(ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் தங்கள் உரிமைகளுக்காக ஆஸ்திரேலிய வெள்ளையர்களுடன் நடத்தும் போராட்டம் பற்றி index on censorship என்ன
‘வரலாறு எங்கள் மக்கள் எங்களைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிட்டது. வெள்ளையர்கள் இந்த தேசத்துக்கு வந்த போது அவர்கள் எங்களுடன் எந்த விதமான உடன்படிக்கைகளும் செய்து கொள்ளவில்லை. அவர்கள் கற்பழிக்கவும் கொலை செய்யவும் விஷம் கொடுத்துக் கொல்லவும் ஆரம்பித்தார்கள். அவர்கள் சாராயத்தையும் சவுக்குகளையும் கொண்டுவந்தார்கள். அதற்கு முன்னால் எங்களிடம் நரகம் இல்லை. இந்த காட்டுமிராண்டிகள் இங்கு வந்து எங்களை ‘கருப்பு குரங்குகள் ‘ என்றும், ‘குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பிறவிகள் ‘ என்று கூப்பிடுவதற்கு முன்னால், நாங்கள் இந்த புனிதமான பூமியில் இருக்கும் அனைத்தையும் புனிதமானவையாகக் கருதினோம். நாங்கள் இந்த உயிர்களுடன் ஒன்றாகவே வாழ்ந்து வந்தோம். அது கடந்த காலக்கதை. ஆனால் நாங்கள் கடந்த காலத்தில் உருவானவர்கள் தான். ஒரு காலத்தில் நாங்கள் இவர்களுடன் போரிட்டோம் என்பதையும் அந்தப் போர்களில் சிறப்பாகவே போரிட்டோம் என்பதையும் எங்கள் மக்கள் மறந்து விட்டார்கள்… அந்த நாட்களில்.. எங்களது ஆத்மா நசுக்கப்படுவதற்கு முன்பு ‘
கெவின் கில்பர்ட் தொகுத்த ‘வாழும் கறுப்பு ‘ என்ற புத்தகத்தில் தாத்தா கூரி
1988இல் ஆஸ்திரேலியா தனது 200ஆவது வருடப்பிறந்த நாளைக் கொண்டாடும் மகத்தான கொண்டாட்டத்தில் அங்கு இருக்கும் பழங்குடியினருக்குக் கொண்டாட எதுவும் இல்லை. இந்த இருநூறாம் வருடக் கொண்டாட்டம் வெள்ளையர்கள் ஆஸ்திரேலியாவில் காலடி எடுத்து வைத்ததை நினைவு படுத்தி கொண்டாட்டம். கேப்டன் ஜேம்ஸ் குக் 1770இல் ஆஸ்திரேலியாவை ‘கண்டுபிடித்த ‘ நாள் முதலாக, இந்தப் பழங்குடியினர் தங்கள் நிலம், தங்கள் கலாச்சாரம், தங்கள் மானம்பிவற்றை இழந்து கொண்டே வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 19ஆம் நூற்றாண்டில் அவர்கள் மிருகங்களைப் போல ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுகளில் வேட்டையாடப்பட்டார்கள். நிலங்களை இழந்த அவர்கள் தனித்தனி ‘மிஷன் ‘களில் அடைக்கப்பட்டார்கள். இந்த நூற்றாண்டிலும் வெள்ளைய அரசாங்கம் சிறு குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடமிருந்து கடத்தி வந்து வெள்ளைக்கார விடுதிகளிலும் வீடுகளிலும் வளர்த்தது. இந்த முயற்சி பழங்குடி சிறார்கள் தங்கள் கலாச்சாரத்தையும் மொழியையும் பழங்குடி அறிவையும் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக. இது ‘இறக்கும் மனிதர்களின் ‘ ‘காணாமல் போன தலைமுறை ‘. இது வெள்ளைகார வந்தேறிகள் தங்கள் வரலாற்றிலிருந்து அழித்துவிட மேற்கொண்ட ஒரு முயற்சி.
அந்த முயற்சி தோற்றுப் போனது. ஆரம்பம் முதல் பழங்குடியினர் தீவிரமாக இதை எதிர்த்துப் போராடினார்கள் — மிகுந்த இடையூறுகளை எதிர் கொண்டு. 1967இல் தான் அவர்கள் குடியுரிமை பெற்றார்கள். கடந்த 20வருடங்களில் அவர்கள் பழங்குடியினராக இருந்து கொண்டே, தங்கள் கலாச்சாரத்துக்கும், தங்கள் நிலங்கள் மீதான உரிமைகளுக்கும் தங்கள் புனித இடங்கள் மீதான உரிமைகளுக்குமான போர்களில் அவர்கள் பெரும் வெற்றி பெற்று வருகிறார்கள்.
இன்று அவர்களுக்கு சட்ட ரீதியில் சம உரிமை இருக்கிறது. ஆனால் இன்னும் அவர்கள் சம அந்தஸ்துக்காகவும், வெள்ளையரின் நசுக்கலையும் எதிர்த்துப் போராடவே வேண்டியிருக்கிறது. பழங்குடிக் குழந்தைகள் இறப்பு, வெள்ளைக் குழந்தைகள் இறப்பைவிட மூன்று பங்கு அதிகம். சிறையில் பழங்குடியினர் 14 பங்கு அதிகம்.(சிறையில் இருக்கும் ஒவ்வொரு வெள்ளைகாரனுக்கும் 14 பழங்குடியினர் சிறையில் இருக்கிறார்கள்) வாழ்நாள் ஆஸ்திரேலிய தேச சராசரியைவிட 18 வருடம் கம்மி.
கெவின் கில்பெர்ட் கூறும் ‘பழங்குடியினரின் ஆத்மாவின் கற்பழிப்பு ‘ இன்றும் தொடர்கிறது.
-அதானு ராய்
குறிப்புகள்
குறிப்பு 1
1995இல் ஆஸ்திரேலிய வழக்கு மன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஹில்டா முயிர், தான் தன் குடும்பத்திலிருந்து 70 வருடங்களுக்கு முன்னர் பிரிக்கப்பட்டதையும் இது போல் பிரிக்கப்பட்ட மற்றவர்கள் சார்பாகவும் ‘காணாமல் போன தலைமுறை ‘ வழக்கு தொடர்ந்தார். இந்த கட்டாய குடும்பப் பிரிப்பு 1920இலிருந்து 1970வரை நடந்தது. இந்தப் பழங்குடி மக்களின் குடும்பத்திலிருந்து குழந்தைகளைக் கடத்தி பழங்குடி மக்களுக்கு எதிரான போதனை செய்து வந்த ஆஸ்திரேலியக் கொள்கை அந்த ஆஸ்திரேலிய அரசியல்சட்டத்துக்கே முரணானது என்றும், இது சர்வதேச இனப்படுகொலை வரிசையைச் சேர்ந்தது என்றும் இந்த கொள்கை அழிப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இது இன்னும் தீர்வுக்கு வரவில்லை.
பலகாலம் நீதிமன்றத்தில் இருந்த இன்னொரு வழக்கு, இங்கிலாந்து அரசு பழங்குடியினர் வாழும் இடங்களுக்கு மிக அருகில் அணுவெடிகுண்டு சோதனைகளை நடத்தியது பற்றியது. இறுதியில் இங்கிலாந்து 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டும் கொடுத்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவந்தது. இழந்த நிலங்களுக்கான தீர்வை இன்னும் நடக்கவில்லை.
குறிப்பு 2
‘வெள்ளைக்கார கப்பல்கள் வந்து இறங்கியபோது, வெள்ளையர்கள் தங்களோடு ஸிபிலிஸ், கொனேரியா, டிபி, நிமோனியா போன்ற அனைத்தையும் கொண்டுவந்தார்கள். ‘
இன்றும் பழங்குடியினர் வாழ்விடங்களில் மிகக்குறைந்த மருத்துவமனைகளே இருக்கின்றன. அவைகளில் பெரும்பாலானதில் இதற்கான மருந்துகள் ஏதும் இல்லை. இதனால் பழங்குடியினர் மத்தியில் நோய்களும், நோயினால் இறப்புகளும் அதிகம். தேசீய சுகாதார அமைச்சகம் பழங்குடியினர் இடங்களை கண்டுகொள்வதில்லை.
குறிப்பு 3:
இந்தியப் பழங்குடியினரிடம் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்து, ஒரிஸ்ஸாவில் கொலையுண்ட கிரகாம் ஸ்டெயின்ஸ் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.
திண்ணை
|