ஜெயலலிதா – பாகிஸ்தான் – பில் பிராட்லி

This entry is part [part not set] of 4 in the series 20000118_Issue

சின்னக்கருப்பன்


ஜெயலலிதாவை டான்ஸி வழக்கிலிருந்து நீதிபதி விடுதலை செய்திருக்கிறார். மேல்நீதிமன்றமும் அந்த தீர்ப்பை சரி என்று சொல்லிவிட்டது. அதற்கு முக்கிய காரணமாக இரண்டு நீதிபதிகளும் சொன்னது என்னவென்றால் – அந்த குறிப்பிட்ட சட்டம் , சட்டமே அல்ல என்பதுதான். அது வெறும் நன்னடத்தைக்கான அரசியல் சட்டதிட்டத்தின் யோசனையே தவிர அது சட்டமல்ல என்பதுதான்.

அரசாங்க நிலங்களை அரசுப்பதவியில் இருப்பவர்கள் வாங்கக் கூடாது என்பதுதான் இந்த ‘அறிவுரை ‘.

அரசியல் சட்டதிட்டத்தில் ஏன் அறிவுரைகளும் யோசனைகளும் இருக்கின்றன என்பது விளங்கவில்லை. அப்படியென்றால் திருக்குறளையும் அரசியல் சட்டதிட்டத்தோடு இணைத்துவிடலாம். அதிலும் ஏராளமான அறிவுரைகளும் இருக்கின்றன,

இரண்டு வரிகளில் எழுதப்பட்டிருக்கும் இந்த அறிவுரையை பொழிப்புரை செய்ய வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் அரசாங்¢கத்துக்கும் சுமார் 10 வருடங்கள் ஆகியிருக்கிறது. இதுதான் உலகத்திலேயே விலைஅதிகமான பொழிப்புரையாக இருக்கும் என்று நினைக்கிறேன். பொழிப்புரை செய்ய ஆன வருடங்களிலும் இது சாதனை படைத்திருக்கிறது. இவ்வளவுக்கும் மக்களின் வரிப்பணம் இந்த வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் செலவிடப்பட்டிருக்கிறது. இன்னும் சொத்து குவிப்பு வழக்கு, சேலை வழக்கு வேஷ்டி வழக்கு என ஆயிரத்தெட்டு வழக்குகளில் இன்னும் என்ன என்ன அறிவுரைகள் அரசியல் சட்டத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்பதை இன்னும் பல வருடங்கள் கழித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஜெயலலிதாவே விடுதலை பெற்றுவிட்டதால், இப்போதைய எல்லா அமைச்சர்களும் அரசாங்க நிலங்களை அடாவடி விலையில் அபகரிக்க மிகுந்த ஆர்வமோடு இருப்பார்கள். நீதிபதிகளுக்கு என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அரசியல் சட்டத்தில் எல்லோருக்கும் தெரிந்த அறிவுரைகளும் இருக்கின்றன.

அரசியல் சட்டதிட்டத்தில் ‘அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை ‘ உருவாக்க எல்லா அரசாங்கங்களும் முயல வேண்டும் என்று ஒரு அறிவுரை இருக்கிறது. இந்த அறிவுரையை பாஜக ஆதரிப்பதாலேயே அது கூடாத விஷயமாகி விட்டது. அதே போல காஷ்மீர் இணைப்புக்கான சட்டம் தற்காலிகமானதுதான் என்பதும் குறிப்பாக இருக்கிறது. இதுவும் பாஜக ஆதரிப்பதால் காஷ்மீருக்கு எக்காலத்திலும் சிறப்பு நிலை என்பது நிரந்தரமாகி விட்டது.

எனவே, அரசாங்க நிலங்களை அரசு பதவியில் இருப்பவர்கள் வாங்கக் கூடாது என்று மக்களாகிய நாம் விரும்பினோமானால், பாஜக தலைவர்களிடம் போய் கெஞ்ச வேண்டும். ‘தயவு செய்து இந்த அறிவுரையை நீங்கள் ஆதரித்து விடாதீர்கள். நீங்கள் ஆதரித்தீர்கள் என்றால் இந்த அறிவுரை எந்த காலத்திலும் சட்டமாகாது. ‘ என்று மனுச் செய்து கொள்ள வேண்டும்.

***

பாகிஸ்தானில் இருக்கும் இந்திய தூதராலயத்தில் வேலை செய்யும் மோஸஸ் என்பவர் பாகிஸ்தானிய போலீஸால் அடித்து குற்றவாளி போல தொலைகாட்சியில் காட்டப்பட்டிருக்கிறார். அவர் கையில் ஒரு வெடிகுண்டு வைத்திருந்ததாகவும் 5000 ரூபாய் வைத்திருந்ததாகவும் அவற்றை அவர் ஒரு பாகிஸ்தானியரிடம் கொடுப்பதற்க்காக எடுத்துச் சென்றதை ஒப்புக் கொண்டதாகவும் பாகிஸ்தானிய தொலைக்காட்சி கூறியிருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானிய தூதராலயத்தில் இருக்கும் ஒரு பாகிஸ்தானியர் தன் குழந்தை படிப்புக்காக பள்ளிக்கூடத்துக்கு போலி 500 ரூபாய்த்தாளை கொடுத்ததாக ஒரு புகாரை இந்திய போலீஸார் பதிவு செய்திருக்கிறார்கள். அதன் பதிலடிதான் இந்த போலி கேஸ் என்பது அதிகம் யோசிக்காமலேயே விளங்கும்.

பாகிஸ்தானிடம் நாம் இன்னும் ஏன் ராஜீய உறவுகளை வைத்திருக்கிறோம் என்பது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. இது ஒரு கழண்ட கேஸ் தேசம். அங்கிருக்கும் நமது தூதராலயத்தில் வேலை செய்யும் இந்தியர்கள் அனைவரும் அந்த வேலையை ‘தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றம் ‘ என்பது போலத்தான் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். நித்திய கண்டமாக அங்கு வாழும் இந்திய வேலையாளர்கள் அனைவருக்கும் என் அனுதாபங்கள். எப்போது பாகிஸ்தான் போலீசுக்கு கிறுக்கு பிடிக்கும் என்பது தெரியாமல் வாழும் இவர்கள் இப்போதைய ஹைஜாக் பிணைக்கைதிகள். இவர்களையும் பாஜக காப்பாற்றிவிடும் என்று நம்புகிறேன். இல்லாவிட்டால் இவர்களது உறவினர்கள் வாஜ்பாயி வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யலாம். அப்படித்தான் விமான பிணைக்கைதிகள் விஷயத்தில் வாஜ்பாயியின் மனம் இளகியது. தூதராலயத்தில் இருக்கும் இந்த பிணைக்கைதிகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்தால் அத்வானி பதவி விலகுவார் என்று பயப்படவும் வேண்டாம். அவர் எல்லோருக்கும் விருந்து வைத்தாலும் வைப்பார்.

பாகிஸ்தான் தான் தோன்றிய காலம் முதல் ஒன்றும் புரியாமல் அலைந்து கொண்டிருக்கும் ஒரு தேசம். இதுவரை அதற்கு தெரிந்ததெல்லாம் இந்தியா எங்கு போனாலும் அதன் காலை தடுக்கி விடுவதுதான். இதுவே அதன் உலகமகா முக்கியவேலையாக வாழ்ந்து வருகிறது. எதற்கு கேட்டாலும் காஷ்மீர் கொடு காஷ்மீர் கொடு என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

என்ன இருந்தாலும், பாகிஸ்தானின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். அடாவடித்தனத்திலும் , பேட்டை ரவுடித்தனத்திலும், இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் அதை மிஞ்சியவர்கள் யாருமில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் கோழைத்தனம் தான். பலமுறை இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தும் அது பாகிஸ்தானை வாழவிட்டு, அதனை ஒரு சமமான தேசமாகக் கருதி நடத்தி வந்திருக்கிறது. அதுதான் இந்தியா செய்த மிகப்பெரிய முட்டாள்தனம் என்று நினைக்கிறேன், இதற்குக் காரணம் இந்தியாவை ஆண்ட இந்திராகாந்தி-நேரு குடும்பம்தான் என்பதும் என் எண்ணம்.

***

பில் பிராட்லியும், அல் கோரும் சமீபத்தில் ஒரு விவாதத்தில் பேசினார்கள். அவர்கள் பேசியவற்றில் பெரும்பான்மையான விஷயங்கள் தமிழ்நாட்டுக்கும் பொருந்துபவை.

வளரும் பொருளாதாரத்துக்கு சிறுதொழில்களையும், சுதந்திர தொழில் முனைவோர்களையும் ஊக்குவித்தல்

அனைவருக்குமான தரமான மருத்துவ உதவி

வயதான காலத்தில் வளமாக வாழ சேமிப்பு திட்டம்

இன்ன பிற

திண்ணை ஆசிரியருக்கு விண்ணப்பம். இந்த விவாதத்தின் மொழிபெயர்ப்பை திண்ணையில் வெளியிட்டால் நல்லது.

*** Thinnai 2000 January 18

திண்ணை

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்