ஏமாத்து.

தேனம்மை லெக்ஷ்மணன்


மாநகரப் பேருந்து விரைந்து கொண்டிருந்தது.

பக்கத்தில் ஒரு பெண் .. மல்லிகைப் பூ வாசனையோடு..

மாலை நேரக் காற்றில் கிறக்கமாகத் தலை சுற்றுவது போல் இருந்தது..

கொஞ்சம் பருமன்தான்.. ஆனால் அதுதான் அழகாய் ஈர்க்கிறது..

நிச்சயம் அடுத்த திருப்பத்தில் தெரியாதது போல் ஒரு முறை மோதிவிட்டு அதற்கடுத்தே வரும் ஸ்டாப்பில் இறங்கிப் போய் விடவேண்டும். மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டான்.

போன முறை மாதிரி சொதப்பி அடி வாங்கக் கூடாது. நெரிசலில் சிக்கி தர்ம அடி வாங்கி உதடு எல்லாம் ரத்தம்.

வேண்டாம் விட்டு விடலாம் என நினைத்தாலும் கண்ணெதிரில் தெரிவதை உடமையாக்காமல்.. ஹ்ம்ம் முடியவில்லை

அடுத்த ஒரு வாரத்துக்கு நிம்மதி.. எந்த பஸ்ஸிலும் ஏற வேண்டாம்.. கால் டாக்ஸி., ஆட்டோதான்..

லாட்ஜ் ரூமிலேயே தங்கி சிகரெட்டும் தண்ணியும் ., பிரியாணியும் புரோட்டாவும் சாப்பிட்டு சினிமா பார்க்கலாம்..

இதோ இதோ ஸ்டாப் வரப் போகிறது,,

அவள் 10 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி சில்லறையை பர்ஸில் போடாமல் கையில் செல்ஃபோனோடு இறுக்கமாகப் பிடித்திருந்தாள். கையில் கூடை . அதனுள்ளே பர்ஸ். பர்ஸை திறந்து பணத்தை வைக்க பஸ்ஸின் ஆட்டத்தால் அவளால் முடியவில்லை.. நல்ல சந்தர்ப்பம்…

திடீரென்று அவள் போன் அடித்தது. இன்கமிங் கால். போனை எடுத்து பேசினாள்.. ”தம்பு ஸ்டாப் வரப் போகுது . பைக்கில் பிக்கப் செய்ய வாடா” என்று.

அடடா நல்ல வேளை ஜஸ்ட் மிஸ் செய்யப் பார்த்தோமே.. டக்டென்று யதேச்சையாக மோதுவது போல் மோதி ரன்னிங்கிலேயே இறங்கினான்.. அப்பாடா நல்ல வேளை.. யாரும் பார்க்கலை.

அவள் ,”ஹலோ மிஸ்டர் கண் தெரியலையா.. இவ்வளவு இடம் இருக்கு.. தள்ளிப் போக வேண்டியதுதானே .. என திட்டிக் கொண்டிருந்தாள்..

அப்பாடா ..மெத்து மெத்தென்றி்ருந்தது கையில் கனமான பர்ஸ்.. அடிச்சாச்சு.. ஒரு வாரமோ ..ஒரு மாசமோ.. ஜாலிதான்..

இருளத் துவங்கியதால் மாநகரத்தின் தெருவிளக்குகள் பளிச்சிட ஆரம்பித்தன.

ஒரு பார்க் வந்தது. சௌகர்யமாக உக்கார்ந்து எண்ணலாம் . பர்ஸைப் பிரித்தால்.. கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு சில்லறைக் காசுகள்.. மத்ததெல்லாம் 30 விசிட்டிங் கார்டுகள் ., பான்கார்டு., ., ட்ரைவிங் லைசன்ஸ்., காஸ் பில்., சாமான்கள்., துணிமணிகள் வாங்கிய பில்கள்., தட்காலில் ட்ரெயின் டிக்கட் எடுத்த சில ஜெராக்ஸ் பேப்பர்கள்., விபூதி குங்குமம் பாக்கெட்டுகள்., சாமி படங்கள்.. அடிபாவி .. ஏமாத்திட்டாளே என கோபமாக வந்தது..

பார்க்கை கடந்து சென்ற பைக் ஒன்றிலிருந்து யாரோ இருவர் இறங்கி வறுகடலை வாங்கினார்கள்..

அம்மா உங்க பர்ஸிலிருந்து சில்லறை கொடுங்க என்று ஒரு பையனின் குரல் கேட்டது.

”ஐயையோ காணோம்டா.. கூடையில்தான் வைச்சிருந்தேன் பர்ஸை.. ஒரு ஆள் பஸ்ஸிலிருந்து இறங்கினான்.. இடிச்சுகிட்டு போனான்னு திட்டினேன் .. பர்ஸை அடிச்சிட்டான் போலேருக்கே.. 3000 ரூபாய் இருந்துச்சுடா அதுல.. எல்லா கார்டும் இருந்துச்சுடா.. பான் கார்டு.. ட்ரைவிங் லைசென்ஸ் எல்லாம். அப்பா கோச்சுக்குவரேடா என்ன பண்ண.. என்றாள்..

நல்ல வேளைம்மா இன்னிக்குத்தான் உங்க பர்சிலிருந்து 3000 ரூபாய் எடுத்து எலக்ட்ரிக் பில்லும்., ஏர்டெல் பில்லும் பே பண்ணேன். அப்புறம் எல்லாம் ஜெராக்ஸ் காப்பிதான் மா விடுங்க .. என்று சொன்ன இளைஞன் குரல் கேட்டது..

சில்லறைக்குத்தான் தட்டுப்பாடு.. பாங்க்லேருந்து 100 ரூபாய்க்கு ஒன் ருபி காயின் வாங்கி உங்க பர்சில போட்டு வைச்சிருந்தேன்மா.. சரி விடுங்க கடலைகாரரே 100 ரூபாக்கு சேன்ச் இருந்தா மட்டும் கடலை கொடுங்க என்றான் அந்த இளைஞன்.

சே ஏமாந்துட்டமே என்று கோபமாய் வந்தது இவனுக்கு ..சில்லறையை எடுத்து பாண்ட் பையில் போட்டுக்கொண்டு பார்க்கின் பெஞ்சுக்கடியில் பர்சை வீசி விட்டு நடக்க ஆரம்பித்தான்.

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்