களம் ஒன்று கதை பத்து – 5 சுரப்பி

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

மா. காமுத்துரை


களம் ஒன்று கதை பத்து – 5 சுரப்பி
மா. காமுத்துரை

கால்களில் சூடியிருந்த சுருணை கொஞ்சம் தளர்வது போல தெரிந்தது மயில்சாமிக்கு.
கீழே, மணிகண்டன் “ஓவ்வீட்ல வரச் சொன்னாக… ஒம்மக என்னமோ மூட்டப்பூச்சி மருந்தக் குடிச்சுப் புடுச்சாம்…” அவர் அண்ணாந்தபடி சொல்லி முடிக்க அவனுக்கு தொண்டை வரண்டு போய் விக்கல் வந்தது.
பக்கத்திலிருந்த தோப்புக்காரர் “ஆரு மகடா…” என்று திருப்பிக் கேட்டார். அவன், தென்னை மரத்துமேலிருந்த மயில்சாமிக்குச் சொன்னது காற்றுவாக்கில் மேலே மட்டும் போனதோ, கீழே தேங்காய் பொறுக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு வந்து சேரவில்லையோ…? என்ற சந்தேகத்தில் மறுபடி அதே செய்தியை கீழே இருப்பவர்களுக்குச் சொன்னான்.
கீழே நான்கு பேர் இருந்தனர். ஆளுக்கொரு மரத்தடியில் நின்று கொண்டு மேலிருந்து பறித்துப் போடப்படும் தென்னங்குலைகளை உடைத்து நெத்து, இளநீ என பிரித்து அம்பாரம் போட்டுக் கொண்டிருந்தனர்.
“இவர எங்கெல்லா தேட்றது… குளத்து டீக்கடைல சொன்னாங்க…”
“எப்ப மருந்து குடிச்சிச்சாம்…”
“இப்பத்தே காலம்பற…”
முதலாளி நேரத்தைப் பார்த்தார் மணி பத்தாகப் போகிறது… இந்நேரம் வேலை முடிந்திருக்க வேண்டும். பயல்கள் சுறுசுறுப்பு போதாததால் இன்னம் ஒரு மணிநேரம் ஆகும் போலிருக்கிறது. இன்னமும் பத்து பனிரெண்டு மரங்கள் பாக்கி இருந்தன. ஆளுக்கு ரெண்டு மரம் ஏறினார்களென்றால் வேலை முடிந்துவிடும்.
மேலே இருந்து தென்னங்கைகள் ஆலவட்டம் சுற்றி மடார் என கீழே விழுந்தன. தொடர்ந்து பாளையும், பன்னாடையும் சொத் சொத்தென வந்து விழுந்தன.
“பாத்து பாத்துடா… ஒதுங்கிக்கங்க…” என்று கீழிருந்தவர்களை எச்சரித்தார் முதலாளி. விழுந்த நிமிசத்தில் மேலிருந்து வேறெதும் வருகின்றனவா எனப் பார்த்து, வரவில்லை என உறுதி செய்தபின் அவைகளை தரதரவென இழுத்து தோப்பின் மேல்புறம் குமித்தனர்.
இந்த வேலைக்கெல்லாம் விடிகாலைநேரம் தான் உகந்தது. வெய்யில் முகம் தெரிவதற்குள் மடமடவென மரத்தில் ஏறிவிடுவார்கள். வெக்கை கூடக் கூட உடம்பு சூடுகண்டு வேலை மந்தப்படும்.
அஞ்சுமணிக்கே குளத்தங்கரை வந்து ஆள்த்திரட்டி ஆறுமணிக்கு மரத்தில் ஏற்றி விட்டார். முடியப் போகிற நேரம் பார்த்து இப்படி ஒரு சேதி. மேலே அண்ணார்ந்து பார்த்தார் முதலாளி. மயில்சாமி கீழிறங்கிக் கொண்டிருந்தார்.
“களயயல்லாம் நாவி விட்டுட்டியா…” – சத்தம் போட்டுச் சொன்னார்.
அவர் மெதுவாக கைகளைப் பிடித்து கால்களை ஊன்றி புது ஆள் போல நடுக்கத்துடன் இறங்கிக் கொண்டிருந்தார். ஏறும் போதுதான் இத்தனை சிரமம் தேவைப்படும். கைகளை இறுகக்கூட்டி கால்களை உன்னி வாங்கி… ஆனால் இறங்குவது சறுக்கு விளையாட்டுப் போல் கைகளையும் கால்களையும் லூஸ் செய்து விரைப்பாக நின்று கொண்டாலே நிமிசத்தில் தரை இறங்கி விடலாம்.
மகளைப் பற்றிய சேதி மனசில் கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது போலும். கீழே இறங்கியதும் லேசான தள்ளாட்டம் இருந்தது. மணிகண்டன் பிடித்துக் கொண்டான். கால்சுருணையை தோளில் மாட்டிக் கொண்டவர் “நெசமாவா…?” – எனக் கேட்டார்.
“சத்தியமாண்ணே…! உங்கள எங்கெங்க தேட்றது…”
“எப்ப…”
கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஏறக்கட்டிய வேஷ்டியை அவிழ்த்து இடுப்பில் மடித்துக் கட்டிக் கொண்டார். சுருணையை முதலாளியிடம் தந்தவர் புதரில் கிடந்த சட்டையை உதறி மாட்டிக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து ஒண்ணுக்குப் போனார். அதற்குள் முதலாளி சம்பளப் பணத்தை தயாராய் எடுத்து வைத்திருந்தார். குறைவேலையாய்ப் போனது என்றாலும் சூழ்நிலையைக் கண்டு முழுச் சம்பளத்தைக் கொடுத்தார்.
“எப்பிடி என்னான்னு பாத்து… ஏதும் துட்டுத் தேவன்னா வீட்டுக்கு வா… பொறுமையாய் போ… ஒண்ணும் செய்யாது… பாத்து கூப்பிட்டு போப்பா…” முதலாளி கரிசனமாய்ப் பேசி அனுப்பி வைத்தார். இன்னபிற விபரங்கள் தெரியவில்லை. நிறுத்தி விசாரிக்க நேரமில்லை. எப்படியும் தானறியாமல் தீராது.
வயல் வரப்புக்களில் நடந்து தான் கடக்க வேண்டி இருந்தது. வரப்பு முழுக்க கோரைப் புற்கள் மண்டிக்கிடந்தன. மிதிக்க மெதுவாய் இருந்தாலும் ஓரக்கால் – வரப்பு விளிம்பு, அறியாத – மிதியில் வழுக்கி விட்டது. வாய்க்காலில் தண்ணீர் வடிய தடம் தூர்ந்து போயிருந்தது. பாசமும் சகதியுமாய் காய்ந்து கிடந்தன. கரும்பு வெட்டு நடந்த நிçம் ஆறிக் கிடந்தது. பெரிய கண்மாயை ஒட்டி இருந்த வயலில்தான் காலிப்ளவர் நட்டிருந்தார்கள். அது தரையோடு தரையாய் இலைகள் மூடிக் கிடந்தன. அடுத்தடுத்த இருந்த நிலம் பூராவும் தென்னந்தோப்பாய் வளர்ந்திருந்தன. மணிகண்டன் வரப்பு சுற்றிப் போகாமல் முள்வேலி விலக்கி தோப்புக்குள் நடந்தான். தோப்பின் மத்தியில் பெரிய சதுரவடிவக் கிணறும் கிணத்தை ஒட்டி மோட்டார் ரூமும் இருந்தன. ஊடுபயிராய் வெங்காயம் பயிரிடப்பட்டிருந்தது. நிலம் பூராமும் குடுமி அய்யரின் தலைபோல நாலைந்து தளிரோடு வெளிக்கிளம்பி துணுக்கு துணுக்காய் நின்றன. தோப்புக்குள் நடக்கையில் குளுகுளுவென காத்து குளிப்பாட்டியது.
மயில்சாமிக்கு மட்டும் நெற்றியிலும் நாடியிலும் வியர்த்தது. நிமிர்ந்து பார்க்காமல் காலடியிலேயே கண் பதித்தவராய் நடந்து கொண்டிருந்தார். உடம்புக்குள் இருந்த அத்தனை உறுப்புக்களும் குலுங்கி அதிர நடை நடந்தார்.
“நீ வாரப்ப எப்பிடி இருந்திச்சு…” – முதல் முறையாக மணிகண்டனைக் கேட்டார்.
அந்தக் கேள்வியை முழுசும் வாங்க அவனுக்கு கொஞ்ச நேரம் தேவைப்பட்டது.
“தெரிலண்ணே… தச்செயலா தெருப்பக்கம் நடந்துக்கிட்டிருந்தே… வீட்ல கேகேன்னு கூட்டமா இருந்துச்சு… விசாரிக்கலாம்னு வந்தா… இந்திரா..க்கா ‘இப்பிடி’ன்னு சொல்லி உன்னிய கூட்டியாரச் சொல்லுச்சு. உள்ள எட்டிப்பார்த்த வகைல… அந்தப்பிள்ளை – உம் மக – நல்லாத்தே உக்காந்திருந்துச்சு..” என்றவன், “வேற எதும் சண்டையா… இந்தக் கழுதக்கி மருந்தக் குடிக்கிற அளவுக்கு என்னா கேடு…?”
அதைத்தான் நேற்று இரவு கேட்டார். வெளியே போன பிள்ளை ரெம்ப நேரமாய் வீடு வந்து சேரவில்லை. வழக்கம் போல ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தவர் பிள்ளையைக் கேட்க, மனைவி அவரைப் பிடித்துக் கொண்டாள்.
“மனுசன்னு இருந்தா பொண்டு பிள்ளைகளோட இருந்து சீவிக்கணும். இப்பிடி காடே பரதேசம் வீடே மடம்னு நௌப்புல கெடந்தா வீடு வெளங்குமா… வீட்ல இருக்க உருப்படிக விருத்தியாகுமா…?”
அவருக்கு புரியவில்லை. தண்ணியடிக்கவில்லை. நிதானத்தில்தான் இருந்தார். ஆனாலும் விளங்கவில்லை மனைவியின் பேச்சு. இதற்குத்தான் வீட்டுக்கு வந்தால் யாரிடமும் பேச்சுக் குடுப்பதில்லை. பிள்ளைகள் இருந்தால் “சாப்ட்டீகளா…” எனக் கேட்பார். மனைவியிடம் அதும் கூட இல்லை. வீட்டுக்குள் நுழைந்ததும் கைகால் கழுவிவிட்டு சட்டையைக் கழட்டிப் போடுவார். துண்டெடுத்து முகம் துடைத்து உட்காருவதற்குள் சாப்பாடு தட்டு வந்து விடும். சாப்பாட்டில் கைவைப்பதற்கு முன்பாகவே பாக்கெட்டிலிருந்த சம்பளத்தை எடுத்து நீட்டி விடுவார். ஒரு கையில் பணத்தை வாங்கிக் கொண்டு மறுகையில் குழம்போ, காயோ பரிமாறுவாள்.
கூடுதலாக எதாவது மகாசேமம், மகளிர் சந்தா கட்ட வேணும், யாராவது கொண்டான் – கொடுத்தான் வீட்டு விசேசம் போன்ற தகவல்கள் எதாவது இருந்தால் கீற்றாக ஓரிரு வார்த்தையில் தகவல் சொல்லுவாள். பெரும்பாலும் அப்படியாப்பட்ட விசேச வீடுகளுக்கு மயில்சாமி சென்றது கிடையாது.
“ம்ஹூம்… வேலயிருக்கு… நிய்யே போய்ட்டு வந்திடு. அவக வீட்ல எனக்கு ஆரத்தெரியும்…”
அவளும் என்றைக்கும் அதற்குமேல் அவரை வற்புறுத்தியதும் இல்லை. அந்தளவுக்கு, தான் வந்தால்தான் என்ற தன்மையில்லாமல் தனித்தே இயங்கக்கூடிய ஆற்றல்மிக்கவளாக மனைவி இருந்தது அவருக்கு நிம்மதியாய் இருந்தது. ஒரு வீட்டைப் போல பல்பொடி வாங்குவதிலிருந்து பல்வலிக்கு ஊசி போடுவது வரைக்கு தானே ஓடிக் கொண்டிருந்தால் கூலிக்காரன் பொழப்பு கூப்பாடு போட்டு விடும்.
ஆனாலும் சமீபகாலமாய் சலசலப்பில்லாமல் ஓடிய குளத்தில் சனியனாய் முதலை வந்து விழுந்தது போல, பெத்தமகளின் செயல்பாடு பெரிய பெரிய கேள்விகளை எழுப்பியது. ஊர்கதையயல்லாம் தான் பேசிச் சிரித்தது போக, இப்போது தன் வீட்டுக் கதையை யாராரோ தன்னிடம் வந்து ஒப்பித்த போது தாளவில்லை. தன் குடும்பத்திலா என்று நம்பவும் முடியவில்லை. தான் பெத்த பிள்ளை தன்னுடைய விரல்பிடித்து வளர்ந்தபிள்ளை – ரத்தம்… மாறுபட்ட தடத்தில் நடக்குமா… அவரால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. நேரடியாய் குடும்பத்தில் கேட்க நா துணியவில்லை. மனைவியிடம் கேட்ட ஒருநாளில்தான் பெருத்த சண்டையானது. கலியாணம் முடித்த நாளிலிருந்து இதுவரைக்கும் அப்படி ஒரு தடித்த வார்த்தைப் பிரயோகம் கூட நடந்ததில்லை. கட்டினவள் இப்படியயல்லாம் கூட பேசுவாளென்பது அந்தக் கணத்தில்தான் அவருக்குத் தெரிந்தது.
“பாக்காத பயிரும் கேக்காத கடனும் வீடு வந்து சேராது…” என்று நடராஜன் சொன்னது பொருந்தி வந்தது.
மனைவியின் புரட்டியயடுத்த வார்த்தைகளில் மனம் புண்பட்டுப் போனாலும் அதன் உள்ளிருந்த குற்றத்தை உணர்ந்தபடியால் அவளோடு சரிக்குச் சரியான சண்டையைக் குறைத்தார். மீண்டும் வீட்டிலிருந்து தனித்து வந்தார்.
நடராஜனின் வார்த்தையில் குடும்பத்தை கொஞ்சம் கவனிக்கவும் செய்தார்.
மகளை – ‘அவனோடு’ கீரைக்கல் மார்க்கட்டில் வைத்துப் பார்த்தபோதுதான் கொதிப்பு அதிகமானது. அப்பவும் அவரால் நேரடியாய் ஏதும் செய்ய முடியவில்லை. மறுபடி நடராஜனிடம் தான் வரவேண்டியிருந்தது. பள்ளிச் சிநேகிதம், பால்ய உறவு, பக்குவமான சிந்தனைக்காரன்.
“எதையும் வேண்டாம்னு நாமளே முடிவா அறிவிக்கறதக் காட்டிலும், இது தேவையான்னு.. கேள்வி எழுப்பினா… அது நமக்குச் சாதகமான விளைவத் தரும்…” – என்று எதையோ தத்துவமாய் பேசினான். கொஞ்சம் புரிய கஷ்டமாயிருந்தது.
“இப்ப நா என்னா செய்ய” – பளிச்சென கேட்கத்தான் முடிந்தது.
“குடும்பத்தில பேசு… குடும்பம்னா சம்சாரம் மட்டும் இல்ல… பிள்ளகுட்டி எல்லாருந்தா…! கூடி உக்காந்து பேசுங்க. ஒரொருத்தரையும் மறிக்காம மனசுல பட்டத பேசவிடு. நிய்யும் ஒளிவுமறவு இல்லாம பேசு… பேசப் பேச ஒங்களுக்கே ஒத்த வழி கெடைக்கும் – அதன்படி முடிவு பண்ணுங்க”.
“அந்தப்பய எப்பிடின்னு தெரியலியே…”
“மொதல்ல உங்க குடும்பத்துல பேசி முடிச்சி… வேணும்னு வந்தா யாராச்சும் ஒருத்தர் ரெண்டு பேர் போயி அவங்க குடும்பத்தயும் ஒக்காரவச்சுப் பேசுங்க… சுமுகமா முடியும்…”
“அவங்க ஒத்து வராட்டா…”
“ஏன் தப்பாவே நெனைக்கணும்… நல்லதா நெனைப்பமே… மொதல்ல ஊங்குடும்பத்துல பேச்சமுடி…”
நடராஜனையும் இழுத்துப் போய்த்தான் தனது வீட்டில் பேசினார். மகள் அந்தப் பையன் மேல் ரொம்பவும் நம்பிக்கையாய் இருந்தாள். எல்லாமே அவளுக்கு நல்லவிதமாகவே தென்பட்டது போலிருக்கிறது.
“அவெ ஒரே இடத்துல நின்னு வேல செஞ்சதில்லீங்கறாகடீ…” என்று மனைவி அவளது விசாரணையின் தகவலைச் சொன்னாள்.
“தாட்டியமானவரும்மா… எந்தெடத்துல போனாலும் ஈசியா சம்பாத்தியம் பண்ணீருவாப்ல …” – மகள்.
“ரவுடிப் பயங்கறாக… இவ என்னான்னா தாட்டியமானவெங்கிறா…”
“தப்புண்ணு தெரியறத தட்டிக்கேட்டா ரவுடியா…”
“வாய் பேசாத ங்ஙொப்பன சமாளிக்கவே எனக்கு முடியல மகளே…”
“அம்மா… எட்டுனா குடுமி… எட்டாட்டி காலு… சமாளிச்சுடுவேம்மா…”
நடராஜன், அவரது மகளின் தெளிவைப் பாராட்டினார். “தெளிவுண்ணு சொல்ல முடியாது… எளவயசுத் துடிப்பு… யோசிக்க வைக்கும்… இப்ப… நாம தடுத்தாலும் நிறுத்த முடியாது… மயிலு…”
மாப்பிள்ளை வீட்டுக்கும் நடராஜனை அழைத்துப் போனார். வாசல் நுழைய முடியவில்லை. இத்தனை வார்த்தையும் தமிழில் உண்டா..? என மலைக்க வைத்தது. பாவம் தன்னால் நடராஜனுக்கும் பேச்சு…! “புரோக்கர் வேல பாக்க வந்தியா…?” – என்று கேட்டனர். அப்பவும் அவன் கோபப்படவில்லை. “ஆத்தரத்தோட சூடா இருக்காங்க… கொதிப்பு அடங்கட்டும்…” என்று தன்னை அழைத்து வந்தார்.
ஆனால் வீட்டில் மனைவிதான் பொறுமையிழந்து புலம்பினாள். “இப்பிடி அசிங்கப்படுத்திட்டாளே… குடும்பத்த நாறடிச்சிட்டாளே… ஊரே அன்னமாருதே… நாலுபேர் பாத்து மூணுபேர் சிரிக்குதே… இதுக்கு மேலயும் உசிரவச்சு நானும் சிலுப்பிக்கிட்டுத் திரியிறனே…”
வீட்டிலும் நடராஜன் வந்து பேசினான். “பொறுமையாயிருமா… இன்னம் எதும் முடிவாகல… அதுங்குள்ள ஏன் இப்படி பரிதவிக்கிற… ஒன்னப்பாத்து அந்தப்பிள்ளை பயந்துரப் போகுது… வயசுப்பிள்ள யோசிக்காத பருவம்… முள்ளு மேல விழுந்த சீலய பக்குவமா எடுக்கணும்” என்று எதேதோ சொல்லி புலம்பலை கட்டுப்படுத்தினார்.
அவருக்கும் ஒரு பயம் இருந்தது. மாப்பிள்ளை வீட்டில் நடந்ததற்கு பிறகு மகளிடமிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. படபடவென பேசிய பேச்சுக்கள் அத்தனையும் எங்கே போய் ஒளிந்ததென தேடலானார்.
“கூடுதலான அமைதி குப்புனு புயலாகும்… கவனிச்சுக்கங்க…” – நடராஜன் எச்சரித்து விட்டுப் போனார்.
அது நடந்து விட்டது.
வரப்புகளைக் கடந்து ஊருக்குள் நுழைந்ததும் இந்திரா எதிரே வந்தது.
“என்னாண்ணே… இப்பிடியா தேட வக்கிறது… நல்லவேள… பூராத்தியும் வாந்தியயடுத்திட்டா… டக்குனு ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டுப் போங்க… ஆட்டா கூப்பிட ஆள்ப் போயிருக்கு…” – கூடவே நடந்து வந்தது.
“பொண்ணு பிள்ளைகளயயல்லாம் காலா காலத்துல புடிச்சுக் குடுக்காட்டி இந்தக் கருமாயந்தே…” – உடன் வந்த இன்னொருத்தி பேச…
மயில்சாமிக்கு வீட்டை நெருங்க கஷ்டமாயிருந்தது.
makamuthurai@gmail.com

Series Navigation

மா. காமுத்துரை

மா. காமுத்துரை