மரண தண்டனை, மனசாட்சி, புரட்சியாளர்கள், அறிவு ஜீவிகள்

This entry is part [part not set] of 7 in the series 20000130_Issue

மஞ்சுளா நவநீதன்


தமிழ் நாட்டில் நான்கு பேர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை பெற்றிருக்கிறார்கள். அந்த மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாய் மாற்ற வேண்டும் என்று போராட்டங்களும் , கையெழுத்து இயக்கங்களும் நடை பெறுகின்றன.

ஒரு நவீன அரசமைப்பில் மரண தண்டனை என்பது இருக்கக் கூடாது என்பது பல சமூகவியல் நிபுணர்களின் கருத்து. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருபதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை முதலில் வழங்கப் பட்டது. இது மாதிரியான ஒரு வழக்கில் இத்தனை பேருக்கு ஒட்டு மொத்தமாக மரண தண்டனை வழங்கப் பட்ட ஒரு வழக்கு இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.

நியூரெம்பெர்க்கில் நாஜிகளைக் குற்றம் சாட்டி வழக்கு மேற்கொண்ட போது கூட அவற்றின் முக்கியமான நபர்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் யூதப் படுகொலைகளில் ஈடுபட்ட நிரூபணம் இல்லையென்று ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டதை நினைவிற்கொள்ள வேண்டும். ஆனால் நல்ல வேளையாக நமது இந்திய நீதித் துறை மற்றவர்களை விடுதலை செய்து அல்லது தண்டனையைக் குறைத்து தீர்ப்பு வழங்கியது. இந்த நான்கு பேரின் மரண தண்டனையைக் குறைப்பது அவசியம். இதற்கான போராட்டம் நியாயமான போராட்டம். சந்தேகத்திற்கு இடமில்லாத படி கொலைக் குற்றத்தை நிரூபிக்க முடியாத போதில், பிற்பாடு தெரிய வரும் நிரூபணங்களைக் கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப் பட்டவர்கள் விடுதலையும் கூடப் பெறக் கூடும் என்பதால், இந்த விதமான மரண தண்டனை குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதாகாது. இது தான் மிக முக்கியமாய்க் கருதப் படவேண்டியது.

குற்றமும் தண்டனையும் எந்தச் சமூகத்திலும் உள்ளது தான். அந்தந்த சமூகத்தின் பொது நோக்கத்தை வைத்து உருவாக்கப் பட்ட குற்றவியல் மற்றும் தண்டனைச் சட்டங்கள் எல்லா சமூகத்திற்கும் பொது என்று சொல்லிவிட முடியாது.. உதாரணமாக இஸ்லாமிய சமுதாயத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப் பட்ட சவூதி அரேபியா போன்ற நாடுகளில் மற்ற மதப் பிரசாரங்கள் குற்றச் செயல்களாகி விடுகின்றன. ஐம்பது வருடம் முன்பு கோகா கோலாவில் இடம் பெற்ற கோகெயின் இன்று அமெரிக்காவில் தடை செய்யப் பட்ட பொருள்.

ஒரே சமூகத்தில் ஒரு காலகட்டத்தில் கொலைகாரர்கள் என்று அழைக்கப் பட்டவர்கள் வேறொரு காலத்தில் புரட்சி வீரர்களாகவும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார்கள். புரட்சியாளன், இத்தாலியைக் காப்பாற்ற வந்தவன் என்று புகழப் பட்ட முஸோலினியை அந்த மக்களே கொன்று, வெறுப்பில் அவன் பிணத்தில் சிறுநீர் கழித்ததும் இந்த நூற்றாண்டில் நடந்த விஷயம் தான்.

வளர்ந்த நாடுகளில், என் பையனை ஒழுங்கு செய்வதற்காக இரண்டு தட்டு தட்டினால், வயதுக்கு வராத ஒரு நபரை சித்திரவதை செய்த குற்றத்திற்காக நான் சிறைக்குப் போக வேண்டியிருக்கும் – அவன் என் மகனாக இருந்தாலும் சரி. ஆனால், சிறுவர்களின் கழுத்தில் நச்சுக் குப்பியும் கையில் துப்பாக்கியுமாகப் போர்க்களத்திற்கு அனுப்புகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப் பட்ட சிறுவர் சிறுமியர்களை வீரர்களாகவும், தியாகிகளாகவும் ஏற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டின் பல பகுதிகளில் சிறுவர் சிறுமியர் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். டி.பி தாக்கம் அவர்களிடையில் மிக அதிகம் என்பதும் பதிவு செய்யப் பட்டுள்ளது. நீதி மன்றம் போகாமலே, குற்றம் சாட்டப் படாமலே மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் இவர்கள்.

கொலை மரணதண்டனை என்றெல்லாம் பார்க்காமல், அர்த்தமற்ற , தவிர்த்திருக்கக் கூடிய மரணங்களுக்கு நம் நாட்டில் நடக்கிற சாலை விபத்துகளைச் சொல்லலாம். சரியான சாலைகள் இல்லாமலும், போக்குவரத்து விதி முறைகள் பற்றிய அலட்சியத்தாலும் பலரும் கொல்லப் படுகின்றனர். பயணிகள் இருக்கைகளுடன் இணைந்த பெல்ட் அணிவது கூட இங்கு சட்டமாக்கப் படவில்லை.

பல சமூகங்களில் நீதி மன்றம் செல்லாமலே குடும்பத்தினரே பெண்களைக் கொல்வதும் செய்திகளாய்ப் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஜோர்டான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்கள், அப்பா, சகோதரன் பேச்சை மீறிக் கொண்டு வேற்று ஆண்களை நேசித்தால் அவர்களைக் கொன்று குடும்ப கெளரவத்தை நிறுவுகிற ‘கெளரவம் காப்பாற்றும் கொலைகள் ‘ நடக்கின்றன. பெண்களின் கால்களுக்கிடையே குடும்ப கெளரவம் இருப்பதாகவும், ஆண்களின் காதுகளிக்கிடையே ஏதும் கெளரவமோ அல்லது மூளையோ இல்லையென்று இத்தகைய கொலைகள் பறை சாற்றுகின்றன. இந்தக் கொலைகாரர்கள் கடினத் தண்டனை கூடப் பெறுவதில்லை..

இனத் துரோகிகள் என்று பெயரிட்டு, நீதி மன்றம் செல்லாமலே மக்களைக் கொல்கிற புண்ணியவான்களும் இருக்கிறார்கள். அந்தந்த இனத் தலைவர்களும் அறிவு ஜீவிகளும் இப்படிப்பட்ட கொலைகள் நியாயந்தான் என்று சொன்னதும் நடந்து தான் இருக்கிறது.

வியட்நாம் நாட்டில் ஒரு கொலைத் தாண்டவம், கம்யூனிஸத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற நடந்தது. அதற்குக் காரணமான நாட்டின் தலைவர்கள் யாரும் ஒரு துணுக்குத் தண்டனை கூடப் பெறவில்லை.

மகாபாவி டயர் ஜாலியன் வாலா பாக்கில் கொன்ற மக்களுக்காக என்ன தண்டனை பெற்றான் ? அவன் வழக்குக்கு உதவி செய்தவர்களில், இலக்கிய கர்த்தா ருட்யார்ட் கிப்ளிங் இருந்திருக்கிறார்.

இந்த நான்கு பேருக்காக – தண்டனை தர வேண்டும் என்று சொல்கிறவர்களும் சரி, தண்டனை கூடாது என்று சொல்கிறவர்களும் சரி – ராஜீவ் காந்தியுடன் மரணமடைந்த சாதாரண போலிஸ்காரர்கள், மக்கள் பற்றி எதுவும் பேசுவதே இல்லை. ராஜீவ் காந்தியின் உயிர், பிசாத்து உள்ளூர் போலீஸின் உயிரை விடவும் உயர்ந்ததல்லவா ?

போர்க் குற்றங்கள் என்று சர்வதேச நீதிமன்றம் ஒன்றை வரையறுக்கிறது. அதன் படி போரில் கூட எதிரியைக் கொல்லலாம். ஆனால், அவனைச் சிறையெடுத்தால் அவனுடைய மனித உரிமைகள் காப்பாற்றப் பட வேண்டும். கொன்றால் தப்பில்லை – ஏனென்றால் அது யுத்தம்.

குவைத் நாட்டின் மீது போர் தொடுத்ததற்காக சத்தாம் உசேனுக்கு என்ன தண்டனை கிடைத்தது ? ஆனால் ஈராக்கின் மக்களுக்கு நாளும் தண்டனை வழங்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி தம் ஆயுதங்களுக்கு பரிசோதனை பூமியாக ஈராக்கை மாற்றியவர்களுக்கு ஏதும் தண்டனை இல்லை.

மதங்களும் கூட ஏதும் மரண தண்டனைக்கு எதிராக ஒரு நிலைத்த முடிவை எடுக்க வில்லை. இஸ்லாமில் சில குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது சரி என்பதே வாதம். மரண தண்டனைக்கு எதிராய் இங்கே குரல் கொடுப்பவர்கள் தெய்வ நிந்தனைக் குற்றத்திற்கு ஆளாகி விடுவார்கள். கத்தோலிக்க மதம் மரண தண்டனையை எதிர்க்கிறது. கடவுளைத் தவிர வேறு யாருக்கும் உயிரை மாய்க்கும் உரிமையில்லை என்கிற நோக்கில் எடுக்கப் பட்ட முடிவு இது. இதே நிலைபாட்டுடன் கத்தோலிக்க மதம், கருக்கலைப்பையும் கூட எதிர்க்கிறது. (ஆனால் சிலுவைப் போர்களின் போது கத்தோலிக்க மதமும் கொலைகளை அரங்கேற்றியுள்ளது). அன்பே சிவம் என்று போதித்த சைவ மதம் சமணர்களைக் கழுவிலேற்றியதும் கூட நம் செந்தமிழ் நாட்டில் நடந்தது தான். இப்போதைய இந்து மதம் இது பற்றி என்ன சொல்கிறது என்று தெரிய வில்லை.

இந்த நால்வர் தண்டனை பெற்றவுடன் நட்சத்திரங்களாகி விட்டனர். இவர்களுடன் சேர்ந்து தாமும் நட்சத்திரமாகி விட வேண்டும் என்கிற முனைப்பு சிலருக்கு இருப்பதில் வியப்பில்லை.. இது வரை மரணதண்டனைக்கு எதிராகக் குரல் எழுப்பாதவர்கள் எல்லாம், இந்த வளையத்துக்குள் குதித்திருக்கிறார்கள். இவர்கள் எவரும் ,சமூகத்தின் பயன் படுகிற ஓர் அங்கமாக, குற்றம் சாட்டப் பட்ட மனிதனும் செயல் படக்கூடும் என்கிற பார்வையை முன் வைக்கக் காணோம்.

அதனுடன் கூடவே, சமூகத்தில் வன்முறையின் பரவல் பற்றியும், சமூகப் பிரசினைகளின் தீர்விற்கு வன்முறை மேற்கொள்ளலின் பொருத்தம் அல்லது பொருந்தாமை குறித்துக் கருத்துகள் தெரிவிக்க வில்லை. இதில் பங்கேற்ற பலரும், வன்முறையை ஒரு போராட்ட உத்தியாகக் கைக்கொள்வதில் தவறில்லை என்ற நம்பிக்கையுடன் செயல் படும் இயக்கங்களையும் சார்ந்தவர்கள் தாம். வன்முறையைக் கைக்கொள்வது நியாயமானது என்கிற நிலைபாட்டை மேற்கொண்டபின்பு, அதற்கு எதிராக அரசின் நீதித்துறை வன்முறையைத் தன் தண்டனையில் கொண்டிருக்கக் கூடாது என்று கோருவதற்கு தார்மீக அடிப்படை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் மரண தண்டனை ரத்து கோருபவர்களில் பலர், இப்படி தார்மீகப் பிரசினைகளையெல்லாம் எழுப்பித் தம்மை சுய விமர்சனம் செய்து, தம்மைக் குழப்பிக் கொள்பவர்களாகத் தெரியவில்லை.

கீழ்நிலைக் கைதிகளாய் நம் நாட்டுச் சிறைகளில் உள்ளவர்கள், அந்தச் சிறைத் தண்டனையைக் காட்டிலும் மரண தண்டனையே மேல் என்று சொன்னதும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. அடிப்படை மனித உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப் படுவது மட்டுமல்லாமல் அவர்களைக் கீழ்த் தரமாக நடத்துவதையும், வதைக்குட் படுத்துவதும் கேள்விப் படுகிறோம்.

சமீபத்தில் பல எழுத்தாளர்கள் இணைந்து ஒரு ‘மரண தண்டனை எதிர்ப்பு மாநாடு ‘ நடத்தியுள்ளனர். இது மிகக் குறிப்பிடத் தக்க நிகழ்ச்சி. இந்த மாநாட்டில் பங்கேற்ற சிலரைப் பற்றியும், இந்த எதிர்ப்பின் பின்னணியில் இவர்களில் சிலர் நிகழ்த்தும் அரசியல் நாடகத்தையும் சற்று உரசிப் பார்ப்பது நல்லது..

இதில் கலந்து கொண்டவர்கள் பலரும் மிகத் தீர்மானமான கருத்துக் கொண்டவர்களாக, தம் கருத்து சரியானதாய் இல்லாமலும் இருக்கலாம் என்கிற எந்த சந்தேகமுமேயில்லாமல் ,தோன்றுகிறார்கள். அவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். அப்படித் தீர்மானமான கருத்து எனக்கில்லை. எனக்கு மிகக் குழப்பமாக இருக்கிறது.. மற்ற பல விஷயங்களில் தீர்மானமாய் என் கருத்து இது தான் என்று என்னால் சொல்லிவிடமுடியும். இந்த விஷயத்தில் மட்டும் யோசிக்க யோசிக்க என் கருத்துகளே என்னிடமிலிருந்து அன்னியப் பட்டு நிற்பது போல் தோன்றுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களின் பேச்சுகள் காலச் சுவடு ஏட்டில் பதிவு செய்யப் பட்டுள்ளன. நான் மேற்கோள் காட்டினால் அந்த மேற்கோள்கள் அதிலிருந்து எடுக்கப் பட்டவைதாம்.

பொதுவாகவே கருணைமிக்க நம் மக்கள் நடுவில் ஏன் இந்த மரண தண்டனை எதிர்ப்பு காலூன்றவில்லை என்பதற்கு ஒரு காரணம் இராசேந்திர சோழனின் கட்டுரையில் காணக் கிடைக்கிறது. அவர் பொன்மொழிகள்: ‘ இந்தியா ஒரு தேசமல்ல, அது பல்தேசிய இன நாடு, ஒரு துணைக் கண்டம் என்பதும், இந்தியா தேசியைனக்கூடங்களின் சிறைக் கூடமாக இருந்து வருகிறது என்பதும், பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் சமூக ஆய்வாளர்களது முடிவு. இங்கு தேசிய இன ஒடுக்குமுறையோடு, வருண சாதி ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்கு முறைகளும் நிலவுகின்றன. ‘

யார் இந்தப் ‘பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள், சமூக ஆய்வாளர்கள் ‘ என்று எனக்குத் தெரியவில்லை.. இராசேந்திர சோழனின் அரட்டைக் கள நண்பர்களோ என்னவோ ? அதில்லாமல், தேவையே இல்லாமல், (அல்லது தேவையுடன் தான் என்றும் சொல்லலாம்.) குதிராம் போஸ், பகத் சிங், கட்டபொம்மன் போன்றோருடன் இந்த நால்வரை இணைத்துக் காண்கிறார்.

தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை என்கிற கருத்தாக்கம் ஸ்டாலினால் உருவாக்கப் பட்டது. ரஷ்ய தேசிய உணர்வைத் தூண்டி விட்டு அதன் நிழலில் , யூத எதிர்ப்பைப் பரப்பவும், அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பை முனை மழுங்கச் செய்யவும் பரப்பப் பட்டது. தேசம் என்பதும் தேசியம் என்பதும் கற்பிதங்களே தவிர சுயம்புவான உருவாக்கங்களோ, கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்ட தூய தளத்தில் இயங்குபவையோ அல்ல. மனித குல வரலாற்றில் வெவ்வேறு காரணங்களுக்காக தேசங்கள் உருவாவதும், அழிவதும் நிகழ்ந்து கொண்டே வந்திருக்கிறது. தமிழ் நாடும் கூட வட வேங்கடம் தென் குமரியென்பதாக எப்போதுமே இருந்ததில்லை. கன்னடர்கள், தெலுங்கர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள் என்று பலரும் வந்து ஆட்சி செலுத்திய போது அதன் அடிப்படைத் தனமை சிறுகச் சிறுக மாறி ஒரு கலப்புத் தேசமாகியுள்ளது. உலகின் இன்றைய எல்லா நாடுகளுமே அப்படித் தான். தமிழ்நாட்டின் இந்த புதிய ஸ்டாலினிஸ்டுகள் – பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காக மக்களைத் தயார் பண்ணுகிற ஃபாஷன் காலாவதியான வுடன் தேசிய இனப் ‘பிரசினை ‘யைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். மக்களின் அன்றாடப் பிரசினையிலிருந்து அன்னியமாகிவிட்ட கையாலாகாத் தனத்தை மறைக்கவும், தம்மைப் புரட்சியாளர்களாய்க் காட்டிக் கொள்ளவும் இந்தச் சொல்லாடல் பயன் படுகிறது..

அதனுடன் கூடவே மக்கள் பிரசினைகளுக்கு மற்றவர்களை – மார்வாரிகள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று – சுட்டிக் காட்டி வெறுப்பை வளர்த்து அரசியல் பண்ணவும் இது உதவுகிறது. இப்படிப் பட்டவர்களின் ஆதரவில், தூக்கு மர நிழலில் நிற்கிற இவர்களைத் தமிழினப் போராளிகளாய் அடையாளம் காட்டப் படும் போது, மக்கள் இந்தக் கோமாளிகளின் அரசியல் விளையாட்டைப் புரிந்து கொள்வதால், ஆதரவு இழக்க நேரிடுகிறது. இந்தத் தமிழ்த் தேசிய உணர்வு என்பது தனி நாட்டுக் கோரிக்கைக்கு நியாயம் என்கிற பொய்மை, இவர்கள் எதிர்க்கிற பிராமணீயம் கற்பிக்கிற ‘தூய்மை ‘ ‘தீட்டு ‘ என்கிற கருத்தாக்கங்களின் பிரதியே என்பதும் இவர்களின் அடிமனச் சார்பை உணர்த்துவதாய் உள்ளது.

இன்னொரு கட்டுரையில் ஃபூக்கோ என்கிற ஃப்ரான்ஸ் தேசத்து ‘பேரறிஞர் ‘ சொன்னது என்று ரவிகுமார் என்கிற தமிழ் நாட்டு அறிஞர் கூறுகிற விஷயம் இது. ‘ஒரு வழக்கில் வாதி பிரதிவாதிக்கு அப்பால் நடுநிலை வகிக்கக் கூடிய ஒருவர் இருக்க முடியுமென்றும், அவர் நியாயம் அநியாயம் பற்றிய தீர்மானமான கோட்பாடுகளின் அடிப்படையில் நீதி வழங்க முடியுமென்றும் கூறிக் கொள்கிற தற்போதைய நீதி அமைப்பை ஃபூக்கோ விமர்சிக்கிறார். இதற்கு மாறாக, பாதிக்கப் பட்டவர்களுக்கே (victims) தண்டனை வழங்கும் அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிடும் ஃபூக்கோ அப்படி தண்டனை வழங்கப் படும் இடங்களில் பாதிக்கப் பட்ட மக்கள், அவர்களது எதிரிகள் என இரு தரப்பினர் மட்டுமே இருப்பார்களெனவும் அவர்களுக்கு அப்பால் நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட மூன்றாவது தரப்பு இருக்காதென்பதையும் சுட்டிக் காட்டுகிறார். ‘

ஆகா, என்னே தீர்க்க தரிசனம். இவர் நிச்சயம் ரஜனிகாந்த் , அமிதாப் படங்களின் ரசிகராக இருக்க வேண்டும் என்பது என் முடிவு.. அல்லது, ரஜனி காந்தும் அமிதாப்பும், ஃபூக்கோவின் தத்துவ ஞானத்தை அமுல் படுத்துகிறார்கள் என்றும் சொல்லலாம். அதாவது உனக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு நீ பழி வாங்குவது தவறில்லை. இது உணர்த்துவது என்னவென்றால், இந்த நான்கு பேர்களும் குற்றவாளிகளானலும் தவறில்லை., தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்காக இவர்கள் தண்டனை வழங்கினார்கள் என்பதாகும். இந்த மாநாட்டுப் பதிவில் முக்கியமான முரண்பாடு இது தான். பழிக்குப் பழி என்பது பிரசினைகளின் தீர்வல்ல என்ற ஒரு குரல் ஒலிக்கும் போதே பழிக்குப் பழி வாங்குவது ஒரு வித நியாயம் என்று இன்னொரு குரல் ஒலிக்கிறது.

திரும்பத் திரும்ப இந்த மாநாட்டில் ஒலிக்கும் ஒரு ஆதங்கம், ஏன் மக்களிடம் இந்த தண்டனைக்கு எதிர் உணர்வு தீவிரமாய் இல்லை என்பதாகும். இந்தக் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. மக்கள் முன் இன்று உள்ள மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் பிம்பங்கள் எல்லாமே பழிக்குப் பழி, எதிர்க் கட்சிகள் எதிரிக் கட்சிகள் என்பனவற்றை நியாயப் படுத்தும் வகையில் உள்ளன. எம்.ஜி.ஆர் படங்களாகட்டும், விஜயகாந்த் படங்களாகட்டும், ரஜனி படங்களாகட்டும், எல்லாமே இந்த அடிப்படைக் கருவை மிகப் பூதாகாரமாக மக்கள் மனதில் பதிய வைத்து விட்டன. எம் ஜி ஆர், உன்னை விட மாட்டேன் என்று ஒரு படம் தயாரிக்கவிருந்தார் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். கலாசாரம் ஒரு பொருட்டல்ல, அரசியல் உணர்வையும், வர்க்க , சாதி உணர்வையும் ஊட்டி வளர்த்தால் போதும், நாளையே புரட்சி வந்துவிடும், அல்லது திராவட நாடு அடைந்து விடலாம் என்கிற போக்கு திராவிட இயக்கங்களில் தொடங்கி, மிக ஆழமாகவும், பரவலாகவும் மேற்கொள்ளப் பட்டதன் விளைவு தான் இது என்பது கலாசார வரலாற்றை நுணுகி ஆய்ந்தால் புரியும்.

எஸ். வி ராஜதுரையின் கட்டுரையும் பழிக்குப் பழி உணர்வைப் பற்றிப்பேசுகிறது. பழிக்குப் பழி வாங்க அரசுக்கு உரிமை இல்லை என்கிறது. அந்தக் கட்டுரையின் கடைசிப் பத்தி இது : ‘ ஒரு மனிதப் பிறவிக்கு எதிராக அரசு செலுத்தக் கூடிய அதிகாரத்துக்கு எல்லைகளே இல்லை என்பதை (இதனை aquarium look என்ற உருவகத்தின் மூலம் மனத்தில் தைத்து விடுகிறார் ப்ரைமோ லெவி) நாஜி ஜெர்மனி உலகத்திற்கு முழுமையாக உணர்த்தியிருந்ததைக் கருத்தில் கொண்டு, அந்தக் கொலை பயங்கரத்துடன் கணக்குத் தீர்க்க உறுதி பூண்ட ஒரு தலைமுறையின் உணர்வுக்கு உருக் கொடுத்த அருமையானதோர் ஆவணமான ‘உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத் ‘துடனும் அதன் ஒளியில் பிறந்த சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களுடனும் கணக்குத் தீர்த்துக் கொள்வது தான் மரண தண்டனையின் நீட்டிப்பு. ‘ இந்த வாக்கியத்தை படம் வரைந்து பாகங்களைக் குறித்து புரிந்து கொள்ள இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

இந்தத் தொகுப்பில் பெருமாள் முருகன், சேரன், அ. ராமசாமி ஆகியோரின் குரல் சமநிலையுடன் ஒலிக்கக் காண்கிறேன். ஒட்டுமொத்தமான சமூக வன்முறையின், அரசு வன்முறையின் ஒரு பகுதியாக மரண தண்டனையைப் பார்க்கும் பார்வை இவர்களுக்கு இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கு கொண்ட கி.ராஜநாராயணன், ந முத்துசாமி, அ.மார்க்ஸ், இந்திரா பார்த்த சாரதி போன்றோரும் ஆத்மார்த்தமாக உணர்ந்து மரணதண்டனையின் கொடூரத்தை வெளியிடுகிறார்கள்.

நாவரசு கொலையின் போதும் மக்கள் குரல் குற்றவாளிக்குத் தண்டனை தர வேண்டும் என்று தான் ஒலித்தது. அப்போது அவனுக்காக இவர்களில் யாரும் வாதிடவோ, மாநாடு கூட்டவோ இல்லை என்பதும் குறிக்கத் தக்கது. டாக்டர் பயிற்சி பெறும் ஒருவன் தன் கூடப் படித்தவனைக் கண்டதுண்டமாய் வெட்டி – ஒரு வலுவான காரணம் கூட இல்லாமல் – கொன்றது, நிச்சயம் மன நிலை பிறழ்ந்த ஒருவனின் செயலாய்த் தானிருக்க முடியும். இருந்தும் அது பற்றி உரத்த குரல்கள் எழவில்லை. மனநிலை நோய் பற்றியும் அவர்களின் மீதான நம் பார்வை பற்றியும் விவாதங்கள் நிகழ்த்தப் பட்டிருக்க வேண்டும். குற்றாலத்திலும் , குணசீலத்திலும் மனநோய்வாய்ப் பட்ட மக்களை அடித்துத் துன்புறுத்துவது சிகிச்சையின் ஓர் அங்கமாய் உள்ளது என்பதைக் காணும் போதும், மதிப்பெண்கள் சரியாக வாங்க இயலாத பையனைச் சார்த்துகிற அன்பான பெற்றோரின் அணுகுமுறையைக் கருதும் போதும், வன்முறை எப்படி தீர்வுகளின் ஒரு பகுதியாய் மாறிப் போயிற்று என்று தெளிவாகும். சோடாப் புட்டியைச் சுழற்றும் பேட்டை ரெளடி தான் வன்முறையின் அடையாளம் என்கிற பெரும் பான்மைப் பார்வை எத்தனை பொய்யானது ?

இந்த நால்வர் மட்டுமல்லாமல், அரசாங்கத்தாலும், தனி நபர்களாலும், இயக்கங்களாலும், அர்ததமாகாத லட்சியங்களாலும், மதத்தின் காவலாளர்களாலும், தலைவர்களாலும் கொலைசெய்யப் படக் காத்திருக்கும், பலிபீடத்திற்கு அனுப்பப் படக் காத்திருக்கும் எல்லா மக்களுக்காகவும் குரல் கொடுக்கத் தான் வேண்டும். ஒட்டு மொத்தமான மனித உரிமைகளை நிலை நாட்டவும் அநீதிகளை எதிர்க்கவுமான குரல், மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காயும் போலிப் புரட்சியாளர்களிடமிருந்து விலகி உண்மையான சாமானியர்களின் குரலாய் எழுந்தால் தான் அதற்குப் பயன் உண்டு.

Thinnai 2000 January 30

திண்ணை

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்