பழ. நெடுமாறன்
மூவேந்தர்கள் ஆண்ட பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியான சேரநாடாக விளங்கிவந்த நிலப்பரப்பே இன்றைய கேரள மாநிலமாகும். கி.பி 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மலையாள மொழி பிறந்தது. அதுவரை அம்மக்கள் தமிழ் பேசி தமிழர்களாகவே வாழ்ந்தனர் என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மையாகும்.
கேரளம், தமிழ்நாடு இவற்றிற்கிடையேயுள்ள இயற்கையின் வேறுபாடுகள் கூட இரு பகுதிகளும் ஒருங்கிணைந்து வாழ்வதற்கென, ஒரே இயந்திரத்தில் ஒன்றையொன்று இணைந்து இயக்குவிக்கும் இரு பற்சக்கரங்களைப் போன்றே அமைந்திருக்கின்றன. தவிரவும், கேரளமும் தமிழ்நாடும் உடை, நடை, உணவு பழக்கவழக்கங்கள், கலை பண்பாடு ஆகிய கக்கள் வாழ்க்கையினங்களனைத்திலும் ஒன்று பட்டவை. ஒரு மாநிலம் கெட்டு அடுத்த மாநிலம் வாழ்ந்து விட முடியாத நிலை இது.
கேரள மாநிலத்தின் நீர் வளம் அதனைப் பயன்படுத்தும் தகுதி ஆகியவற்றைப் பற்றி தமிழக – கேரள மாநிலங்களைச் சேர்ந்த பொறியாளர்களும் மத்திய பாசனத்துறையைச் சேர்ந்த பொறியாளர்களும் பல்வேறு ஆய்வுகளை நடத்திக் கண்டறிந்த புள்ளிவிவரங்கள் பின் வரும் உண்மைகளை நிலை நிறுத்துகின்றன.
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவக் காற்றினால் மிகுதியான மழை பொழிகிறது. அம்மாநிலத்தின் சராசரி மழை அளவு ஆண்டிற்கு 3050 மில்லி மீட்டராகும். அதாவது தமிழ்நாட்டில் பெய்யும் மழை அளவை விட 3.2 மடங்கு அதிகமாகும்.
கேரளத்தில் கார்காலத்தில் கிடைக்கும் நீர்வளத்தைத் தேக்கிப் பயனுறச் செய்ய, நீர்த்தேக்கங்களை அமைக்கத் தகுதியான இடங்களும் போதிய அளவில் இல்லை. பயிர் செய்யக்கூடிய நிலங்களும் போதிய அளவில் இல்லை. கேரளத்தில் ஆறுகளில் கிடைக்கும் நீர்வளம் 2500 டி.எம்.ஸி ஆகும். இதில், கேரளத்துக்குள்ளேயே 500 டி.எம்.ஸிக்கு மேல் பயிர் செய்யப் பயன்படுத்த இயலாது எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
தேக்கங்கள் அமைக்கத் தகுதியான இடங்கள் போதிய அளவில் இல்லாத குறையினால் 350 டி.எம்.ஸிக்கு மேல் தேக்கிக்கொள்வது இயலாத பணியே. ஆக கார்காலத்தில் கேரளத்தில் சுமார் 2000 டி.எம்.ஸி நீர்வளம் கடலுக்குள் வீணே கழிவதைத் தடுக்க இயலாது எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இப்படி வீணாகும் அளவில் 200 டி.எம்.ஸி நீரை மலைக்குக் கீழே உள்ள தமிழ்நாட்டில் வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பிக் கொள்வதற்கு கொள்கை அளவில் மறுப்பு ஒன்றும் இருக்க முடியாது. தமிழ்நாட்டு வறட்சிப் பகுதிகளில் கேரளத்தின் நீர்மிகையைப் பயன்படுத்தி பயிர் செய்யத் தகுதியான நிலங்கள் போதிய அளவில் இருக்கின்றன.
இப்படி திருப்பி விடப்படும் நீரின் அளவின் அளவு கேரளத்தில் வீணாய் கழியும் அளவில் சிறு பங்குதான்.
ஒப்பிடுகையில் திருப்புவது கண்ணுக்குக்கூடத் தெரியாது. கேரளத்திற்குக் கடற்கரையோரப்பகுதிகளில் மற்றக் காலங்களில் உப்படித்து விடும் நிலங்களை மாரிக்காலத்தின் நீர்மிகை, உப்பைக்கழுவி உயிர்ப்பிக்கும் மேன்மைகூட இதனால் சற்றும் குறைவதற்கில்லை.
கேரள மாநிலத்தின் முன்னாள் முதன்மைப் பொறியாளர் பி. ஹெச். வைத்தியநாதன் பின்வரும் கருத்தினை எழுதியுள்ளார்.
‘கேரளத்தின் மாரிக்காலத்தில் 2 லட்சம் கோடி கன அடிநீர் யாருக்கும் பயன்படாமல் கடலுக்குள் ஓடி விடுகிறது. இதில் பத்தில் ஒரு பங்கை, அதாவது 20000 கோடி கன அடிநீரை மேற்கே திருப்பலாம். மலையடியோரமாக கடல் மட்டத்திற்கு மேல் 11000 அடி மட்டத்தில் ஒரு கால்வாய் வடக்கிலிருந்து தெற்காக எடுக்கலாம். ஆங்காங்கே நாலைந்து இடங்களில், பேராறுகள் குறுக்கிடும் இடங்களில் பேரணைகள் கட்டியும் பேரேரிகள் அமைத்தும் கால்வாயை இணைக்கலாம். பின்னர், மேற்கிலிருந்து கிழக்கு முகமாக மலையைக் குடைந்து பேரேரிகளின் எதிர்வாயிலிருந்து தொடங்கிச் சுரங்கங்கள் அமைக்கலாம். தேக்கங்களில் நிறையும் நீர்மிகையை சுரங்கங்களின் வழியே தமிழ்நாட்டுப் பற்றாக்குறைப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லலாம் ‘ என்பதாக கேரளப் பொறியாளரின் கட்டுரையில் கண்டிருந்தது.
தமிழகத்தின் வறட்சி
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டி அண்ணா, மதுரை, திண்டுக்கல், காமராசர், பசும்பொன்முத்துராமலிங்கம், ராமநாதபுரம், நெல்லைக் கட்டபொம்மன், சிதம்பரனார், கோவை, பெரியார் ஆகிய மாவட்டங்களில் வறட்சிப் பகுதிகள் நிறைய இருக்கின்றன. பாசனத்திற்கும், அனேக இடங்களில் குடிப்பதற்கும் நீர்வசதி இல்லாத நிலை தற்போது இருக்கின்றன. ஆகையால், கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கிப் பாயும் சில நதிகளில் அவர்கள் உபயோகத்திற்குப் போக மிஞ்சும் உபரி நீரை அணைகள் கட்டியும் சுரங்கங்கள் அமைத்தும் கிழக்கு நோக்கித் திருப்பினால் தமிழகத்திலுள்ள இந்நிலங்களுக்கு மிகுந்த பயன் தரும். இதை தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் உபரி நீரை கிழக்கே திருப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய ஒரு தொழில் நுட்பக் குழுவை 1977ஆம் ஆண்டில் மத்திய அரசு அமைத்தது. அக்குழுவிற்குத் தொழில் நுட்ப ரீதியில் சாத்தியமான சில ஆலோசனைகளை தமிழக அரசு சமர்ப்பித்தது. இணைக்கப்பட்டுள்ள அட்டவணையில் இக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் கேரள அரசோ ஏற்கெனவே, இரு மாநிலங்களுக்கிடையே ஒப்பந்தம் அமலில் உள்ள ஆறுகளைத் தவிர மற்ற ஆறுகளைப் பற்றி மட்டும் தான் இத்தொழில்நுட்பக் குழு பரிசீலனை செய்து உபரி நீரை கணக்கிட வேண்டும் என்று வலியுறுத்தியது. 1977இல் பாரதப் பிரதமர் முன்னிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி சாலியாறு, பெரியாறு, படுக்கைகளை நீக்கி மற்ற 5 ஆற்றுப் பகுதிகளே இக்குழுவின் பரிசீலனையில் உள்ளன.
மேற்கு முகமாக ஓடும் நதிகளின் மிகை நீரை கிழக்கே திருப்புவதற்க்காக ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருக்கும் திட்டங்களிலும், பேச்சு வார்த்தைக் கட்டத்தில் இருக்கும் திட்டங்களிலும் உருவாகியுள்ள பிரச்னைகளைத் தொகுத்துத் தந்துள்ளோம்,.
நடப்பில் உள்ள திட்டங்கள்
பெரியாறு அணை
பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம்
கேரளம் ஒத்துக்கொள்ளாத திட்டங்கள்
பாண்டியாறு – புன்னம்புழைத்திட்டம்
கல்லாறு திட்டம்
நெய்யாற்றுத் திட்டம்
பம்பா வைகை இணைப்பு
அழகர் அணைத்திட்டம்
ஆலடி அணைத்திட்டம்
– தமிழக நதிநீர் பிரச்னைகள் என்ற புத்தகத்தில் பழ நெடுமாறன் (ப-30)
திண்ணை
|