாறுபட்ட தன்மைகளின் யதார்த்த இருப்பை உலகமய நோக்கு என்பதை உபயோகித்து கண்டுகொள்ளாமல் விடுவதோ நிராகரிப்பதோ இடம்பெறுமானால் மனித உரிமை விழுமியங்கள் என்பதை உலக அளவில் ஒப்புக் கொள்வதென்பது பிரச்சினைக்குரியதாகிவிடும. எமது நாடுகளில் தேசங்களின் உரிமை என்பதை ஒரு நபர் தனது தனிநபர் உரிமைகளுக்கு முன்பாக வைக்கவேண்டும், ‘(6)

எனும் அதே போதில் இன்னும் கொஞ்சம் மேலே போய் லீ குவான் யூ அழுத்தமாகச் சொல்கிறார்:

‘ஆசிய மதிப்பீடுகள் என்று நாங்கள் சொல்லும்போது, சமுகம் குறித்த மேற்கத்தியர்களின் கருத்தாக்கத்தையும் கிழக்காசியக் கருத்தாக்கத்தையும் மனதில் வைத்துத்தான் சொல்கிறோம். கிழக்கு என்று சொல்லும் போது, நான் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து விலகிய, கொரியா, ஐப்பான், சீனா, வியட்நாம் போன்ற நாடுகளைக் குறிப்பிடுகிறேன். தென்கிழக்காசியர்கள் சீன இந்திய கலப்பினர். இந்தியக் கலாச்சாரமும் இதே மாதிரியான மதிப்பீடுகளைத் தான் வலியுறுத்துகிறது. ‘(7)

இதைக் குறித்து கருத்து வெளியிடும் போது, தனது ஆசிய மதிப்பீடுகளும் மனித உரிமைகளும் எனும் தனது ஆய்வுக்கட்டுரையில் மனித உரிமைக் கருத்தாடல்கள் குறித்த பல்வேறு பிரமைகளைத் தகர்த்தெறிகிறார் அமர்த்தியா ஸென்.

ஆசியக் கலாச்சாரம், ஆசிய மதிப்பீடுகள் குறித்துப் பேச வரும் பெரும்பாலான அமெரிக்க மேற்கத்தியக் கோட்பாட்டாளர்கள், கான்பூஸியஸின் சிந்தனை முறைதான் அதிகாரபூர்வமான சியச் சிந்தனை முறை என்று காண்கிறார்கள். அத்துடன், அவரது சிந்தனை அமைப்பின் ஒழுங்கு அதிகாரத்தை நிலைநாட்டுவது குறித்துத்தான் பேசுகிறதேயல்லாமல் சுதந்திரம் குறித்து ஏதும் சொல்வதில்லை என்றும் சாதிக்கிறார்கள்.அது மட்டுமன்றி, புராதன காலத்திலிருந்தே மேற்கத்திய நாகரீகமானது அரசியல் சுதந்திரம் குறித்தும் ஐனநாயகம் குறித்தும் பேசி வந்திருப்பதாகவும் கோரிக்கொள்கிறார்கள். கோட்பாட்டாளர்கள் மட்டுமல்ல அமெரிக்க மேற்கத்திய அரசியல் தலைவர்களும் இவ்வாறே கோரிக் கொள்கிறார்கள். இதற்கு எதிர்த்திசையில் தமது அதிகாரத்தைக் காத்துககொள்ள வேண்டும் என நினைக்கிற ஆசியநாடுகளின் எதேச்சாதிகார அரசியல்வாதிகள், ஆசியக்கலாச்சாரத்தில் தனிநபர் அரசியல் உரிமைகள் பற்றியோ அடுத்த நபரின் உரிமையைச் சகித்துக் கொள்வது பற்றியோ தனிநபர் தேர்வு பற்றியோ எதுவும் சொல்லப்படவில்லை எனச் சாதிக்க முனைகிறார்கள். மேற்கத்திய சிந்தனையாளர் ஜஸையா பெர்லின் சொல்லும்போது, ‘புராதன உலகத்தில் ஜரோப்பியர்கள் தான், ஐனநாயகம், சுதந்திரம் போன்ற கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு என்னால் தாரம் காணமுடியவில்லை ‘ என்கிறார். கிரேக்க ரோமன் கலாச்சாரத்திலும் சரி, கிறித்தவ மரபிலும் சரி, திட்டவட்டமான இதற்கான வரையறைகள் இருப்பதாகவும் தான் காணவில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். (8)

இன்றைய நிலையில் நாம் மனதில் கொண்டிருக்கிற தனிமனித உரிமை எனும் அர்த்தத்தில் இந்தக் கருத்தாக்கம் மேற்கத்தியக்கலாச்சாரத்திலும் இடம்பெறவில்லை; கிழக்கத்தியக் கலாச்சாரத்திலும் இடம்பெறவில்லை. தனிநபர்கள் உரிமைகள் என்கிற போது நாம் அதை இரண்டு வித்தியாசமான வகைகளிற் பார்க்கலாம்.

தனிநபர் சுதந்திரம் எனும் மதிப்பீடு : நல்ல சமூகத்தில் பொருட்படுத்தப்படுகிற ஒருவர்க்கு தனிநபர் சுதந்திரம் முக்கியம்; அஃது உறுதி செய்யப்படவேண்டும்.

சுதந்திரத்தில்சமத்துவம்:அனைவருமேபொருட்படுத்தப்படவேண்டும்.பரஸ்பரம் பகிர்தலின் அடிப்படையில் தனிநபர் சுதந்திரம் உத்திரவாதப்படுத்தப் படவேண்டும்.

அரிஸ்டாட்டிலும் சரி, மண்டாரின்களும் சரி, பிராமணர்களும் சரி, முதல் வகையான தனிநபர் சுதந்திரம் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அரிஸ்டாட்டில், அடிமைகளும் பெண்களும் தவிர்த்தவர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார். அடிமைகள் அல்லாதவர்களின் சுதந்திரம் பற்றி கிரேக்கர்கள் ரோமானியர்கள் பேசியது போலவே, மேல் ஐாதி பிராமணர்களின் சுதந்நிரம் பற்றி அர்த்த சாஸ்திரம் எழுதிய கெளடில்யர் பேசியிருக்கிறார். குடும்பத்திற்கு நேர்மையாகவிருப்பதும் நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதும் ஆசிய சமூகங்களின் இரண்டு அடிப்படை மதிப்பீடுகள் என கான்பூஸியஸ் சொல்லியிருக்கிறார். அதே வேளை, திருட்டை அரசிடமிருந்து மறைத்ததற்காக, தகப்பனையும் மகனையும் குடும்ப மதிப்பீட்டைக் காத்ததற்காகப் போற்றவும் செய்கிறார். ஆசியக்கலாச்சாரத்தில் உள்ள தீர்க்க முடியாத மிகப் பெரிய முரணாக இஃது இருக்கிறது. இன்னும், ‘உண்மை அரச குமாரனைச் சுடும் என்றாலும் கூட, சொல் ‘ எனும் கான்பூசியஸ், அரசை எதிர்த்த, கலகத்தை மறுப்பவர் மட்டுமல்ல, அப்போது மெதுவாகப பேசு எனவும் சொல்கிறார்.

புத்த மதமும் அசோகரும் முஸ்லிம் அரசனான அக்பரும் சகிப்புத் தன்மையை மதம் எனும் அம்சத்தில் வலியுறுத்தகிறார்கள். சுதந்திரத்தையும் சகிப்புத் தன்மையையும் பெண்களிடம் கைக்கொள்ள வேண்டியது பற்றி இவர்கள் பேசவதில்லை. கபீரின் கவிதைகளிலும் சுத்ரகசாவின் நாடகத்திலும் சகிப்புததன்மை பற்றிப் பேசப்படுகிறது. பதினோராம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஈரானிய எழுத்தாளர் அல்பருனி படையெடுப்பாளர்களின் அட்டூழியங்களைப் பதிவு செய்வதோடு இந்தியக் கணித நுால்களை வானியல் நுால்களை அராபியில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘மற்றவரை ஒதுக்கமாகப் பார்ப்பது எல்லா நாட்டினர்க்கும் உரியதாக இருக்கிறது ‘ எனவும் அவர் கூறுகிறார். பிற்பாடு இந்திய கணிதத்தின் செல்வாக்கு மேற்கிலும் பரவியது என்பது வரலாறு.

இன்று நாம் அறிந்தபடியிலான ஐனநாயகமும் சரி, அரசியல் சுதந்திரமும் சரி, மறுமலர்ச்சி யுகத்திற்கு முன்பாக எந்தக் கலாச்சாரத்திலும் இருந்ததில்லை. அது மேற்கத்திய கலாச்சாரமாயினும் சரி, கிழக்கத்தியக் கலாச்சாரமாயினும் சரி, இதுவே உண்மை. மேற்கிலும் சரி, கிழக்கிலும் சரி, அரசியல் சுதந்திரம், ஆள்பவர்க்கான சுதந்திரமாகவே இருந்திருக்கிறது. அதைப்போலவே, மற்றவரின் தனித்துவத்தைச் சகிப்பது என்பதும் அரசியற் சமத்துவம் என்பதுவும் ஒப்பீட்டளவில் வேறு வேறு தளங்களில் வேறு வேறு காரணங்களுகாகவே இருந்திருக்கிறன. அனைத்தும் தழுவிய வகையில், அரசியற் சுதந்திரம் பற்றியும் சரி, ஐனநாயகம் பற்றியும் சரி, சிந்தித்தவர்களென மறுமலர்ச்ச்ிக்காலத்திற்கு முன் மேற்கிலும் இல்லை; கிழக்கிலும் இல்லை.

காலனியாதிக்க எதிர்ப்பு என்பதை மிகத்தந்திரோபாயமாக உள்நாட்டில் மனித உரிமை தவிர்ப்புக்கும் தனிநபர் அரசியற் சுதந்திர ஒடுக்குமுறைக்குமாக தற்போது ஆசிய அரசியல் எதேச்சாதிகாரகேள் பாவிக்கிறார்கள்.னால் கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி இதுதான் : அமெரிக்க ஆதிக்கத்தையும் மேற்கின் ஆதிக்கத்தையும் எதிர்ப்பது நன்று. ஆனால், இதற்கும் உள்நாட்டில் நீங்கள் மனித உரிமையையும் ஐனநாயகத்தையும் ஒடுக்குவதற்கும் என்ன தொடர்பு எனக் கேட்கப்படவேண்டும். அதைப் போலவே ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த உரிமைகளையும் அங்கீகரித்து விட்டு உண்மையிலேயே மனித உரிமை அக்கறையுடன் அமெரிக்க மேற்கத்திய அரசுகள் பேச வேண்டும். மாவோ சொன்னபடி இவ்வகையில் மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் காகிதப்புலிகள் என்பதிலிருந்து அதிகமாக காகித எலிகளாக ஆகி வருவதைத்தான் நாம் பார்க்கிறோம். இவ்வாறெல்லாம் ஆசிய மதிப்பீடுகள் மனித உரிமை பற்றி அவதானிக்கும் அமர்த்யா ஸென் இறுதியாகச் சொல்கிறார்.

மிகப் பொதுவான வடிவில் மனித உரிமை எனும் அம்சம் நமது பரஸ்பர பகிர்தலுணர்வுள்ள மனுக்குலத்தைக் கட்டியெழுப்பும். இந்த உரிமைகள் ஒரு குறிப்பிட்ட நாட்டின் பிரைஐயாகவோ அல்லது ஒரு தேசத்தின் உறுப்பினனாக இருப்பதாலோ பெறப்படுவதல்ல; ஒவ்வொரு தனிமனிதனும் அதற்குத் தகுதியுள்ளவன் என எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இந்த உரிமைகள் சட்டபூர்வமாக குறிப்பிட்ட மக்களுக்கென உருவாக்கப்படுகிற உரிமைகளிலிருந்து வித்தியாசப்படும். (அமெரிக்க பிரைஐயின் உரிமைகள், பிரெஞ்சு தேசத்தவர்க்கான உரிமைகள் என்பது போல). ஓரு நபர் சித்திரவதை செய்யப்படக்கூடாது எனும் உரிமை அவர் எந்த நாட்டின் பிரைஐ என்பதற்கப்பால் அந்த நாடு அல்லது மற்ற நாடு என்ன செய்ய விரும்புகிறது என்பதற்கு அப்பால் சுயாதீனமாக உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு நபர் சித்திரவதை செய்யப்படக்கூடாது எனும் உரிமையை அந்நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் அவர்க்கான தகுதியை பிரச்சினைக்குரியதாக்கலாம். ஆனால் சித்திரவதை செய்யப்படக் கூடாது எனும் அவர்க்கான மனித உரிமையை பிரச்சினைக்குள்ளாக்கவே முடியாது.

எனது பார்வை யாதெனில், தேசம் சார்ந்த எல்லைகளோ, பிரஐாவுரிமை சார்ந்த எல்லைகளோ, உண்மையிலேயே அக்கறையுள்ள ஒருவர் பிறர் உரிமையில் அக்கறை எடுப்பதையோ அவர்கள்பால் தமக்கு பொறுப்பு உண்டு எனச்செயல்பட முனைவதையோ தடுக்கக் கூடாது என நினைக்கிறேன். ஒருவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அரசியல் அறவியல் விசாரணையின் தீர்மானிக்கும் மையமாக எல்லைகள் கடந்த செயல்பாடே இருக்க வேண்டுமெயொழிய எல்லைகளுக்குட்பட்டது அன்று.

வேறுபட்ட கலாச்சாரங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அங்கீகரிப்பதென்பது இன்றைய சமகால உலகில் அதிமுக்கியமானதாகும். னால் நாம் மிக அதிகமான அளவில் மேற்கத்திய கலாச்சாரம் ஆசிய மதிப்பீடுகள், ஆபிரிக்கக்கலாச்சாரம் என மிக மலினமாகப் மிகையாகப் பொதுமைப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறோம். காணக்கிடைக்காத வரலாறு நாகரீகம் குறித்த இம்மாதிரி வாசிப்புகள் அறிவுரீதியில் மிகவும் குறுகிய சிந்தையுடையதாகும். அதுமட்டுமன்றி, நாம் வாழும் உலகில் அர்த்தமற்ற பிளவுகளையும் ஏற்படுத்தும் தன்மையானவையாகும். அதிகமான அளவில் மேற்கொள்ளப்படும் ஆசிய மதிப்பீடுகள் பற்றிய எதேச்சாதிகார வாசிப்புக்கள் ஆழ்ந்து ஆய்வு மேற்கொள்ளும் போது நிற்கமுடியாது போய்விடும். சிய மதிப்பீடுகள் ஐரோப்பிய மதிப்பீடுகள் எனும் பெரும் எதிர்மை, சுதந்திரம், ஐனநாயகம் போன்றவற்றின் நிஐமான அர்த்தங்கள் குறித்த நமது புரிதலுக்குக் கொஞ்சமே அர்த்தம் தருவனவாகும்.(9)

III

அக்டோபர் புரட்சியால் ஆதர்ஸம் பெற்று லெனினியக் கட்சிக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்த்துப் போராட வேண்டிய சக்தி என வரையறை செய்து நிலப்பிரபுத்துவத்தையும் முதலாளித்துவத்தையும் தூக்கியெறிந்து சோசலிசத்தையும் ஐனநாயகத்தையும் தனது எதிர்காலச்சமூகமாக வரையறுத்த குர்திஸ் விடுதலை இயக்கத்தலைவர் அப்துல்லா ஒச்சலான் பின்-சோவியத் உலகை வேறு வகையில் தான் நோக்குகிறார்:

‘அனைத்து உலகும் மாறிக்கொண்டிருந்தபோது, சோவியத் யூனியன் உடைந்துகொண்டிருந்தபோது, பி.கே.கே.மாறாமல் பழைய நிலையிலேயே நின்றிருந்தது. 1970 களினதும் 1980 களினதும் விவாதங்களைக் கட்சி விட்டொழித்திருக்கவேண்டும். 1990 களுக்கான புதிய திட்டமொன்றை அது மேற்கொண்டிருக்க வேண்டும். இந்தக் கொடுரமான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் எமது கட்சி இன்னும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டிருக்கவேண்டும். ஆனால், இந்தக் கேள்வியென்பது அனுபவங்களும் நீண்ட மரபும் தொடர்பானது என்பது முக்கியமாகும். ‘ (10)

‘பத்து வருடங்களுக்கு முன்பு போலவே இன்றும் நாங்கள் குர்திஸ் மக்களின் சுயவிருப்பம் மூலம் உருவாக்கப் படுகின்ற தீர்வொன்றையே விரும்பி நிற்கிறோம்.இருந்தாலும் இன்று நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருக்கின்றன. அம்மாற்றங்கள் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்தவை போன்றதல்ல. கெரில்லா யுத்தமுறைமையும் இந்திபாதாவும் ஒரு தசாப்தத்திற்கு முந்தி அதிமுக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. ஆனால், இன்றோ அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கும் அமைதியான போராட்டத்திற்குமே அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனை நாம் ஒரு வளர்ச்சி முன்னேற்றம் என்று கருதுகிறோம் என நினைக்கிறேன். சர்வதேச நிரலில் குர்திஸ் பிரச்சினையும் ஒரு விடயமாக முன்வைக்கப்படுமானால் நாங்களும் அரசியல் ஞானோதயத்துடன் அதில் அக்கறைப்படத் தயாராக இருக்கிறோம். அது எமக்கொரு ஆறுதலாகவும் இருக்கும். அப்படி நடந்தால் நான் துருக்கிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்னுரிமையளிப்பேன். ஏனெனில், அதுதான் துருக்கியின் உள்ளேயும் வெளியேயும் இருக்கிற பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தருவதாய் இருக்கும். இருக்கின்ற துருக்கியின் எல்லைகளுக்குள்ளேயே ஐனநாயகக்கோட்பாடுகளுடன் கூடிய வகையில் துருக்கிய அரசாங்கத்தை மறு சீரமைக்கக்கூடிய வகையிலான தீர்வொன்றுக்கு அழுத்தம் கொடுப்பேன். ‘

‘எம்தேசத்தின்இருப்புக்கானஇப்போதையஒரேவழி ஆயுதப்போராட்டமாகத்தான் இருக்கிறது. துருக்கி அரசியல் தீர்வு யோசனைகளை ஓரளவுக்கேனும் முன்னெடுக்குமானால் நாம் எம் ஆயுதங்களைக்களைந்து விடுகிறோம் என்பதை மீண்டுமொருமுறை இங்கு சொல்லி வைக்கிறேன். அமெரிக்காவை இது விடயத்தில் ஒரு முன்னணியாகவும் ஜக்கிய நாடுகள் சபையை மத்தியஸ்தராகவும் ஜரோப்பிய யூனியனைக் கண்காணிப்புக்குழுவாகவும் காணவிரும்புகிறேன். இது விடயத்தில் என்னுடைய கடப் பாட்டை நான் உங்களுக்கு உறுதி செய்து தருகிறேன். சர்வதேச மக்கள் அபிபப்பிராயத்தின் கவனத்தைக்கோரும் என் இறுதி முயற்சிகளிலும் நான் அடி எடுத்து வைத்துள்ளேன்.அத்துடன், துருக்கியின் ஒரு தலைப்பட்சமான இராணுவத்தீர் வை சர்வதேச சக்திகள் தடுத்து நிறுத்தும் என்றும் நான் எதிர்பார்க்கிறேன். நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்றவை தாங்கள் துருக்கிக்கு அளித்து வரும் உதவிகளை நிறுத்துமானால் நாம் துருக்கியுடனான அரசியல் தீர்வொன்றை நடைமுறைச் சாத்தியமாக்கிப் பார்க்கலாம். அது தான் தகுந்த நடவடிக்கையாக இருக்கும். ‘(11)

இரண்டாம் உலகப் போர்காலகட்டத்திற்குப்பின்னாலும் தற்போது கெடுபிடிப்போர் காலகட்டத்திற்குப் பின்னாலும் மனித உரிமை குறித்த அக்கறை என்பது இன்று உலகின் நிகழ்ச்சி நிரலில் சேர்ந்திருக்கிறது. கெடுபிடிப்போர் காலகட்டத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்கா மனித உரிமை அரசியலைப் பாவித்தது என்பது உண்மைதான். னால் மாறி விட்ட புதிய சூழலில் அமெரிக்காவின் மனித உரிமைக்கெதிரான நடவடிக்கைகள் மட்டுமல்ல சீனாவினதும் மேற்கத்திய அரசுகளினதும் மனித உரிமை மீறல்கள் பற்றி இப்போது கேள்விகள் எழுகிறது. துருக்கி அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வியெழுப்பும் மனித உரிமை அமைப்புக்களும் மனித உரிமையாளர்களும் இன்று போராளி அமைப்பு எனும் அளவில் குர்திஸ் விடுதலை அமைப்பின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் கேள்விகள் எழுப்புகிறார்கள். ஆகவேதான் இப்போரட்டங்களை ஆதரிக்கவர்கள் கூட போராளி இயக்கங்களின் மனித உரிமை மீறல்களை தோழமையுடன் எடுத்துக்காட்டத் தவறுவதில்லை. இதுவும் புரட்சிகர யுத்தத்தில் புதிய யதார்ததம் எழுப்புகிற பிரச்சினைதான். அறவியல் ரீதியில் அங்கீகரிக்கப்படாத செயல்கள் மேற்கொள்ளப்பட்டது குறித்த வினாவுக்கு ஒச்சலான் இவ்வாறாக பதிலிறுக்கிறார்

‘எமது அமைப்பு குர்திஸ் ஐனநாளகத்தையும் சுதந்திரத்தையும் கோரவே நிற்கிறது. இந்தக் கோரிக்கைகள் மனித இன அடிப்படை உரிமைகளாகும். இதை நானோ வேறெந்த தேசமோ கைதுறந்து விட முடியாது. எங்கள் போராட்டத்தில் தனிப்பட்ட அடிப்படையிலான தளர்வான அணுகல்கள் இருக்கின்றன. இவைகூட சரியாக அணுகப்படவில்லை என்றுதான் கருதுகிறேன். அண்மையில்தான் நாம் இவ்வாறான பொதுமக்களுக்கெதிரான செய்கையில் ஈடுபடுவோரை அதற்குப் பொறுப்பானவர்களைகத் தண்டிக்கிற வழிவகைகளை ஏற்படுத்தி இருக்கிறோம். உண்மையில் இந்த விடயங்களை நாம் புலனாய்வு செய்யவும்வேண்டியுள்ளது. ஏனெனில், இவ்வாறான செய்கைகள் பாராட்டத்தினை களங்கப்படுத்துவது மட்டுமல்லாமல் கட்டுக்கடங்காத கட்டுப்படுத்தமுடியாத ஒரு நிலைமையைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாறான காரணங்களுக்காகவே நாம் அங்கீகரிக்கப்படாத செயல்களை குற்றங்களை மீண்டும் மீண்டும் செய்யாது அதிலிருந்து தவிர்ப்பதற்கான ஆரம்பப்படிகளை எடுத்திருக்கிறோம். அத்துடன் போர் இன்னும் தொடர்கிற ஒரு நிலைமை இருக்குமானால், அப்போர் ஒழுங்கான சட்ட அடிப்படையில் நீதியான முறையில் தொடர்வதற்கான உத்திரவாதத்தையும் நாம் வழங்கியிருக்கிறோம். இந்தச் செயல்பாட்டுக்கான முன்னெடுப்புகளை நாம் வெற்றிகரமான முறையில் அமுலுக்குக் கொண்டுவந்துள்ளோம். ‘ (12)

மனித உரிமை குறித்தும் ஐனநாயக சமூகம் குறித்தும் தீவிரமான அக்கறை கொண்ட ஒச்சலான் கடந்த காலம் குறித்து விமர்சனபூர்வமாகப் பார்க்கும் ஒச்சலான் மரணதண்டனை வழங்கப்பட்டு தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இன்றைய சுழ்நிலையில் தான் வாழும் உலகை எவ்வகையில் அரசியல்ரீதியில் வரையறை செய்கிறார் ? துருக்கிக்குள் வாழும் குர்திஸ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கான வழிமுறையாக எந்த விதமான அரசியல் தீர்வை அவர் முன் வைக்கிறார் ? இந்தத்தீர்வை முன் வைக்கும் போது ஐனநாயக நிறுவனங்கள் முழுச் சமூகமும் தழுவி உருவாக வேண்டியதை நிபந்தனையாக முன் வைக்கிறார் ஒச்சலான்.

அழுகி நாறிக் கொண்டிருக்கும் பாசிஸ்ட் எதேச்சாதிகாரத்தினதும் முதலாளித்துவ தேசிய வாதத்தினதும தோல்வியும் அதீதமான அதிகாரத்துவம் கொண்ட மத்தியத்துவப்படுத்தப்படட தொழலாளிவர்க்க சர்வாதிகாரம் எனச் சொல்லப்பட்ட சமூக அமைப்பும் ஐனநாயக வரையறைகளினின்றும் வெளியேறிவிட்டது. 2000ம் ண்டுகளில் ஐனநாயக முறைமை தனது வெற்றியை ஸ்தாபித்துக் கொண்டுவிட்டது. அனைத்து சமூகங்களுக்கம் ஆழமாக அது பரவுவதைத்தடுத்து நிறுத்தமுடியாது. இந்த ஐனநாயகமயமாதல் அலையைத் தடுத்து நிறுத்த முனைவோர் தோல்வியுறுவர். அதை நடைமுறைப்படுத்துவோர் நிச்சயம் வெல்வர். பிற பிரச்சினைகளில் போலவே இந்த ஐனநாயகத் தேர்வுமட்டும்தான் குர்திஸ் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே மாற்றாக இருக்கமுடியும். பிரிவினை சாத்தியமுமில்லை அஃது அவசியமும் இல்லை. முழுமையான துருக்கிக்குள்தான் குர்திஸ் மக்களின் உரிமைகள் மிகச் சரியாக எய்தப்படமுடியும். ஐனநாயகத்தீர்வு சரியாக நடைமுறைப்படுத்தப்படுமானால் சுயாட்சியையும் கூட்டாட்சியையும் காட்டிலும் அது நிஐமான மாதிரி அமைப்பாயிருக்கும். இந்த நிமிஷத்தில் இந்தத்திசை நோக்கித்தான் அனைத்து வளர்ச்சிகளும் அமைந்துள்ளன (13)

நிலவிய சோசலிஸம் என்று அழைக்கப்படும் சோவியத் வகை கிழக்கு ஜரோப்பிய சோசலிஸத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களாக விமர்சனபூர்வமாக சில பிரச்சினைகளை முன்வைக்கும் அப்துல்லா ஒச்சலான் இன்றைய தனது பார்வையில தான் விரும்பும் சோசலிஸம் எத்தகையது என்பதையும் குறிப்பிடுகிறார்.

மனிதனது பிரக்ஞையின் வளர்ச்சியில் பல்வேறு முக்கியமான கட்டங்கள் உண்டு. அது குறித்து இப்போது விவாதிக்க விரும்புகிறேன். துவக்கத்தில் மனிதனது பிரக்ஞை என்பது குறைவளர்ச்சி அடைந்த நிலையில் தான் இருந்தது. முதிர்ச்சியற்றதாகவும் முன்னோக்கும் தன்மை இல்லாததாகவும்தான் இருந்தது. இது, பில்லிசூனியம், மாந்திரீகம், மதம் போன்ற வடிவங்களில் வெளிப்பட்டது.மாந்திரீகமும் மதமும் பிரக்ஞையின் முதல் படிநிலைகளாகும். னால் இன்று நாம் அறிகிறபடி அந்நிலைகள் காரணகாரிய ஒழுங்குக்கு உட்படாதது என்று நாம் அறிவோம். பில்லி சூனியம், மாந்திரீகம் என்பது எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அது மனித இருத்தலுடன் இறுக்கமாகவும் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனித ஐீவியை நாம் முழுமையாக பகுத்தறிவின் மூலம் விளக்குதல் சாத்தியமாகுமா ? அவன் அல்லது அவளுடைய நடவடிக்கைகள் அனைத்துமே பகுத்தறிவின் அடிப்படையில் அமைகிறது என்று நாம் சொல்ல முடியுமா ? இவை அனைத்துமே தத்துவத்துக்கு உரிய கேள்விகள். இவை குறித்து பல்வேறுபட்ட வகையிலான கோட்பாடுகள் பேசியிருக்கின்றன. இக்கோட்பாடுகள் விஞ்ஞான அடிப்படையையும் தேர்ந்து கொள்கின்றன. கனவுகள், மூடநம்பிக்கை, மதம் போன்றன ஒரு நாள் இல்லாமல் போய்விடும் என்று நினைப்பது யதார்த்தமற்றதாகும். இவை அனைத்தும் மானுட இயற்கையின் பகுதியாகும். மனித இயற்கை, கனவுகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் மத மதிப்பீடுகளுக்குமான ஒரு வெளியை, அறவியல்பு ஒழுக்கங்கள் என்பதற்கான ஒரு வெளியை, நம்மிடம் கோருகிறது. ஒரு குறிப்பிட்ட வகையிலான அறம் சார்ந்த வரையறை உருவாகவில்லையாயின், மனித குலத்திற்கு அடுத்த கட்ட வளர்ச்சி என்பது சாத்தயமற்றதாகிவிடும். மனித குலத்தின் இருத்தலும் சாத்தியமற்றதாகி விடும். சோசலிஸத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி என்பதும் இவ்வகையில் ஏற்பட்ட அறவியல் சார்ந்த நெருக்கடிதான். நிலவிய சோசலிஸம், அறவியல் குறித்த மதம் குறித்த கேள்விகளை எதிர் கொள்ளாததன் நெருக்கடிதான் அதனது தோல்விக்கும் அழிவுக்கும் மிகப்பிரதானமான காரணமாகும்.

முதலாளித்துவக் காலகட்டத்தில் வளர்ச்சியுற்ற விஞ்ஞானக் கருத்தியலின் அங்கமாகவே சோசலிசக் கருத்தியலும் வளர்ச்சியுற்றது. பிறவற்றிலிருந்து சோசலிஸக் கருத்தியலை வித்தியாசப்பட தும் பொருட்டு விஞ்ஞான சோசலிஸம் எனச் சொல்லப் படலாயிற்று. ஏன் விஞ்ஞானபூர்வமானது ? 19 ம் நுாற்றாண்டு விஞ்ஞான யுகம். எந்தத் தனியொரு துறையும் அதனது பாதிப்பிலிருந்து தப்ப முடியாது. இந்த வளர்ச்சி சமூக விஞ்ஞானங்களின் மீதும் தனது பாதிப்பைச் செலுத்தியது. சோசலிஸம் சமுக விஞ்ஞானப் பார்வையாதலால் அதனோடு விஞ்ஞானமும் சேர்ந்தது. சோசலிஸம்தான எப்போதைக்காட்டிலும் விஞ்ஞானத் தன்மை கொண்ட கருத்தியல் என்றாகியது. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பிரதானமான காரணம் இக்கருத்தியல் உழைக்கும் வர்க்கத்தோடு சேர்த்துக் காணப்பட்டது. ஆளும் வர்க்கம் யதார்த்தததைச்சிதைப்பதற்கு உந்தப்பட்டது. ஆனால், உழைக்கும் வர்க்கம் யதார்த்தமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் இருக்கச் செய்யப்பட்டது.தொழிலாளி வர்க்கம் விஞ்ஞானப் பார்வையோடு இருப்பதற்கான இயல்பு கொண்டிருந்து ஏனெனில், அது பொய் சொல்லவோ சுரண்டுவதற்கோ தேவையற்றிருந்தது. மக்கள் இயல்பாகவே கனவுகளை அவாவுகிறவர்கள். ஆனால், கனவுகள் தாமாகவே வருவதில்லை. சோசலிசத்தைச் ஸ்வீகரிப்பதென்பது கனவுலக ராஜ்யத்தைத் ஸ்வீகரிக்காமல் சாத்தியமில்லை. இறுதியில் அனைத்துக் கருத்தியல்களுமே கனவுலக ராஜ்யங்கள் தான். சோசலிஸமும் அத்தகைய கனவுலகாகத்தான் இருக்கவேண்டும். நிலவிய சோசலிஸமானது இத்தகைய கனவுமயமான அறவியல்புகளை நடைமுறையாகக் கொண்டிராமலே சோசலிஸத்தை உருவாக்க நினைத்தது. ஆகவே அழிந்தது.(14)

மனித குலம் எதிர்கொண்டே ஆகவேண்டிய அறவியல்புகள், மதம், மாந்திரீகம், கலாச்சாரம், ஐனநாயகம், பெண்கள் பிரச்சினை, மனித மனோவியல் போன்றவற்றை உள்ளிட்ட பிரச்சனைகளை கனவு மயமான சமூகத்தை உருவாக்குவது எனும் நோக்கில் கைக் கொள்ளாததாலேயே நிலவிய சோசலிஸம் வீழ்ந்தது எனப் பார்க்கும் ஒச்சலான் இன்றும் கனவு மயமான அறவியல்புகள் நிறைந்த விமர்சனபூர்வமான சோசலிசத்தையே அவாவுகிறார். தேசிய முதாலாளித்துவக் கருத்தியல் அவருக்கு உடன்பாடானது அலல. தேசிய விடுதலைக்குப் பின்னான சமூகத்தில் முதலாளித்துவ தேசிய வாதத்திற்கும் அவர் விடை கொடுத்துவிட நினைக்க்ிறார். அறவியல்புகளும் ஐனநாயகமும் நிறைந்த பெண்ணடிமைத்தனமும் அரசதிகாரமும் இயக்க அரசியலின் திக்கமும் அகன்ற ஒரு சமூகத்தையே அவர் கனவு காண்கிறார். ஜரோப்பிய தேசியங்களை முதலாளித்துவ தேசியங்கள் என்றும் நாசிக் கருத்தியலே அதனது வளர்ச்சியடைந்த கட்டம் என்றும் காண்கிற அவர் தனது தேசியத்தை பகிர்ந்து கொள்ளத்தக்க மொழி, கலாச்சாரம், வரலாறு எல்லை கொண்ட ஒரு தேசியமாகக் காண்கிறார். அத்தேசம் உருவாக்கும் பிரக்ஞையை அவர் சோசலிஸ தேசியப் பிரக்ஞை என்றும் கூறுகிறார். இன்னும் தனது தேசியம் பற்றிய கருத்துக்கும் முதலாளித்துவ தேசியம் பற்றிய கருத்துக்குமான வித்தியாசத்தைக்கூட அவர் தெளிவாக வலியுறுத்துகிறார். தனது தேசம் என்பது சமூக உறவுகளின் தொகுதி. வரலாற்று உள்ளடக்கத்துடனேயே இது நோக்கப் படவேண்டும். மாறாக முதலாளித்துவ தேசியம் என்பது சமூக உறவுகளிலிருந்து பிரிந்ததாக அதனது வரலாற்று உருவாக்கம் வளர்ச்சி போன்றவற்றிலிருந்து பிரிவுபட்டதாகவே நோக்கப்படுகிறது. இன்னும் தமது விடுதலை இயக்கத்தில் துருக்கியர்களும் ஆர்மேனியர்களும் அஸ்ஸரியர்களும் சேர்ந்து போராடுகிறார்கள் எனும் அவர் தமது விடுதலை இயக்கத்தை எவ்வகையிலும் முதலாளித்துவ தேசிய இயக்கத்துடன் ஒப்பிட முடியாது என்றும் தெரிவிக்கிறார்.

IV

இந்தியாவில் முன்னாள் பிரதமர் ராஐீவ்காந்தியின் கொலை தொடர்பான தீர்ப்பையொட்டி மரணதண்டனை, மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவாதங்கள் தமிழகத்தில் உக்கிரம் பெற்றன. இந்த விவாதங்களில் மார்க்சியர்களும் தலித்தியர்களும் பெண்ணியவாதிகளும் பங்கெடுத்துக் கொண்டார்கள். இவர்கள் அனைவரையுமே இடதுசாரி அரசியல் வாதிகள் என்று நாம் வரையறுக்க முடியும். இதுவன்றி தாராளவாதக் கருத்தியல் கொண்ட சட்ட வல்லுனர்களும் இவ்விவாதங்களில் பங்கு பற்றினார்கள். இவர்களது விவாதங்களில் திரும்பத் திரும்பவும் இரண்டு விதமான தர்க்க விடயங்களே இடம் பெற்றிருந்தன.

ஓரு வர்க்க சமுகத்தில் அரசு என்பது மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டதல்ல. அத்தோடு ஆளும் வர்க்கத்தினர் தமது அதிகாரத்தையும் நலன்களையும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு மரணதண்டனையைப் பாவிக்கிறார்கள். ஒரு ஐாதிய சமுகத்தில் பிராமணக் கருத்தியலின் ஆதிக்கமும் சதுர்வர்ணப்பார்வையும்தான் மரணதண்டனையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பாத்திரம் வகிக்கிறது. ஓர் ஆணாதிக்க சமூகத்தில் ஆண்மையப் பார்வையே பெண்களின் மீதான ஒடுக்குதலின் குருரமான வடிவமாக மரணதண்டனையைப் பாவிக்கிறது. அமெரிக்காவில் மரணதன்டனை விதிக்கப்பட்டவர்களில் வெள்ளையர்களைவிட கறுப்பு மக்களே அதிகம். அதைப் போலவே வர்க்க ஐாதிய ஆண் ஆதிக்க சமுகத்தில் குற்றவாளிகளாக இருப்பவர்களும் மரணதண்டனைக்கு உட்படுகிறவர்களும் ஓடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சார்ந்த்வர்ளும் தலித் மக்களாக இருப்பவர்களும் சிறுபான்மை இனத்தவர்களும் பெண்களும் தான். மரணதண்டனை தொடர்பான பிரச்சினைகளை இவர்களது பார்வையில் இருந்து வாசிப்பதானது, மேலும் இவ்விவாதங்களை துலக்கமுறச்செய்யும். ஆகவே விடுதலைக்குப் போராடுகிறவர்களும் விடுதலைக் கண்ணோட்டம் கொண்டவர்களும் இப்பார்வையில் இருந்து மரணதன்டனை ஒழிப்புக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

மரணதண்டனை என்பது இனிமேல் இக்குற்றங்களைச் செய்பவர்களுக்கு ஒரு பாடமாக எச்சரிக்கையாக பயமுறுத்தலாக இருக்கும் என்கிற தர்க்கத்தில் அர்த்தமில்லை. உலகில் 67 நாடுகள் மரணதண்டனையை முற்றிலும் ஒழித்துவிட்டன. யுத்தக் குற்றங்கள்தவிர பிற குற்றங்களுக்கு மரணதண்டனையைப்பாவிப்பதில்லை என 15 நாடுகள் கருதுகின்றன.26 நாடுகளில் தமது சட்டமூலங்களில் மரணதண்டனையைக் கொண்டிருந்தாலும் கூட அதைச் சுமத்துவதை நிறுத்தியிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் மரணதண்டனையை வைத்திருக்கிற நாடான துருக்கியில் கூட 1984க்குப் பின்னால் எவரும் தூக்கிலிடப்படவில்லையாயினும் இப்போதும் அங்கு மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். உலகில் 90 சதவீதத்துக்கும் மேலான மரணதண்டனையை நிறைவேற்றிய நாடுகளாக அமெரிக்கா, சீனா, ஈரான், ரஷியா போன்றவையே உள்ளன. மரணதண்டனை அமுலில் உள்ளநாடுகளில் முன்னும் பின்னுமாக எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையிற் பார்க்கும் போது குற்றங்கள் ஏதும் குறைந்நததற்கான சான்றுகளே இல்லை. அரசு என்பது கடவுள் அல்ல. இன்னும் குற்றங்களின தோற்றுவாய்களாக அசமத்துவான நீதியற்ற சமூகஐனநாயகமற்ற சமுதாயமே இருக்கிறது. குற்றங்கள் தீமையான சமூகத்தின் நோயுற்ற நிலைதான். சட்டபூர்வமான மரணதண்டனை என்பது அரசும் செய்யும் கொலை. பழிவாங்கும் பண்பு கொண்ட மரணதண்டனை மூலம் குற்றங்களை ஒழிக்கமுடியாது; குற்றவாளிகளும் இல்லாமல் செய்யப்படமுடியாது. தேவையானது, நீதியான சமூக ஐனநாயகம் அரசியல் சுதந்திரம் உள்ள சமுகமே. அஃது உருவாகும் போது குற்றங்களுக்கான காரணங்களும் குற்றவாளிகளும் அருகிப் போவர்.

குற்றச்சட்டங்களுக்கும் நீதியமைப்புக்கும் உள்ள உறவுகள் குறித்து தீவிரமான விமர்சனங்களைத் துாண்டும் கேள்விகள் இவ்விவாதங்களில் முன் வைக்கப்படடிருக்கிறன. தண்டனைச் சட்டங்களில் பொதிந்துள்ள ஐாதிய வர்க்க பால்சார்ந்த விரோத அடிப்படைகளையும் இவ்விவாதங்கள் மிகச்சரியாக வெளிச்சத்திற்குகக் கொண்டு வந்திருக்கிறது. அரசுகளுக்கு எதிராகச் சகல விதமான ஒடுக்கப்பட்ட மக்களும் நடத்த வேண்டிய இடையறாத போரட்டங்களின் முக்கியத்துவமும் சுட்டிக் காட்டப்படுகிறது. நீதியான சமூகத்தை இத்தகைய பிரக்ஞையுள்ள போராட்டங்களின் மூலம் மட்டுமே உருவாக்கமுடியும்.

ஆயினும், அதிக அளவிலான மூன்றாம் உலகின் அறிவுஐீவிகள் மனித உரிமையின் அரசியல் அம்சங்களுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்களே அல்லாது மரணதண்டனை எதிர்ப்பில் உள்ள தார்மீக அம்சங்களுக்குள் அதனது அறவியல் அம்சங்களுக்குள் அக்கறை குவிப்பதில்லை. வர்க்க எதிரி சித்திரவதைக்குள்ளாக்கப்படலாம் மேல் ஐாதிக்காரர்கள் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்படலாம் விடுதலைப் போராட்டத்தில் கருத்து மாறுபாட்டாளன் அடையாளமற்றுச் சுட்டுக் கொல்லப்படலாம் என்கிற தர்க்கங்களையே இன்றும் இவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் மனித உரிமை குறித்துப் பேசும் விடுதலைக்கருத்தியலாளர்கள் தாம் ஒடுக்கப்பட்ட காரணத்தின் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் குழுக்களுக்குள்ளான மோதல்கள் மரண தன்டனைகள் என தமது நடவடிக்கைகள் அனைத்தையும் விடுதலையின் அம்சமாகவே கருதப்படவேண்டும் என்றும் விவாதங்களை முன்வைக்கிறார்கள். போல்பாட் வரலாற்றை ஸீரோ வருடத்திலிருந்து ஆரம்பிக்க நினைத்தவர், தமது மக்களையே கொன்று குவித்தார். கலாச்சாரப்புரட்சி, கலைஞர்களின் மீது வெறிகொண்டாடியது. மிலசோவிச் சிறுபான்மையின மக்களைச் சோசலிசத்தின் பேரில் கொன்று குவித்தான். ஆயிரக்கணக்கான அனாதைக்குழந்தைகளின் சாவுக்குக் காரணமான ருமேனிய சர்வாதிகாரி ஸியாவெஸ்கு தான் தனது மக்களுக்கு மட்டுமே பதில் சொல்வேன் எனத் தான் கொன்றொழித்த மக்கள் பற்றி அருவமாகப் பேசினான். முஸ்லீம் மக்களின் சிறுபான்மை உரிமைகளை இன்றுவரை நசுக்கி வருகிற சீனா அதையும் சோசலிசத்தின் பெயரில்தான் செய்கிறது. இன்றைய தினத்தில் மனித உரிமை விவாதம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். மாற்று சமுக அமைப்பு அல்லது சமநீதி கொண்டுதரும் என நினைத்த அமைப்பு அறவியல் அடிப்படைகளைக் கொண்ட சமூகமாக உருவாகவில்லை. மாற்றுக் கருத்தைச் சகிப்பது எனும் கலாச்சாரத்தை அது உருவாக்கவில்லை. இதுவே அதன் வீழ்ச்சிக்குக்காரணம் என மிகச்சரியாகவே அப்துல்லா ஒச்சலான் மதிப்பிடுகிறார்.

மனித உரிமைக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் உண்டு. மனித உரிமையை மதிப்பது என்பது ஒரு புதிய அறவியல்பு கொண்ட சமூகத்தை உருவாக்குவதோடு தொடர்புள்ளது. மாற்றுக்கருத்தாளர்கள் மாற்று வாழ்க்கைப் போக்கு கொண்டோரை மட்டுமல்ல மிக முக்கியமாக கலைஞர்களையும் புத்திஐீவிகளையும் சகிப்புத் தன்மையுடன் அணுகுகிற ஒரு கலாச்சாரம் உருவாக வேண்டும். ஏனெனில், எந்த விதமான சமரசமுமின்றி சார்புத்தன்மைகளை மீறி அவர்களால்தான் பேசமுடிகிறது.

விடுதலையின் பெயரில் விடுதலை அமைப்புக்கள் மேற்கொள்கிற சித்திரவதைகளும் வெகுமக்கள் கொலைகளும் கலைஞர்களின் புத்திஐீவிகளின் மீதான வன்முறையும் நிறுத்தப்படவேண்டும். இவையெல்லாம் சோசலிசத்தின் வீழ்ச்சியும் புரட்சிக்குப் பின்னான சமூகங்களும் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடங்கள். தேசிய விடுதலைச்சமுகங்களுக்குத் தனியான மனித உரிமைக்கருத்தாக்கம் மூன்றாம் உலக நாடுகளுக்குத் தனியான மனித உரிமைக கருத்தாக்கம் ஸபால்டன்களுக்குத் தனியான மனித உரிமைக் கருத்தாக்கம் என்பதில் சித்திரவதையைப் பொருத்தும் மரணதண்டனையைப் பொருத்தும் மாறுபடுவதற்கு எந்தவிதமான நியாயமான அடிப்படையும் இன்று இல்லை. ஏனெனில், புதிய சமூகத்தை உருவாக்கப புறப்பட்ட கருத்தியல்கள் சித்திரவதையும் மனித உரிமை மீறல்களும் அதிகாரவர்க்கங்களும் கொண்ட சமூகங்களாக ஆகியிருப்பதை வரலாறு நிருபித்திருக்கிறது. சோவியத் அனுபவமும் சீன அனுபவமும் புரட்சிக்குப் பின்னான சமூகங்களின் அனுபவங்களும் அதற்குச்சாட்சி. நிகரகுவாவிலும் கியூபாவிலும் முதலாளித்துவ நாடுகளிலுள்ள சாதாரண உரிமைகளைக் கூடப் பெண்கள் பெறவில்லை என்கிற விமர்சனம் இந்தப் புரட்சிகளுக்கு ஆதரவான பெண்நிலைவாதிகளாலேயே தற்போது வைக்கப்படுகிறது. மேலும் வெகுமக்கள் மீதான வன்முறைக்கும் நிராதரவான மக்கள் மீதான அரசுக் கொலைகளுக்கும் போராடப்புறப்பட்ட இயக்கங்களே அம்மக்கள் மீது அதே மனித உரிமை மீறல்களைத் திணிப்பது விடுதலையின் பாற்பட்டதில்லை.

மரணதண்டனை எதிர்ப்பில் உள்ள தார்மீக அம்சங்கள் அனைத்து மனிதர்க்கும் பொதுவானவை. மிக மோசமான பாலியல் பலாத்காரம் மேற்கொள்கிறவனுக்கும் குழந்தைக் கொலைகளை மேற்கொள்கிறவனுக்கும் நாம் உயிர்வாழ்தலின் மகத்துவம் குறித்துப் பேச முடியுமானால் ஏன் ஒரு கலைஞனுக்கும் அரசியல் விமர்சகனுக்கும் மாற்றுக்கருத்தாளனுக்கும் அதை மறுக்கவேண்டும் ? அவன் மீது ஏன் மரணத்தையும் வன்முறையையும் சுமத்த வேண்டும் ? எதிரியென்று நினைக்கிறவர்களின் வயதான எல்லைப்புறத்தாய்மார்களையும் பெண்களையும் குழந்தைகளையும் ஏன் வெட்டிக் குவிக்க வேண்டும் ? வர்க்க எதிரியை ஏன் கண்டதுண்டமாகி வெட்டிக் கறியாக்கி வெறியாட்டமாடவேண்டும் ?

சில புரட்சிகர அமைப்பைச் சார்ந்தவர்கள் தாம் சமத்துவமற்ற இந்தச்சமூக அமைப்பை மாற்றுவதற்குப் போராடிக் கொண்டிருப்பதால் எக்காரணம் கொண்டும் தங்கள் மீது மரணதண்டனை விதிக்கப்படக்கூடாது என்று வாதிடுகிறார்கள். இவர்களது இயக்கங்கள் பலப்பல. அத்தோடு வேறுவேறு நோக்கங்களின பொருட்டு இவர்கள் செயல்படுகிறார்கள். இன்னும் இவர்கள் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களையும் வேற்றுக் குழுக்களைச்சார்ந்தவர்களையும் கொலை செய்கிறார்கள். ஆகவே இத்தகைய சூழலில் புரட்சிகரக்குழு சார்ந்த தங்களுக்கு மட்டும் மரணதன்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று கோருகிறார்கள். இத்தகைய குறுங்குழுவாத நோக்கில் இருக்கிற பத்தைக்குறித்துத்தான் தார்மீக ரீதியான தனது கேள்விகளாக முன் வைக்கிறார் ஆந்திர மாநில அடிப்படை உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் தலைவரான மல்லாடி சுப்பம்மா :

மரணதண்டனை என்பதை எந்த அரசுமோ குழுவுமோ அல்லது அரசியல் கட்சியுமோ எந்த மனிதனுக்கும் விதிக்கக்கூடாது. குற்றம்சாட்டப்பட்டவர் அவர் சார்ந்திருக்கிற ஐாதி, இனமரபு, வம்சம், தேசம், வர்க்கம், பால் போன்றவைகளைக் கடந்து இக்கொள்கை அமலாக்கப்படவேண்டும்.

தமது ஐாதியை, இனமரபை, தேசத்தை, வர்க்கத்தை, பாலை அல்லது குழவைச் சேர்ந்தவர்களின் மீதான மரணதண்டனை மட்டும் ஒழிக்கப்படவேண்டும் என்று கிளர்ச்சி செய்வதானது உலகமயமான கொள்கைக்கு எதிரானது மட்டுமல்ல, மரணதண்டனை எதிர்ப்பு இயக்கத்துக்குள்ளேயே அது பிரிவுகளை உருவாக்கும். சமூகத்துக்குள்ளேயே இது பிளவுகளை உருவாக்கும்; கிளர்ச்சியில் ஒற்றுமையைக் குலைக்கும். அத்தோடு மரணதண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத்தையும் செயலற்றதாக்கிவிடும்.(15).

ஸ்பெயின் சர்வாதிகாரி பிராங்கோவுக்கு எதிராக குடியரசின் விடுதலைக்காக உலகெங்குமிருந்து கலைஞர்களும் எழுத்தாளர்களும் போராடச் சென்றார்கள். வியட்நாமிய யுத்தத்திற்கெதிராக உலக மனசாட்சியைத் தட்டி எழுப்புவதில் கலைஞர்களும் அறிவுஐீவிகளும் மாணவர்களும் நின்றார்கள். இலத்தீனமெரிக்கப் புரட்சியில் பங்கேற்க படிப்பாளிகளும் பெண்களும் அங்கு சென்று போராடினார்கள். விடுதலை இயக்கங்களின் தரவு அமைப்புக்களை உலகெங்கும் கட்டினார்கள். னால் இன்று புரட்சிகளையும் புரட்சிகர இயக்கங்களையும் தரிப்பதில் ஏன் மனித உரிமையாளர்களும் அறிவுஐீவிகளும் கலைஞர்களும் பின்வாங்குகிறார்கள் ?. சார்பு நிலைபாடு எடுக்கத் தயஙகுகிறார்கள் என்பது இடதுசாரிகளும்புரட்சியாளர்களும் கேட்டுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமாள கேள்வியாகும். இன்றும் போல்பாட்டையும் ஸ்டாலினது கொலைகளையும் அங்கீகரிப்பவர்கள், கவிதை பேசுவதும் ஐனநாயகம் பேசுவதும் நமது சூழலைப் பீடித்திருக்கும் அவலம். தமிழகத்திலும் இத்தகைய நோக்குடன் மரணதன்டனை எதிர்ப்பை அரசியல் தந்திரோபாயமாகப் பார்க்கும் எழுத்தாளர்களை நோக்கி மிக நியாயமான கேள்விகளை முன்வைக்கிறார் மனுஷ்யபுத்திரன்:

‘சில சிந்தனையாளர்கள் மரணதண்டனையை அரசமைப்பின் வன்முறையாக இனங்கண்ட அதே சமயத்தில் அரசின் வன்முறைக்கு எதிராக இயங்கும் போராளிகளின் வன்முறையைத் தவிர்க்கமுடியாததாகவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகவும் முழு மனத்துடன் தரித்ததைப் பார்க்கமுடிந்தது. மரணதண்டனைக்கு எதிரான கருத்து என்பது மனிதர்களைக் கொல்வது பற்றிய அடிப்படைக்கேள்விகளை எழுப்புவதற்குப் பதில் சில கொலைகளை தரிப்பதும் சில கொலைகளை எதிர்ப்பதுமான ஒரு நிலைப்பாடாக இருப்பது இந்த இயக்கத்தையே அர்த்தமிழக்கச்செய்து விடும். உலகெங்கிலும் உள்ள சில சக்தி வாய்ந்த விடுதலை அமைப்புகள் திட்டமிட்ட வகையில் நிகழ்த்தி வந்திருக்கும் படுகொலைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவை அரச பயங்கரவாதத்திற்கு எந்த விதத்திலும் குறையாதவை. கருத்து முரண்பாடு கொண்டவர்களையும் அரசியல் எதிரிகளையும் இந்த இயக்கங்கள் தீர்த்துக் கட்டியிருக்கின்றன. ‘

இதற்கான சாட்சியங்கள் வரலாறு நெடுகிலும் இருக்கிறது. ரஷியா முதல் கியூபா உள்ளடங்கி குர்திஸ்தான் இன்றென ஈழப்போராட்டம் வரை அப்பாவிப் பொதுமக்கள் மீதான மாற்றுக்கருத்தாளர்கள் மீதான படுகொலைகள் தொடர்ந்து நடந்துதான் வருகிறது. மனுஷ்யபுத்திரன் மிகவும் அர்த்தம் பொதிந்த அடிப்படையான கேள்விகளை இன்னும் முன் வைத்துச் செல்கிறார் :

மனிதக்கொலை தொடர்பாக மார்க்ஸீயம் ஆழமான அறவியல் கேள்விகளை எதிர்கொள்ளாதது போலவே இவர்களும் இன்று வரை இந்தக்கேள்விகளை எதிர்கொள்ளவில்லை. இவற்றை ஒதுக்கித்தள்ளும் உரிமை யாருக்கும் இல்லை. பாசிசத்திற்கு தேசிய முகமுண்டு இனமுகமுண்டு மதமுகமுண்டு மொழி முகமுண்டு சோசலிசமுகமுண்டு. னால் மரணத்திற்கு எந்த முகமும் இல்லை. அஃது அர்த்தமற்ற இருள். கலைக்க முடியாத மெளனம். மீளமுடியாத வெளியேற்றம். மாற்ற முடியாத கட்டளை. மரணத்தைச் சொல்ல தர்க்க மொழிகளில்லை. அறத்தின் மொழியும் கவிதையின் மொழியுமே உண்டு. (16)

மனுஷ்யபுத்திரன் சொல்வது போல் எழுதுகிறவன் இன்று கொலைகளைக் காத்து நிற்கிறவன் அல்ல. கொலைக்கான நியாயங்களைச் சொல்ல எழுதுகிறவன் தேவையில்லை. அதைக் கவனிக்க அரசுகளின் கட்சிகளின் இயக்கங்களின் பிரச்சார வெளியீட்டுப் பிரிவுகள் இருக்கின்றன. எழுதுகிறவனின் பொறுப்புணர்ச்சி மனிதனின் நேச மனம் சார்ந்தது. வெறுப்பை வெளியிட அவன் தேவையில்லை. ஏற்கனவேயே அதன் துர்நாற்றம் எங்கெங்கும் நிரம்பி வழிகிறது.

V

5000 குர்திஸ் மக்களை ஒரே இரவில் விஷவாயு செலுத்தி படுகொலை செய்தான் ஒரு நாட்டின் தலைவன். அவனது பெயர் ஸத்தாம் ஹூஸைன். அவனும் தனது நாட்டு இறையாண்மை பற்றித்தான் பேசினான். ஒன்றுபட்ட ஈராக்கின் பொருட்டே தான் இக்கொலைகளைச் செய்தேன் என்றான். இன்று விடுதலைப் போராட்டம சார்ந்த மனித உரிமைக் கருத்தாக்கங்கள் என்பதை அயர்லாந்து கியூபா, இலங்கை, எல் ஸால்வடார், இந்தியா, குர்திஸ்தான் போன்ற போராட்ட அனுபவங்களிலிருந்து நாம் பெற முடியும். வியட்நாம் பிரச்சினையில் தொடர்ந்து அமெரிக்காவை விமர்சித்து வரும் நோம் சாம்ஸ்க்கி, கலைஞர்கள் மாற்றுக்கருத்தாளர்கள் மீதான வியட்நாமிய ஒடுக்குமுறையைக் கண்டிக்கத் தயங்குவதில்லை. குர்திஸ் விடுதலை இயக்கத்திற்குள்ளேயே மனித உரிமை மீறல்களுக்கெதிராகத் தான் போராடி வந்ததைக் குறிப்பீடும் அப்துல்லா ஒச்சலான் தற்போது அறமுறைக்குட்பட்ட போராட்டம் குறித்துப் பேசுகிறார். கியூபாவை ஆதரித்து வந்த ஸார்த்தர், கலைஞர்களின் சுதந்திரத்திற்காக காஸ்ட்ரோவிடம் பேசியதும் வரலாறாகி இருக்கிறது. காலமெல்லாம் தான் தரித்து வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கமே தனது புத்தகங்களைத் தடை செய்ததைக் கவலையுடன் நினைவு கூர்கிறார் எட்வர்ட் ஸைத். எதிரிகளைக் கொன்றொழித்தல் என்கிற தந்திரோபாயத்தை நக்ஸலடை¢ போராளிகள் தற்போது மறு பரிசீலனை செய்கிறார்கள்.

ரோக் டால்டன் என்கிற மக்கள் கவிஞனை அநியாயமாகக் கொன்றொழித்ததற்காக தற்போது எல் ஸால்வடார் கெரில்லாக்கள் வெளிப்படையாக மன்னிப்புக் கோரியிருக்கிறார்கள். ரோக் டால்டனது உறவினர்களும் அவரை நேசித்தவர்களும் அவருக்கு என்ன நேர்ந்தது அவர் உடல் புதைக்கப்பட்ட இடமாவது காட்டுங்கள் என்றுதான் போராளிகளிடம் கோரினார்கள். தொடர்ந்து அக்கறை காட்டாது விட்டவர்கள் தற்போது அவர் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதை வெளியிட்டிருக்கிறார்கள். இலங்கையிலும் இதைப்போலவே போராளிகளால் கடத்திச் செல்லப்பட்ட பெண்கவி செல்வியின் நிலை என்னவென்று அவரது உறவினர்களும் அவரை நேசிப்பவர்களும் அடுத்தகட்ட வாழ்வு பற்றி யோசிக்க முடியாது மனோ ரீதியிலான சித்திரவதைக்கு ட்பட்டிருக்கிறார்கள். இந்திய நீதிவான் வி ஆர்.கிருஷ்ணய்யர், அஷீஸ்நந்தி, ரெஜி சிறிவர்த்தன போன்றவர்கள் உள்பட அவரின் விடுதலை கோரி அறிக்கையில் கேட்டுக் கொண்டு ஆண்டுகள் ஓடிக்கொண்டிருந்தபோதும் அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லாத சோகமே எஞ்சி நிற்கிறது.. ஒச்சலானுக்கு ஆதரவாக இன்று குரல்கொடுக்கும் மனித உரிமையாளர்கள் எவருமே கலைஞர்கள் மீதான மனித உரிமை மீறல்களை ஒப்புக் கொள்கிறவர்கள் இல்லை. இன்னும் அனைத்து விடுதலைப் போராட்டங்களையும் நிபந்தனையற்று தரிப்பவர்களாகக் கலைஞர்களே இருக்கிறார்கள்.

மூன்றாம் உலகின் இன்றைய படைப்பாளிகளின் முன்னுள்ள பிரச்சினை நம் சமுகங்களின் மிகப்பெரிய பிரச்சினையாகிவிட்ட அரசியல் வன்முறை. மேற்கில் வாழும் படைப்பாளியின் சுதந்திரம். அவனது எழுத்துக்கள் அச்சில் வைக்கப்படும் சுதந்திரம் தொடர்பானது. சில அறவியல் கோட்பாட்டுப்பிரச்சினைகள் தொடர்பானது. நமது சமுகங்கள் போன்ற கொந்தளிப்பான சமுகங்களில் வாழும் எழுத்தாளனின் சுதந்திரமானது அவனது உடலின் அழிவுக்கு வரும் அச்சுறுத்தல் தொடர்பானது, ருத் ஸ்லாவோ எனும் தென் ஆப்ரிக்க கம்யூனிஸ்ட் பெண்மணி கனாபானி எனும் பாலஸ்தீன புரட்சியாளர் போன்றோர் அவர்களது விமர்சனங்களுக்காகவே கொல்லப்பட்டார்கள் . படைப்பாளிகளின் உடலின் அழிவு குறித்த அரசியல் விடுதலை அரசியலின் தார்மீகப் பிரச்சினைகள் எதிர்கால சமுகத்தின் அறவியல் அடிப்படைகள் போன்றவை குறித்த கேள்விகளை எழுப்புகிறது. அரச வன்முறைக்கு எதிராகப் போராடும் அமைப்புக்களின் உள் வன்முறை குறித்து மக்கள் மீதான ஆதிக்கம் குறித்து சுயவிமர்சன உணர்வு கொள்ள வேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம். புரட்சி குறித்த விமர்சனத்தை புரட்சிக்கு வெளியிலிருந்து செய்கிறவர்களைக் கண்டிக்கும் நாம் புரட்சிக்குள்ளும் மனிதவுரிமைகள், ஐனநாயகபூர்வமான கருத்தாடல்கள், சித்திரவதைத் தவிர்ப்பு போன்றவை குறித்தும் அக்கறைப்படவேண்டும்.(17)

இதனால்தான் கருத்துமாறுபாட்டுக்காக கலைஞர்களையும் சிந்தனையாளர்களையும் அழித்தொழிக்கும் நிலைபற்றிய தனது விமர்சனத்தை அலி பிசாக் இவ்வாறு முன் வைக்கிறார்:

ஒருவரது உடம்பு என்பது அதனளவில் முழுமையாகத்தான் இருக்கிறது. அரசியல் இயக்கங்களில் இருக்கிறமாதிரி இலட்சோப இலட்சம் முரண்பட்ட போக்குகளாகவோ சிந்தனைப் போக்குகளாகவோ தன்னிலையாகவோ உடம்பைப் பிரிக்க முடியாது.(18)

இதையே மகாத்மா காந்தி வேறு வகையில் முன் வைக்கிறார். மகாத்மா காந்தியின் வாசகங்களைப் படிக்கிறபோது தவிர்க்க முடியாமல் எல் ஸால்வடார் விடுதலை இயக்கத்தின் சுய விமர்சனம் வந்து போகிறது. ‘எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல், அமெரிக்கா சோவியத் இரண்டினதும் ஏெஐன்ட் என ரோக் டால்டனை நாங்கள் சுட்டுக் கொன்றோம். இப்போது அம் மக்கள் கவிஞனைக் கொன்றது மாபெரும் தவறு என உணர்கிறோம் ‘ என்கிறார்கள் அவர்கள். ‘காலம் கடநது வரும் ஞானேதயத்தினால் பயனில்லை ‘ என்கிறார் மகாத்மா காந்தி.

உயிரைக் கொல்லுதல் வேறு சிறை வைத்தலும் ஏன் உடலுக்கு ஊறு செய்யும் தண்டனை என்பதும் கூட வேறு என நான் கருதுகிறேன் . சிறைத்தண்டனையைத் திரும்பப்பெறமுடியும் உடலுக்கு ஊறு செய்யும் தண்டனைக்கு ஆளானவருக்கும்கூட இழப்பீடு செய்ய முடியும். ஆனால், ஒருவரைச் சாகடித்து விட்டால் அந்தத் தண்டனையைத் திரும்பப் பெறவும் முடியாது இழப்பீடு செய்யவும் முடியாது.(19)

ஆசிய மதிப்பீடுகள், கிழக்கத்திய மதிப்பீடுகள், மூன்றாம் உலகின் மதிப்பீடுகள் அல்லது சோசலிச மதிப்பீடுகள் போலவே, விடுதலைப் போராட்டத்தின் மதிப்பீடுகளும் ஏகாதிபத்தியத்திற்கெதிரானதாக, மேற்குக்கு எதிரானதாக, எதிரிக்கு எதிரானதாகவே அமைய வேண்டு மென்பதே இன்றளவும் இடதுசாரிகளின் புரட்சியாளர்களின் தர்க்கமாக அமைகிற . ஆனால், விடுதலையை தரிக்கும் அதேவேளை மனித உரிமைக மீறல்களை விமர்சிக்கும் கலைஞர்கள் கோருவது போல் மனித உரிமை குறித்துப் பேசும் போது இடதுசாரிகளும் விடுதலை அமைப்புச் சார்ந்தவர்களும் அதனைத் தந்திரோபாயமாக மேற்கொள்ளாது நிஐமாகவே சித்திரவதைக்கெதிரான உணர்வுடனும் உயிர் வாழ்வதன் மகத்துவத்தை ஒப்புக் கொள்கிறதான உணர்வுடனும் அடிப்படையாக உடலுக்குச் செலுத்தவேண்டிய அறவுணர்வுடனும் அதைச் செய்யவேண்டும் என்பதைத்தான் ரியல் டோப்மன் போன்ற கலைஞர்களும் அப்துல்லா ஒச்சலான் போன்ற போராளிகளும் இன்று கோருகிறார்கள்.

சர்வதேசிய ாீதியில் ஒச்சலான் விடுதலைப்பிரச்சினையை முன்னெடுத் துச் சென்றவர்களும் குர்திஸ் மக்களின் விடுதலை வேட்கையை தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு எடுத்துச் சென்றவர்களும் மேற்கில் வாழும் கலைஞர்களும் அறிவுஐீகளும் தான். கிழக்கு திமோர் பிரச்சினையையும் சரி பர்மிய ஐனநாயக இயக்கத்தின் கோரிக்கைகளையும் சரி ஒரு இயக்கமாக முன்னெடுத்தச் சென்றவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஐான் பில்ஐர். சிறையில் வைக்கப்பட்ட குஸ்மோ ஸனானா, ஆங் ஸன் சூகி போன்றோரின் ரகசியமாகப்பதிவு செய்யப்பட்ட நேர்முகங்கள், ஐான் பில்ஐர் மூலமே வெளியுலகை எட்டின. பிரிட்டனின் புகழ் பெற்ற நாடகாசிரியரும் மனித உரிமை நடவடிக்கையாளருமான ஹெரால்ட் பின்ட்டர், குர்திஸ் விடுதலை இயக்கத்தின் ஆழ்ந்த ஆதரவாளராவார். குர்திஸ் மக்களின் சித்திரவதை அனுபவங்களின் அடிப்படையிலேயே அவர் இரண்டு நாடகங்களை உருவாக்கியிருக்கிறார். ‘போகிற வழிக்கு ஒன்று ‘ மற்றும் ‘மலை மக்கள் ‘ போன்றவையே அந்த நாடகங்களாகும். ஒச்சலான் கைதான போது, உடனடியாக குர்திஸ் மக்களோடு சேர்ந்து தெருவிலிறங்கி அம்மக்களோடு ஒச்சலானை விடுதலை செய்யும்படி கோரினார் ஹெரால்ட் பின்ட்டர். ஒச்சலான் கைது செய்யப்பட்டபோது அவரது விடுதலைக்கான வேண்டுகோளில் கையொப்பமிட்டவர்களில் முக்கியமான மூன்று கலைஞர்கள், அமெரிக்க நாடகாசிரியர் ஆர்தர் மில்லர் , கிரீஸ் நவாலாசிரியரும் நோபல்பரிசாளருமான ஸரமாகோ, மற்றும் இத்தாலிய நாடகாசிரியரும் நோபல்பரிசாளருமான டோரியோபோ போன்றவர்களாவர்.

அமெரிக்க மொழியியலாளரும் மனித உரிமையாளருமான நோம் சாம்ஸ்கியும் ஒச்சலான் விடுதலைக்கான செயற்குழவில் அங்கம் வகிக்கிறார். குர்திஸ் மக்கள் போராடுவதைத்தவிர வேறு வழிகள் அவர்களுக்கு விட்டுவைக்கப்படவில்லை என சாம்ஸ்க்கியும் ஐான் பில்ஐரும் குறிப்பிடுகிறார்கள். குர்திஸ் மக்களின் விடுதலை குறித்த ஒரு கலந்துரையாடலை குர்திஸ் தொலைக்காட்சி ஏற்பாடு செய்தபோது, அந்நிகழ்வில் ஸனல் நான்கு ஒலிபரப்பாளரான ஐான் ஸ்னோவும் ஐான் பில்ஐரும் கலந்து கொண்டார்கள். பின்னாளில் அத்தொலைக்காட்சியின் உரிமம் பிரிட்டிஷ் அரசினால் இரத்துச் செய்யப்பட்டது. ஓச்சலான் கைதுப்பிரச்சினையில் அமெரிக்காவினது இரட்டை நாடகத்தைத் தொடர்ந்து கடமையாக விமர்சித்தார்கள், பின்ட்டரும் ஸாம்ஸ்கியும். உலகமயமாதல் சூழலில் நாடுகளைப் பிரிப்பது குறித்து அமெரிக்காவுக்கோ மேற்கத்திய நாடுகளுக்கோ இனிமேல் ஆட்சேபணையில்லை. அவைகளுக்குப் புதிய புதிய சந்தைகளாக ஆகப்போகிறது இந்நாடுகள். ஆனால், ஒரே ஓர் ஆட்சேபனை மட்டுமே அவர்களுக்கு உண்டு. தமது பொருளியல் இராணுவ நலன்களின் அக்கறையில்தான் அவர்களது இனவிடுதலைப் போராட்டங்களுக்கான அக்கறையும் இருக்கும்.

அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் என்றுமே மூன்றாம் உலக மக்களின் நண்பர்களாக இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப்போவதுமில்லை. மனித உரிமையும் ஐனநாயகமும் பேசுபவர்களை இனக்கொலை எனும் கொடுமை இனி இல்லாதொழிக்கப்படவேண்டும் என முழங்கும் மேற்கத்திய ஆட்சியாளர்களை மனிதாபிமான யுத்தம் என குவைத்தில் பொஸ்னியாவில், கொசவாவில் தலையிட்ட அமெரிக்க தலைமையிலான நேட்டோவினரை அவர்களது பொறிமுறையிலேயே சிக்க வைக்கிற அரசியல் துாரதரிசனமாகவே நாம் ஒச்சாலானுடையதும் ஸனானாவினுடையதுமான அரசியல் நிலைபாட்டைப் பார்க்கவேண்டும். போராட்டம் தொடர்ந்து செல்லும் என்பதைத்தான் உலக நிகழ்வுகள் காண்பிக்கிறது. அமெரிக்காவை மட்டுமல்ல முழு உலகின் எதேச்சாதிகாரங்களை கேள்வி கேட்பவர்களாகவும் அரசுகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கிறவர்களாகவும் இன்று கலைஞர்களும் தகவல் தொழில்நுட்ப ஊடகம் சார்ந்தவர்களும் மனித உரிமையாளர்களும் அறிவுஐீவிகளுமே இருக்கிறார்கள். நாடாகாசிரியர் டோரியோபோ இத்தாலிய அராஐகவாதிகளின் விடுதலைக்காக மட்டுமல்ல உலகெங்கிலும் விடுதலைக்குப் போராடும் சகல மக்களுக்கும் அவர் தரவுக்குரல் கொடுக்கிறார் .

இன்றைய அரசியல் நிகழ்வுகளிலும் சரி இனவிடுதலைப் போராடடத்தினை சர்வதேச மயப்படுத்துவதிலும் சரி மனித உரிமை சார்ந்த அக்கறைகளிலிருந்து நோக்கும் போது தான் அது முக்கியத்துவம் அடைகிறது. தகவல் தொழில்நுட்ப சாதனமும் மனித உரிமை கருத்தாக்கங்களும் முக்கிய இடம் பெறும் இன்றைய உலகில் இனஅழிப்பு என்பது அரசியல் பிரச்சினையாகப் பார்க்கப்படுவதை விட மனித உரிமைப் பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. இனவிடுதலைப் போராட்டங்களை மேற்கொள்கிறவர்கள் இதை இப்போது ஆக்கபூர்வமாகக் கையாள்கிறார்கள் என்பதற்கான நடைமுறை உதாரணமாகவே குர்திஸ் போராளி ஒச்சலானுடையதும் கிழக்கு திமோர் போராளி ஸனானாவினுடையதும் அமர்தயா ஸென், நோம் சாம்ஸ்கி, ஐான் பில்ஐர் போன்ற மனித உரிமையாளர்களதும் ஹெரால்ட் பின்ட்டர், டோரியோ போன்ற கலைஞர்களுடையதுமான அணுகுமுறைகள் அமைகின்றன.

ஆதாரக்கட்டுரைகள் புத்தகங்கள்

1-2. மரண தண்டனைக்கு எதிரான இயக்கம் சென்னை-83 இந்தியா பககங்கள் 1 மற்றும் 45

3-4. Human Rights in Third world Perspective V.T.Thamilmaran Har-Ananad Publications New Delhi 1992 Pages 18 36 38 40

5 -9. Human Rights and Asian values : Amartya sen The New Republic July 14 1997

10-12. Interview with Abdulla Ocelan : Middle East Insider reproduced in Kurdisatan report No: 28 July-September 1999.

13. Decleration on the democratic solution of the kurdish ` Question by Abdulla Ocelan Pages 16 to 19 : Mesopotamian Publishers July 1999.

14. Nationalism and the Kurdish natinal Liberation Movement : Abdo Ziman Kurdisatan report No: 22 September October 1995 Ismail Besikci :

15. We the Condemned : Voices against death penalty PUCL Pondichery India 1999

16. மனுஷ்யபுத்திரன் : மரண தண்டனை ஓரு விவாதத்தை நோக்கி காலச்சுவடு ஐனவரி மார்ச 2000 தமிழ்நாடு இந்தியா.

17-18 கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் தாமரைச் செல்வி பதிப்பகம் சென்னை-78 இந்தியா

19. மரண தண்டனைக்கு எதிரான இயக்கம் சென்னை-83 இந்தியா பககம் 5

 

 

  Thinnai 2000 May 28

திண்ணை

Series Navigationழூங்ுவ்ுழூிழூக்ிஒஆந்ழூர்ி பூர்ுத் ச்ண்ுய்ி ஞ்ஆக்த்ுப்ி ழூங்ுவ்ு ண்ல்ிமண்ி டூஆங்த்ச்ிச்ுவ்ி டூத்ழூிழூச்ிஆச்ட்ிட்ல்ில்ு பூநச்ட >>

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்